"EDUCATION AS A MINISTRY OF THE CHURCH"- Rev. Augusty Gnana Gandhi

 EDUCATION AS A MINISTRY OF THE CHURCH

கல்விப் பணி திருஅவையின் திருப்பணி

# திருமறைப் பகுதிகள்:

நெகேமியா 8 : 1 - 8

திருத்தூதுவர் பணிகள் 18: 24 - 28

மத்தேயு 5 : 1 - 12




# உட்புகும் முன்:

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது நமது முன்னோர் பயன்படுத்திய வழக்குகளில் ஒன்று. இது சரியா தவறா என்பதை புரிந்து கொள்வதற்கு கல்விதான் அவசியம்.

கல்வியின் நோக்கம் கல்வியாளர்களை உருவாக்குவது அல்ல மாறாக கல்வி என்பது மற்றவர்களுக்கு அறிவைக் கற்பிக்கும் மற்றும் பிறரிடமிருந்து அறிவைப் பெறும் இருதரப்பு செயல்முறையாகும்.

இது புத்தக அறிவோடு மட்டுமல்லாமல், ஒரு சிறந்த மனிதராக உருவாகத் தேவையான அறிவையும், திறன்களையும் உள்ளடக்கியது.

கற்றால் கல்லில் விழுந்து பதிந்தது போல நிலைத்திருப்பதால், கல்வி எனப்பட்டது. கல் என்றால் உறுதியானது என்பது பொருள். கல் உறுதியாக உள்ளது போலத் தான் கல்வி.

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை பாராட்டி எம் பள்ளியில் மாணவர்கள் கவிதை வாசித்தார்கள் அதில் ஆசிரியர்கள்..

# சமூகத்தின் சாளரங்கள்

# சமத்துவத்தை சமைப்பவர்கள்

# சத்தியத்தின் விழுதுகள்

# சரித்திரத்தின் தூண்கள்

# இருள் அகற்றும் சுடர்கள்

இவைகளோடு ஒரு பெண், ஆசிரியர்களின் பணி பற்றி பகிர்ந்து கொள்ளும், பொழுது சொன்ன வார்த்தை சிந்தையை கவர்ந்தது, "ஆசிரியர்கள் ; சமூக சாக்கடைகளை சுத்தம் பண்ணும் முதன்மை பணியாளர்கள்." நிதர்சனமான உண்மையாகும்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிக்கு பின்பதாக இயேசு கிறிஸ்துவின் இயக்கம் வளர்ந்து பெருகி உலகமெங்கும் வியாபித்தது. அதன் விளைவாக

🍎திருஅவைகள் உண்டாகின, திருத்தொண்டுகள் பரவின, திருத்தொண்டர்கள் உருவாகினர், சமயப்பணி என்கின்ற எல்லை உடைந்து சமூகப் பணிகள் வளர்ச்சியடைந்தன, நற்செய்தி என்பதன் அர்த்தங்கள் பல வகைகளில் புரிந்து கொள்ளப்பட்டன.

Salvation எனும் நிலை மாறி Redemption என்ற புரிதலுக்கு கல்வி வழி நடத்தியது. Redemption என்பது Liberation க்கு வழிநடத்த வேண்டும் என்ற  நிலைக்கு துணை நின்றது. Liberation அனைத்து வகையான Transformation வழி நடத்திக் கொண்டுள்ளது.

திருஅவைகள் உருவாகின பின்னர்  திருத்தொண்டுகளின் அமைப்பும் செயல்பாடுகளும் மாற்றம் அடைந்தன. நற்செய்தி என்பது வெறும்

🍎சமய பரப்பு பணி அல்ல மாறாக சமூக அமைப்பிற்கான பணி,

🍎சமூக நீதிக்கான பணி, சமத்துவம் உருவாவதற்கான பணி, பிணியற்ற சமூகம் உருவாவதற்கான பணி, வறுமையற்ற சமூகம் மலர்வதற்கான பணி, மாண்போடு வாழ்வதற்கான பணி...

