One Body and One Baptism
ஓர் உடல் ஓர் திருமுழுக்கு
-------------------------------
திருமறைப் பகுதிகள்
ஆமோஸ் 9: 5 -1 2
திருப்பாடல்கள் : 115
எபேசியர் 4: 1 - 6
மத்தேயு 16 : 13 - 20
உட்புகும் முன்
"ஓர் உடல் ஓர் திருமுழுக்கு" என்கின்ற இந்த தலைப்பு புதிய ஆண்டில் புதிய இறையியல் கண்ணோட்டத்தை திருச்சபையாகிய நமக்கு அது வழங்குகிறது.
ஓர் உடல் (ஓர் திருமுழுக்கு) என்பது "மனுதர்ம கோட்பாட்டை மையமாக வைத்து மனு குலத்தை பிரிக்கின்ற தீய சக்திகளுக்கு எதிரான கோட்பாட்டை" திருமறை முன்வைக்கின்றது.
மனுக்குலம் இறைவனின் சாயலாக படைக்கப்பட்டது அதில் அனைத்து உறுப்புகளும் இறைவனால் ஒன்றிப்பு செய்யப்பட்டது. ஒவ்வொரு உறுப்புகளும் தம்தம் பணிகளை செய்து உயிர் வாழ்வதற்கு, இயங்குவதற்கு, இறைவனின் பிரதிநிதிகளாக இறை பணி செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது.
"ஓர் உடல் (ஓர் திருமுழுக்கு)" என்பது நிறம், மொழி, இனம், சாதி .. என்ற அனைத்து பாகுபாடுகளையும் கலைந்து ஓர் உடலாக, ஓர் உறவாக, ஓர் குடும்பமாக, ஓருலை சமூகமாக மனு குடும்பம் வாழ வேண்டும் என்ற உயர்ந்த படிப்பினையை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
"உடல் தீயது ஆன்மா உயர்ந்தது" என்ற சித்தாந்தம் தொன்று தொட்டு நிலவி வருகின்ற சூழ்நிலையில் அதை மறுத்து "உடல் தூயது" என்ற கருத்தியலை அழுத்தமாக இந்த தலைப்பு முன்வைக்கின்றது.
"ஓர் திருமுழுக்கு" என்பது ஒன்றிப்புக்கான அழைப்பு. ஒன்றிணைந்து வாழ்வதற்கு, ஓர் அணியில் திரள்வதற்கு, ஓரிறைக் கோட்பாட்டில் வாழ்வதற்கு, ஓர் குடும்பமாக உறவில் இணைவதற்கு, இறைவனின் இயக்கமாக இயங்குவதற்கு வழிநடத்தும் திருவருட்சாதனமே திருமுழுக்கு.
அது பிரிவினைகளை கலைகின்றது, சமத்துவத்தை உண்டாக்குகிறது, கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற சமூகநீதிக்கு வித்திடுகின்றது, எல்லாரும் இறை மக்கள் என்கின்ற என்ற புதிய உறவு நிலைக்கு வழிநடத்துகின்றது, மனிதம் மலர்வதற்கு வழி நடத்துகின்றது.
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திரு நாமம்... கீர்த்தனை பாடலில் தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவே
சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் ...
"சின்னவர், பெரியவர்கள், சீரியர்கள், பூரியர்கள் என்று அனைவரையும் சமத்துவ நெறியில் நெறிப்படுத்துகின்ற திருவருட்ச சாதனம் திருமுழுக்கு என்று அழகாக பாடியுள்ளார்.
இவைகளை கருத்தில் கொண்டு திருமுறை பாடங்களை தியானிப்போம்...
1. ஒடுக்கப்பட்ட மக்களோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்ளும் கடவுளோடு இணைவதற்கு திருமுழுக்கு வழி நடத்துகிறது. (ஆமோஸ் 9 : 5 - 12)
ஆமோஸ் தீர்க்கர் வழியாக இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் எச்சரிக்கை விடுக்கின்றார். அழிவு நிச்சயம், தப்பிக்க இயலாது, இறைவனின் தண்டனை தீர்ப்பு நிச்சயம் வரும் என்று தீர்க்கர் எடுத்துரைக்கின்றார்.
தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவது மில்லையென்று என் ஜனத்தில் சொல்கிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.(9 : 10) எந்தக் கடவுளின் தண்டனை தீர்ப்பை தீர்க்கர் மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார்.
இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பூமியின் மேல் இராதபடிக்கு அழித்துப் போடுவேன்9 : 8) என்று "கடவுள் பாரபட்சம் அற்றவர்" என்ற எச்சரிப்பின் செய்தியையும் அவர் வழங்குகின்றார்.
இதுவரையிலும் இஸ்ரவேல் மக்கள் தாங்கள் மட்டும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற மமதையில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு பேரிடியாக மற்றும் ஒரு செய்தியை அவர் கூறுகின்றார்...
இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டு வரவில்லையோ?(9 : 7) என்ற இந்த செய்தி இஸ்ரவேல் மக்களுக்கு சாட்டையடி போல இருந்தது.
எத்தியோப்பியா நாடு என்பது கருப்பு இன மக்கள் வாழுகின்ற ஒரு பகுதி என்பது நமக்குத் தெரியும். இருக்கின்றவராகவே இருக்கிறேன் என்ற கடவுள் இஸ்ரவேல் மக்களை எவ்வண்ணமாக ஒடுக்குதலில் இருந்து மீட்டெடுத்தாரோ அவ்வண்ணமாகவே எத்தியோப்பியா மக்களையும் ஆண்டவர் விடுவித்தார் என்ற புதிய கண்ணோட்டத்தை இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் தீர்க்கர் வழியாக எடுத்துரைக்கின்றார்.
இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் பயணம் அது விடுதலை இறையியலை முன்வைக்கின்றது. ஆனால் எத்தியோப்பியரின் விடுதலை தலித் விடுதலைக்கு அடித்தளமாக அமைகின்றது. அவர்கள் தங்கள் வாழ்ந்த நாட்டிலேயே அவர்களுக்கு கடவுள் அவளுக்கு விடுதலை அளிக்கின்றார், ஒடுக்குதலில் இருந்து அவர்களை மீட்கின்றார்.
கடவுள் பார்வையில் இஸ்ரவேலரும் ஒன்றுதான் எத்தியோப்பியரும் ஒன்றுதான். அவர்களும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இறை சமூகம் தான்.
இருக்கின்றவராகவே இருக்கிறேன் என்று வெளிப்படுத்திய இறைவன், எங்கெல்லாம் ஒடுக்குதல் நடைபெறுகிறதோ அந்த ஒடுக்கப்பட்ட மக்களோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்கின்றார். அவர்களோடு இணைந்து விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்து அவர்களை விடுவிக்கின்றார்.
"இறைவனின் சாயல் என்பது நிறங்களுக்கு அற்ப்பட்டது, இனங்களுக்கு அப்பாற்பட்டது, மொழிகளுக்கு அப்பாற்பட்டது... வெளிப்புறத் தோற்றத்தை வைத்து அல்ல உள்ளே ஓடுகின்ற குருதி நிறத்தை மையமாகக் கொண்டது".
அனைத்து உலகிற்கும் வாழ்வளிக்கின்ற கடவுள் "தன்னை ஒடுக்கப்படுகின்ற மக்களோடு ஒன்றிணைத்துக் கொள்கின்ற கடவுள்" என்கின்ற விசாலமான பார்வையை நமக்கு முன்வைக்கின்றார்.
ஆமோஸ் தீர்க்கர் வழியாக கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் செய்தியையும் வழங்குகின்றார்.. அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புக்களை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.(9 : 12)
ஓர் உடல் ஓர் திருமுழுக்கு என்கின்ற இந்த நியமம்
> ஒடுக்கப்பட்ட மக்களோடு கடவுள் எவ்வாறு தன்னை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்வளிக்கின்றாரோ அதேபோல நாமும் இந்த இறை சிந்தையோடு வாழ்வளிக்கும் கடவுளோடு நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை நமக்கு வழங்குகின்றது.
> ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு தங்களை ஒன்றாக இணைத்துக் கொண்டு இறை வழிநடத்தலுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்களோ அப்படிப்பட்ட அர்ப்பணிப்பில் வாழ்வதற்கு உதவி செய்கின்றது
> யாரெல்லாம் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்களோ அவர்களோடு நாமும் ஒன்றிணைந்து அவர்களின் விடுதலைக்காக பாடுபட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை முன்வைக்கின்றது.
