ACKNOWLEDGING FAITH BEYOND BOUNDARIES
எல்லைகளைக் கடந்து
பற்றுறுதியை ஏற்றுக் கொளல்
# திருமறை பகுதிகள்:
ஏசாயா 44 : 28
- 45:-8
திருப்பாடல்கள்
125
மத்தேயு
15 : 21 - 28
திருத்தூதுவர் பணிகள்
10 : 24 - 33
# உட்பகுமுன்:
"மாற்றான்
தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று எவர் தன் மனதில் நினைக்கின்றாரோ,
அவர் சிறந்த மனிதராகவும், மனிதநேயம் மிக்கவராகவும், மதங்களைக்
கடந்து மனிதத்தை போற்றுகின்றவராகவும் இருப்பார்.
பற்றுறுதி என்பது அனைவருக்கும்
பொதுவான ஒன்றாகும். அது சமயங்களை கடந்து பொருள் பதிந்த ஒன்றாகும்.
அது இறை நம்பிக்கையை சார்ந்ததாகவும் இருக்கலாம் அல்லது இறை நம்பிக்கை இல்லாத
ஒன்றாக இருக்கலாம்.
ஒருமுறை ஒரு புகழ் பெற்ற நடிகர்
மேடையில் இறைப் பற்று அல்லாத ஒருவரை குறித்து கூறும் பொழுது "அவர்களுக்கு
வேண்டுமானால் கடவுளை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கடவுளுக்கு அவர்களை பிடிக்குமே"
என்று கூறினார்.
கடவுள் என்பவர் கடந்து நிற்பவர்.
மனித எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும்
அப்பாற்பட்டவர். மனித மதிப்பீடுகளை வைத்து கடவுளை ஒரு வரையறைக்குள்
கொண்டு வர முடியாது. கடவுளும் அதற்குள் அடங்க மாட்டார் என்பது இறையியலின்
அடிப்படையாகும்.
பன்மை என்பது கடவுளின் படைப்பில்
மகத்துவமானவை. மனிதரில் பல நிறங்கள், மொழிகள்,
பண்பாடுகள், கலாச்சாரங்கள், பற்றுறுதிகள்..,
இவைகள் அனைத்தும் சிறப்பானவை, அவைகளை நாம் கொண்டாட வேண்டும்.
இந்த வேற்றுமைகளை வைத்துக்கொண்டு
வேறுபாடு பார்ப்பதும், பிரிவினைகளை உண்டாக்குவதும், மோதல்களை
உருவாக்குவதும், வன்முறைகள் நிகழ்த்துவதும் கடவுளின் பார்வையில் அருவருப்பானவைகள்
என்ற புரிதல் இன்றைய உலகிற்கு அவசியம். குறிப்பாக
சமயத்திற்கு மிகவும் அவசியம்.
பவுலடியார் அத்தேனே பட்டணத்தில்
இருக்கும் சிலைகளையும், சிலை வணக்கத்தையும் பார்த்து நீங்கள் மிகுந்த இறைப்
பற்றாளர்கள் என்று அவர்களை அணுகுகின்றார். பவுலடியாரின்
இந்த அணுகுமுறை சமய மோதல்களுக்கும், சமய
அடிப்படை வாதங்களுக்கும், பிரிவினைகளுக்கும் எதிரானவை. இந்த
அணுகுமுறை சமய நல்லிணக்கத்திற்கும், சமூக கூட்டு வாழ்வுக்கும் வழி வகுக்கின்றன.
கடவுளின் பார்வையில் யூதர்களை
காட்டிலும் "நினிவே" மக்கள்
உயர்ந்தவர்கள். மோசே "எகிப்தின்
பல சட்டங்களை" யூத சமயத்திற்கு பொருத்தினார். மோவாப்பிய நாட்டு பெண் "ரூத்"
யூத சமூகத்திற்கு முன்மாதிரியாக இருந்தார். ஆசாரியர்கள்
லேவியர்களை காட்டிலும் "சமாரியார்கள்"
உயர்ந்தவர்கள் என்று இயேசு அடையாளம் காட்டினார். "நாகமான்"
இயேசு கிறிஸ்துவினால் எடுத்தாளப்பட்டார். "சாரிபாத்"
ஊரின் கைம்பெண் பற்றுறுதியின் அடையாளமானார்.... இப்படிப்
பல உதாரணங்களை திருமறை நமக்கு முன்வைக்கின்றது. இவர்கள்
அனைவரும் எல்லை தாண்டிய பற்றுறுதியாளர்களின் அடையாளங்கள்.
