"United in Love"- Rev. J Stalin Prabakar.

அன்பில் ஒருங்கிணைக்கப்படுதல்

உபாகமம் 4:1-10, 1 கொரிந்தியர் 1:10-18. (அல்லது) எபேசியர் 3:1-7

சங்கீதம் 30, யோவான் 15:11-17


சிதறிக்கிடந்த மலர்கள் சில நிமிடங்களில் ஒரு அழகான மலர் மாலையாக ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த சிறப்பு இந்த மலர்களுக்கு கிடைக்க காரணம் அதை ஒருங்கிணைக்க திறமை படைத்த கைவினைஞர் அதற்கான நாரின் வழியே அந்த மலர்களை ஒருங்கிணைத்ததே.

*ஒருங்கிணைக்கப்படுதல் என்பது தொகுக்கப்படுதல் அல்லது ஒன்றாக்குவது என்று பொருள்படும்*. எதனால்? எவரால்? எந்த நோக்கத்திற்காக என்பதை பொறுத்தே ஒருங்கிணைப்பு என்பது நன்மைக்கானதா அல்லது தீமைக்கானதா என்பது வெளிப்படும். இன்றைய கருப்பொருளின் அடிப்படையில் நாம் அன்பில் ஒருங்கிணைக்கப்படும்படி நாம் அழைப்பு பெற்றிருக்கிறோம். எதற்காக? எப்படி என்பதை கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதிகளிலிருந்து தியானிப்போம்.

1. பாத்திற்கல்ல பரிசுத்த வாழ்விற்காக கற்பனைகளின் வழியே இறை அன்பில் ஒருங்கிணைக்கப்படுதல்

இஸ்ராயேல் மக்கள் மீதான இறையன்பின் மகத்துவத்தை மோசே அம்மக்களோடு பேசுகிறார். இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து புறப்பட்டது முதல் நாற்பது ஆண்டு கால வனாந்திர பயணத்தில் கடவுள் நடத்தின விதங்களை நினைப்பூட்டி, கடவுளின் கற்பனைகளில் வாழ மோசே இஸ்ராயேல் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். எகிப்தின் அடிமைத்தனத்தில் தவித்து தங்கள் வாழ்வை உரிமையை இழந்த மக்களின் நிந்தனைகளை கடவுள் கண்ணோக்கினார். அவர்களை விடுவித்து விடுதலை வாழ்வை சுதந்தரிக்க மோசே வழியாக வழிநடத்தினார். பார்வோன் படைக்கு காப்பாற்றினார். உணவு, நீர். இறைச்சி என பராமரித்தார். போர் செய்ய தெரியாத இந்த மக்களுக்காக அவரே போர் செய்தார். அவர்கள் சும்மாயிருந்து விடுதலை காற்றை சுவாசித்தனர். சபிக்கும்படியாக அழைத்து வரப்பட்ட தீர்க்கர் பிலேயாமைக் கொண்டே கடவுள் இஸ்ராயேலரை ஆசீர்வதித்து அவர்கள் நமக்குப் பிரியமானவர்கள் என்பதை நிரூபித்தார். ஆனால் இஸ்ராயேலரோ இந்த மகத்துவமுள்ள இறையன்பை மறந்து, இன்னொரு கடவுளை நாடி, சித்தீமில் கற்பனைகளுக்கு விரோதமாக மோவாபியரோடு பாவம் செய்யும்படி ஒருங்கிணைந்தார்கள். அதன் முடிவு விடுதலை வாழ்வு வாழ அழைக்கப்பட்டவர்கள் அங்கேயே சுமார் இருபத்து நான்காயிரம் பேர் மடிந்துபோனார்கள்(எண் 25:1-9). இவையெல்லாம் நினைவுபடுத்தி இன்னும் மீந்திருப்பவர்கள் பிழைத்து வாழும்படி கடவுனின் கற்பனைகளை பின்பற்றி வாழ மோசே வழியாக கடவுள் அறைகூவல் விடுக்கிறார். இந்த கற்பனைகள் பிழைத்து வாழ்ந்திருக்கும்படி செய்கிறது (உபா 4:1); ஞானமும் விவேகமும் உள்ள சந்ததியாக விளங்க செய்கிறது (உபா 4:6) இறைநீதியை எல்லோருக்கும் வெளிப்படுத்த வழிசெய்கிறது (உபா 4:6,6). நாமும் கடவுளின் கற்பனைகளின்படி நடந்து அவற்றை நம் தலைமுறைகளுக்கு கற்பிக்கும்போது அனைவரும் கடவுளின் மக்களாக அவரின் இறையன்பில் ஒருங்கிணைக்கப்பட்டு அவரது ஆசீர்வாதங்களை நிச்சயமாக சுதந்தரித்துக்கொள்ள இயலும்.

