"DELIVERANCE FROM THE BONDAGE OF SIN- "Rev. Augusty Gnana Gandhi

 DELIVERANCE FROM THE BONDAGE OF SIN



பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல்

# திருமறைப் பகுதிகள்:

யாத்திராகமம் 14: 1 - 14

மத்தேயு 8: 1 - 17

ரோமர் 8: 1 - 7


# உட்புகும் முன்:

விடுவித்தல் (DELIVERANCE) என்பது ஏதோ ஒன்றில் இருந்து விடுபடச் செய்வது என்ற பொருளை தாங்கி நிற்கிறது. விடுவித்தல் என்பது இரண்டு நபர்கள் சார்ந்தது அல்லது இரண்டு சமூகம் சார்ந்தது. ஒன்று விடுவிப்பவர் மற்றொன்று விடுதலை பெறுபவர்.

பாவம் என்ற சொல்லாடலை மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ தவறு செய்து விட்டதை குறிப்பதாக உள்ளது. ஆனால் இதை ஆழ்ந்து கவனிக்கும் பொழுது இதன் உள்ளே பல கூறுபாடுகள் இருப்பதை நாம் அறியலாம். 

தாவீது தன் பாடலில் "பாவம்" என்ற சொல்லை மூன்று வகையில் பிரித்துக் கூறுகிறார். ஒன்று "பாவம்", அடுத்தது "மீறுதல்"  மற்றொன்று "அக்கிரமம்"(திருப்பாடல் 51). இந்த மூன்றும் இணை நிலை(parallelism) என்று சொல்வார்கள், ஆனால் இந்த மூன்றும் ஒவ்வொரு நிலையினை சுட்டிக்காட்டுகிறது. 

"மீறுதல்கள்"  என்பது உடன்படிக்கையை மீறுதல் ( Breaking the Covenant) என்பதாக புரிந்து கொள்ளலாம். "அக்கிரமம்" என்பதை துணிந்து செய்யும் அநீதியோடு (Destroying the Justice) இணைத்து புரிந்து கொள்ளலாம். "பாவம்" என்பதை தீய செயல்களோடு (Doing Evil Things) இணைத்து புரிந்து கொள்ளலாம். இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவைகள் மூன்றும் அடிமைப்படுத்தும் காரணிகளில் முதன்மையானது. 

"விடுவித்தலை" யாரோ ஒருவர் செய்தாக வேண்டும். திருமறையில் கடவுள் படைப்பாளர் மட்டுமல்ல, பண்படுத்துவர் மட்டுமல்ல, பாதுகாப்பவர் மட்டுமல்ல விடுவிக்கும் கடவுளாக, மீட்பராக, எடுத்துக்காட்டுகின்றது. "சேனைகளின் கர்த்தர்" என்பதை இந்த வகையில் நாம் புரிந்து கொள்ளலாம். 

கிறிஸ்துவ கீர்த்தனையில் "கண்டேன் என் கண்குளிர...." என்ற பாடல் நம் அனைவருக்கும் தெரிந்த பாடல்.  இந்தப் பாடலில் முத்தொழில் கர்த்தாவாம் .. என்ற வரி வருகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் என்பதை கடவுளோடு இணைத்து எழுதி இருப்பார் அதன் ஆசிரியர் ஆபிரகாம் பண்டிதர் ஐயா. அழித்தல் என்பதை "அநீதிகளை அழித்து நீதியையும், சமத்துவமின்மையை அழித்து சமத்துவத்தையும், தீமையை அழித்து நன்மையையும், ஒடுக்குபவரை அழித்து ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வளிக்கும் ஆண்டவர் என்றும் நாம் புரிந்து கொள்ள இந்த பாடல் நம்மை அழைக்கின்றது. 

இத்தகைய புரிதல்களோடு திருமறை நமக்கு காட்டும் விடுவித்தலை புரிந்து கொள்ள முயற்சிப்போம்...

1. உளவியல் சார்ந்த அணுகுமுறை - சமூக நீதியை கட்டமைக்கும் ...(யாத்திராகமம் 14: 1 - 14)

எகிப்தியரின் அதிகாரங்களும் அடக்கு முறைகளும் இஸ்ரவேல் சமூகத்தை அடிமை சமூகமாக மாறச் செய்தது. நாநூறு வருடங்கள் பல தலைமுறைகள் அடிமை சமூகமாகவே தங்களை மாற்றிக் கொண்டது. 

