நற்செய்தியை கொண்டாடுதல்
திருமறைப் பகுதிகள்
யாத்திராகமம்
2 : 1 – 10
அப்போஸ்தலர்
9 : 10 – 18
லூக்கா 1
: 46 – 56
உட்புகும் முன்
கொண்டாட்டங்கள் சமூகத்தை உயிரோட்டம் உள்ளதாக வைத்திருக்கிறது. பிறந்தநாள் திருமண நாள் கொண்டாட்டங்கள் குடும்பங்களின் உறவுகளை பலப்படுத்துகிறது. அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார் என்ற நற்செய்தி துன்ப சூழலிலும் அதை கொண்டாடி மகிழ்கின்றது. விளையாட்டுப் போட்டிகளின் கொண்டாட்டம் இளைஞர்களை துடிப்புள்ளவர்களாக மாற்றுகிறது. பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் சமூகத்தில் இணக்கத்தை உண்டாக்குகிறது. கொண்டாட்டங்கள் தனிமனித வாழ்விலும், குடும்பத்திலும், சமூகத்திலும், திருச்சபையிலும் இரண்டற கலந்தே இருக்கின்றன...
நற்செய்தியின் விளைவு கொண்டாட்டங்களில் நிறைவு பெறுகிறது. குழந்தை பிறந்திருக்கிறது என்ற நற்செய்தி, வேலை கிடைத்துவிட்டது என்ற நற்செய்தி, பள்ளிக்கு விடுமுறை என்ற நற்செய்தி, வெற்றி பெற்று விட்டார் என்ற நற்செய்தி.. போன்ற அனைத்தும் மாபெரும் கொண்டாட்டங்களாக கொண்டாடப்படுகின்றது...
இஸ்ரவேல்
மக்கள் செங்கடலை கடந்த பின்பதாக ஒரு மாபெரும் கொண்டாட்டம் ஆடல் பாடலோடு
நடைபெற்றது. தாவீது கோலியத்தை வென்ற பின்பதாக நடைபெற்ற கொண்டாட்டம் சமூகத்தின்
விளிம்பு வரைக்கும் சென்றது. இயேசு கிறிஸ்து ஆலயத்தை சுத்தம் செய்த பொழுது ஏழை
எளிய மக்களின் கொண்டாட்டம் விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. குருத்தோலை பவனியின் கொண்டாட்டம் சாமானிய
மக்களின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாகவே அமைந்தது. இயேசுவின் உயிர்ப்பு
இயேசுவின் இயக்கத்திற்கு மாபெரும் கொண்டாட்டமாகவே அமைந்து வருகிறது...
திருமறையில் பல கொண்டாட்டங்கள் நமக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவைகள் நற்செய்தியின் விளைவாக அமைந்தவை என்பது நமக்கு தெரியும். ஒவ்வொரு கொண்டாட்டங்களின் ஊடாக கடவுளின் ஆற்றலையும், கடவுளின் செயல்பாடுகளையும் அதனால் உண்டான தாக்கங்களையும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இன்று நாம் தியானிக்க போகும் திருமறைப் பகுதியிலும் அப்படிப்பட்ட நற்செய்தியின் கொண்டாட்டங்களை நமக்கு எடுத்துரைக்கின்றன.
1. ஆற்றங்கரையில் ஒரு கொண்டாட்டம் - தொப்புள் கொடி உறவோடு கொண்டாடியது....(யாத்திராகமம் 2 : 1 – 10)
எகிப்தில் இஸ்ரவேல் மக்கள் பட்ட கொடும் துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பண்பாட்டில் வளர்ந்திருந்த இந்த சமூகம் கொடுங்கோல் ஆட்சியால் சீரழிக்கப்பட்டது, சிதறடிக்கப்பட்டது. மக்கள் செங்கல் சூலையில் கட்டாய பணியமர்த்தப்பட்டார்கள். இதன் உச்சகட்டம் ஆண் குழந்தைகள் அனைவரும் கருவறுக்கப்பட்டார்கள். அழுகையும், புலம்பலும், ஒப்பாரியும் இஸ்ரேல் மக்களின் அன்றாட வாழ்வாகி போனது.