பரந்த மனம்,
தெளிந்த சிந்தை, பகுத்தறிவு உடையோருக்கு மதங்கள் கண்ணுக்குத் தெரியாது
மனிதம் மட்டுமே அவர்களுக்கு தெரியும். அவர்கள் மானுடத்தை
தன் உறவுகளாகவும், தன் நட்புகளாகவும், தன்
உயிராகவும் மதித்து நடப்பர். அவர்கள் புறத்தோற்றங்களை வைத்து அல்ல அகத் தோற்றங்களை
வைத்தே மதிப்பிடுவர். அவரவர்களில் உள்ள குறைகளை ஒருபோதும் காணார்.
மாறாக நிறைகளையே காண்பர்.
நமக்கு நாமே வகுத்துக் கொண்ட
எல்லைகள் பெரும்பாலும் பிரிவினைகளையும், மோதல்களையுமே
உருவாக்குகின்றன. எல்லைகளைத் தாண்டிய அன்பு உறவும்,
மனித மாண்பும், மனித நேயமும் தழைக்கும் பொழுது அங்கே அமைதியும்,
சகோதரத்துவமும், கூட்டு வாழ்வும், நல்லுறவும்,
நல்லிணக்கமும், விடுதலை வாழ்வும் நிதர்சனமாகும்.
இந்த பின்னணியத்தில் திருமறையை
ஆழ்ந்து தியானிப்போம்…
1. கடவுளின் தெரிந்தெடுத்தல்
மனித எல்லைகளைக் கடந்தது.
(ஏசாயா 44 : 28 - 45:-8)
2. கடவுளின்
பேராற்றல்
மனித மதிப்பீடுகளைத்
தாண்டியது.(மத்தேயு
15 : 21 - 28)
3. கடவுளின்
வழிநடத்தல்
மனித கோட்பாடுகளுக்கு
முரணானது.(திருத்தூதுவர்
பணிகள்
10 : 24 - 33)
இந்த மூன்று தலைப்புகளின் வழியாக
திருமறை காட்டுகின்ற வழிமுறைகளையும், இறையியல்
ஆழங்களையும், நாம் கண்டு கொள்ளுவோம், கற்றுக் கொள்வோம்...
1. கடவுளின் தெரிந்தெடுத்தல் மனித
எல்லைகளைக் கடந்தது. (ஏசாயா 44 : 28 - 45:-8)
கடவுளின் தெரிந்தெடுத்தல் என்பது
மனித எல்லைகளை தாண்டியது. கடவுள் தம் திருப்பணிக்கென்று எவரையும் பயன்படுத்துவார்,
எதையும் பயன்படுத்துவர் என்பது இதன் மூலமாக விளக்கப்படுகிறது.
இது ஒரு புதிய விடுதலைப் பயணம்.(New Exodus) கடவுளே முன் நின்று இந்த விடுதலைப் பயணத்தை துவக்குகின்றார்.
இந்த விடுதலை பயணத்தில் வாதைகளும்
இல்லை, மோசே போன்ற இடையீற்றாளர்களும் இல்லை,
பஸ்கா நிகழ்வுகளும் இல்லை, கடவுளின் சங்காரமும் இல்லை, முட்செடி
நிகழ்வுகளும் இல்லை.
மோசேயை அழைத்ததை போல கோரேசு மன்னனை
கடவுள் அழைத்து விடுதலைப் பணியில் பயன்படுத்துகின்றார்.
