THE CORRUPTION OF CREATION
படைப்பின் சீர்கேடு
திருப்பாடல்கள் 8
கலாத்தியர் 1
: 5 - 10
லூக்கா 10 : 13 -
16
# உட்புகும் முன்:
இறைவனின் படைப்பில் "காலங்கள்" மிகவும் அற்புதமானவை. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு . மரங்கள் ரசித்து வாழ்கின்றன. தளிர்விடும் காலம்,பூக்கின்ற காலம், கனி தரும் காலம், இலையுதிர் காலம், மீண்டும் தளிர்க்கும் காலம் ... என அதன் வாழ்க்கைச் சக்கரங்கள் அழகாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவைகளைச் சார்ந்த பறவையினங்களும், விலங்கினங்களும், பூச்சி இனங்களும் தங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன, மனித தலையீடு இருக்கின்ற வரைக்கும்.
நான் மேலிருந்து
உலகைப் பார்த்தேன்
எனக்கு மூச்சு முட்டுகிறது...!
வான்வெளி எங்கும்
நச்சுக் காற்றுகள்...!
வனங்களைப் பார்த்தேன்
அவைகள் பலாத்காரம் செய்யப்பட்டு
இருக்கிறது...!
நிலங்களை கண்ணோக்கினேன்
அவைகளும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன...!
காற்றில் மிதந்து வந்த செய்தி
என் காதை எட்டியது
சுற்றுச்சூழல் தினம்
சிறப்பாக அனுசரிக்கப்பட்டது...!
இப்படிக்கு
தேசியக்கொடி...!
-அகஸ்டி
ஞான காந்தி.
முன்னொரு காலத்தில்
விதைக்க ஒரு காலம்,
பயிரிடும் காலம்,
களை பிடுங்கும் காலம்,
பயிர்கள் வளரும் காலம்,
அறுவடை செய்யும் காலம்,
பண்டிகைக் காலம்,
நிலத்திற்கு ஓய்வின் காலம்..,
என்று இயற்கையின் சக்கரம் சீராக
சுழன்று கொண்டிருந்தது. இன்றைக்கு அவைகள் பொய்த்து போயின. அறுவடை
காலத்தில் மழை, வெள்ளம், புயல். இயற்கையை
குறை சொல்ல முடியாது. இயற்கையை சீரழித்த மனிதர்களே தங்களுக்கு தாங்களே வரவழைத்துக்
கொண்ட சாபக்கேடுகள்.
நாடுகளைப் பிரித்த பொழுது முதல்
தர நாடுகள், இரண்டாம் தர நாடுகள், மூன்றாம்
உலக நாடுகள் என்று பிரித்தார்கள். இயற்கையை பாழ்படுத்தி, சீரழித்த
பட்டியலில் முதல் இரண்டும் முதலிடம் பெறுகின்றன. அவர்கள்
ஒருபுறம் இயற்கை அழித்துக் கொண்டே, பூமி
வெப்பமயமாதல் குறித்து
பேசுகின்றார்கள், அதற்கான திட்டங்களை வகுக்கின்றார்கள். முரண்பாடுகளின்
ஒட்டுமொத்த உருவமாக வல்லரசு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களையும், வாழ்வாதாரங்களையும்
தங்கள் சுயநலங்களுக்காக சுரண்டி, சீரழித்து, சிதைத்து வருகின்றன. இவர்களை
வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள் எனலாம்.
சமுத்திரத்தை மாதா என்று வணங்குவதும்,
ஆறுகளுக்கு பெண்களின் பெயர்களை
வைத்து
மகிழ்வதும்,
செல்வங்களை பெண்களின் குறியீடுகளாக
வைத்து
வாழ்வதும்,
நிலங்களை தெய்வமாக
வழிபடுவதும்,
முன்னோர்கள் வாழ்வில் பக்திக்குரியவனாக
இருந்தன..!
ஆனால் இன்று
பக்தி என்னும் போர்வையால் மனிதர்களால்
சீரழிந்து கிடக்கின்றன...!
வழிபடுதலும் குறையவில்லை, வாழ்வாதாரங்களை
சீரழிப்பதும் குறையவே இல்லை. இரண்டும் ஒரே நேர்கோட்டில் இணைந்தே பயணிக்கின்றன.
மறைமுகமாக ஒரு போட்டி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது, யார் "வலியவர்"
இறைவனா? மனிதனா? என்று. இறைவன் இந்த உலகை பல நூறு கோடி ஆண்டுகளாய் உண்டாக்கி, உருவாக்கி ,
பாதுகாத்து, பண்படுத்தி வருகின்றார் ஆனால் மனிதர்கள் நினைத்தால்
ஒரு நொடியில் இதை அழித்து விடலாம். அவ்வளவு வல்லமையும், ஆற்றலும், ஆயுதங்களும், அணுக்கருவிகளும், அதிகாரமும்
உடையவராக இருக்கின்றார்கள்.
இயற்கை மனிதரை சார்ந்து வாழ வேண்டிய
அவசியம் இல்லை. ஆனால் மனிதர்கள் இயற்கையை சார்ந்து வாழ வேண்டும், என்பதை
மானுடம் நினைவில் கொள்ள அழைக்கப்படுகின்றது.
