INTERDEPENDENCE IN CREATION
படைப்பில் ஒன்றையொன்று
சார்ந்திருத்தல்
# திருமறைப் பகுதிகள்:
தொடக்க நூல்
2: 1 - 15
மத்தேயு 13: 1 - 9
கொலோசேயர்
2: 16 - 23
திருப்பாடல்கள்
104: 16 - 23
# உட்புகும் முன்:
"எண்ணிலடங்கா
ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன்"
என்ற பாடலைப் பாடும் பொழுது, நம்மில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி, ஒரு
பேரானந்தம் நமக்குள் உண்டாகும். இயற்கையோடு இணைந்து இருக்கின்ற உணர்வும், இயற்கையோடு
சேர்ந்து நாமும் ஆண்டவரை போற்றுகிறோம் என்ற பக்தி உறவும் மேலோங்கி இருப்பதை உணர்கின்றோம்.
கடவுள் மனுகுலத்தை படைப்பதற்கு
முன்பதாக மற்ற எல்லா உயிரினங்களையும் ஆண்டவர் படைத்து விட்டார், எனவே
அனைத்து உயிரினங்களும் மனு குடும்பத்திற்கு முன்னோர்கள், மூதாதையர்கள், என்றால்
அது மிகையாகாது.
தொடக்கநூலில் படைப்பை கடவுள் எவ்வாறு
உண்டாக்கினார் என்று மிகவும் அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கடவுள்
படைத்தார், பிரித்தார், சேர்த்தார், உண்டாக்கினார், உருவாக்கினார், பெயரிட்டார், கட்டளை
இட்டார், ஆசீர்வதித்தார் என்று கடவுளின் செயல்களை மிகவும் அழகாக பட்டியலிட்டுள்ளன.
தொடக்க நூலில் கடவுளை படைப்பாளராக
அறிமுகம் செய்கிறது. ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்குபடுத்தபவராக சித்தரிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும்
நடைமுறைப்படுத்துகின்றவராக காட்டப்பட்டுள்ளது. இறைவன்
இயற்கையோடு இணைந்து இருக்கிறவர் என்ற பேருண்மையை வெளிக்காட்டுகிறது. வரலாற்றில்
தொடர்ந்து செயல்படுகின்றவராக, வரலாற்றை அமைப்பவராக கடவுளை எடுத்துக்காட்டுகின்றது.
கடவுள் படைத்த படைப்பு ஒவ்வொன்றும்
ஒன்றோடு ஒன்று சார்ந்து, உறவு பின்னலாக பின்னிப் பிணைந்து இருப்பதை தொடக்க நூல்
விவரிக்கின்றது. அவைகள் சார்ந்து வாழ்கின்றன, சேர்ந்து இயங்குகின்றன, இணைந்து
பயணிக்கின்றன.
படைப்புகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று
சார்ந்து இருந்ததை நல்லது என்று கண்டு கடவுள் அகமகிழ்ந்தார் என்று புரிந்து கொள்ளலாம். அந்த
மன நிறைவோடு ஆண்டவர் தனது ஓய்வினை மேற்கொண்டார் என்று புரிந்து கொள்ளலாம்.
மனுக் குடும்பத்தையும் ஆண்டவர்
படைத்து, அவ்வண்ணமாகவே அவர்களை ஆசிர்வதித்தார். எனவே
படைப்புகளில் ஒன்று மனுக்குடும்பம் என்ற விரிவான விளக்கத்தை தொடக்க நூல் நமக்கு தருகிறது.
ஏதேன் தோட்டமும் கடவுளின் திட்டத்தில்
உருவாக்கப்பட்ட ஒரு தோட்டம் ஆகும். அத்தோட்டத்தில் அதை பண்படுத்தவும், அதை
பாதுகாக்கவும் ஆண்டவர் மனுக் குடும்பத்தை அதில் வைத்தார். ஏதேன்
தோட்டம் ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று, அதற்கான
எல்லைகளை வகுத்தவர் கடவுள், அந்த
எல்லைகளை மீறக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.
