RELEASING FROM THE BURDEN OF SIN

 

RELEASING FROM THE BURDEN OF SIN

பாவத்தின் சுமையிலிருந்து விடுவித்தல்

 # திருமறைப் பாடம்:

 2 சாமுவேல் 12 : 1 - 14

திருத்தூதவர் பணிகள் 8 : 9 - 25

மாற்கு 2 : 1 - 12

 


# உட்புகுமுன்:

வழிபாட்டின் கூறுபாடுகளில் மிகவும் முக்கியமானது பிழை அறிக்கை. ஆண்டவரின் சன்னதி முன்பாக சற்று நேரம் அமைதியாக இருந்து நாம் நம் பிழைகளை உணர்வோம் என்கின்ற அழைப்பு கடவுள் தருகின்ற மாபெரும் வாய்ப்பு. மனமுவந்து, மனம் கசந்து, மனமுடைந்து நம்மை மறுரூபப்படுத்திக் கொள்ள, மறுபிறப்படைய அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அறிந்தும் - அறியாமலும், தெரிந்தும் - தெரியாமலும் செய்த பிழைகள் அனைத்திலிருந்தும் கடவுள் பொது மன்னிப்பின் வழியாக அனைவருக்கும் விடுதலை வாழ்வை தருகின்றார்.

ஒவ்வொரு நாளும் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது உடலின் சுமைகளை களைவதற்கு எவ்வளவு தீவிரமாக  இருக்கின்றார்கள் என்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. அதே சமயத்தில் மனதிற்குள் அழுத்துகின்ற பாவ சுமைகளை களைவதற்கு ஏதாவது பயிற்சி உண்டா என்று பார்க்கும் பொழுது சற்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.

"சுமை சுமந்து இருப்பவரே என்னிடம் வாருங்கள்" என்ற இயேசு கிறிஸ்துவின் அழைப்பு, ஒட்டுமொத்த மனுக்குலத்திற்கான அழைப்பு. நம்மை அழுத்துகின்ற தனிமனித, சமூக, கூட்டுப் பாவங்கள், அக்கிரமங்கள், மீறுதல்கள் இவைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்து நீதியோடும், நேர்மையோடும், மாண்போடும், இறைச்சாயலோடும் மனுக் குடும்பம் வாழ்வதற்கு கடவுள் எடுக்கின்ற முன்னெடுப்பு என்பதை உணர்வோம்.

ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் கேட்கும் போதெல்லாம் நம்முடைய மனம் பதறுகின்றது, மனம் ஒன்றி வேண்டுகின்றோம், அதேபோல  ஆலய மணிச் சத்தம் கேட்கும் போதெல்லாம், அது நமக்கான எச்சரிப்பின் சத்தம் என்பதை உணர்ந்து, நாம் நம் பாவத்திலிருந்து குணமடைய  முயல்வோம்.

முழுக்கு முனிவர் யோவானிடம் திருமுழுக்குப் பெற வந்த மக்கள்  நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கின்றார்கள். அதற்கு யோவான் தெளிவாக பதில் சொல்லுகிறார். நீங்கள் பாவம் செய்யாதிருங்கள், மனிதநேயத்தோடு இருங்கள்இறை அச்சத்தோடு வாழுங்கள் என்று கூறுகின்றார். பாவ கட்டுகளிலிருந்து நாமும் விடுதலை பெறுவோம், சமூகத்தையும் கூட்டுப் பாவத்திலிருந்து விடுதலையாக்குவோம். பாவ அடிமைத்தனத்திலிருந்து உலகை மீட்போம்.

 அக்கிரமத்தில் கட்டுகளை அவிழ்ப்பதும், சகல நுகத்தடிகளை உடைப்பதும், நெருக்கப்பட்டு இருக்கிறவர்களை விடுதலை ஆக்குவதும் நம்மேல் விழுந்த கடமை என்பதை உணர்ந்து விடுதலைப் பணிகளில் இயேசுவின் அடிச்சுவட்டில் இணைந்து பயணிப்போம்.

 

திருமறைப் பகுதிகளை கருத்தோடு தியானிப்போம்

1. எளியோரின் துணை நின்று விடுவிப்போம். (2 சாமுவேல் 12 : 1 - 14)

காயின் - ஆபேல் நிகழ்வில் கடவுள் எளியோரின் துணை நின்று நியாயம் கேட்கின்றார்,  நியாயம் விசாரிக்கின்றார், நீதி வழங்குகின்றார். கடவுள் எப்போதும் எளியோரின் துணை நின்று அவர்களின் சார்பாக  வழக்காடுபவர் என்பதை திருமறை சுட்டிக்காட்டுகிறது.

