HEALING IN SICKNESS
பிணியிலிருந்து குணப்படுத்தல்
# திருமறைப் பகுதிகள்:
விடுதலைப் பயணம்
4: 10 - 17
திருப்பாடல்கள்
103: 1 - 10
யோவான் 9: 1 - 7
2 கொரிந்தியர்
12: 1 - 10
# உட்புகும் முன்:
ஒரு மருத்துவமனையில் அழகான வசனம், பொருள் உள்ள வகையில் எழுதப்பட்டிருந்தது, அது என்னவென்றால் "மருந்தளிப்பது மருத்துவர் கடமை, குணமளிப்பது கர்த்தரின் கிருபை."
பரட்டை அண்ணன் திருவிருந்து பற்றி மிகவும் அழகான ஒரு பாடல் எழுதி இருப்பார். "அன்னைக்கு மேலறையில் ஆசானாம் இயேசு சுவாமி, அனைத்து நோய் போக்கிடவே ஆக்கி வச்ச நல் மருந்து - திருவிருந்து விடுதலை தந்திடும் அருமருந்து.."
இயேசுக் கிறிஸ்து பற்றி பல பாடல்கள்
கிறிஸ்தவ கீர்த்தனைகளில் இடம் பெற்றிருந்தாலும் இந்த பாடல் மிகவும் அற்புதமான பாடல், இயேசு
கிறிஸ்துவின் குணமாக்குதலை மிகவும் அற்புதமாக எடுத்துக் காட்டி உள்ள பாடல்,
"ஒரு மருந்தரும்
குரு மருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே..
அருள் மருந்துடன் ஆனந்த மருந்து
ஆதியிற்றானாய் முளைத்த மருந்து
வரும் வினைகளை மாற்றும் மருந்து
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து...
இந்தப் பாடலில் குறிப்பாக இயேசுக் கிறிஸ்துவின் குணமளித்தல் "வறுமையுள்ளவருக்கே" என்ற வரி ஆழமான அர்த்தமுள்ள வரிகள்.
பொதுவாக நோய்கள்
"உடல் சம்பந்தப்பட்டவையாக இருக்கும், உளம் சம்பந்தப்பட்டவையாக
இருக்கும்." மற்ற பணிகளுக்கும் குணமளிக்கும் பணிக்கும் மாபெரும்
வித்தியாசம் உண்டு மற்ற பணிகள் வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. குணமளிக்கும்
திருப்பணி வாழ்க்கையின் அடித்தளமாய் இருக்கின்றன.
இயற்கையாக வருகின்ற நோய்கள் ஒருவகை., நமக்கு நாமே வருவித்துக் கொள்கின்ற நோய்கள் மற்றொரு வகை. நோய்கள் பொருளாதாரத்தோடு நெருங்கிய தொடர்புடையவை. Health and Wealth are interelated. Health is the biggest wealth for a human being in their entire lifetime.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் என்கிறார் வள்ளுவர். நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். இது உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்.
திருமறை காட்டும் வழிமுறைகளை நம் கருத்தில் கொண்டு தியானிப்போம்...
1. உளநல உதவி பெற்ற மோசே - விடுதலை பணியாளராக தன்னை உயர்த்திக் கொண்டார்( Healing Through Motivation) - விடுதலைப் பயணம் 4: 10 - 17
ஏசாயா நூலில் கடவுளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டங்கள் பல உண்டு, அவைகளில் ஒன்று "ஆலோசனை கர்த்தர்." கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதியில் கடவுள் மோசேயுடன் ஒரு நீண்ட உரையாடலை மேற்கொள்கின்றார். அதில் கடவுள் எவ்வளமாக ஆலோசனை தருகின்றவர் என்பதை மிகவும் அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கடவுள் மோசேயை தன் விடுதலைத் திருப்பணிக்கு தேர்ந்தெடுத்து அனுப்பும் போது மோசேயுடன் உரையாடுகின்றார். அந்த உரையாடலில் கடவுள் நான் உன்னை அனுப்புகிறேன் நீ என் நிமித்தமாக செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
அதற்கு மோசே தன் குறைபாடுகளை கடவுளிடம் எடுத்து கூறுகின்றார். நான் மந்த நாவும், திக்குவாயும் உடையவன், இந்த பணிக்கு நான் உகந்தவன் அல்ல என்று மறுப்பு தெரிவிக்கின்றார்.
