"MARAN-ATHA - O LORD COME"- Rev. Augusty Gnana Gandhi

மாரநாதா -  இறையே வாரும்

# திருமறைப் பகுதிகள்

இணைச்சட்டம் 18 : 15 - 22

1 கொரிந்தியர் 16 : 13 - 24

யோவான் 1 : 1 - 14

# உட்புகும் முன்

"மாரநாதா"  என்ற சொல் "இறைவன் வருகின்றார்" இறையே வருக ... என்ற அழைப்பின் அர்த்தத்தை தாங்கி நிற்கின்றது. 

நம் ஆலயங்களில் நடந்து செல்லும் பாதையில் 'சிவப்பு கம்பளம்' விரித்து இருக்கிறோம். அதன்  பொருள் என்னவென்றால், நமது ஆண்டவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து முதல் மரியாதை  செலுத்தி, அவரை வழிபாட்டுக்கு அழைக்கின்றோம். ஆண்டவரோடு நாமும் இணைந்து இருப்பதால், நமக்கும் அத்தகைய உயர்ந்த மரியாதையை ஆலயம் நமக்குத் தருகிறது. உயர்ந்தவர் - தாழ்ந்தவர், ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை, ஆண் - பெண், நகரம் - கிராமம் என்ற பாகுபாடுகளைக் களைந்து, ஆண்டவர் முன் அனைவரும் சமம் என்ற கருத்தியலை இந்த சிவப்பு கம்பளம் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.

எல்லாரும் "ஆமென்" என்று சொல்லி பழகி இருக்கிறோம். "அல்லேலூயா" என்றும் ஆண்டவரை துதித்திருக்கின்றோம். எப்பொழுதெல்லாம் நம் வாழ்வில் துன்பங்களையும், பாடுகளையும் சந்திக்கிறோமோ அப்பொழுது நம்மை அறியாமல் சொல்லுகின்ற ஒரு வார்த்தை தான் "மாரநாதா" ஆண்டவரே வாரும், என் துயர் தீரும், எமக்கு பதில் தாரும்... 

இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு முறை சொல்லுவோம் "மாரநாதா" இறையே வாரும், எம்மில் வாரும், எமக்குள் வாரும், எமக்காக வாரும் .. என்று ஆண்டவரை வரவேற்போம்...

"சத்தாய் நிஷ்களமாய்" என்ற பாடலில் ஆண்டவரை அழகாக வர்ணித்து, ஆண்டவரே என் துணை என்று பாடி இருப்பார்...

 "பித்தேறிச் சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவதே

செத்தேன் உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மம தாய்

எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று

அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே - சத்தாய் 

கிறிஸ்து வருகையின் நாட்களில் "மாரநாதா - ஆண்டவரே வாரும்" என்ற தலைப்பில், திருமறை சார்ந்து நாம் சிந்தித்து நம்மை செதுக்கிக் கொள்வோம்...

1. வழிநடத்த வருகின்றார் - இணைந்து பயணிப்போம்…

(இணைச்சட்டம் 18 : 15 - 22)

இஸ்ரவேல் மக்கள் கானான் நாட்டில் குடி அமரும் பொழுது, அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு நியமங்களை மோசே எடுத்துரைக்கின்ற பகுதிகளில் இந்தப் பகுதியும் ஒன்று. எப்படி வாழ வேண்டும், எப்படி வழிபட வேண்டும், கடவுள் விரும்புவகைகள், விரும்பாதவைகள் மக்களிடம் கடவுள் எதிர்பார்ப்பது என்ன என்பதை எல்லாம் மோசே அழுத்தம் திருத்தமாக மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கற்பித்த நியமங்களும்(Rules), கட்டளைகளும்(Laws), நெறிமுறைகளும்(Regulations),அறவியலும்(Ethical Values) இஸ்ரவேல் மக்களை உலகின் தலைசிறந்த மக்களாக(Egalitarian Society), முன்மாதிரிச் சமூகமாக (Witnessing Community) கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறை மக்களாக(People of God) வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உயரிய சிந்தையை கொண்டிருந்தது.

கடவுள் மோசேயிடம் கூறிய வார்த்தைகள் "உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.(18:18) என்பது மிக முக்கியமான ஒன்று.

