RESTORING THE IMAGE OF GOD IN DISTORTED COMMUNITIES
உருக்குலைந்த சமூகத்தின் இறைச் சாயலை மீட்டுருவாக்கம் செய்தல்
# திருமறைப் பகுதிகள்:
மீகா 6 : 1 - 8
கலாத்தியர் 3 : 18 - 29
லூக்கா 4 : 16 - 21
திருப்பாடல்கள் 113 : 1 - 9
# உட்புகும் முன்:
காலம் சென்ற அருட்பணி. முனைவர். மோகன்ராஜ் கே பீட்டர் அண்ணன் எழுதிய பாடல் "ஆண்டவர் இயேசுவை கும்பிடலாம் வாங்க..." இந்தப் பாடலின் ஒரு வரி மாற்றி எழுதப்பட்டது.
ஏழை ஜனங்களை இறையரசில் சேர்க்க
நாளும் உழைக்கணும் நல்லாசி பெருகணும்.. என்று எழுதி இருந்தார் பின்பதாக அந்தப் பாடலில் ஒரு வரி மாற்றினார். அது பாடலின் பொருளையே மாற்றினது.
ஏழை ஜனங்களை இறையரசில் சேர்க்க" என்பது பாடலாசிரியரின் முந்தைய கருத்தியலாகும். பின்பு "ஏழை ஜனங்களின் இறையரசில் சேர நாளும் உழைக்கணும்" என்று மாற்றி எழுதப்பட்டது.
இறையரசின் பண்புகள் குணங்கள் ஏழைகளிடமும், தலித் மக்களிடமும், ஒடுக்கப்பட்ட மக்களிடமும் தான் இருக்கிறது. அவர்களுக்குச் சொந்தமான இறையாட்சியில் ஒடுக்குகின்ற மக்களும் சேர்வதற்கு உழைக்க வேண்டும் என்ற பொருளை அது உணர்த்தியது.
"மீட்டுருவாக்கம்" என்ற சொல்லுக்கு ஏற்கனவே இருந்த ஒன்றை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தல் என்று பொருள் கொள்ளலாம்.
உதாரணமாக கீழடி ஆய்வு தமிழர்களின் தொன்மையான கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும், வாழ்வியலையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.
மீட்டுருவாக்கம் என்பது எளிதாக நடந்து விடுகின்ற ஒன்றல்ல மாறாக அது பல படிநிலைகளை தாண்டி, பல செயல்முறைகளின் வழியாக, பல முன்னெடுப்புகளின்
வழியாக (Transformation happens through Several stages, Different approaches & Multiple Actions) நடைபெறுகின்ற ஒன்றாகும்.
இறைச் சாயல் என்பது கடவுளின் உருவத்தைக் கொண்டல்ல மாறாக கடவுளின் பண்புகளையும், குண நலங்களையும், எதிர்நோக்குதல்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
இறைச்சாயல் என்பது அன்பு, சகோதரத்துவம், சமத்துவம், இறைநீதி, இறையச்சம், கூட்டு வாழ்வு, பகிர்தல், மனிதநேயம், பொறுப்பாண்மை... ஆகியவற்றைகளை உள்ளடக்கியது என்று புரிந்து கொள்ளலாம்.
கடவுளின் படைப்பு உருக்குலைந்து போனதற்கு காரணம் இயற்கை பேரிடர்கள் ஒருபுறம் இருந்தாலும் மனிதர்களின் வரம்பு மீறிய நுகர்வும், பேராசையும், சுரண்டலும், பதுக்கலும், சுயநலனும், ஆதிக்கப் போக்குகளும், செயற்கையான வழிமுறைகளும் முக்கியமான காரணங்களாகும்.
சமூக சீர்கேடுகளுக்கு காரணமாக இருப்பது ஆதிக்க மனப்பான்மைகளும், சாதிய கட்டமைப்புகளும், பல்வேறு அடக்குமுறைகளும், சுய நலன்களும், சமய காழ்ப்புணர்ச்சிகளும், பிரிவினைக் கோட்பாடுகளும், படி நிலை அமைப்புகளும், நிற வெறிகளும், நுகர்வு கலாச்சாரமும், கையூட்டு செயல்களும், அதிகார ஆட்சி முறைகளும், நீதித்துறையின் சீர்கேடுகளும், இன வேறுபாடுகளாலும், கல்வி மறுப்பினாலும், பொறுப்பற்ற வாழ்வும்... முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
உருக்குலைந்த சமூகத்தையும் மீட்டெடுக்க வேண்டும், இழந்த இறைச்சாயலையும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.
ஆதி சமூகம் எவ்வாறு இறைச்சாயலோடு இயற்கையோடும், இறை மக்களோடும், இறைவனோடும் இணைந்து இன்புறவில் வாழ்ந்ததோ அதை மீட்டுருவாக்கம் செய்திட வேண்டும்.
வாழுகின்ற நாமும் அடுத்த தலைமுறையும் வன்மம் இல்லாத, பகை இல்லாத, சுரண்டலற்ற, சுயநலன்கள் அற்ற, அடிமைத்தனங்கள் அற்ற சமூகமாக அன்பு உறவில் வாழவும், மனிதநேயத்தோடு அணுகவும், மனித மாண்பை காக்கவும், இறை நீதியை நிலைநாட்டவும், சமத்துவ உணர்வில் வளரவும், கூட்டுறவில் வாழவும், போர்கள் இல்லாத அமைதி வழி நடக்கவும், அறவழி சமூகம் உருவாகவும் நாம் ஒன்றுபட, பாடுபட, உழைக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இறையியல் கல்வி இறை அன்பர்களுக்கு ஆயர்களுக்கு ஒரு புதிய அறைகூவலை விடுகின்றது. இறைவன் விரும்பும் உலகை உருவாக்குவதும், இறைவன் எதிர்நோக்கும் சமூகத்தை கட்டமைக்கவும், இறைவழியில் பயணித்து, இறைச்சாயலை மீட்டெடுக்க நம்மை உந்துகின்றது.