நமது முன்னோர்கள் நமக்கு தந்த இயற்கையை, படைப்புகளை, அதன்
சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்தி, பாதுகாத்து, அவர்களுக்கு பரிசளிப்பது நமது கடமை என்பதை ஒவ்வொரு
நாளும் உணர்வில் கொள்ளுவோம்.
1. பொது நலன் துறந்து
தன்னலம் சார்ந்த வேட்கைகளால் - சுரண்டப்பட்ட படைப்பு (ஏசாயா 5
: 1 - 13)
2. பொது உடைமை
களைந்து தனி உடமை கொள்கைகளால் -
சிதைக்கப்பட்ட படைப்பு (லூக்கா 10 : 13 - 16)
3. பொது நியமம்
மறந்து சுயநீதி செயல்பாடுகளால் - சீரழிக்கப்பட்ட படைப்பு (கலாத்தியர் 1
: 5 - 10)
இந்த மூன்று தலைப்புகளின் வழியாக
திருமறை பகுதிகளை தியானிப்போம்.
1. பொது நலன் துறந்து தன்னலம் சார்ந்த வேட்கைகளால் - சுரண்டப்பட்ட படைப்பு (ஏசாயா 5 : 1 - 13)
ஏசாயா தீர்க்கதரிசி பாடலோடு இந்த
பகுதியை துவங்குகின்றார். இந்த பாடல் ஒரு புலம்பல் பாடலாக அமைந்துள்ளது. இந்த
புலம்பல் பாடல் வழியாக நியாயம் கேட்கின்றார், வழக்காடுவதற்கு
உரிமை கோருகின்றார் , நியாயம் கேட்கும் உரிமை கீதமாக இதை பார்க்கலாம்(1:1-3)
என் நேசருக்கு என்று செழிப்பான
தோட்டம் ஒன்று இருந்தது, அது தன் பலனை இழந்தது. நிலம்
தன் பலனை இழப்பதற்கு நியாயம் தீர்க்கப்பட வேண்டும், யார்
காரணமோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களின் நியாயம்
விசாரிக்கப்பட்டு நியாய தீர்ப்பு பெற வேண்டும் என்ற கருத்துகளோடு இந்த பாடல் அமைந்திருக்கிறது.
இஸ்ரவேல் மக்கள் நிலம் கடவுளுடையது
என்ற பற்றுறுதியில் வாழ்ந்த இறை மக்கள். நிலத்திற்கான
சட்டங்களையும், நிலம் சார்ந்த மக்களின் வாழ்வுரிமைகளையும் மோசே வழியாக
கடவுளின் கட்டளைகளை பெற்றுக் கொண்ட சமூகம் இந்த சமூகம்.
ஓய்வு நாள் சட்டமும், யூபிலி
சட்டமும், கடன் விடுதலையும், வறியவர்
விடுதலையும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு, அவைகள்
ஏழைகளுக்கு உரியவனாக, அவர்களின் விடுதலை வாழ்வுக்கு வழிவகைக்கும் நடைமுறைகளாக
கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.
இஸ்ரவேல் மக்களின்
"பொது நலனை" கருத்தில் கொண்டு, இவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட சமூகம், உலகிற்கு முன்மாதிரியாக வாழ அழைக்கப்பட்ட சமூகம் என்று
உயரிய நோக்கத்தோடு வாழ்வதற்கு உருவாக்கப்பட்டவைகளே இந்த சட்டங்களும், நியமங்களும், கட்டளைகளும்.
ஏசாயா தீர்க்கதரிசி வாழ்ந்த காலகட்டங்களில்
இந்த "பொது நலன்" இஸ்ரவேல் மக்களிடத்திலே
மறைந்து போயின, "சுயநலன்கள்"
மேலோங்கின, சுய விருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.
பொது நலனை மறந்த இஸ்ரவேல் சமூகத்தில்
சிலர் "தாங்கள் மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி
மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச்
சேர்த்து, வயலோடே வயலைச் சேர்த்துக் கொண்டார்கள்.(5 : 8)
"பொதுநலன்"
இருக்கும் இடத்தில், "சமத்துவம்
மிகுந்திருக்கும், சகோதரத்துவம் ஓங்கி நிற்கும், சமூகநீதி என்றும் மலர்ந்தே இருக்கும்.
ஆனால் இஸ்ரவேல் சமூகம் இந்த
"பொது நலனை மறந்து தன்னலனை ஏற்று" சமூகத்திற்கும்
படைப்பிற்கும் அவர்கள் சீரழிவை வருவித்தார்கள்.
விளைச்சல் நிலங்கள் குடியிருப்பு
பகுதிகளாக மாற்றப்பட்டன. தங்களின் சுகபோக வாழ்வுக்காக எல்லைகள் விரிவாக்கப்பட்டன. நிலங்கள்
ஏழைகளிடமிருந்து இருந்து அபகரிக்கப்பட்டன. உல்லாச வாழ்விற்காக
நிலங்களும், சுரண்டப்பட்டன, ஏழைகள்
அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
உல்லாச வாழ்வு அவர்களிடையே அதிகரித்துக்
கொண்டே இருந்தது. தங்களின் உல்லாச வாழ்விற்காக நிலங்கள் சூறையாடப்பட்டன, நிலம்
சார்ந்த உற்பத்திகளும், பயிர் வகைகளும், விவசாயிகளும், அதனைத்
தொடர்ந்து வரும் பண்டிகை விழாக்களும், அதனை ஒட்டிய
சமூக பண்பாட்டு கலாச்சாரங்களும், ஆன்மீக வாழ்வும் வேரறுக்கப்பட்டன.
