COME
HOLY SPIRIT SET US FREE
தூய ஆவியாரே வந்து எங்களை விடுவியும்
# திருமறை பகுதிகள்:
ஏசாயா
61 : 1 - 11
திருத்தூதுவர் பணிகள் 2 : 1 - 13
லூக்கா 4 : 16 - 21
திருப்பாடல்கள் 107 : 31
- 43
# உட்புகும் முன்:
திருச்சபையின் நியமப்படி இன்று பெந்தகோஸ்தே திருநாள் பண்டிகையாகும். பெந்தேகோஸ்தே விழா அறுவடைப் பெருவிழா என்றும்,
வாரங்களின் விழா என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கோதுமையை இறைவனுக்குப் படைக்கும் விழாவாக இந்த அறுவடைப் பெருவிழா அல்லது பெந்தேகோஸ்தே நாள் கொண்டாடப்படுகிறது.
பெந்தேகோஸ்தே என்பதற்கு ஐம்பது என்பது பொருள்.
முதற்பலன் நாளில் இருந்து ஏழு வாரங்களைக் கணக்கிட்டு அதற்கு அடுத்த நாளில் இந்த விழா கொண்டாடுவதால், வாரங்களின்
விழா என்றும் அழைக்கப்படுகிறது.
ஐம்பதாம் நாள் விழா என்பதில் திருமறையில் பல முன் உதாரணங்கள் அடையாளங்களாகவும் ஒப்பீடுகளாக நாம் அறிந்து கொள்ளலாம்.
👉🏿 மோசே இஸ்ரேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்த ஐம்பதாவது நாளில் சீனாய் மலையில் இறைவன் பத்து கட்டளைகளைக் கொடுக்கிறார்.
👉🏿 அந்த வார்த்தைகள் அடங்கிய சட்டங்களை மோசே சுமந்து வருகிறார். இறைமகன் இயேசு உயிர்த்தபின் ஐம்பதாவது நாளில் தூய ஆவியானவர் சீடர்களின் மேல் நெருப்பு நாவாக வந்து இறங்கினார்.
👉🏿 இறைவனை விவிலியம் “வார்த்தை” என்கிறது. மோசேயிடம் வார்த்தைகள் எழுத்து வடிவமாக கிடைத்தன, இங்கே தூய ஆவி வடிவமாக கிடைக்கின்றன.
👉🏿 மோசே கட்டளைகளைப் பெற்ற அந்த ஐம்பதாவது நாளிலும் சத்தமும், பெருங்காற்றும், நெருப்பும் இருந்தன.
👉🏿 புதிய ஏற்பாட்டின் பெந்தேகோஸ்தே நாளிலும் நெருப்பும், பெருங்காற்றும், சத்தமும் இருந்தன.
👉🏿 மோசே கட்டளைகளைக் கொண்டு வந்த நாளில் மக்கள் இறைவனை விட்டு விலகி கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருந்தார்கள். சட்டம் கொண்டு வந்த அந்த நாளில் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
👉🏿 தூய ஆவி வந்திறங்கிய நாளில் சீடர்கள் பல மொழிகளில் பேச, மக்களில் மூவாயிரம் பேர் மீட்புக்குள் வந்தனர்.
கர்த்தரே ஆவியானவர்.
கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.(2
கொரிந்தியர் 3 : 17)
பெந்தகோஸ்தே திருநாள் அன்று நடந்த நிகழ்வுகளையும்,
கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதிகளையும் நாம் ஆழ்ந்து தியானிக்கும் பொழுது, தூய ஆவியார் விடுதலை அருளுகின்றவர், விடுவிக்கின்றவர் என்னும் பேருண்மை நமக்கு விளங்குகின்றது.
1. அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் தூய ஆவியார் (The
Holy spirit who frees from bondage) – ஏசாயா 61 : 1 – 11
2. அச்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் தூய
ஆவியார் (The
Holy spirit who frees from the grip of fear) – திருத்தூதுவர் பணிகள் 2 : 1 – 13
3. அறியாமை இருளிலிருந்து விடுவிக்கும் தூய ஆவியார்
(The Holy spirit who frees from the darkness of ignorance) – லூக்கா 4 : 16 – 21
மேற்கண்ட தலைப்புகளின் வழியாக திருமறை பகுதிகளை நாம் தியானிப்போம்.
1. அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் தூய ஆவியார் (The Holy spirit who frees from
bondage) - ஏசாயா 61 : 1 - 11
கொடுக்கப்பட்ட இந்த திருமறைப் பகுதி மூன்றாம் ஏசாயா என்று நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். சிறை இருப்பிலிருந்து மீண்டு வந்த பின்பதாக எழுதப்பட்ட பகுதி என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இஸ்ரவேல் மக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு சிறை இருப்பில் மிக நீண்ட நாட்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தார்கள்.
அகதிகளாக,
அடிமைகளாக வாழும் நிலை எவ்வளவு கொடியது என்பதை தங்கள் வாழ்வில் நன்கு கற்று அறிந்திருந்தார்கள்.
வாழ்வு முழுவதும் இனி அடிமைத்தனத்தில் தான் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் விடுதலையை அருளுகின்றார்.
விடுதலை பெற்ற பின் இஸ்ரவேல் மக்களின் மனநிலை மன அழுத்தம் அவர்களின் வாழ்வில் எவ்வாறு இருந்தது என்பதை இந்த திருமறை பகுதி மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
மேசியாவின் ஆட்சி எவ்வாறு இருக்கும், மேசியாவின் வருகை உலகில் என்னென்ன மாற்றங்களை செய்யும் என்பதை இந்த திருமறை பகுதி ஆழமாக எடுத்துக்காட்டுகிறது.
மேசியாவின் வருகை தனி மனித விடுதலையை தவிர்த்து சமூக விடுதலையை முன் வைப்பதாக அமைந்திருக்கிறது.
கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதியில் மைய அழுத்தமாக காண்பிக்கப்படுவது எவைகள் எனில்...
# சிறுமை பட்டவர்கள்,இருதயம் நொறுங்குண்டவர்கள், காயம் உற்றவர்கள், சிறை பட்டவர்கள், கட்டுண்டவர்கள், துயர் உற்றவர்கள், கடவுளின் ஆண்டை எதிர்நோக்கி இருந்தவர்கள்...
இவர்கள் யார் என்ற கேள்வி நமக்குள் எழும்புகிறது.
இவைகள் ஒட்டுமொத்த யூத சமூகத்தை குறிக்கின்றதா அல்லது யூத சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை குறிப்பிடுகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இஸ்ரவேல் மக்களின் எதிர்பார்ப்பான மேசியாவின் வருகை நிச்சயம் நடைபெறும் என்பதை ஏசையா தீர்க்கர் மக்கள் மனதில் ஆழமாக விதைக்கின்றார்.
கர்த்தரின் ஆவியார் மேசியாவின் மீது இருக்கிறார் அவர் நிச்சயம் விடுதலையை கட்டமைப்பார் என்பதை ஏசாயா தீர்க்கமாக எடுத்துரைக்கின்றார்.
தொடர்ந்து பல படையெடுப்புகள் அதன் மூலம் உண்டாகின்ற அடிமைத்தன வாழ்வு இவைகளில் தங்கள் வாழ்வை வெறுத்துப் போன இஸ்ரேல் மக்கள் இறைவனை நோக்கி முறையிடுகின்றனர். கடவுள் அவர்களுக்கு செவி சாய்த்து மேசியா மூலம் விடுதலை அருளுவார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்படுகின்றது.
# சிறைப்பட்டோருக்கு விடுதலை - நீதித்துறை சார்ந்தது
# இருதயம் நொறுங்குண்டவர்கள் - ஆற்றுப்பணி சார்ந்தது
# காயம் கட்டுதல் - மருத்துவம் சார்ந்தது
# சிறுமை பட்டவர்கள் - வறுமை ஒழிப்பு சார்ந்தது
# கட்டுண்டவர்கள்
- சட்ட அமைப்பு சார்ந்தது
# துயர் உற்றவர்கள் - சமூக நலன் சார்ந்தது
# கடவுளின் ஆண்டு - அரசியல் சார்ந்தது...
ஆவியானவர் மேசியா வழியாக தருகின்ற விடுதலை என்பது மேற்கண்ட அத்தனை துறைகள் சார்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.