என்ற புரிதல்களும் அவசியங்களும் உருவாகின. இதன் விளைவாக இல்லங்கள் திறக்கப்பட்டன, மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டன, அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமாகின.

திருமறையை புரிந்து கொள்வதிலும் பல மாற்றங்கள் உண்டாக்கின. தனிமனித மீட்பு என்ற நிலை மாறி சமூக மீட்பு இன்னும் கருத்தியல் உருவாக்கப்பட்டது.

வறுமைக்கான காரணங்கள் பாவத்தினால் அல்ல அது சமூக சீர்கேடினால் உண்டானது என்ற புரிதல் வந்தது. வறுமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டன, வறுமையை போக்குவதற்கு வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அறியாமை என்னும் இருள் அகல்வதற்கும், இறை ஆட்சி மண்ணில் மலர்வதற்கும் கல்வி அவசியம். அது திருச்சபையின் தலையாகிய திருப்பணி என்ற உணர்வோடு திருமறைப் பகுதிகளை தியானிப்போம்.

 

1. சமூக முன்னேற்றத்திற்கு வித்திடும் திருஅவையின் கல்விப்பணி.(நெகேமியா 8 : 1 - 8)

2. சமய சீர்திருத்தத்திற்கு வழி நடத்தும்  திருஅவையின் கல்விப்பணி.(திருத்தூதுவர் பணிகள் 18: 24 - 28)

3. சமத்துவ வாழ்விற்கு திசை திருப்பும் திருஅவையின் கல்விப்பணி.(மத்தேயு 5 : 1 - 12)

 

1. சமூக முன்னேற்றத்திற்கு வித்திடும் திருஅவையின் கல்விப்பணி.(நெகேமியா 8 : 1 - 8)

சிறையிருப்பில் மீந்தவர்களின் பிந்தைய வாழ்க்கை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை கொடுக்கப்பட்ட திருமறை பகுதி வழியாக நாம் அறியலாம்.

கடவுள் மோசே வழியாக இஸ்ரவேல் மக்களுக்கு வழங்கின நியாயப்பிரமாண சட்டத்தை எஸ்றா தீர்க்கதரிசி மக்களுக்கு வாசித்துக் காட்டினார்.

மரத்தால் செய்யப்பட்ட உயர்ந்த மேடையில் மக்கள் காணும்படியாக நின்று அதை வாசித்தார்.

யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒபதியா, மாசெயா, கேலிதா,அசரியா, யோசபாத், ஆனான் பெலாயா, என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.(நெகேமியா 8  :  7)

இஸ்ரவேல் மக்கள் நின்று கொண்டு கருத்தோடு கவனித்தார்கள், அதில் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டார்கள்.

முறையான சமயக் கல்வி அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. மோசே கற்பித்த நியமங்கள் வாழ்வியல் சட்டங்கள் ஆக்கப்பட்டன. அது மீந்திருந்த ஒட்டுமொத்த இஸ்ரவேல் மக்களுக்கு குடியாட்சியின் சட்டங்களாக வகுக்கப்பட்டன.

இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய பல காரியங்கள் உள்ளன குறிப்பாக

# Right to Education - இந்த கல்வி "ஆண் - பெண் இருபாலருக்கும் சமச்சீர் கல்வி" யாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.(நெகேமியா 8  :  2). ஆணாதிக்கம் நிறைந்த இஸ்ரவேல் சமூகம், பெண்களையும் கல்வி கற்க வைத்தது, சமூக முன்னேற்றத்திற்கான முதல் படியாக காணலாம்.

#. Interpreters - இஸ்ரவேல் சமூகத்தில் தீர்க்கதரிசன பாரம்பரியத்தில் தீர்க்கர் மட்டும் கடவுளின் பணிகளை செய்வார்,  ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக விளக்க உரையாளர்கள் நியமிக்கப்பட்டு அவரவர் புரிந்து கொள்வதற்கு ஏற்ப வழிவகை செய்ததும் வித்தியாசமானது.