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம்
தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும்
குடித்துக்கொண்டேயிருக்கிற வர்க்கம் உருவாகின.(5 : 11)
இவர்களை இன்றைய சூழலில்
"மதுபானப் பிரியர்கள்" என்று அழைக்கும்படியாக நமது அரசாங்கம் கூறுகின்றது. இவர்களின்
சுய நலன்களுக்காக நிலங்கள் எவ்வாறு பாழ்படுத்தப்பட்டன என்பதை ஏசாயா தீர்க்கதரிசி வெளிச்சம்
போட்டு காண்பிக்கின்றார்.
பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம்
ஒரேபடி ரசம் மட்டுமே தருகின்ற அளவுக்கு நிலத்தின் வளங்கள் சூறையாடப்பட்டன, சுரண்டப்பட்டன, அவைகள்
சீரழிக்கப்பட்டன.(5 : 10) ஒரு குறிப்பிட்ட உயர் குடி வர்க்கத்திற்காக
நிலங்கள் பலனை இழக்கும் வரைக்கும் அவைகள் சூறையாடப்பட்டன என்பதை இதன் வழியாக நாம் அறிகிறோம்.
ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்
(5:10) அளவிற்கு நிலத்தினுடைய அத்தனை வளங்களும் சுரண்டப்பட்டன. சுழற்சி
முறையில் விதைக்கின்ற பாரம்பரிய பயிரிடும் முறைகள் சிதைக்கப்பட்டன, வாழ்வாதாரங்களை
உருவாக்கும் பயிர்களை காட்டிலும் பணப்பயிர்கள் அதிகமாக விளைவிக்கப்பட்டதால் நிலங்கள்
தன் சாரத்தை இழந்து போயின. அவ்வளவு தூரம் அவைகள் பாழாக்கப்பட்டன என்பதை இதன் வழியாக
நாம் அறிந்து கொள்கிறோம்.
அவர்களின்
"பக்தி வாழ்வு" எவ்வாறு மாறிவிட்டது என்பதை மேலும்
அவர் விளக்குகின்றார். அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும்
வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர்
கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.(5 :12)
இவர்கள் ஆளுகின்ற வர்க்கமாக தங்களை
மாற்றிக் கொண்டார்கள், பிறரை அடிமைப்படுத்துகின்ற சக்திகளாக தங்களை உருவாக்கிக்
கொண்டார்கள். சட்டங்களும் திட்டங்களும் இவர்களுக்காகவே வகுக்கப்பட்டன
என்பதையும் இவைகள்
வழியாக புரிந்து கொள்கிறோம்.
மதுபானம், குடிவெறிகள், கேளிக்கை
விடுதிகள் அதனைத் தொடர்ந்து காம களியாட்டங்கள் எப்போதும் சமூகத்தில் கேடுகளை உண்டாக்கும், அநீதிகளை
விளைவிக்கும், சமூகத்தை சீரழிப்பதோடு மட்டுமல்ல படைப்பையும் சீரழிக்கும்.
சமத்துவமாக வாழ்ந்து வந்த இஸ்ரவேல்
சமூகத்தில் "வர்க்க வேறுபாடுகள்"
தன்னலம் சார்ந்த செயல்பாடுகளால் உருவாகின. நாளடைவில்
வர்க்க வேறுபாடுகளால் சமூகம் பிளவு பட்டன. ஒன்று உழைக்கின்ற
வர்க்கம் அடுத்தது உழைப்பை சுரண்டி சுகபோகமாக வாழுகின்ற வர்க்கம் மற்றொன்று ஏழைகள், வறியவர்கள், விளிம்பு
நிலை மக்கள் என்ற பிரிவினைகள் சமூகத்தில் உருவாகின என்பதை இந்தப் பகுதியின் வழியாக
நாம் அறிந்து கொள்கிறோம்.
இந்த குறிப்பிட்ட ஆளும் வர்க்கத்தினால் மாபெரும் விளைவுகள் உருவாகின. போர்களை
எதிர்கொள்ள வேண்டி இருந்தது(Facing War Conflict), படையெடுப்புகளை
சந்தித்தார்கள்( Fighting against Invasion), அவர்கள்
சிறைப்பட்டுப்போகிறார்கள்(Imprisoned & Exiled), அவர்களில் கனமுள்ளவர்கள்
பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்(Undergone Starvation, )அவர்களுடைய
திரளான கூட்டத்தார்(Mass) தாகத்தால் நாவறண்டுபோகிறார்கள்(Water
scarcity) (5 :13).
பொது நலன் சார்ந்து வாழ அழைக்கப்பட்ட
இஸ்ரவேல் சமூகம் தங்கள் சுயநலத்தால் தாங்களும் சீரழிந்தனர், படைப்பையும்
சீரழித்தனர், பக்தி வாழ்வையும் சீரழித்தனர்.