மோசே கடவுளிடம் தன் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படியாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை என் குறைபாடுகளை சரி செய்தால், நான் இந்த பணிக்கு என்னை அர்ப்பணிக்கிறேன் என்றும் மோசே கடவுளிடம் கூறவே இல்லை.
கடவுளும் மோசையிடம் உன் குறைகளை நான் சரி செய்கிறேன் என்று வாக்குறுதியும் கொடுக்கவில்லை, மாறாக உன் குறைபாடுகளோடு நான் உன்னை தெரிந்து கொண்டேன் என்று கடவுள் மோசேயிடம் தன் தெரிந்தெடுத்தலை தெரிவிக்கின்றார்.
உன் சகோதரன் உனக்குத் துணையாக இருப்பான். நான் உனக்கு சொல்லுபவைகளை நீ அவனிடம் சொல்லு. அவன் அதை மக்களுக்கு எடுத்துரைப்பான், இவ்வண்ணமாக நீங்கள் இருவரும் இணைந்து என் பணியை நிறைவேற்ற வேண்டும் என்று ஆண்டவர் மோசேயிடம் தெரிவிக்கின்றார்.
கடவுளின் தெரிந்தெடுத்தல் வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. நிறைவிலும் குறை காணுபவர்கள் மத்தியில், குறைவில் நிறைகளை காண்பவர் கடவுள் என்பதை இந்த பகுதி விளக்கி காட்டுகிறது.
திருமறை முழுவதும் மோசே எடுத்தாளப்படுகின்றார். அவரின் பணிகள், செயல்கள், கட்டளைகள், கடவுளோடு கொண்டிருந்த உறவு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. திருமறையின் எந்த ஒரு இடத்திலும் மோசே அவர்களின் குறைபாடு சுட்டிக்காட்டப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக அவரின் பணிகள், செயல்கள், வெற்றிகள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
மோசே கடவுளிடம் தன் குறைவுகளைச்
சொல்லி இறைத் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தாலும், ஆலோசனைக்
கர்த்தர் மோசேயை தம்
ஆலோசனைகளால் திடப்படுத்துகின்றார், பெலப்படுத்துகின்றார், ஆற்றல்
படுத்துகின்றார். இறுதியில் விடுதலை பணிக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்கும்படி
ஆண்டவர் ஆலோசனை தருகின்றார்.
மோசே விடுதலை வீரராக தன்னை மாற்றிக் கொண்டதற்கு மிகப்பெரிய காரணம், கடவுளின் ஆலோசனைகளும் அவர் காட்டிய வழிமுறைகளும்தான்.
முதிர் வயதை எட்டி,?ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மோசே, வரலாற்றில் மாபெரும் விடுதலை வீரராக தன்னை மாற்றிக் கொண்டதற்கு காரணம் கடவுளின் ஆலோசனைகளை திறந்த மனதுடன் பெற்றுக்கொண்டு, அவர் மூலமாக உளநல உதவி பெற்றதன் விளைவாக உண்டானது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மோசேயின் ஓரிரு குறைபாடுகள் அவருக்குள்ளாக இருந்தாலும், கடவுள் மோசேயின் பல திறன்களை அவருக்கு நிச்சயம் எடுத்துக்காட்டியிருக்கக்கூடும்.
அவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு மோசே முழு மனதுடன் விடுதலைப் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்கின்றார். மோசேயின் ஆலோசனைகள், வழி நடத்துதல்கள், தலைமைத்துவ பண்புகள், பிரச்சனைகளை கையாளுகின்ற அவரின் ஆளுமைகள், மாபெரும் கூட்டத்தை முன்னின்று வழிநடத்தும் பாங்குகள், மாபெரும் இயக்கத்தை கட்டமைத்து வனாந்தரத்தில் நடத்தி வந்த விதங்கள் ஒவ்வொன்றும் வியப்புக்குரியவைகள்.
மேற்கண்ட இத்தனை பண்புகள் மோசேயிடம் இருந்தும், அவைகளை கருத்தோடு மோசேவுக்கு எடுத்துக்காட்டி, பண்படுத்தி, உளநல உதவி செய்து அவரை மாபெரும் விடுதலை வீரராக இந்த உலகிற்கு அடையாளம் காட்டியது ஆண்டவரின் உரமூட்டிய சொற்களும், ஆலோசனைகளுமே.