# இஸ்ரவேலில் மீந்திருந்த அனைவரும் "ஒருமனப்பட்டு"  கல்வி கற்பதற்கு கூடி வந்தார்கள் என்பதும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.(நெகேமியா 8:1)

# எஸ்ரா தீர்க்கர் நியாயப்பிரமாண புத்தகத்தை திறந்த பொழுது மக்கள் எழுந்து நின்றார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். எழுந்து நிற்றல் என்பது தன்னைத் தாழ்த்தி பிறரை உயர்த்துவதற்கு, மதிப்பதற்கு உரிய அடையாளச் செயலாகும்.

இதுவரையிலும் அரசருக்கு பணிந்து நின்ற மக்கள் முதன்முறையாக கடவுளுக்கு பணிந்து நிற்கின்றது ஒரு மாபெரும் திருப்புமுனையாகும்.

# கல்வி கற்பதற்கு முன்பாக அவர்கள் அனைவரும் கடவுளை வணங்கியதும்,  கைகளைக் குவித்து ஆமென் என்று முழங்கியது தங்களை முன்னேற்றத்திற்கான பாதைகளில் நிலைநிறுத்திக் கொண்டதின் அடையாளமாக காணலாம்.(நெகேமியா 8 : 6)

எஸ்ரா தீர்க்கதரிசி மூலமாக மீந்திருந்த இஸ்ரவேல் மக்கள் நியாயப்பிரமாண சட்டத்தை தங்களின் அடிப்படைக் கல்வியாக கற்றுக்கொள்ள தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டது மிகவும் சிறப்புக்குரிய ஒன்று. கல்வி அனைவருக்கும் வழங்கப்பட்டது ஆனால் கல்வியின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதுதான் மிக முக்கியமான ஒன்றாகும்.

 

நியாயப்பிரமாண சட்ட கல்வி மீந்திருந்த இஸ்ரேல் மக்களில் உண்டாக்கிய தாக்கங்கள்...

A.சமூகம் - அழுகையிலிருந்து மகிழ்ச்சிக்கு திரும்பினார்கள்.(நெகேமியா 8 : 10)

B.சமூகம் - உணர்விலே மாற்றம் அடைந்தார்கள்.(நெகேமியா 8 : 11)

C.சமூகம் - இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். (நெகேமியா 8 : 12)

D.சமூகம் - வறுமையில் உள்ளவர்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். எல்லாருக்கும் சம பங்கிட்டு பங்குகளை பகிர்ந்து கொடுத்தார்கள். (நெகேமியா 8 : 12) வறுமையை அகற்றுவதற்கான கல்வி அவர்கள் கற்றுக் கொண்டதின் வெளிப்பாடாக இதை காணலாம்.

E.சமூகம் - தங்கள் பிழைகளை அறிக்கை செய்தார்கள். கல்வி என்பது தங்கள் தவறுகளை உணர்வதற்கு வழி நடத்த வேண்டும். குற்றங்கள் இல்லா சமூகம் உருவாவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சமூகத்தை நாம் இங்கு காணலாம்.(நெகேமியா 9:2)

F.ஓரிறை கோட்பாட்டிற்குள் மீந்திருந்த இஸ்ரவேல் சமூகத்தை நியாயப்பிரமாண கல்வி வழிநடத்தியது. இது பல தெய்வ கோட்பாட்டுக்கும் அதனை சார்ந்த பலி, சடங்காச்சாரங்கள், அடிமைப்படுத்தும் காரணிகளுக்கு தங்களை விலக்கி கொள்வதற்கு இந்த கல்வி அவர்களை உந்தியது. இது சமூகம் முன்னேற்றத்திற்கான பாதைகளில் ஒன்றாகும்.

G.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற புரிந்து கொள்ளுதலை இஸ்ரவேல் சமூகத்திற்கு கற்றுக் கொடுத்தது நியாயப்பிரமாண கல்வி.

