The Purpose of My Incarnation: Embracing the Way of Jesus"- Rev. A. Stephen.

 நான் மனுவுருவாகியதன் நோக்கம் என்ன?  



இயேசுவின் பிறப்பினை மறுபடியும் நினைந்து கொள்ளும் ஓர் கால கட்டத்திற்குள் நாங்கள் பிரவேசித்துள்ளோம். இயேசுவின் பிறப்பினை உலகிற்கு அறிவிக்கும் பணியில் பல்வேறு நற்செய்தியாளர்கள் பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். யூத கலாசாரம் மிக்க கால கட்டத்தில் ஆணாதிக்க சிந்தனைகள், தனிப்பட்ட மீட்பு நிலை சார்ந்த சிந்தனைகள் போன்றவற்றின் மத்தியில் லூக்கா நற்செய்தியாளன் தனது நற்செய்தியை எழுதும் போது புரட்சிகரமான சிந்தனைகளை முன்வைப்பதை நாம் காணலாம்.

இயேசுவின் பிறப்பில் பெண்களுக்கு சிறப்பிடத்தை லூக்கா வழங்கியுள்ளார். இது அன்றைய ஆணாதிக்கத்திற்கு ஏற்பட்ட பெரியதோர் சவாலாகும். பொதுவாக யூத ஆண்கள் தங்களுடைய துணையின்றி பெண்கள் கருத்தரிக்க முடியாது என்ற மமதையில் வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் லூக்கா 1:26-28 காபியேல் தேவ தூதன் மரியாளுக்குத் தோன்றி நீர் தூய ஆவியின் துணை கொண்டு கருவுருவாய் எனக் கூறிய கூற்று ஆணாதிக்கத்திற்கு கிடைத்த பதிலடியாகும். மேலும் ஏசாயா 7:14இன் படி ஓர் இளம் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் என்ற செய்தியும் இதனை வலுப்படுத்துகின்றது.

லூக்கா 1:68-80 வரை உள்ள பகுதியில் சகரியாவின் பாடலை நாம் பார்க்கலாம். இப் பகுதியில் சகரியாவுக்கும் எலிசபேத்துக்கும் பிறந்த திருமுழுக்கு யோவானுக்கு பெயரிடுகின்ற உரிமை எலிசபேத்திடமே காணப்பட்டது என ஆசிரியர் கூறுகின்றார். குறிப்பாக யூத சமுதாயத்தில் பிள்ளைகளுக்கு பெயரிடும் உரிமை தந்தையிடமே காணப்பட்டது ஆனால் இத்தகைய உரிமையை தாயானவள் இங்கு எடுத்திருப்பது யூத சமயத்திற்கான இன்னுமோர் பதிலடியாகும். 

பழைய ஏற்பாட்டில் 1 சாமுவேல் 2ம் அதிகாரத்தில் அன்னாளின் பாடலை நாங்கள் பார்க்கின்றோம். அன்னாளின் பாடலுக்கு ஒத்த பாடலை லூக்கா 1:46-55 வரையுள்ள பகுதியில் நாம் காண்கிறோம். இந்த மரியாளின் கீதத்தில் ஆண்டவர் இயேசு சமூகப் புரட்சியையும், பொருளாதாரப் புரட்சியையும், சமயப் புரட்சியையும் ஏற்படுத்துவார் என மரியாள் கூறுகின்றார். இவ்வாறாக மரியாளை ஒரு தீர்க்கனாக ஆசிரியர் காண்பிக்கின்றார். எதிர்காலத்தில் நடைபெற இருப்பவைகளை முன்கூட்டியே தெரிவிப்பவர்களை இறைவாக்கினர் என அழைப்பர். மல்கியா முதல் இயேசுவின் பிறப்பு வரை 400 வருடங்கள் இறைவாக்குகளை கேட்டிராத யூத சமுதாயத்திற்கு மரியாளின் இறைவாக்குகள் புரட்சிகரமாக இருந்திருக்கலாம். எனவே லூக்கா மரியாளை ஓர் புரட்சிப் பெண்ணாக காண்பிக்கின்றார்.