இந்த புரிதலோடு இன்றையத் திருமறைப்
பகுதிகளைக் கருத்தோடு, இறை சிந்தையோடு, இறை
பக்தியோடு தியானிப்போம்.
1. இறைவனின் உடன்படிக்கை உறவில், படைப்பு - ஒன்றோடு ஒன்று சார்ந்து வாழ்கிறது.
(தொடக்க நூல் 2: 1 - 15)
தொடக்க நூலில் மனிதன் படைக்கப்படுவதற்கு
முன்பதாகவே நீர்வாழ் உயிரினங்களும், நிலத்தில் வாழும் உயிரினங்களும், வானில்
பறக்கும் பறவையினங்களும், வாழ
தொடங்கின, சந்ததிகளை உருவாக்கிக் கொண்டன.
தங்கள் தேவைகளை தங்களுக்குள்ளே
நிறைவேற்றிக் கொண்டன, எந்த சுரண்டலும் இல்லை, பதுக்கலும் இல்லை, போட்டியில்லை, பொறாமை
இல்லை, வஞ்சகம் இல்லை, அடிமைத்தனங்கள் இல்லை. மொத்தத்தில்
படைப்புகள் அனைத்தும் "சுதந்திரமாக வாழ்ந்தன. விடுதலை
வாழ்வு" அவைகளில் நிலைத்திருந்தன.
படைப்பில் உள்ள உயிரினங்கள் தங்களுக்குள்
எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் இல்லை. அனைவருக்கும் அனைத்தும் சொந்தம் என்ற நெறிமுறையில்
சுதந்திரமாக வாழ்ந்து வந்தன.
நிலம் தன் பலன்களைத் தந்தது, மரங்கள்
எல்லா உயிர்களுக்கும் உறவாகிப்போனது, வான்வெளி பறவைகள் திறந்த வழியாக சுதந்திர காற்றை சுவாசித்து வந்தன. அவைகளும்
பலுகிப் பெருகின. இறைவன் அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்கினார்.
மொத்தத்தில் படைப்பனைத்தும் ஓர்
குடும்பமாகவே வாழ்ந்தன என்று புரிந்து கொள்ளலாம். இதனை கூட்டுக் குடும்பம் என்றும் விளங்கிக் கொள்ளலாம். வேற்றுமையில்
ஒற்றுமை என்றும் புரிந்து கொள்ளலாம்.
கடவுள் உலகை படைக்கும் பொழுது, அதனை
படைத்த பின்பதாக அவைகளுக்கு கட்டளையிட்ட ஒவ்வொன்றையும் மனதில் கொண்டு பார்த்தால் கடவுள்
தம் "படைப்புகளோடு உடன்படிக்கை" செய்து
கொண்டார் என்பதை புரிந்து கொள்ளலாம். படைப்பும் "கடவுளோடு உடன்படிக்கை"
செய்து கொண்டதைப் போல அவைகள் இயங்கின என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
ஆபிரகாமோடு கடவுள் செய்த உடன்படிக்கையின்
நிறைவில் அவர்கள் "சந்ததியை வானத்து நட்சத்திரங்களை
போலவும், கடற்கரை மணலை போலவும் பலுகி பெருகச் செய்வேன்" என்றார்.
இதே உடன்படிக்கையை கடவுள் மனுக்
குடும்பத்திற்கு கொடுக்கும் முன்பதாகவே, படைப்புகளோடு
உடன்படிக்கை செய்துவிட்டார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. படைபுகள்
அனைதுத்தும் இறைவனின் உடன்படிக்கை உறவில் நிலைத்து நின்றன, வாழ்ந்தன, வாழ்ந்து
கொண்டிருக்கின்றன.
ஏதேன் தோட்டம் என்பது எல்லைகள்
வகுக்கப்பட்ட ஒரு இடம். பரந்து விரிந்த படைப்புகளில், குறிப்பிட்ட
இடம் ஏதேன் தோட்டம். அதை கடவுள் உருவாக்கினார். இந்தத்
தோட்டத்தில் மனுக் குடும்பத்தை அழைத்து வந்து, அதை
பண்படுத்தவும் அதை பாதுகாக்கவும் வைத்தார்.
