Praise the Lord ( Worship )
ஆண்டவரைப் போற்றுங்கள் ( வழிபாடு )
திருமறைப் பகுதிகள்
யாத்திராகமம் 9: 1 - 7
சங்கீதம் 81
வெளி 5: 1 - 14
யோவான் 2: 13 - 22
உட்புகும் முன்
-----------------
"போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை" என்ற பாடலில், அடுத்த வரி மிகவும் அற்புதமான வரி "புதிய இதயமுடனே.." ஆசிரியர் பயன்படுத்திய "புதிய இதயமுடனே.." என்ற சொல்லில் கடவுளை வழிபடும்போது புதிய இதயத்தோடும், புதிய ஆர்வத்தோடும், புதிய மனதோடும் ஒவ்வொருவரும் கடவுளை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தை அது எடுத்துரைக்கின்றது.
ஒரு திருச்சபை உயிரோட்டமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் அதன் வழிபாடே. அர்த்தமுள்ள வழிபாட்டில் பங்கெடுக்கும் பொழுது வாழ்வும் அர்த்தமுள்ளதாக மாறுகிறது.
வழிபாடு மக்களின் வாழ்வை ஒன்றிணைக்கின்றது, ஒருமித்து வாழ்வதற்கு வழிவகை செய்கிறது, இறைவன் - இயற்கை - இறைமக்கள் என்ற கூட்டு வாழ்வுக்குள் இணைந்து, இசைந்து, இயங்குவதற்கு உதவி செய்கின்றது.
ஆதிச் சமூகம் எவைகளுக்கெல்லாம் பயப்பட்டார்களோ அவைகளை கடவுளாகவே பாவித்து அவைகளை வழிபட ஆரம்பித்தது. மழை, இடி, மின்னல், தீ... போன்ற அனைத்தையும் கடவுளின் செயல்களாக நினைத்து வழிபட ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் வழிபாட்டில், வழிபடுதலில், இறைவனைப் புரிந்து கொள்வதில் பல மாற்றங்கள் உருவெடுத்து, இன்றைக்கு திருச்சபையாக நாம் முறை சார்ந்து வழிபடுவதில் பழகி இருக்கின்றோம்.
நாடோடி சமூகத்தில் கடவுளை வழிபடும் பொழுது திறந்தவெளியில், திறந்த மனதோடு, எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, அனைவரும் ஆண்டவரைப் போற்றுவதற்கு வாய்ப்புகள் பல இருந்தன. நன்மை செய்த ஆண்டவரை அவர்கள் போற்றித் துதித்து கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.
ஆலயம் கட்டப்பட்ட பின்பதாக வழிபாட்டில், ஆண்டவரைப் போற்றுவதில் முறைகள் வகுக்கப்பட்டன, பாடகர்கள் உருவாக்கப்பட்டார்கள், இசைக் கலைஞர்கள் உருவாகினர், இடங்கள் வரையறுக்கப்பட்டன, இடையீட்டாளர்கள் உருவாகினர்.
கர்த்தரை நான் எக்காலத்திலும் தோத்தரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும் என்ற தாவீதின் பாடல் வரிகள் எல்லையற்ற ஆண்டவரை, எப்பொழுதும் ஆண்டவரே துதிக்கலாம், போற்றலாம், யார் வேண்டுமானாலும் ஆண்டவரை துதிக்கலாம், எல்லாருக்கும் உரியவர் ஆண்டவர் என்ற பரந்த பொருளை அது சுட்டிக்காட்டுகின்றது.
ஆண்டவரை போற்றுவதற்கு எந்த மொழியும் தேவையில்லை, எந்த இடையீட்டாளர்களும் அவசியமில்லை, அவரவர் கடவுளை வழிபடுவதற்கு உரிமை உண்டு. ஆண்டவரை தனித்தும் போற்றலாம், இறை மக்களாக ஒன்றுகூடி போற்றலாம்.
ஒன்றுகூடி ஆண்டவரை துதிக்கும் பொழுது ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்கிறோம், இறை வழி நடத்துதலை தெரிந்து கொள்கிறோம், செயல்படும் கடவுளை பின்தொடர்கின்றோம்,
இறைவனின் பிரதிநிதிகளாக அவர் பணியை தொடர்கின்றோம்.
துதித்தலுடனே அவர் சன்னதிக்கு முன் வாருங்கள் என்று அழைப்பு நமக்கான அழைப்பு. ஏற்றத்தாழ்வுகளை களைந்து, படிநிலைகளை உடைத்து சமத்துவ சமூகம் சமைப்பதற்கு இறைவன் விடுக்கின்ற அழைப்பு. அர்ப்பணிப்போடு ஆண்டவரை துதிப்போம், வழிபாடும் - வாழ்வும் ஆண்டவருக்கு உகந்ததாக அமைத்திடுவோம், அருளுரையை கருத்தோடு தியானிப்போம்.
