BAPTISM : BORN FROM ABOVE
திருமுழுக்கு : உயர் நிலையிலிருந்து பிறத்தல்
# திருமறைப் பகுதிகள்:
தொடக்க நூல் 8 : 1 - 14
யோவான் 3 : 1 - 8
கொலோசெயர் 3 : 1 - 11
# உட்புகும் முன்:
ஒவ்வொரு திருச்சபை அன்பர்களின் வாழ்விலும் திருமுழுக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. திருச்சபை பாரம்பரியங்களில் திருமுழுக்கு சாக்கிரமந்துகளில் முதன்மையானதாகும்.
திருமுழுக்கை முக்கியமாக கருதுகிறோமோ இல்லையோ திருமுழுக்கின் போது பெறப்படுகின்ற சான்றிதழ் (Baptism
Certificate) முக்கியமாக கருதப்பட்டு அதனை பத்திரப்படுத்தி வருகின்றோம்.
ஒருமுறை குழந்தைக்கு திருமுழுக்கு கொடுக்கும் பொழுது தண்ணீரை எடுத்து அதன் தலையில் ஊற்றினேன். அந்த ஒரு தருணத்தில் குழந்தை என் மீதும் என் அங்கி மீதும் சிறுநீர் கழித்து விட்டது.
அந்தக் குழந்தையின் பாட்டி சொன்னார்கள் ஐயா இது குழந்தையின் ஆசிர்வாதம் என்றார்கள்.
இன்னொரு முறை ஒரு குழந்தைக்கு திருமுழுக்கு கொடுக்கும் பொழுது அந்த குழந்தை என்னை பார்த்ததும் வீறிட்டு அழுதது.
ஏன் இப்படி அழுகிறது என்று கேட்டேன்.
அதன் தாய் சொன்னார்கள் ஒரு முறை நீங்கள் அங்கி அணியாமல் எங்கள் வீதியில் வரும் பொழுது உங்களை அடையாளம் தெரியவில்லை,
அதோ பூச்சாண்டி வருகிறான் என்று உங்களைப் பார்த்து சோறு ஊட்டினேன். பக்கத்தில் வந்த போது தான் ஐயா என்று உணர்ந்து கொண்டேன் என்று சொன்னார்.
அப்போது அருளுரையில் சொன்னேன் நான் வெள்ளை ஆடை அணிந்திருந்தாலும்,
இந்த குழந்தைக்கு பூச்சாண்டி ஆகத்தான் தெரிந்திருக்கிறேன்.
இந்த நிகழ்வுக்கு பின்பதாக திருச்சபையில் இருக்கிற எல்லா குழந்தைகளும் ஒழுங்காக சாப்பிடுகிறார்கள் என்ற தகவல் பின்பதாக வந்து சேர்ந்தது.
திருமுழுக்கின் போது கேள்வி என் நேரம், பெற்றோரை பார்த்து கேட்டேன் இந்த பிள்ளைக்கு முன்மாதிரியாக நீங்கள் வாழ்க்கை நடத்துவீர்களா என்று, பெற்றோர்கள் ஆம் என்று சொன்னார்கள்.
உடனடியாக குழந்தை இடைமறித்து இல்லை இவர்கள் இருவரும் தினமும் சண்டை போடுவார்கள் என்றது. அந்த ஒரு தருணத்தில் அந்த குழந்தை தனது பெற்றோர்களுக்கு ஞான தாய் தகப்பன் ஆனது என்பதை உணர்ந்தேன்.
பாரம்பரிய திருச்சபைகளில் திருமுழுக்கு தொட்டி(Baptism Font) என்பது ஆலயத்தின் முகப்பில் இருக்கும்.
ஒரு சில திருச்சபைகளில் ஆல்டரில் ஞானஸ்தானம் கொடுப்பது வழக்கம்.
தெளிப்புத் திருமுழுக்கா முழுக்கு திருமுழுக்கா என்கின்ற பெரிய விவாதம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. திருச்சபைகளும் இதில் பிளவு பட்டு கிடக்கின்றன. திருமுழுக்கின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டால் இந்த சிக்கல் வராது.
திருமுழுக்கு என்பது ஒரு அனுபவம். இயேசு எவ்வாறு திருமுழுக்கு பெற்று கரை ஏறினவுடன்,
வானம் திறவுண்டு இவர் என்னுடைய நேசகுமாரன் என்று கடவுள் இயேசுவை தத்தெடுத்து உலகிற்கு அறிமுகம் செய்தாரோ, அவ்வாறே திருமுழுக்கு பெறுகின்ற ஒவ்வொருவரும் இறைமக்கள் என்கின்ற அங்கீகாரத்தை கடவுள் வழங்குகிறார்.