ஆண்டு கொள்ளுங்கள் என்று மனிதருக்கு
கொடுத்த கட்டளைகளை பண்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், படைப்பாளரை
மகிமைப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கு தவறிய இஸ்ரவேல் சமூகத்தை, கடவுள்
தீர்க்கர் வழியாக நியாயம்
கேட்கிறார், நியாயத்தீர்ப்பில் நிறுத்துகிறார், தண்டனையையும்
வழங்குகிறார். இது ஒரு எச்சரிப்பின் செய்தி இன்றைக்கு வாழுகின்ற நமக்கு…
2. பொது உடைமை களைந்து தனி உடமை
கொள்கைகளால் - சிதைக்கப்பட்ட படைப்பு (லூக்கா 10 : 13 - 16)
ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து
தமது திருப்பணியை "மனம் திரும்பங்கள், இறையாட்சி
சமீபமாய் இருக்கிறது" என்ற
முழக்கத்தோடு கலிலேயா பகுதியிலிருந்து ஆரம்பித்தார்.
இயேசு கிறிஸ்து முன்வைத்த
"இறை ஆட்சி" என்பது "பொதுவுடமை"
சித்தாந்தங்களை, செயல்பாடுகளை, கருத்தியல்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.
பொதுவுடைமை சமூகம்
"ஆண்டான் - அடிமை, ஏழை -
பணக்காரன், இருப்பவர் - இல்லாதவர்"
என்ற "வர்க்க வேறுபாடுகளை ஒழித்து சமத்துவத்தையும், சமூக
நீதியையும், சகோதரத்துவத்தையும் வளர்ப்பவை."
அனைவருக்கும் அனைத்தும் என்கின்ற செயல்பாட்டில் சமூகத்தை கட்டி அமைப்பவை ஆகும்.
இதுவரையிலும் இஸ்ரவேல் மக்கள் தங்கள்
யூத பாரம்பரியத்தின் படி அனைத்து சமய பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தார்கள், கடைப்பிடித்தார்கள், பண்டிகைகளை
ஆசரித்தார்கள், பலி செலுத்தினார்கள், ஆண்டவருக்கென்று
காணிக்கைகளைப் படைத்தார்கள், வருடத்திற்கு ஒருமுறை புனித யாத்திரையும் மேற்கொண்டு
வந்தார்கள்.
திருமுழுக்கு, தர்மம், ஜெபம், உபவாசம், தசமபாகம்
போன்ற சமய பாரம்பரியங்களில் யாவற்றிலும் குறை வைக்கவே இல்லை.
கடுகிலும், வெந்தயத்திலும்
அவர்கள் தசமபாகம் செலுத்தினார்கள் எனும் பொழுது, அவர்கள்
எவ்வண்ணமாக நியமங்களை கடைப்பிடித்து வந்தார்கள் என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது.
இஸ்ரவேல் மக்கள் குறிப்பாக கோராசீன், பெத்சாயிதா, கப்பர்நகூம்
இந்த மூன்று பட்டணங்களிலும் இருக்கின்ற யூத சமய பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும், நியமங்களையும்
சடங்காச்சாரமாக கடைப்பிடித்து வந்தார்கள்.
அவர்களில் இறையச்சமும் இல்லை, இறை
நீதியும் இல்லை.
தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து
இறைவனையும் மறந்தார்கள், கட்டளைகளைத் துறந்தார்கள், வழிபாடும்
வாழ்வும் பொருந்தி போகவே இல்லை.
அடுத்தவர்களை, ஏழைகளை
வஞ்சித்தார்கள், நிலங்களை அபகரித்தார்கள், புறவினத்து
மக்களின் பழக்கவழக்கங்களை தங்களுடையதாக மாற்றிக் கொண்டார்கள். சமய
வாழ்வும் சமூக வாழ்வும் இறைவனுக்கு எதிராகவே இருந்தது.
இயேசு கிறிஸ்து, இஸ்ரவேல் சமூகத்தை முன்மாதிரி சமூகமாகவும், இறை
சித்தத்தை அறிந்து செயல்படுத்தும் சமுதாயமாகவும், இறை
அச்சத்தோடு, நியாயத் தீர்ப்பை குறித்த தெளிவுகளோடு வாழ்ந்து, சான்று
பகர்கின்ற சமூகமாக கட்டியமைக்க விரும்பி தனது இறையாட்சிக்கான பயணத்தை, பொதுவுடமை சமூகத்திற்கான பணிகளை இங்கிருந்து துவக்கினார். அனைத்து
இடங்களுக்கும் அவர் சென்று போதித்தார், அற்புதங்களை
செய்தார், அடையாள செயல்களை நிகழ்த்தினார்.
தான் வசித்து வந்த கப்பர்நகூம்
பகுதிகளில் அவர் அனேக அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர் செய்தார், குறிப்பாக
முடக்குவாதமுற்ற மனிதரை குணமாக்கினார். அதன் மூலமாக
சமூகத்தில் மாபெரும் விளைவுகளை, மாற்றங்களை ஆண்டவர் கொண்டு வந்தார்.
