"CHRISTMAS : A NEW DAWN"- Rev. Augusty Gnana Gandhi.


 Painting: Rev. W. Jebasingh Samuvel, CSI Jaffna Diocese. 

கிறிஸ்து பிறப்பு : ஒரு புதிய விடியல்


 #திருமறைப் பகுதிகள்:

ஏசாயா 9 : 1 - 7

கலாத்தியர் 4 : 1 - 7

லூக்கா 2 : 1 - 14

 #உட்புகும் முன்:

வானில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு, "யூதருக்கு ராஜா" பிறந்திருக்கிறார் என்பதை அறிந்து, அவரைக் காண பயணம் மேற்கொண்ட ஞானியர்கள் எப்பொழுது இரவு வரும் என்று ஒவ்வொரு நாளும் காத்திருந்தார்கள், ஏனென்றால் அவர்களின் பயணம் முழுவதும் இரவிலேயே நடந்தது. என்றைக்கு பிறந்த இயேசு கிறிஸ்துவை கண்டார்களோ அன்று அவர்களுக்கு ஒரு புதிய விடியல் கிடைத்தது, புதிய வழியும் தெரிந்தது, புது வாழ்வு மலர்ந்தது.

அன்று வானில் தோன்றிய நட்சத்திரம் உலகத்திற்கு ஒரு புதிய "விடிவெள்ளியை" காட்டியது. அது இருளில் இருந்து தவிக்கும் அத்தனை மக்களுக்கும் விடியலின் "நம்பிக்கையின் வெளிச்சத்தை" தந்தது. ஒட்டு மொத்தத்தில் விடியலின் "புது யுகத்தை" அது அறிமுகப்படுத்தியது.

பொதுவாக சாமானிய மக்களிடம் இருந்தது தான் புரட்சிக்கான விதை உருவாகும்,  போராட்டம் உருவெடுக்கும். அது ஒரு புதிய விடியலுக்கான வழித்தடங்களை உருவாக்கும், மறுமலர்ச்சிக்கு வித்திடும், மறுவாழ்வுக்கு வழிவகுக்கும். அது மானுட வரலாற்றில் புதிய விடுதலை வரலாற்றை வடிவமைக்கும்.

 அந்த வகையில் பெத்தலகேம் என்னும் சிற்றூரிலிருந்து,  மரியாள் எனும் ஏழை இளம் பெண் வழியாக, மாட்டுக் கொட்டகையிலிருந்து  ஒரு புதிய விடியல் உருவானது. இருக்கின்றவராகவே இருக்கிறேன் என்ற கடவுள், இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் பயணத்தை முன்னின்று நடத்திய இறைவன் மீண்டும் ஒரு புதிய விடியலுக்கான விடுதலைப் பயணத்தை பெத்தலகேமில் இருந்து துவக்கினார்.

 பொதுவாக

விடியலைக் கொணரும்

சூரியன்

ஒவ்வொருநாளும்       

விண்ணிலிருந்து தோன்றும்               

ஈராயிரம்

ஆண்டுகளுக்கு முன்பதாக                                              

ஒரு புதிய விடியல்                               

மண்ணிலிருந்துதோன்றினது           

மாட்டுத் தொழுவில் உதித்தது            

மரியின் துணையால் வந்தது      

மேய்ப்பர்கள் வழியாய் கிடைத்தது                               

மனுவுரு வடிவில் வந்தது.      

 

இயேசு கிறிஸ்துவின், பிறப்பால் கிடைக்கப்பட்ட அந்த புதிய விடுதலையைக் கொண்டாடுவோம், விடியலை உலகமெங்கும் எடுத்துச் செல்லுவோம்,  விடுதலைக்கான கீதங்களை முழங்கிடுவோம், விடுதலை வீரரின் வழியிலே தொடர்ந்து பயணிப்போம். அர்த்தமுள்ள வழியில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவோம்.

 1. ராஜா பிறந்திருக்கிறார் - இது அரச குடும்ப விழா : இறை ஆட்சி மக்களாய் கொண்டாடுவோம்...(ஏசாயா 9 : 1 - 7)

 ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக கடவுள் அருளிய வார்த்தை ஒட்டுமொத்த மானுட மக்களுக்கும் அது விடியலை தருகிறது. ஆனால் தீர்க்கர் வாழ்ந்த நாட்களில் கடவுளின் வாக்கு பிரத்தியேகமாக இருளில் இருக்கின்ற மக்களுக்கு விடியலை தரும் செய்தியாக அமைந்தது.