1. கொண்டாடி மகிழ்ந்திடுவோம் (யாத்திராகமம் 9: 1 - 7)
எகிப்தில் இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தில் சிக்குண்டு தவித்த போது இறைவனை வேண்டினார்கள், மன்றாடினார்கள், அழுது புலம்பினார்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். இஸ்ரவேலர் வாழ்வில் பெரிதும் வெளிப்பட்டது கவலை, கண்ணீர், புலம்பல், விசும்பல், பெருமூச்சு... போன்றவைகளே.
எகிப்தில் இஸ்ரவேல் மக்கள் வாழ்வில் வெளிப்படாத ஒன்றே ஒன்று "ஆண்டவருக்கு நன்றி கூறுதல்". ஒரு நீண்ட நெடிய வரலாற்றில் இஸ்ரவேல் மக்களுடைய வாழ்விலே "ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்ற" சந்தர்ப்பங்கள் இல்லாமல் போய்விட்டது.
முப்பதாக்களின் காலத்தில் எங்கெல்லாம் அவர்கள் நன்மைகளைப் பெற்றார்களோ, அங்கெல்லாம் ஆண்டவருக்கு வழிபாடு அமைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்திய சமூகம் இஸ்ரவேல் சமூகம்.
எங்கெல்லாம் கடவுள் தங்களை விடுவித்தாரோ அங்கெல்லாம் ஆண்டவருக்கு பலிபீடம் கட்டி ஆண்டவரைப் போற்றின சமூகம் இஸ்ரவேல் சமூகம்.
எங்கெல்லாம் நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்களோ அங்கெல்லாம் நன்றி மறவாமல் கடவுளுக்கு ஆராதனை செலுத்தி ஆண்டவரை பணிந்து கொண்ட சமூகம் இஸ்ரவேல் சமூகம்.
இப்படி கடவுளோடு உறவாடி மகிழ்ந்த இஸ்ரவேல் சமூகம், அடிமைத்தனத்தில் எகிப்தில் சிக்குண்டு தவித்த போது இறைவனுக்கு நன்றி செலுத்த முடியவில்லை என்ற ஏக்கத்தை ஆண்டவர் அவர்களின் பெருமூச்சுகளின் வழியாக கண்டு கொண்டார்.
மோசே வழியாக அவர்களை விடுவிக்க ஆண்டவர் களத்தில் இறங்கினார். கடவுளின் கருவியாக மோசே செயல்பட்டதை நாம் நன்கு அறிவோம்.
கடவுள் மோசே இடம் சொல்லிய வார்த்தைகளை பார்வோனிடம் மோசே கூறுகின்ற அந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவைகள், "எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு." (9 :1) "ஆராதனை" என்பது விடுதலை வாழ்வை குறிக்கின்ற சொல்லாக அமைந்திருக்கிறது.
இஸ்ரவேல் மக்களுடைய வாழ்வில் "அடையாளங்கள்" என்பது மிக முக்கியமானவைகள். அந்த அடையாளங்கள் தான் அவர்களை பற்றுறுதி வாழ்விற்கு வழி நடத்தும்.
இதுவரை நான்கு அடையாளங்களை அவர்கள் கண்ணார கண்டார்கள், அவைகள்
தண்ணீர் ரத்தமாக மாறுதல், தவளைகள், பேண்கள், வண்டுகள் மூலமாக ஏற்பட்ட அழிவுகள்.
இந்த நான்கு அடையாளங்கள் வழியாக தங்கள் முப்பிதாக்களின் கடவுள் தங்களோடு இருக்கிறார் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்து கொண்டார்கள். அதோடு மட்டுமல்ல கடவுள் தம்மை விடுவிக்க சித்தம் கொண்டார் என்பதையும் அவர்கள் கண்டு கொண்டார்கள்.
ஒவ்வொரு வாதையிலும் இஸ்ரவேல் மக்கள் காக்கப்பட்ட பொழுது, அவர்கள் வாழ்வில் இதுவரை செய்திராத கடவுளுக்கு நன்றி கூறுதலை அவர்கள் இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள்.
ஒவ்வொரு வாதையின் போதும் இஸ்ரவேல் மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை (அடையாளங்களை) நினைத்து அவர்கள் ஆண்டவருக்கு நன்றி கூறும் பொழுது அது ஒரு வழிபாடாகவே அமைந்திருந்ததை நாம் உணரலாம்.
