நற்செய்தியைக் கொண்டாடுவோம்
மரியாள் எலிசபெத்துத்தை சந்திக்கிறார் (லூக்கா 1:39-45) மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். இது புதிதாக கர்ப்பமாக இருந்த கன்னி மரியாளுக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். சென்ற பாதையில் பல மறைக்கப்பட்ட ஆபத்துகள் இருந்தன. இருப்பினும் கடவுளின் வார்த்தையை உறுதிப்படுத்த எலிசபெத்தின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள நற்செய்தியை கொண்டாட செல்கிறார்.
அப்படி என்ன நற்செய்தி?எபிரேய மொழியின்படி BESHORA அதாவது நற்செய்தி, என்பது தேசிய அறிவிப்பு, எமது அரசரே வெற்றி பெற்று அரசாளுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் சொல்.
கற்பனை செய்து பாருங்கள். இஸ்ரயேலுக்கும் எதிரிக்கும் இடையே ஒரு நீண்ட போர் நடந்து கொண்டிருக்கிறது, தேசத்தின் எதிர்காலம் ஊசலாடுகிறது. இடைவெளியின்றி நடைபெறுகிறது. ஒவ்வொரு குடும்பமும் கணவரையோ, மகனையோ இழக்க நேரிடுமோ என்ற கவலையில் மூழ்கியுள்ளது. ஆனால், இறுதியாக எதிரி சரணடைகிறார், போர்க்களத்திலிருந்து தூதுவர் அனுப்பப்படுகிறார். கடவுள் வெற்றி சிறந்து அரசாளுகிறார் என்ற செய்தியை உறக்கச்சொல்கிறார்.
ஆகையினால், ஆண்டவர் அருளிய அடையாளம் என்பதும் ஒரு அரச அறிவிப்பு. அழிவின் செய்தி, நாடுகடத்தப்பட்ட நிலை, வறுமை, பட்டினி, திருக்கோவில் சூறையாடப்பட்ட நிலை இவை அனைத்தையும் மாற்றி நானே அரசாளுவேன் என்ற மீட்பின் செய்தியை போர்க்களத்திலிருந்து புறப்பட்ட கட்டியர், போல செல்கிறார் அன்னை மரியா.
புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மீட்பர் செய்ய விருக்கும் அற்புதத்தையும் புரட்சியைக் கவிதையாகப் பாடுகிறார் மரியா. இப்புரட்சிப் பாவில் வரும் மூன்று வசனங்களில் கடவுள் நடத்தவிருக்கும் மாற்றத்தை எடுத்துரைக்கிறது. செருக்குடையோரைச் சிதறடிக்கிறார்; (51) இது சமயப்புரட்சி, வலியோலாத் தூக்கி எறிந்து, தாழ்நிலையிலுள்ளோரை உயர்த்துகிறார்; (52) இது அரசியல்புரட்சி, பசித்தோருக்கு உணவளித்து செல்வரை வறியராக்குகிறார் (53) இது பொருளாதாரப் புரட்சி.
இம் மூவகைப் புரட்சிகளும் இன்று தேவைப்படுகிறது. இதை செய்ய நாம் தயாரா? போர்க்களத்திலிருந்து புறப்பட்;ட கட்டியர், போல இறை அன்பைப் பெற்றுக் கொண்ட நாம் வருகின்ற ஆண்டவர் கொலைக்கருவிகளை வைத்து; ஆளுகை செய்யாமல் சுயநலமற்ற அன்பினாலும், தியாகத்தினாலும் உலகை ஆளுகை செய்யவிருக்கிறார் என்று பறைசாற்றுவோம்.
நம்பிகையிழந்து காணப்படும் மக்களை தேடிச்சென்று கடவுள் வெற்றி சிறந்து அரசாளுவார் எனும் நற்செய்தியை உறக்கச்சொல்வோம்.
அருட்பணி. வி. ஜெபசிங் சாமுவேல்.
யாழ் ஆதீனம், தென்னிந்திய திருச்சபை.
Comments
Post a Comment