"Transforming the oppressive structures"- Rev. Augusty Gnana Gandhi.

ஒடுக்கும் அமைப்புகளை 
மாற்றுருவாக்கம் செய்தல்

                                        Painting by Rev. W. Jebasingh Samuvel, CSI Jaffna Diocese. 


# திருமறைப் பகுதிகள்:

நாகூம் 1 : 1 - 15

திருப்பாடல்கள்: 113

லூக்கா 13 : 10 - 17

திருத்தூதுவர் பணிகள் 4 : 32 - 37

# உட்புகுமுன்:

ஒடுக்குதல் என்பதற்கு இலக்கணம் வகுக்க முடியாது,  காரணம் அவை சுரண்டலோடும், பதுக்கலோடும், அடிமைத்தனத்தோடும், வன்முறையோடும், அடிப்படை வாதங்களோடும், சாதியத்தோடும்..., நெருங்கிய தொடர்புடையது.

ஒடுக்குதல் இல்லங்களில் துவங்கி, சமூகத்தில் படர்ந்து, நாட்டில் வளர்ந்து, உலகளாவிய அளவில் வேர் கொண்டு நிற்கின்ற ஒன்றாகும்.

முதல் தர உலக நாடுகள் - மூன்றாம் தர உலக நாடுகள் என்ற பிரிவும், ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற வேறுபாடுகளும், ஆண்டான் - அடிமை என்ற பிளவுகளும், உயர் சாதியினர் - தலித் மக்கள் என்ற வகைகளும், ஆண் - பெண் என்ற பாகுபாடுகளும்... ஒடுக்குதலின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும்.

நிறங்களை வைத்தும்,  செய்யும் தொழிலை வைத்தும், வாழும் இடங்களை வைத்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வைத்தும், சாதியத்தை வைத்தும் ஒடுக்குதல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.

இன்னொரு புறம் ஒடுக்கதலுக்கு எதிரான போராட்டங்களும்,  இயக்கங்களும், கருத்தியல்களும்,  சித்தாந்தங்களும்,  பேச்சு வார்த்தைகளும், செயல்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.

பள்ளிகளும், கல்லூரிகளும், காவல் நிலையங்களும், நீதிமன்றங்களும், வழிபாட்டுத் தலங்களும்... ஒடுக்குதல் அற்ற ஒரு சமூகத்தை கட்டி அமைப்பதற்கு பாடுபட்டாலும், இன்று அவைகளும் ஒடுக்குதலில் மறு வடிவங்களாக மாறிவிட்டன.

அதிகாரங்கள் அனைத்தும் பணி செய்வதற்கே என்ற நிலைப்பாடு மறைந்து போய், இன்று அடிமைப்படுத்துவதற்கு,  தங்கள் ஆதாயங்களுக்காக, சுய லாபங்களுக்காக ஒடுக்குதலின் கைப்பாவையாக மாறிவிட்டன.

ஒடுக்குதலில் இருந்து மக்களை விழிப்படைய செய்கின்ற ஊடகங்களும், தினசரி நாளிதழ்களும், பத்திரிகைகளும் இன்று அதன் சாரங்களை இழந்தே நிற்கின்றன. ஒடுக்கும் சக்திகளுக்கே அவைகள் துணை போகின்றன.

திருமறையில் நீதித் தலைவர்களும், தீர்க்கதரிசிகளும், திருத் தூதுவர்களும், இறைப் பணியாளர்களும் ஒடுக்குதல் அற்ற உலகை உருவாக்குவதற்கு இறைவனால் அனுப்பப்பட்டார்கள். இறுதியில் இறைவன் மனு உருவானார். மனு குடும்பத்தை ஒடுக்குதலில் இருந்து மீட்பதற்காக. இறைமகன் இயேசுவும் சிலுவையின் வழியாக ஒடுக்குதல் எவ்வளவு கொடூரமானது என்பதை இவ்வுலகிற்கு காண்பித்தார்.

இயேசு கிறிஸ்துவின் இயக்கம் ஒடுக்குதல் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு திருச்சபையாக, இறை மக்களாக, இறை அன்பர்களாக இன்றும்  இயங்கி வருகிறது. அந்த மாபெரும் இயக்கத்தில் நாமும் உறுப்பினர்களாக இருக்கின்றோம் என்ற உணர்வில் இயங்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

இயேசு கிறிஸ்து மறுரூப மலையில் ஒடுக்குதலை எதிர்த்து போராடின மோசேயோடும், எலியாவோடும், உரையாடி தன்னை ஒடுக்குதலுக்கு எதிரான சக்தியாக  உருவாக்கிக் கொண்டதைப் போல, திருச்சபை தன்னை உருவாக்கிக் கொள்ள அழைக்கப்பட்டு இருக்கிறது. நாமும் ஒடுக்குதலுக்கு எதிரான, ஒடுக்குதலின் சக்திகளுக்கு எதிராக, அமைப்புகளுக்கு எதிராக நம்மை மறுரூபம் ஆக்கிக் கொள்வோம்.