விடுதலைக்கான செயல்பாடுகள் நசுக்கப்பட்ட போது, இஸ்ரவேல் சமூகம் நாளடைவில் அச்சத்தோடும், நடுக்கத்தோடும், பயத்தோடும் உளவியல் ரீதியாக இந்த அடிமை வாழ்வே போதும் என்று வாழ பழகிக் கொண்டார்கள். 

எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த சமூகம் கடவுளின் மீட்பு திட்டத்தில், மோசே என்னும் "விடுதலை வீரரால்" ( Freedom Fighter) வழிநடத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. 

இஸ்ரவேல் மக்களுடைய விடுதலை வரலாற்றில் முக்கிய நகர்வு செங்கடலை கடக்கின்ற அனுபவமாகும்.

இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து வரும் வழியில் கடவுளின் மாபெரும் செயல்களைக் கண்டு உளவியல் ரீதியாக கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று நம்பிக்கையின் சமூகமாக விடுதலை வாழ்வுக்கு நேராக தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.

கடவுளின் திட்டப்படி அவர்கள்  மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்குகிறார்கள்(14:2).

செங்கடல் ஒருபுறம், பார்வோனின் சேனைகள் மறுபுறம், இடையில் இஸ்ரவேல் மக்கள். கடவுளின் வழிநடத்துதல் படி தான் நாம் வந்திருக்கிறோம் என்பதை இஸ்ரவேல் சமூகம் மறந்து போனது.

பார்வோனின் சேனைகளும்,  படைபலமும்,  அவர்களின் வேகமும் இஸ்ரவேல் மக்களை கதி கலங்க வைத்தது.  நாநூறு வருடங்களாக எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரவேல் மக்களின் மனதில், எகிப்தியரின் கொடுங்கோல் ஆட்சி முறையும், அவர்களின் அடக்குமுறையும், வன்முறையாட்டங்களும் அவர்கள் மனதில் வந்து போயின.

பின் தொடர்ந்து வரும் பார்வோன் மற்றும் எகிப்தியரின் ராணுவத்தைக் கண்டு இஸ்ரவேல் சமூகம் செய்வதறியாது திகைத்து நின்றது. இஸ்ரவேல் மக்களின் அச்சமும் பயமும் அவர்களை நிலைகுலைய செய்து, மோசேக்கு எதிராக அணி திரள வைத்தது. 

மோசேவுக்கு எதிராக இஸ்ரவேல் மக்கள் முறுமுறுக்கின்றார்கள், அவரை குற்றம் சாட்டுகிறார்கள், ஏன் எங்களை விடுவித்தாய் என்று அவர்கள் தர்க்கம் செய்வதையும் பார்க்கும்போது அவர்கள் உளவியல் ரீதியாக நாநூறு வருடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம். 

அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன ?( 14:11)

நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள். (14:12)

இஸ்ரவேல் மக்கள் மோசேயிடம் பயன்படுத்திய இந்த வார்த்தைகள் அவர்கள் உடல் ரீதியாகவும், உளம் சார்ந்தும் எவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

மோசே இஸ்ரவேல் சமூகத்தை முதலில் உளவியல் ரீதியாக விடுவிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டவராக,  "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்". நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள். நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்(14:13) என்றார். 

மோசே பயன்படுத்திய இந்த வார்த்தைகள் அவர்களை உளவியல் ரீதியாக சிந்திக்க வைத்தது, கடவுளின் செயல்பாட்டை காணவும் வைத்தது. கடவுளின் செயல்பாடும் மோசேயின் முன்னெடுப்பும் இஸ்ரவேல் மக்களை உளவியல் ரீதியாக அச்சத்தில் இருந்து விடுவிக்க வைத்தது. 

கடவுள் இஸ்ரவேல் மக்களை செங்கடல் வழியாக வழி நடத்தி அவர்களை பார்வோனிடமிருந்து விடுவித்தார். பார்வோனின் படைகளை கடலில் ஆழ்த்தி அவர்களை சாகடித்தார். 