இதுவரையிலும் இஸ்ரேல் மக்கள் அழுது புலம்பி தங்களுடைய வாழ்க்கையை எகிப்திலே வாழ்ந்து கொண்டிருந்தபொழுது, கடவுள் செய்த மாபெரும் இச்சையல்கள், வாதைகள் அவருடைய வாழ்விலே பெரும் தாக்கத்தை தந்தது. விடுதலை காற்றை மெல்ல மெல்ல சுவாசிப்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அடிமைப்பட்டுக் கிடந்த சூழலில் அவர்கள் ஆண்டவரின் மாபெரும் செயல்களை நினைத்து தங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும், தனித்து இணைந்து ஆண்டவரை போற்றி இருப்பார்கள்.
இன்றைக்கும் ஆண்டவர் மாபெரும் அடையாளங்களை உலகில் நிகழ்த்தி கொண்டே இருக்கின்றார். அது எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்வில் கடவுள் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, புரிந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
வழிபாடு என்பது கடவுளின் மாபெரும் செயல்களை நினைத்து அவரைப் போற்றுவதாகும். ஒவ்வொரு வழிபாடும் விடுதலை வாழ்வினை உறுதி செய்வதாக அமைந்திடல் வேண்டும்.
எங்கே விடுதலை இருக்கிறதோ அங்கே கொண்டாட்டம் நிறைந்திருக்கும், உறவுகளும் கூடியிருக்கும். எங்கே உறவுகள் ஒன்றுகூடி இருக்கின்றார்களோ அங்கே இறைவனும் அங்கு இருப்பார்.
ஒவ்வொரு வழிபாடும் சடங்காச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும் தூக்கிப் பிடிக்காமல் பொருளுள்ள, அர்த்தம் நிறைந்த ஒன்றாக அமைத்திடல் வேண்டும். அது மாபெரும் கொண்டாட்டமாக அமைந்திட வேண்டும்.
இஸ்ரவேல் மக்களை மட்டும் விடுவித்தவர் அல்ல நம்மையும் விடுவித்த ஆண்டவரை கொண்டாடி அவரைப் போற்றிடுவோம்.
2. பண்பாடி புகழ்ந்திடுவோம் (வெளி 5: 1 - 14)
வழிபாட்டில் பாடல்கள் மிகவும் முக்கியமானது. அந்தப் பாடல்கள் ஒன்று ஆண்டவரைப் போற்றுவதாக அமைந்திருக்கும், அல்லது நம்முடைய விண்ணப்பத்தை ஏறெடுக்கும் ஒன்றாக அமைந்திருக்கும், அல்லது கடவுளின் செயல்களை விளக்குவதாக அமைந்திருக்கும்.
வெளிப்படுத்தின விசேஷ இந்த பகுதியில் மிகவும் அருமையான ஒரு பாடல் பாடப்படுகின்றது.
" தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (5: 9,10)
இந்தப் பாடலைப் பாடினவர்களுடைய எண்ணிக்கைகளை பார்த்தால் வியப்பாக இருக்கிறது."அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது."( 5: 11) அப்படி என்றால் மாபெரும் கூட்டம் ஆண்டவரை புகழ்ந்து பாடினார்கள்.
அந்தப் பாடல் கடவுள் எவ்வண்ணமாக தங்களை மீட்டுக் கொண்டார் என்பதை வலியுறுத்துகின்றது. அதோடு மட்டுமல்லாமல் கடவுள் எவ்வாறு தங்களை உயர்த்தினார், உயர்ந்த இடத்தில் வைத்தார் என்பதையும் அதை பறை சாற்றுகின்றது.
ஒடுக்கப்பட்டு கிடந்த எங்களை கடவுள் விடுவித்து அரசர்களாகவும், ஆசாரியர்களாகவும், ஆண்டவரின் மக்களாகவும் தங்களை உயர்த்தினார் என்று ஆண்டவரை புகழ்ந்து பாடுகின்றார்கள்.
அந்தப் பாடலின் வரிகள் முடிவடையும் பொழுது "நாங்கள் பூமியிலே அரசாளுவோம்" என்று முடிகின்றது. இறைவனின் அரசாட்சிக்குரிய மக்கள் மட்டுமல்ல, ஆளுகின்ற மக்கள் என்ற செய்தியையும் அந்த பாடல் சொல்லுகின்றது.