இம்மூன்று பட்டணங்களும் பெரு நகரங்களாகும். வாணிபம்
வளர்ந்திருந்தது, மீன்பிடித்
தொழிலும் பிரதானமாக இருந்தது. இங்கு புறவினத்து மக்களும் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள்.
நகரமும் செல்வ செழிப்பாக இருந்தது, செல்வந்தர்கள்
உயர்நிலையில் இருந்தார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இம்மூன்று நகரங்களையும், நகரத்து மக்கள் மீது கோபம் கொண்டு உங்களுக்கு
"ஐயோ" என்று கடிந்து கொள்கின்றார்.
ஏனென்றால் இந்தப் பகுதிகளில் ஆண்டவர்
இயேசு கிறிஸ்து சுற்றித் திரிந்து , அனேக அற்புதங்களையும், அடையாளங்களையும்
செய்து, உணவளித்து, போதித்து, நல்வழிப்படுத்தி, குணமாக்கி, பேய்களை
துரத்தி, குறைகளை களைந்து, தேவைகளை சந்தித்து மாற்றங்களை உண்டாக்கினார்.
இந்த மூன்று பட்டணத்து மக்களையும்
தம் மக்களாக பாவித்து, தம் உறவுகளாக சிநேகித்து, தம்
சொந்தங்களாக கருதி, தன்
உடன் பிறப்புக்களாக மதித்து, பழகி
அவர்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
அவர்களுக்காக சிலுவை சுமக்கவும்
தயங்கவில்லை, பாடுபடவும் தயங்கவில்லை, அவமானங்களை
சந்திக்கவும் தயங்கவில்லை, மரிக்கவும் துணிந்தார்.
ஆனால் இம்மூன்று பட்டணங்களும் மனம்
திரும்பவும் இல்லை, இயேசுவின் இறை ஆட்சியை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
இம்மூன்று நகரத்து யூதர்கள், புறவினத்தாருடைய
பழக்க வழக்கங்களை தங்களாக்கிக் கொண்டார்கள். இறை அச்சமின்றி
ஏழைகளை ஒடுக்கினார்கள், ஏழைகளின்
நிலங்கள் அபகரிக்கப்பட்டன, ஏழைகளை
சுரண்டினார்கள், அவர்களின்
உழைப்பில் இவர்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்தார்கள்.
மூன்று நகரங்களும் வாணிபத்தில்
செழித்திருந்தன. நாகரிகத்தில் வளர்ந்திருந்தன. செல்வந்தர்கள்
செல்வ குவிப்பில் சுகபோகமாக தங்கள் வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
தங்கள் வசதி வாய்ப்புகளுக்காக வாழ்வுக்காக, ஏழைகளின்
விவசாய நிலங்கள், வளங்கள் சூறையாடப்பட்டன. பதுக்கல்களும்
சுரண்டல்களும் வாழ்வின் எதார்த்தங்களாக மாறிப் போயின.
இம்மூன்று நகரத்து மக்களும் தங்கள்
செல்வக்குவிப்பினாலும்,சுரண்டல்களினாலும், நுகர்வு
கலாச்சாரத்தினாலும், தங்கள்
சுய நலன்களுக்காக, சுய
லாபங்களுக்காக சமூகத்தில் பல பிரிவுகளை உண்டாக்கினார்கள்.
ஆண்டான் - அடிமை(Oppressor
- Oppressed) ஏழை - பணக்காரன்(Rich - Poor), இருப்பவர் -
இல்லாதவர்)Haves - Havenots) என்ற வர்க்க வேறுபாடுகளை உண்டாக்கி மக்களையும், ஏழைகளையும், நிலங்களையும், படைப்புகளையும் சுரண்டி அவைகளை தனி உடமை ஆக்கிக் கொண்டார்கள்.
மூன்று நகரங்களில் இந்நிலையை கண்டு
ஆண்டவர் உங்களுக்கு "ஐயோ" என்று
கடைந்துரைக்கின்றார். உங்களுக்கு நான் செய்ததை காட்டிலும் தீரு, சீதோன்
நகரங்களுக்கு நான் செய்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்.
இந்நேரம் அவர்கள் இரட்டு உடுத்தி, சாம்பலில்
உட்கார்ந்து, மனம் திரும்பி இருப்பார்கள் என்று ஆண்டவர் கோபத்தோடு
இம்மூன்று நகரத்து மக்களையும் பார்த்து ஆண்டவர் கூறுகின்றார். இரட்டு
உடுத்துதல் மனமாற்றத்திற்கான ஒரு அடையாளம், மனம் திரும்புவதற்கான ஒரு குறியீடு, புதிய
வாழ்க்கையை துவங்குவதற்கான அடித்தளம்.
தீரு, சீதோன்
ஆகிய பகுதிகள் ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், ஆமோஸ், யோவேல் போன்ற
தீர்க்கதரிசிகளால் எச்சரிக்கப்பட்ட சமூகம். இந்த சமூகத்திற்கு
நான் உங்களுக்கு செய்து வேலை செய்து இருந்தால் அவர்கள் மனம் திரும்பி இருப்பார்கள், பொது
உடமை சமூகத்திற்கு தங்களை மாற்றி இருப்பார்கள், இறை தண்டனை தீர்ப்பில் இருந்து தப்பி இருப்பார்கள்
என்று வேதனையோடும் கடினத்தோடும் தம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
இயேசு கிறிஸ்து முன்மொழிந்த பொதுவுடமை
சமூகத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட
சமூகமாக வாழும் பொழுது படைப்பும் உயர்ந்து நிற்கும், படைப்பாளரும்
போற்றப்படுவார், படைக்கப்பட்ட சமூகமும் உயர்ந்து மேலோங்கி நிற்கும்.