கடவுள் உருவாக்கும் அந்த தீர்க்கதரிசி இஸ்ரேல் மக்களை ஒழுங்குபடுத்துபவராக (Regulating the Jewish Society) இருப்பார், ஒருங்கிணைப்பவராக இருப்பார்((Co-ordinating the community), இறைவனின் நியாயத்தீர்ப்பை எடுத்துரைப்பவராக இருப்பார்(Insisting the Judgement of God) மற்றும் வழிநடத்துகின்றவராக இருப்பார்(Leading a witnessing community).

"உங்களில் ஒருவர்" (தீர்க்கதரிசியாக தெரிவு செய்யப்படுவார்) என்ற வார்த்தை பல அர்த்தங்களை தாங்கி நிற்கின்றது.

# ஒடுக்கப்பட்டோரிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படுவார்(Among the Oppressed).

# கடவுளால் தெரிவு செய்யப்படும் தீர்க்கதரிசி ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம் என்ற கருத்தையும் அது உள்ளடக்கி இருக்கிறது(God's selection is neither Female nor Male)

# என்ன கோத்திரத்தில் இருந்து கடவுள் தெரிவு செய்வார் என்ற வரையறையும் இல்லை(God does not have any profile of a prophet).

# எவரையும் ஆண்டவர் தெரிந்து கொள்வார், அது ஆண்டவரின் விருப்பு என்பதை உணர்த்துகிறது(There is a space for every class, and all are eligible for prophetic role)

மோசேக்கு பின் இஸ்ரவேல் மக்களை கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வழிநடத்த வருகின்ற அந்த தீர்க்கரை, நம்மில் ஒருவராக மனமுவந்து, முழு மனதோடு ஏற்றுக் கொண்டு இணைந்து பயணிக்க ஆண்டவர் அழைக்கின்றார்.

என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்(18:19) என்று ஆண்டவர் கூறுகின்றார்.

கடவுளால் தெரிவு செய்யப்படும் அந்த தீர்க்கதரிசி "நம்மில் ஒருவராக இருப்பதை உணர்ந்து,  நமக்காக அவர் என்பதை புரிந்து, கடவுளால் தெரிவு செய்யப்பட்டவர்,  கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை அறிந்து அவருடன் இணைந்து பயணித்து, உலகிற்கு முன்மாதிரியான சமூகமாக வாழ்ந்து காட்ட மோசேயின் வழியாக கடவுள் நம்மை அழைக்கின்றார்.

கடவுளால் அனுப்பப்படும் அந்த தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசனங்களில் உரைத்த அந்த இயேசுவை, படைப்பாளரை மாரநாதா - ஆண்டவரே வாரும் என்று அழைத்து அவருடன் இணைந்து பயணிப்போம். 

2. வார்த்தையாக வருகின்றார் - உறவாக்கிக் கொள்வோம்…

(யோவான் 1 : 1 - 14)

இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கத்தை யோவான் தனது முதலாம் அத்தியாயத்தில் ஒரு சில வரிகளில் கோடிட்டு காண்பிக்கின்றார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை யோவான் அவர்கள் எடுத்துரைக்கும் பொழுது, உலகத் தோற்றத்திலிருந்து அவர் ஆரம்பிக்கின்றார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை விண்ணையும், மண்ணையும் உண்டாக்கியது. அந்த வார்த்தை மனுவுருவானது என்று விளக்குகின்றார்.

ஆதிச் சமூகம் இறைவனால் உருவாக்கப்பட்ட சமூகம். அது ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமூகம். தமது சாயலால் உருவாக்கப்பட்ட அந்த சமூகம் உலகை பண்படுத்தவும், பாதுகாக்கவும், இறை உறவில் வளரவும் உருவாக்கப்பட்ட திருச் சமூகமாகும் என்பதை வலியுறுத்துவதற்காகவே யோவான், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகத் தோற்றத்திலிருந்து ஆரம்பிக்கின்றார்.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி உலகத்தில் எந்த மனுஷனையும் பிரகாசிக்க பண்ணுகிற உண்மையான ஒளியாய் இருந்தது(2-9).

இதன் அர்த்தம் "எந்த மனிதரையும்"  (எல்லா மனிதரையும்) ஒன்றாக பார்க்கின்றவர் இவ்வுலகில் பிறக்கின்றார். படைப்பை தமது வார்த்தையால் எவ்வண்ணமாக ஒழுங்குபடுத்தினாரோ அதேபோல் இந்த உலகில் நடைபெறும் ஏற்ற தாழ்வுகளை, சமத்துவமின்மையை ஒழுங்கு செய்வதற்காகவே இயேசு கிறிஸ்து பிறந்திருக்கின்றார் என்பதை படைப்போடு தொடர்பு படுத்தி விளக்குகின்றார்.