1. புதிய உலகினை உருவாக்கும் திருமுழுக்கு.(தொடக்க நூல் 8 : 1 - 14)
2. புதிய பாதையினை காட்டிடும் திருமுழுக்கு.(கொலோசெயர் 3 :
1 - 11)
3. புதிய பிறப்பினை வலியுறுத்தும் திருமுழுக்கு.(யோவான் 3 :
1 - 8)
மேற்கண்ட மூன்று தலைப்புகளின் வழியாக திருமுழுக்கைப் பற்றி நாம் தியானிப்போம்.
1. புதிய உலகினை உருவாக்கும் திருமுழுக்கு.(தொடக்க நூல் 8 : 1 - 14)
கொடுக்கப்பட்டுள்ள திருமறைப் பகுதியில் நோவாவின் பேழை எவ்வாறு திறக்கப்பட்டது,
அதிலிருந்து எவ்வாறு உயிர்கள் வெளிவந்தன, அவைகள் வழியாக கடவுள் எவ்வாறு புதிய உலகினை உருவாக்குகிறார் என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
நோவாவின் பேழைக்குள் இருந்த உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்வியல் முறை திருமுழுக்கிற்கு அவசியமான ஒன்றாக திருமறை சித்தரிக்கின்றது.
கடவுளின் பார்வையில் உலகம் கேடு உள்ளதாய் இருந்தது. மனுக் குடும்பம் சீர்கெட்டு கிடந்தது.
படைப்புகளும் பாழ்பட்டு கிடந்தன.
கடவுள் தம் படைப்பை சீர் செய்வதற்கு முயற்சி எடுக்கின்றார்.
தொடக்க நூலில் வருகின்ற படைப்பை போல், கடவுள் புதிய படைப்பை உருவாக்காமல், தான் படைத்தவர்களை கொண்டு புதிய உலகை சமூகத்தை உருவாக்குகின்றார்.
பேழைக்குள் உயிரினங்கள் வாழுகின்ற வாழ்வு திருமுழுக்கின் தாற்பரியத்தை எடுத்துரைக்கின்றன.
திருமுழுக்கு பெறுகின்ற ஒவ்வொருவரும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பேழைக்குள் உயிரினங்கள் வாழுகின்ற வாழ்வு முன் உதாரணமாக காட்டப்பட்டுள்ளது.
நாம் கவனிக்கப்பட வேண்டிய காரியங்கள் என்னவென்றால் பேழைக்குள் இருந்த உயிரினங்கள்,
🍎முரண்பாடுகளோடு இருந்தாலும் ஒருமைப்பாட்டில் வாழ்ந்தன. எடுத்துக்காட்டாக வல்லூரும் புறாக்களும் உறவாக வாழ்ந்தன.
🍎வலுவுள்ளவைகளும் வலுவற்றவைகளும் தங்கள் நிலைகளை மறந்து புதிய உறவுக்குள் வாழ்ந்தன. உதாரணமாக சிங்கமும் ஆடுகளும் ஒருமித்து இருந்தன.
🍎அவைகளில் பதுக்கல்களும் இல்லை, சுரண்டல்களும் இல்லை. அவரவர் தேவைகளுக்கு தக்கதாக தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொண்டன.
🍎பசியும் பட்டினியும் இல்லாத ஒரு வாழ்வு நோவாவின் பேழைக்குள் இருந்தது. அன்றன்று வேண்டிய உணவை உண்டு நலமுடன் வாழ்ந்து வந்தன.
🍎வன்முறைகளும் சூழ்ச்சிகளும் சுயநலன்களும் பேழைக்குள் அறவே இல்லாது இருந்தது. நரித்தனங்களும், வஞ்சனைகளும், ஏமாற்றுதலும் இல்லாத ஒரு வாழ்வு பேழைக்குள் இருந்தது.
🍎விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுதல், மதிப்பளித்தல், மாண்புடன் வாழுதல் மாண்புடன் வாழுதல் நோவாவின் பேழைக்குள் இருந்தது.
🍎பேழைக்குள் சமத்துவமும், கூட்டு வாழ்வும், ஒருமைப்பாடும், பிறர் நலன் பேணுதலும் தலையாய கடமையாக பண்பு நலன்களாக அவைகளுக்குள் இருந்தன.
🍎போதும் என்கின்ற நிலை வாழ்வு, பேழைக்குள் இருந்த உயிரினங்களின் அடிப்படை குணங்களாக மாறி இருந்தன.
🍎கடவுளைச் சார்ந்தும், கடவுளின் வழிநடத்துதலிலும் அவைகள் நெறியுடன் வாழ்ந்தன. அவைகளின் ஆன்மீகம் வியப்புக்குரியது.
திருமுழுக்கு பெறுகின்றவர்களும் பெற்றவர்களும்,
நோவாவின் பேழைக்குள் எப்படி ஒரு புதிய உலகை கடவுள் அமைத்திருந்தாரோ, அப்படிப்பட்ட
உலகை உருவாக்குவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடு வாழுதல் அவசியமாகும் அதுவே இறைப்பற்றாகும்,
அதுவே இறைவனுக்கு செலுத்துகின்ற திருக்கொடையாகும்.