2. சிதறிக்கிடக்க அல்ல; இணைந்து வாழ- ஒருமைப்பாட்டின் வழியே கிறிஸ்துவின் அன்பில் ஒருங்கிணைக்கப்படுதல் (கொரி 1:10-18)

இஸ்ராயேல் அரசர்களின் போக்கினால் யுதா, இஸ்ராயேல் என சிதறிப்போன மக்கள் தொடர் சிறையிருப்புகளில் வாழ்ந்தார்கள். மீண்டு வந்த போது தங்களுக்கான மேசியாவை எதிர்நோக்கியிருந்தனர். மேசியாவாக கிறிஸ்து வந்தார். அவர் சிலுவையில் தந்த விலையேறப்பெற்ற இரந்தத்தினால் மனுக்குலம் முழுமைக்கும் நித்திய மீட்பு உண்டானது. கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் உண்மையாக விசுவாசித்து மீட்பின் வாழ்வில் நிலைத்திருக்கவும், அதற்கான சாட்சிகளாக வாழவும் திருச்சபைகள் உருவானது. அப்படிப்பட்ட சுழலில் கொரிந்து பட்டிண திருச்சபை மீண்டும் ஒருமைப்பாடு இல்லாமல் சிதறிக்கிடந்ததை அறிந்து

அப்.பவுல் "கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? " (1கொரி 1:13) என வின்வுகிறார்.

இன்றும் திருச்சபைகள் ஒருமைப்படாமல் சிதறிக்கிடக்கின்றன ? எனில் அதற்கான காரணம் என்ன. கிறிஸ்துவினால் ஒன்றிணைக்கப்பட்டதே திருச்சபை, கிறிஸ்துவின் மீட்பிற்கும் உயிர்த்தெழுதலுக்கும் உயிருள்ள சாட்சிகளே திருச்சபை, அதனை விடுத்து தங்களையோ, தங்கள் குழுக்களையோ, நாங்கள் சார்ந்துள்ள நபர்களையோ மேன்மைபாராட்டிக் கொள்ள கிறிஸ்துவின் ஐக்கியத்தில் இடமில்லை அல்லது அது கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றும் திருச்சபை அல்ல. திருச்சபை எதுவாக இருப்பினும் அதன் மையம் கிறிஸ்துவே என்பதை உணர்ந்து ஒருவருக்கொருவர் மேன்மைபாராட்டிக் கொள்ளாமல், மனத்தாழ்மையுள்ளவர்களாக, கிறிஸ்துவையே மேன்மைபாரட்டும்படி ஒருங்கிணைக்கப்பட்டு கிறிஸ்துவில் ஒன்றுபட்டவர்களாக வாழும்போது வேறுபாடுகள் களையப்பட்டு கிறிஸ்துவின் ஒரே மந்தையாக அவரது அன்பில் ஒருங்கிணைக்கப்பட இயலும்.