வலுவற்றவர்களோடு கடவுள் தன்னை இணைத்துக்கொண்டு அவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றார். இது கடவுளின் குணமாக்குதல் திருப்பணிக்கு மாபெரும் முன்னுதாரணமாக இருக்கிறது.
கடவுள் - மோசே - ஆரோன் என்கின்ற இந்த கூட்டணி, வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை உண்டாக்கியது. கடவுள் செயல்படுகின்றவர் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியது. ஒடுக்கப்பட்டோருடன் கடவுள் தன்னை இணைத்துக் கொண்டு, அவர்களின் விடுதலை வாழ்விற்கு வித்திடுகிறார் என்ற இறையியல் பார்வையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.
உடலில் சுகவீனம் ஏற்பட்டு இருப்பின் அதை குணமாக்குவதில் எளிது. ஆனால் மனதளவில் ஏற்பட்டிருக்கின்ற நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம். கடவுள் மோசே அவர்களுக்கு மனதளவில் இருந்த குறைபாடு என்னும் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்தி, அவரை விடுதலை வீரராக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் .
இன்றைய உலகில் குணமாக்குதல் என்கின்ற திருப்பணி மிகவும் அவசியமானது. அது கடவுளின் திருப்பணி.
பேதுரு இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் மீன் பிடிக்க முடியவில்லை. சோர்ந்து போயிருந்த பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சந்தித்து வலையை ஆழத்தில் போடுங்கள் என்று சொல்லும் பொழுது, ஐயரே இரவு முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டோம் என்று கூறும் பொழுது ஆண்டவர் கூறுகின்ற அந்த உரமூட்டும் வார்த்தைகள், அந்த ஆலோசனைகள், அந்த திறனூட்டும் சொற்கள் பேதுருவை மீண்டும் வலை வீசும்படி செய்தது, முடிவில் அற்புதங்களை அவர்கள் சுவைத்தார்கள்.
கடவுளின் இடத்தில் இருந்து, நாம் ஒவ்வொருவரும் உலகில் உளநல உதவியாளராக பணியாற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் பேசுகின்ற ஒவ்வொரு சொற்களும் அவர்களை உரமூட்ட வேண்டும், ஆற்றல் படுத்த வேண்டும், அனல் மூட்ட வேண்டும் அவர்களை உலகின் மாபெரும் சக்தியாக உருவெடுக்க நாம் வழியாக, வாய்க்கால்களாக இருந்திடல் வேண்டும் என்பதை இந்த நாளில் உணர்வோம்.
மருத்துவர்களாக, செவிலியர்களாக பணி செய்கின்றவர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் "மனைகள்" மருத்துவமனைகளாக மாறவேண்டும். நம் வீட்டில் உள்ளவர்களுக்கு, உறவுகளுக்கு, நண்பர்களுக்கு நாம் என்றும் உளநல உதவியாளர்களாக இருந்திடுவோம்
2. ஆற்றுப்படுத்துதல் உதவி பெற்ற பவுல் - இறை பணியாளராக தன்னை மாற்றிக் கொண்டார். ( Healing Through Counseling) - 2 கொரிந்தியர் 12: 1 - 10
திரு தூதுவராகிய பவுலடியார் பல திருச்சபைகளை நிறுவியவர், பல இறை அடியவர்களை உருவாக்கினவர். பல திருத்தூதுவ பயணங்களை மேற்கொண்டவர், இறையாட்சிக்காக அயராது பணியாற்றியவர் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம்.
பவுலடியார் உருவத்தில் குள்ளமானவர் என்று இறையியலாளர்கள் கூறுகின்றார்கள். அவரின் உருவம் தனது திருப்பணிக்கு என்றும் தடையாக இருந்ததே இல்லை என்று அவர் பணிகள் வழியாக நாம் அறிகின்றோம்.