1. தீர்க்கர் பணி மூலம் இறைச் சாயலை மீட்டுருவாக்கம் செய்தல் (Restoring the Image of God through Prophetical Action). மீகா 6 : 1 - 8
2. மாற்று அரசியல் மூலம் இறைச் சாயலை மீட்டுருவாக்கம் செய்தல்(Restoring the Image of God through Alternative Political Participation). லூக்கா 4 : 16 - 21
3. இறையியல் கல்வி மூலம் இறைச் சாயலை மீட்டுருவாக்கம் செய்தல். (Restoring the Image of God through Theological Education). கலாத்தியர் 3 : 18 - 29
மேற்கண்ட தலைப்புகள் வழியாக திருமறை பகுதிகளை நாம் ஆழ்ந்து தியானிப்போம்.
1. தீர்க்கர் பணி மூலம் இறைச் சாயலை மீட்டுருவாக்கம் செய்தல் (Restoring the Image of God through Prophetical Action). மீகா 6 : 1 - 8
எகிப்தில் 400 வருடங்களாக உருக்குலைந்து கிடந்த இஸ்ரவேல் சமூகத்தை கடவுள் மோசேயைக் கொண்டு விடுவித்தார். கடவுள் அமைத்த அந்த விடுதலைப் பயணம் ஒரு நீண்ட நெடிய பயணம் ஆகும்.
உருக்குலைந்த சமூகத்தை விடுவித்து அவர்களை குடிமர்த்தின பின்பதாக அவர்களை சீர்படுத்துவதற்கு கடவுள் எடுத்த பல முயற்சிகளை முன்னெடுப்புகளை நாம் திருமறையின் வழியாக அறிவோம்.
உருக்குலைந்த கிடந்த சமூகம் விடுதலை பெற்ற சமூகமாக வாழும் பொழுது, அந்த சமூகம் சமத்துவ நெறியில் வாழ, இறை அச்சத்தோடு வளர, அனைவரும் இறைமக்கள் என்ற நெறியில் திகழ பல செயல்பாடுகளை கடவுள் செயல்படுத்தினார்.. அவைகள் யாதெனில்,
👉🏾உடன்படிக்கைகள்,
👉🏾பத்துக் கட்டளைகள்,
👉🏾நியாயப்பிரமாண சட்டங்கள்,
👉🏾நீதித் தலைவர்கள்,
👉🏾அரசர்கள்,
👉🏾அற்புதங்கள்,
👉🏾அடையாளங்கள்,
👉🏾தீர்க்கதரிசிகள்...
இஸ்ரவேல் சமூகம் கடவுள் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளையும் புறந்தள்ளி படிநிலைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், இன வேறுபாடுகளையும், போலி பக்தியையும் சடங்காச்சாரமான வாழ்வையும் தெரிந்து கொண்டு, அடிமைத்தனங்களையும், அடக்குமுறைகளையும், மனித நேயம் அற்ற செயல்பாடுகளையும் அரங்கேற்றி கள்ள போதனைகளுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் முக்கியத்துவம் தந்து அடிமைப்படுத்தும், ஒடுக்கும் சமூகமாக உருக்குலைந்து போனது.
ஓர் இறைச் சமூகமாக வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் தடம் புரண்டு, பல தெய்வ வழிபாட்டை பின்பற்றி, தன் இறைச்சாயலை இழந்து போனது, இஸ்ரவேல் தேசமும் சிறைப்பட்டு போனது.
இஸ்ரவேல் சமூகம் கடவுளால் விடுதலையாக்கப்பட்ட ஒரு சமூகமாகும். அந்த விடுதலை சமூகம் தன் நெறியில் இருந்து விலகிச் சென்றது, பிறரை அடிமைப்படுத்தியது, ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கியது, வறியவர்களை வஞ்சித்தது, நீதியை புரட்டியது, நியாயத்தை மீறியது, பிறரை ஒடுக்கும் சக்திகளாக உருவெடுத்தது.
விடுதலை பெற்ற இஸ்ரவேல் சமூகம் அடிமைப்படுத்தும் சமூகமாக உருவெடுப்பதற்கு காரணம் என்ன என்றும் கடவுள் பட்டியலிடுகின்றார்,
அவைகள்.." யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும். யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ?"(மீகா 1 : 5) என்று ஆண்டவர் கூறுகின்றார்.
இஸ்ரவேல் மக்கள் செய்த ஒடுக்குதல்கள் எவ்வாறு இருந்தது என்பதையும் கடவுள் வெளிப்படுத்துகின்றார்.
# அக்கிரமம் செய்வதையே சிந்தித்தார்கள்,
# தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புச் செய்ய எத்தனம் பண்ணினார்கள்,
# தங்கள் கைகளின் வல்லமையை விடியற்காலத்தில் நடப்பித்தார்கள்.(மீகா 2 : 1)
# வயல்களை இச்சித்துப் பறித்துக் கொண்டார்கள்,
# வீடுகளை இச்சித்து எடுத்துக் கொண்டார்கள்,
# புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்கினார்கள்.(மீகா 2 : 2)
# என் மக்களின் பெண்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து துரத்திவிட்டார்கள்,
# அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக் கொண்டார்கள்.(மீகா 2 : 9)
# நன்மையை வெறுத்தார்கள், தீமையை விரும்பிச் செய்தார்கள்,
# அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கினார்கள்,(மீகா 3 : 2)
# மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்து கொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும்
இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் அடித்தார்கள் சித்திரவதை செய்து கொலை செய்தார்கள்.(மீகா 3 : 3)
# தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடாதவனுக்கு விரோதமாக சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற கள்ள தீர்க்கதரிசிகளை ஊக்குவித்து அவர்கள் மூலம் ஆதாயம் பெற்றார்கள்.(மீகா 3 :5)
ஒரு வகையில் சொல்லப்போனால் இது கடவுளின் குற்றச்சாட்டுகள் அல்ல இது கடவுளின் புலம்பலாகும்( Lament of God ).