3. களையாக அல்ல: கனி கொடுக்க- ஒருவரிலோருவர் பாராட்டும் அன்பின் வழியே சகோத அன்பில் ஒருங்கிணைக்கப்படுதல் (யோவான் 15:1-7)

அனைத்து நியாயப்பிரமாணங்களும் கற்பனைகளும் தொகுக்கப்பட்டு இரண்டு பிரதான கற்பனைகள் கொடுக்கப்பட்டன. கிறிஸ்து சிநேகிதராக, மூத்த சகோதரராக அவர்தம் ஜீவனை நமக்காக தந்ததின் வழியாக தமது அன்பை வெளிப்படுத்தினார். கிறிஸ்து நம்மில் பாராட்டிய, பாராட்டும் அதே அன்பினை நாம் சக மனிதரிடத்தில் பிரதிபலிக்க கிறிஸ்துவே அறைகூவல் விடுக்கிறார். கிறிஸ்துவின் அன்பு பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட அனைத்தையும் சீடர்களுக்கு அறிவித்து அவர்களை தம் சிநேகிதர் என்ற நிலைக்கு உயர்த்தியது. அந்த சீடர்கள் கிறிஸ்துவுக்கு பின் அவரது அன்பினால் சக மனிதர்களும் விடுதலை வாழ்வினை அனுபவிக்க அலைந்து திரிந்து அறிவித்து இரத்த சாட்சிகளாய் மரித்தனர். அந்த கிறிஸ்துவின் அன்பு தொன்றுதொட்டு ஈராயிரம் ஆண்டுகளாக எந்த ஆதிக்கத்திற்கும் உட்பட்டு அடங்கிவிடாமல் இன்றுவரை பரவிக்கொண்டே இருக்கிறது. அந்த அன்பில் எந்த வேற்றுமையுமின்றி கனிகொடுக்கும் சகோதர சகோதரிகளை, சிநேகிதர்களை உருவாக்கிடும் நற்குலத் திராட்சைக்கொடிகளாக நம்மை எதிர்பார்க்கிறார் ஆண்டவர். நாம் ஆயத்தமா?


Rev. J. ஸ்டாலின் பிரபாகர்

ஆயர், மதுரை - முகவை திருமண்டிலம்,

தென்னிந்திய திருச்சபை.


சுருக்க ஜெபம்:

அனைவருக்குமான கடவுளே, உமது மக்களாக நாங்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ அழைத்திருக்கிறீர். அனைவர் மீதான கண்ணியத்தையும் நாங்கள் உறுதிப்படுத்ததக்கதாக பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை அறிய நீங்கள் எங்களுக்கு உதவியருளும், சாதி, நிறம், சமய நம்பிக்கை அல்லது பாலினம் அடிப்படையில் எங்களுக்குள் பிரிவினை இல்லை என்று ஒருவரை ஒருவர் மதித்து ஒவ்வொருவரின் எண்ணங்களையும் மதிக்க உதவியருள வேண்டுமென்று உம்மோடும். தூய ஆவியாரோடும். ஒரே கடவுளாக வாழ்ந்து ஆட்சி செய்கிற இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.


23 தை 2022

அன்பில் நிலைத்திருங்கள்

யோவான் 15:11-17





• 1908ம் ஆண்டு முதல் ஐக்கிய வாரம் திருச்சபையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தை 18ம் திகதி பேதுருவின் திருநாளுடன் ஆரம்பித்து தை 25ம் திகதி பவுலின் மறுரூபமாகுதலின் திருநாளுடன் நிறைவு செய்யப்படுகின்றது.

• திருத்தந்தை 17ம் பெனர்டிக் அவர்கள் நாம் கிறிஸ்துவின் அன்பை நோக்கி நெருங்கிச் செல்லும்போது எமக்கிடையே இருக்கும் பிரிவினைகளை நாம் மறந்துவிடுகின்றோம் என்கிறார். அத்துடன் திருத்தந்தை புனித பிரான்சிஸ் அவர்கள் எம்மை பிரித்து நிற்கும் எல்லைகளை தாண்டி நாம் செல்லும்போது எமது சகோதரர்களை நாம் கண்டுகொள்ளவும் பிற கலாசாரங்களை தாண்டிச் செல்லவும் எமக்கு உதவியாக காணப்படும் என்கிறார்.