மக்களின் உருவ கிண்டல்கள், கேலிகள் அவரை எந்த விதத்திலும் அவருக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை, அவரும் அதனால் பாதிக்கப்படவில்லை. மாறாக முழு உத்வேகத்தோடு, முழு ஆற்றலோடு தன் அழைப்புக்கு ஏற்ற திருப்பணியை அவர் செய்து நிறைவேற்றினார் என்பதை திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
உருவத்தை காட்டிலும் அவருக்கு ஒரு தீராத வலிப்பு நோய் இருந்ததாக திருமறை வழியாக நாம் அறிகின்றோம். அவரும் அந்த நோய் நீங்கும்படியாக ஆண்டவரிடம் மன்றாடுவதையும் திருமறைப் பகுதி நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
தன் இறைவேண்டல் வழியாக கடவுளிடம் அவர் மன்றாடுகிறார். எனக்கு ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது அது பலமுறை நீங்க வேண்டும் என்று கேட்டேன், ஆனாலும் கடவுள் தன் மன்றாட்டுக்கு வேறு விதமாக பதில் தந்தார் என்பதை பவுலடியார் குறிப்பிடுகின்றார்.
தன் மன்றாட்டிற்கு ஆண்டவர் கொடுத்த பதில் "என் கிருபை உனக்கு போதும்" என்பதே. "பலவீனத்தில் என் பலன் பூரணமாக உனக்கு விளங்கும்" என்பதே கடவுள் தந்த அந்த பதில். கடவுளின் இந்த பதில், ஆண்டவர் தந்த உளநல உதவி என்பதை நாம் அறிகின்றோம்.
கடவுளின் ஆற்றுப்படுத்துதல் பவுலடியாருக்கு மன உறுதியை தந்தது. தனக்கு ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தும் அந்த முள்ளோடு ஆண்டவரின் அடியார்களை எவ்வளவாக துன்புறுத்தினாரோ, சபைகளை பாழ்படுத்தினாரோ, ஆண்டவரின் அடியவர்களை ஒடுக்கினாரோ அதே முள்ளோடு ஆண்டவரின் திருப்பணியை செய்ய வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்பதை பவுலடியார் கடவுளின் ஆற்றுப்படுத்துதல் வழியாக அறிந்து கொண்டார்.
பின்பு அந்த முள் அகல வேண்டும் என்று வேண்டுவதை விட்டுவிட்டு, இறைவன் தந்த அந்த முள் தனக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த தீராத நோயின் மத்தியிலும், பிணியின் ஊடாக வைராக்கியமாக ஆண்டவருக்காக தம் திருப்பணியை அவர் மேற்கொண்டார்.
அந்த பலவீனத்தை தன் பலமாக பவுல் அடியார் எடுத்துக் கொண்டார். அது அவரின் பற்றுறுதி வாழ்வை வெளிப்படுத்துகிறது. கடவுள் தன்மீது அன்பு கொண்டுள்ளார் என்ற விசுவாச வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. அந்த முள் தான் கடவுள் தனக்குத் தந்த அழைப்பு என்பதையும் பவுல் அடியார் உணர்ந்து கொண்டதாக நமக்கு வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த பொழுது, எங்கள் ஆசிரியர் சன்னி அண்ணன் அவர்கள் தன்னுடைய மகன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் நாங்களும் பங்கு பெற்றிருந்தோம். பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காக தன் மகனை அழைத்துக் கொண்டு வந்தார். அவர் வந்த பின்பு தான் தெரியும் அவரின் மகன் ஒரு குறைபாடு உள்ளவர் என்று. அந்த கேக்கில் எழுதப்பட்டிருந்த வாசகம் "என் கிருபை உனக்கு போதும்." சன்னி அண்ணன் அவர்களின் ஊழியமும், அவரின் அருட்பணி தாகமும் தன் மகனின் குறைபாடு மத்தியில் தான் இருந்தது என்பதை நாங்கள் அறிந்து கொண்டு, அவரின் பற்றுறுதி வாழ்க்கையைக் கண்டு வியந்தோம்.
பவுலடியார் வாழ்ந்த காலகட்டங்களில் மருத்துவ வசதி குறைவு எனினும் தன்னுடைய வலிப்பு நோய் மத்தியில், ஆண்டவருக்காக வைராக்கியத்தோடு வாழ்ந்த வாழ்வும், அவர் செய்த திருப்பணியும், திருப்பயணங்களும் நமக்கு அறைகூவல் விடுக்கின்றன.
தமஸ்க்கு சாலையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சந்தித்த பின்பதாக, ஆண்டவரோடு மேற்கொண்ட உரையாடல் நிமித்தமாக, பவுலடியார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக அவர் பெற்றுக் கொண்ட ஆலோசனைகள், ஆற்றுப்படுத்தல்கள் அவரை ஒடுக்குபவர் என்ற நிலையிலிருந்து அவரை மாற்றி ஒடுக்கப்பட்டோருடன் இணைந்து கொள்ளும் நிலைக்கு அவரை உயர்த்தியது.
