Be Holy
தூயோராய் இருங்கள்
-----------------------
திருமறைப் பகுதிகள்
உபாகமம் 7: 1 - 11
எபேசியர் 5: 18 - 20
யோவான் 17: 13 - 17
உட்பகுமுன்
நல்லவர்கள் இருப்பதால் நாட்டில் மழை பெய்கிறது என்ற வழக்கு சொல் ஒன்று நம்மிடம் உண்டு. அந்த நல்லவர்கள் பொருட்டு இறைவன் கருணை கொண்டு உலகில் அன்பு செலுத்துகிறார் என்ற நம்பிக்கை நமது ஆழ்மனதில் என்றும் உள்ளது. அந்த நல்லவர்கள் எனப்படும் நபர்களில் நாமும் ஒருவராக இருக்கிறோமா என்பதை உணர்வோம்.
பணி செய்கின்ற இடங்களில் அவர் கையூட்டு பெற மாட்டார், நேர்மையானவர், யாருக்கும் பயப்பட மாட்டார், அவர் என்றுமே நீதி மட்டும் செய்பவர் என்ற நட்பெயரோடு யாராவது ஒருவர் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். அவருக்கு சமூகத்தில் உயர்ந்த இடமும், மதிப்பும், மரியாதையும் என்றும் குறைவதே இல்லை.
அகத்தூய்மை - புறத்தூய்மை என்ற இரண்டு பதங்கள் சமூகத்தில் பேசும் பொருளாகவே இருந்து வருகின்றன. "புறத்தூய்மை" பற்றி கவலைப்படுபவர்கள் பெரும்பாலும் ஒடுக்குகின்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் பிரிவினைவாதிகளாகவும், சாதியத்தை கட்டி காக்கின்றவர்களாகவும், வன்முறையாளர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும் காணப்படுவர்.
"அகத்தூய்மை" பற்றிய எண்ணம் உடையவர்கள் என்றுமே கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர்கள், மனிதரை மதிப்பவர்கள், மாண்போடு நடத்துவார்கள், மனித நேயம் தழைக்க என்றுமே பாடுபடுகின்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சமயம், இனம், சாதி, ஏற்றத்தாழ்வுகள் இவற்றையெல்லாம் கடந்து சமத்துவ சிந்தையோடு, சமூக அக்கறையோடு சான்றாக வாழ்பவர்கள். இவர்களை சான்றோர்கள், நேர்மையாளர்கள், தூயவர்கள் என்றும் சொல்லலாம்.
முழுக்கு முனிவர் யோவான் அவர்கள் தன்னிடம் திருமுழுக்குப் பெற வருபவரிடம்
> மனம் திரும்பதலுக்கு ஏற்ற கனி கொடுங்கள், ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள், இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன், ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்று தூயோராய் வாழ்வதற்கு அவர்களை வழிநடத்தினார். (லூக்கா 3 : 7 - 14)
திருச்சபையில் பெறுகின்ற திருமுழுக்கும், திடப்படுத்தலும், அன்பர் திருப்பணிக்கான அங்கீகாரமும், திருச்சபையின் பொறுப்பாளர்களின் தெரிந்தெடுப்பும், அருட்பொழிவும், பேரருட்பொழிவும் தூயோராய் வாழ்வதற்கான அழைப்பு மட்டுமல்ல கரை படிந்த தனி நபர்களை, குடும்பங்களை, திருச்சபையை, சமூகத்தை, உலகை தூய நிலைக்கு உயர்த்துவதற்கான பணி செய்ய கடவுளின் அழைப்பு என்பதை உணர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5 : 8) என்பதை ஒவ்வொரு நாளும் உணர்வதற்கு வழிபாடும், ஆலயமும் என்றும் பேருதவியாக இருக்கின்றது.
தூயோராய் வாழ்வதற்கு திருமறை தருகின்ற வழிகாட்டுதல்களை நாம் சிந்திப்போம்...
1. புரையோடிப் போன சமய அழுக்குகளை துணிந்து சுத்திகரியுங்கள் (உபாகமம் 7: 1 - 11)
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து விடுதலைப் பெற்று வனாந்தரத்தில் தங்கள் பயணத்தை மேற்கொண்ட போது மோசே அவர்கள் "விடுதலை பெற்ற சமூகம் எப்படி வாழ வேண்டும், என்னென்ன நியமங்களை கடைபிடிக்க வேண்டும், அவர்களுக்குரிய கட்டளைகள் என்ன, நெறிமுறைகள் என்ன என்பதை வகுத்துக் கொடுக்கின்றார்.