நோவாவின் பேழைக்கு வெளியே நீர் வாழ் உயிரினங்கள், கடவுளின் தண்டனையிலிருந்து தப்பி பிழைத்தன.
ஒரு வகையில் அவர்களுக்கு மழை நீர் ஆற்றலை தந்தது,
சுதந்திரமாக வாழ்வதற்கு வழி வகுத்தன, திரளாகப் பெருகின,
மனிதர்களின் வரம்பற்ற சுரண்டல்களுக்கு விலக்கி வைக்கப்பட்டிருந்தன.
நீர் வாழ் உயிரினங்கள் எவ்வாறு சுதந்திரமாக,
விடுதலை உணர்வோடு, அச்சமற்று
, வாழ்ந்தனவோ, அப்படிப்பட்ட உலகினை உருவாக்குவதற்கு திருமுழுக்கின் மூலமாக கடவுள் அழைக்கின்றார் என்ற உணர்வு ஒவ்வொருவர் மனதிலும் எழவேண்டும்.
திருமறைப் பகுதி தருகின்ற மற்றுமொரு அழுத்தம் என்னவென்றால், திருமுழுக்கு
பெற்றவர்கள் எவ்வாறு உலகில் வாழ வேண்டும் என்பதை இரண்டு நிகழ்வுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
நோவா பேழைக்குள் இருந்து இரண்டு பறவைகளை வெளியே விடுகின்றார்.
ஒன்று காகம் மற்றொன்று புறா. இந்த இரண்டு உயிரினங்களும் திருமுழுக்கு பெறுகின்றவர்கள் சமுதாயத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளை சுட்டிக் காட்டுகிறது.
கடவுள் புதிய உலகை உண்டாக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளில் இந்த இரண்டு பறவைகளும் கடவுளுக்கு துணை நிற்கின்றன.
உலகில் திருமுழுக்கு பெற்றவர்கள் காகம் போல பணி செய்ய வேண்டும், மற்றொன்று புறாக்களைப் போல வாழ வேண்டும்.
கடும் மழை, புயல், வெள்ளம் உலகில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடும் மழை வெள்ளம் இவற்றின் காரணமாக ஆங்காங்கே செத்துக் கிடந்த உயிரினங்கள்,
அழுக்குகள், துர்நாற்றங்கள்... போன்றவைகளை, காகம் தனக்கு உணவாக்கிக் கொண்டு கடவுளின் புதிய உலகினை உருவாக்கும் முயற்சிக்கு தூய்மை பணியாளராக கடவுளோடு துணை நின்றது காகம்.
திருமுழுக்குப் பெறுகின்ற ஒவ்வொருவரும் நாட்டில் நடக்கும் அவலங்களையும், அநீதிகளையும், அழுக்குகளையும்,
துர்நாற்றங்களையும் தங்கள் வாழ்வின் வழியாக,
பணிகள் வழியாக, தொலைநோக்கு சிந்தையோடு சுத்தம் செய்திட தங்களை அர்ப்பணித்தல் வேண்டும் என்பதை காகம் தன் செயல்பாடுகள் வழியே சுட்டிக்காட்டுகிறது.
கடவுளின் புதிய உலகினை உருவாக்கும் செய்தி தொடர்பாளராக( Messenger) புறா தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. புறா கொண்டு வந்த இளம் தளிர்கள் நோவாவின் பேழைக்குள் இருந்தவைகளுக்கு நம்பிக்கையின் செய்தியாக, நற்செய்தியாளராக தன்னை உருவாக்கிக் கொண்டது.
மொத்தத்தில் திருமுழுக்கு பெறுகின்ற பெற்ற ஒவ்வொருவரும் காகத்தினைப் போன்று, புதிய உலகினை படைப்பதற்கு கடவுளின் கருவியாக சமூக அவலங்களை, அழுக்குகளை, சீர்கேடுகளை சுத்தம் செய்வதற்கு முன்வர வேண்டும்.
மற்றொன்று புறாக்களைப் போல நற்செய்தியாளர்களாக உருவெடுத்து, நற்செய்தி பணியினை உலகமெங்கும் சென்று பறைசாற்ற வேண்டும்.
திருமுழுக்கு இத்தகைய தன்மைகளை தன்னகத்தே கொண்டு இருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து, புதிய உலகினை படைக்கும் கடவுளோடு நம்மை இணைத்துக் கொண்டு, கடவுளின் கருவியாக பணியாளராக பணியாற்ற அர்ப்பணிப்போம்.
2. புதிய பாதையினை காட்டிடும் திருமுழுக்கு.(கொலோசெயர் 3 : 1 - 11)
பவுல் அடியார் தாம் உருவாக்கின கொலோசெயர் திருச்சபைக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகின்றார். இது ஒரு நகர திருச்சபையாகும். அவைகள் இன்றைய திருச்சபைக்கும் நல்வழி காட்டுகின்றன.
