Word of God : Inspired to Inspire
இறைவாக்கு : உணர்வூட்டி உந்துதல் தரும்
# திருமறைப் பகுதிகள்:
1 ராஜாக்கள் 19: 1 - 21
லூக்கா 1 : 39 - 45
வெளிப்படுத்தின விசேஷம்10: 1 - 11
# உட்புகும் முன்:
ஆலயத்தில் திருமறைப் பகுதி வாசித்து முடிந்த பின், வாசித்து முடிந்தாயிற்று என்று சொல்வது வழக்கம். ஆனால் ஆண்டவர் இயேசு தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்த பொழுது வாசித்து முடித்த பின்பதாக, சொன்ன வார்த்தை "உங்கள் காதில் கேட்ட வேதவாக்கியம் இன்று நிறைவேறிற்று" என்றார். ஜெப ஆலயத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஏசாயா நூலின் இறைவாக்கின் தாக்கம் அவரை உணர்வூட்டியது, உத்வேகம் தந்தது, உள்ளுறைந்து இறைப்பணிக்கு அவரை உந்தித் தள்ளியது...
கர்த்தருடைய வார்த்தை "கேதுரு மரங்களை முறிக்கிறது, காதேஷ் வனாந்தரத்தை அதிரசெய்கிறது, பெண் மான்களை குட்டி ஈனும்படி செய்கிறது.." என்று சங்கீதங்களில் நாம் வாசிக்கின்றோம். கர்த்தருடைய வார்த்தை அவ்வளவு வல்லமையுள்ளது...
இயேசுவின் வார்த்தை காற்றையும் கடலையும் அமைதியாக்கியது, பேய்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தது, பார்வையைத் தந்தது, கேட்கும் திறனை உருவாக்கியது, மரித்தவரை உயிரோடு எழச்செய்தது, பலரை உணர்வுக்குள்ளாக வழி நடத்தியது, சிந்திக்க வைத்தது, சீர்தூக்கிப் பார்க்கச்செய்தது, திறனாய்வு செய்யத் தூண்டியது, வாழ்வளித்தது...
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் எப்பொழுது திருச்சபையில் சீர்திருத்தம் உண்டானதோ, அப்பொழுது அனைவரின் கரங்களில் திருமறை கிடைத்தது.
திருமறையை வாசிக்க ஆரம்பித்த இறைமக்கள், திருச்சபையில் பல சீர்திருத்தங்களை உண்டாக்கினார்கள். பல இயக்கங்களைத் தோற்றுவித்தார்கள். அந்த இயக்கங்கள் கல்வி, மருத்துவம், சேவை என்று ஒட்டுமொத்த விடுதலைக்கும்(HOLISTIC) அது பேருதவியாக இருந்தது...
அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பதாக, "கர்த்தருடைய வார்த்தை" பரவலாக்கப்பட்டது. பல மொழிபெயர்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொன்றும் மூல பிரதிக்கு இணையாக அதன் அர்த்தங்களை வெளிப்படுத்துகின்ற ஒன்றாக அமைந்தன. வாசிக்கின்ற ஒவ்வொருவரையும் பக்தி நெறியிலும், இறைப்பணியிலும், இறையியல் கல்வியிலும், இறையாட்சி குறித்து புரிந்து கொள்வதிலும் உணர்வூட்டி, உலகில் திருப்பணி செய்வதற்கு வழி நடத்தியது, வழி நடத்துகின்றது.
நம் கைகளில் உள்ள அலைபேசிகளில் ஒவ்வொரு நாளும் பல வசனங்கள், யார் மூலமாகவோ நமக்கு அனுப்பப்படுகிறது. அது
நம் உணர்வுகளில் ஏறுகிறதா? நம்மை உரமூட்டுகிறதா? உள்ளுறைந்து செயல்படுவதற்கு
வழி நடத்துகிறதா?
திருமறையை வாசித்து பழகி விட்டோம்.. இனிவரும் நாட்களில் திருமறையை (சு)வாசிக்கப் பழகுவோம்..
1. இறைவாக்கு – அச்சங்களைப் போக்கி வீறு கொண்டு எழச்செய்கிறது...(1
ராஜாக்கள் 19: 1 - 21)
ஆகாப் அரசனின் மனைவி யேசபேல் பிற நாட்டைச் சார்ந்தவர், பிற தெய்வ வழிபாட்டை கொண்டவர்.