400 ஆண்டுகள் எகிப்தில் "அரசரின் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த சமூகம்" விடுதலை பெற்ற சமூகமாக, குடியேறும் நாட்டில் இஸ்ரவேல் சமூகம் ஒரு "முன்மாதிரி சமூகமாக, நாடாக" அவர்கள் வாழ வேண்டும் என்பதே மோசே தந்த நியமங்களின் நோக்கங்கள் ஆகும்.
அரசாட்சி என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை 400 வருடங்களாக உணர்ந்த இந்த சமூகம், நீதி மறுக்கப்பட்டு ஒடுங்கி கிடந்த இந்த சமூகம், விடுதலை பெற்று குடியேறும் பொழுது, ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, நீதியோடும் நியாயத்தோடும் வாழ்ந்து, கடவுளுக்கு முன்பதாக தூய சமூகமாக உருவாக வேண்டும் என்பதற்காக கட்டளைகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டன.
சிலை வழிபாடு என்பது ஒடுக்குதலுக்கு என்றும் துணையாய் நிற்கும். அது சமூகத்தில் தூய்மை - தீட்டு என்னும் கருத்துகளை உருவாக்கி, சமூகத்தில் ஒரு கூட்டம் தங்களை தூயவர் என்றும் மற்றவர்களை தூய்மையற்றோர் என்றும் ஒதுக்கி வைக்கும்.
இது சமூகத்தை மேலும் பிளவு படுத்தி கடவுளின் பெயரால் அடிமைத்தனத்திற்கு அது வழி வகுக்கும். வசதி படைத்தோருக்கு சார்பாகவும் ஏழைகளுக்கு அது எதிராகவும் அமையும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு முதலில் செய்ய வேண்டிய காரியங்கள் புரையோடிப் போன அடிமைப்படுத்தும் சிலை வணக்க வழிபாட்டையும், அதனை ஒட்டிய சடங்காச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் உதறித் தள்ளி அதை சீர்படுத்த மோசே அழைப்பு விடுக்கின்றார்.
சிலை வணக்க வழிபாடு எப்பொழுதும் எட்டாத இடத்தில் கடவுளை வைத்து, கடவுளுக்குரிய மொழி இது என்று வேறுபடுத்தி, ஒரு கூட்ட மக்கள் மட்டும் கடவுளுக்கு பணிவிடை செய்யும் பணியாளர்களாகவும், பக்தியாளர்களாகவும் மற்ற மக்கள் தீட்டானவர்கள் என்று கருதி அவர்களை ஒதுக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தும் கூட்டத்தையும் அதற்கு இணங்கி போகும் அரசாட்சியையும் அப்புறப்படுத்தி நாட்டை தூயதாய் மாற்றுங்கள் என்று மோசே வலியுறுத்துகின்றார்.
உங்களை அழைத்த கடவுள் இருக்கின்றவராகவே இருக்கிறேன் என்று தம்மை வெளிப்படுத்தியவர, ஒடுக்கப்பட்டோருடன் இணைந்து துன்புறுகின்ற கடவுள், எங்கோ மறைந்து கொண்டிருக்கிற கடவுள் அல்ல மாறாக வனாந்தர பயணத்தில் உடன் வந்தவர், விடுதலை அளிப்பவர், வாழ்வளிப்பவர் என்பதை உணர்ந்து ஓரிரை கோட்பாட்டில் வளர்வதற்கு இஸ்ரவேல் மக்களை மோசே வழி நடத்துகின்றார்.
குடிபுகும் நாட்டில் அரசர் இல்லாத சூழ்நிலையில், அரசாட்சி இல்லாத அமைப்பில், ஒவ்வொரு இஸ்ரவேலரும் நீதியோடும், நியாயத்தோடும், நேர்மையோடும், இறை சமூகம் என்பதை உணர்ந்து, மெய் பக்தியில் வாழ்வதே தூய வாழ்வு அதுவே இறைவன் விரும்பும் வாழ்வு என்பதை உணர்ந்து, சமூகப் பொறுப்போடு வாழ்வதற்கு மோசே அவர்கள் மக்களை நெறிப்படுத்துகின்றார்.
மோசை அவர்களின் தூயோராய் வாழுங்கள் என்ற அழைப்பு தனிமனிதனுக்கான அழைப்பு அல்ல அது சமூகத்திற்கான அழைப்பு. ஒட்டு மொத்த இஸ்ரவேல் சமூகமும் இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்காக மோசே அவர்களால் வழிநடத்தப்படுகின்றார்கள்.