இஸ்ரவேல் மக்களின் கூக்குரலும், கண்ணீரும், வேதனைகளும் இறைவனை எட்டியது இறைவன் விடுவிக்க சித்தம் கொண்டது நம் அனைவருக்கும் தெரிந்த வரலாறு...
ஆண் குழந்தைகளை காப்பாற்றுவதில் எபிரேய மருத்துவச்சிகளின் பங்கு மிகப் பெரியது. அரச கட்டளையை மீறி தங்கள் இனம் அளிக்கப்படுவதை தடுப்பதில், காப்பாற்றுவதில், வீரத்தோடு முனைப்போடு அவர்கள் செயல்பட்டார்கள். இச்செயலால் தங்களுக்கு மரணமே உண்டானாலும் அதைக் குறித்து சற்றும் கவலைப்படாமல் இனம் அழிக்கப்படுவதை அவர்கள் தீவிரமாக எதிர்த்தார்கள்.
இந்த கொடுமையான காலகட்டத்தில் லேவியின் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதை மூன்று மாதம் படாத பாடுபட்டு ஒளித்து வைக்கிறார்கள். அதற்கு மேல் அந்த குழந்தையை காப்பாற்ற முடியாது என்று எண்ணி, நதியில் நாணல் பெட்டி ஒன்று செய்து அதில் அந்த ஆண் குழந்தையை வைத்து, நதியில்அதில் மிதக்க விட்டு இந்த குழந்தை எப்படியாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதன் தாய் எட்டி நின்று அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்...
பார்வோனின் மகள் மற்றும் அவளுடைய நண்பர்கள் ஆற்றில் குளிக்க வரும் பொழுது, இந்த பெட்டியை கண்டு அதில் குழந்தை இருப்பதை பார்த்து அதை எடுக்கின்றார்கள். அது எபிரேய குழந்தை என்பதை அவள் கண்டுகொண்டு, அதை வளர்த்துவதற்கு எபிரேய பெண்களில் ஒருவரை அழைத்து வருமாறு கட்டளை பிறப்பிக்கின்றார்கள். இறுதியில் அந்த குழந்தையின் தாயே அந்த குழந்தையை வளர்ப்பதற்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள். குழந்தை அந்த தாயிடம் ஒப்படைக்கப்படுகின்றது...
தன் தொப்புள் கொடி உறவான ஆண் மகவை ஆற்றில் மிதக்க விட்டு, கண்ணீரோடும், கவலையோடும், துக்கத்தோடும், கடவுளே என் குழந்தையை எப்படியாவது காப்பாற்று என்ற தாயின் கதறலும், விண்ணப்பமும் விண்ணை எட்டியது என்றே சொல்லலாம்...
ஆற்றில் மிதக்க விட்ட அந்த குழந்தையை பார்வோனின் மகள் கண்டு அதை எடுத்தார்கள் என்பதை பார்த்ததும், ஒருவித பயமும், நடுக்கமும் அந்தப் பெண்ணை ஆட்கொண்டு, என்ன ஆகுமோ என்று பயந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி, பார்வோனின் மகள் அந்த குழந்தையை தத்தெடுத்தார்கள் என்ற நற்செய்தி தாயின் வாழ்வில் ஒரு கொண்டாட்டத்தை நிச்சயம் கொண்டு வந்திருக்கும்.
தன் குழந்தைக்கு ஒரு மறுவாழ்வு தன் எதிரிகளிடமிருந்து கடவுள் அமைத்துக் கொடுத்துள்ளார் என்பதை நினைத்து ஒரு ஆனந்த கொண்டாட்டம் மனதிற்குள் நிச்சயம் உருவாகியிருக்கும். மேலும் தன் குழந்தையை தானே வளர்த்துவதற்கு இறைவன் துணை செய்தார் என்று உணரும் பொழுது அந்த கொண்டாட்டம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொண்டாட்டமாகவே அமைந்திருக்கும்.
ஆற்றங்கரையில் மனப்போராட்டத்தோடு இருந்த தாயின் விண்ணப்பத்தை இறைவன் ஏற்று அவளுக்கு ஒரு நற்செய்தியை தன் எதிரிகளிடமிருந்து ஆண்டவர் உருவாக்கி, எந்த இடத்தில் இருந்து அழிவிற்கான கரு உருவானதோ அதே இடத்தில் தொப்புள் கொடி உறவான ஆண் குழந்தையை வாழ்வதற்கு வழிவகை ஏற்பாடு செய்த இறைவனால் ஒரு ஆனந்த கொண்டாட்டம் ஆற்றங்கரையில் உண்டானது.