அதிகாரத்தின் அமைப்புகளோடு கொண்டிருந்த உறவை உதறித் தள்ளிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களோடு உடனிருந்து அவர்களோடு தானும் துன்புறுதல் என்கின்ற உன்னத நிலைக்கு அவரை வழி நடத்தியது.
இயேசு கிறிஸ்துவின் "பாடுகளின் வழியே மீட்பு" என்கின்ற கருத்தியலில் அவரை இணையச் செய்து, தன்னை "பாடுபடும் தாசனாக" உயர்த்திக் கொள்வதற்கு ஆண்டவரின் ஆற்றுப்படுத்துதல் அவருக்கு மாபெரும் உதவியாக இருந்தது.
ஆற்றுப்படுத்தல் பணி என்பது மிகவும்
அத்தியாவசியமான பணியாகும். துன்பத்தில் இருப்பவருக்கும், துயரத்தின்
பிடியில் இருப்பவருக்கும், ஆறுதல்
வேண்டி காத்திருப்பவர்களுக்கும் இத்தகைய பணி அவர்களை மேலும் உயிரோட்டம் உடையதாக மாற்றும், பற்றுறுதியில்
வளரச் செய்யும்.
பவுலடியாருக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆற்றுப்படுத்தல், பவுலடியாரின் வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. வெறும் பணியாளராக இருந்தவரை "திருப்பணியாளராக உயர்த்தியது, அருட்தொண்டராக உருமாற்றியது, திருச்சபை என்னும் மாபெரும் இயக்கத்திற்கு முன்னோடியாக" அவரை உருவாக்கியது.
எந்தன் இயேசு தருகிறார் என்ற கீர்த்தனை
பாடலில்
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில்
... ஏனெனில்
"சேற்றில் வீழ்ந்த
என்னையவர்
தூக்கியெடுத்தார், தீபமாய்
என்னை தேற்றினார், பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார், ஜீவ
இரத்தம் கொண்டு மாற்றினார், தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆற்றுப்படுத்தலை மிகவும் உணர்வுபூர்வமாக வடித்துள்ளார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பணிகளை "குணமாக்கும் திருப்பணி, போதிக்கும் திருப்பணி, கண்டித்து உரைக்கும் திருப்பணி ..." என்று பல விதங்களில் நாம் புரிந்து கொள்ளலாம். இவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஆற்றுப்படுத்தும் திருப்பணி. ஆண்டவரின் ஆற்றுப்படுத்தும் திருப்பணி ஆண்டவரின் அடியவர்கள் அனைவருக்கும் ஆன திருப்பணி அந்தப் பணியின் வழியாக இறையாட்சியை கட்டுவோம்.
3. உடல் நல உதவி பெற்ற மாற்றுத்திறனாளி - களப்பணியாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார் (Healing Through Therapy) - யோவான் 9: 1 - 7
பிறவியிலேயே பார்வை இல்லாத ஒரு மனிதருக்கு, ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது அற்புதத்தினால் பார்வையை அடைய செய்கின்ற நிகழ்ச்சி இந்த பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல் இரண்டு தலைப்புகளில் கடவுளின் குணமாக்குதல் எவ்வண்ணமாக இருந்தது என்பதை நாம் அறிந்தோம். இந்தப் பகுதியில் சற்று வித்தியாசமாக ஆண்டவர் அற்புத சுகமளிக்கின்ற நிகழ்வை யோவான் ஆசிரியர் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மற்ற அற்புதங்களை காட்டிலும், இந்த அற்புதம் மிகவும் வித்தியாசமாக கையாளப்படுகிறது.
ஆண்டவர் உமிழ்நீர் எடுத்து, மண்ணை பிசைந்து, பார்வை அற்றவரின் கண்களில் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அவன் கழுவி பார்வை அடைந்தவனாக வந்தான் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அற்புதத்தை வேறு ஒரு கண்ணோட்டத்தில் நமக்கு காட்டப்பட்டுள்ளது.