தரப்பட்டுள்ள திருமறைப் பகுதியில் தாவீது அரசன் தன்னுடைய ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட குடும்பத்தில் நுழைந்து, தனது அதிகார பலத்தால், அநீதியான  வழிகளால் உரியாவின் மனைவியை தனக்கு உடைமையாக்கி கொள்கின்றார்.

தாவீது அரசனின் சுயநலத்தால் ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்படுகின்றது. அதுவும் குறுக்கு வழிகளில் சிந்தித்து, தவறான வழியில் வழி நடத்தி, போரில் கொலை செய்யப்படுவது போன்ற செயலை அரங்கேற்றி நிகழ்த்தியது இறைவன் பார்வையில் மாபெரும் குற்றம் என்பதை தாவீது மறந்து போனார்.

நியாயப்பிரமாணம் சொல்கிறது கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பிறரைக் கொன்று பிறர் பொருளை இச்சியாது இருப்பாயாக என்ற கட்டளையை புறம் தள்ளியது கடவுள் பார்வையில் மாபெரும் குற்றம்.

திரை மறைவில் செயல்திட்டம் வகுத்து,  போரில் இயற்கையாக மரணம் அடைவதைப் போன்று ஒரு செயலை அரங்கேற்றி, அதன் மூலமாக உரியாவின் மனைவியை தன்வசமாக்கிக் கொண்டது எவருக்கும் தெரியாது என்ற நினைப்பில் இருந்த தாவீதுக்கு கடவுள்  நாத்தான் தீர்க்கர் வழியாக நியாயம் விசாரிக்கின்றார் நீதி கேட்கின்றார்.

தீர்க்கரின் அணுகுமுறை ஒரு முன்மாதிரியான ஒன்று. நாம் வாழுகின்ற நாட்களில் பாதிக்கப்பட்டவரின் சார்பாக "நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடுப்பதை போல" தீர்க்கர் வழக்கு தொடுக்கின்றார்.

உரியா மனைவியை வஞ்சித்து, தன் ஆசைக்கு இணங்க வைத்து, அவர்களை கர்ப்பம் தரிக்க வைத்து, தீட்டு கழித்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பியது ஆணாதிக்கத்தின் உச்சகட்டம்.

தாவீது அரசர் உரியா மனைவியை அடைந்தது என்பது வல்லுறவு கொண்டது, வன்புணர்வு கொண்டது ஆகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இவர்கள் மிகச் சாதாரணம்.

அரசை எதிர்த்து அரசாட்சியை எதிர்த்து எளியோர்களும் ஒடுக்க பட்டவர்களும் ஒன்றும் செய்ய இயலாது. இதை சாதகமாக பயன்படுத்தி தாவீது அரசர் செய்த இந்த மாபெரும் செயல் ஒரு மாபெரும் குற்றம் என்பதை அரசர் மறந்து போனார்.

மேலும் உரியா மனைவியை தனது உடைமையாக்கிக் கொள்ள அநீதியான வழிகளில் செயல்பட்டு இறுதியில் கொலை செய்யும் அளவிற்கு சதித்திட்டம் தீட்டி அதை செய்து முடித்தார். அது கொலை என்று ஒருவருக்கும் தெரியாமல் தற்செயல் மரணமாக அதை தாவீது வடிவமைத்தார்.

இந்த சூழ்நிலையில் தீர்க்கதரிசி பொது நலன் சார்ந்து வழக்கு தொடுக்கின்றார். பொதுவாக அரசர் நியாயம் விசாரித்து நீதி வழங்க வேண்டும். ஆனால் அரசரே அநீதி செய்யும் பொழுது எங்கு வழக்கு தொடுப்பது? யாரிடம் நீதி கேட்பது? யார் இதற்காக செயல்படுவார்?  என்ற பல கேள்விகளுக்கு,  தீர்க்கதரிசியின் செயல்பாடு ஒரு பொது வழி முறையை நமக்கு காண்பிக்கிறது.