கடவுள் ஏன் பார்வோனின், படைகளை கடலில் மூழ்கடித்து சாகடித்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

நாநூறு வருடங்கள் அடிமையாகவே வாழ்ந்து பழகிவிட்ட இஸ்ரவேல் சமூகத்திற்கு அச்சமும்,  பயமும், நடுக்கமும் அவர்களை விடுதலை வாழ்வுக்கு நேராக வழி நடத்தாது என்பதை அறிந்த கடவுள், எகிப்தியரின் படைகளை அழித்து, உளவியல் ரீதியாக இஸ்ரவேலராகிய உங்களுக்கு இனி எதிர்ப்புகளும் இல்லை, எதிரிகளும் இல்லை, உங்களை ஒடுக்குபவரும்  இல்லை, அடக்குவோரும் இல்லை என்பதை இஸ்ரவேலரின் கண்கள் காணும்படியாக, உணரும்படியாக ஆண்டவர் இத்தகைய செயலை  செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

செங்கடலை கடந்த பின்பு இஸ்ரவேல் மக்கள் உளவியல் ரீதியாக விடுதலை பெற்று மோசேயும்,  மிரியாமும், இஸ்ரவேல் மக்களும் இணைந்து பாடுகின்ற வெற்றியின் பாடல் உணர்வுப்பூர்வமானது, உளவியல் ரீதியாக அவர்கள் பெற்ற விடுதலையையும் அது வெளிப்படுத்துகிறது.

மோசேயின் அணுகுமுறை உளவியல் சார்ந்த அணுகுமுறை. சமூக நீதி என்பது சமூகத்தில் ஒடுக்குபவர் - ஒடுக்கப்பட்டோர் என்ற நிலையில்லாத சமூக அமைப்பாகும். அதை மோசே வனாந்தரத்தில், செங்கடல் நிகழ்வின் மூலம் கடவுள் துணை கொண்டு இஸ்ரவேல் மக்களிடம் அதைச் செய்து நிறைவேற்றினார். 

உளவியல் சார்ந்த விடுதலை சமூகத்தை சமூக நீதியினால் கட்டமைக்கும். மோசே அவர்களின் இத்தகைய அணுகுமுறை இஸ்ரவேல் மக்களை முழு விடுதலைக்கு நேராக வழி நடத்தியது.

2. ⁠ கருத்தியல் சார்ந்த செயல்பாடு - சமத்துவ வாழ்வை உறுதி செய்யும்...(மத்தேயு 8: 1 - 17) (IDEALOGICAL APPROACH)

இயேசு கிறிஸ்துவின் அருளுரைகளும், செயல்பாடுகளும், அற்புதங்களும் , அடையாளங்களும் இஸ்ரவேல் சமூகத்தில் கருத்தியல் ரீதியாக மாற்றங்களை உருவாக்கியது.

நற்செய்தி பகுதியில் இயேசு கிறிஸ்து மூன்று அற்புதங்களை நிகழ்த்துகின்றார். மூன்று நபர்கள் அற்புதங்களை பெறுகின்றார்கள். ஒருவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், மற்றொருவர் கடைநிலைப் பணியாளர், மூன்றாவது நபர் ஒரு பெண். 

இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் இஸ்ரேல் சமூகத்தில் தொழுநோயாளிகள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டார்கள்,  நடத்தப்பட்டார்கள், புறந்தள்ளப்பட்டார்கள், பாளையத்திற்கு புறம்பே ஒதுக்கி வைக்கப்பட்டார்கள், சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்கள். 

தொழுநோய் பாவத்தின் விளைவாக, கடவுளின் தண்டனையாக வருகிறது என்ற கருத்தியலை இஸ்ரவேல் சமூகம் உள்வாங்கி அதை சமயத்தோடு இணைத்து நடைமுறைப்படுத்தி வந்தது.

லேவியராகமச் சட்டப்படி அவர்கள் கிழிந்த ஆடை உடுத்தியிருக்க வேண்டும், தலையை மூடாது இருக்க வேண்டும், முகத்தில் தாடி வளர்த்திருக்க வேண்டும், தங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்,  வரும்போது தீட்டு தீட்டு என்று சத்தமிட்டு கொண்டே வரவேண்டும், பாளையத்திற்கு புறம்பே அவர்கள் வசிக்க வேண்டும் ( லேவி 14, 15) என்ற நியமங்கள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் சமூகத்தில் புரையோடிப்போன இந்த அடிமைப்படுத்தும் கருத்தியலை அற்புதங்களாலும் தம்முடைய செயல்களாலும்  முறியடித்தார். 