ஆகாப் அரசன் தன் இறை நம்பிக்கையை புறந்தள்ளிவிட்டு, இறையச்சமற்றவராய், துணிந்து பிற சமயத்தை புகுத்தி, பிற சமய வழிபாடுகளை மக்கள் மத்தியில் திணித்து, அதன் வழியாக நாட்டில் பெரும் குழப்பத்தையும், துயரத்தையும், துன்பத்தையும் வருவித்தான்.
எலியா மதத்தை வைத்து அரசியல் செய்த செயல்களை கண்டித்ததோடு மாத்திரமல்ல, மதத்தை வைத்து அரசியல் நடத்திய மதத் தலைவர்களை கொன்றளித்தார். எலியா தீர்க்கதரிசியின் செயல் நாட்டில் மாபெரும் விளைவுகளை உண்டாக்கியது.
எலியா தீர்க்கரின் இந்த செயலை யேசபேல் கண்டு கொதித்தெழுந்து, நாளை இதே நேரத்தில் உன்னை நான் அழிப்பேன் என்று செய்தி அனுப்புகின்றார். அது எலியாவுக்கு எட்டுகிறது. தன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த எலியா தன் உயிரை காத்துக் கொள்ள தப்பி ஓடுகின்றார்..
தப்பி ஓடிய எலியா ஒரு சூரைச்செடியின் கீழ் படுத்து உறங்குகின்றார். தூதன் அவனை எழுப்பி உணவு உண்ணச் சொல்லுகிறார். அந்த உணவை உண்டு மறுபடியும் தூங்குகிறார். மறுபடியும் உணவு தரப்படுகிறது அந்த உணவை உண்டு மறுபடியும் தன் பயணத்தை தொடர்கின்றார். ஒரு கெபிக்குள் அவர் தங்குகிறார், அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவருக்கு கேட்கிறது.
கர்த்தர் எலியாவோடு பேசுகிறார். நீ இங்கே இருக்கின்ற காரியம் என்ன? ஏன் இங்கு இருக்கிறாய்? என்று எலியாவிடம் பல கேள்விகளை எழுப்புகின்றார். உன் பணி என்ன? நீ எதற்காக தெரிவு செய்யப்பட்டாய்? நீ யாருக்காக செயல்படுகிறாய்? என்பதை மறந்து விட்டாயா? என்று உணர்வோடு எலியாவிடம் கடவுள் பேசுகின்றார்.
எலியா கர்த்தரோடு பேசுகிறார், தன் அச்சத்தை கடவுளிடம் தெரிவிக்கின்றார். கர்த்தர் எலியாவிடம் நீ ஏன் அஞ்சி நடுங்குகிறாய் "பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார் (அ:வ 19:18).
அதிகாரத்திற்கு அஞ்சி நடக்காமல், அநீதிக்கு என்றும் துணை போகாமல் என் ஜனம் ஏழாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் உன்னைப் போல் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை, தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள புறமுதுகிட்டு ஓடவில்லை, அவர்கள் துணிந்து களத்தில் இன்னும் நிற்கிறார்கள். அவர்களோடு நானும் இருக்கிறேன் என்று ஆண்டவர் தம் உடனிருப்பை எலியாவிடம் எடுத்துக்காட்டுகின்றார்.
கடவுளின் வாக்கு எலியாவுக்கு அச்சத்தைப் போக்கியது, துணிவைத் தந்தது, தன்னைக் காட்டிலும் வீரத்தோடும், துணிவோடும், தியாகத்தோடும் களத்தில் இவ்வளவு பேர் நிற்கிறார்களா என்ற ஆச்சரியத்தை தந்ததோடு மட்டுமல்லாமல் எலியாவின் வாழ்வில் துணிவை அது மீட்டு தந்தது.
கடவுளின் வாக்கு எலியாவின் அச்சங்களை போக்கி வீறு கொண்டு எழச்செய்தது. . நீ செய்ய வேண்டிய பணி மூன்று உள்ளது. இரண்டு அரசர்களை உருவாக்கி அரியணை ஏறச் செய்ய வேண்டும். அதன் பின்பதாக உனக்கு பின் அடுத்த தீர்க்கதரிசியை உருவாக்க வேண்டும்.
அச்சத்தோடு இருந்த எலியா கடவுளின் வாக்கினால் அச்சத்திலிருந்து விடுபட்டு கடவுள் தமக்குக் கட்டளையிட்ட பணிகளையும் நிறைவாக செய்து முடித்தார்.