அறுபட்ட தொப்புள் கொடி உறவை, கடவுள் மீண்டும் இணைத்து தொப்புள் கொடி உறவை பலப்படுத்தி, தாயும் சேயும் இணைந்து கொண்டாடியதின் விளைவாக உண்டான தாயின் ஆனந்த கண்ணீர் கடவுளுக்கு செலுத்தின மிகச் சிறந்த பொருத்தனை காணிக்கை என்றே சொல்லலாம்.
கடவுளுக்கு நாமும் தொப்புள்கொடி உறவு
தான். விண்ணப்பத்தை கேட்பவர் மட்டுமல்ல இறைவன் மன்றாட்டுக்கு பதில் தருபவர்.
சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை வழங்குகின்ற கடவுள், நற்செய்தியும் தந்து
நட்பணிகளையும் செய்து ஒடுக்கப்பட்டோர்
வாழ்வில் வசந்த காற்று வீசுவதற்கு என்றும் துணை நிற்கின்றார்.
ஒடுக்கப்பட்டோரின் வாழ்வு விடுதலையின் வாழ்வாக, கொண்டாட்டமாக அமைப்பதில் இறைவன்
என்றும் முன் நிற்கின்றார், முந்தி செயல்படுகின்றார்...
2. மலை நாட்டில் ஒரு கொண்டாட்டம் – ஆனந்த பண்பாடி கொண்டாடியது... (லூக்கா 1 : 46 – 56)
கடவுள் எப்போதும்
செயல்படுகின்றவராகவே இருக்கிறார். வரலாற்றில் கடவுளின் செயல்பாடுகள் எப்போதும்
விடுதலையையும், கொண்டாட்டத்தையும் கொண்டு
வருவதாகவே அமைந்திருக்கின்றது.
கடவுள் இஸ்ரவேல் மக்களின் வாழ்வில் விடுதலையை கொணரும் இடமாக எருசலேமை அல்ல மாறாக பெத்தலகேமை தெரிந்து கொண்டார் என்பது இருளில் இருந்த மக்களுக்கு பெரிய கொண்டாட்டமாகவே அன்று அமைந்திருந்தது...
மரியாளின் பயணம் மலை நாட்டிற்கு
சென்று எலிசபெத்தை கண்டு அவர்களை வாழ்த்தினார்கள் எலிசபெத்தும் மரியாளை
வாழ்த்தினார்கள். இரு தலைமுறைகள் ஒருவரோடு ஒருவர் இணங்கி, இணைந்து, இயங்கி,
இறைவனின் இயக்கமாக மாறினார்கள்.
இரு பெண்களின் கொண்டாட்டத்தில்
வயிற்றில் இருந்த “கரு” துள்ளி மகிழ்ந்தது. சொல்லப்போனால்
இருவரின் கொண்டாட்டத்தை காட்டிலும் கருவறையில் நடந்த கொண்டாட்டம் திருமறையில்
அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மரியாள் மற்றும் எலிசபெத் ஆகிய இருவரின்
கொண்டாட்டத்தில் வயிற்றில் இருந்த கருவும் தன்னை இணைத்துக் கொண்டது அகமகிழ்ந்தது.
உலக மீட்புக்கு கடவுள் தன்னை தெரிந்து கொண்டார் என்று மரியாளின் கொண்டாட்டமும் கடவுளுக்கு வழியை ஆயத்தப்படுத்த தன்னை தெரிந்து கொண்டார் என்ற எலிசபெத்தின் கொண்டாட்டமும் வரலாற்றில் மாபெரும் கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்தில் கருவில் இருந்த குழந்தையும் இணைந்தது ஒரு புதிய வரலாறு.