இருளிலே நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.(9 : 2) இவர்கள் யார் என்று இதற்கு முந்தின வசனத்தில் தீர்க்கர் அழகாக குறிப்பிடுகின்றார்.

அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை, ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய "கலிலேயாவாகிய" அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.(9 : 1)

யூதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட, தீட்டானவர்கள் என்று இழிவாக கருதி புறந்தள்ளப்பட்ட, பாவிகள் என்று முத்திரை குத்தப்பட்டு யூதர்களால் ஈனப் படுத்தப்பட்ட புறவினத்து மக்கள் வாழுகின்ற "கலிலேயா" மக்களுக்கு விடியல் தரும் செய்தியாக அமைந்தது.  நம்பிக்கையின் சுடராக அது உதித்தது. விடுதலைக்கான வேராக அது திகழ்ந்தது.

ஞானியர்கள் நட்சத்திரத்தைக் கண்டு, அதனால் வழிநடத்தப்பட்டு வந்தவர்கள் ஏரோது அரண்மனையைக் கண்டு, "யூதருக்கு ராஜா எங்கே பிறந்திருக்கிறார்?" என்று கேட்பதை இதன் பின்னணியில் நாம் புரிந்து கொள்ளலாம்.

ராஜா பிறந்திருக்கிறார் என்ற செய்தியை ஞானியர்கள் அரண்மனையில் பதிவு செய்தார்கள். அரண்மனை அதிகாரிகளும் வேதபாரகர்களும் அந்த செய்தியை “ஆம்” என்று உறுதி செய்தார்கள். நீங்கள் சென்று கண்டு பணிந்து கொண்டு வாருங்கள் பின்பு நான் போய் பணிந்து கொள்கிறேன் என்று அரசரும் கிறிஸ்து அரசர் பிறந்துள்ளதை ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்பதாக நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்ட ஞானியர்கள் பிறந்திருக்கின்ற கிறிஸ்து அரசரை பெத்தலகேமில் கண்டு தரிசித்தார்கள்.

பிறந்திருக்கின்ற கிறிஸ்து அரசர் எப்படிப்பட்டவர் என்பதை ஏசாயா விரிவாக எடுத்துரைக்கின்றார்.

"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.(9 : 6)

பிறந்திருக்கின்ற கிறிஸ்து அரசர் "தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்"(9 : 7) என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக புதிய விடியலை கலிலேயா மக்களுக்கும், புறவினத்து மக்களுக்கும் தந்த கிறிஸ்து அரசர், இன்றும் இருளில் இருக்கின்ற,  புறந்தள்ளப்பட்ட , ஒடுக்குதலில் அல்லல் படுகின்ற  அத்தனை மக்களுக்கும் விடியல் தருகின்ற ஆண்டவராக பிறந்திருக்கின்றார் என்பதை இந்த கிறிஸ்து பிறப்பு நாளில் நாம் நினைவு கூற அழைக்கப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்து அரசரால் சமூக, பொருளாதார, அரசியல், சாதிய ஒடுக்குதலில் இருந்து விடுதலைப் பெற்ற, விடியலையடைந்த நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்து பிறப்பு விழாவை அரசு குடும்ப விழாவாக  கருதி கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறோம். இறை ஆட்சிக்குரிய மக்களாகிய அனைவரும் இணைந்து மகிழ்வோடு கொண்டாடப்பட வேண்டிய விழா கிறிஸ்து பிறப்பு விழா.

இந்த கிறிஸ்து அரசர் எளியோரின் தோழனாய், வறியவர்களின் உறவாய், ஒடுக்கப்பட்டோரின் குரலாய் பிறந்திருக்கின்றார் என்பதை கருத்தில் கொண்டவர்களாய், அரியணையை துறந்து நம் உள்ளங்களில் வசிக்கும் கிறிஸ்து அரசரை கொண்டாடி மகிழ்வோம்.

இறை ஆட்சியின் மக்கள் என்னும் உரிமையை கிறிஸ்து அரசர் வழியாக பெற்றிருக்கிறோம் என்ற உணர்வோடும், உறுதியோடும், இறை ஆட்சியில் உறவுகளோடும் இணைந்து கொண்டாடுவோம்.