மேலும் விடுதலை பெற்ற சமூகம் எவ்வாறு ஒதுக்குதலில் தீவிரம் காட்டினார்கள் தீர்க்கர் வழியாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார்,
# துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ(மீகா 6 : 10)
# கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ(மீகா 6 : 11).
# அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய் பேசுகிறார்கள். அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.(மீகா 6 : 12)
என்றும் கடவுள் உருக்குலைந்த இஸ்ரவேல் சமூகத்தை அதன் செயல்பாடுகளை பட்டியலிடுகின்றார். இது கடவுள் உருக்குலைந்த தமது சமூகத்தின் மீது கொண்டிருந்த கோபத்தை வெளிப்படுத்துகிறது(Wrath of God).
உருக்குலைந்து போன இஸ்ரவேல் சமூகத்தின் நிலையை மாற்றுவதற்கும், இழந்து போன இறை மக்களின் இறை சாயலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் கடவுள் தீர்க்கதரிசன பணிகளை (Prophetical Role of God) மீகாவின் வழியாக மேற்கொள்கின்றார்.
கடவுளின் தீர்க்கதரிசன பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும்..
A. " வழக்காடும் கடவுள்"(God who pleads) - கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது. உருக்குலைந்து இறை சாயலை இழந்த இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.(மீகா 6 : 2)
B." நீதி கேட்கும் கடவுள்"(God of justice) - என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல்ல வேண்டும்.(மீகா 6 : 3)
C. " கேள்வி எழுப்பும் கடவுள்"(The questioning God:) - மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.(மீகா 6 : 8)
D. " தீர்ப்பிடும் கடவுள்" (God of Judgement) - நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய். உனக்குள்ளே சோர்வுண்டாகும். நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை. நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.(மீகா 6 : 14)
🍎" மீட்டுருவாக்கும் கடவுள்" (God of Restoration)-
🍎கடவுளால் விடுதலைப் பெற்ற இஸ்ரவேல் சமூகம் தனது சீர்கேடுகளால் உருக்குலைந்து போன சமூகமாக மாறிப் போனது கடவுள் அவர்களை மீட்டுருவாக்குகின்றார் ஒரு குழந்தையை சீர்படுத்துகின்றார் இழந்த சாயலை மீட்டுருவாக்கம் செய்கின்றார்.
உருக்குலைந்த இஸ்ரவேல் சமூகத்தை எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்கிறார் அவர்கள் இழந்த இறைச்சாயலை எவ்வண்ணமாக மீட்டுருவாக்கம் செய்கிறார் என்றால்...
🍎முதலாவதாக, அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்.
🍎இரண்டாவதாக, அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக மாற்றுகின்றார்.
🍎மூன்றாவதாக, தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் உருமாற்றம் செய்கின்றார்.
🍎நான்காவதாக, . ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறு ஜாதி பட்டயம் எடுக்காத படி செய்கிறார்.
🍎ஐந்தாவதாக, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை என்ற நிலையை உருவாக்குகின்றார்.
🍎ஆறாவதாக, அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காரும் நிலைக்கு மாற்றுகின்றார்.;
🍎ஏழாவதாக, சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப்பற்றிக் கொண்டு வாழும்படி செய்வார்.
🍎எட்டாவதாக,நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், வைக்கின்றார்.
🍎ஒன்பதாவதாக, தூரமாய்த் தள்ளுண்டு போனவளைப் பலத்த ஜாதியாகயும் மாற்றுகின்றார்.
🍎பத்தாவதாக. அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.(மீகா 4 : 3 - 7)
கடவுள் தனது தீர்க்கதரிசன பணியின் (Prophetical Role) மூலமாக உருக்குலைந்த இஸ்ரவேல் சமூகத்தை, அவர்கள் இழந்த இறை சாயலை மீட்டுருவாக்கம் செய்து அமைதி, அன்பு, பொதுநலம், இறைநீதி, அறநெறி, மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம், கூட்டுறவு, பகிர்வு, சமூக நீதி போன்ற ஒரு மாற்று சமூகமாக (Egalitarian Community) கட்டி எழுப்புகின்றார்.
மீகாவை போன்ற கடவுளின் பணியாளர்களாக வாழும் சமூகத்தில் தீர்க்கதரிசன பணிகளை நிறைவேற்றி, ஒரு மாற்று சமூகத்தை, முன்மாதிரியான சமூகத்தை கட்டி எழுப்ப முன் வருவோம்.
2. மாற்று அரசியல் மூலம் இறைச் சாயலை மீட்டுருவாக்கம் செய்தல்(Restoring the Image of God through Alternative Political Participation). லூக்கா 4 : 16 - 21
இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் இருந்தது மக்களாட்சி அல்ல. மாறாக மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்.
அரசியலும் சமயமும் பின்னிப்பிணைந்திருந்தன. மன்னர்கள் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தாலும் சமூகத்தை ஆண்டது சமயவாதிகள் தான்.
யூத சமூகத்தை சார்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், ஆசாரியர்கள், லேவியர்கள், போன்றவர்கள் அதிகாரம் படைத்த சக்திகளாக இருந்து வந்தார்கள்.
நியாயப்பிரமாணச் சட்டம் இஸ்ரவேல் மக்களின் பொதுச் சட்டமாக கடைபிடிக்கப்பட்டது. அந்தச் சட்டங்கள் தனித்துவம் பெற்றிருந்தன.
நியாயப்பிரமாணச் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தின் மூலமாகத்தான் தண்டனை வழங்க வேண்டும் என்று இல்லை, மாறாக சமய தலைவர்களே நியாயப்பிரமாண சட்டத்தை மீறுகிறவர்களுக்கு தண்டனை வழங்கவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
யூத சமய தலைவர்களின் அதிகாரம் அவர்களின் தண்டனை தீர்ப்பில் ஆட்சி அதிகாரம் தலையிட்டதாக தெரியவில்லை. ஆட்சி அதிகாரமும் சமயத் தலைவர்களின் பிடியில் தான் இருந்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.
மொத்தத்தில் யூத சமய தலைவர்கள் தனி அரசாங்கத்தையே நடத்தி வந்திருந்தார்கள். அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். ஆட்சி அதிகாரத்தை மாற்றுகின்ற வல்லமை படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.