இறையாட்சி எனும் பொதுவுடமை சமூகத்தில் நாம் இருக்கிறோமா? அது
உருவாக நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோமா? அதற்கான சீடத்துவ
பணியில் நாம் நிலைத்திருக்கிறோமா? என்ற உணர்வில் நம்மை மறு அர்ப்பணம் செய்ய திருமறை பகுதி
வலியுறுத்துகின்றது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நமக்கு இதன் வழியாக
அறைகூவல் விடுக்கின்றார்.
3. பொது நியமம் மறந்து சுய நீதி செயல்பாடுகளால் - சீரழிக்கப்பட்ட படைப்பு (கலாத்தியர் 1 : 5 - 10)
திருத்தூதுவராகிய பவுலடியார் பல
இறையியல் விவாதங்களை துவங்கி, அதற்கு விளக்கங்களையும், கோட்பாடுகளையும்
திருச்சபையாகிய நமக்கு தந்துள்ளார்.
பவுலடியார் அவர்களின் இறையியலில்
மிகவும் முக்கியமானது "படைப்பும் மீட்புக்காக காத்திருக்கிறது"
என்பதாகும். மனிதர்களால் சக உறவுகளோடும், படைப்போடும், படைத்த இறைவனோடும் நல்லுறவாக இருந்ததில்லை. மனிதர்களால்
சீர்கெட்ட இந்த படைப்பும் மீட்புக்காக காத்திருக்கிறது என்பது பவுலடியாரின் முக்கியமான
அழுத்தங்களில் ஒன்று.
கலாத்தியர் திருச்சபைக்கு எழுதுகின்ற
இந்த கடிதத்தில், முதலாம் அத்தியாயத்திலேயே ஆழமான இறையியல் சிக்கல்களை
எடுத்து ஆளுகின்றார்.
அது என்னவென்றால்
"உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய்
விட்டு, விலகி விட்டீர்களே என்று ஆதங்கப்படுகின்றார்(1:6). ஆண்டவரை விட்டு விலகுதல் இயேசுவை மறுதலிப்பதற்கு சமமான
ஒன்றாகும். இயேசுவின் இயக்கத்தில் இருந்து பின்வாங்கி போனதற்கு காரணம் என்ன என்று அவர்
ஆராய முற்படுகின்றார்.
அழைத்தவரை விட்டு பின்வாங்கி போனதற்கு
காரணத்தையும் அவர் கண்டுபிடிக்கின்றார். கலாத்திய திருச்சபை கிறிஸ்துவின் நற்செய்தியை தவிர்த்து விட்டு, பவுலடியாரின்
சான்றான வாழ்க்கையையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள்
"வேறொரு சுவிசேஷத்திற்கு"
திரும்பி விட்டார்கள் என்பதையும் அறிந்து ஆச்சரியப்படுகின்றார்.(1:6)
"வேறொரு சுவிசேஷம்
என்றால் அது கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரானது" என்று
பவுலடியார் திருச்சபைக்கு சுட்டிக்காட்டி வலியுறுத்துகின்றார்.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அனைத்து
மக்களுக்கும், குறிப்பாக ஏழைகளுக்கும், எளியோருக்கும், விளிம்பு
நிலை மக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், படைப்பிற்கும், ஒடுக்கப்பட்ட
யாவருக்கும் விடுதலை தருகின்ற நற்செய்தியாகும்.
மேலும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி
ஒடுக்குகின்ற தீய சக்திகளுக்கும், ஆற்றல்களுக்கும், அதிகாரங்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் எதிரான ஒன்று.
அது பலவான்களை ஆசனங்களில் இருந்து
தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்துகின்ற நற்செய்தி. இருளில்
கிடைக்கின்ற மக்களுக்கு அது வெளிச்சத்தையும், வாழ்வு
இழந்த மக்களுக்கு வாழ்வையும், பாவிகள் என்று இழிவாக கருதப்பட்ட மக்களுக்கு உயர்வையும், பெண்களுக்கு
மாண்பையும், தீட்டு என்று புறந்தள்ள பட்ட மக்களுக்கு சமூகத்தில்
உயர்ந்த இடத்தையும் தருகின்ற இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி ஆண்
என்றும் பெண் என்றும் பாராது, ஏழை
என்றும் பணக்காரர் என்றும் பாராது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும் பாராதது, மொத்தத்தில்
சமத்துவத்தையும், சமூக நீதியையும் அது நிலை நாட்டுகின்ற ஒன்றாகும்.