கொலோசெயர் திருச்சபை பக்தி வைராக்கியத்தில் வளர்ந்த ஒரு திருச்சபையாகும்.
ஒரு முன்மாதிரியாக வாழ்ந்த திருச்சபை குடும்பங்கள் என்றால் அது மிகையாகாது.
பவுலடியார் இந்த திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதத்தில் முதல் அத்தியாயத்தில் இதனை தெளிவுபடுத்துகின்றார்.
"கொலோசெயர் பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது:(கொலோசெயர்
1 : 2)
அப்படி என்றால் இந்த திருச்சபையில் வாழ்ந்த இறை அன்பர்கள் ஒவ்வொருவரும் பக்தியிலும், சாட்சியிலும்,
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதிலும் முன்மாதிரியாக வாழ்ந்த திருச்சமூகம் என்பதை குறிப்பிடுகின்றார்.
அதோடு மட்டுமல்ல "நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினால் கேள்விப்பட்டீர்கள். அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரவிப் பலன்தருகிறதுபோல,
உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு,
தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல்,
அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது(கொலோசெயர்
1 : 6) என்றும் அவர்களை மேலும் சிறப்புக்குரியவர்களாக சுட்டிக் காட்டுகிறார்.
இந்த திருச்சபை எவ்வாறு மீட்பின் அனுபவத்தை பெற்றது என்பதை
"முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்
(கொலோசெயர் 1 : 21) என்று வலியுறுத்தி
"நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருக்கும் படி ஆலோசனையையும் கூறுகின்றார்.(கொலோசெயர் 1 : 22)
இருப்பினும் திருச்சபை வாழ்விலே இருக்கின்ற பிரச்சனைகளையும் பவுலடியார் சுட்டிக் காட்டுகின்றார். "நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக."(கொலோசெயர்
2 : 7)
இருப்பினும் திருச்சபையில் இருக்க கூடிய முக்கிய பிரச்சனையையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார் அது யாதெனில்
"லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும்,
ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபொகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல."(கொலோசெயர் 2 : 8)
கொலோசெயர் திருச்சபையானது பக்தி வைராக்கியத்தோடு வாழ்ந்தாலும், நியாயப்பிரமாணங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் முக்கியத்துவம் தந்து, இயேசு கிறிஸ்துவின் "அன்பு கூறுங்கள்"
என்கின்ற கட்டளையை அவர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பதை இதன் வழியாக அறிந்து கொள்கிறோம்.
கொலோசெயர் திருச்சபையானது விருத்தசேதனத்தை முறையாக பெற்றிருந்தார்கள்,
திருமுழுக்கையும் முறையாக பெற்றிருந்தார்கள் எனினும் அவைகள் அவர்களின் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது பவுல் அடியாரின் குற்றச்சாட்டாக உள்ளது .
அல்லாமலும்,
நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.(கொலோசெயர்
2 :
11)
ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும்,
அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.(கொலோசெயர் 2 : 12)
நீங்கள் பெற்ற விருத்தசேதனமும்
"திருமுழுக்கும்" நியாயப்பிரமாண சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல மாறாக இயேசு கிறிஸ்துவின் அன்பை நிறைவேற்றுவதற்காகவே என்ற புரிந்து கொள்ளுதலை அவர்கள் உணர வேண்டும் என்று பவுல் அடியார் வலியுறுத்தி கூறுகின்றார்.
கொலோசெயர் திருச்சபை "மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து:
தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைக்கு உட்படுகிறதென்ன(கொலோசெயர்
2 : 21) கேள்வியையும் எழுப்புகின்றார்.
பவுல் அடியார் எழுப்புகின்ற கேள்வியை உற்று நோக்குவோம் என்று சொன்னால், கொலோசெயர் திருச்சபை அன்பர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது.
கொலோசெயர் திருச்சபை இயேசு கிறிஸ்துவினால் மீட்க பட்டு இருந்தாலும், திருமுழுக்கின் அனுபவத்தைப் பெற்றிருந்தாலும், அவர்கள் நியாயப்பிரமான சட்டத்தை கடைப்பிடிப்பதில் மட்டுமே கவனமாக இருந்தார்கள்.
நியாயப்பிரமாண சட்டம் சொல்லுகின்ற
"தொடாதே , ருசி பாராதே, தீண்டாதே" என்ற கற்பனைகளை கடைப்பிடித்து தங்களை பக்திக்குரியவர்களாக நியாயப் பிரமாண சட்டத்திற்கு உண்மையுள்ளவர்களாக தங்களை காட்டிக் கொண்டார்கள்.