2. ⁠ மீட்பர் பிறந்திருக்கிறார் - இது விடுதலைப் பெருவிழா : இறை மாட்சிவுற கொண்டாடுவோம்...(லூக்கா 2 : 1 - 14)

வயல்வெளியில் தங்கி இருந்த மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்த வேளையில், கர்த்தருடைய தூதர்கள் அவர்களை நோக்கி: "பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.(2 : 10) 

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.(2 : 12)

தூதர்கள் பயன்படுத்திய வார்த்தை ஆழமான அர்த்தம் கொண்டது என்பதை நாம் அறிவோம். கிறிஸ்து எனும் "இரட்சகர்"பிறந்திருக்கிறார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இடையர்களுக்கு சொல்லப்பட்ட அந்த செய்தி உங்களுக்கு "விடுதலையாளர் பிறந்திருக்கின்றார், உங்களை விடுதிக்கின்றவர்" பிறந்திருக்கிறார் என்பதாகும்..

ஒரு குழந்தை பிறந்தால், அதனைப் பார்க்கப்போவது அனைவரும் செய்கின்ற செயல், ஆனால் இடையர்கள் செய்தியை கேட்ட உடனே  புறப்பட்டு சென்றார்கள். ஏனென்றால் பிறந்திருக்கும் குழந்தை தங்களுக்கும், தங்களைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அவர் விடுதலை தருகின்றவர், அந்த மீட்பரை காண வேண்டும், அவரோடு நம்மை ஐக்கிய படுத்தி கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு அவர்கள் பிறந்திருக்கும் மீட்ப்பரோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த இடையர்கள் ஆண்டவரின் பிறப்பால் அவர்கள் நற்செய்தியாளர்களாக மாற்றப்பட்டார்கள். அதோடு மட்டுமல்ல பிறந்திருக்கும் விடுதலையாளரை உலகிற்கு அறிமுகம் செய்தார்கள். பிறந்திருக்கும் மீட்பருக்கும் தங்களுக்கும் உண்டான புதிய உறவை, மகிழ்ச்சியோடு அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த இடையர்கள் பயப்படாதிருங்கள் என்ற செய்தி அவர்களின் அச்சத்தை போக்கினதோடு மாத்திரமல்ல அவர்கள் துணிந்து ஊருக்குள் செல்லவும், யாரெல்லாம் அச்சத்தில் இருக்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் நமக்கு ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார், விடியல் துவங்கி விட்டது என்ற நற்செய்தியை அறிவிக்கும் இறைவனின் பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.

மனிதர்களை துதி பாடிய இடையர்கள், இப்பொழுது பிறந்திருக்கும் விடுதலையாளரை, அந்த மீட்பரை, கிறிஸ்து எனும் இரட்சகரை துதித்தார்கள் என்பது புதிய செய்தி.  அது கிறிஸ்து பிறப்பினால் இடையர்கள் பெற்றுக் கொண்ட விடுதலையின் அடையாளமாக நாம் உணரலாம்.

இடையர்கள் கிறிஸ்து பிறப்பை பாடி துதித்து பெருவிழாவாக கொண்டாடி இருப்பர். அவர்களின் கொண்டாட்டம் அப்படித்தான் இருந்திருக்கும் என்று புரிய முடிகிறது.

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.(2 : 14). தூதர்களின் கொண்டாட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இடையர்கள், அதே துதியோடு வீதிகளில் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

கிறிஸ்து பிறப்பு விழா வெறும் சாதாரண விழா அல்ல, அது விடுதலைப் பெருவிழா, கிறிஸ்து பிறப்பினால் விடுதலை அடைந்த ஒட்டுமொத்த மனு குலமும் குறிப்பாக இடையர்களைப் போல விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட அத்தனை மக்களும் மையத்திற்கு நம்மை அழைத்து வந்த மீட்பரைக் கொண்டாடி மகிழ வேண்டிய விழா என்பதை நினைவில் கொள்ள இந்த நாள் நம்மை வலியுறுத்துகிறது.