மேசியா தரும் விடுதலை என்பது சமூக,
பொருளாதார, அரசியல், கருத்தியல் ... போன்ற ஒட்டுமொத்த விடுதலை வாழ்வை(Holistic
Liberation) குறிப்பதாக அமைந்திருக்கிறது.
அப்படி என்றால் மேசியாவின் ஆட்சியில் ஆவியானவர் செயல்பாடு சமூகத்தில்
"ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, அடிமைத்தன வாழ்வை ஒழித்து,
பிரிவினைகளை வேர் அறுத்து,
ஆண்டான் - அடிமை என்னும் நிலையை முற்றிலுமாக அகற்றி"
இறை ஆளுகையை நிறுவுவதாக அமைந்திருக்கும்.
ஆவியானவர் தருகின்ற இந்த விடுதலை என்பது அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், அனைவருக்கும் அனைத்தும் என்கின்ற நெறிகளில் அமைக்கப்படும் ஆட்சி முறையை குறிக்கின்றது.
கடவுளின் ஆவியானவர் அருளுகின்ற இந்த "விடுதலை வாழ்விற்குள் குடிமக்களாக மட்டுமல்ல,
கடவுளின் அரசாட்சியில் பங்கெடுக்கின்ற மக்களாக"
நம்மை உருமாற்றிக் கொள்ள ஆவியானவர் அழைக்கின்றார்.
2.அச்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் தூய ஆவியார்(The Holy spirit who frees from the
grip of fear) - திருத்தூதுவர் பணிகள் 2:1- 13
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், பாடுகள், துன்பங்கள் இயேசுவின் சீடர்களின் வாழ்வில் அச்சத்தை உண்டாக்கியது.
சீடர்களுக்கு மட்டுமல்ல இயேசுவை பின்பற்றியவர்கள் இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தில் தங்களை இணைத்து கொண்டவர்கள் வாழ்விலும் மாபெரும் அச்சத்தை உண்டாக்கியது.
இயேசு கிறிஸ்துவின் அடியவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். உலகின் பல பகுதிகளில் ஓடி ஒளிந்து கொண்டார்கள், அரசின் வன்முறைகளுக்கு பயந்து தங்களை மறைத்து கொண்டார்கள்.
உயிர்த்தபின்பதாக இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு தம்முடைய தரிசனத்தை காண்பித்து, மாபெரும் கட்டளையை அவர்களுக்கு கொடுத்தார்.
நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டு போங்கள் என்றார்.
இயேசுவின் கட்டளையை ஏற்றவர்கள் ஆற்றல் பெற்றார்கள்,
இயேசு கிறிஸ்துவினால் அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டார்கள்,
கடவுள் இயேசு கிறிஸ்துவை அனுப்பியதைப் போல அவர்களும் பணி நியமனத்தை பெற்றுக் கொண்டார்கள்.
இயேசு கிறிஸ்துவின் பாடு மரணத்திற்கு பின்பதாக வருகின்ற 50 ஆம் நாளில் நிகழ்கின்ற பெந்தகோஸ்தே பண்டிகை சிதறடிக்கப்பட்டவர்களை மீண்டும் ஒன்று சேர்த்தது.
ஏறக்குறைய
12 நாட்டில் இருந்த மக்களை பெந்தேகோஸ்தே பண்டிகை ஒன்றாக இணைத்தது.
இதுவரையிலும் விழாவாக அனுசரிக்கப்பட்ட வந்த முறைமையை சீடர்கள் வேறு விதத்தில் அதை மாற்றினர்.
ஆவியானவர் பண்டிகையில் "ஒருங்கிணைந்த சீடர்களின் வாழ்வில் ஆற்றலை தந்தார்".
