The Book of Obadiah- "Covenant Chronicles: Exploring the Old Testament"- Rev. Jebasingh Samuvel.

 உடன்படிக்கையை உணருவோம்



ஒபதியா நூல் அறிமுகம்:  

அறிமுகம்:  ஒபதியா עֹבַדְיָה – Servant of the Yahweh என்பதற்கு கடவுளின் ஊழியர், ஆண்டவரின் ஊழியர் என்று பொருள். முதல் உடன்படிக்கை நூல்களில் மிகச் சிறிய நூலாக இது காணப்படுகிறது. இந்நூலில் ஒபதியாவின் காட்சிகளே பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. இதில் கோர்வையான பொருள் புதைந்துகிடக்கிறது. லேவி குலத்தில் உதித்த பலருக்கு ஒபதியா (இறைத்தொண்டர், இறை ஊழியர்) என்ற பெயர் சூட்டப்படுவது வழக்கம். ஒபதியா வைராக்கியமுள்ள யூதர் என்றும், கடவுளின் தூய தொண்டர் என்றும், வரலாறு பயின்ற மாணவர் என்றும், ஏதோமின் பகைவர் என நாம் அறிகின்றோம். 

இவர் இறைஉரையாளர் எலியாவின் சமகாலத்தவர். ஆகாபு- ஈசபேல் அரசின் நிர்வாகியாக இருந்தவர். (1 அரசர் 18). இவர் ஏதோமியராக இருந்து யூத மதத்திற்கு மதம்மாறியவர், ஆயினும் இறையச்சம் நிறைந்தவராகவே வாழ்ந்துள்ளார்.

காலம்: வரலாற்றுச் சான்றின்படி எருசலேம் கி மு 586 இல் வீழ்ச்சியடைந்தது. வீழ்ச்சியின் போது ஏதோமியரும் யூத மக்களை கொள்ளையிட்டனர். ஆகவே முதல் பகுதியில் (1: 1- 14 )இறையுரை கடுமையாக வழங்கப்படுகிறது. 

இரண்டாம் பிரிவு (1: 16- 21) அரேபியரால் துரத்தப்பட்ட ஏதோமியர் யூதாவின் தென் பகுதியில் நுழைய முற்படுவதாகக் காட்டப்படுகிறது. இங்கு இவர் நம்பிக்கையோடு இறையுரை வழங்குவதைக் காணலாம். இவற்றைக்கொண்டு காலத்தை கணக்கிடுவோமாகில், இந்நூலின் முதல் பகுதி எருசலேம் வீழ்ச்சியடைந்த ஆண்டாகிய கி மு 586க்கு சற்று பின்பும், இரண்டாவது பகுதி ஏதோம் அரபியரால் முற்றுகையிடப்பட்ட ஆண்டாகிய 460 க்கு முன்னும் எழுதப்பட்டிருக்கக்கூடும்.

ஆயினும் சமீபத்திய ஆய்வுகளின்படி. 2 குறிப்பேடு 21 பெலிஸ்தியரும் அரேபியரும் இணைந்து எருசலேமை முற்றுகையிட்ட ஆண்டாகிய கிமு 853 - 841 ஆகிய காலத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கலாம் என்று திருமறை அறிஞர்கள் கணிக்கிறார்கள்.

ஒபதியா நூலின் நோக்கம்:

ஒபதியா நூல் யூதாவுக்கு பலத்த நம்பிக்கையை அளிக்கின்றது. தோல்வியுற்று, நசுக்கப்பட்டு, ஏழ்மையிலும் சிறையிலும் வாடும் மக்களுக்கு ஊக்கமூட்டுகிறது இந்நூல். நம்பிக்கையின் ஒளி சிறிதேனும் இல்லாத பொருள் இல்லாததுபோல் காணப்படினும் நன்னாள் நிச்சயமாக உண்டு என்பதை வலியுறுத்துகிறது.

பெருமையும் அகந்தையும் நிறைந்த ஏதோம் நியாயம் தீர்க்கப்படும். ஏதோமியரின் பாவமும் பிறரோடு செய்த உடன்படிக்கையை மீறிய குற்றமும் அவர்களை அழித்து போடும். இப்படி இறைஉரைப்பதால் ஒபதியா பழிக்குப் பழிவாங்க எண்ணம் மனிதர் என்று சொல்வது தவறாகும். ஆனால் கூர்ந்து, நோக்குங்கால் இவர் கடவுளின் நியாயதீர்ப்பையும், தவறு செய்தவர்கள் நீதியின் காரணராகிய கடவுளால் நிச்சயமாக நியாயம் தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்ற கருத்தையே வெளியிடுகிறார்.

அன்புக்கும் நீதிக்கும் போராட்டம் இல்லை. ஆனால் அன்புள்ள கடவுள் நியாயாதிபதியாக இருப்பதில் தவறு ஒன்றுமில்லை என்பதை இவர் எடுத்துக் கூறுகின்றார். இந்நூலில் காணப்படும் முக்கிய செய்தி “ நாடலாம் கடவுள் உடையது” என்பதே. ஒரே திடநம்பிக்கையும் ஒரே மீட்போம் சீயோன் மலையில் மட்டுமே உள்ளது என்பதுமென்பது அவரின் திண்ணம்.

 அருட்பணி. ஜெபசிங் சாமுவேல்,

முதுகலை மாணவர்- பழைய ஏற்பாட்டுத் துறை,

குருகுலம் லூத்தரன் இறையியல் கல்லூரி, சென்னை.

 

துணை நின்ற நூல்கள்

“Obadiah”, The Jewish Encyclopedia. New York: Funk & Wagnalls.

Talmud, Sanhedrin 39b.

திருமறை விளக்கவுரை, த.இ.நூ.கு. அரசரடி. 

Comments