அப்படி என்றால் கலாத்திய திருச்சபையில்
உண்டான வேறொரு நற்செய்தி என்பது, கிறிஸ்துவின் நற்செய்திக்கு நேர் எதிராக இருக்க வேண்டும். அது
வளமையை ஆதரிக்கின்ற, செழுமையைப்
போற்றுகின்ற, ஒடுக்குதலை
ஆதரிக்கின்ற ஒன்றாக தான் இருக்க வேண்டும்.
இவைகள் ஒருபோதும் நற்செய்திகளாக
இருக்க முடியாது. இவைகள் துற்செய்திகள் என்று பவுலடியார் அழுத்தம் திருத்தமாக
சுட்டிக் காட்டுகிறார். அப்படிப்பட்ட போதனைகளும், விளக்கங்களும், கோட்பாடுகளும்
அநீதியானது.
அவைகள் ஒருபோதும் நீதிக்கு துணை
போகாது, நியாயத்திற்கு
துணை நிற்காது. அநீதியை விளைவிக்கும் கருத்தியல்களால், கோட்பாடுகளால், போதனைகளால்
சமூகத்தில் கேடுகள் மட்டுமே விளையும், பிரிவினைகள்
உண்டாகும் என்று பவுல் அடியார் சுட்டிக் காட்டுகிறார்.
இயேசு கிறிஸ்துவின் நியாயங்களும், போதனைகளும்
"இறை நீதியை" வலியுறுத்துகின்ற செயல்படுத்துகின்ற
ஒன்றாகவே அமைந்திருந்தது. அது இறை அன்புக்கு சான்றாக அமைந்திருந்தது. அது
இறைச்சாயலை மீண்டும் நமக்கு தந்தது.
திருச்சபையில் உருவாகி இருக்கிற
வேறொரு நற்செய்தி அது முற்றிலும் இறைநீதிக்கு எதிராக, சுய நீதியை, சுய போதனையை, சுய
விருப்பத்தை நிலை நாட்டுவதற்கு உரிய ஒன்றாகவே அமைந்திருக்கும், கிறிஸ்துவுக்கு
நேர் எதிரான ஒன்று என்கின்ற வாதத்தை தனது திருச்சபைக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்துகின்றார்.
சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய
சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.(1:7)
நீங்கள் இவர்களுக்கு எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். இப்படிப்பட்ட போதனைகள் மாய்மாலமான வாழ்க்கையையும், போலியான
பக்தியையும், சுய விருப்பமான ஆராதனையையும், பக்தி
என்கின்ற பெயரில் மக்களை திசை திருப்பிகின்ற ஒன்றாகவும் அமைந்திருக்கிறது என்று பவுலடியார்
கூறுகின்றார்.
இறுதியாக தம் திருச்சபை அன்பர்களை
பார்த்து எழுப்புகின்ற கேள்வி மிகவும் முக்கியமான கேள்வி , அழுத்தமான
கேள்வி "யாரை திருப்திப்படுத்துகிறீர்கள்?"
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை
நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? என்ற
சுய பரிசோதனைக்கும், மறு
அர்ப்பணிப்புக்குமான அறைகூவலை முன்வைக்கின்றார்.
நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால்
நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.(1 : 10) இதுதான் பவுலடியார்களின் ஆழமான, திடமான, பற்றுறுதியும்
அவரது சான்றான வாழ்வு ஆகும்.
கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரான
செழுமையை போதிக்கின்ற எவரும் சபிக்கப்பட்டவர்கள் என்று இறைவனின் நியாயத்தீர்ப்பின்
தண்டனையை சுட்டிக் காட்டுகிறார்.
செழுமை என்பது சுரண்டலுக்கும், பதுக்கலுக்கும், ஒதுக்குதலுக்கும்
துணை நிற்கின்ற ஒன்று. அவைகள் சமுதாயத்தின் நச்சு வேர்கள். அவைகள்
சுய நீதியை சமூகத்தில் உருவாக்கி, கடவுளுக்கு அஞ்சி வாழ்வதையும் கடவுள் தருகின்ற ஆசீர்வாதத்தை
இழந்து போவதற்கும் அது வழிவகை செய்யும்.
அது தனிமனித உறவையும், சமூக
கூட்டு வாழ்க்கையையும் சிதைத்து, படைப்போடும், இயற்கையோடும், இறைவனோடும், சக மனிதரோடும் இணைந்து, சார்ந்து, சேர்ந்து வாழ்கின்ற
உன்னத நிலையை அழித்துவிடும்.
அது மனிதர்களுக்கு மட்டும் கேடு
விளைவிப்பவை அல்ல மாறாக இயற்கைக்கும், படைப்பிற்கும்
பேரழிவையும், பெரும் ஆபத்தையும், அதனால் பல தீமைகளும் உருவாகும் என்று எச்சரிக்கின்றார்.
திருச்சபை என்பது சீடர்களின் மறு
வடிவம். இறை அன்பர்களாக இணைந்து, இயேசு
கிறிஸ்துவின் சிந்தையோடு, இயேசு
கிறிஸ்து வழியில் பயணித்து, கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்வதற்கு தெரிந்தெடுக்கப்பட்ட
சமூகம் என்பதை ஒவ்வொரு நாளும் இறை மக்களாக நினைவில் கொள்ள பவுலடியார் இக்கடிதத்தின் வாயிலாக நமக்கு நினைப்பூட்டுகின்றார்.