இஸ்ரவேல் மக்கள் தாங்கள் கடவுளால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று உயரிய மனப்பான்மையைக் கொண்டவர்கள்.
இந்த மனப்பான்மையை கடவுள் வேர்
அறுத்து கடவுளின் தெரிந்தெடுத்தல் என்பது எல்லைகளை தாண்டியது. அது
யூத இனத்திற்கு அப்பாலும் உள்ளது என்பதை கடவுள் இதன் வழியாக சுட்டிக்காட்டுகின்றார்.
யூதர்கள் புற இனத்து மக்களை,
பிற சமயத்து மக்களை தீட்டானவர்களாக கருதினார்கள். விருத்தசேதனம்
உள்ளவர்கள் உயர்ந்தவர்கள், விருத்தசேதனம் செய்யாதவர்கள் இழிவானவர்கள் என்ற கருத்தியல்
அவர்களுக்குள் புரையோடி கிடந்தது.
இந்தக் கருத்தியலை உடைத்து கடவுளின்
பார்வையில் அனைவரும் சமமானவர்கள், கடவுள் சமத்துவ நெறியில் வாழ்கின்றவர் என்ற பாடத்தை
இறை மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் கற்றுக் கொடுக்கின்றார்.
இஸ்ரவேல் மக்களின் பார்வையில்
அருவருப்பானவர்கள், தீட்டானவர்கள், அசுத்த
ரத்தமுடையோர் என்று கருதப்பட்ட புற இனத்து புற இனத்து கோரேசு மன்னன் வழியாக இஸ்ரவேலருக்கு விடுதலையை
வழங்குகின்றார். எனவே இது ஒரு புதிய விடுதலைப் பயணம் ஆகும்.
கடவுளை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்த
இயலாது. கடவுள் எல்லைகளைக் கடந்தவர், எல்லைகளைத்
தாண்டி செயல்படுகின்றவர் என்ற புரிதலை யூத சமூகத்திற்கு ஆண்டவர் கற்றுக் கொடுக்கின்றார்.
கடவுளின் செயல்பாடுகள் மாபெரும்
ஆச்சரியத்தை நமக்குத் தருகிறது. கோரேசு மன்னனை கடவுளே முன்னின்று அருட்பொழிவு செய்வதாக
சித்தரிக்கப்பட்டுள்ளது.
அருட்பொழிவின்போது வலது கையைப்
பிடித்து தம் திருப்பணிக்கு அழைக்கின்ற பாரம்பரியத்தை, கடவுளே
முன் நின்று கோரேசு மன்னனுக்கு செய்கின்றார், "அவனைப்பார்த்து,
அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச்
சொல்லுகிறதாவது(45 : 1)... இது ஒரு புதிய
வழிமுறை. யூதர் அல்லாதவர்களையும் கடவுள் அருட்பொழிவு ஆற்ற செய்கின்றார்.
ஆசாரியர் செய்ய வேண்டிய அருட்பொழிவு
செய்யும் பணியை கடவுள் முன் நின்று நிகழ்த்துகின்றார். காரணம்
கடவுளின் தெரிந்தெடுத்தல் வித்தியாசமானது என்பதை யூத குலத்திற்கு ஆண்டவர் இதன் வழியாக
கற்றுக் கொடுக்கிறார்.
இது யூத பாரம்பரியங்களில் தொண்டு
தொட்டு பழக்கத்திலிருந்து தூய்மை தீட்டு என்னும் கருத்தியலை உடைக்கின்ற மாபெரும் செயலாகும்.
மேலும் கடவுளின் மற்றுமொரு செயல்
நமக்கு வியப்பை தருகின்றது. "நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து,
நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்(45 : 4)
என்று கோரேசு மன்னனை இஸ்ரவேல் மக்களை காட்டிலும் சிறப்பானவராக ஆண்டவர் எடுத்துரைக்கின்றார்.
நானே கர்த்தர்,
வேறொருவர் இல்லை, என்னைத்தவிர தேவன் இல்லை(45 : 5)
என்கின்ற கடவுளின் கூற்று இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு புதிய படிப்பினையை கற்றுக்
கொடுக்கிறது.