இந்த கொண்டாட்டத்தின் விளைவாக அழகான ஒரு பாடல் உருவாகிறது. அந்தப் பாடல் ஒரு புரட்சியின் கீதமாக அமைகிறது. மரியாள் பண்ணமைத்து தன் கொண்டாட்டத்தை பாடி கொண்டாடுகின்றார். அந்தப் பாடலின் “கரு” தன் வழியாக பிறக்கும் குழந்தைக்கு கருவாக, கருப்பொருளாக அமைந்தது என்றே சொல்லலாம்.
மலைநாட்டில் மரியாளின் கொண்டாட்டம் ஆனந்த கொண்டாட்டம். தலைமுறை இடைவெளியை கலைந்து மூத்த குடிமக்களும், இளைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் ஒன்றாக இணைந்து கொண்டாடினார்கள். கடவுளின் நற்செய்தியால் இந்த கொண்டாட்டம் உண்டானது. இந்த கொண்டாட்டம் அடுத்த தலைமுறைக்கு நற்செய்தியை பறைசாற்றியது.
மரியாளின் பாடல் வெறும் பாடல் அல்ல, வருகின்ற இறைவன் என்ன செய்யப் போகிறார், என்ன செய்ய இருக்கிறார், என்னென்ன மாற்றங்கள் நிகழும், எந்தெந்த வகைகளில் புரட்சிகள் உண்டாகும், சமூக நீதி எவ்வாறு இருக்கும், சமத்துவம் எவ்வாறு மலரும், இந்த உலகம் இறையரசின் முன் சுவையாக எப்படி இருக்கும் என்பதை பட்டியலிட்டது இந்த பாடல்.
இறைவன் நற்செய்தியை Jiமரியாளுக்கு தந்தார். மரியாள் அந்த நற்செய்தியை பண்ணமைத்து பாடி கொண்டாடினார். மரியாளின் அந்தப் பாடல் மலை முகடுகளில் பட்டு எதிரொலித்து, இருளில் இருக்கும் மக்களுக்கு அதன் நற்செய்தியை தந்தது...
மரியாளின் கொண்டாட்டத்தில் விளைந்த இந்த பாடல், நிச்சயம் அது ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய கீதம் ஆகவே அமைந்திருந்தது எனலாம். நாமும் நற்செய்தியின் கொண்டாட்டத்தை அர்த்தமுள்ள வகையில் பண்ணமைத்து பாடி கொண்டாடுவோம், அந்தப் பாடல் இன்னொரு நாசரேத் ஊர் (Nazareth Menifesto) பிரகடனமாக அமைந்திடட்டும்..
நேர் தெருவில் ஒரு கொண்டாட்டம் – வழிபாடு அமைத்துக் கொண்டாடியது...(அப்போஸ்தலர் 9 : 10 – 18)
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு
பின்பதாக இயேசுவின் இயக்கம் வேகமாக வளர்ந்தது. அதே சமயத்தில் இயேசுவின் அடியார்களை
துன்புறுத்துவதும் வேகமாக பரவியது. ஆதி
திருச்சபையில் துன்பங்களும் பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே
இருந்தது. ரத்த சாட்சிகளும் உருவாகிக் கொண்டே இருந்தார்கள்.
அடக்குமுறைகளாலும், வன்முறைகளாலும் இயேசுவின் இயக்கத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று முனைப்போடு யூத சமயம் செயல்பட்டது. யூத சமய தலைவர்களும் பிற்போக்கு வாதிகளும் ஒன்றாக இணைந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர். அச்சுறுத்தல்களும், சிறைபிடித்தலும், சித்திரவதைகளும் தொடர்ந்தாலும் இயேசுவின் அடியவர்கள் தங்கள் அர்ப்பணிப்பில், ஒப்படைப்பில், அழைப்பில், திருப்பணியில் உறுதியோடு இருந்தார்கள்.
சவுல் என்பவர் இத்தகைய செயலில் முன்னின்று சபைகளையும், இறை மக்களையும் பாழாக்குவதில், துன்பப்படுத்துவதில் மிகவும் முனைப்போடு, தீவிரமாக செயல்பட்டார். அவன் இதற்கான அதிகாரத்தைப் பெற்று மேலும் இறை மக்களையும், சபைகளை துன்பப்படுத்துவதற்கு அவன் புறப்பட்டு செல்லும் பொழுது இறை சந்திப்பு நிகழ்கிறது.