இன்றும் கூட நமது கிராமங்களில், திருச்சபைகளில், இறை மக்களிடத்தில் புரையோடிப் போன அடிமைப்படுத்தும் கலாச்சாரங்களும், பாரம்பரியங்களும், பழக்க வழக்கங்களும் மலிந்து கிடப்பதை காணலாம்.
இறந்தவர்களுக்காக கோழி குஞ்சை பலியிடுவது, தாலி அறுத்து விதவைக்கோலம் ஏற்படுத்துவது, மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துவது, பொது காரியங்களுக்கு கணவனையோ மனைவியையோ இழந்தவர்களை வரவிடாமல் தடுத்து அதை அமங்கலம் என்று அவர்களை ஒதுக்குவது, தீட்டு கழித்தல் எனும் பெயரில் கடவுளுக்கு விரோதமாக செயல்களை துணிந்து செய்வது போன்ற பல காரியங்கள் இன்னமும் நடைமுறையில் இருந்து கொண்டு தான் வருகிறது.
புரையோடிப் போன இவைகளை எல்லாம் புறந்தள்ளி, ஆண்டவர் விரும்பும் வாழ்க்கை வாழ்வதே தூய வாழ்க்கை. அப்படி வாழ்பவர்கள் தான் தூயவர்கள். அப்படி இஸ்ரவேல் சமூகம் தூய சமூகமாக வாழ மோசே அவர்கள் அழைப்பு விடுக்கின்றார்.
தனிமனிதராய்,?திருச்சபையாய் சமூகமாய் இப்படிப்பட்ட புரையோடி போன சமய அழுக்குகளை, கண்டும் காணாமல் வாழ்வது இறைவனுக்கு என்றும் எதிரானது, துணிந்து எதிர்த்து சுத்திகரிக்க கடவுள் நம்மை அழைக்கின்றார்.
கடவுள் தூயவர், அவரின் மக்கள் தூயோராய் இருக்க வேண்டும். கடவுள் விரும்பும் தூய்மை என்பது
நீதி சார்ந்தது, சமத்துவம் சார்ந்தது, சமூகம் நீதி சார்ந்தது என்பதை உணர்ந்து அப்படிப்பட்ட தூயோராய் வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம், அந்த நிலை உருவாகுவதற்கு துணிந்து களத்தில் நிற்போம்.
2. கறை படிந்து போன சமூக அவலங்களை இணைந்து சீர்படுத்துங்கள் (எபேசியர் 5: 18 - 20)
பவுலடியார் தன் திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதத்தில் எவைகள் எல்லாம் தூயவைகள், யார் தூயவர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி கூறுகின்றார்.
சமூகத்தில் படிந்துள்ள பல கறைகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அது ஆண்டவருக்கு தெரியும். இறைமக்கள் என்பவர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட, பிரித்தெடுக்கப்பட்ட திருச்சமுகம்.
அப்படிப்பட்ட திருச்சமுகம் தம் அழைப்புக்கு ஏற்றபடி பரிசுத்தவான்களுக்கு உகந்தபடி , வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் உங்களுக்குள்ளே இருக்கலாகாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்.(5: 3,4)
விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று பவுலடியார் பட்டியலிடுகின்றார்.(5 : 5)
இப்படிப்பட்டவைகளினிமித்தமாக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கிளை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்(5 :6, 7) என்று எச்சரிக்கையும் விடுக்கின்றார்.
வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்வதே தூய வாழ்வு. ஆவியின் கனிகள் நம்மில் வெளிப்படுவதும், சகல நற்குணத்திலும், நீதியிலும், உண்மையிலும் வாழ்வதே மாசற்ற வாழ்வு, அதுவே இறை மக்களின் உன்னத வாழ்வு என்பதை பவுலடியார் தமது திருச்சபைக்கு சுட்டிக் காட்டுகின்றார்.
கறை படிந்த சமூகத்தை மாற்றுவதற்கு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டது திருச்சபை. அப்படிப்பட்ட திருச்சபை சமூகத்தில் படிந்துள்ள அத்தனை கறைகளையும் களைவதற்கு கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் என்று உணர்வடைய வேண்டும்.
அதனை எப்படி களைவது என்பதை பவுலடியார் மிகவும் ஆழமாக எடுத்துரைக்கின்றார். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள் என்பதே பவுலடியார் நமக்குத் தரும் ஆலோசனை.