ஜெப ஆலயம் கள்வர் கூடமாக மாறிப்போனது, வியாபார தலமாக மாற்றப்பட்டது, பலி பொருட்கள் சந்தை பொருளாதரமாக மாற்றப்பட்டன, சமயத்தின் பெயரால் வியாபாரங்கள் பெருகின, நாணய மாற்றமும் நடைபெற்றது, மக்கள் மக்களாக பார்க்கப்படவில்லை, பலிகள் வியாபார நோக்கிலே நடைபெற்றன,
அடிமை வியாபாரமும், சுரண்டலும், பதுக்கல்களும், அநீதிகளும், வன்மங்களும் தலை விரித்து ஆடின. நீதிமன்றங்களில் பொய் சாட்சியம் பெருகி இருந்தன, தீர்ப்பிடுவதில் பாரபட்சம் பார்க்கப்பட்டன, சமயம் வேறு சமூக வாழ்வு வேறு என்று வேறுபடுத்தி வாழ்ந்து வந்தார்கள்... மொத்தத்தில் அவர்களின் ஆன்மீக வாழ்வு மாபெரும் கேள்விக்குறியாக இருந்தது.
ஏழைகளும், பெண்களும், கைம்பெண்களும், முதியவர்களும் , மாற்றுத்திறனாளிகளும், அன்னகர்களும், பிற இனத்து மக்களும், விளிம்பு நிலை மக்களும், மக்களாகவே மதிக்கப்படவில்லை. அவர்களை மாண்போடும் நடத்தவில்லை.
ஜெப ஆலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருந்த அதிகார படிநிலைகள் சமூகத்திலும் கடைப்பிடிக்கப்பட்டன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையில் மக்கள் மதிக்கப்பட்டார்கள்.
தொழில்கள் அடிப்படையிலும், வாழுகின்ற இடங்கள் அடிப்படையிலும் மக்கள் பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள். ஆண் பெண் இன வேறுபாடுகளும், யூதர் சமாரியர் என்ற வேறுபாடும், தூய்மை தீட்டு என்ற பாகுபாடுகளும் சமூகத்தில் புரையோடி கிடந்தன.
கடவுளாலும் தீர்க்கதரிசிகளாலும் வழி நடத்தப்பட்ட யூத சமூகம் கடவுளை விட்டு விலகி அநீதியான செயல்களை செய்வதிலும், அதற்கு நியாயம் கற்ப்பிப்பதிலேயும், கடவுளை மறந்து சுயநலனை பேணுகின்றவர்களாகவும், நியாயங்களை புரட்டி அநியாயங்களை நடத்துகிறவர்களாகவும், உருக்குலைந்து போனது.
திருமுழுக்கு முனிவர் யோவான் மட்டும் இயேசு கிறிஸ்துவின் காலகட்டங்களில் திருப்பணி ஆற்றிக் கொண்டிருந்தார். அவரின் திருப்பணி சமூக மாற்றத்திற்கு வித்திட்டாலும் பெரும்பாலும் யூத மத மக்களுக்கு (Not for Transformation but for Judaization) மட்டுமே பெரிதும் துணை நின்றன.
திருமுழுக்கும் விருத்தசேதனமும் பலிகளும் ஆன்மீகத்திற்குரிய தேடல்களாக கருதப்படாமல் தங்களை யூத சமயத்தவர்களாக காட்டிக் கொள்வதற்கே அவைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அவைகள் யூத சமய சடங்குகளில் ஒன்றாகவே கருதப்பட்டன. பொருளுணர்ந்து அவைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
மன்னர் ஆட்சி அதிகாரமும் சமய ஆட்சி அதிகாரமும் செல்வந்தர்களுக்கும், வசதி படைத்தோருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் சாதகமாகவே இருந்து வந்தன.
ஏழைகள் குறித்த கரிசனையும், கிராமங்கள் குறித்த புரிதலும், நியாயப்பிரமாணச் சட்டம் காட்டுகின்ற நீதியும், மோசே கற்பித்த நெறிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டன. மனம் போன போக்கில் வாழ்ந்து யூத சமூகம் உருக்குலைந்து போனது. தனது அழைப்பையும் இறை சாயலையும் இழந்து போனது.
இந்தப் பின்னணியத்தில் இயேசு கிறிஸ்துவின் திருப்பணி தனது முப்பதாவது வயதில் தொடங்குகிறது. வழக்கமாகச் செல்கின்ற ஜெப ஆலயத்தில் அவரது முறை வரும்பொழுது ஏசாயா நூலை வாசிக்கின்றார்.
இயேசு கிறிஸ்து வாசித்த திருமறை பகுதி வெறும் வார்த்தைகளாக அவருக்கு தோன்றவில்லை. வாசித்த பகுதிகளை அறை கூவல்களாக எடுத்துக்கொண்டார்.
இயேசு கிறிஸ்து வாசித்த திருமறை பகுதியின் வழியாக கடவுள் இத்திருப்பணிக்கு அழைக்கிறார் என அவர் உணர்ந்தார்.
மோசே அவர்களுக்கு வனாந்தரத்தில் பற்றி எரிந்த முட்செடி வழியாக கடவுள் பேசியதை போல, ஜெப ஆலயத்தில் ஏசாயா நூல் வழியாக கடவுள் இயேசு கிறிஸ்துவிடம் பேசுவதாக அவர் உணர்ந்து இருப்பார் என்று புரிந்து கொள்ளலாம்.
மோசே அவர்களுக்கு வனாந்தரம் கடவுளின் திருக்காட்சியை வெளிப்படுத்தியது போல இயேசு கிறிஸ்துவுக்கு ஜெப ஆலயம் அதிலும் குறிப்பாக ஏசாயா திருமறை பகுதி கடவுளின் திருக்காட்சியையும், கடவுளின் அழைப்பையும், எதிர்பார்ப்பையும் உணர்த்தியது என்று புரிந்து கொள்ளலாம்.
இயேசு கிறிஸ்து "மனம் திரும்புங்கள் இறையரசு சமீபித்து இருக்கிறது" என்ற "முழக்கம் - மாற்று அரசியலின் முழக்கமாக, மன்னர் ஆட்சிக்கு எதிரான முழக்கமாகவும், சமயவாதிகளின் ஆட்சிக்கு எதிரான முழக்கமாகவும் " இருந்தன இயேசுவின் செயல்பாடுகள் விளக்குகின்றன.