இயேசுவின் பிறப்பை காண்பதற்காக பல வருட காலம் ஆலயத்தில் காத்திருந்த அன்னாள் என்னும் விதவைப் பெண்ணைக் குறித்து லூக்கா பேசுகின்றார். இவள் ஆலயத்தை விட்டு நீங்காமல் இதற்காக காத்திருந்தவள் ஆவார். யூத சமூகத்தில் விதவைகள் செல்லாக் காசுகளாகவும் தொலைக்கப்பட்ட காசுகளாகவும் காணப்பட்ட போதிலும் இவ் விதவைப் பெண்ணின் மாறா நம்பிக்கையை பாராட்டுவது லூக்காவுக்குரிய ஓர் தனித்துவமாகும். மேலும் லூக்கா 21ம் அதிகாரத்தில் விதவைப் பெண்ணின் காணிக்கையை இயேசு பாராட்டியதை நாம் காணலாம். ஏனெனில் யூதர்கள் தொழுகைக் கூடங்களில் பெண்களின் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத சூழல் காணப்பட்டது. இதனொளியில் லூக்கா இப் பெண்களை பாராட்டுவது இன்னுமோர் சமூகப் புரட்சியாகும்.

லூக்கா 2:35-50 வரை உள்ள பகுதியில் சிமியோன் இயேசுவைத் தம் கரங்களில் ஏந்தி இஸ்ரவேலர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் என் மீட்பரை என் கண்கள் கண்டன எனப் பாடி மரியாளை நோக்கி உன் ஆத்துமாவையும் ஓர் பட்டயம் ஊடுறுவிச் செல்லும் எனக் கூறுகின்றார். இதனூடாக இயேசுவின் பாடுகள் மரணம் போன்றவற்றின் வெளிப்பாடுகளை ஓர் பெண்ணுக்கே லூக்கா அறிவிக்கின்றார். இதன் மூலம் பெண் ஓர் பலவீனமானவர்கள் வலுவான செய்திகளை தாங்கிக்கொள்ளும் மனநிலை அற்றவர்கள் என்ற யூத சமூகத்தில் கருத்தியல்களுக்கு எதிராக லூக்கா செல்வது பாராட்டுதலுக்குரியதாகும்.

இயேசுவின் கன்னிப் பிறப்பை ஏற்றுக் கொள்ளும் மத்தேயு நற்செய்தியாளரும் இயேசுவின் பிறப்பை பெண்களுடன் தொடர்பு படுத்துகின்றார். குறிப்பாக மத்தேயு 1:1-18 ஆகிய பகுதியில் 5 முக்கியமான பெண்களைப் பற்றி பேசுகின்றார். உதாரணமாக தாமார், இராகாப், ரூத், பத்சேபாள் மற்றும் மரியாள் ஆகிய ஐவரை உதாரணம் காட்டி இயேசுவும் இப்பேர்ப்பட்ட சமுதாயத்தினால் ஓரங்கட்டப்பட்ட பெண்களின் பரம்பரையிலேயே பிறந்துள்ளார் என்ற செய்தியை கூறுகின்றார். இதனூடாக ஓரங்கட்டப்பட்ட மக்களின் விடுதலையாளர் என்ற நிலைக்கு இயேசுவை உயர்த்துகின்றார்.

யூத ஆணாதிக்க சூழலில் பிறந்து வளர்ந்த பவுலடிகளார் கலாத்தியர் 4:4-5 வசனங்களில் காலம் நிறைவேறிய போது கடவுள் தமது மைந்தனை கன்னியில் வயிற்றில் பிறக்க அனுமதித்தார் எனப் பவுல் பேசுகின்றார். இதனூடாக இயேசுவின் பிறப்பில் புலப்படும் மனிதத் தன்மையையும் சரீரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றார். இவைகள் அக் காலத்தில் ஞானவாத கொள்கையினருக்கு கொடுத்த ஓர் பதிலடியாகும். ஏனெனில் இவர்கள் மனித சரீரம் கடவுளால் உருவாக்கப்படவில்லை எனவும் அது தீயது எனவும் மக்கள் மத்தியில் போதித்து வந்தனர்.

இயேசுவின் பிறப்பு பெண்களின் மகிமையை உயர்த்துவதற்காக ஏற்பட்ட ஓர் மகிமையான செயற்பாடாகும். எனவே இன்று பல்வேறு பாடுகளுக்கூடாக செல்லும் பெண்களின் மகிமையை உயர்த்துவதற்காக நாம் பாடுபடுவது அவசியமானதொன்றாகும். குறிப்பாக போருக்கு பின்னான காலப்பகுதியில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் பெண்கள் மலையகப் பகுதியில் துன்புறும் பெண்கள் போன்றவர்களின் மாண்புக்காக செயற்படுவதே கிறிஸ்து பிறப்பின் அழைப்பாகும்.

அருள்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை திருச்சபை.

 


Comments