கடவுளை வெறும் படைப்பாளராக பாதுகாக்கின்றவராக
மட்டும் புரிந்து கொண்டிருக்கிற இஸ்ரவேல் மக்களுடைய வாழ்வில், அவர் விடுதலையாளர் என்கின்ற புரிதலையும் புதிய சிந்தையையும்
அவர்களுக்கு இதன் வழியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.
நான் உனக்கு முன்னே போய்,
கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்(45 : 2) என்கின்ற
சொல்லாடல் மேலும் ஒரு புதிய படிப்பினையை நமக்கு தருகிறது. அது
என்னவென்றால் கடவுளுக்கு வழியை ஆயத்தம் பண்ண வேண்டியது இறை மக்களின் கடமை.
இதற்கு முற்றிலும் மாறாக கோரேசு மன்னனுக்கு கடவுள் முன் நின்று வழியை ஆயத்தத்தப்படுத்துகின்றார்.
இது முழுக்கு முனிவர் யோவானின் வாழ்க்கையை நமக்கு முன்னிறுத்துகிறது.
கடவுள் எல்லைகளைக் கடந்து செயல்படுகின்றவர்.
கடவுளுக்கு எல்லைகள் என்று ஒன்றுமில்லை. கடவுளின்
பார்வையில் அனைவரும் சமமானவர்கள்.
மேலும் தலித் விடுதலை இறையியல்களின்
கோட்பாடான மக்களால் இழிவாக, தீட்டானவர்கள் என்று கருதப்பட்டவர்களை,
கடவுள் விடுதலையாளராக, நீதியாளராக இறை ஆட்சியின் பிரதிநிதியாக உலகிற்கு வெளிப்படுத்துகின்றார்.
2. கடவுளின் பேராற்றல் மனித மதிப்பீடுகளைத் தாண்டியது.(மத்தேயு 15 : 21
- 28)
தீரு, சீதோன்
பகுதியில் பகுதிகளில் ஆண்டவர் இயேசு மேற்கொள்கின்ற உரையாடல் இயேசுவின் சீடர்களுக்கு
புதிய வழித்தடங்களை காட்டுகின்றது.
திருமறைப் பகுதியில் இயேசு கிறிஸ்து
தூய்மை - தீட்டு என்ற கருத்தியலை முன்வைத்து மிக நீண்ட நெடிய
உரையாடலை நிகழ்த்தின பின்பு, இந்த
கானானியப் பெண்ணின் உரையாடல் வருகிறது.
வாயிலிருந்து புறப்படுகிறவைகள்
இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும், அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.(15
: 18) யூத பாரம்பரியங்களையும் சடங்காச்சாரங்களையும் கடைப்பிடித்து வாழுகின்ற யூதர்களுக்கும்
சீடர்களுக்கும் இது ஒரு புதிய படிப்பினையை கற்றுக் கொடுக்கின்றது.
எது தூய்மை?
எது தீட்டு? என்கின்ற
புதிய விளக்கத்தை இயேசு கிறிஸ்து செயல் வடிவில் காட்டுகின்ற நிகழ்வு கானானிய பெண்ணின்
வழியாக நடைபெறுகின்றது.
யூதர்கள் இயேசுவை யோசேப்பின்
மகன், மரியாளின் மைந்தன், தச்சன் மகன் அல்லவா, நாசரேத்தூரான்
அல்லவா..., என்று இழிவு
படுத்திய சூழ்நிலையில் கானானிய பெண் இயேசுவை தாவீதின் வழித் தோன்றலாக எடுத்துரைக்கின்றார்.
ஊருக்கு மத்தியில் இயேசுவை இழிவு
படுத்திய சூழ்நிலையில் ஊருக்கு வெளியில், பாளையத்திற்கு
புறம்பே உள்ள கானானிய பெண், இயேசுவை மீட்பராக விடுதலையாளராக ஏற்றுக் கொள்வது முற்றிலும்
மாறுபட்ட செய்தியாகும்.