உன்னதத்தில் இருக்கிற கடவுள் மாட்சி பெற, நம் கொண்டாட்டங்கள் பொருள் உள்ளதாக அமைந்திடல் வேண்டும். மண்ணில் அமைதியும், மனிதர்களில் பிரியமும் எப்பொழுது உண்டாகிறதோ அப்பொழுது கிறிஸ்து பிறந்து இருக்கிறார் என்பதை உணர்ந்து ஒவ்வொரு நாளும் கிறிஸ்து பிறப்பு விழாவாக, விடுதலை பெருவிழாவாக நாம் இணைந்து மகிழ்ந்து கொண்டாடுவோம்.

3. ⁠ முதற்பேரானவர் பிறந்திருக்கிறார் - இது ஊர் திருவிழா : இறை அன்பர்களாக கொண்டாடுவோம்...(கலாத்தியர் 4 : 1 - 7)

யோசேப்பும் மரியாளும் தங்கள் முதல் பேரான குமாரனை பெற்றெடுத்து ஆண்டவருக்கு என்று ஒப்படைத்தார்கள். கடவுள் மரியாளிடமும் யோசேப்பிடமும் சொன்ன அந்த வார்த்தைகளை மனதில் கொண்டவர்களாக, இது இறைவன் தந்த பரிசு. அதை இறைவனுக்கே கொடுத்து மகிழ்ந்தார்கள்.

முன்னணையிலே பிள்ளையை கிடத்தினார்கள் என்பதை நாம் உருவகப்படுத்தி பார்க்கும் பொழுது,  அதை கடவுளுக்கென்று காணிக்கையாக படைக்கப்பட்டது போல நமக்கு தோன்றுகிறது.

குடி மதிப்பு எழுதும்படிக்கு சென்றவர்கள் எதிர்பாராத விதமாக குழந்தையைப் பெற்றெடுக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து பெத்தலகேம் ஊரில் பிறக்கிறார். தீர்க்கதரிசிகளால்  சொல்லப்பட்டது நிறைவேறினது என்றாலும், பெத்தலகேம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினால் சிறப்பிடம் பெற்றது. 

ஒரு ஊரின் அடையாளமாக ஆற்றையோ, மலையையோ, முக்கியத்துவம் வாய்ந்த நபரையோ குறிப்பிடுவது வழக்கம். இதுவரையிலும் பெத்தலகேம் அப்படிப்பட்ட சிறப்பிடம் பெறாவிட்டாலும், இயேசு கிறிஸ்து பிறந்ததினாலே பெத்தலகேம் என்னும் ஊர் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது.

பெத்லகேம் என்னும் சொல்லுக்கு அப்பத்தின் வீடு என்று பொருள். ஜீவ அப்பம் நானே, வாழ்வளிக்கும் மன்னா இயேசு அங்கு பிறந்ததினால் இன்னும் அந்த ஊர் சிறப்பிடம் பெற்றது.

நானே வழி என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அனேக மக்களுக்கு வழியாக, வாழ்வாக, வாய்மையாக உருவெடுத்ததால் அந்த ஊர் இன்னும் அதிக சிறப்பிடம் பெறுகிறது.

நாசரேத் ஊரிலிருந்து இருந்து நன்மை பிறக்குமா? என்ற இழிவாகக் கருதப்பட்ட ஊருக்கு, ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெருமை சேர்த்ததைப் போல பெத்தலகேம் என்னும் ஊரும் விடுதலை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறினது.

பெத்தலகேமில் பிறந்த இயேசு கிறிஸ்து ஊருக்கு சொந்தமானார், இறுதியில் உலகத்திற்கே சொந்தமானார். பவுலடியார் தனது கலாத்திய திருச்சபைக்கு கடிதம் எழுதும் பொழுது இந்த உறவு முறையை அழுத்தமாக குறிப்பிடுகின்றார்.

கலாத்திய திருச்சபையாகிய நீங்கள் கடவுளுக்கு புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.(4 : 6)

கடவுளை அப்பா பிதாவே என்று அழைக்கும் இந்த உறவு, ஒரு குடும்பப் பிள்ளைகள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை கோடிட்டு காண்பிக்கிறது. கடவுளை அப்பா என்று அழைக்கும் ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகள் ஆவதால் பாகுபாடுகளற்ற ஒரு குடும்பமாக திருச்சபை விளங்க வேண்டும், மேலும் பிரிவுகளோ, பேதங்களோ, பாகுபாடுகளோ இருப்பது எவ்வகைகளில் நியாயமாகும் என்றும் பவுலடியார் கேள்வி எழுப்புகின்றார்.