இந்த அற்புதத்தை ஆண்டவரின் குணம் அளிக்கும் அற்புதமாக நாம் புரிந்து கொள்ளலாம். இதை ஒரு மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்து ஆண்டவர் சுகமளித்தார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
எப்படி இருப்பினும் பார்வையற்றவர் ஆண்டவரின் மருத்துவ சிகிச்சையினாலும், அற்புதத்தினாலும் அவர் பார்வை பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
தொடுதல் என்பது ஆண்டவரின் திருப்பணியில் மிகவும் சிறப்பான ஒன்று. குணமளித்தல் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஆண்டவரின் குணமாக்கும் செயலுக்கும், மற்றவர்களின் செயல்பாட்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு.
ஆண்டவரின் குணமாக்குதல், சேவையை மையமாகக் கொண்டது, பணத்திற்கும் அதனை சார்ந்த மற்ற தகவுகளுக்கும் ஆண்டவரின் குணமாக்குதல் முற்றிலும் நேர் எதிரானது.
வசதியற்றோர், ஏழைகள், வறுமை, கைவிடப்பட்டவர்கள் என அத்தனை பேருக்கும் ஆண்டவரின் குணமாக்குதல் நிறைவாக இருந்தது.
இது முற்றிலும் இலவசமாகவே நடைபெற்றது. இவைகள் பெரும்பாலும் மக்கள் வாழுகின்ற இடத்திலேயே நடந்தது. நோயுற்றவர் தன்னிடம் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை தடுத்து நோயுற்றவர்கள் வாழுகின்ற இடத்திலேயே அவர்களுக்கு வாழ்வு அமைக்கும் விதமாக அமைந்திருந்தது.
இயேசு கிறிஸ்துவின் இந்த குணமாக்குதல் இறை ஆட்சியின் ஒரு அங்கமாகவே நடைபெற்றது.
பார்வையற்றோர்களின் பிறப்பு பாவத்தோடும், சாபத்தோடும், முற்பிறப்போடும் தொடர்புடைய ஒன்றாக கருதப்பட்டு அவர்களை இழிநிலைக்கு உட்படுத்தி, அவர்களின் மாண்புகளை சிதைத்து, மனிதர்களாகவே கருதப்படாத நிலை சமூகத்தில் இருந்தது. மொத்தத்தில் இது சமூக நோயாகவே வலம் வந்தது.
சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று பொருள். இயேசு கிறிஸ்து பார்வையற்றவரை சீலோவாம் குளத்திற்கு அனுப்பினார். அந்த சீலோவாம் குளம் அவரை சமூகத்திற்கு அனுப்பியது.
மக்களிடம் படிந்துள்ள தீண்டாமை, சாதியம், தூய்மை - தீட்டு போன்ற சமூக நோய்களை குணமாக்குவதற்கு, சீலோவாம் குளம் பார்வை அற்ற மனிதரை பார்வை உள்ளவராக குணமாக்கி அவரை அனுப்பினது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆற்றுப்படுத்தல் பணியை மட்டுமல்ல, திறனூட்டி குணமாக்கும் பணியை மட்டுமல்ல, மருத்துவ சிகிச்சையின் மூலமாக குணமாக்குதல் திருப்பனியையும் ஆண்டவர் மேற்கொண்டார் இன்று இதன் வழியாக நாம் அறிந்து கொள்கிறோம்.
ஆண்டவரின் தொடுதலில் மனதுருக்கமும், அன்பும், பாசமும், நேசமும், பரிவும் முழுமையாக வெளிப்பட்டது. அது உடல் நலனையும் குணம் ஆக்கியது உள நலனையும் குணப்படுத்தியது.
அது நோயிலிருந்து மட்டும் விடுதலை அல்ல. முழுமையான விடுதலைக்கு(Wholistic) , சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு... போன்ற விடுதலைக்கு அது வழி வகை செய்தது.
நற்செய்தி பகுதியில் அற்புதம் பெற்ற மனிதருக்கும் அதன் பின்பதாக அங்கிருந்த பரிசெயர்கள் மற்றும் சமய தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
நற்செய்தி பகுதியின் இறுதியில் அவர் தன்னிடம் வாதம் செய்த அத்தனை மக்களையும், அவர் கையாளுகின்ற வார்த்தைகளும், பயன்படுத்துகின்ற சொற்களும், எதிர் கருத்துக்களும், வாதங்களும் சமூகத்தில் படிந்திருந்த சமூக நோய்களை நீக்குவதாகவே அமைந்திருந்தது.