இதனை ஒட்டியே நமது முன்னோர்களும் திரு தொண்டர்களும் சமூகத்தில் புரையோடிக் கிடந்த அழுக்குகளையும், அடிமைப்படுத்தும் கலாச்சாரங்களையும், காரணிகளையும் இனம் கண்டு அவையிலிருந்து மக்களை விடுவித்தார்கள் என்பதை கருத்தில் கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தனிமனித மீட்பு என்பதை தாண்டி சமூக மீட்பிற்கு கல்வி வழிநடத்த வேண்டும். எஸ்ரா அவர்களின் முன்னெடுப்பு மீந்திருந்த இஸ்ரவேல் சமூகத்தை சமூக முன்னேற்றத்திற்கான பாதைகளில் வழிநடத்தியது.

இன்றைய திருஅவை மேற்கண்ட கல்விப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள திருமறை உந்துதல் தருகிறது.

2. சமய சீர்திருத்தத்திற்கு வழி நடத்தும்  திருஅவையின் கல்விப்பணி.(திருத்தூதுவர் பணிகள் 18: 24 - 28)

திருத்துதுவராகிய பவுலடியார் சமயக் கல்விகளை கற்று தேர்ந்தவர். கமாலியேல் என்பவரின் பாதத்தருகே உட்கார்ந்து குருகுலக் கல்வி கற்றவர்.

பவுல் அடியாரின் குருகுல கல்வி சமய சீரழிவிற்கு வித்திட்டதே தவிர சமய சீர்திருத்தத்திற்கு வழிவகை செய்யவில்லை.

பவுல் அடியார் கற்ற சமயக் கல்வி சமயத்தை  பிளவுபடுத்தியது, ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கியது, அடிமைத்தனங்களுக்கு வித்திட்டது, அதிகார வரம்பு மீறலுக்கும் வன்முறைக்கும் வித்திட்டது.

பவுலடியார் உயிர்த்த ஆண்டவரை சந்தித்த பின்பதாக அவரின் செயல்பாடுகளில் மாற்றம் உண்டானது. அவர் சென்ற பாதை மாற்றி அமைக்கப்பட்டது.

உயிர்த்த ஆண்டவரின் கல்வி பவுலடியாருக்கு சிந்தனையில் மாற்றத்தை தந்தது செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது சமுதாயத்தில்,  சமயத்தில் சீர்திருத்தங்களை அது தோற்றுவித்தது.

கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதியில் எபேசு பட்டணத்தில் உண்டான சீர்திருத்தங்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் அவைகள் திருஅவையின் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட மாற்றங்கள் ஆகும்.

எபேசு பட்டணம் கல்வியில் செழித்திருந்த ஒரு பகுதியாகும். அலெக்ஸாண்ட்ரியா கல்விசாலையும் இங்கேதான் அமைந்திருந்தது. மொத்தத்தில் எதேசு பட்டணம் கல்விக்கு பெயர் போன ஒரு பட்டணமாகும்.

அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதர்  எபேசுபட்டணத்துக்கு வந்து மக்களை நெறிப்படுத்துகின்றார் சமயத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருகின்றார்.(அப்போஸ்தலர் 18  :  24)

அவர் ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தார்.(அப்போஸ்தலர் 18  :  25)

அவர் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்ககொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.(அப்போஸ்தலர் 18  :  26)

அப்பொல்லோ மற்றும் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ஒன்றாக இணைந்து எபேசு பட்டணத்தில் மாபெரும் சீர்திருத்தங்களை செய்தார்கள்.

மூவரின் போதனைகளும் கற்பித்தலும்(Preaching & Teaching) சமயத்தில் பல சீர்திருத்தங்களை செய்து வந்தன. அது சமூக முன்னேற்றத்திற்கான வழிவகைகளுக்கு ஆதாரமாய் அமைந்தன. இவர்களோடு எபேசு பட்டணத்தில் பவுலடியார் செய்த திருப்பணிகளும் பல சீர்திருத்தங்களுக்கு வித்திட்டன.