மனுக் குடும்பத்திற்கு எல்லைகள்
ஏதேன் தோட்டம் மட்டுமே. அவைகளுக்குள்ளாக வாழவும் வளரவும், வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் ஆண்டவர் நிபந்தனைகளோடு
வாழ்க்கை பாதையை வகுத்துக் கொடுத்தார்.
தொடக்க நூல் காட்டுகின்ற படைப்பு, ஒன்றோடு
ஒன்று சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறையை கற்றுக் கொடுக்கிறது. படைப்புகள்
அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்து இருக்கின்றன, இயங்குகின்றன, இயங்கிக்
கொண்டே இருக்கின்றன.
மனு குடும்பமும் ஏதேன் தோட்டத்தோடு
ஒரு உடன்படிக்கை உறவில் வாழ்ந்ததை
எடுத்துக்காட்டுகிறது. இந்த உடன்படிக்கையின் நடுவராக கடவுள் இருக்கின்றார்.
இந்த உடன்படிக்கை உறவில்
"இறைவன் - இறைவனின் படைப்பு - இறை
குடும்பம்" இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று சார்ந்து ,
சேர்ந்து , இணைந்து வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம் என்று
உணர்ந்து கொள்ளலாம்.
படைப்பு உடன்படிக்கை உறவில் நிலைத்து
நிற்கிறது. மனுக்குலம் உடன்படிக்கை உறவை உதறித் தள்ளிவிட்டு, ஆண்டு கொள்ளுங்கள் என்கின்ற ஒரு வார்த்தையை தவறாக புரிந்து
கொண்டு, தங்களுக்காக, தங்கள்
சுயநலங்களுக்காக பயன்படுத்தி இறை சாயலை இழந்து போயின. பார்த்து
பார்த்து படைத்த பரமனின் படைப்பு அனைத்தையும் பாழாக்கி விட்டனர்.
இயற்கை தன்னில் தானே இயங்க முடியும். அவைகளுக்கு
எந்த மனித துணையும், மனித ஆற்றலும், மனித
கண்டுபிடிப்புகளும், மனிதர் உண்டாக்கிய கருவிகளும் தேவையே இல்லை.
அவைகள் ஒன்றோடு ஒன்று சார்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டே
இருக்கின்றன. ஆனால்
மனுக் குடும்பம் "படைப்புகளின் துணை இன்றி வாழ முடியாது"
என்பதை இயற்கை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
படைப்புகள் ஒன்றோடு ஒன்று சார்ந்து
வாழுகின்ற வாழ்க்கை முறை அது வாழ்வுக்கு நேரானது, அழிவுக்கு
என்றும் துணை போகாதது. அது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்.
ஒன்றை புரிந்து கொள்வோம், உட்கொள்கின்ற எல்லாவற்றையும் ஜீரணம் செய்யும் ஆற்றல் உடலுக்கு உண்டு. ஆனால்
விதைகளை ஒருபோதும் அவைகளால் ஜீரணிக்க முடியாது. அது
இயற்கையின் விதி, இறைவனின் படைப்பின் மகத்துவம். உயிரினங்கள்
தொடர்ந்து உலகில் வாழ்வதற்கான கடவுளின் அனுமதி என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த வாழ்க்கை பாடத்தை உணர்ந்து
மனுக்குலம் தன்னைத் தானே சரி செய்து கொண்டு, கடவுளோடு கொண்டிருந்த
உடன்படிக்கை உறவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள தொடக்கநூல் வழியாக கடவுள் நமக்கு
கற்றுக் கொடுக்கின்றார்
2. இறைவனின் கட்டளையின் வழியில் படைப்பு -
இறை உறவுகளோடு இணைந்து வாழ்கிறது. (திருப்பாடல்கள் 104: 16 - 23)
திருப்பாடல்கள் இறைவனின் படைப்பின்
மகத்துவத்தை மேலும் அழகாக வர்ணித்து காட்டி உள்ளன. படைப்பில்
என்ன இருக்கிறது, அவைகள் எவைகளுக்காக படைக்கப்பட்டவை, என்ன நோக்கம் கடவுளுடையது, இறைவனின்
திட்டம் என்ன என்பதை மிகவும் அழகாக வர்ணித்து பாடலாக இயற்றியுள்ளார்.