நீ துன்பப்படுத்துகிற கிறிஸ்து நானே என்று இயேசு சவுலோடு உரையாடுகின்றார், தன்னை காண்பிக்கின்றார். இறுதியில் பார்வையை அற்றவராக அவர் மாற்றம் அடைகின்றார்.
இதுவரையில் பார்வையற்றவர்கள் பார்வை பெறுவதே வரலாறு. ஆனால் தமஸ்க்கு வழியில் எங்க பார்வை உடைய சவுல் பார்வையற்றவராக மாற்றம் பெறுகின்றார் இதுவும் ஒரு அற்புதம் தான். இந்த அற்புதம் ஒரு வித்தியாசமான ஒன்று.
இதுவரை அழிவை கொண்டாடிய சவுலுக்கு தன் கொண்டாட்டத்தின் வீரியம் என்ன ? தன் கொண்டாட்டத்தின் விளைவுகள் என்ன? தன் கொண்டாட்டத்தால் உண்டான அழிவுகள் என்ன? என்பதை கண்மூடி சிந்திக்க வைத்தது. தன் செயலை சீர்தூக்கிப் பார்க்க வைத்தது. இது புதிய பார்வைக்கு வழி நடத்தியது. அது புதிய பாதைக்கும் வழிகாட்டியது.
இந்த சூழ்நிலையில் சவுல் வாழ்வில் மாபெரும் மாற்றம் உண்டாகிறது. தன் பாதை எவ்வளவு தவறானது என்பதை உணர வைக்கின்றது. இனி துன்புறுத்துவது அல்ல துன்புறுவது என்ற பாதையை தெரிந்தெடுக்க வைத்தது.
அனனியா என்னும் பேர் கொண்ட இறை பணியாளர் கடவுளால் வழிநடத்தப்பட்டு சவுலை சந்தித்து தன் கையை அவன் மேல் வைத்து மன்றாடி சவுலுக்கு இழந்த பார்வையை திரும்ப வழங்குகின்றார். பார்வையைப் பெற்ற சவுல் ஒரு புதிய மனிதனாக உருமாற்றம் அடைகின்றார். அந்த மாற்றம் அழிவுக்கு நேராயிருந்த வாழ்வை திருப்பி வாழ்வுக்கு நேராக திசை மாற்றியது. அடிமைப்படுத்துவதற்கு துணையாக இருந்த வாழ்வை மடை திருப்பி விடுதலையின் கருவியாக உருவாக்கியது.
சவுல் பார்வை பெற்ற அந்த தருணம் அவர் வாழ்வில் பெற்றுக்கொண்ட மிகச்சிறந்த தருணம். இழந்தவர் பெறும் பொழுது நடைபெறுகின்ற ஒன்று கொண்டாட்டம். அந்த கொண்டாட்டம் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.
சவுல் தன் வாழ்க்கையில் மீண்டும் கிடைத்த புதிய பார்வையும், புதிய தரிசனமும், புதிய பாதையும், புதிய சித்தாந்தமும், புதிய செயல்பாட்டுக்கான முன்னெடுப்பும் எங்கு துவங்கியது என்றால் அவரின் திருமுழுக்கில் துவங்கியது.
திருமுழுக்கு என்பது வழிபாட்டின் ஒரு அங்கம். வழிபாடு என்பது வாழ்வின் வழி. வழிபடுதல் என்பது வாழ்க்கை முறை. சவுலின் புதிய வாழ்க்கை திருமுழுக்கு என்னும் வழிபாட்டை கொண்டாட வைத்தது.
அந்த கொண்டாட்டம் என்பது தனி சிறப்பானது. இதுவரையில் சவுல் கொண்டாடிய கொண்டாட்டங்கள் அனைத்தும் அதிகாரத்தை பிரியப்படுத்துவதாக அமைந்தது. சமய இன மோதல்களை உருவாக்குகின்ற கொண்டாட்டமாக அமைந்திருந்தது. அந்தக் கொண்டாட்டத்தில் எத்தனையோ மக்களின் கண்ணீரும், ரத்தமும்,,சதையும் கலந்திருந்தது.