அந்த "ஆற்றல் அவர்களை அச்சத்தில் இருந்து விடுபட வைத்தது."
இதுவரையிலும் பெந்தகோஸ்தே பண்டிகையை சடங்காச்சாரமாக பாரம்பரியமாக செயல்படுத்தி வந்த சீடர்கள் இம்முறை இந்தப் பண்டிகையில் ஒரு புதுமையை புகுத்தினார்கள்.
இதுவரையிலும் பேசுவதற்கு உரிமையை மறுக்கப்பட்டு இருந்த சீடர்களும்,
இயேசுவின் அடியவர்களும் பெந்தேகோஸ்தே பண்டிகையில் வழிபட வந்தவர்கள்,
பலி செலுத்த வந்தவர்கள்
"பேச ஆரம்பித்தார்கள."
பெந்தேகோஸ்து பண்டிகையில் "ஆவியானவர் சீடர்களுக்கும் இயேசுவின் வழித்தோன்றல்களுக்கும் அவரைப் பின்பற்றிய அடியவர்களுக்கும் பேச்சுரிமையை"
(Freedom of Speech) வழங்கினார்.
பேசுகின்ற இவர்கள் கலிலேயர்கள் அல்லவா! என்று மக்கள் வியந்து பார்க்கும் வகையில் "ஆவியானவர் விளிம்பு நிலை மக்களுக்கு முகவரியை தந்தார்."
அவர்களின் பேச்சுக்களை கட்டுப்படுத்த அரசினாலும் முடியவில்லை சமய தலைவர்களாலும் முடியவில்லை அவர்கள்
"வெகுண்டு " எழுந்ததை அவர்களின் பேச்சுக்கள் வழியாக நாம் அறிகின்றோம்.
பெந்தேகோஸ்தே பண்டிகையில் விளிம்பு நிலையிலிருந்து கலிலேயர்கள் மையம் நோக்கி வந்தார்கள். மையத்தில் தங்கள் பேச்சுரிமையை மீட்டெடுத்தார்கள்.
அறுவடை பண்டிகையை இம்முறை அவர்கள் பொருள் உள்ள வகையில் கொண்டாடினார்கள் என்பதை இந்த நிகழ்வுகளின் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம்.
அவர்கள் அனைவரும் என்ன பேசினார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் பேதுருவின் உரை "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..."
என்கின்ற வகையில் புரிந்து கொள்ளலாம்.
அந்த
"ஜீவாதிபதியை நீங்கள் கொலை செய்தீர்கள்" என்பதே அவர்களின் பேச்சுக்களின் சாராம்சமாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.
சமய சாயம் பூசி அரசியல் தலைவர்களை தங்கள் கைப்பாவையாக வைத்து இயேசுவை கொலை செய்ததை
"விவாத பொருளாக" அவர்கள் மாற்றினார்கள்.
பெந்தேகோஸ்தே பண்டிகையில் ஆவியானவர் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று படுத்தினார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் பண்டிகையில் தங்களை "கூட்டமைப்பாக" வடிவமைத்துக் கொண்டார்கள். வலுவற்றோர்களின் கூட்டமைப்பு அவர்களை வலு உள்ளதாக மாற்றியது.
ஆவியானவர் அருளுகின்ற விடுதலை பேச்சுரிமையை
சீடர்களுக்கு வாழ்வுரிமையாக" உருவாக்கித் தந்தது.
அந்தக் கூட்டமைப்பு "அதிகாரத்தை
நோக்கி கேள்வி எழுப்பியது."
நீங்கள் அவரை கொலை செய்தீர்கள் என்று பகிரங்கமாக "நிதர்சனத்தை" எடுத்துரைத்தார்கள்.
இயேசுவின் கொலைக்கான "காரணத்தை அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்."
ஆவியானவர் பெந்தகோஸ்தே பண்டிகையில் மாபெரும் "புரட்சிக்கு" வித்திட்டார்.
"அந்தப் புரட்சியின் தீயை ஒருவராலும் அணைக்க முடியவில்லை."