Watchdog, Forth Estate என்று தொடர்பியல் துறையில் குறிப்பாக ஊடகவியலில் இந்த சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுவதை நாம் நன்கு அறிவோம். ஊடகங்கள் விழிப்போடு சமூகத்தில் உற்று நோக்கி, சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எடுத்துக்காட்டுவதோடு அல்லாமல் அதைக் குறித்த விழிப்புணர்வையும், அதன் தீவிரத்தையும், அதன் விளைவுகளையும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டும்.

அதைப்போல நாத்தான் தீர்க்கதரிசி அரசின் செயல்பாடுகளையும், அணுகுமுறைகளையும், அநீதிகளையும் உற்று நோக்கி அதை விழிப்போடு அணுகி நியாயம் கேட்கின்றார்.

ஒரு கதை வடிவில் தாவீதின் செயல்களை படம் பிடித்து காட்டி அதன் தீவிரத்தை உணர்த்தி நேருக்கு நேர் நின்று நீதி கேட்கின்றார், அதை உணர்த்துகின்றார்.

இறுதியில் தாவீது தான் செய்த அநீதியை ஒப்புக் கொள்கின்றார். தனது பாவ செயலின் விளைவாக வருகின்ற தண்டனை தீர்ப்புக்கு விடுவிக்குமாறு இறைவனிடம் கெஞ்சுகின்றார்.

தீர்க்கதரிசி "பாதிக்கப்பட்ட குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் சார்பாக நின்று, எளியோரின்  குரலாக" நின்று நீதி வழங்குகின்றார்.

அரசரை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, எதிர்த்தால் என்ன நிகழும் என்று தீர்க்கதரிசிக்கு தெரியும், இருந்தும் ஒடுக்கப்பட்டோரின் சார்பாக, எளியோரின் தோழராக நின்று, பாதிக்கப் பட்டோரின் உறவாக இருந்து "ஒடுக்குபவரை எதிர்த்து நிற்பதுஎன்பது இறைவனின் சார்பாக நிற்பது என்ற இறையியலை இதன் வழியாக கட்டமைக்கின்றார்.

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செயல் போல தோன்றும், ஆனால் உரியா இறந்த பின்பதாக பத்சேபாள் மீது விழும் அவச்சொற்களை, பழிச் சொற்களை தீர்க்கதரிசி தன் நீதி போராட்டத்தில் வென்றெடுத்து பெண் விடுதலைக்கு வித்திடுகின்றார்.

உரியா இறந்த பின்பதாக பத்சேபாள், தாவீதோடு தன்னை இணைத்துக் கொண்டார் என்கின்ற பழிச் சொல்லிலிருந்து தீர்க்கதரிசி, தன் நீதிக்கான போராட்டத்தால் வென்றெடுத்து, அநீதி இழைத்தவருக்கு இறை தண்டனை தீர்ப்பையும்  பெற்றுக் கொடுத்தார், பெண் விடுதலைக்கும் அவர் வித்திட்டார்.

தீர்க்கதரிசியின் இத்தகைய செயல் என்பது எளியோரின் சார்பாக இருந்து ஒடுக்குபவருக்கு எதிராக போராடி வென்றெடுத்து ஆணாதிக்கத்தால், ஆட்சி அதிகாரத்தால், வன்முறைகளால் பாதிக்கப்படுகின்ற மாந்தர் குலத்திற்கு விடுதலையை பெற்று தந்தது. 

ஆண் ஆதிக்கத்தால் நிகழ்கின்ற எல்லாவற்றுக்கும் பெண்களை பலிகடா ஆக்குவது தொன்று தொட்டு வருகிறது. ஆதாம் ஏவாள் கதையிலும் இதனை காண்கின்றோம். தீர்க்கதரிசியின் இந்த செயல் பெண் விடுதலைக்கு வித்திடுகிறது.

ஆண் ஆதிக்கத்திற்கும்,  அதிகார சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும்,  வன்முறைகளுக்கும் பெண்கள் பலியாக்கப்படுவதை தீர்க்கதரிசியின் செயல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் இறைவன் அவர்கள் சார்பாக நின்று நியாயம் விசாரிப்பார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

தீர்க்கதரிசியின்  வாழ்வும், அர்ப்பணிப்பும், செயல்பாடும், பணிகளும் இன்றைய சமூகத்திற்கான முன்மாதிரி. எளியோரின் சார்பாக நின்று பாவ பழிச்சுமைகளை நீக்குவோம். ஆண் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

2. ⁠அறியாமை எனும் இருளினின்று விடுவிப்போம்.(திருத்தூதவர் பணிகள் 8 : 9 - 25)

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிப்புக்குப் பின்பதாக இயேசு கிறிஸ்துவின் இயக்கம் வலுவடைந்தது. அந்த இயக்கத்தில் பலர் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இயேசு கிறிஸ்துவுக்காக மரிப்பதற்கு அவர்கள் துணிந்து நின்றார்கள்.