> நிறவெறி, இனவெறி, மதவெறி, சாதிவெறி ...போன்ற ஒடுக்குகின்ற சித்தாந்தங்களை, கோட்பாடுகளை, பாரம்பரியங்களை கடைப்பிடிக்கின்ற எவரும் குறிப்பாக அவர்கள் திருமுழுக்கு பெற்றிருந்தாலும் ஆண்டவரின் தண்டனை தீர்ப்புக்கு உள்ளாவார்கள் எச்சரிக்கையும் அது வழங்குகின்றது.
> திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் இறைவனின் அங்கமாக, இறைவனின் குடும்பமாக, எல்லா வேறுபாடுகளையும் களைந்து, குருதியின் நிறத்தைக் கொண்ட, குணத்தை கொண்ட, பண்பை கொண்ட மக்களாக வாழ்வதற்கு அடித்தளமாக இருக்கிறது என்பதை மனதில் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றது...
இந்த ஒன்றிப்பு ஞாயிறில் இவைகளை கருத்தில் கொண்டவளாக இறைவனோடு நம்மை ஒன்றித்துக் கொள்வோம், ஒடுக்கப்பட்ட மக்களோடு நம்மை ஒன்றிணைத்துக் கொள்வோம்...
2. இறைவனின் மீட்பு பணியில் இயேசுவின் சிந்தையோடு ஒன்றிணைத்துக் கொள்வதற்கு திருமுழுக்கு பேர் உதவியாக இருக்கிறது.(மத்தேயு 16 : 13 - 20)
இயேசு கிறிஸ்து தம் திருப்பணி ஊடாக தன்னை திறனாய்வு செய்து கொள்கின்றார். அவர் பிலிப்பு செசரியா பகுதிகளுக்கு வரும் பொழுது தம் சீடர்களிடம் கேட்கின்ற இந்த கேள்வி இதனை வெளிப்படுத்துகின்றது.
மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்(16 : 13)
என்கின்ற இயேசுவின் கேள்வி நியாயமான ஒன்று, எதார்த்தமான ஒரு கேள்வி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை மனுஷகுமாரன், மனுமைந்தன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றார்.
மிக நீண்ட நெடிய விடுதலை பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தன் விடுதலைப் பணியின் தாக்கம் எவ்வளவாக இருக்கிறது என்பதை அறிவதற்காகவே இந்த கேள்வியை தம் சீடர்களிடம் எழுப்புகின்றார்.
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.(16 : 14) ஒட்டுமொத்தத்தில் கடவுளின் கருவியாக, கடவுளின் பணியாளராக உம்மை காண்கிறார்கள் என்று சீடர்கள் இயேசுவிடம் எடுத்துரைக்கின்றார்கள்.
மக்களின் பார்வை எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட இயேசு கிறிஸ்து, தம் சீடர்களிடம் நீங்கள் எவ்வாறு என்னை காண்கிறீர்கள் என்ற புதிய கேள்வியை எழுப்புகின்றார்.
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.(16 : 16)
இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்(16 : 17).
"உடன் இருப்பது முக்கியமல்ல புரிந்து இருப்பது" என்பது அவசியமானது என்பதை இயேசு கிறிஸ்து சீமோன் பேதுரு வழியாக நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
கிறிஸ்து என்பதற்கு இரட்சகர் மீட்பர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். பேதுரு இயேசு கிறிஸ்துவின் சிந்தையை உணர்ந்தவராக, அவரின் பணிகளில் உள்ள விடுதலை கூறுபாடுகளை அறிந்தவராக இயேசுவை கிறிஸ்து, இரட்சகர், மீட்பர் என்று அறிக்கை செய்கிறார்.
இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த நாட்களில் இருளில் கிடந்த மக்களுக்கு ஒளியாக, பார்வை அற்றோருக்கு பார்வையாக, வழியை மறந்தவர்களுக்கு வழியாக, வாழ்வை இழந்தவருக்கு வாழ்வாக, பாவிகளின் நண்பனாக, சொந்தம் அற்றோருக்கு சொந்தமாக, யாசித்தவர்களுக்கு மறு வாழ்வாக, கைவிடப்பட்டவர்களுக்கு உறுதுணையாக, அவர்களோடு உண்டு, உறவாடி மகிழ்ந்து அவர்களோடு அங்கமாக l, ஓர் உடலாக, ஓர் குடும்பமாக, ஓர் உறவாக வாழ்ந்து இருந்ததை தம் சீடர்கள் அறிந்து கொண்டதை நினைத்து அகமகிழ்ந்திருப்பார்.