இதுவரையிலும் ஆட்சி அதிகாரத்திலிருந்து மக்களை ஒதுக்கின சமய தலைவர்கள் ஓரமாக நின்று கேட்கத்தான் முடிந்தது.
அவர்களை எதிர்க்க முடியவில்லை
, அவர்களை அடக்க முடியவில்லை,
அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
மொத்தத்தில் இதுவரை "ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களை பார்வையாளர்களாக மாற்றியது" இயேசு கிறிஸ்துவின்
"அடியவர்களையும் சீடர்களையும் போராளிகளாக மாற்றியது."
ஆவியானவரின் செயல்பாட்டினால் சீடர்களும் இயேசுவின் வழி தோன்றல்களும் அச்சத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.
ஆவியானவர் தந்த பேச்சுரிமையை அவர்கள் எருசலேமின் மையத்தில் செயல்படுத்தினார்கள்.
விவாதங்களை முன் வைத்தார்கள்.
கடவுளின் செயல்பாட்டினையும் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
இதுவரையிலும் பரிசேயர்களும்,
வேதபாரகர்கள், ஆசாரியர்களும் செய்த அத்தனை வேலைகளை,
சமய கல்வி பரப்புரையை கலிலேயர்கள் தங்கள் பேச்சுரிமையால் மீட்டெடுத்தார்கள்.
பேதுருவின் உரையை கேட்ட மக்கள் ஒரே நாளில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த
50 ஆம் நாளில் 3000 பேர் இயேசுவின் இயக்கத்தில் பகிரங்கமாக தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
யூத பாரம்பரியத்தில் இருந்த திருமுழுக்கு என்கின்ற முறையை பொருள் உள்ள வகையில்,
அவர்கள் மாற்றி அமைத்தார்கள்.
சடங்காச்சாரமாக பின்பற்றப்பட்டு வந்த இந்த முறைமையை அவர்கள் உணர்வு பூர்வமாக மாற்றினார்கள்.
மனமாற்றத்திற்கு அடையாளமான திருமுழுக்கு என்பதை "சமூக மாற்றத்திற்கான திருமுழுக்கு" என்று வடிவமைத்தார்கள்.
சமூக மாற்றத்திற்கான திருமுழுக்கை மனதார ஏற்றுக் கொண்டவர்கள் சமூகத்தில் மாபெரும் பொதுவுடமை சமூகத்தை கட்டமைத்தார்கள்.
ஆவியானவர் அச்சத்தில் இருந்த மக்களுக்கு, சீடர்களுக்கு கலிலேயர்களுக்கு இயேசு அடியவர்களுக்கு...
# அச்சத்திலிருந்து விடுதலையை தந்தார்
# பேச்சுரிமை தந்து, மையத்தில் பேச வைத்தார்
# போராளிகளாக உருவாக்கி போராட்டங்களில் ஈடுபட வைத்தார்.
# பொதுவெளியில் நீதிக்கான போராட்டங்களை நடக்க வைத்தார்.
# ஒரே நாளில் 12 நாடுகளுக்கு மேற்பட்ட மக்களில் 3000 பேர் கொண்ட மாபெரும் கூட்டமைப்பை, மக்கள் திரள் இயக்கத்தை உருவாக்கினார்.
அச்சம் அடிமைப்படுத்தும் காரணிகளில் தலையாகிய ஒன்றாகும்.
ஆவியானவர் அடிமைப் படுத்துகின்ற இந்த காரணிகளிலிருந்து தம் மக்களை விடுவித்ததோடு மாத்திரமல்ல அதிகாரம் உடையவராக மாற்றினார்.
3. அறியாமை இருளிலிருந்து விடுவிக்கும் தூய ஆவியார் (The Holy spirit who frees from the
darkness of ignorance) - லூக்கா 4 : 16 - 21
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இருளில் இருந்தார்கள் என்பதை திருமறை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் போர் மேகங்கள் சூழ்ந்து இருந்தது ஒரு புறம்,
மறுபுறம் அவர்கள் அறியாமை என்னும் இருளில் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டு இருந்தார்கள் என்பதும் நிதர்சனம்.