அடிமைப்பட்டு கிடக்கின்ற மக்கள், ஒடுக்கப்பட்டு கிடைக்கின்ற மக்கள் எப்போதும்
அப்படியே இருந்து விடுவதில்லை, மாறாக கடவுள் அவர்களை விடுவிப்பார். விடுதலைப் பெற்றவர்கள் அவர்கள் ஆளுவார்கள், அரசாட்சி அமைப்பார்கள், அதிகாரத்தில் அமர்ந்து இருப்பார்கள், அவர்கள் ஆளுகை செய்வார்கள் என்ற கருத்தையும் அது நமக்கு எடுத்துச் சொல்கின்றது.
இந்தப் பாடலை அவர்கள் பாடி முடித்த பின், அதற்கு ஆமென் என்று சொல்லுகின்ற வண்ணமாக, கடவுளைப் போற்றிப் புகழ்ந்த திருக் கூட்டத்தை நாம் காணும் பொழுது பரவச உணர்வு மேலோங்குகின்றது.
"அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.(5 :13)
யோவான் தரிசனமாகக் கண்ட அந்த வெளிப்பாட்டில் படைப்பனைத்தும் சேர்ந்து ஆண்டவரை போற்றி துதிக்கின்றன. "இறைவன் - இயற்கை - இறை மக்கள் என்ற இணைந்த ஒரு கூட்டு சமூகத்தை" யோவான் நமக்கு முன் வைக்கின்றார்.
கர்த்தருக்கு புதுப் பாட்டை பாடுங்கள் என்று திருமறை நம்மை அழைக்கின்றது. பழைய பாடல்களுக்கு மாற்றாக நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொண்ட விடுதலை, நன்மை, மேன்மை இவைகளை உணர்ந்து, பண் அமைத்து ஆண்டவருக்கு பாமாலை சூட்டுவோம். பண்பாடி ஆண்டவரே கொண்டாடுவோம்.
புதிய புதிய பாடல்களை நாம் வாழும் கால சூழல்களை கருத்தில் கொண்டு, அவைகளில் கடவுள் எவ்வாறு வெளிப்பட்டார் என்பதை நினைவில் கொண்டு பண்ணமைத்து பாடி ஆண்டவரை போற்றுவோம்.
3. ஒன்று கூடி வழிபடுவோம் (யோவான் 2: 13 - 22)
யோவான் நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவின் பணிகளை எடுத்துக் கூறும் பொழுது, ஆரம்பத்திலேயே ஆண்டவர் ஆலயத்தை சுத்தம் செய்கின்ற செயலை அவர் முன்வைக்கின்றார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆலய சுத்திகரிப்பு என்பதை வெறும் செயலாக மட்டும் பார்க்காமல் அதை புரட்சியாக, அடையாளமாக காணலாம்.
ஆலய சுத்திகரிப்பு என்பது வெறும் சாதாரண செயல் அல்ல, ஆலயத்தை கூட்டி கழுவி சுத்தப்படுத்துகின்ற காரியம் அல்ல.
மாறாக ஆலயத்தையே மாற்றுவது, ஆலயம் சார்ந்த அதிகாரத்தை அகற்றுவது, சமயத்தின் பெயரால் நடக்கும் அடிமைத்தனங்களை தகர்த்தெறிவது, ஆலயத்தை வியாபாரத் தளமாக மாற்றுகின்ற சக்திகளை அப்புறப்படுத்துவது,
ஆலயம் அனைவருக்கும் உரிய இடமாக, ஆண்டவரை வழிபடுகின்ற அனைத்து மக்களையும் கூட்டி இணைக்கின்ற இடமாக அதை மாற்றுவதே ஆகும்.
ஆண்டாண்டு காலமாக வழிபடுவதற்கு மறுக்கப்பட்ட சமூகத்தை, புறவினத்து மக்களை பெண்களை, குறைபாடு உள்ளவர்களை, மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய உரிமைகளை மீட்டெடுத்த செயல்தான் ஆலய சுத்திகரிப்பு.
தூய்மை - தீட்டு என்று மக்களையும், அவர்தம் பலிகளையும் வேறுபடுத்தி, பிரித்துப் பார்த்து, பாகுபாடுகளை உண்டாக்கி, ஏற்றத்தாழ்வுகளை கட்டமைத்து அதன் மூலம் வாழ்ந்த ஒடுக்குகின்ற சமூகத்திற்கு எதிரான செயலே இந்த ஆலய சுத்திகரிப்பாகும்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த ஆலய சுத்திகரிப்பு சமணற்ற சமூகத்தை சமன் செய்தது, ஒடுக்குதல் அற்ற சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது,
சுரண்டலற்ற சமயத்திற்கு அது வழிவகை செய்தது.
மொத்தத்தில் சகோதரத்துவமும், அன்பு உறவும், மனித மாண்பும் தழைப்பதற்கு அது பேருதவியாக இருந்தது.