ஆண்டவரின் பிறப்பு அனைவருக்கும் உரியது. அது மனிதருக்கு மட்டுமல்ல சீரழிந்து இருக்கும் படைப்பையும் மீட்கவே வருகின்றார். அது படைப்பிற்கும், உலகில் உள்ள அனைவருக்குமான நற்செய்தி என்பதை படைப்பின் வரலாற்றின் மூலமாக கூறுகின்றார்.

அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை(1: 10). அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை(1:11) என்று யோவான் ஆசிரியர், தீர்க்கதரிசிகள் உரைத்த மேசியா; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான்.

அவரை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வார்த்தையாக உலகைப் படைத்தவர், வார்த்தையாகவே உலகில் வந்தவர், மனுவுறு ஏற்றவர் நமக்குள் வசிக்கிறார், வாழ்கிறார், உள்ளுறைந்து இருக்கின்றார்.

மனுவுறு ஏற்று வந்த இயேசுவை பரிசேயர்கள், சதுசேயர்கள், சமய தலைவர்கள், பழைமைவாதிகள்...ஏற்றுக்கொள்ளவில்லை , ஆனால் ஏழைகளும், வறியவர்களும், பாவிகளும், ஒதுக்கப்பட்டவர்களும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழுகின்றவர்களும், தரித்திரர்களும்,  நோயினால் புறந்தள்ளப்பட்டவர்களும், விளிம்பு நிலையில் வாழ்கின்றவர்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள்.

மேற்கண்ட இத்தனை நபர்களும் ஆண்டவரை உறவாக்கிக் கொண்டார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இவர்களின் உறவாகினார், தன்னை அவர்களோடு ஒன்றிணைத்துக் கொண்டார், அவர்களோடு உண்டு உறவாடினார், தம் அற்புதங்களைத் தந்து வாழ்வினை மீட்டெடுத்தார், இழந்த மாண்பினை பெரும்படியாக வகை செய்தார்.

மனுவுரு ஏற்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேரும் ஆண்டவரே, அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். ஆண்டவரின் பிள்ளைகள் என்னும் உரிமையை அவர்கள் மீட்டெடுத்தார்கள். அனைத்தும் இலவசமாகவே கிடைத்தது.

ஆண்டவரின் சொந்தமாக நாம் இருக்கிறோமா? ஆண்டவரின் உறவாக நாம் இருக்கிறோமா? ஏனென்றால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் அவரின் உறவாக இருந்தவர்கள் அனைவரும் வீதியோரங்களிலும், பெதஸ்தா குளங்களிலும், ஊருக்கு வெளியிலும், ஆலய வாசலில் உட்கார்ந்து யாசிக்கின்றவர்களாக, சகேயுவைப் போன்றவர்களாகவே ... இருந்தார்கள்.

நமக்காக அன்று பிறந்த ஆண்டவரை, வார்த்தையாக வந்தவரை இன்றைய உலகில் வாழும் நாம்  உறவாக்கிக் கொள்வோம்.

இயேசுவின் சிந்தையை அணிந்தவர்களாக, இயேசுவின் அடிச்சுவட்டில் பயணிப்பவர்களாக, இயேசுவின் அடியவர்களாக, இயேசுவாகவே வாழ்பவராக வாழ்ந்தால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  நம் உறவாவார். நாமும் அவரின் சொந்தங்களாவோம்.

மாரநாதா - இறையே வாரும் என்று அழைத்து,

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சொந்தங்களோடு நம்மை இணைத்துக் கொள்வோம். இணைத்துக்கொண்டு மாரநாதா - ஆண்டவரே வாரும் என்று அழைத்து வரவேற்போம். ஆண்டவரின் உடன்பிறப்பாக இந்த உலகத்தில் வாழ்ந்திடுவோம்.

3. ⁠ வாழ்வளிக்க வருகின்றார் - பயன்படுத்திக் கொள்வோம்…

 (1 கொரிந்தியர் 16 : 13 - 24)

பவுலடியார் உருவாக்கிய கொரிந்து  திருச்சபை ஒரு பண்பட்ட திருச்சபை. சிலைகளுக்கு படைக்கப்பட்டதை உண்ணலாமா? உண்ண கூடாதா?, பெண்கள் தலையில் முக்காடு அணிய வேண்டுமா? அணியக் கூடாதா? நாம் யாருடையவர்கள்? மாம்சத்துக்குரியவர்களா?ஆவிக்குரியவர்களா? இல்லற வாழ்க்கை என்றால் என்ன?  எப்படி வாழ வேண்டும்?.... என்றெல்லாம் விரிவாக விவாதித்து தீர்க்கமான முடிவு எடுத்து வழிநடத்தப்பட்ட திருச்சபை இந்த திருச்சபை ஆகும்.