தொழுநோயை வைத்து சமூகத்தில் தூய்மையானவர்கள் - தீட்டானவர்கள் என்ற கருத்தியலை சமூகத்தில் புகுத்தி அதை சமயத்தோடு இணைத்து, சமூகத்தை பிளவுபடுத்தி சமயவாதிகள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தொட்டாலே தீட்டு என்ற கருத்தியலை இயேசு கிறிஸ்து இங்கு உடைத்தெறிந்தார். தம்மிடம் வந்த தொழு நோயினால் பாதிக்கப்பட்டவரிடம் ஆண்டவர் செய்த முதல் செயல் அவரைத் தொட்டார்.  அவர்கள் இறைவனின் அன்புக்குரியவர்கள். இவர்களுக்காகவே இறைவன் வந்துள்ளார் என்பதை தம்முடைய செயல்கள் வழியாக ஆண்டவர் சமூகத்திற்கு கற்றுக் கொடுக்கின்றார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த நபருக்கு செய்த  அற்புதம் என்பது வெறும் அற்புதங்கள் மட்டுமல்ல  அடையாளங்கள். வந்துவிட்ட மேசியாவின் அடையாளங்களாக இவைகள் காணப்படுகின்றன. 

தூய்மை - தீட்டு என்ற கருத்தியலோடு  பின்னிப்பிணைந்த இஸ்ரவேல் சமயத்தையும்,  சமூகத்தையும் ஆண்டவர் தமது செயலின் வழியாக மாற்றி அமைக்கின்றார். 

நோய்கள் என்பது சாபத்தின் விளைவாக வருவதல்ல, கடவுளின் கோபத்தினாலும் வருவதல்ல என்ற கருத்தியலை ஆண்டவர் தமது அற்புத செயல்களால் கட்டமைக்கின்றார். 

தொழு நோய் குணமடைந்த அவரை, நீ போய் ஆசாரியரிடம் காண்பித்து உன் காணிக்கையை செலுத்தி, வாழ்வதற்கான உரிமையை நீ மீட்டெடு என்று அவரை பணித்து அனுப்புவதை நாம் பார்க்கலாம். 

தொழுநோய் கடவுளின் சாபம் அல்ல, அவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்களும் அல்ல, தங்கள் பாவத்தினாலும் வந்ததல்ல. மாறாக அவர்கள் கடவுளின் அன்புக்குரியவர்கள், கடவுளின் அற்புதத்திற்கு சொந்தக்காரர்கள் என்ற புதிய கருத்தியலை ஆண்டவர் கட்டமைக்கின்றார்.

இந்த அற்புதத்தின் மூலமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து சமூகத்தில் புரையோடிப் போன தூய்மை- தீட்டு என்ற பிரிவினைகளை தகர்த்து சமத்துவ சமூகத்தை உருவாக்கும் கருத்தியலை  ஆண்டவர் வடிவமைக்கின்றார். 

மேலும் ஆண் - பெண் என்ற பாகுபாடு இஸ்ரவேல் சமூகத்தில் உயர்ந்து நிற்பதையும், பெண்களை இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதையும், அவர்களை மனிதர்களாகவே மதிக்கப்படாத நிலையையும், கருத்தியலையும் கண்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவின் மாமிக்கு அற்புத சுகம் தந்து, கடவுளின் பார்வையில் ஆண் - பெண் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை என்ற கருத்துகளை ஆண்டவர் விதைக்கின்றார்.

கடைநிலைப் பணியாளருடைய அற்புத சுகத்திலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமூகத்தில் நிலவிய ஆண்டான்- அடிமை எந்தக் கருத்தியலை உடைத்து கடவுளின் முன் அனைவரும் சமம் என்கின்ற புதிய கருத்தியலை ஆண்டவர் உருவாக்குகின்றார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த நாட்களில் அவர் செய்த ஒவ்வொரு அற்புதங்களும், அடையாளங்களும், செயல்களும் அடிமைப்படுத்தும் கருத்தியல்களை உடைத்து விடுதலைக்கான புதிய கருத்தியல்களை உருவாக்கின. 