ஆலயம் என்பது வெறும் கட்டடம் அல்ல, நீங்களே அந்த ஆலயம் என்றும் ஆண்டவர் ஆலயத்திற்கு புதிய பொருள் விளக்கம் தருகின்றார். உயிருள்ள ஆலயமாக வாழ்வதற்கு ஆண்டவர் இறைமக்கள் ஆகிய நம்மையும் உலகையும் ஆண்டவர் அழைக்கின்றார்.
வெளிப்படுத்தற விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடவுள் கையில் இருந்த அந்த புத்தகத்தை அவர் வாங்கி அவர் வாசித்தார். அவருக்கு மட்டும் உரிய தகுதியை ஆண்டவரின் மக்களாகிய நமக்கும் ஈந்தளித்திருக்கின்றார்.
நாம் பெற்றுக் கொண்ட இந்த இறை அறிவுக்காக, இறையியல் பார்வைக்காக, இறையியல் கண்ணோட்டங்களுக்காக நம் ஆண்டவரை போற்றுவோம்.
கல்வி கற்பதற்கான உரிமையை கிறிஸ்தவம் நமக்கு தந்திருக்கிறது. அந்த உரிமையின் வழியாக மனித மாண்பை நாம் பெற்றிருக்கின்றோம். இறைவனின் சாயல்கள் என்பதை நிறுபித்திருக்கின்றோம். உலகமெங்கும் பயணிக்கவும், சான்றாகவும் சான்றோர்களாகவும் வாழ்வதற்கு நமக்கு பேருதவியாக இருந்திருக்கின்றது.
விடுவிக்கப்பட்ட மக்களாக மட்டுமல்ல வழிபடும் உரிமையையும், கல்வி கற்கின்ற உரிமையும் தந்திருக்கின்ற கடவுளுக்கு நாம் நன்றி செலுத்துவோம், இணைந்து கடவுளை போற்றுவோம, ஒன்று கூடி கடவுளை போற்றுவோம்.
நிறைவாக
--------------
ஆண்டவரைப் போற்றுகின்ற மக்கள் இறை மக்கள் ஆவார்கள். இறை மக்களிடத்தில் ஒருபோதும் ஒடுக்குதல் இருக்கலாகாது. எப்போது ஒடுக்குகின்றவர்களாக மாறுகிறோமோ, அப்பொழுது நம் வாழ்வில் வாதைகள் வரும் என்ற எச்சரிப்பை உணர்த்துகின்ற ஒன்றாக வழிபாடு அமைந்திடல் வேண்டும்.
ஆண்டவரே போற்றுகின்றது நம் உதட்டளவில் இருந்தால் அது பயனற்றுப் போகும, அது நம் வாழ்வியலாக அமைந்திடல் வேண்டும்.
ஆலயத்தில் ஆண்டவரை வழிபடுகின்ற ஒவ்வொருவரும் வாழுகின்ற இடத்தில், பணித்தளங்களில் இறைவன் நம்மோடு இருக்கிறார், நம்மை காண்கின்றார் என்பதை உணர்ந்திடல் வேண்டும்.
நாம் வாழுகின்ற சூழல்களில் இறைவன் வெளிப்படுத்தும் அடையாளங்களை கண்டுகொள்ளும் ஞானத்தை அடைந்திடுவோம், அவைகளின் வழியாக கடவுளின் செய்தியையும் நாம் பெற்றிடுவோம்.
நம்மை வழிபடுகின்ற மக்களாக மட்டுமல்ல, ஆட்சியாளர்களாகவும், அதிகாரம் வகிக்கின்ற மக்களாகவும், ஆளுகை செய்கின்ற மக்களாகவும், ஆசாரியர்களாகவும் கடவுள் உயர்த்தி இருக்கிறார் என்பதை உணர்ந்து, மாண்பை இழந்து போகாதபடிக்கு நம்முடைய வாழ்வு வழிபாடாகவே அமையட்டும்.
கடவுளை எப்பொழுதாவது ஸ்தோத்தரிக்கின்ற மக்களாக அல்ல,?எப்போதும் ஸ்தோத்தரிக்கின்ற மக்களாக, கடவுளை போற்றுவோம், அவரை வணங்குவோம், அவரில் இயங்குவோம்,?அவரை பண்பாடி கொண்டாடுவோம். கடவுள் என்றும் நம்மை ஆசீர்வதிப்பார் நாமும் பிறருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
இறைப்பணியில்
நட்புடன்
உங்கள்
Rev. . Augusty Gnana Gandhi
Ariyalur Pastorate
Trichy-Tanjore Diocese

Comments
Post a Comment