இஸ்ரவேல் மக்கள் சமயக் கல்வி கற்றிருந்தார்கள் எனினும் அந்த சமயக் கல்வி அவர்களை சமத்துவ நெறிமுறைகளுக்கு வழிநடத்தாமல்,
சமூக நீதியை காப்பதற்கு துணை நிற்காமல்,
ஏற்றத்தாழ்வுகளையும், படிநிலைகளையும், அடிமைத்தனங்களையும் உருவாக்கி வந்தது.
சமயத் தலைவர்களின் அடக்குமுறைகள் ஒருபுறம் மறுபுறம் அரசின் வரிவிதிப்புகளும் ஆதிக்கமும் மக்களை சிதைத்தது.
ஏழைகள் மேலும் ஏழைகள் ஆக்கப்பட்டனர். விளிம்பு நிலை மக்கள் மேலும் விளிம்புக்கு தள்ளப்பட்டார்கள்.
ஆலயமும் கள்வர் குகையாகி மாறிப் போனது.
பலி பொருட்கள் சந்தை பொருட்களாக மாற்றப்பட்டது.
அடிமை வியாபாரமும் ஏழைகள் மீது கரிசனையற்ற வாழ்வும், வலுவற்றோரை அடக்கி ஆளுகின்ற நிலையும், செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக தங்களை மாற்றிக் கொள்ளவும்,
அவர்களுக்கு சாதகமாக சமயமும் அதிகாரமும் ஆட்சியும் துணை போயின.
மோசே வழியாக கடவுள் வகுத்துக் கொடுத்த நியாயப்பிரமாணங்களும் சட்டங்களும் பொருளற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டன.
ஆணாதிக்கம் அனைத்து அடிமைத்தனங்களுக்கும் காரணமாக கோலோச்சி இருந்தன. ஏழைகள், பெண்கள், பாமரர்கள், கிராமத்து மக்கள்,
அன்றாட கூலிகள், பெண்கள் அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்,
அன்னகர்கள் சமூகத்தில்
இழிவாக கருதப்பட்டார்கள். அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படவுமில்லை நடத்தப்படவும் இல்லை.
தூய்மை
- தீட்டு என்னும் கருத்தியல்களால் சமூகம் பிளவு பட்டு இருந்தது.
எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் சமூகம் கடவுளின் செயல்களால் விடுதலை பெற்ற சமூகமாக மாற்றப்பட்டிருந்தது.
அதே சமூகம் வரலாற்றில் தங்களை ஒடுக்குகின்ற சமூகமாக மாற்றிக் கொண்டது. விடுதலை அருளுகின்ற கடவுளை ஒடுக்குகின்ற சக்தியாக உருவகப்படுத்தி வாழ்ந்து வந்தனர்.
மக்கள் ஒருபோதும் விழிப்படைந்து விடக்கூடாது என்பதில் சமய தலைவர்களும் அரசியல் தலைவர்களும் மிகவும் குறியாக இருந்தார்கள் மக்களை அறியாமை என்னும் இருளில் வீழ்த்தி அதன் மூலம் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
இந்தப் பின்னணியில் இயேசு கிறிஸ்து ஜெப ஆலயத்தில் திருமறையை வாசிக்கின்றார் அவருக்கு கொடுக்கப்பட்ட திருமறை பகுதி ஏசாயா
61 ஆம் அதிகாரம்.
இயேசு கிறிஸ்து திருமறையை வாசித்த உடன் திருமறையில் உள்ள வார்த்தைகள் அவருக்கு அருளப்பட்டதாகவே அவர் கருதினார்.
ஏசாயா நூலில் விவரிக்கப்பட்டுள்ள இத்தனை விடுதலைகளையும் மேசியா அருளுவார் என்பது இஸ்ரவேல் மக்களின் நம்பிக்கை அந்த நம்பிக்கையை இன்று நிறைவேறிற்று என்று மக்களுக்கு முன்பாக இயேசு உறுதி கூறுகின்றார்.