தூயோராய் வாழ்வதற்கு பவுலடியார் தருகின்ற ஆலோசனைகள் மிகவும் சிறப்பானவைகள். சங்கீதங்கள் என்பது திருமறை அறிவில் வளர்வதற்கு துணையாகும். கீர்த்தனைகள் மற்றும் ஞான பாட்டுகள் என்பது கலை, இலக்கிய, பண்பாடுகள் வழியாக சீர்திருத்த கருத்துக்களை விதைப்பது என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
பாடல்கள் அனைவரையும் இணைக்கும். அது விளிம்பு நிலை வரை ஊடுருவும், மக்கள் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். திருச்சபை உயிரோட்டம் உடையதாக இருப்பதற்கும், எளிய முறையில் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு இவைகள் என்றும் பேருதவியாக இருக்கும்.
இதை மனதில் கொண்டவராக பவுலடியார் , புதிய கருத்துக்களையும், சித்தாந்தங்களையும், கோட்பாடுகளையும், இறையியல் கல்வியையும் உருவாக்கி அதன் மூலம் சமயத்தில் சீர்திருத்தங்களையும், சமூகத்தில் தூயவர்களை உருவாக்க வேண்டியது திருச்சபையின் கடமை என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றார்.
ஆதித் திருச்சபை விசுவாசத்தில் வளர்வதற்கு பாடல்களும், இசையும் பெரும் உதவியாக இருந்தது என்பதை ஒருபோதும் நாம் மறுக்க இயலாது. அதுபோல புதிய சீர்திருத்தங்களை இசை வடிவில், கலை வடிவில் பண்பாட்டுத் தலங்களில் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த சமூகம் தூயோர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு திருச்சபை பாடுபட வேண்டும் என்பதை பவுலடியார் உணர்த்துகின்றார்.
கடவுள் நமக்குத் தந்த வரங்களை, திறமைகளை, தாலந்துகளை புதைத்து வைக்காமல் அவைகளை விதைக்கும் படி பவுலடியார் வலியுறுத்துகின்றார்.
திருச்சபை என்பது கடவுளால் அன்றைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களைப் போன்று ஒரு சமூகம். இந்த சமூகம் கறை படிந்த சமூகத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட சமூகம். தூயவர்களாக வாழ்வதும், அதன் மூலம் சமூக கறைகளை அகற்றுவதும், ஒட்டுமொத்த மானுடம் தூயவர்களாக உருவாக்கப்படுவதும் அதன் தலையாய கடமை.
இதனை உணர்ந்து "பண் அமைத்து, கலை இலக்கிய வடிவில் சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கு" இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்ச முகம் என்பதை உணர்ந்து பணிபுரிய அழைக்கப்பட்டுள்ளோம்.
3. சீர்குலைந்து போன உறவு சிக்கல்களை களைந்து மேம்படுங்கள். (யோவான் 17: 13 - 17)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளுக்கு முன்பதாக கூறிய இந்த வார்த்தைகள் மிகவும் ஆழமானவை அர்த்தம் மிகுந்தவை.
நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்: உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன், அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம்.(17 : 9, 17)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த மன்றாட்டின் மூலமாக இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய சீடர்களுக்கும், அவரால் வாழ்வு பெற்ற மக்களுக்கும் உள்ள உறவுகள் எப்படிப்பட்டதாக இருந்தது என்பது நமக்கு புரிகிறது.
ஆண்டவர் தம் சீடர்களோடும், ஏழை, எளியவர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களோடு கொண்டிருந்த உறவு என்பது வித்தியாசமானது. அவர்களோடு கொண்டிருந்த அன்பு உறவு என்பது மனித எல்லைகளை எல்லாம் தாண்டி அவர்களோடு உடன் வாழ்வதும், உணவருந்துவதும் புதிய வாழ்க்கை முறையை கற்றுத் தந்தது.
ஆண்டவரின் வாழ்வும் அவரது பணியும் அவரது போதனைகளும் அறைகூவல் விடுக்கின்றதாகவே அமைந்தது. விலக்கி வைக்கப்பட்டிருந்தவர்களோடு கொண்டிருந்த உறவு, புறந்தள்ளப்பட்டவர்களோடு கொண்டிருந்த அன்பு, ஓரங்களில் கிடந்தவர்களோடு கொண்டிருந்த ஐக்கியம், ஏழைகள் மீது கொண்டிருந்த கரிசனை இவைகள் அனைத்தும் "உறவு" என்பதற்கு அடித்தளம் என்பதை திருமறை தெளிவாக காட்டுகிறது.
இத்தகைய உறவு தான் இறை உறவு, இந்த இறை உறவு தான் இறை அடியவர்களின் உறவாக இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து வலியுறுத்துகின்றார்.