 

திருமறைப் பகுதிகளை கீழ்காணும் மூன்று தலைப்பின் வழியாக நாம் சிந்திக்கலாம்.

 

1. ஒடுக்குதலுக்கு எதிராக  எதிர்வினை ஆற்றல் மூலம் மாற்றுருவாக்கம் - Transformation through Counter Action....(நாகூம் 1 : 1 - 15)

2. புறக்கணிப்புக்கு எதிராக எதிர் சீர்திருத்தம் மூலம் மாற்றுருவாக்கம் - Transformation through Counter Reformation...(லூக்கா 13 : 10 - 17)

3. பதுக்கலுக்கு எதிராக எதிர் இயக்கம் மூலமாக மாற்றுருவாக்கம்  - Transformation through Counter Movement...(திருத்தூதுவர் பணிகள் 4 : 32 - 37)


1. ஒடுக்குதலுக்கு எதிராக  எதிர்வினை ஆற்றல் மூலம் மாற்றுருவாக்கம் - Transformation through Counter Action....(நாகூம் 1 : 1 - 15)

இனக்குழுக்களின் மோதல்கள் போர்களுக்கு வழி வகுத்தது. பின்னர் இது நாடுகளாக பிளவுபட்டு நாடுகளுக்கு இடையே போர்கள் பரவின. இதன் விளைவாக காலனி ஆதிக்கங்கள்உருவாகின.

வலிமை மிகுந்த நாடுகள் வலிமையற்ற நாடுகளை போர்களினால் தன் வசமாக்கிக் கொண்டு, அதன் வளங்களையும், செல்வங்களையும், தனது உடைமையாக்கிக் கொண்டு, குடிமக்களை அடிமைகளாக பிடித்து வைத்து நடத்துவதும் வரலாற்றில் நாம் காண்கிறோம்.

எகிப்தில் இஸ்ரவேல் மக்கள் 400 வருடங்களாக அடிமைகளாக இருந்தார்கள். எகிப்தியரின் ஒடுக்குதலில் இருந்து இஸ்ரவேலரை மீட்பதற்கு கடவுள் எகிப்தியருக்கு விரோதமாக எதிர் வினை ஆற்றினார். அதன் விளைவு இஸ்ரவேல் மக்களுக்கு விடுதலை கிடைத்தது.

ஒருங்கிணைந்த நாட்டில் இஸ்ரவேலர்கள் பல்வேறு காலகட்டங்களில் மீண்டும் அவர்கள் போர்களினால் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டார்கள்.

அசீரியப் பேரரசினால் வடநாடு வீழ்ந்து இஸ்ரவேல் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக நீனிவே  நாட்டுக்கு கொண்டு போகப் பட்டார்கள்.காலணி ஆதிக்கத்தின் வெளிப்பாடு இவைகளாகும்.

அசீரியப் பேரரசு வலுவிழந்த பின்பதாக பாபிலோனிய பேரரசு நீனிவே நாட்டை கைப்பற்றியது. இந்த காலகட்டத்தில் தான் நாகூம் தீர்க்கதரிசி சிறைப்பட்ட மக்களோடு தானும் ஒருவராக வாழ்ந்தவர்.

நாகூம் தீர்க்கதரிசையின் வார்த்தைகள் கவனிக்கப்பட வேண்டியவைகள், அவைகள் என்னவென்றால் "கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன். கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர். கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர்,அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்."(1 : 2)

கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர்,அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர் என்பது கடவுளின் எதிர்வினையாற்றலை குறிக்கின்ற ஒன்றாகும்.

இஸ்ரவேல் மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்களை ஆண்டவர் தெரிந்தெடுத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக உலகத்திற்கு பறைசாற்றினார். தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமாக செயல்படுகின்ற அடிமைப்படுத்தும் சக்திகளுக்கு, ஒடுக்குகின்ற ஆற்றலுக்கு எதிராக கடவுள் எதிர்வினை ஆற்றுகிறார்.

ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார். இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்(1 : 8) என்பது கடவுள் இஸ்ரவேல் மக்களின் சார்பாக, அதாவது ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக, ஒடுக்குபவர்களுக்கு எதிராக கடவுள் எதிர்வினை ஆற்றுகின்றார் என்பது தெளிவாகின்றது.

இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுக்களை அறுப்பேன்(1 : 13) என்பது கடவுள் வரலாற்றில் செயல்படுகிறவர் என்பதையும், இருக்கின்றவராகவே இருக்கிறேன் என்ற ஆண்டவர் அடிமைப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக செயல்படுகின்றவர் என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது. யூதாவே, என் பண்டிகைகளை ஆசரி. உன் பொருத்தனைகளைச் செலுத்து. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை. அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்(1 : 15) என்கின்ற தீர்க்கதரிசியின்  வார்த்தைகள் ஒடுக்கப்பட்டோரின் சார்பாக கடவுள் ஆற்றுகின்ற எதிர்வினையால் வருகின்ற விடுதலை வாழ்வை சுட்டிக்காட்டுகிறது.