அவர்கள் உண்டாக்கின கல்வி முயற்சி என்னென்ன தாக்கங்களை உண்டாக்கியது என்றால்...

 

A.திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டு வந்தான்.(அப்போஸ்தலர் 19  :  9) முதன் முதலாக திருமறை ஆய்வுகள் ஒரு இல்லத்தில் நடைபெற்றன. முறையான இறையியல் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

B.இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கப்பட்டன.(அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின. பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன.(அப்போஸ்தலர் 19  :  12)

C.அடிமைப்படுத்தும் சக்திகளும் காரணிகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

D.மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்.(அப்போஸ்தலர் 19  :  19)

E.அறியாமை என்னும் இருளில் மூழ்கிக் கிடந்த மக்கள் அறியாமை இருளிலிருந்து விலக்கப்பட்டார்கள்.

F.சமயத்தின் பெயரால் நடைபெற்ற புரட்டு போதனைகளும் கள்ள தீர்க்கதரிசிகளும் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

G.சமயத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்திருந்தவர்களின் வாழ்வில் மாபெரும் கலக்கம் அச்சம் உண்டாயின. மக்கள் விழிப்படைந்து இருந்தார்கள்.

மொத்தத்தில் ஏதேசு பட்டணம் பவுல், அப்பல்லோ, ஆக்கில்லா, பிரஸ்கில்லா ஆகியோரின் போதனையினாலும்,  கல்வி முயற்சியினாலும் சமய சீர்திருத்தங்கள் எபேசுவில் உண்டாகின.

அப்பல்லோ அவர்கள் முழுக்கு முனிவர் யோவானின் சீடர் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவும் முழுக்கு முனிவரை தம் குருவாக ஏற்றுக் கொண்டார் என்பதும் நாம் அறிவோம்.

அப்பல்லோ அவர்களின் தீவிரமான போதனையும் கல்விப் பணியும் சமயத்தில் புரையோடிப் போய் கிடந்த கள்ள தீர்க்கதரிசிகளுக்கும், புரட்டு போதனைகளுக்கும், சமய சடங்காச்சாரங்களுக்கும், மாய வித்தைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தன.

திருத்தொண்டர்களும் உலகமெங்கும் பயணித்த போது அவர்கள் தாங்கள் இருந்த இடங்களில் இருந்த சமூக அவலங்களை சமூக சீர்கேடுகளை கண்டும் காணாதவர்கள் போல் அல்லாமல் அவைகளை களைவதற்கும் அவைகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும் கல்வியை வழியாக உருவாக்கினார்கள்.

அவர்கள் உருவாக்கின கல்வி சீர்திருத்தங்களுக்கு அது வித்திட்டது. இன்றைய திருஅவைகளும் இவைகளை கருத்தில் கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம்.

3. சமத்துவ வாழ்விற்கு திசை திருப்பும் திருஅவையின் கல்விப்பணி.(மத்தேயு 5 : 1 - 12)

ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து தமது திருப்பணியை தமது முப்பதாவது வயதில் துவக்கினார். மனம் திரும்புங்கள் இறையாட்சி சமீபத்தில் இருக்கிறது என்ற முழக்கத்தோடு ஆரம்பித்தார்.

இயேசு கிறிஸ்துவின் திருப்பணிகள் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளாக அமைந்திருந்தன. போதனைகளும், கதைகளும், உவமைகளும், உருவகங்களும், காட்சிகளும், மறைநூல் விளக்கங்களும், அற்புதங்களும், அடையாளங்களும் அவரின் பணி வழிமுறைகளாக அமைந்திருந்தன.

கொடுக்கப்பட்டுள்ள திருமறைப் பகுதியில் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து தன்னை நாடி வந்த சீடர்களுக்கும் திரளான மக்களுக்கும் கற்பிக்கின்றார்.