பரிசேயர்கள் போன்று வெளிவேடம் கொண்ட உறவு வாழ்க்கை அசுத்தமானது அதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் போதனைகளில் வலியுறுத்திக் கொண்டே வருகின்றார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த இறை வேண்டலில் "நீர் தந்தவர்கள்" என்று குறிப்பிடுகின்ற "உறவுகள்" யார் என்பதை இறை மக்களாகிய நாம் "இறையியல் பார்வையோடு" புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட உறவுகளோடு தன்னை இணைத்துக் கொள்கின்றவர்கள் என்றும் தூயவர்கள், நேர்மையாளர்கள், நீதியாளர்கள் மற்றும் அவர்களே இறைமக்கள் ஆவார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிடும் "நீர் தந்தவர்கள்" என்பவர்கள் அன்றைய சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளும், பாவிகள் எனப்பட்டவர்களும், சமாரியர்கள் என்று இழிவாக கருதப்பட்டவர்களும், இவர்கள் கலிலேயர்கள் அல்லவா என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களும், பார்வையற்றவர்களும், நடக்க முடியாதவர்களும், கேட்கும் திறன் அற்றவர்களும், பெண்களும், பெதஸ்தா குளத்தில் கைவிடப்பட்டவர்களும் மற்றும் புரயினத்தார்களுமே ஆவார்.
அன்று இருந்த இந்த படிநிலைகளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உடைத்தெறிந்து இறை சமூக உறவாக அவர்களை உயர்த்தினார். இவனுக்கு உரியவர்கள் என்னும் அந்தஸ்தை அங்கீகாரத்தை அவர்களுக்கு வழங்கினார். உறவற்றவர்களுக்கு அவர் உறவானார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சொந்தம் முற்றிலும் புதியது.
அப்படி இழிவாக கருதப்பட்ட அவர்களிலிருந்து தம்முடைய சீடர்களை உருவாக்கினார். அவர்களின் உலகமெங்கும் அனுப்பினார். சீர் குலைந்து போன உறவு சிக்கல்களை கண்டறிந்து அவைகளை மேம்படுத்த அவர்களை பணிய அமர்த்தினார, ஆற்றலையும் அதிகாரத்தையும் வாரி வழங்கினார்.
கடவுள் விரும்பும் தூய வாழ்க்கை என்பது இப்படிப்பட்ட பணிகளை செய்வதே என்பதை உணர்வில் கொள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வலியுறுத்துகின்றார்.
நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.(17 :18) என்று ஆண்டவர் புதிய பொறுப்பினை தம்முடைய சீடர்களுக்கு இன்றைய திருச்சபைக்கு, இறை மக்களுக்கு ஆண்டவர் பணித்திருக்கின்றார்.
உருக்குலைந்து போன மனித உறவுகளை, உறவு சிக்கல்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியில் சீர்படுத்தவும், சீர்திருத்தவும், மேம்படுத்தவும் நம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
இயேசு கிறிஸ்து கூறியதைப் போல நாமும் இறைவனால் "நமக்கு தரப்பட்டவர்கள் யார்" என்பதை அடையாளம் காணவும், அவர்களோடு நல்லுறவு ஏற்படவும், அப்படிப்பட்ட உறவு சிக்கல்களை சரி செய்யவும் நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்வில் கொள்ள திருமறை நம்மை உந்துகிறது.
நிறைவாக
தூயவராய் இருங்கள் எனும் அழைப்பு
"நம்மை மறுபடி பிறக்க அழைக்கின்றது..."
"காற்றைப் போல வாழ அழைக்கின்றது..."
"சிறு பிள்ளைகளைப் போல மாற அழைக்கின்றது ..."
திருச்சபையில் பெறுகின்ற திருமுழுக்கும், திடப்படுத்தலும், அன்பர் திருப்பணிக்கான அங்கீகாரமும், திருச்சபையின் பொறுப்பாளர்களின் தெரிந்தெடுப்பும், அருட்பொழிவும், பேரருட்பொழிவும் தூயோராய் வாழ்வதற்கான அழைப்பு மட்டுமல்ல கரை படிந்த தனி நபர்களை, குடும்பங்களை, திருச்சபையை, சமூகத்தை, உலகை தூய நிலைக்கு உயர்த்துவதற்கான பணி செய்ய கடவுளின் அழைப்பு என்பதை உணர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக...
நட்புடன்
உங்கள்
Rev. Augusty Gnana Gandhi
Ariyalur Pastorate
Trichy-Tanjore Diocese
Comments
Post a Comment