இயேசுவின் சீடர்கள் கானானிய பெண்ணை
கருத்தில் கொள்ளாத போது இயேசு கிறிஸ்து அவர்களோடு உறவாடுகின்றார்.
காணாமற்;போன
ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல
வென்றார்.(15 : 24) ஆண்டவரின்
இந்த வார்த்தைக்கு பின்பதாக கானானிய பெண் தொடர்ந்து போராடுகின்றார்.
இது கெஞ்சுவதை போல காணப்பட்டாலும்,
இது ஒரு விடுதலைக்கான முழக்கமாக நாம் பார்க்கலாம். விடுவியும், விடுதலை தாரும், மாரநாதா என்ற சொல்லாடலோடு இதை நாம் ஒப்பிடலாம்.
கானானியப் பெண் இயேசுவோடு நடத்துகின்ற
இந்த உரையாடலில் அந்தப் பெண்ணின் போராட்ட குணமும், விடுதலைக்கான
வேட்கையும், துணிச்சலான நடவடிக்கையும், எதிர்
வாதங்களும், எதிர்
கருத்தியல்களும் அவர்களை ஒரு வீர மங்கையாக இயேசுவுக்கு வெளிப்படுத்தியது.
பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து
நாய்க்குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல என்ற வார்த்தைக்கு கானானிய பெண்ணின் மறுமொழி, மேஜையில் இருந்து விழும் துணிக்கைகளை நாய்கள் நக்கி
கொள்ளட்டுமே என்ற வாதம் இயேசுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வியந்து!
பார்க்கப்பட்ட ஒன்றாகும்.
தனது வாத திறமையால்,
ஆற்றலால் இயேசுவை வென்றெடுத்த காணானியப் பெண் தன் மகளையும் அழிவில் இருந்து
மீட்டெடுத்தார்.
பெண்ணே உன் விசுவாசம் பெரிது
என்று கூறுவது இயேசுவின் யூத ஆண் சீடர்களுக்கு, யூதர்களுக்கு
மாபெரும் செய்தியாக அமைந்தது.
இறை ஆட்சி என்பது மனித வரையறைகளைத்
தாண்டியது, மனித மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்ற பேருண்மையை
இந்த நிகழ்வின் மூலமாக இயேசு கிறிஸ்து எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின் பேராற்றல் அனைவருக்கும்
உரியது. இறையரசு விளிம்பு நிலை உள்ளவர்களுக்கானது.
புறந்தள்ளப்பட்ட மக்கள் இறை ஆட்சியில் முதன்மை பெறுவார்கள் எனும் கோட்பாட்டினை இயேசுவின் செயல் விளக்குகிறது.
யூதர்கள் தாங்கள் தான் மன்னாவை
ருசித்தோம், செங்கடலை கடந்தோம்... என்று
மார்தட்டிக் கொண்டிருந்த சூழ்நிலையில் இயேசு கிறிஸ்து சற்றும் எதிர்பாராத விதத்தில்
பிற இனத்து மக்களும், பிற சமயத்து மக்களும் இறை அரசின் சுவைகளை சுவைக்கும்படி
செய்தார்.
இவளை அப்புறப்படுத்தும் என்று
சொன்ன ஆண் சீடர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் செயல் சாட்டையடியாக விழுந்தது.
இவர்கள் இறையரசின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள், ஆண்டவரின்
உறவினர்கள், ஆண்டவரின் அற்புதத்திற்கும் பேராற்றலுக்கும் சொந்தக்காரர்கள்
என்கின்ற புதிய நியமத்தை இந்த செயல் விளக்குகின்றது.
3. கடவுளின் வழிநடத்தல் மனித கோட்பாடுகளுக்கு முரணானது.(திருத்ததூதுவர் பணிகள் 10 : 24 - 33)
ஆண்டவரின் சீடராகிய பேதுருவின்
மனமாற்றம் எல்லைகளை தாண்டி கடவுளின் வழிநடத்துதலுக்கு உள்ளாக்கியது.