யூதரான சவுல் நிச்சயம் திருமுழுக்கை ஏற்கனவே பெற்றிருப்பார். அந்தத் திருமுழுக்கு அவரில் நேர்மறையான மாற்றத்தை காட்டிலும் எதிர்மறையான மாற்றத்தை கொண்டு வந்திருந்தது, அழிவுக்கு வித்திட்டது. ஆனால் பெற்ற புதிய திருமுழுக்கு பவுலின் வாழ்வில் புதிய தாக்கத்தை கொண்டு வந்தது அது அழிவுக்கு நேராக அல்ல வாழ்வுக்கு நேராக மாற்றியது.
இந்த புதிய திருமுழுக்கை பவுல் வெறும் சடங்காச்சாரமாக பார்க்காமல் உண்மை வழிபாடாக கருத்தில் கொண்டு தன் புதிய பணியை திருமுழுக்கின் கொண்டாட்டத்தோடு பவுல் தொடங்கினார். அந்த கொண்டாட்டம் திருச்சபையின் கொண்டாட்டமாக மாறியது. அது இயேசுவின் இயக்கத்தின் கொண்டாட்டமாக உருவெடுத்தது.
ஒவ்வொரு வழிபாடும் வெறும் சடங்காச்சாரமாக பின்பற்றப்படாமல் அது வழியாக, வாழ்வாக, வாய்மையாக, கொண்டாட்டமாக உருவெடுக்க பவுல் நம்மை அழைக்கின்றார். நேர் தெருவில் பவுல் கொண்டாடிய கொண்டாட்டத்தோடு நம்மையும் இணைத்துக் கொண்டு இறையாட்சிக்கான பயணத்தை தொடர்ந்திடுவோம்...
நிறைவாக
கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த கொண்டாட்டங்கள் நற்செய்தியாக இருக்கிறதா? துற் செய்தியாக இருக்கிறதா? என்பதை கருத்தில் கொள்வோம்...
இயேசு பிறப்பின் கொண்டாட்டங்கள் திருச்சபையில் நற்செய்தியின் அடையாளங்களாக இருக்கிறதா என்பதை உரசி பார்ப்போம்....
கொண்டாட்டங்களின் பல வடிவங்கள், பாடல்கள், நடனங்கள், அசைவுகள்இன்று நம்மை முகம் சுளிக்க வைக்கின்றதா? அவைகளில் சாட்சி இருக்கிறதா என்பதை உணர்ந்து பார்த்து கொண்டாடுவோம்...
கிறிஸ்து பிறப்பில் நடந்த கொண்டாட்டங்கள் அனைத்தும்
மக்களை பார்வையாளர்களாக அல்ல பங்கேற்பாளர்களாகவே உருவாக்கியது. அந்த கொண்டாட்டத்தில் அன்பும், மகிழ்ச்சியும், எதிர்கால நிச்சயமும் கலந்தே இருந்தது...
ஆற்றங்கறையில் ஒரு கொண்டாட்டம் - தொப்புள் கொடி உறவோடு இணைந்து கொண்டாடியது, அங்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மலைநாட்டில் ஒரு கொண்டாட்டம் – அது மூன்று தலைமுறைகளை ஒன்றாக இணைத்தது. அந்தக் கொண்டாட்டத்தில் தாயின் கருவில் இருந்த குழந்தையும் துள்ளி மகிழ்ந்து கொண்டாடியது.
அது சமூகப் புரட்சிக்கு வித்திட்டது..
நேர் தெருவில் ஒரு கொண்டாட்டம் – அது புதிய பார்வையோடு, திருமுழுக்கு என்னும் வழிபாட்டை கொண்டாடி மகிழ்ந்தது. அந்தக் கொண்டாட்டம் இயேசு கிறிஸ்துவின் இயக்கம் வலுப்பெறுவதற்கு துணையாக நின்றது...
நற்செய்தியை நலமுடன் கொண்டாடுவோம்...
நற்செய்தியை பண்ணமைத்து பாடி
கொண்டாடுவோம்...
நற்செய்தியை வழிபாட்டின் கூறுகள்
ஆக்கிக் கொண்டாடுவோம்...
இறை ஆசி என்றும் உங்களோடு
இருப்பதாக...
நட்புடன்
உங்கள்
Rev.
Augusty Gnana Gandhi
Ariyalur
Pastorate
Trichy-Tanjore
Diocese
Comments
Post a Comment