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய
ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும்(104
: 4) பயன்படுத்தி
கடவுள் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அழகாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கடவுள் எவ்வண்ணமாக தம் படைப்புகளுக்கு
உறவாக இருக்கிறார் என்பதை திருப்பாடல்கள் இலக்கியம் மற்றும் கவிநயத்தோடு வருணித்துள்ளது.
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை
வரவிடுகிறார், அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.(10)
அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம்
தண்ணீர் கொடுக்கும், அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.(11)
அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள்
சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும்.(12) தம்முடைய
மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார், உமது
கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.(13)
கடவுள் தம் படைப்புகளோடு இன்னும்
சொல்லப்போனால் தம் உறவுகளோடு எவ்வாறு அன்பு கொண்டிருக்கிறார், அவைகளின்
தேவைகளை எப்படியாக தீர்க்கின்றார், அவைகள் திருப்தியாக, நிறைவாக, குறைகள்
ஏதுமின்றி வாழும் நிலையை ஆண்டவர் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறார் என்று திருப்பாடல்
ஆசிரியர் உணர்ந்து எழுதி இருக்கின்றார்.
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர்
மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.(14)
மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்
திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய
இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.(15)
இவைகளின் வழியாக கடவுள் தம் படைப்பின்
உறவுகளோடு எவ்வளவு அன்பு கொண்டு உள்ளார், எவ்வளவாக நேசிக்கின்றார், அவைகளின்
தேவைகளை எப்படி பூர்த்தி செய்து திருப்தியாக்குகிறார்
என்பதை உணர முடிகிறது.
கர்த்தருடைய விருட்சங்களும், அவர்
நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.(16)
அங்கே குருவிகள் கூடுகட்டும், தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.(17)
உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள்
குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.(18) அனைத்து உயிர்வாழ் இனங்களுக்கும்
கடவுள் அடைக்கலமாகவும், ஆதரவாகவும், அன்பின் உறவாகவும்
இருந்து வருவதை இதைக்காட்டிலும் விவரிக்க முடியாது.
"அன்றன்றுள்ள
அப்பத்தை இன்று எங்களுக்கு தாரும்” என்று அவைகள் கேட்பதற்கு முன்பதாகவே, அவைகளின்
தேவைகளை குறிப்பறிந்து முன்பதாகவே எல்லாவற்றையும் ஆயத்தம் செய்திருக்கிறார் என்பதை
அறியும் பொழுது "கடவுளின் அன்பை பிட்டு இவைகளை பிரிப்பவர்
யார்?" என்று கேள்வி நமக்குள் எழுகிறது.
அந்த கேள்விக்கு பதில் ஒரு வரியில் சொல்வோமானால் மானிடர்கள் தான். பேராசையும், ஆணவமும், அதிகாரமும்
எல்லைகளுக்கான போட்டியும், வளங்களை சுரண்டுவதற்கு தீட்டுகின்ற திட்டங்களும், ராணுவ
ஒத்திகைகளும், நவீன தொழில்நுட்பங்களும் இயற்கையோடு இறைவன் கொண்டிருந்த
அன்பின் உறவை பிரிக்கின்ற தீய சக்திகள் என்பதை திருமறை சுட்டிக் காட்டுகிறது.
கடவுள் தம் படைப்புகளுக்கு இட்ட
கட்டளைகளை கருத்தோடு அன்றும், இன்றும், என்றென்றும்
கடைப்பிடித்து அனைத்து வாழ் உயிரினங்களுக்கும் ஆதாரமாகவும், உறவாகவும்
இருந்து வருகிறது.
ஒட்டுமொத்தத்தில் படைப்புகள் அனைத்தும்
ஒன்றோடு ஒன்று சார்ந்து வாழவும், ஒன்றோடு ஒன்று உதவும் கரங்களாக உறவில் இணைந்து இயங்கிக்
கொண்டே இருக்கின்றன. கடவுளும் அந்த உறவில் என்றும் நிலைத்திருக்கின்றார்.
படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றையும்
தங்கள் சொந்தங்களாக பாவித்து, தங்கள் உடன்பிறப்புகளாக கருத்தில் கொண்டு, அவைகளோடு நல்லுறவில் வாழ்ந்து வருகின்றன. இந்த உறவிற்கு மனு குடும்பம் என்றும்
பாலமாக இருந்திடல் வேண்டும் என்ற இறையியல் பார்வையை திருமறை நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.
3. இறைவனின் பண்புகளின் நெறியில் படைப்பு -
இறைச்சாயலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
(மத்தேயு 13: 1 -
9)
இறையரசு எப்படிப்பட்டது என்பதை
உவமைகள், கதைகள் வழியாக தம் சீடர்களுக்கும் இறை மக்களுக்கும் ஆண்டவர் கற்றுக் கொடுக்கின்றார். அதை
காட்சியின் வழியாக விவரித்து காண்பிக்கின்றார். அது
மக்கள் உணர்ந்து கொள்வதற்கும், இறைவனின் நோக்கத்தை அறிந்து கொள்வதற்கும் பேருதவியாக
இருக்கிறது.
விதைக்கிறவர் ஒருவர் விதைகளை தூவுகின்றார். அது
பல இடங்களில் விழுகிறது, வழியருகே, பாறை அருகே, முள்ளுள்ள இடங்களில், நல்ல
நிலத்தில் அது விழுகின்றது.
நிலங்களில் பல வகை உண்டு, அவைகள்
முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்றவையாகும். இவைகள்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பண்பு நெறிகள் உண்டு. அவைகள்
அனைத்தும் இறைவன் வகுத்துக் கொடுத்த நெறிமுறைகள் என்று புரிந்து கொள்ளலாம். அந்தந்த
பண்புகளுக்கு ஏற்ப அது தன் பலனை தரும்.
நிலம் எப்போதும் தன் பலனை கொடுக்கும்படியாகவே
இறைவன் அவைகளுக்கு கட்டளை இட்டு இருக்கின்றார். அவைகள்
ஒருபோதும் தன் இயல்பு நிலைகளில் இருந்து மாறாது. இயேசு
சொன்ன விதைக்கின்றவர் உவமையில் நிலம் சார்ந்து நாம் சிந்தித்தால் அது நலமாக இருக்கும்
என்று கருதுகிறேன்.
அந்த நிலம் தன்னிடத்தில் விழுந்த
விதைக்கு உயிர் கொடுக்கின்றது, வளரச் செய்கின்றது, வாழ்வினை
தருகிறது,100, 60, 30 ஆகவும் பெருகுவதற்கு வழித் துணையாக
அமைகிறது, வாழ்க்கைத் துணையாகவும் இருக்கின்றது.
அந்த நிலம் தன்னிடத்தில் விதை தூவுகின்றவருடைய
நிறத்தையோ, மொழியையோ, அவர்களின் பின்புலத்தையோ, உயர்ந்தவரா -
தாழ்ந்தவரா, ஏழையா - பணக்காரரா என்ற
பாகுபாட்டை நிலங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை.
நிலமாகிய தனக்கு விதைக்கின்றவர்
ஏதோ ஓரிடத்தில் அநீதி இழைத்திருப்பினும், அவரின் பிழை
பொறுத்து, மன்னித்து தன் பலன்களையே தருகின்ற உயர்ந்த மனப்பான்மையை நிலங்கள் கொண்டிருக்கிறது. இத்தகைய
பாங்கு இறைவன் நிலங்களுக்கு கொடுத்த பண்பு நெறிகள். இறைவனின்
வகுத்துக் கொடுத்த பண்பு நெறிகளில் நிலங்கள் ஒருபோதும் தடம் புரண்டதில்லை, இறைவன்
தந்த பண்பு நெறிகளுக்கு மீறி அவைகள் ஒருபோதும் செயல்பட்டதில்லை.