ஒரு வகையில் சொல்லப்போனால் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களும், அடையாளங்களும், செயல்களும் அடிமைப்படுத்தும் கருத்தியலுக்கு எதிரான கருத்தியல் போர் என்று சொல்லலாம்.

அடிமைப்படுத்தும் கருத்தியல்களுக்கு எதிராக எதிர்க்கருத்தியலை (Counter Culture) கட்டமைப்பது காலத்தின் அவசியம் என்பதை இயேசு கிறிஸ்து உணர்ந்து, எதிர்க் கருத்தியல் யுத்தத்தை தமது செயல்களினால் செய்து சமத்துவ சமூகம் அமைவதற்கு, உருவாகுவதற்கு வழிவகைகளை செய்தார்.

இயேசு கிறிஸ்துவின் இத்தகைய கருத்தியல் ரீதியான அணுகுமுறை இஸ்ரவேல் சமூகத்தை, சமத்துவ சமூகமாக கட்டமைப்பதற்கு வழிநடத்தியது. 

இறைவன் படைத்த உலகில் படிநிலைகள் என்பது இல்லை. சமூகத்தில் காணப்படுகின்ற படிநிலைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. சமயங்கள் அதை மேலும் கட்டமைத்து வலு உள்ளதாக காட்டியது. இயேசு கிறிஸ்துவின் செயல்பாடுகள் அதை உடைத்தெறிந்து புதிய கருத்தியலை  கட்டமைத்து இறைவன் படைத்த உலகு சமத்துவமானது, சமத்துவமின்மை கடவுளுக்கு எதிரானது என்று தம் செயல்களாலும் ஆண்டவர் முழங்கினார். அதை வழி மொழியவும் செயல்படுத்தவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

3. ⁠ அறவியல் சார்ந்த சித்தாந்தம் - சமூக மாற்றத்தை உருவாக்கும்...(ரோமர் 8: 1 - 7) ( Ethical Approach)

பவுலடியார் தனது ரோமாபுரி திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதத்தில் இந்தப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும்.

மாம்சத்தின் படி நடக்கின்ற மக்கள், ஆவியின் படி நடக்கின்ற மக்கள் என்ற இரு வகையான மக்களின் வாழ்வை பவுலடியார் குறிப்பிடுகின்றார். மாம்சத்தின் படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு உண்டு. ஆவியின் படி நடக்கிற மக்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில் இருந்து அவர்கள் தப்புவிக்கப்படுவார்கள் என்று நியாயத்தீர்ப்பை பற்றி பவுலடியார் குறிப்பிடுகின்றார்.

இதை மாற்றி சொல்வோம் என்று சொன்னால்,  இந்த உலகத்திற்கு ஏற்றபடி வாழ்கின்ற மக்களுக்கு ஆண்டவர் தண்டனை தருவார், கடவுளுக்கு ஏற்றபடி வாழ்கின்ற மக்களுக்கு ஆண்டவர், அவர்களை தண்டனைத் தீர்ப்பில் இருந்து தப்ப வைப்பார் என்று பவுலடியார் தன் ரோமாபுரி திருச்சபைக்கு வலியுறுத்துகின்றார்.

இது அறம் சார்ந்த பவுலடியாரின் சிந்தனையாகும். அறம் என்பது ஒரு வாழ்வியல் முறையாகும். மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது(8 :6, 7) என்று பவுலடியார் குறிப்பிடுகின்றார். 

திருச்சபை என்பது கடவுளின் திருச்சமூகம். கடவுளைப் பின்பற்றுகிறவர்களின் கூடாரம். 

கடவுளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு. கடவுளின் பிரதிநிதிகளாக உலகத்தில் வாழ வேண்டியவர்களின் பேரியக்கம்.

திருச்சபை அங்கத்தினர்கள் கடவுளின் சாயலாக வாழ வேண்டியவர்கள். அது துறவற வாழ்வு அல்ல அற வாழ்வு. அறம் சார்ந்து கடவுளின் நோக்கத்தை புரிந்து, இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால் விடுவிக்கப்பட்ட உன்னத நிலையை அறிந்து கடவுளுக்கேற்றபடி வாழ வேண்டிய திருச்சமூகமாகும்.