ஒரு பொதுவுடமை சமுதாயம் மலர்ந்தது. ஆதி திருச்சபையில் எல்லாம் எல்லாருக்கும் என்கின்ற சமத்துவம் நிலவியது. மகிழ்ச்சியோடு அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஒருமனப்பட்டவர்களாய் இயேசு கிறிஸ்துவின் சிந்தையை அணிந்தவர்களாய் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

சிதறி கிடந்த யூதர்கள் இருக்கின்ற இடங்களில் அவர்கள் வலுவடைந்தார்கள். ஆற்றலைப் பெற்றுக் கொண்டார்கள். இறை அடியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்தது.

சமாரியா நாட்டில் சீமோன் என்கின்ற மாய வித்தைக்காரன் தனது மாய வித்தைகளினாலும், செயல்பாடுகளினாலும் மக்களை பிரமிக்க வைத்தான்.

தனது மாய வித்தைகளால் மக்களை வசீகரித்து அவர்களை தன் ஆதிக்கத்திற்கு உட்படுத்தி அதன் வழியாக வாழ்க்கை நடத்தி வந்தான். மக்கள் அவனைப் பெரிதாக மதித்தனர் சமூகத்தில் அவனுக்கு உயர்ந்த இடம் கிடைத்தது.

தனது மாய வித்தைகளால் செல்வாக்கும் உயர்ந்தது, பேரும் புகழும் கிடைத்தது, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உண்டானது. செல்வத்தால் பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற மனப்பான்மையும் அவருக்குள் எழுந்தது.

தனது செல்வத்தாலும் தனது அந்தஸ்தினாலும் சமூகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். சமயத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.

அவன் செய்கின்ற மாய வித்தைகள் கடவுளின் செயல்கள் என்று மக்கள் நம்பும் படியாக சமய ரீதியாக அவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். கடவுளின் மாபெரும் சக்தி என்று மக்கள் கருதும்படியாக தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டான்.

அவனை எதிர்ப்பதற்கு எவரும் இல்லை. அதை மீறினால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்கின்ற அச்சத்தோடு மக்கள் வாழும் படியாக நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தார்கள்.

மொத்தத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை சமயம் சார்ந்து தனது மாய வித்தைகளினால் அவர்களை தன்வசப்படுத்தி,  தன் கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக அவர்களை மாற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.

இந்த சூழ்நிலையில் பிலிப்பு என்கின்ற இறைப்பணியாளர் வல்லமையாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவிக்கின்றார். சமாரியா நாட்டில் மாபெரும் மாற்றம் உண்டாகிறது. இந்த மாற்றத்தை கேள்விப்பட்ட ஆதி திருச்சபை பணியாளர்கள் பேதுருவையும் யோவானையும் அங்கு அனுப்புகிறார்கள்.

பேதுருவும் யோவானும் சமாரியா நாட்டிற்கு வந்து அங்கு நடக்கின்ற செயல்களை கண்டு ஆண்டவரை ஏற்றுக்கொண்ட இறை அடியார்களுக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார்கள்.

பேதுருவும் யோவானும் அவர்கள் மீது தங்கள் கைகளை வைத்து இறைவேண்டல் செய்யும்போது தூய ஆவியரின் வரங்களையும் ஆற்றலையும் அவர்கள் பெறுவதை மாய வித்தை காரனாகிய சீமோன் காண்கிறான். 

தூய ஆவியரின் வரமும் ஆற்றலும் தனக்கு வேண்டும் என்று அதை பணத்தால் பெற்றுக் கொள்வதற்கு முயல்கின்றான். பேதுருவும் யோவானும் மாய வித்தைக்காரரான சீமோனின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றார்கள்.

அத்தோடு மட்டுமல்லாமல் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை இருளில் தள்ளி தனது செல்வத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற மனப்பான்மையை தோல் உரித்தனர்.

சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த மாய வித்தைக்காரரான சீமோன், மக்களை அறியாமை இருளில் வேலை செய்து அவர்களின் அறியாமையை பயன்படுத்தி சுகபோகமாக வாழ்ந்த சீமோன் இறுதியில் மக்கள் முன்பதாக நிராகரிக்கப்பட வைக்கின்றார்கள்.

அன்றைய காலகட்டங்களில் அறியாமை என்கின்ற இருளில் தள்ளப்பட்டிருந்த, அடிமையாக்கப்பட்டு கிடந்த அத்தனை மக்களுக்கும் மாபெரும் விடுதலை கிடைக்கின்றது.

பேதுரு, யோவான், பிலிப்பு என்கின்ற கூட்டமைப்பு இதற்கான செயல்களில் இறங்கி மக்களை அறியாமை என்னும் இருளிலிருந்து  விடுவித்து ஒளியின் மக்களாக அவர்களை மாற்றினர்.

மாய வித்தை காரரான சீமோன் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்தவனாய் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளவராக இருந்தாலும் பேதுருவும் யோவானும் பிலிப்பும் சற்றும் பயப்படாமல் துணிந்து நின்று மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்தும் மாய வித்தைக்காரன் பிடியிலிருந்தும் மீட்டார்கள்.

நீதிக்கான போராட்டத்தில் தன்னார்வமாக இணைந்து கொண்ட பேதுருவும் யோவானும் பிலிப்பும் ஓர் இயக்கமாக இயங்கி, கருத்தில் இணைந்து, கரங்களை இணைத்து, களத்தில் நின்று போராடி இறை மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து மீட்டெடுத்தார்கள். 

இந்தியா வந்த அருள் தொண்டர்களும் இத்தகைய பணியைத்தான் செய்தார்கள். அறியாமை என்னும் இருளில் இருந்த மக்களுக்கு கல்வி,  மருத்துவம், சமூக நீதி, சமத்துவம்.. போன்றவர்களை பெற்றுத் தந்தார்கள்.

இறை மக்களாக இறை அடியவர்களாக இத்தகைய நமது முன்னோர்களின் வழியில் அடி எடுத்து வைப்போம்..

3. ⁠ மனுமகன் வழியில் நின்று விடுவிப்போம்.(மாற்கு 2 : 1 - 12)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வீட்டில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அருகில் இருந்த மக்கள் அவர் இல்லம் நாடி சென்றார்கள். இல்லம் இறை மக்களால் நிரம்பி வழிந்தது.

வந்திருந்த இறை மக்கள் அனைவருக்கும் ஆண்டவர் நட்போதங்களை கற்பித்துக் கொண்டே இருந்தார். மக்கள் ஆர்வத்தோடும் கருத்தோடும் அதை தியானித்தனர்.

ஜெப ஆலயத்தில் நடக்கின்ற செயல்கள் இயேசுவின் வீட்டில் நடைபெறுகிறது. தன் இல்லத்தை ஜெப ஆலயமாக மாற்றி வந்திருந்த மக்களுக்கு இறைச் செய்தியை வழங்கினார்.

ஆண்டவர் இயேசு மக்களோடு உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில் நான்கு பேர் ஒரு முடக்கு வாதமுற்ற ஒரு மனிதரை கட்டிலில் வைத்து சுமந்து வந்து உள்ளே நுழைய முற்படுகின்றார்கள். வழி விடுவதற்கு எவரும் இல்லை மேற்கூறியை பிரித்து திறப்பாக்கி முடக்குவாதம் உற்ற மனிதரை இயேசுவின் முன்பதாக கிடத்துகின்றார்கள்.

இயேசுவின் வீட்டிலிருந்த அத்தனை மக்களும் இந்த செயலை காண்கின்றார்கள் இயேசு கிறிஸ்து மாபெரும் அற்புதத்தை தன் இல்லத்தில் நிறைவேற்றுகின்றார்.