அச்சம் கலைந்த எலியா அதன் பின்பாக நாபோத்து கொலை செய்யப்பட்ட பின்பதாக ஆகாப் மற்றும் யேசபேலிடம் சென்று தீர்க்கதரிசனம் உரைப்பதையும், நாளை உனக்கு என்ன நடக்கும் என்பதை துணிச்சலோடு சொன்னதையும் நாம் நன்கு அறிவோம்.
"பயப்படாதிருங்கள்" இதோ எல்லா மக்களுக்கும் உரிய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று மேய்ப்பர்களுக்கு சொல்லப்பட்டதைப் போன்று எலியாவுக்கும் ஆண்டவரின் வாக்கு கிடைக்கின்றது.
இறைவாக்கு அச்சங்களை போக்கி, வீறு கொண்டு எழச்செய்து கடவுளின் கருவியாய் , கடவுளின் வாயாய், கடவுளின் செயல்களாய், கடவுளின் பணியாளராய் களத்தில் வீறு கொண்டு பயணிக்கவும், பணியாற்றவும் எலியாவை மட்டுமல்ல நம்மையும் உந்துகின்றது.
2. இறைவாக்கு - அவமானங்களைப் புறந்தள்ளி தலை நிமிரச் செய்கிறது...(லூக்கா 1 : 39 - 45)
கடவுளின் மீட்பு திட்டத்தில் மரியாளும், எலிசபெத்தும் கடவுளால் தெரிவு செய்யப்பட்டனர். ஒருவர் இளவயது, இன்னொருவர் முதியவர். ஒருவர் வாழ வேண்டியவர் இன்னொருவர் வாழ்வை முடிக்கும் தருவாயில் இருக்கின்றவர். இந்த இருவரையும் கடவுள் தெரிந்து கொள்கின்றார்.
ஆண்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றில் ஆண்களே மையமாக இருந்து வந்தனர். இந்த கடவுளின் புதிய மீட்பு வரலாற்றுத் திட்டத்தில் இந்த இரு பெண்மணிகளும் முதன்மைப் படுத்தப்படுகின்றார்கள்.
இருவரின் வாழ்வில் குழந்தை பேரு கடவுளால் அருளப்படுகின்றது. இருவரும் ஆண்டவரின் கட்டளைகளை ஏற்று, ஆண்டவரின் திட்டத்திற்குத் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்கின்றார்கள்.
கடவுளின் இம்மீட்பு திட்டத்தில் மரியாளுக்கும் எலிசபெத்துக்கும் கடவுளால் பாக்கியம் கிடைப்பது என்னவோ உண்மைதான், ஆனால் உலகம் அவர்களுக்கு கொடுக்கின்ற வெகுமானம் என்பது அவமானங்களும், பழிச் சொற்களும், நிந்தைகளும் தான்.
திருமணம் செய்து கொள்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும், கணவருக்கு பணிவிடை செய்வதும், குடும்பத்தில் பத்தோடு பதினொன்றாக வாழ்ந்து மடிவதும் இல்லறத்தின் நோக்கம் அல்ல என்பதை மரியாளுக்கும், எலிசபெத் அவர்களுக்கும் கடவுளின் தூதன் விளக்கி காட்டுகின்றார்.
இதை உள்வாங்கிக் கொண்ட மரியாள், தன் உறவான எலிசபெத் அவர்களை சந்திக்க நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதுவரையிலும் அவமான சொற்களையே கேட்டு வந்த எலிசபெத், மரியாளின் வாழ்த்துதலை கேட்டதும் அவருடைய வாழ்விலே மீண்டும் ஒரு புதிய மறுமலர்ச்சி உண்டானது.
ஒருவரையொருவர் வாழ்த்தி கொண்டார்கள். அந்த வாழ்த்துதலில் கருவும் தன்னை இணைத்துக் கொண்டு களிப்பாய் துள்ளினது என்று நாம் அறிகிறோம்.
உலகத்திற்காக வாழாமல், உலக மதிப்பீடுகளை குறித்து கவலை கொள்ளாமல்,
அச்சம், மடம், நாணம், வெட்கம், பயிர்ப்பு போன்ற அடிமைப்படுத்தும் காரணிகளைப்
புறந்தள்ளிவிட்டு, "வீரமங்கைகளாய்"
இறைவனின் திட்டத்தில் துணிந்து அடுத்த அடி எடுத்து வைக்கின்றார்கள்.