இயேசு கிறிஸ்து "மன்னர் ஆட்சிக்கு எதிராக இறை ஆட்சி" எனும் மாற்று அரசியலை கையில் எடுத்து, உருக்குலைந்து போன யூத சமூகத்தை மாற்றவும் மீட்டுருவாக்கம் செய்யவும் தம் திருப்பணிகள் மூலம் தமது புதிய அரசியல் பயணத்தை துவங்குகின்றார்.
இயேசு கிறிஸ்து முன் வைக்கின்ற இறை ஆட்சி என்கின்ற புதிய அரசியல் பாதை என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதை. இது வாழையடி வாழையாக செல்லுகின்ற பாதை அல்ல ஒரு மாற்றுப் பாதை மாற்றுப் பயணம்.
இறை ஆட்சியை கட்டுகின்ற திருப்பணியில் இயேசு கிறிஸ்துவின் பணியாளர்களாக இருந்தவர்கள் ஏழைகளும், அன்றாட கூலிகளும், மீன்பிடிக்கின்றவர்களும், கல்வி கற்காதவர்களும், விளிம்பு நிலை சமூகத்தை சார்ந்தவர்களும், கைவிடப்பட்ட பெண்களும் மரணத்தின் விளிம்பில் இருக்கிற மக்களும் புறந்தள்ளப்பட்ட மக்களும், விலக்கி வைக்கப்பட்ட பெண்களும், ஆயக்காரர்களும் பாவிகளாக கருதப்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் இயேசுவின் மாற்று அரசியல் பாதையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இயேசுவின் இந்த புதிய அரசியல் பாதையில் ஒரு சிலர் இயேசுவின் அழைப்பை பெறாமலே தாமாகவே தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி என்னும் அரசியல் பயணம், எட்டு வகையான மீட்டுருவாக்கத்தை முன் வைத்தது அவைகள் யாதெனில்,
A. சமத்துவம் ( Equal Rights ) - கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார். மனிதர்கள் பார்வையில் இவர் தச்சன் மகன் அல்லவா, மரியாளின் மகன் அல்லவா, யோசேப்பின் மகன் அல்லவா, இவன் கலிலேயன் அல்லவா என்ற பார்வைக்கு முற்றிலும் மாறாக கடவுள்
பார்வையில் அனைவரும் சமத்துவம் என்ற முழக்கமே இயேசுவின் முதல் பணியாக இருந்தது.
B. அனைவருக்கும் நற்செய்தி ( Good News to All) - தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார். செல்வந்தர்களுக்கு அன்றைய அரசாட்சியில் நற்செய்தி கிட்டியது. இயேசு கிறிஸ்துவின் மாற்று அரசியலில் ஏழைகளுக்கு நற்செய்தி. இது தலைகீழ் மாற்றம் (Reciprocal transformation)ஆகும்.
c. இலவச மருத்துவம் (Special Care and Free Treatment for Needy) - இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்குதல். இயேசுவின் காலத்தில் இருந்த மருத்துவ முறைகள் குறைபட்டு கிடந்தன அவைகள் ஏழைகளுக்கு உதவவில்லை. பெரும்பாடு உள்ள பெண்களுக்கு, தொழு நோயாளிகளுக்கு உதவவில்லை மாறாக அவர்களை சமய நியாயப்பிரமாணம் சட்டத்தின் படி சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தார்கள். நோயாளிகள் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பெதஸ்தா குளத்தில் குடியமர்த்தப்பட்டு இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவின் புதிய அரசியல் பயணம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பயணமாக அமைந்திருந்தது.
D. சிறையிலிருந்து விடுதலை ( Freedom for the imprisoned) - சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை என்பது பொது மன்னிப்பு சார்ந்ததாகும். தண்டனை என்பது திருந்துவதற்காக தான் வகுக்கப்பட்டிருந்தது ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அநீதிகளை எதிர்ப்பவர்களும் குற்றவாளிகளாக மாற்றப்பட்டு தண்டிக்கப்பட்ட நிலையை இயேசு கிறிஸ்துவின் புதிய அரசியல் மறுத்து அவர்களுக்கு விடுதலை வாழ்வை வழங்குகின்றது.
E. பார்வை அளித்தல் ( Fulfilment of Messianic Expectations) - பார்வையற்றோருக்கு பார்வை அளித்தல் என்பது வர இருக்கின்ற தேசிய யுகத்தை அல்ல வந்துவிட்ட மேசியா யுகத்தை (Realised Eschatology) பறைசாற்றுகின்ற ஒன்றாக இயேசு கிறிஸ்து முன் வைக்கின்றார். மேசியா யுகத்தில் பார்வையற்றோர் பார்வை பெறுவது என்பது யூதர்களின் நம்பிக்கையாகும். இயேசு கிறிஸ்துவின் புதிய அரசியல் வந்துவிட்ட மேசியா யுகத்தை பறைசாற்றுகின்றது.
F. அருட்பொழிவு அனைவருக்கும் உரியது ( Right to all for Anointed) - கடவுள் என்னை அருட்பொழிவு செய்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த சமய தலைவர்கள் மட்டுமே அருட்பொழிவு செய்ய தகுதி படைத்தவர்களாக சமூகத்தில் வாழ்ந்து வந்தார்கள். இயேசு கிறிஸ்துவின் இந்த புதிய அரசியல் எவரையும் அருட்பொழிவு செய்வார் என்ற நம்பிக்கையை விதைத்தது. நாசரேத்து ஊரான் என்று அழைக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு கடவுள் அபிஷேகம் அருட்பொழிவு செய்கின்றார்.
G. நொறுங்குண்டவர்களுக்கு விடுதலை வாழ்வு (To set the oppressed free ) - விடியலை நோக்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடியலின் நம்பிக்கையை தருகின்ற இயேசுவின் புதிய அரசியல் பாதை விடுதலை வாழ்வுக்கு நேராக வழி நடத்துகிறது.
H. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், To Proclaim the year of the Lord’s favor.”) - நியாயத் தீர்ப்பை குறித்த எச்சரிப்பும், நியாயத்திருப்பில் கடவுள் யார் பக்கம் இருப்பார் என்ற தெளிவான பார்வையும் மக்களுக்கு புரிய வைத்து அவர்களை அறியாமல் இருளில் இருந்து மீட்டெடுத்தல் என்பதாக புரிந்து கொள்ளலாம்.
ஏசாயா தீர்க்கதரிசியின் நூலில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இயேசு கிறிஸ்துவின் புதிய அரசியல் பாதைக்கு அடித்தளமாக அமைந்தன. இயேசு கிறிஸ்துவின் இந்த புதிய அரசியல் பாதை என்பது
🍎மக்களுக்கான அரசியலாகும், (For People)
🍎மக்கள் மைய அரசியலாகும்( By the People)
🍎இது முற்றிலும் விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலாகும். (For the Margins)
🍎சாவிலிருந்து வாழ்விற்கு அழைத்துச் செல்லும் அரசியல். (Life Giving Politics)
🍎அடக்குமுறைகளுக்கு முற்றிலும் மாறான அரசியல் (Opposition for Oppression)
🍎பிரித்த்தாளுகின்ற அரசியல் அல்ல ஒன்றிணைக்கும் அரசியல் (Unity in diversity))
🍎வன்முறையின் மூலம் தீர்வு காணுகின்ற அரசியல் அல்ல ( Non Violence Politics)
🍎துன்புறுத்துகிற அரசியல் அல்ல துன்புறும் அரசியல் ( Servant Hood model of Politics)
🍎அதிகாரம் சார்ந்த அரசியல் அல்ல மாறாக ஜனநாயகம் சார்ந்த அரசியல்.( Not a Authoritative Model but for Democratic Model of Politics)
🍎அதிகாரக் குவிப்புக்கு எதிரான அரசியல். ( Decentralised Power Structures)
🍎செல்வ குவிப்புக்கு எதிரான பகிர்விற்கு நேரான அரசியல். (Not for accumulation of Wealth but for Distribution)
🍎சுய நீதிக்கு எதிரான அரசியல் ( God's Righteousness )
ஜெப ஆலயம் இயேசு கிறிஸ்துவின் மாற்று உருவாக்கம் மற்றும் மீட்டுருவாக்கத்தின் மைய புள்ளியாக கருதினார். தனது புதிய அரசியலான மன்னர் ஆட்சி முறைக்கு எதிராக இறை ஆட்சிக் காண பணியை ஆலயத்தில் இருந்து துவைக்கினார்.
உருக்குலைந்து கிடந்த யூத சமூகமும் யூத சமயமும் மாற்று உருவாக்கம் செய்யப்பட வேண்டும், மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில், இயேசு கிறிஸ்து இறையாட்சி நெருங்கிவிட்டது என்கின்ற முழக்கத்தோடு தமது அரசியல் பயணத்தின் மூலமாக, பாதையின் மூலமாக, பணிகள் மூலமாக மீட்டெடுக்க முடியும் என்று உறுதியாய் நம்பி தம் திருப்பணியை துவங்கினார்.
இதன்மூலம் யூத சமயத்து மக்கள் இழந்திருந்த இறைச்சாயலை மீட்டெடுக்க முடியும் என்று உறுதியாய் நம்பினார். இறுதியில் சிலுவையின் வழியில் மீட்டும் எடுத்தார்.
திருச்சபையில் ஒவ்வொரு முறை திருமறை வாசிக்கப்படும் பொழுது இறை அன்பர்களுக்கும் ஆயர்களுக்கும் அது மோசேவுக்கு வலியுறுத்தின முட்செடியின் அனுபவத்தை தரும் என்றால் நாம் ஒவ்வொருவரும் எலியா, எலிசா, மோசே, இயேசு கிறிஸ்துவாகவும் இருந்திருப்போம்.
இதுவரை இல்லாவிட்டாலும் இனி வருகின்ற நாட்களில் திருமறையின் வெளிச்சத்தில் நமது புதிய அரசியல் பாதையை கிறிஸ்தவர்களாக இயேசு கிறிஸ்துவின் வழியில் துவங்குவோம்.
3. இறையியல் கல்வி மூலம் இறைச் சாயலை மீட்டுருவாக்கம் செய்தல். (Restoring the Image of God through Theological Education). கலாத்தியர் 3 : 18 - 29
இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்ப்பிற்கு பின்பதாக திருச்சபைகள் உருவாகின. அப்படி உருவாக்கப்பட்ட திருச்சபைகளில் ஒன்று கலாத்திய திருச்சபை ஆகும். இது பவுலடியார்களால் உருவாக்கப்பட்ட திருச்சபை.
இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய திருச்சமூகம் யூத எல்லைகளைத் தாண்டி பயணித்தது. இயேசு கிறிஸ்துவுக்கு சான்றாக திருச்சபை தன்னை உருவாக்கிக் கொண்டது.
இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய பல இறைமக்கள் துன்புறுத்தப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் எனினும் திருச்சபை எனும் மாபெரும் இயக்கம் வளர்ந்து பெருகியது.
திருச்சபை விசுவாசிகளின் கூட்டமாக இருந்தது மாபெரும் திரள் இயக்கமாக இயேசுவின் அடியார்களால் உருவாக்கப்பட்டது.
கூட்டு வாழ்விலும் பக்தி நெறியிலும் அன்பின் சமூகமாக அப்பம் பிட்குவதிலும், தங்கள் உடமைகளை பொதுவாக வைத்து வாழ்வதிலும், அவர் அவர் தேவைக்கு தக்கதாக தங்களை பகிர்ந்து கொண்டும் ஒரு முன்மாதிரி இயக்கமாக வளர்ந்தது.
நாளடைவில் தங்களின் அழைப்புக்கு பாத்திரமாக வாழ திருச்சபைகள் தவறின விளைவு திருச்சபை சமூகம் உருக்குலைந்து போனது, தனது இறை சாயலையும், அழைப்பையும், இறை ஒப்படைப்பையும் மறந்து போயின.