இந்த அற்புதத்தை செய்வதற்கு முன்பதாக இயேசு கிறிஸ்து சொன்ன சொல் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இஸ்ரவேல் மக்களுக்கு அற்புதங்கள் ஒன்றும் புதிதல்ல தீர்க்கதரிசிகள் ஏற்கனவே அதை செய்திருக்கிறார்கள். மறைநூல் வழியாக அதை வாசித்தும் கேட்டும் அறிந்தும் இருக்கின்றார்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த அற்புதத்தை செய்வதற்கு முன்பதாக அவர் கூறிய வார்த்தை மகனே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

இயேசுவின் வீட்டில் அமர்ந்திருந்த வேதபாரகர்களும் சமய அடிப்படைவாதிகளும் பாவங்களை மன்னிக்க இவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்திக்கின்றார்கள் அவர்களுக்கு உள்ளாகவே பேசிக் கொள்கின்றார்கள்.

இயேசு கிறிஸ்து அவர்களின் சிந்தையை அறிந்தவராக உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திப்பது என்ன?  ஏன்?  என்று கேள்வியை எழுப்புகின்றார்.

இஸ்ரவேல் மக்களை பொருத்தமட்டில் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது அவர்களின் நியாயப்பிரமாணம். பாவம் செய்பவர் தண்டிக்கப்பட வேண்டும், கல்லால் எரிந்து கொல்லப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் சமய நம்பிக்கை. அதுதான் அவர்களின் பக்தி வாழ்வு.

இயேசு கிறிஸ்து இதற்கு நேர் எதிராக புது மன்னிப்பை வழங்குவதோடு மாத்திரமல்ல அவர்களை வாழ்வதற்கு உரியவராக மாற்றுகின்றார் வாழ்வுரிமையையும் வழங்குகின்றார்.

மனிதர் வழங்குகின்ற நீதி என்பது இறை நீதியோடு ஒத்திருக்குமா என்ற கேள்வியை இதன் வழியாக இயேசு கிறிஸ்து எழுப்புகின்றார். மனிதன் வழங்குகின்ற நீதியில் பாரபட்சம் உண்டு,  சார்பு நிலை உண்டு, அது ஆண் ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்ற ஒன்று... என்ற பரந்து பட்ட பார்வையை மக்கள் முன்பதாக வைக்கின்றார்.

பாவம் செய்தவரை பழியாக பார்க்காமல் மனித நேயத்தோடு அணுகுகிறார். பாவத்திற்கு சம்பளம் மரணம் என்பதிலிருந்து மாறுபட்டு விடுதலை வாழ்வை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முன் வைக்கின்றார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து முன் வைக்கின்ற இந்த மன்னிப்பு என்பது இறை நீதியைச் சார்ந்த ஒன்றாக அமைந்திருந்தது. இறைவன் மன்னிக்கின்றவர்,  மனதுருக்கம் உடையவர்,  இரக்கமுடையவர், நீடிய பொறுமை உடையவர் என்பதை தன் மன்னிப்பின் செயல்கள் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து எடுத்துக்காட்டுகின்றார்.

விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை கல்லால் எரிந்து கொல்வதற்கு சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் வந்திருந்தார்கள் என்று நம் வாசிக்கின்றோம். அப்படி என்றால் சமூகம் எவ்வளவு கரை படிந்து இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இயேசு கிறிஸ்து மன்னிப்பின் வழியாக மாற்று சமூகத்தை முன்வைக்கின்றார். பாவம் சாபம் என்ற நிலையிலிருந்து மன்னிப்பு மறுவாழ்வு என்கின்ற கருத்தியல்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து வடிவமைக்கின்றார்.

இயேசு கிறிஸ்து தன்னை மனுமகனாக அடையாளப்படுத்திக் கொண்டு பூமியிலே மன்னிக்க மனித குமாரனுக்கு அதிகாரம் உண்டு என்று நிலைநாட்டுகின்றார். இந்த மன்னிப்பின் வழியாக சமூகத்தில் அன்பும் தோழமையும் ஆதரவும் பெருகும்படியாக ஆண்டவர் மாற்றுகின்றார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து முடக்குவாதமுற்ற மனிதனுக்கு செய்த அற்புதத்தை காட்டிலும் மன்னித்தது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறினது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் அரும் போதனைகளால் மாற்று சித்தாந்தத்தை முன்வைத்து மாற்றுக் கருத்துகளை முன்வைத்து சமூகத்தை சீர்திருத்துகின்றார்.