இது முதல், பெண்களாகிய நம்மை "பாக்கியவதி" என்பார்கள் என்ற நேர்மறையான எண்ணத்தை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். பெண்களாகிய நாம் கடவுளால் "ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்ற புதிய கருத்தியலை இருவரும் கட்டமைக்கின்றார்கள். கடவுளின் கருவிகளாக ஆண்கள் தான் இருக்க வேண்டுமா? பெண்கள் இருக்கக் கூடாதா? என்ற "கேள்வியை" இருவரும் எழுப்புகின்றார்கள்.
அவமானங்கள் நம்மை தலைகுனியச் செய்யும். ஆனால் அந்த அவமானங்களையே மரியாளும் எலிசபெத்தும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, இறைவாக்கினால் தலை நிமிர்ந்து புதிய வரலாற்றை வடிவமைத்தார்கள்.
அடிமைப்படுத்தும் அவமானங்களை, சொற்களை, செயல்களை அடையாளம் கண்டு அவைகளைப் புறந்தள்ளி மரியாளும் எலிசபெத்தும் நேர்மறை எண்ணங்களால்(Positive attitudes) தங்களை கட்டமைத்து, தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டினார்கள். இன்றைய திருச்சபைக்கு இவ்விருவரும் மாபெரும் சான்றாக உயர்ந்து நிற்கின்றார்கள்.
இறைவாக்கு என்பது அவமானங்களை புறந்தள்ள செய்து, தலை குனிந்து இருந்த சமூகத்தை தலை நிமிர்ந்து நிற்கவும், தலை நிமிர்ந்து வாழவும், தனித்து வாழவும், சார்பு நிலையிலிருந்து சார்பற்ற நிலைக்கு உயர்த்தவும் உதவி செய்கின்றது.
குறிப்பாக இரண்டாம் பட்சமாக நடத்தப்பட்ட பெண்களின் வாழ்வில் ஆண்டவரின் அருள்வாக்கு பெண்களை விடுதலைப் பணியாளர்களாகவும், ஆண்டவரின் அடியார்களாகவும், இறைவனின் சாயலாகவும் உலகிற்கு அடையாளம் காட்டியது.
3. இறைவாக்கு - தயக்கங்களை எதிர்கொண்டு களம் காணச் செய்கிறது ...(வெளி 10: 1 - 11)
வெளிப்படுத்தின விசேஷம் எழுதப்பட்ட காலம் நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே. கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் சிதறடிக்கப்பட்டார்கள். தைரியமாய் பேசுவதற்கு துணிவு எவரிடமும் இல்லாமல் இருந்தது. அதிகார அடக்குமுறைகள் மக்களை ஒடுக்கி வைத்திருந்தது.
இந்த சூழ்நிலையில் யோவானுக்கு வெளிப்படுத்தின கடவுளின் திருக்காட்சி, இந்த அத்தியாயத்தில் மிகவும் அழகாக, தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆறு எக்காளம் ஊதி முடிக்கப்பட்டு ஏழாம் எக்காளம் ஊதுவதற்கு முன்பதாக தூதன் கையில் ஒரு சிறிய புத்தகத்தை காண்கின்றார். கடவுளின் வெளிப்பாடுகளை அவர் எழுத வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் கடவுள் நீ முத்திரையைப் போடு என்று கட்டளை இடுகின்றார்.
அதன் பின்பதாக நீ தூதன் கையில் உள்ள அந்த சிறிய புத்தகத்தை வாங்கி, நீ வாயிலே போடு என்கின்றார். அது முன்பு இனிக்கும், பின்பு கசக்கும் என்றும் கடவுள் வாக்குரைக்கின்றார்.
அப்படி என்றால் அதன் விளக்கம் என்ன என்பதை நாம் அறிய முற்படுவோம். அவைகள், எவைகள் என்று தன் கடைசி வசனத்தில் கடவுள் அழகாக எடுத்துரைக்கின்றார்.
நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன், என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது, நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று(10 : 10)
அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்ல வேண்டும் என்றான்.
அப்படியென்றால் அந்த சிறிய புத்தகத்தில் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டிய கடவுளின் நியமங்களையும், கட்டளைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
அந்த சிறிய புத்தகத்தில் "நாட்டில் நடைபெறுகின்ற அநீதிகளையும், அக்கிரமங்களையும், மக்களிடையே காணப்பட்ட அநியாயங்கள், அக்கிரமங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற அரசர்களின் மீறுதல்கள் அடங்கிய பட்டியல் என்பதாகவும் நாம் புரிந்து கொள்ளலாம்.