இயேசுவின் கட்டளைகளையும் கற்பனைகளையும் அவர்கள் துறந்து, நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்
என்பதை பவுலடியார் கண்டுகொள்கின்றார்.
"தொடாதே
, ருசி பாராதே, தீண்டாதே"(கொலோ
2 : 21) என்கின்ற சட்டம் "தூய்மை - தீட்டு கருத்துகளை தாங்கிப் பிடிக்கின்ற சட்டமாகும்.
தீண்டாமையை கடைப்பிடித்து வாழ நிர்பந்திக்கின்ற சட்டமாகும்.
கொலோசெயர் திருச்சபை "தொடாதே , ருசி பாராதே , தீண்டாதே " என்ற நியாயப்பிரமாண சட்டத்திற்கு தங்களை உட்படுத்திக்கொண்டு, மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டு, தங்களை உயர்ந்தவர்களாகவும் பக்திக்குரியவர்களாகவும், மற்றவர்களை பாவிகளாகவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்தியதை பவுலடியார் குறிப்பிடுகின்றார்.
மேலும் இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான ஆராதனையையும்,
மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது (கொலோசெயர் 2 : 23) என்பதை ஆணித்தரமாக தமது திருச்சபைக்கு பவுலடியார் குறிப்பிடுகின்றார்.
திருமுழுக்கின் மூலமாக இயேசு கிறிஸ்துவில் இணைக்கப்பட்ட நீங்கள், இயேசு கிறிஸ்து காண்பித்த முன்மாதிரிகளை கடைப்பிடித்து வாழ்வதே சிறப்புக்குரிய ஒன்றாகும் என்பதை பவுலடியார் சுட்டிக் காட்டுகிறார்.
எப்படி எனில் நியாயப்பிரமான சட்டம் "தொடாதே" என்று சொல்லுகிறது, ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பெரும்பாடு உள்ள பெண்ணைத் தொடும்படியாக அனுமதித்தார். தொடுதலின் மூலமாக அவர்களின் வாழ்வில் அற்புதத்தை சுவைக்கவும் செய்தார்.
தொழு நோயாளிகளை தொடக்கூடாது என்று நியாயப்பிரமான சட்டம் சொல்கிறது ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
"தொட்டு குணமாக்கினார் வாழ்வளித்தார்".
ஆயக்காரர்களும் பாவிகளும் பிற இனத்தார்களும் தீட்டானவர்கள் என்று நியாய பிரமாணச் சட்டம் அவர்களை ஒதுக்கி வைத்தது. இயேசு கிறிஸ்து அவர்களோடு உடன் பந்தி அமர்ந்து அவர்களின் உணவை ருசித்தார், அவர்களும் ஆண்டவரின் அன்பை ருசி பார்க்கும்படி வழிவகை செய்தார்.
ஊருக்கு புறம்பே கல்லறையில் வசித்த
"லேகியோனை" தீண்டாதே என்று சொல்லி அவரை ஒதுக்கி வைத்தது நியாயப்பிரமாணச் சட்டம்,
ஆனால் இயேசு கிறிஸ்து அவரை தீண்டி தூண்டி அவரை நற்செய்தியாளராக, அருட்பனியராக, திருத்தொண்டராக உருவாக்கினார்.
திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் சிந்தையை பெற்றவர்களாக,
இயேசுவின் அடிச்சுவட்டில், ஒரு புதிய பாதையில் பயணிக்க பவுலடியார் கொலோசெயர் திருச்சபையை வழிநடத்துகின்றார்.
சமூகத்திலிருந்து தங்களை உயர்ந்தவர்கள் என்று விலக்கி கொள்ளாமல், கடவுளின் பார்வையில் அனைவரும் சமமானவர்கள்,
ஆண்டான் - அடிமை இல்லை, ஏழை
- பணக்காரன் இல்லை, யூதர் என்றும் - சமாரியர் என்றும் இல்லை, ஆண் என்றும்
- பெண் என்றும் இல்லை என்கின்ற சமத்துவ நெறியில் வாழ்வதே திருமுழுக்கு பெற்றவர்களின் வாழ்வியல் ஆகும் என பவுலடியார் சுட்டிக் காட்டுகின்றார்.(கொலோசெயர்
3 : 11)
இதை பவுலடியார் வேறு விதத்தில் கூறுகிறார் எப்படி என்றால்
"பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்."(கொலோசெயர்
3 : 2)
திருமுழுக்கு பெற்ற திருச்சபை அன்பர்கள் மேலானவைகளை நாட வேண்டும், இயேசுவின் புதிய பாதையில் எடுத்து வைத்து பின் தொடர வேண்டும்,
இயேசுவின் வாழ்வியல் முறைகளை தங்கள் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.
அப்படி வாழ்வதே சான்றான வாழ்வு அதுவே திருமுழுக்கு, விருத்தசேதனம் பெற்றதின் மாபெரும் அடையாளமாகும்.
திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும்
"தொடாதே, ருசி பாராதே,
தீண்டாதே" என்ற நியாயப்பிரமாண சட்டத்திற்கு அல்லது தீண்டாமை கொடுமை சட்டத்திற்கு உட்படுவோம் என்று சொன்னால், திருமுழுக்கு பெற்றும் பயனில்லை, திருச்சபையாக வாழ்ந்தும் பயனில்லை என்பதே பவுல் அடியாரின் திட்டவட்டமான கருத்தாகும்.
திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் இயேசுவின் நெறியில் வாழ்ந்து, சமத்துவ உலகை உருவாக்குவது தான், சமூக நீதியை காப்பது தான், அன்புறவால் வாழ்வதுதான் இயேசு கிறிஸ்து விரும்பும் சான்றான வாழ்க்கையாகும்.
அப்படிப்பட்ட சான்றான வாழ்வு வாழாதோர் பக்திக்குரியவர்களாக தங்களை காட்டியிருந்தாலும்,
திருச்சபையில் அங்கத்தினர்களாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் இயேசுவின் புதிய பாதையில் சமத்துவ உலகை உண்டாக்கும் நெறியில் வாழ்ந்து திருமுழுக்கு என்னும் உயர்ந்த பிறப்பிற்கு சான்றாக வாழ்வோம்.
3. புதிய பிறப்பினை வலியுறுத்தும் திருமுழுக்கு.(யோவான் 3 : 1 - 8)
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் ஒருபுறம் இருக்க,
இயேசு கிறிஸ்துவின் வாழ்வியல் முறைகளின் தாக்கத்தினால் அவரைப் பின்பற்றியவர்கள் ஏராளமானோர் இருந்திருந்தார்கள் என்பதை திருமறைக் காட்டுகிறது.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பரிசேயராக வாழ்ந்து வந்தார். அவர் பெயர் நிக்கோதேமூ. அவர் பரிசேயராக வாழ்ந்திருந்தும் யூதருடைய முறைமைகளுக்கும் நியாயப்பிரமாண சட்டங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் ஒரு முற்போக்கு வாதியாக வாழ்ந்து வந்தார்.
அவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் சந்தித்து உரையாடுகின்ற உரையாடலில் இயேசு கிறிஸ்து வாழ்வியலின் நோக்கத்தை தெளிவு படுத்துகின்றார்.
அவர் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்,
ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.(யோவான்
3 : 2)
நிக்கோதேமு இயேசு கிறிஸ்துவிடம் நீர் கடவுளின் மைந்தர் என்றும் கடவுள் உம்மோடு இருக்கிறார் எனவே நீர் இப்படிப்பட்ட வல்லமையான செயல்களை செய்கிறீர்கள் என்று கூறுகின்றார்.
இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக:
ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.(யோவான் 3 : 3)
அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான்.(யோவான் 3 : 4)
இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்(யோவான்
3 : 5) என்று கூறினார்.
அதோடு மட்டுமில்லாமல் மறுபடியும் பிறப்பு என்பது எப்படிப்பட்டது,
எத்தகைய தன்மையுடையது
என்பதையும் இயேசு கிறிஸ்து அவருக்கு விளக்கி கூறுகின்றார்.
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது,
அதின் சத்தத்தைக் கேட்கிறாய்,
ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும்,
இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது:
ஆவியினாலும் பிறந்தவனெவனோ
அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.(யோவான் 3 : 8)
இவைகளை கூறின பின்பதாக இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த மக்களுக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார் என்பதையும் யோவான் ஆக்கியுடன் பதிவு செய்கின்றார்.
அப்படி என்றால் திருமுழுக்கு பெறுவதில் நோக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நிக்கொதேமு அவர்களிடம் கூறினவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மறுபடியும் பிறத்தல் என்பது திருமுழுக்கு பெற்றவர்களின் அனுபவமாக இருக்க வேண்டும். அது பழைய பிறப்பான ஒன்றல்ல அது புதிய வாழ்க்கைக்கான முதல் துவக்கம் என்பதை திருமறை காட்டுகின்றது.
காற்று வித்தியாசங்கள் பார்ப்பதில்லை,
அவைகள் எல்லா தெருக்களிலும் பயணிக்கின்றன, நிறம் மொழி சமயம் சாதி இனம் பார்த்து செயல்படுவதில்லை.
திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் இத்தகைய பிறப்பை பெற வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் ஆவல் ஆகும்.
காற்றுக்கு உருவமில்லை ஆனால் அதன் செயல்பாடு அனைவருக்கும் உரியதாக இருக்கிறது. அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு உரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
திருமுழுக்கு பெறுகின்ற ஒவ்வொருவரும் புற அடையாளங்களை வைத்து, புற தோற்றங்களை வைத்து உறவு கொள்ளாமல் காற்றைப் போல உறவு கொள்ள வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் ஆழமான போதனையாகும்.