பார்வையற்ற ஒரு மனிதரை ஆண்டவர் இயேசு கிறிஸ்து குணம் ஆக்கினார். குணமடைந்த அந்த மனிதர் சமூகத்தில் நிலவிய பாவம் என்ற நோய், சாபம் என்ற நோய், பிறப்போடு தொடர்புடைய அனைத்து அடிமைப்படுத்தும் நோய்களை குணமாக்கும் மருத்துவராகவே செயல்பட்டார், அதற்காக பாடுபட்டார் அதற்காக அவர் துன்புறுத்தப்பட்டார் என்பதையும் இந்த நற்செய்திப் பகுதி வழியாக நாம் அறிந்து கொள்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் நாசரேத் அறிக்கை, இறை மக்களாகிய நமக்கும், திருச்சபை அன்பர்களாகிய நமக்கும் தரப்பட்டுள்ள கடமைகள் மற்றும் கட்டளைகள் ஆகும்.
அருள் தொண்டர்கள் நற்செய்தி பணியை குணமாக்கும் திருப்பணியின் வழியாக நிறைவேற்றினார்கள். அவர்களின் அடியார்களாகிய நாமும், அவர்களின் வழியில் சேவை மனப்பான்மையோடு, இறையாட்சியின் தகவுகளில் ஒன்று குணமாக்குதல் என்ற புரிதலோடு இயேசுவின் வழியில் பயணிக்க திருமறை நமக்கு உந்துதல் தருகிறது.
பார்வையற்ற மனிதர் இயேசு கிறிஸ்துவின்
குணமாக்குதல் மூலமாக பார்வை பெற்றார். அத்தோடு நில்லாமல்
அவர் சமூக நோய்களை தீர்ப்பதற்கு தன்னை ஒரு மருத்துவராக, களப்பணியாளராக
தன்னை உருவாக்கிக் கொண்டார்.
நோய் குறித்த தவறான கருத்துக்களையும், மூட பழக்க வழக்கங்களையும், சடங்காச்சாரங்களையும் இனங்கண்டு, அவைகளை களைவதற்கு ஒவ்வொருவரும் குணமாக்கும் மருத்துவராக சமூகத்தில் செயல்படுவோம். நோயில்லா சமூகத்தை கட்டமைப்போம்.
# நிறைவாக:
ஞான வரங்களை பெற்றிடுவோம். அவ்வரங்களில் ஒன்று குணமாக்கும் வரம் என்பதை உணர்ந்திடுவோம். குணமாக்கும் மருத்துவராக களத்தில் என்றும் பணிபுரிந்திடுவோம்.
மருத்துவர்களாக பணிபுரியும் ஒவ்வொரு மருத்துவரும், இயேசு கிறிஸ்துவின் சிந்தையை அணிந்தவர்களாக மருத்துவ சேவைகளை புரிந்திடுவோம்.
மருத்துவமனைகளில் பணி புரியும் ஒவ்வொரு பணியாளர்களும், அது நோயுற்றுவர்களின் "மனை", "இல்லம்" என்ற உணர்வோடு, அந்த இல்லத்தில் பணிபுரிகிறோம் என்பதை நினைவில் கொண்டு, அவர்களை குடும்ப உறவாக நினைத்து கடமைகள் புரிந்திடுவோம்.
வருமுன் காப்போம் என்ற முன்மதியோடு குணமாக்கும் திருப்பணியை திருச்சபையாக தொடர்ந்திடுவோம்.
மருத்துவம் படிப்பதற்கு அர்ப்பணிப்போடு, ஆயத்தமாய் இருக்கிற அனைவருக்கும் மருத்துவக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து "நீட்" போன்ற சமூக நோய்களை களைவதற்கு தொடர்ந்து போராடுவோம்.
தனிமனித நோயை மட்டுமல்ல சமூக நோய்களையும் களைவதற்கு இறை வேண்டலோடு, இறை அர்ப்பணிப்போடு, இறை தூண்டுதலோடு இறைவனின் வழியில் பயணிப்போம், இறை ஆசியை பகிர்ந்திடுவோம்.
ஆண்டவர் என்றும் உங்களோடு இருப்பாராக...
இறைப்பணியில் நட்புடன்
அருள்திரு. அகஸ்டி ஞான
காந்தி,
அரியலூர் சேகரம்,
திருச்சி -தஞ்சை திருமண்டலம்.
Comments
Post a Comment