முதலில் இனித்தது பின்பு கசந்தது என்பதை யோவான் தன் உடல் மொழியாக இங்கு வெளிப்படுத்துகிறார். தன் தயக்கத்தையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
அரசர்களுக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக, பல நாடுகளுக்கு எதிராக தீர்க்கதரிசனப் பணி செய்வது என்பது எவ்வளவு கடினம் என்பதை கசப்பு என்ற சுவை மூலமாக இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இனிப்பு என்பது ஆரம்ப காலகட்ட திருப்பணியில் நடைபெறுகின்ற சின்ன சின்ன சந்தோஷங்களும், மகிழ்ச்சிகளும் குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நாளடைவில் அதே கசப்பாக மாறும் சூழ்நிலையையும் இந்த திருமறை பகுதி சித்தரிக்கின்றது.
யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட இந்த திருக்காட்சியும் இந்த அனுபவமும் தயக்கத்தோடு இருந்தவரை ஆண்டவரின் அருள்வாக்கு தயக்கங்களை எதிர்கொண்டு களத்தில் முன் பணியாளராக பணியாற்ற உந்தியது.
உலகெங்கும் இருக்கும் கசப்பான அநீதிகளையும், அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் ஆண்டவரின் அருள்வாக்கின் மூலமாக எதிர்கொள்ள நம்மை அழைக்கிறது. அது நம்முடைய வாழ்வில் கசப்பான அனுபவங்களை தந்தாலும், சுவைக்க சுவைக்க இனிப்பானது என்பதை யோவான் வழியாக ஆண்டவர் நமக்கு கற்றுக் கொடுக்கிறார்.
தூதன் தந்த அந்த சிறு புத்தகத்தை யோவான் உட்கொண்டு அதன் வழியாக ஆண்டவரின் அருள் வாக்கை சுவைத்தவராக, தயக்கங்களை உதறிவிட்டு இறைவன் பணித்த திருப்பணிகளையும், தீர்க்கதரிசனப் பணிகளையும் முன்னின்று செய்வதற்கு அருள்வாக்கு உதவியாய் இருந்தது.
தயக்கங்கள் எப்பொழுதும் தடைக் கற்களாகவே இருக்கும். துணிந்து எடுத்து வைக்கும் முதல் அடி அடுத்த அடிக்கு முன்னோட்டமாகவே அமையும். தயக்கங்களை உதறிவிட்டு, இறைவன் தரும் அருள் வாக்கை உட்கொண்டு இறைப்பணியில் எப்போதும் முன்னேறி செல்வோம்.
# நிறைவாக...
> "சத்திய வேதத்தை தினம் தியானி" என்னும் கீர்த்தனை
பாடலில் இறை வாக்கு எப்படிப்பட்டது என்பதை அழகாக பட்டியலிட்டுள்ளார் அதன் ஆசிரியர்
> வாலிபர்தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்;
> பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும்.
> சத்துருப் பேயுடன் அமர்புரியும் ஆயுதமாகும்;
> புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும்.
> புலைமேவிய மானிட ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
> நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம்.
> கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
> புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது..
வீட்டில் ஒவ்வொரு பிள்ளைகளையும் வீட்டுப்பாடம் செய்து முடித்தாகி விட்டதா? என்று அக்கறையோடு கேட்கின்றன நாம், பிள்ளைகளிடம் திருமறைப்பாடம் செய்து முடித்தீர்களா? என்று கேட்க தவறிவிட்டோம்...
கர்த்தருடைய வார்த்தை வெறுமையாய் திரும்பாது. அது இருபுறமும் கருக்குள்ள பட்டயம். அது நம் கால்களுக்கு தீபமும் பாதைக்கு எப்பொழுதும் வெளிச்சமாய் இருக்கிறது.
அந்த இறைவாக்கு நமக்குள்ளே இருக்கிறது, அவர் நமக்குள்ளே வாசமாய் இருக்கிறார்.
இறைவன் அருளும் வரங்களை நாடிடுவோம்...
இறைவன் அருளும் இறைவாக்கை சுவைத்திடுவோம்...
இறைவன் விரும்பும் நல்லுலகை நாளும் படைத்திடுவோம்...
ஆண்டவரின் ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக...
நட்புடன் உங்கள்
ஆயர்
Rev. Augusty Gnana Gandhi,
Ariyalur Pastorate,
Trichy-Tanjore Diocese.
Comments
Post a Comment