திருத்தூதவராகிய பவுலடியார் தான் உருவாக்கிய மாபெரும் திருச்சபை இயக்கமாகிய கலாத்திய திருச்சபையில் சீர்கேடுகளும், பிரிவினைகளும், ஒடுக்குதல்களும் பரவிக் கிடந்ததை கண்டார்.
கள்ள போதனைகளும் கள்ள போதகர்களும் திரிபு கொள்கைகளும் கலாத்திய திருச்சபையை உருக்குலைத்து இருக்கிறது என்பதையும் பவுல் அடியார் கண்டுகொள்கின்றார்.
இயேசு கிறிஸ்துவின் இயக்கமாக வளர்ந்து இருந்த திருச்சபை, சீர்கெட்டு கிடப்பதை கண்ட பவுலடியார் அதை மீட்டுருவாக்கம் செய்யவும், அதன் இறைச்சாயலை மீட்டெடுக்கவும் சித்தம் கொண்டார்.
உருக்குலைந்த திருச்சபைகளை மீட்டெடுப்பதற்கு பவுல் அடியார் தெரிந்தெடுத்த வழி "இறையியல் கல்வி"யாகும். இறையியல் கல்வி மூலமாகத்தான் உருக்குலைந்த திருச்சபை
இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்பதில் கவனமாக இருந்தார். அவர் கையாண்ட இறையியல் கல்வி ...
# கடவுளின் அழைப்பு எப்படிப்பட்டது என்பதை விளக்கினது (God's Calling). (கலாத்தியர் 1: 13 -21)
# கடவுளின் தெரிந்தெடுத்தல் ( God's Selection) எப்படிப்பட்டது எதற்கானது என்பதையும் விளக்குகின்றார்.(கலாத்தியர் 1:21)
# விருத்தசேதனம் பற்றிய புரிந்து கொள்ளுதலை விவரித்துக் கூறி இறை அன்பர்களின் தெளிவற்ற மனநிலையை போக்குகின்றார். (கலாத்தியர் 2: 7 - 9)
# கடவுளின் கிருபை எவண்ணமாக நம்மில் ஆளுகை செய்கிறது என்பதையும் கற்றுக் கொடுக்கின்றார். (கலாத்தியர் 2: 15)
# கிரியைகளை விசுவாசமா என்ற விவாதத்தை மக்கள் முன் எழுப்பி அதற்கு தீர்வு காணவும் செய்கின்றார். (கலாத்தியர் 2: 16)
# யார் நீதிமான்கள் யார் பாவிகள் என்ற விவாதத்தை எழுப்பி அதன் மூலமாக தெளிவு நிலைக்கு வழிநடத்துகின்றார். (கலாத்தியர் 2:: 17, 18)
# திருமுழுக்கின் அர்த்தம் என்ன, அதைப் பெற்றதின் நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்பி அதன் மூலமாக விடை காண முற்படுகின்றார். (கலாத்தியர் 3: 27)
# இறைமக்கள் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கும் அவர் பதில் அளிக்கின்றார். (கலாத்தியர் 3: 26)
# இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவரிடம் எப்படி பிரிவினைகள் இருக்க முடியும் என்ற சமூக பகுப்பாய்வுக்கு வழி நடத்தி ஒருமைப்பாட்டுக்குள் அவர்களை வழிநடத்துகின்றார். கலாத்தியர் 3: 28)
திரு தூதுவராகிய பவுலடியார் கலாத்திய திருச்சபையில் நிலவி வந்த புராண போதனைகளுக்கும் பிரிவினைகளுக்கும் இறையியல் கல்வி மூலமாக முற்றுப்புள்ளி வைக்க முயல்கின்றார்
அன்றைய காலகட்டத்தில் வாய்மொழி பாரம்பரியம் தான் மக்களிடம் இருந்தது. பவுல் அடியார் அன்றைய காலகட்டங்களில் கடிதம் மூலம் இறையியல் கல்வியை உருவாக்குகின்றார் ஒரு வகையில் சொல்லப் போனால் இது ஒரு தொலைதூர இறையியல் கல்வியாகும். (Distance Theological Education System)
பவுல் அடியார் எழுதின கடிதங்கள் இயேசு கிறிஸ்து என்கின்ற நபரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது என்றால் அது மிகையாகாது.
அன்றைய சமயக் கல்வி கமாலியேல் பாதத்தருகே உட்கார்ந்து கேட்கின்ற குருகுல கல்வி முறையை சார்ந்தது, ஆனால் பவுல் அடியார் பயன்படுத்துகின்ற இந்த தொலைதூரக் கல்வி என்பது அன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் அடையாளமாக பார்க்கலாம்.
திருச்சபையில் நிலவி கிடைக்கின்ற சீர்கேடுகளையும் அவலங்களையும் பார்த்துக் கொண்டு அமைதலாய் இருக்கின்ற வலதுசாரி சிந்தனை கொண்டவராக, நடுநிலை வகிப்பவராகவும் இல்லாமல் பவுல், இடதுசாரி சிந்தனை கொண்டவராக அதை மாற்றுவதற்கும் மீட்டுருவாக்கம் செய்வதற்கும் பாடுபடுகின்ற இறையியலாளராக பவுல் தன்னை முன் நிறுத்துகின்றார்.
ஒரு வகையில் சொல்லப்போனால் பவுல் அடியார் எழுதின கடிதங்கள் மாபெரும் புரட்சிக்கு வித்திட்டன, சமய சீர்திருத்தத்திற்கு வழி வகுத்தன, சமூக மாற்றத்திற்கு துணை நின்றன.
கலாத்திய திருச்சபைக்கு எழுதின கடிதத்தை பவுலடியார் நிறைவு செய்யும் பொழுது, "இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம் (கலாத்தியர் 4 : 31) என்று முடிக்கின்றார்.
மாற்றங்கள் தானாக வருவதில்லை தொடர் முயற்சியால் அது உருவாகும். பவுலடியார் தனது கலாத்திய திருச்சபையை தொலைதூர இறையியல் கல்வி மூலமாக மாற்றுருவாக்கம் செய்து இழந்த சாயலை திரும்ப பெற எடுத்த முயற்சிகள் பலனளித்தன என்பதை அறிவோம்.