அந்த வாழ்வு ஆண்டவரால் அருளப்படுகின்ற நிலையான வாழ்வாகும். அதனால் உண்டாகின்ற பலன் அமைதியும், சமாதானமும், மகிழ்ச்சியுமே.

உலகத்துக்கு ஏற்றபடி வாழ்கின்ற வாழ்க்கை அது கடவுளுக்கு பகை என்பதை பவுலடியார் அழுத்தம் திருத்தமாக தன் திருச்சபைக்கு வலியுறுத்துகின்றார். 

திருச்சபை என்பது கடவுளின் பண்பு நலன்களை, இறைவனின் செயல்பாடுகளை , இறை சிந்தையை செயல்படுத்துகின்ற உன்னதரின் திருக்கூட்டம். இதுவே கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வு. இதுதான் திருச்சபையின் அறநெறி வாழ்வு.

ரோமாபுரி திருச்சபை மக்கள் கடவுளை விட்டு விலகி, இந்த உலகத்திற்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு சிறைப்பட்டு போனதை பவுலடியார் இங்கு மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றார்.

இப்படி வாழ்வது பாவம்,  அது அடிமைத்தனத்திற்கு  வழி வகுக்கும். அந்த அடிமைத்தனம் ஆண்டவரின் தண்டனை தீர்ப்புக்கு, திருச்சபை மக்களை உள்ளாக்கும் என்று எச்சரித்து அவர்களை இந்த பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அறம் சார்ந்து போதிக்கின்றார்.

கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பது எவைகளோ அவைகள் அனைத்தும் பாவம் என்பதை உணர்ந்து, அந்த அடிமைத்தனத்திற்குள் சென்று விடாமல் நம்மை விடுதலையாக்கிக் கொள்ள பவுலடியார் அறம் சார்ந்து வாழ திருச்சபையை அழைக்கின்றார். 

திருச்சபை என்பது உலகில் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய அடியவர்களின் கூட்டம் என்பதை உணர்ந்து, அறநெறியில் வாழ்ந்து, அதன் மூலம் சான்று பகிர்ந்து இறையரசை உருவாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு தமக்கு உண்டு என்பதை உணர வேண்டும் என்று  பவுலடியார் வலியுறுத்துகின்றார்.

அறம்சார்ந்து சிந்திப்பதும் அறநெறியில் வாழ்வதும் திருச்சபையின் மாபெரும் கடமையாகும் அதுவே ஆண்டவருக்கு நாம் செலுத்தும் உன்னத காணிக்கையாகும்.

நிறைவாக:

நோயிலிருந்து நோயுற்றவரை விடுதிக்கின்றார் - அது மருத்துவரின் பணி....!

குற்றம் அற்றவர் என்று தீர விசாரித்து நேர்மையாளரை விடுவிக்கின்றார் - அது நீதிபதியின் பணி...!

அடைபட்டு கிடக்கும் அணையின் நீரை விடுவிக்கின்றார் - அது பொதுப்பணித்துறையின் பணி...!

கடலில் வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் பறவையை விடுவிக்கின்றார் - அது சமூக சேவகரின் பணி...!

அறியாமை எனும் இருளிலிருந்து மாணவர்களை விடுவிக்கின்றார் - அது ஆசிரியர்களின் பணி...!

திருச்சபையாராகிய 

நமது பணி...

நாசரேத் ஊரில் 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து 

முதன் முதலில் வாசித்த 

திருமறை பகுதியே

நமது திருப்பணியாகும்..!

உளவியல் சார்ந்து, கருத்தியல் சார்ந்து, அறவியல் சார்ந்து விடுதலைப் பணியில் பங்கெடுப்போம், சமூக நீதியையும், சமத்துவத்தையும், சமூக மாற்றத்தையும் இயேசுவின் வழியில் நின்று உருவாக்குவோம்.

ஆண்டவரின் ஆசி உங்களோடு இருப்பதாக. ஆண்டவரின் ஆசியாக வாழ்ந்திடுவோம்.

நட்புடன் 

உங்கள் ஆயர்

Rev. Augusty Gnana Gandhi

Ariyalur Pastorate

Trichy-Tanjore Diocese

Comments

Post a Comment