• வாசிக்கப்பட்ட பழைய ஏற்பாட்டு பாடத்தில் உபாகமம் அல்லது இணைச்சட்டத்தில் 4:1- 10ல் மோசே இஸ்ரவேல் மக்களை நோக்கி, கடவுளுடைய வார்த்தையை மையப்படுத்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறார். அதாவது, கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருந்தால் ஆண்டவருடைய வார்த்தைகளை நாம் கடைப்பிடிப்போம். மேலும், திருப்பாடல் அல்லது சங்கீதம் 30ல் கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருக்கும்போது நாம் ஒருவர் மற்றவர்களுடைய தவறுகளை மன்னிப்போம். அதற்கூடாக, அன்புறவில் நிலைத்திருக்க முடியும் எனப் பார்க்கின்றார்.

• புதிய ஏற்பாட்டு பகுதியில் திருச்சபை தலைவர்களை மையப்படுத்திய பிரிவினை கொரிந்து சபைக்குள் காணப்படுகின்றது (1 கொரிந்தியர் 1:10-14). கொரிந்து பிரதேசத்தில் பவுலே நற்செய்தியை ஆரம்பத்தில் அறிவித்தபடியால் அவருக்கு ஒரு குழு காணப்பட்டது. அப்பல்லோ ஓர் தத்துவ அறிஞராகவும் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டபடியினால் அவருக்கும் ஒரு குழு காணப்பட்டது. கேபா திருச்சபையின் தலைவராக காணப்பட்டபடியினால் அவருக்கும் ஒரு குழு காணப்பட்டது. ஈற்றில் கிறிஸ்துவுக்கும் ஒரு குழு காணப்பட்டது. இப்படிப்பட்ட பிரிவினையை பார்த்த பவுல் திருமுழுக்கினை உதாரணமாக அவர்கள் முன் வைக்கின்றார். அதாவது, திருமுழுக்கு ஒப்புரவாகுதலின் அடையாளம் அதாவது நம்மை கடவுளுடனும் மக்களுடனும் இணைக்கும் அன்பின் அடையாளம். எனவே, அதனை பிரிவினையின் அடையாளமாக பயன்படுத்த வேண்டாம் என பவுல் கூறுகின்றார்.

• நற்செய்தி வாசகத்துக்குள் வரும் யோவான் 15:11-17ல் யோவான் இயேசுவின் அன்புக்கட்டளையை நியாபகப்படுத்துகின்றார். பொதுவாக நாம் மத்தேயு 28:19-20ல் காணப்படும் இயேசுவின் இறுதிக் கட்டளையைக் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஆனால், யோவான் இங்கு அன்புக் கட்டளையைப் பற்றியே பேசுகின்றார். நாம் ஒருவரிலொருவர் அன்பாய் இருப்பதனூடாக இயேசுவின் சீடர்களாக முடியும் (யோவான் 13:34-35). இங்கு, ஆண்டவர் இயேசு தம்மை பின்பற்றுபவர்களை நண்பர்கள் என அழைக்கின்றார். இதற்கூடாக அன்பை மையப்படுத்திய ஒற்றுமையை எதிர்ப்பார்க்கின்றார்.

• இன்றைய திருச்சபை மக்களாகிய நாங்கள் திருமறை, திருமுழுக்கு, அன்புக்கட்டளை ஆகியவற்றை உபயோகித்து எம்மை பிரித்து நிற்கும் அனைத்துத் தடைச் சுவர்களையும் தாண்டி ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்போம். அவ்வன்பு எமக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் (1 கொரிந்தியர் 13:1-7) 

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கைத் திருச்சபை

Comments