மக்களுக்கு ஜெப ஆலயம் வழிபடும் இடமாக மட்டும் தோன்றியது.
திருமறை வாசிப்பும் ஒரு பாரம்பரியம் என்று கருதி வந்தார்கள்.
பலி செலுத்தினால் போதும் என்ற மன நிறைவில் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு ஜெப ஆலயம்
- மாற்று உருவாக்கத்தின் இடம் என்றும், திருமறை - சமூக மாற்றத்திற்கான அறைகூவல் என்றும்,
திருமறை விளக்கம் -
சமூக நீதிக்கான கலந்துரையாடல் என்றும், பலி - கோட்பாடு சார்ந்தது என்றும் இயேசு புரிந்திருந்தார்.
இயேசு கிறிஸ்து திருமறையை வாசிக்கும் பொழுதே தானும் மேசியாவின் யுகத்திற்கான, விடுதலையாளராக அருட்பொழிவு செய்யப்படுவதாக அவர் உணர்ந்தார்.
கடவுளின் அரசாட்சியை அமைப்பதற்காகவே தான் அனுப்பப்பட்டதாக அவர் மேலும் உணர்ந்தார்.
ஜெப ஆலயத்தில் வாசித்த திருமறைப் பகுதி இயேசு கிறிஸ்துவை இந்த புரிதலுக்கு வழி நடத்தியது என்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இது வாசிக்க வேண்டிய திருமறை பகுதி மட்டுமல்ல நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயல்முறைகளே இவைகள் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்து கொண்டார் ஆவியானவர் அவருக்கு உணர்த்தினார்.
திருமறையை வாசித்து முடித்தவுடன் ஆலயத்தில் அமர்ந்திருந்த மக்கள் அனைவரும் அவரை உற்று நோக்கினார்கள். அவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்பதை அறிவதற்கு மிகுந்த ஆவல் கொண்டிருந்தார்கள் என்று திருமறை நமக்கு எடுத்துரைக்கிறது.
இயேசு கிறிஸ்து திருமறை பகுதிக்கு என்ன விளக்கம் கொடுத்தார் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அவரின் விளக்கங்களை கேட்ட மக்களின் புருவங்கள் உயர்ந்தன என்பதை திருமறை எடுத்துக்காட்டுகிறது.
இயேசு கிறிஸ்து கொடுத்த விளக்கம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதுவரையிலும் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை காட்டிலும் இயேசு கிறிஸ்துவின் திருமறை விளக்கங்கள் அவர்களை புதிய புரிதலுக்கு வழி நடத்தியது என்பதையும் இதன் வழியாக அறிந்து கொள்கிறோம்.
இயேசு கிறிஸ்து கொடுத்த விளக்கங்கள் எளிய மக்களுக்கு நம்பிக்கையும் விடியலையும் கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த மக்களுக்கு கொலை செய்யும் வன்மத்திற்கு அவர்களை வழிநடத்தியது.
இயேசு கிறிஸ்து யூத மக்களை காட்டிலும் பிற நாட்டு மக்களையும் பிற இனத்து மக்களை கடவுள் எவ்வாறு நேசிக்கிறார், கடவுளின் மீட்பு திட்டத்தில் அவர்களை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்,
கடவுளின் எல்லைகள் பறந்து விரிந்தவைகள் என்பதை கற்றுக் கொடுக்கின்றார்.
மக்களை அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு ஆண்டவர் ஜெப ஆலயத்தையும்,
திருமறையையும், திருமறை சட்டங்களையும் ஆண்டவர் எடுத்துரைத்தார்.
மக்கள் அறியாமையிலிருந்து விடுவிக்கப்பட்டால் தங்கள் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும், தங்களது பதவி மோகங்கள் பறிபோகி விடும்,
தங்கள் சுகபோக வாழ்வு அழிந்துவிடும் என்று நினைத்த சமய தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் இயேசுவை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்வதற்கு ஆயத்தப் பட்டனர்.