அவரின் கற்பித்தலில் அடங்கியுள்ள சாரம்சங்கள் அன்றைய காலகட்டங்களில் இருந்த சமய கல்வி போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு கல்வி முறையை சார்ந்திருந்தது.

இயேசு கிறிஸ்துவின் மலை பிரசங்கம் அவரின் தொடக்க அருளுரையாக நாம் பார்க்கலாம். இயேசுவின் உரைகளில் விவாதப் பொருளாக இருக்கின்ற காரியங்கள் என்னவென்றால்...

A.ஏழைகள் குறித்த அக்கறை அவரின் போதனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.(மத்தேயு 5  :  3)

B.துயரப்படுகிறவர்கள், துன்பத்தில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் குறித்த கரிசனை அவரின் செயல்பாட்டில் இருந்ததை காணலாம்.(மத்தேயு 5  :  4)

C.சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.(மத்தேயு 5  :  5) சாந்த குணம் உடையவர்கள் யார் என்பதனை அழகாக இயேசு விளக்குகிறார் அவர்கள் பூமியை சுதந்திரத்துக் கொள்வார்கள் எனும் பொழுது யாரெல்லாம் விடுதலை வேட்கைக்காக காத்திருக்கின்றார்கள் அவர்கள் விடுதலை பெறுவார்கள் என்பதை கோடிட்டு காண்பிக்கின்றார்.

D.நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்.(மத்தேயு 5  :  6) இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் நீதி என்பது இறை நீதியை குறிப்பதாகும்.

F.இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.(மத்தேயு 5  :  7) இரக்க குணம் எங்கே இருக்கும் என்றால் அது ஏழ்மையில் உள்ளவர்களிடமும் வறியவரிடம் தான் இருக்கும். இயேசு கிறிஸ்துவின் போதனையில் வறியவர்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதே தலையாய நோக்கமாக இருக்கிறது .

G.இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.(மத்தேயு 5  :  8) தூய்மை - தீட்டு என்னும் கருத்தியலால் சமூகம் பிளவு பட்டிருப்பதை இயேசு குறிபால் உணர்த்தி, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் இறைவனைக் காண்பார்கள் என்ற மாறுபட்ட போதனையை கற்பிக்கின்றார்.

H.சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.(மத்தேயு 5  :  9) இறைமக்கள் என்பவர் யார்? கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகம் யார்? என்பதை தமது போதனையில் இயேசு கிறிஸ்து விளக்குகின்றார். அடிமைத்தனத்திற்கு எதிர்த்து நிற்கிறவர்களும் ", அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு தங்களை இணைத்துக் கொண்டு அவர்களின் வாழ்வுக்காக குரல் கொடுக்கின்றவர்களும் பாக்கியவான்கள் என்று இயேசு கிறிஸ்து தம் போதனைகளில் சுட்டிக்காட்டுகிறார்.

I.நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது.(மத்தேயு 5  :  10) அநீதி நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் இறை ஆட்சிக்குரியவர்கள் என்ற புதிய விளக்கத்தை தனது போதனைகள் வழியாக கற்றுக் கொடுக்கின்றார்.

J.இறை ஆட்சி  நிமித்தம் துன்புறுபவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் வழக்கத்திற்கு மாறான அறைகூவல்களை சமூகத்தில் விடுத்தன. இயேசுவை பின்பற்ற விரும்புகிறவர்கள் இத்தகைய திருப்பணிகளை ஆற்ற வேண்டும் என்று இயேசு கிறிஸ்து எதிர்பார்த்து அவர்களை பயிற்றுவிக்கின்றார்.