யூதரான பேதுரு ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு பின்பதாக மாபெரும் ஆற்றல் பொருந்தினவராக தன்னை உருவாக்கிக்
கொண்டார் கடவுளும் அவரை உருவாக்கினார்.
பேதுருவையும் பவுலையும் நாம்
பார்க்கும் பொழுது அவர்கள் இருவரின் திருப்பணியும் இரு எல்லைகளை கொண்டதாக அமைந்திருந்தது.
பேதுரு யூதர்களை மையமாக வைத்தும்
பவுலடியார் புறவினத்து மக்களை மையமாக வைத்தும் தங்களுடைய திருப்பணி எல்லைகளை விரிவாக்கிக்
கொண்டனர்.
பேதுரு ஆண்டவரின் திருப்பணியாளராக
பல அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து வந்தாலும், பேதுருவின் தனிப்பட்ட வாழ்வில் யோப்பா பட்டணத்தில் ஏற்பட்ட"மன
மாற்றம் " பேதுருவை புது அர்ப்பணிப்புக்கு உள்ளாக வழிநடத்தியது.
யோப்பா பட்டணத்தில் பேதுரு ஞானம்
அடைந்து ஒரு திருக்காட்சியை காண்கின்றார்... "வானம்
திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டையைப்போல
ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும் காண்கின்றார்.
அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும்,
காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப்
பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
அல்லாமலும் பேதுருவே,
எழுந்திரு அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
அதற்குப் பேதுரு;
அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும்
அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
அப்பொழுது;
தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு
உண்டாயிற்று. (10 : 10 -15) மூன்றாம்
தரமும் கடவுள் பேதுருவோடு பேசினார்.
என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று
ஆண்டவர் பேதுருவோடு மூன்று முறை பேசின உரையாடலை பேதுரு நினைவு கூர்ந்து இருப்பார் என்று
புரிந்து கொள்ளலாம்.
கடவுள் பேதுருவிடம் எது தூய்மை
? எது தீட்டு ? யார் தூயவர்கள்? என்கின்ற
இறையியலை கற்றுக் கொடுக்கின்றார்.
பேதுருவின் மனமாற்றம் பேதுருவின்
திருப்பணியில் மாபெரும் தாக்கத்தை கொண்டு வந்தது. அது
இதுவரைக்கும் தான் வைத்திருந்த எல்லைகளை தாண்டி புற இனத்தாரிடம் தன்னை இணைத்துக் கொள்ளவும், கடவுள் புற இனத்தாரிடம் இருப்பதை அறிந்து கொள்ளவும்
உதவி செய்தது.
அதன் பின்பதாக கடவுளால் வழிநடத்தப்பட்ட
பேதுரு கொர்நெலியு இடம் சென்று, அவர்களை மனதார ஏற்றுக்கொண்டு, அவர்களின் எல்லைக்குள் தன்னை இணைத்து, கடவுளின் வெளிப்பாடுகளை சாட்சியாக கூறும்படி கடவுள்
வழி நடத்தினார்.
பேதுருவின் மன மாற்றம் யூதராகிய
பேதுருவை எல்லைகளைத் தாண்ட செய்தது. மனித வரையறைகளை மீறச் செய்தது.
கடவுளின் எல்லைக்குள் அவரை வழி நடத்தியது.
கடவுளின் வழிநடத்துதல் பேதுருவின் அழைப்பிலும், அர்ப்பணிப்பிலும், திருப்ப பணியிலும் ஒரு புதிய வழித்தடங்களை உண்டாக்கியது.
சமயங்களின் பார்வையில் தான் தீட்டானவர்கள்
தூயவர்கள் என்ற பாகுபாடு உள்ளது. கடவுளின் பார்வையில் அனைவரும் தூயவர்களே என்கின்ற புரிந்து
கொள்ளுதலுக்கு பேதுருவை வழி நடத்தியது.