அன்றைய தீர்க்கர்கள் ஒவ்வொரு முறையும் கடவுள் என்ன சொல்லுகிறாரோ அதை மக்களுக்கு செய்தியாக சொல்லி வந்தார்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்து என்று திருமறையை வாசித்தாரோ அன்று அந்த செய்தி கடவுளின் செய்தியாக,
அதை நடைமுறைப்படுத்துவதற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார்,
ஆவியானவரும் அவரை ஆற்றல் படுத்தினார்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளும் அற்புதங்களும் அவருடைய வாழ்வும் அறியாமை என்னும் இருளில் மூழ்கி கிடந்த மக்களுக்கு விடியலின் செய்தியாக அது அமைந்திருந்தது.
பெந்தேகோஸ்தே திருநாளன்று பேதுரு சொன்ன வார்த்தை நீங்கள் கொலை செய்த இயேசுவை கடவுள் உயிரோடு எழுப்பினார் எங்களை ஆற்றல் படுத்துகிறார் அதற்கு நாங்கள் சாட்சிகள் என்று சான்று பகர்கின்றார்.
சத்தியத்தை நீங்கள் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என கூறின இயேசு கிறிஸ்துவோடு கடவுளின் ஆவியானவர் உடன் இருந்தார் இயக்கினார்.
மக்களை அறியாமை என்னும் இருளின் பிடியிலிருந்து அவர்களை விடுவித்து வெளிச்சத்தின் பாதையில்,
வெளிச்சத்தின் மக்களாய், உப்பாய் ஒளியாய் வாழ்வதற்கு அவர்களை வழிநடத்தினார்.
திருமறையை வாசிக்கின்ற ஒவ்வொருவரையும் கடவுள் என் ஆவியானவர் அருட்பொழிவு செய்கின்றார் அந்த அருட்பொழிவு கடவுளின் விடுதலைப் பணியில் பங்கெடுக்க ஒரு வாய்ப்பாக கடவுள் அருளுகின்றார்.
அறியாமை என்னும் இருள் விலகட்டும், ஆண்டவரின் அருள் அனைத்து மக்களிடம் பெருகட்டும், அடிமைத்தனத்தின் இருள் அகலட்டும்,
விடியலுக்கான ஒளியினை இணைந்து ஏற்ற ஆவியானவர் அழைக்கின்றார்.
# நிறைவாக:
ஒவ்வொரு அருட்பொழிவும் மேசியாவின் யுகத்திற்கானது என்பதை ஒவ்வொரு அருட்ப் பணியாளரும் உணர்ந்தால் இறை ஆட்சி நிதர்சனமாகும்.
ஒவ்வொரு திருமறை வாசிப்பும் இறைவனின் ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு என்பதை ஒவ்வொரு இறை மக்களும் உணர்ந்தால் இறை ஆட்சி சாத்தியமாகும்.
ஒவ்வொரு பண்டிகையும் சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமல்ல இணைந்து கொண்டாடுவதற்கும், இயக்கங்கள்
உருவாவதற்கும் அடித்தளங்கள் என்பதை உணர்ந்தால் விடுதலை சாத்தியம்.
வரவேணும் பரனாவியே,
இலங்குஞ் சுடராய் மேவியே...
என்ற பாடலின் கடைசி இரண்டு வரிகள் அற்புதமான வரிகள் ஆழமான அர்த்தம் கொண்ட வரிகள் அவைகள் நம்முடைய வாழ்வின் லட்சியங்களாக மாறட்டும்...
"படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய - வரவேணும் பரனாவியே
என்று
ஆவியானவரை உரிமையோடு அழைப்போம்...
ஆவியானவரின் கூட்டுறவில் வாழ்வோம்..
பறந்தோடும் சாம்பல் போல் ஆவியானவரின் பணிகளை செய்திடுவோம்...
ஆவியானவரின் அனல் நம்மில் பெருகட்டும்...
ஆண்டவரின் அரசாட்சி வையம் முழுவதும் பரவட்டும்...
இறை ஆசி என்றும் நம்மோடு இருப்பதாக ...
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்.
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝
Comments
Post a Comment