மேலும் ஏசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு கூறுகின்ற ஆலோசனைகளில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை, "இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான், இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்."(மத்தேயு 5  :  19)

வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.(மத்தேயு 5  :  20)

இயேசு கிறிஸ்துவின் கல்வி முயற்சி சமூகத்தில் மாற்றங்களுக்கான வழிகளாகவும், சமத்துவத்திற்கான முன்னெடுப்புகளாகவும் அமைந்திருந்தன.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த படிநிலைகள் ஆண் - பெண், யூதர் - யூதர் அல்லாதோர், யூதர் - சமாரியர், போன்ற படிநிலைகளுக்கு எதிரிடையாக அமைந்திருந்தன.

மோசே அவர்களின் நியாயப்பிரமாண சட்டத்தை வரிக்கு வரி கடைப்பிடிக்கின்றவராக தங்களை காட்டிக் கொண்டிருந்தார்கள் யூதர்கள். எனினும் அவர்கள் வாழ்வில் கடவுள் விரும்பும் நீதி இரக்கம் போன்றவைகள் காணப்படவில்லை.

ஏழைகள் ஏழைகள் ஆக்கப்பட்டார்கள், வறுமையில் வாடினவர்கள் வறுமைக்கு கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டார்கள், விளிம்பு நிலையில் இருந்தவர்கள் இன்னும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டார்கள்,

பலி செலுத்த முடியாமல் வறுமையின் நிமித்தமாக பாவிகளாக கருதி தள்ளப்பட்டவர்கள் அநேகம் இருந்தார்கள், நோயின் காரணமாக விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள்...

இப்படிப்பட்ட நிலைகளுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளும் கல்வி முன்னெடுப்புகளும் பெரும் அச்சுறுத்தல்களாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அவைகளை மாற்றி சமத்துவத்திற்கான தேடல்களுக்கு வித்திட்டன.

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருந்தன, உபவாசம் என்றால் என்ன? தர்மம் செய்வது எப்படி? ஜெபம் பண்ணுவது எவ்வாறு இருக்க வேண்டும்? என்பனவற்றை புதிய நோக்கில் கற்றுக் கொடுத்தார். இந்த மூன்றும் சமத்துவத்திற்கானது என்பது இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் மைய கருத்தாகும்.

இயேசு கிறிஸ்துவின் மலை பிரசங்கத்தில் அவர் வறுமையை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார், இறை நீதியை குறித்து விளக்கி இருந்தார் ஏழைகளைக் குறித்து  விவாதித்து இருந்தார், இறை மக்கள் யார் என்ற விவாதத்தை அவர் துவக்கி இருந்தார், இறையாட்சி யாருக்கானது என்ற தெளிவை அவர் உண்டாக்கி இருந்தார்.

இன்றைய திருஅவையானது இயேசு கிறிஸ்துவின் சிந்தையில் தன்னை இணைத்துக் கொண்டு, அவர் வழியில் பயணித்து, இறையியல் கல்வியை தனது  தலையாய திருப்பணியாக ஏற்றுக் கொண்டு,

இறையியல் கல்வி கற்பதற்கு தம் மக்களை மனம்புவந்து அனுப்பவும், இறையியல் கல்வியை தாங்கவும், வழியாக இறை பணியை செய்யவும் அழைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கின்ற காலம் இது.

உணர்ந்து திருஅவையாக கல்விப் பணியில் மனமுவந்து ஈடுபட வழித்தடங்களை அமைப்பது காலத்தின் கட்டாயம் அதுவே இறை அழைப்பு.

# நிறைவாக:

எங்கும் புகழ்  இயேசு இராஜனுக்கே

எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

என்ற கீர்த்தனை பாடலில் மூன்றாம் சரணம் மிகவும் அற்புதமான சரணம்...

தாழ்மை சற்குணமும் தயை

காருண்யமும்

தழைப்பதல்லோ தகுந்த கல்வி?

பாழுந்துர்க்குணமும்

பாவச் செய்கையாவும்

பறந்தோடப் பார்ப்பதுங்கள்

பாரமன்றோ?