உருக்குலைந்து கிடந்து தனது இறைச்சாயலை இழந்த கலாத்திய திருச்சபைக்கு பவுல் கற்றுக் கொடுத்த இறையியல் கல்வியின் அழுத்தம் யாதெனில் "யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்(கலாத்தியர் 3 : 28) என்பது ஆகும்.
உருக்குலைந்து கிடந்த திருச்சபை இந்த மாபெரும் இயக்கத்தை தனது எழுத்தின் மூலமா, தொலைதூர கல்வியின் மூலமாக பவுலடியார் மீட்டுருவாக்கம் செய்து அதன் இழந்த சாயலை பெரும்படி வழிவகை செய்தார்.
இறை அன்பர்களும் ஆயர்களும் எழுத்தின் ஆற்றலை உணர்ந்து பேனாவின் முனை வாளின் முனையைக் காட்டிலும் வலிமை மிக்கது என்பதை அறிந்து எழுத்தின் மூலம் சமய, சமூக, பொருளாதார, அரசியல், சீர்திருத்தத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் இறை ஆட்சியை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவோம்.
பவுல் அடியாரின் அன்றைய இறையியல் அழுத்தம் இன்றைய பல விடுதலை இறையல்களுக்கு இறையியல் உருவாக்கத்திற்கு வித்திட்டன என்றால் அது மிகையாகாது.
பக்திமான்களாக மற்றும் பார்வையாளர்களாக திருச்சபையில் இருப்பதை காட்டிலும பங்கேற்பாளராகவும், இறையியலாளராகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் நம்மை மாற்றிக்கொள்ள பவுல் அடியாரின் எழுத்தும், இறையலும், இறையியல் கல்வியும், தொலைதூர கல்வியும் நமக்கு வழிவகை செய்கின்றன.
# நிறைவாக:
உருக்குலைந்து கிடக்கும் சமூகத்தை மீட்டெடுக்க திருச்சபை இயக்கமாக இணைந்து பயணிப்போம். திருவிருந்து சமயத்தில் முழங்கால் படியிட்டு கையேந்தி நிற்கும் நமக்கு, நம்மிடம் கையேந்தி நின்றவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்ற உணர்வு நமக்குள் வரும்
என்றால் நாம் பெற்ற திருவிருந்து அர்த்தமுள்ளதாக மாறும் இல்லாவிட்டால் அது வெறும் விருந்தாக மட்டும் அமையும்.
சமத்துவத்தை எங்கே துவக்குவது என்ற கேள்விக்கு நாமே விடையளிப்போம். "சமத்துவபுரம்" என்று அரசாங்கம் ஒரு முன்மாதிரியை நமக்கு காண்பித்து இருக்கிறது.
ஆலயத்தில் அமர்ந்திருக்கும் பொழுது நம் அருகில் ஏன் ஒரு ஏழையாக்கப்பட்டவர் அமரவில்லை? நாம் ஏன் ஒரு ஏழையின் அருகில் போய் அமரவில்லை? என்ற கேள்வி நமக்குள் எழும் என்றால் நமது ஆலய பிரவேசம் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்று உணரலாம்.
ஆலயத்தில் நற்செய்தி பாடம் வாசிக்கும் பொழுது பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்ற ஒரு ஆண் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, எப்பொழுது பெண்கள் வாசிப்பதற்கு அனுமதிக்கிறோமோ அப்பொழுதுதான் இயேசு கிறிஸ்துவின் உறவின் வட்டத்துக்குள் வந்திருக்கிறோம் என்பதாகும்.
திருச்சபைகளை பராமரிக்கின்ற பணியாளர்களும், தூய்மை பணியாளர்களும் இறைபணியாளர்களே என்று எப்பொழுது, திருச்சபையும் திருச்சபை பொறுப்பாளர்களும் ஆகிய நாம் மனதார ஏற்றுக் கொள்கிறோமோ அப்பொழுது அப்பொழுதுதான் இறை ஆட்சிக்குள் நாம் அடி எடுத்து வைக்க முடியும் .
திருச்சபையில் பணிபுரிகின்ற ஒவ்வொரு பணியாளர்களுக்கும் வைப்பு நிதியும் காப்பீட்டுத் தொகையும் நமது திருச்சபையின் மூலமாக உருவாக்கப்படும் என்றால் அது வளர்ந்த திருச்சபையின் அடையாளமாகும்.
" புத்தியாய் நடந்து வாருங்கள் திருவசன பூட்டை திறந்து பாருங்கள்.." என்ற கீர்த்தனை பாடல் மிகவும் அர்த்தம் நிறைந்த, இறையியல் அழுத்தம் தரும் பாடல் ஆகும்.
பாடலின் அனுபல்லவி மற்றும் முதலாம் சரணம் அர்த்தம் கொண்ட வரிகள்...
அனுபல்லவி:
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி
சரணங்கள்:
1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ
சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே
நம் நாட்டில் நாம் வாழுகின்ற இடத்தில் பல சமூகங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன.. உள்ளன, குறிப்பாக
👉🏾தலித் சமூகம், பெண்கள் சமூகம், கருப்பின சமூகம், பூர்வ குடிகளின் சமூகம், மாற்றுத்திறனாளிகளின் சமூகம், அன்னகர்களாக வாழுகின்ற சமூகம், ஒடுக்கப்பட்ட சமூகம், தெருவோரங்களில் வசிக்கும் சமூகம், புலம்பெயர்ந்து வாழும் சமூகம், அகதிகளாக உருவாக்கப்பட்ட சமூகம், இவர்களைக் கண்டும் காணாதவர்களாக ஒதுங்கி செல்வோம் என்று சொன்னால் " வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இடத்திற்கு என்னோடு வாருங்கள்..." " என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தை நம் காதுகளில் விழப்போவதில்லை.
உருக்குலைந்த சமூகமும் இறைச்சாயலை இழந்த சமூகமும் மீட்டுருவாக்கம் செய்வதற்கு இன்றே நம்மை அர்ப்பணிப்போம், இணைந்து பயணிப்போம், இறை ஆட்சியை அமைத்திடுவோம்.
இறை ஆசி உங்களோடு இருப்பதாக ...
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️
Comments
Post a Comment