முழுக்குமுனிவர் யோவானிடம் திருமுழுக்கு பெற வந்தவர்கள் பெரும்பாலும் யூதர்கள் தான். ஆனால் அவர் திருமுழுக்கு கொடுக்கும் பொழுது திரளான மக்களும், ஆயக்காரர்களும், போர்ச்சேவகர்களும் பெற வரும்பொழுது அவர்களிடம் கூறுகின்ற வார்த்தைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
"விரியன் பாம்பு குட்டிகளே"
என்று அவர்களை அழைக்கின்றார்.
அப்படி என்றால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அந்த ஒரு வரியில் வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
திருமுழுக்குப் பெற வந்தவர்கள் யோவானின் வார்த்தைகளை கேட்டு கோபம் அடையவில்லை மாறாக
"நாங்கள் என்ன செய்ய வேண்டும்"
என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்.(லூக்கா
3: 10,12,14)
முழுக்கு முனிவர் யோவான் தண்டிடம் திருமுழுக்குப் பெற வருகின்றவர்களை புதிய வாழ்க்கை முறைக்கு நேராக திருப்புகின்றார்.
திருமுழுக்கின் மூலம் பழைய பிறப்பை ஒழித்துவிட்டு புதிய பிறப்பிற்கு நேராக, புதிய வாழ்க்கைக்கு நேராக, புதிய பாதைக்கு நேராக அவர்களை மடை மாற்றுகின்றார்.
இதை மாற்றி சொல்வது என்று சொன்னால் திருமுழுக்கு முனிவர் யோவான் "திருமுழுக்கை
சமூக மாற்றத்திற்கான அடையாளமாக,
சமூக நீதிக்கான வழியாக
, சமத்துவ வாழ்வின் நெறிமுறைகளாக மாற்றி அமைக்கின்றார்.
முழுக்கு முனிவர் யோவான் தான் கொடுத்த திருமுழுக்கின் வழியாக யூத சமூகத்தில் மாபெரும் புரட்சிக்கு வித்திடுகின்றார்.
அது நீதி நேர்மை நியாயம் சார்ந்த ஒன்றாக அமைந்தது என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இயேசு கிறிஸ்து கொடுக்கின்ற திருமுழுக்கு,
தன் அடையாளங்களைத் துறந்து,
சுய நலன்களை வெறுத்து,
பொது நலனில் அக்கறை கொண்டு, வெளிப்படையான வாழ்வு வாழ்வதே திருமுழுக்கின் மேன்மை என்பதை வலியுறுத்துகின்றார்.
பழைய பிறப்பு என்பது சாதிய தர்மங்களை உயர்த்தி பிடித்தது, இன வேறுபாடுகளை தூக்கிப் பிடித்தது,
பதுக்கலுக்கும் சுரண்டலுக்கும் வழி வகுத்தது,
மனித மாண்பை சிதைத்தது,
படிநிலைகளை கட்டமைத்தது, வன்முறைக்கு வித்திட்டது, சமயத்தின் பெயரால் சமூகம் பிளவு பட வைத்தது.
இயேசு கிறிஸ்து கொடுக்கின்ற திருமுழுக்கு, முன் வைக்கின்ற திருமுழுக்கு முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும்.
அது புதிய பிறப்பிற்கு நம்மை வழிநடத்துகின்றது.
இயேசு கிறிஸ்து முன்மொழிகின்ற திருமுழுக்கு அனைவரையும் இறை மக்களாக,
இறைபணியாளர்களாக, கடவுளின் சொந்தங்களாக,
இறை ஆட்சிக்குரியவர்களாக மாற்றுகிறது.
இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு அதிகாரங்களுக்கும், அத்துமீறல்களுக்கும், ஆணவப் போக்குகளுக்கும் முற்றிலும் எதிரான ஒன்றாகும்.
அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், மனித மாண்பு,
சமத்துவ வாழ்வு படிநிலைகள் அற்ற மனிதம்,
ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூகம்,
பகிர்வு... போன்றவைகளை முன்வைக்கின்ற திருமுழுக்கே இயேசு கிறிஸ்து முன் வைப்பதாகும்..
நிக்கோதேமுவை போல பாடுபடுவதற்கு தயங்கி அஞ்சி இரவு நேரங்களில் இயேசுவை சந்தித்து வாழுகின்ற வாழ்க்கை அல்லாமல் பாடுகளை ஏற்கவும், பாடுபடவும், துன்புறவும், சிலுவை சுமக்கவும் தயங்காமல் தன்னை அதற்கென்று ஒப்படைப்பது தான் திருமுழுக்கு பெற்றவர்களின் பண்பு நலன்கள் என்பதை இயேசு கிறிஸ்து சுட்டிக் காட்டுகின்றார்.