இயேசு கிறிஸ்துவின் வீட்டிலிருந்து அற்புதத்தை கண்டு சென்ற மக்கள் மத்தியில் மன்னிப்பு என்கின்ற கருத்தியல் பரவும் படி செய்தார். அது புறந்தள்ளப் பட்ட மக்களையும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும் மறு வாழ்க்கைக்கான அடித்தளமாக மாறியது.

மன்னிப்பவர் இறைவர் மன்னிக்கப்படுகின்றவர்கள் இறை மக்கள் என்கின்ற புதிய அடையாளத்தை சமூகத்தில் கட்டமைத்தார் இயேசு கிறிஸ்து.

சமூகம் தழைப்பதற்கு மனிதன் வளர்வதற்கு மன்னிப்பு ஒன்றே மாற்று வழி என்கின்ற புதிய வழியில் தன் மக்களை பயணிக்க வைத்தார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

பழிக்குப் பழி என்கின்ற கருத்தியலில் இருந்து இறை மக்களை விடுவித்து மன்னிப்பு, ஒப்புரவு வழியாக மனித மாண்பையும் இறை சாயலையும் ஆண்டவர் மீட்டெடுத்தார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு அற்புதத்திலும் தவறாமல் பயன்படுத்துகின்ற வார்த்தை உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்பதே. இதைத் திரும்பத் திரும்ப மக்கள் மனதில் பதிய வைத்து மாற்று சிந்தனை உடைய மக்களாக சமூகத்தை மாற்றி அமைத்தார் இயேசு கிறிஸ்து.


இறுதியில் இதனால் சிலுவைப் பாடுகளையும் அவர் ஏற்று சிலுவையின் வழியாக மன்னித்து மறுவாழ்வை மனுக் குடும்பத்திற்கு ஈந்தளித்தார்.

 அன்பு, மன்னிப்பு, ஒப்புரவு என்பவைகள் இறை ஆட்சியின் அங்கங்கள் என்பதை ஆண்டவர் தம் அரும் செயல்களாலும் தம் போதனைகளாலும் வலியுறுத்தினார்.

மானுடம் தழைப்பதற்கு மன்னிப்பே மருந்தாகும். மன்னித்து வாழ்பவர் இறை மக்கள் ஆவார்கள். மனு குமாரன் இயேசுவின் வழியில் மன்னிக்கப் பழகுவோம், மனிதநேயத்தோடு வாழ்வோம், மாற்றங்களை உண்டாக்குவோம்.

இறை ஆட்சியில் பங்கு பெறுவதற்கு மனிதநேயத்தோடும் அன்புறவோடும் வாழ்வோம்.

 # நிறைவாக: 

"நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற ரத்தம் சிந்தினீர் ..." என்ற பாடலைப் பாடும் போதெல்லாம் நம்முடைய உணர்வில் மாற்றம் வராவிட்டால் பாடி பயன் ஏதும் இல்லை....

"பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே, தேவாதி தேவன்  என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே ..." என்று வழிபாட்டில் பாடும் பொழுது நாம் ஆண்டவரால் மன்னிக்கப்பட்ட சமூகம் என்று உணரவில்லை என்றால் வழிபாடும் பொருளற்றது....

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்று ஒவ்வொரு வழிபாட்டிலும் நாம் இறைவேண்டல் செய்கிறோம். எந்த வகையில் மன்னிக்கிறோமோ அதே மன்னிப்பு இறைவனால் நமக்கு வழங்கப்படும் என்பதை உணராவிட்டால் நமது பரமண்டல ஜெபம் அர்த்தம் அற்றவையே...

தேவ இரக்கம், தேவ அன்பு, இயேசு தாசன், சலோமி, மெர்சி....என்று நமக்கும் நம் மக்களுக்கும் பெயர் வைத்திருக்கின்றார்கள், வைத்திருக்கின்றோம்... இருந்தும் கிறிஸ்துவின் அன்பு நம்மில் வெளிப்படாவிட்டால் நாம் வெறும் பெயர் கிறிஸ்தவர்களே...

எளியோரின் துணை நின்று விடுவிப்போம்...

அறியாமை எனும் இருளினின்று விடுவிப்போம்..

மனுமகன் வழியில் நின்று விடுவிப்போம்...

இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக


நட்புடன் உங்கள்

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி,

அரியலூர் சேகரம்,

திருச்சி -தஞ்சை திருமண்டலம்.

✝️🌿☘️🍀🌳🌲🪴✝️

 

 

 

Comments