15 டிசம்பர் 2024
கட்டுக்களிலிருந்து விடுதலைப் பெறல்
யோவான் 8:31-38
• விடுதலை எனும் சொல் ‘சொட்டோரியா’ என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து எழுகின்றது. இச்சொல் அரசியல், பொருளாதார, சமூக, சமய அடிமைத்தனங்களிலிருந்து மக்கள் விடுதலைப் பெறுவதை உணர்த்துகின்றது.
• திருத்தூதுவர்பணிகள் 4:12ல் விடுதலையை அளிப்பவராக இயேசு காட்டப்படுகின்றார். இவரே விடுதலையாளராகவும் புரிந்துகொள்ளப்படுகின்றார். திருமறையில் நாம் படிக்கும்போது முதலில் இஸ்ரவேல் மக்கள் கடவுளை விடுதலையாளராகவே கண்டனர். பின்னரே அவரைப் படைப்பாளராகப் புரிந்துகொண்டதை நாம் காணலாம்.
• விடுதலை பலதரப்பட்ட நிலைகளில் இன்று மனிதனுக்கு அவசியமாகின்றது. மத்தேயு 1:21ல் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை ஆசிரியர் உணர்த்துகின்றார். இங்கு பாவம் என்பது தனிப்பட்ட பாவமல்ல சமூக ஒடுக்குமுறைகளை வலியுறுத்தி நின்றன. அக்காலத்தில் பெண்கள், சிறுவர்கள், விவசாயிகள், மீனவர்கள், விலைமாதுக்கள் நீதிச்சட்டத்தை கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால் அவர்களை பாவிகள் என்று சமூகத்தில் ஒதுக்கி வைத்திருந்தனர். இப்பேர்ப்பட்ட மக்களுக்காக ஓர் விடுதலையாளராக இங்கு இயேசு காட்டப்படுகின்றார்.
• 1 பேதுரு 2:9ல் அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியிடத்திற்கு எம்மை அழைத்தவருடைய புண்ணியங்களை நாம் அறிவிக்கும்படியாக அழைக்கப்பட்டுள்ளோம் என கூறப்படுகிறது. இங்கு விடுதல இருள் போன்ற அனுபவத்திலிருந்து ஒளியை நோக்கி வருவதை குறித்துக் காண்பிக்கின்றது. மேலும் இவ்விடுதலையை நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு எடுத்துக் கூறுவது எம்முடைய கடமையாக காணப்படுகின்றது.
• விடுதலைப்பயணம் 14:1ல் இஸ்ராயேல் மக்கள் தமது விடுதலையை அதாவது எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தாம் பெற்றுக்கொண்ட விடுதலையை நினைந்துகொள்ளும் வகையில் பாஸ்கா விழாவை அனுசரித்தனர். இது விடுதலையின் அடையாளம் பெருவிழாவாகும். இதனூடாக பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கும் பொறுப்பு இஸ்ராயேலருக்கு உணர்த்தப்பட்டது. எனினும், அதனை அவர்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை.
• விடுதலையைப் பெற்ற ஒரு சமூகம் இன்னுமொரு சமுதாயத்தை ஒடுக்கும் பணியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளுதல் அவசியமாகின்றது. இன்று விடுதலை முழு அளவில் பேசப்பட்டாலும் விடுதலைக்குள்ளும் ஓர் ஒடுக்குமுறை காணப்படுகின்றது என்பது மிகப்பெரிய கசப்பான உண்மையாகும்.
- அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
இலங்கை திருச்சபை.
Comments
Post a Comment