நிலங்கள் கொண்டிருக்கிற இத்தகைய
பண்புநெறிகள் வழியாக, அவைகள் இறைச் சாயல் என்பது இதுதான் என்பதை மனுக் குடும்பத்திற்கு
அவை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
மனிதருக்கு மட்டும் கடவுள் இறை
சாயலை வழங்கவில்லை மாறாக அவர் படைப்பு அனைத்திற்கும் இறை சாயலை வழங்கி இருக்கிறார்
என்பதை இவைகள் வழியாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
கொரோனா தொற்று காலகட்டங்களில் மானிடர்கள்
தங்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொழுது, இயற்கை, நிலம், நீர், காற்று
போன்ற அனைத்தும் தன்னைத்தானே சரி செய்து கொண்டன. மானிடர்கள்
உண்டாக்கிய அழிவிலிருந்து அவைகளை தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டன. படைப்புகள்
அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்து நின்று, ஒருவருக்கொருவர்
உதவி செய்து தன்னை சீர்படுத்திக் கொண்டது.
நிலங்கள் ஒருபோதும் தான் தரவேண்டிய
பலன்களை தராமல் இருந்ததில்லை, அவைகளில் எந்த வஞ்சனையும், சூதும்
இருந்ததே இல்லை.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னையே
தியாகபலியாக தந்ததைப் போல, படைப்பு
அனைத்தும் குறிப்பாக நிலங்கள் பலியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வளவாக
அன்பு செய்யும் நிலங்களை, அதனைச் சார்ந்த வளங்களை, அவைகளின்
பண்பு நெறிகளை கருத்தில் கொண்டு மானுடம் வருந்தி வாழ, திருந்தி
வாழ திருமறை வழியாக அழைக்கப்படுகின்றோம்.
இறைச்சாயல் என்பது மனு குடும்பத்திற்கு
மட்டும் கொடுக்கப்பட்டுள்ள கொடை அல்ல, மாறாக படைப்பு அனைத்திற்கும் ஆண்டவரால் கொடுக்கப்பட்ட அருட்கொடை என்பதை
உணர்வில் கொண்டு, நிலங்கள் வெளிப்படுத்தும் இறைச் சாயல் பண்பு நெறியில்
மானுடம் வாழ்வதற்கு திருமறை நினைவூட்டல் செய்கிறது.
4. இறைவனின் ஆட்சியின் தகவுகளில் படைப்பு -
இறை மக்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறது.
(கொலோசேயர்
2: 16 - 23)
திருத்தூதுவராகிய பவுலடியார் தன்னுடைய
திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதத்தில் எது உண்மையான வழிபாடு எது மாய்மாலமான ஆராதனை என்பதை
தன்னுடைய திருச்சபை மக்களுக்கு வலியுறுத்தி எழுதுகின்றார்.
வழிபாடு என்பது வாழ்வோடு தொடர்புடையதாக
இருக்க வேண்டும். வாழ்வின் எதார்த்தங்களை பிரதிபலிக்க வேண்டும். அது இறைவனின் கூட்டுறவில் இணைந்து இருக்க வேண்டும்.
பவுலடியார் வாழ்ந்த காலகட்டங்களில்
திருச்சபை எப்படிப்பட்ட வழிபாட்டை நடத்தியது, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை கீழ் வருமாறு
குறிப்பிடுகின்றார்...
கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று
இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற
தலையைப் பற்றிக்கொள்ளாமல்,
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச்
செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே
துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புப்கொண்டிருக்கிற
எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.(2:19)
இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான
ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர
ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள்
மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.(2
: 23) என்று கண்டித்துரைக்கின்றார்.
தங்கள் வாழுகின்ற வாழ்க்கை ஒருவிதமாகவும், பணி செய்கின்ற இடங்களில் ஒரு விதமாகவும், ஆலயத்தில்
ஒருவிதமாகவும் வாழுகின்ற மாறுபட்ட வாழ்வு ஆண்டவருக்கு உகந்ததல்ல.