கல்வி கற்றவர்களின் மனபாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

நமது முன்னோர்கள் உருவாக்கின கல்வி நிலையங்களை பாதுகாக்க தவறி விட்டோம்.  பல பள்ளிக்கூடங்களை, இல்லங்களை, மருத்துவமனைகளை பல்வேறு காரணங்களைச் சொல்லி மூடி விட்டோம். திருஅவையாக நாம் நியாயத்தீர்ப்பில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

திருச்சபையில் நடக்க வேண்டிய தோத்திர பண்டிகை மற்றும் இதர பண்டிகைகள் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆலயங்களும் புதிது புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கிறன.

ஆனால் திருச்சபையில் நடைபெற வேண்டிய மறைக்கல்வி, வேத ஆராய்ச்சி வகுப்புகள், இலக்கியங்கள், பட்டிமன்றங்கள், கருத்தாய்வுகள்,கலந்துரையாடல்கள், விவாத மன்றங்கள் போன்றவைகள் மறைந்து கொண்டே வருகின்றன.

அன்றைய அருட்தொண்டர்கள் தங்களை சீர்திருத்தவாதிகள் ஆக தங்களை அடையாளப்படுத்தினார்கள். ஆனால் நாமோ இன்று பெரும் சமயவாதிகளாக நம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறுவதற்கு திருஅவையாக  கூடி அமர்ந்து விவாதித்து விடை காணுவோம்.

சாமானியர்கள் கல்வி கற்பதற்கு தடையாக இருக்கின்ற அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவதற்கு திருஅவை ஒன்று கூடி களத்தில் நின்று போராடுவது என்ற கருத்தியல் உருவாக்கிடல் வேண்டும்.

அன்றைய திருத்தொண்டர்கள் சாதியத்திற்கு எதிராக, அடிமைத்தனத்திற்கு எதிராக, வன்கொடுமைகளுக்கு எதிராக, ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் விழிப்படையவும்,  விடுதலைக் காற்றை சுவாசிக்கவும் கல்வியை தேர்ந்தெடுத்தார்கள்.

கல்வி மூலமாக புதிய சமூகத்தை கட்டி அமைத்தார்கள். பல வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்கள், அதன் மூலம் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.

நமது இல்லங்களில் மறைக்கல்வியை கதை வாயிலாக கற்றுக் கொடுத்த தாத்தா பாட்டிகள் இன்று இல்லை, கூட்டுக் குடும்பங்களும் இல்லை, ஞாயிறு பள்ளியும் சுதந்திரமாக செயல்படுவதற்கு பல தடைகள். 

விடுமுறை வேதாகம பள்ளியும் செயல்படுவதற்கு பல அச்சுறுத்தல்கள் இவைகள் மத்தியில் அடுத்த தலைமுறையை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பதை சிந்திப்போம் மாற்று வழிகளை உருவாக்குவோம்.

இந்தியாவிற்கு கல்வியை தந்த நமது கல்வி நிறுவனங்கள் மற்றும் அருள் தொண்டர்கள் வகுத்து தந்த பாதையில் திருஅவையாக நாம் பயணிப்போம்.

இயேசு கிறிஸ்துவின் சிந்தையில் திருஅவையாக நம்மையும் இணைத்துக் கொண்டு கல்வியின் தரத்தை உயர்த்துவோம் கல்வியாளர்களை உருவாக்குவோம் அவர்கள் மூலம் மாற்று சமூகத்தை கட்டியமைப்போம்.

கிறிஸ்தவ இல்லறமேசிறந்திடக்

கிருபை செய்வீர், பரனே!

எனும் பாடலின் கடைசி சரணத்தை  ஒரு முறை உணர்ந்து பாடி கல்விப் பணியில் நம்மை திரு அவையாக அர்ப்பணிப்போம்

மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,

மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,

கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,

கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக்கிறிஸ்தவ

 

இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக ....

இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக ....

 

நட்புடன் உங்கள்

 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்

️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀

 

 

Comments