கடவுளை அப்பா பிதாவே என்று அழைக்கின்ற பாக்கியத்தை இறைமைந்தன் இயேசு கிறிஸ்து நமக்கு வழங்கி இருக்கின்றார். இந்த உறவு இறைவன் பிறப்பினால் உண்டான உறவு. அவர் வாழ்வு மனுக் குடும்பத்திற்கு கிடைத்த மகுடம்.

இந்த வகையில் இயேசு கிறிஸ்து நமக்கு உறவாகின்றார்.  நம் ஊருக்கும் உறவாக்கிறார். ஒரு குடும்பமாக நாம் சேர்ந்து கிறிஸ்து பிறப்பை ஊர் திருவிழாவாக கொண்டாட இந்த பண்டிகை நம்மை அழைக்கிறது.

பெத்லகேம் என்னும் ஊருக்கு இயேசுவும் உறவானார்,? மேய்ப்பர்களும் உறவானார்கள், ஞானியர்களும் உறவானார்கள் அதேபோல நாமும் அந்த ஊருக்கு ஒரு உறவாக இயேசுவின் பிறப்பு உருவாக்கி இருக்கிறது. கிறிஸ்து பிறப்பை ஊர் திருவிழாவாக நாமும் இணைந்து கொண்டாடுவோம். உறவுகளோடு இணைந்து இருப்போம்.

இயேசு கிறிஸ்து வாழ்ந்த பொழுது யாரெல்லாம், அவரது நண்பர்களாக உறவுகளாக அற்புதங்களை ருசித்தார்களோ, அவர்களோடும் நாம் இணைந்து கொண்டாடுவோம். கிறிஸ்து பிறப்பு ஒரு ஊர் திருவிழா, இறை மக்களாக, இறை அன்பர்களாக, இறைபணியாளர்களாக மகிழ்ந்து கொண்டாடுவோம்.

நிறைவாக:

"ஏதேன் தோட்டத்து மரம்," மனுக்குலம் "வீழ்வதற்கு"துணையாகி போனது. அதற்கு மாற்றாக நம் வீட்டில் இருக்கின்ற "கிறிஸ்துமஸ் மரம்"  மனுக்குடும்பம் "வாழ்வதற்கு" அடித்தளமாக இருக்கட்டும்.

எங்கள் ஊர் திருச்சபையில் வயதான ஒரு தாயார், தனிமையிலே வசிக்கின்றவர்கள், ஒவ்வொரு திருவிருந்து வழிபாட்டுக்கு வரும்பொழுது, பட்டுச் சேலை உடுத்தி வருவார்கள், ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் நான் ஆலயம் செல்லவில்லை "என் இயேசு ராஜாவை பார்க்க போகிறேன்.." திருவிருந்துக்கு போகவில்லை "அரச விருந்துக்கு போகிறேன்..!" என்று சொன்னார்கள்.

கிறிஸ்து அவர்களில் இருப்பதை உணர்ந்தேன். கிறிஸ்துவாகவே அவர்கள் இருப்பதை புரிந்து கொண்டேன். கிறிஸ்துவுக்காகவே வாழ்வதையும் அறிந்து கொண்டேன். 

ஒரு நண்பர் என்னிடம் அலைபேசியில், ஒரு கிறிஸ்துமஸ் பட்டிமன்றத்திற்கு தலைப்பு தாருங்கள் என்று கேட்டார். நானும் ஒரு தலைப்பை சொன்னேன். அந்த தலைப்பு வேறு ஒன்றும் அல்ல

 "கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் வெளிப்படுவது...

காட்சியே!       சாட்சியே!

கிறிஸ்மஸ்

இது அரச விழா

இறை ஆட்சி மக்களாக கொண்டாடுவோம்...!

இது விடுதலைப் பெருவிழா

இறை மாட்சியுற கொண்டாடுவோம்...!

இது ஊர் திருவிழா

இறை அன்பர்களாக கொண்டாடுவோம்...!

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நட்புடன்

உங்கள்

அருட்திரு. அகஸ்டி ஞான காந்தி,

அரியலூர் சேகரம்,

திருச்சி -தஞ்சை திருமண்டலம்.

Comments