இயேசு கிறிஸ்துவின் இத்தகைய அர்ப்பணிப்பிற்கு ஒரே காரணம் அவர் பெற்ற திருமுழுக்கு. அவர் பெற்ற ஒரே திருமுழுக்கு தான் அவரை இப்படிப்பட்ட இறைப்பணியாளராக, இறை மகனாக அவரை உந்தித் தள்ளியது.
அவர் திருமுழுக்கு பெற்று கரை ஏறிட உடனே இவர் என் நேசுக்குமாரன் என்று கடவுள் இயேசு கிறிஸ்துவை தத்தெடுத்ததைப் போல, இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த நாட்களில் பாவிகளாக கருதப்பட்டு, ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, இழிவாக நடத்தப்பட்ட அனைவரையும் தத்தெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வழித்து, அவர்களையும் இறை மக்களாக உயர்த்துவதற்கு நாம் செய்த அரும் செயல்களையும், அடையாளங்களையும் தம் சீடர்கள் புரிந்து கொண்டார்களே என்று ஆண்டவர் அகமகிழ்ந்தார்.
இறை மக்களாகிய நாம் பெற்ற ஒரே திருமுழுக்கு, நம்மைப் பிரித்துக் காட்டுவதற்காக அல்ல இயேசு கிறிஸ்துவின் சிந்தையோடு நம்மை ஒன்றிணைத்துக் கொள்வதற்கே என்ற புரிதலுக்கு வழிநடத்துகின்றது.
இயேசு கிறிஸ்துவின் அடியவர்களாக, சீடர்களாக, தொண்டர்களாக நாம் பெற்ற ஒரே திருமுழுக்கின் மூலமாக, இயேசுவின் சிந்தையோடு நாம் இணைகிறோம், இணைந்து அவரோடு பயணிக்கிறோம், இறைவனின் மீட்பு பணியில் நாமும் பங்கெடுக்கிறோம் என்ற உணர்வோடு வாழ்வதற்கு நாம் பெற்ற ஒரே திருமுழுக்கும், இந்த பகுதி நம்மை அழைக்கின்றது அர்ப்பணிப்போம்
3. உள்ளுறைந்து செயல்படும் ஆவியரின் கூட்டுறவில் ஒன்றிணைத்துக் கொள்ள திருமுழுக்கு வகை செய்கின்றது.(எபேசியர் 4: 1 - 6 )
எபேசு திருச்சபை மக்களுக்கு எழுதுகின்ற கடிதத்தில், பவுல் அடியார் நம் திருச்சபை மக்கள் எப்படிப்பட்ட பற்றுறுதியில் வளர வேண்டும், வாழ வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றார்.
பவுலடியார் வாழ்ந்த காலகட்டங்களில் பல தலைவர்கள் ஆண்டவரின் திருப்பணியை ஆற்றி வந்தார்கள். ஒவ்வொருவரும் தம் தம் வழியில் அவர்கள் பயணித்தார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாரம்பரியங்களை (Tradition) தோற்றுவித்தார்கள். அந்த பாரம்பரியங்களை சிறந்தது என்று வாதிட்டார்கள். ஒருவருக்கும் ஒவ்வொரு கூட்டங்களை அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள்.
நாளடைவில் இது மக்களிடையே பெரும் பிரிவுகளுக்கும், பிரிவினைகளுக்கும், பேதங்களுக்கும் அது வித்திட்டது. இதை அறிந்த பவுலடியார் இதனை கலைவதற்கு அவர் முற்படுகின்றார்.
பல திருமுழுக்குகள் மக்களிடையே பற்றுறுதியை சீர்குலைத்தது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு அது நேர் எதிராக இருந்ததை கண்டு பவுல் அடிகளார் மக்களை நல்வழிப்படுத்த முயலுகின்றார்.
திருச்சபை மக்களே உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு, ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு.
எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு. அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்(4 : 3 - 6) என்று புத்தி சொல்லுகின்றார்.
இறுதியாக பவுலடியார் முடிக்கும் பொழுது குறிப்பிடுகின்ற வார்த்தை மிகவும் முக்கியமான பதங்களாகும் அவைகள் "அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்". கடவுள் உள்ளுறைந்து ஆவியானவராக நமக்குள் அவர் வசிக்கின்றார், அவர் வாழ்கின்றார், அவர் வழி நடத்துகின்றார் என்பதே பவுலடியார் அவர்களின் ஆழமான பற்றுறுதி.
நாம் பெற்ற ஒரே திருமுழுக்கு கடவுளின் மக்களாக நம்மை இணைக்கின்றது. கடவுளின் அன்பு உறவுக்குள் வாழ செய்கிறது. அந்த நம்பிக்கை ஒரே பற்றுறுதியில் வாழ செய்கிறது இதுவே நம்மை இறையாட்சியின் மக்களாக வாழ்வதற்கு அடித்தளமாக இருக்கிறது என்பதை பவுலடியார் கோடிட்டு காண்பிக்கின்றார்.
கடவுள் எல்லாரோடும் இருக்கின்றவர் நம்மோடும் இருக்கின்றார் என்ற செய்தியானது, சமத்துவ நெறியில் வாழ்வதற்கும், ஓர் உலை சமூகமாக வளர்வதற்கும், அனைவரையும் இறைவனின் சாயலாக பார்ப்பதற்கும் உதவி செய்கின்றது என்பதே பவுலடியாரின் ஆழமான கருத்து.
திருச்சபை என்பது இறைவனின் ஓர் உடல் என்பதை கருத்தில் கொண்டவர்களாக தலையாக ஆண்டவர் இருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவரின் அவயவங்களாக நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற நெறியில் வளர்ந்து, ஓர் உடலாக, ஓர் உறவாக, ஓர் குடும்பமாக ஒரே பற்றுறுதியில் வளர வளர நாம் நம்மை அர்ப்பணிப்போம்.
ஆவியரின் கூட்டுறவில் அகமகிழ்ந்து வாழ்ந்து, ஆவியின் கனிகளை ஈந்து, ஆவியர் தந்த வரங்களை, திறன்களை, பொறுப்புகளை கடன் பணி புரிய நம்மை அர்ப்பணிப்போம், திருமுழுக்கு அதற்கு சான்றாக அமையட்டும்.
நிறைவாக
திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்..
> நிறவெறியை வேரறுப்போம்
> மனுதர்மத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்
> ஒடுக்கப்பட்டோருடன் இணைந்த நிற்போம்
> அனைவரையும் இறை சாயலாக காண்போம்
> சமத்துவ நெறியில் வளர்வோம்
> ஓர் இறை குடும்பமாக வாழ்வோம்
> மாற்றுத்திறனாளிகளின் உடல் மொழிகளை அறிந்திடுவோம்
> மனு மைந்தனின் மக்களாக மாறிடுவோம்
> மாற்று சமூகம் படைத்திட முயன்றிடுவோம்
> மனித நேயம் மண்ணில் தழைக்க மண்ணுக்கு உரமாகுவோம்...
பிறந்தநாள், திருமண நாளை நினைவில் வைத்திருக்கிற நாம், நாம் பெற்ற திருமுழுக்கு நாளை நினைவில் வைத்திருக்கிறோமா? என்பதை உணர்வோம். நாம் பெற்ற திருமுழுக்கு நாளை கொண்டாடுவோம், ஏனென்றால் கடவுள் நம்மை அன்று தம் பிள்ளைகளாக நம்மை தத்தெடுத்திருக்கின்றார். நாம் கடவுளின் பிள்ளைகளாக உலகிற்கு அடையாளம் காண்பிக்கப்பட்டு இருக்கிறோம்.
# ஒடுக்கப்பட்ட கடவுளோடு ஒன்றிணைவோம்...
# இயேசு கிறிஸ்துவின் சிந்தையோடு ஒன்றிணைவோம்...
# உள்ளுறைந்து செயல்படும் ஆவியோடு ஒன்றிணைவோம்...
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக..
நட்புடன்
உங்கள்
Rev. Augusty Gnana Gandhi
Comments
Post a Comment