ஆனால் தங்கள் அழைப்பை மறந்து, சிலுவையின் வழியாக எவ்வாறு மீட்கப்பட்டோம் என்பதையும் உணராமல், விசுவாசம்,  நம்பிக்கை, அன்பு இம்மூன்றையும் தொலைத்த திருச்சபையாக உருமாறிப் போனது.  இயேசு கிறிஸ்துவின் அன்பையும், சிலுவை மரணத்தையும், அடைந்த மீட்பையும் மறந்து போனார்கள். மொத்தத்தில் ஆண்டவரை விட்டு வழி விலகி போனார்கள்.

இந்த சூழ்நிலையில் பவுலடியார் "மாரநாதா - ஆண்டவர் வருகின்றார்" என்று தம் திருச்சபை மக்களுக்கு கடவுளின் நியாயத்தீர்ப்பையும்,  வர இருக்கும் தண்டனையையும் தம் திருச்சபை  மக்களுக்கு சுட்டி காட்டி "விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்(16 :13) என்று வலியுறுத்துகின்றார்.

சகோதரரே, கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரித்த ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே(16 :15).

இவர்கள் எல்லாரையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் தியாகத்தையும், ஆண்டவருக்காகவே வாழ்ந்து மரித்ததையும் , நமக்கு எவ்வாறாக சான்றாக வாழ்ந்தார்கள் என்பதையும் நினைவு கூறுங்கள் என்று தம் திருச்சபைக்கு சுட்டிக்காட்டி  பக்தியிலே வளரவும், அழைப்பை உணரவும்,  அர்ப்பணிப்போடு வாழவும் பவுலடியார் வலியுறுத்துகின்றார்.

திருச்சபை என்பது இறைவன் இயேசு கிறிஸ்து உருவாக்கின ஒரு மாபெரும் இயக்கம். அது உலகில் இறையாட்சியை அமைப்பதற்கான செயல் வீரர்களின் திருக்கூட்டம். திருச்சபை என்பது இறையரசின் முன்சுவை.

திருச்சபை தன்னை மறு பரிசோதனை செய்து, மறு அர்ப்பணிப்போடு "மாரநாதா - ஆண்டவரே வாரும்" என்று மறுவாழ்வு பெற, மறுபடி பிறக்க, மறு படைப்பாக மாற ஆயத்தமாவோம்.

# நிறைவாக

மாரநாதா  - ஆண்டவரே வாரும் என்று நமது முன்னோர்கள் ஆண்டவரை எவ்வன்னமாக அழைத்து இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் பல ஆச்சரியங்கள் உண்டாகிறது..

 #  வரவேணும் எனதரசே பாடலில் "நண்பா", உனத நன்மையின் மகா தேவா! என்று ஆண்டவரை "நண்பராக"அழைத்திருக்கிறார்கள்...

#  வாரும் ஐயா போதகரே என்ற பாடலில் "காதலனே" கருணை செய்வாய் என்று "காதலனாக" ஆண்டவரை அழைத்திருக்கிறார்கள்... 

#  ஒரு மருந்தரும் குரு மருந்து என்ற பாடலில் "வறுமையுள்ளோர்க்கே வாய்த்த "மருந்து" - என்று வறுமையுள்ளோருக்கான மருந்து என்று அழைத்திருக்கிறார்கள்...

#  சாலேமின் ராசா சங்கையின் ராசா இந்தப் பாடலில் .. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன "செல்வக்குமாரனே" - ஆண்டவரே செல்வக்குமாரனே என்று கொஞ்சி மகிழ்திருக்கிறார்கள்...

மாரநாதா - ஆண்டவரே வாரும்  என்று ஆண்டவரை எந்த உறவில் அழைக்கப் போகிறோம் என்பதை தனி நபராக குடும்பமாக திருச்சபையாக உணர்ந்து அழைப்போம்...

வழிநடத்த

வருகின்றார்,

இணைந்து பயணிப்போம்...!

வார்த்தையாக

வருகின்றார்,

உறவாக்கிக் கொள்வோம்...!