பேதுரு புற இனத்து மக்களிடம்
தன்னை இணைத்துக் கொண்டதோடு மாத்திரமில்லாமல் , தன்
மனமாற்றத்தை பகிரங்கமாக அறிவித்து, கடவுள் இவ்வுலகில் தூய்மை தீட்டு என்கின்ற சித்தாந்தங்களை
தகர்த்தெரிகின்றவர். இறைமக்களை ஒன்றிணைத்து தூய்மை தீட்டு என்ற கருத்தியல்களுக்கு எதிராக செயல்பட வைக்கின்றனர் என்கின்ற பேருண்மையை எடுத்துரைக்கின்றார்.
கடவுளின் வழி நடத்துதல் பேதுருவின் வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக
அமைந்தது. மனிதக்
கோட்பாடுகளுக்கு முரணாக எழும்பவும், அதை
தகர்த்தெறியவும், முன்
களப்பணியாளராக தன்னை முன்னிருத்திக் கொள்ளவும் அவரை உந்தி தள்ளியது.
கடவுளின் வழி நடத்துதல் எங்கே
இருக்கிறதோ அங்கு சமத்துவமும், சமூக நீதியும், சமூக
மாண்பும் தழைத்து ஓங்கும்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போல
பேதுருவும் எல்லைகளைக் கடந்து திருப்பணி ஆற்றவும், மனித
கோட்பாடுகளுக்கு முரணாக எழும்பி நிற்கவும், சமயம் சார்ந்த அடிப்படை வாதங்களுக்கு எதிர்த்து நிற்கவும்
கடவுளின் வழிநடத்துதல் பேதுருவுக்கு அடித்தளமாக அமைந்தது.
இயேசுவின் இந்த அடிச்சுவட்டை
பின்பற்றி இறை மக்களாக இணைந்து முன்னேறி செல்வோம்.
# நிறைவாக:
அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்..
புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா...
அன்பே பிரதானம் என்று பொருள் உணர்ந்து பாடுவோம்.
வர்ணங்களின் எல்லைகளை வண்ணங்கள்
பூசி அழித்திடுவோம். வளமான வாழ்வுதனை இப் பூவுலகில் அமைத்திட மண்ணுக்கு
உரம் ஆகிடுவோம்.
ஆதித்திருச்சபையின் திருப்பணிகளை
திருப்பணியாளர்களாக உணர்ந்து திருப்பணி விடை புரிவோம். திருத்
தொண்டர்களின் வழித் தோன்றல்களாய் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடுவோம்.
சமயங்களைத் தாண்டி புற இனத்து
மக்களின் பண்புகளையும், பற்றுறுதியையும்
அடையாளம் காண்போம். அவைகளில் உள்ள விடுதலைக் கூறுபாடுகளை தன்னகத்தே கொள்வோம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
மணம் உண்டு என்பதை நினைவில் கொள்வோம். நல்ல பிறனாக
வாழ்ந்து காட்டுவோம்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
....என்று கூறிய நல்ல மனிதரை முன்மாதிரியாக கொண்டிடுவோம்.
தனி மனிதன் ஒருவருக்கு உணவு இல்லை
எனில் .... என்று கூறிய
அந்த நல்ல உள்ளத்தோடு நம்மை இணைத்து
எல்லைகளைத் தாண்டி பசியாற்றுவோம். கூட்டு வாழ்வில்தான் கடவுள் இருக்கின்றார் என்று கூறுகின்ற
பிற சமயத்து பக்தி நெறியில் நம்மையும் இணைத்து விடுவோம். இறைவனின்
தெரிந்தெடுத்தலையும், இறைவனின் பேராற்றலையும், இறைவனின்
வழி நடத்துதலையும் உணர்வு பூர்வமாக உணர்ந்து இறை மக்களாய் இயங்கிடுவோம்.
இறைவனின் ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோம்...
நட்புடன் உங்கள்
அருள்திரு.
அகஸ்டி ஞான காந்தி,
அரியலூர் சேகரம்,
திருச்சி
-தஞ்சை திருமண்டலம்.
✝️🌳☘️🌿🌱🌲✝️
Comments
Post a Comment