திருமுழுக்கு பெற்ற, பெறுகின்ற, பெறப் போகின்ற ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் சிந்தையை அணிந்தவர்களாக, இயேசு கிறிஸ்து விரும்பும் புதிய பிறப்பை திருமுழுக்கின் வழியாக பெற்றுக்கொண்டு சான்றாக வாழ்வதின் மூலமாகத்தான் நமது வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறும்.
திருமுழுக்கு நம்மை மறுபடி பிறக்க அழைக்கின்றது.
அந்த அழைப்பை மனதார ஏற்று மறுபடி பிறந்தவர்களாக இறை ஆட்சிக்குள் தங்களை இணைத்துக் கொள்ள அர்ப்பணிப்போம்.
# நிறைவாக:
திருமுழுக்கின் போது பாடப்படுகின்ற பாடல்களில் மிக முக்கியமான பாடல்
"ஞானஸ்நான மா ஞானத்திரவியமே..."
எனும் பாடலாகும். அந்தப் பாடலின் இரண்டாம் சரணம் மிகவும் முக்கியமான சரணமாகும்.
இந்தப் பாடலை பலமுறை பாடி இருக்கிறோம் ஆனால் பொருள் உணர்ந்து பாடி இருக்கிறோமா என்பது கேள்விக்குறிதான். ஒரு முறை இந்த பாடலின் வரிகளை கூர்ந்து கவனிப்போம்.
சரணங்கள்
2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவே
சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை – ஞான
"சின்னவர் பெரியவர்கள்.." என்பதின் அர்த்தம் நம் அனைவருக்கும் தெரியும் சிறியவர்கள் பெரியவர்கள் இருவரையும் திருமுழுக்கு ஒன்றாக இணைக்கிறது.
அடுத்த வரி மிகவும் முக்கியமான வரிகள் ஆகும்.
"சீரியர்கள் பூரியர்கள்.."
என்பதின் அர்த்தம் மிகவும் ஆழம் பொதிந்தவயாகும்.
சீரியர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்று பொருள் பூரியர்கள் என்றால் தாழ்ந்தவர்கள் என்று பொருள்.
தங்களை உயர்குடிகளாக காட்டிக் கொள்கின்றவர்களையும் இழிவாக நடத்தப்படுகின்ற மக்களையும்,
திருமுழுக்கு ஒன்றாக இணைக்கிறது என்கின்ற பொருளை இந்த பாடல் ஆசிரியர் பாடுகின்ற ஒவ்வொருவருக்கும் தன் வரிகளால் கற்றுக் கொடுக்கிறார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் திருமுழுக்கு கொடுக்கும் பொழுது
, திருச்சபை மக்களிடம் கேட்கின்ற ஒரு கேள்வி,
"இந்த குழந்தைக்கு இடறல் உண்டாக்காத படி திருச்சபையாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒழுங்காக முன்மாதிரிகளாக நடத்துவீர்களா?" என்ற கேள்விக்கு திருச்சபை
"ஆம்" என்று பதில் சொல்லுவார்கள் சொல்லியிருக்கின்றோம்.
நாம் சொல்லிய வார்த்தைகளுக்கு நியாய தீர்ப்பு நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துவோம்.
திருமுழுக்குப் பெறுகின்ற ஒவ்வொருவரையும் கடவுள் தம்முடைய மகனாக, மகளாக, மக்களாக ஏற்றுக்கொண்டு உலகிற்கு இவர் என்னுடைய நேசகுமாரன்,
குமாரத்தி என்று அறிமுகம் செய்து வைக்கின்றார்.
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். அவர் மனதார ஏற்றுக் கொள்கின்ற மக்களை நாமும் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் நாம் பெற்ற திருமுழுக்கு ஒரு சடங்காச்சாரமே என்பதையும் கருத்தில் கொள்வோம்.
திருமுழுக்கு என்பது இறை ஆட்சிக்குள் நுழைகின்ற நுழைவு வாயில் என்பதை நினைவில் கொள்வோம். இயேசு கிறிஸ்து விரும்பும் திருமுழுக்கின் வழியாக இறை ஆட்சியின் அங்கத்தினர்களாக நம்மை மாற்றிக் கொள்வோம்.
யாரெல்லாம் கடவுளின் நேசகுமாரனாக நேச குமாரத்திகளாக இருக்கிறார்கள் என்பதை இனம் கண்டு கொண்டு, அவர்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வோம் அதுவே நாம் பெற்ற திருமுழுக்கிற்கு சான்றாக அமையும்.
திருமுழுக்கில் ஒன்றிணைவோம், ஓர் குடும்பமாக வாழ்வோம், இறைவழி சொந்தங்களாக,
இறை ஆட்சியின் பங்காளர்களாக நம்மை மாற்றிக் கொள்வோம்.
இறை ஆசி உங்களோடு இருப்பதாக....
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️
Comments
Post a Comment