வாழ்வளிக்க

வருகின்றார்,

பயன்படுத்திக் கொள்வோம்...!

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்

உங்கள் ஆயர்

Rev. Augusty Gnana Gandhi

Trichy-Tanjore Diocese

Ariyalur Pastorate


அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன் அவர்களின் விளக்கவுரை

• ஆதிக் கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் காணும்போது ‘மாரனாதா’ என வாழ்த்தினார்கள். ‘மாரனாதா’ என்பதற்கு “ஆண்டவராகிய இயேசுவே நீர் வாரும்” என்பது அர்த்தமாகும்.

• இன்றைய திருவிருந்து வழிபாட்டிலும் இச்சொல் பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கின்றோம். கிறிஸ்தவ சமூகம் ஆண்டவருடைய வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் சமூகம் சிறப்பாக இவ்வார்த்தையினூடாக பலப்படுவதை எங்களால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

• ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை கிரேக்கரும் யூதரும் புரிந்துகொள்ளும் வகையிலேயே யோவான் ‘லோகோஸ்’ அல்லது ‘வார்த்தை’ என்ற பதத்தினூடாக இயேசுவை அறிமுகப்படுத்துகின்றார். இங்கு இயேசு ‘ஒளி’ என்ற உருவகத்தினூடாகவும் காட்டப்படுகின்றார்.

• யோவான் நற்செய்தியை நாம் படித்துப் பார்க்கும்போது யோவான் 1:1-14 வரையுள்ள பகுதி ஆதித்திருச்சபையில் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட ஒரு முன்னுரை பகுதியாகும். இதற்கூடாக இயேசு யார் என்பதை திருச்சபை புரிந்துகொள்ள முற்பட்டது. அன்றைய நாட்களில் யோவான்ஸ்நானகனுக்கும்

அல்லது திருமுழுக்கு யோவானுக்கும் இயேசுவுக்குமிடையே மக்கள் பார்வையில் புரிந்துகொள்வதில் பிரச்சினைகள் காணப்பட்டன. ஒருசிலர் யோவான்ஸ்நானகனையே அல்லது திருமுழுக்கு யோவானையே மெசியா என நம்பினர். இத்தகைய பின்னணியிலேயே இங்கு “நான் ஒளி அல்ல ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தேன்” என்று திருமுழுக்கு யோவான் குறிப்பிடுகின்றதையும் நாம் பார்க்கின்றோம்.

• யோவான் 1:14ல் “வாக்கு மனுவுருவானார் அவர் நம்மிடையே குடிகொண்டார்” என்ற பகுதி ஆண்டவர் இயேசு அன்று நிலவிய கலாசார அரசியல்  பொருளாதார சமூக சூழல்களில் மத்தியில் அவர் மனுவுருவேற்றார் என்பதை நாம் புரிந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம். எல்லா சூழ்நிலைகளையும் ஒதுக்கிவிட்டு அவரின் மனுவுருவேற்போ அமையவில்லை. மாறாக அவர் இந்த சூழ்நிலைகளில் ஒரு பகுதியானார் என்பது எமக்கு ஆறுதல் அளிக்கின்றது. அவர் எம்மவர்களில் ஒருவர் என்பது யோவான் நற்செய்தியாளனுடைய புரிந்துணர்வு ஆகும்.

• அன்று ஆதிக் கிறிஸ்தவ சமூகம் இயேசு தம்மிடையே இல்லை என்பதைக் குறித்து வேதனைப்பட்டார்கள். கி.பி. 70ம் ஆண்டில் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்ட பின்னர் இதுவரை ஒருமித்து வழிபாடு செய்து வந்த யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே தற்பொழுது பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் கிறிஸ்தவர்கள் ஆலயத்தை விட்டு துரத்தப்பட்டார்கள். இவ்வாறு துரத்தப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலேயே யோவான் நற்செய்தி எழுதப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இயேசுவினுடைய வருகைக்காக காத்திருந்த ஒரு சமூகமாக நற்செய்தியாளர் கூறுகின்றார். நாமும் இன்று எமது ஒடுக்குமுறைகள் ஓரங்கட்டப்பட்ட அனுபவங்கள் இவற்றின் மத்தியில் இயேசுவின் வருகைக்காக காத்திருக்கவும் செயல்படவும் தூய ஆவியரின் பெலத்தை பெற்றுக்கொள்வோமாக. 

- அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்,

இலங்கைத் திருச்சபை.

Comments