பவுலடியாரின் ஆழமான இறையியல் பார்வை
நமக்கு புதிய உணர்வை தருகிறது. சிலுவை பாடுகளின் வழியாக, மனிதர்களை மட்டும் மீட்கவில்லை மாறாக மனிதர்களால் சிதைக்கப்பட்டு, சீரழிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட படைப்பையும், இயற்கையையும் ஆண்டவர் மீட்டெடுத்திருக்கின்றார்.
மனிதர்களையும் சமய தலைவர்களையும்
திருப்தி படுத்துவதற்காக போலியான பக்தியோடு வாழ்பவர்கள், செழுமையை
நோக்கி மக்களை தவறான பாதையில் வழி நடத்துகின்ற தலைவர்கள், இறை
நீதியைத் தவிர்த்து சுய நீதியை தூக்கிப் பிடிக்கும் வேடதாரிகள் அனைவரும் சபிக்கப்பட்டவர்களே
என்ற இறைச் செய்தியை, இன்றைய திருச்சபைக்கு பவுலடியார் தருகின்றார்.
# நிறைவாக:
பரட்டை அண்ணனின் கிராமிய வழிபாட்டு
பாடலில் உள்ள வரிகள் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன...
முத்திப்போன சுரக்காய் நாங்க சாமி
அருள் நாதா - ஒடச்சு வித்தடுத்து விதைப்பவர் நீ
சாமி அருள் நாதா...
நெருஞ்சி முள்ளு நெறஞ்ச நிலம் சாமி
அருள் நாதா - எங்க
நெஞ்ச கொத்தி களை எடுப்பவர் நீயே
அருள் நாதா...
கருகிப்போன காண பயிறு
சாமி அருள் நாதா -
அதை துளுக்க வைக்கும் விவசாயி நீ சாமி அருள் நாதா...
"சிப்கோ, அப்பிக்கோ"
என்ற மாபெரும் இயக்கம் இயற்கையை பாதுகாத்த ஒரு பேரியக்கமாகும். பண்டைய
இந்தியாவில் காடுகளை அழித்து, தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் பாடுபட்ட போது, அதை எதிர்த்து மரங்களை கட்டித் தழுவி, அதை பாதுகாத்த இயக்கம் இவ்விரு இயக்கங்களும்.
இன்றும் நான்கு வழிச்சாலைகள் ஆறு
வழிச் சாலைகளுக்கு மரங்களை வெட்டுகின்றார்கள். நாமும்
அதைக் கண்டு, கடந்து
போகின்றோம். வயல் நிலங்களில் வீடுகளைக் கட்டி அவைகளில் சுகபோகமாக
வாழ்ந்து வருகின்றோம்.
நமக்கென்று ஒரு ஆலயத்தை விளைச்சல்
நிலங்களில் கட்டி மங்கலப் படைப்பும் செய்கின்றோம். நமது
தோத்திரப் பண்டிகைகளில் நிலங்கள் சார்ந்த, உழைப்பு சார்ந்த
பொருட்கள் ஆலய பீடங்களில் அலங்கரிப்பது இல்லை மாறாக தொழிற்சாலை சார்ந்த பொருட்களை குவிக்கின்றன.
ஆலய பீடங்களில் மெழுகுவர்த்திகள்
எரிகின்றன, ஆனால் உருகவில்லை காரணம் அவைகளும் செயற்கையே...! ஆல்டர்
மேடைகளில் பூக்கள் அழகாக இருக்கின்றன ஆனால் வண்டுகள் ஒருபோதும் அவைகளை நாடி வருவதில்லை
காரணம் அனைத்தும்
பிளாஸ்டிக் பூக்களே....!
உமது பீடங்கள் அண்டையில் அடைக்கலான்
குருவிக்கு வீடும், தகைவிலான் குஞ்சுகளுக்கு கூடும் அன்று இறைவன் வைத்திருந்தார், ஆனால்
இன்றைய ஆலயங்களில் இதற்கு வாய்ப்பே இல்லையே....!
தபசு நாட்கள் தோறும் செழுமை இறையியிலாளர்களுக்கு
மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றனவே....!
தோத்திர பண்டிகை ஆராதனைகளில் ஏழைகள்
பார்வையாளர்களாக மட்டுமே இருந்து விட்டுப் போகின்றார்களே...!
யாரை திருப்திப்படுத்துகின்றோம்? பிரியப்படுத்துகின்றோம்?
மனிதரையா? கடவுளையா?
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம். இந்தத் தீர்மானத்தில் நிலைத்திருப்போம், நிலை வாழ்வு பெறுவோம். இறைவன்
தன் திருப்பாடுகளின் வழியே மீட்ட படைப்பை பண்படுத்துவோம், பாதுகாப்போம், பந்தய
பொருளைப் பெற்றிடுவோம்.
இறை ஆசி என்றும் உங்களோடு நிலைத்திருப்பதாக
...
இறை ஆசியாய் வாழ்ந்திடுவோம்...
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி
ஞான காந்தி,
அரியலூர் சேகரம்,
திருச்சி -தஞ்சை
திருமண்டலம்.
✝️🌿🍀🌼🌴🌲🎄💐✝️
Comments
Post a Comment