அப்படிப்பட்டவர்கள் செய்யும் இந்த
வழிபாடும் ஆண்டவருக்கு ஏற்புடையதல்ல என்று தன் இறை மக்களுக்கு கடிதத்தின் வாயிலாக அவர்
வலியுறுத்தி கூறுகின்றார்.
வழிபாடுகளை பெரிதுபடுத்தி வாழ்க்கை
முறையை கருத்தில் கொள்ளாமல் ஆலயத்தில் மாத்திரம் பக்தி வாழ்வு வாழ்வது போலியானது ,
அது மாம்சத்தை பேணுவதற்கு உரிய மெய் பக்தி வாழ்வுக்கு உதவாது என்பதையும் எடுத்துரைக்கின்றார்.
வழிபாடு என்ற பெயரில் இயற்கையை
பாழ்படுத்துவதும் சீரழிப்பதும் எந்த விதத்தில் நியாயம் இந்தக் கேள்வியையும் பவுலடியார்
இந்த கடிதத்தின் வாயிலாக தன் இறை மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார்.
இயற்கையை பாழ்படுத்தி விட்டு இறைவனுக்கு
எப்படி அஞ்சி நடக்க முடியும். இயற்கையோடு இணைந்து இருக்கின்ற இறைவனை அப்புறப்படுத்தி
விட்டு இறை மக்களாகிய நாம் எப்படி இறைவனோடு நம்மை இணைத்துக் கொள்ள முடியும்.
திருச்சபை என்பது ஆண்டவர் உருவாக்கின
மாபெரும் இயக்கம். இறைமக்கள் ஆண்டவரின் அடியார்கள். படைப்பின்
ஓர் அங்கம் என்பதை உணர்ந்து இறை பக்தியை வாழ்வில் வெளிப்படுத்த பவுல் அடியார் அழைக்கின்றார்.
தமிழ்நாடு இறையியல் கல்லூரியில்
பாடல் மிகவும் பொருத்தமான வரிகளை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. " வழிபாடு
எங்கள் வாழ்வின் உயர் நிலையாகும், வானரசு வளர்ந்திட அதுவே உரமாகும்."
இறை ஆட்சியின் தகவுகளில் ஒன்று "அன்பு"
. அந்த அன்பு ஆண்டவரோடும் இருக்க வேண்டும், அடுத்தவரோடும் இருக்க வேண்டும், படைப்போடும்
இருக்க வேண்டும். படைப்பில் வெளிப்பட்ட இறைஅன்பு, படைப்புகள்
ஆண்டவரோடு காட்டும் அன்பு உறவு நம்மில் மலரட்டும்…
#நிறைவாக:
இருக்கின்ற ஆலயங்கள் நமக்கு போதுமானவையாக
இருக்கின்றன. இயற்கையை அழித்து, புதிய
ஆலயங்களை கட்டுவதைப் பார்க்கிலும், இறை
மக்களை கட்டுவோம் இறையாட்சி தானாக மலரும்.
படைப்புகள் அனைத்தும் நமக்கு மூதாதையர்கள், நல்
வழிகாட்டிகள் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து அவைகள் சார்ந்து, சேர்ந்து, தன்னில்
தானே இணைந்து இயங்குவதைப் போல நாமும் இயங்கிடுவோம்.
படைப்பில் இறை சாயல், இறை
உறவு, இறைநெறி, இறை ஆட்சியின் தகவுகள் வெளிப்படுகிறது. அவைகளை
கருத்தோடு இனம் கண்டு நம் வாழ்வில் நடைமுறைப்படுத்திடுவோம்.
இறைவன் - இறை
படைப்பு - இறை மக்கள் என்ற சார்பு நிலையில் இணைந்து இயங்குவோம். பண்படுத்தவும், பாதுகாக்கவும்
நாம் இறைவனின் கருவிகள் என்பதை மனதில் கொண்டு மெய் பக்தி வாழ்வில் நாளும் வாழ்ந்திடுவோம்.
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக.
நட்புடன்
அருள்திரு. அகஸ்டி ஞான
காந்தி,
அரியலூர் சேகரம்,
திருச்சி -தஞ்சை திருமண்டலம்.

Comments
Post a Comment