அதிகாரங்கள் கடவுளால் வழங்கப்பட்டவை அல்ல. அவைகள் மனிதரால் ஏற்படுத்தப்பட்டவைகள். ஒடுக்குதலுக்கும் அடிமைப்படுத்துதலுக்கும் கடவுள் எப்போதும் எதிரானவர்.

ஒடுக்குதலுக்கு எதிராக மக்கள் போராட முடியாத பொழுது, அப்படியே போராடினாலும் அவர்கள் நசுக்கப்படும் பொழுது கடவுள் அவர்களின் சார்பாக நின்று எதிர்வினை ஆற்றுகின்றார். அந்த எதிர் வினை ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை தருகின்றது.

காயின் ஆபேல்  சம்பவத்தில் வருகின்ற கடவுள் ஒடுக்கப்பட்டோரின் சார்பாக நின்று ஒடுக்குபவருக்கு எதிர்வினை ஆற்றுகின்றார்.

இஸ்ரவேலரை ஒடுக்கிய எகிப்தியருக்கு விரோதமாக கடவுள் எதிர்வினை ஆற்றி அவர்களுக்கு விடுதலை வாழ்வினை வழங்குகின்றார்.

ஆசீரிய படையெடுப்பினால் இஸ்ரவேலர்கள் நினிவே நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த பொழுது ஆசிரியப் பேரரசு, பாபிலோனிய பேரரசினால் வீழ்ந்ததை கண்டார்கள்.

ஒடுக்குதலுக்கு எதிராக செயல்பட முடியாமல் இருந்த நிலையில், கடவுள் ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலர் சார்பாக துணை நின்று, எதிர்வினை ஆற்றி மாற்றுருவாக்கத்தை கடவுள் வடிவமைக்கின்றார்.

கடவுள் காண்பித்த இந்த எதிர்வினை ஆற்றல் என்பது ஒடுக்குதலுக்கு எதிரானது. ஒடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராக கடவுள் களம் அமைக்கின்றார். கடவுள் ஒடுக்குதலுக்கு எதிராக முன் நின்று செயல்படுகின்றார். ஒடுக்கப்பட்டு ஒரு கூட்டமைப்பை கடவுள் உருவாக்குகின்றார்.

கடவுளின் இந்த மாற்று உருவாக்க செயல்பாட்டில் மோசே போன்றவர்கள் தங்கள் இணைத்துக் கொண்டார்கள். எஸ்தர் போன்றவர்கள் முன் நின்றார்கள். மரியாள் போன்றவர்கள் தன்னை அர்ப்பணித்தார்கள். நாமும் அவர்கள் வழி தோன்றலாய் களத்தில் முன்நிற்போம். எதிர்வினை புரிந்து மாற்றுவாக்கத்திற்கு  தடம் அமைப்போம்.

2. புறக்கணிப்புக்கு எதிராக எதிர் சீர்திருத்தம் மூலம் மாற்றுருவாக்கம் - Transformation through Counter Reformation...(லூக்கா 13 : 10 - 17)

சீர்திருத்தங்கள் பல நாடுகளில், பல இடங்களில், சமயங்களில் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.  சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பழமைவாதிகளும் , அடிப்படைவாதிகளும் தங்களின் முன்னிறுத்திக் கொண்டு மக்களை அறியாமை இருளில் மூழ்கச் செய்து வருகின்றனர். இதுவும் தொன்று தொட்டு நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலகட்டங்களில் நோய்கள் கடவுளின் சாபங்களாக, கடவுளின் தண்டனைகளாக கருதப்பட்டு, அவர்கள் விலக்கி வைக்கப்படுவதும், விளிம்பு நிலையில் வைக்கப்படுவதும், பாளையத்திற்கு புறம்பாக்கப்படுவதும் நடைமுறையாக இருந்து வந்தது.

நியாயப்பிரமாண சட்டங்களும் ஒரு வகையில் சீர்திருத்த சட்டங்களே. அவைகள் இஸ்ரவேல் மக்களை சமயம் சார்ந்து சீர்படுத்தி வந்தன, நெறிப்படுத்தி வந்தன, அறம் சார்ந்து வாழ்வதற்கு வழி வகுத்தன.

நாளடைவில் அந்தச் சட்டங்கள் அதன் பொருளை இழந்து போகும்படி செய்யப்பட்டது. சட்டங்கள் மனிதருக்காக என்ற நிலையில் இருந்து சட்டங்களுக்காக மனிதர்கள் என்னும் நிலை உருவாக்கப்பட்டது.

ஓய்வு நாள் சட்டம் விடுதலையின் அடையாளமாக அனுசரிக்க வழிநடத்தப்பட்டது. எகிப்தில் இருந்து கர்த்தர் தங்களை விடுவித்தார் எனவே ஓய்வு நாளை அனுசரிக்க வேண்டும் என்ற நியமங்கள் சமயத் தலைவர்களால் மழுங்கடிக்கப்பட்டது.

பின்னர் ஓய்வு நாளில் ஒரு சில விதிவிலக்குகள் அவர்களால் உருவாக்கப்பட்டது. இவைகளும் இஸ்ரவேல் மக்களுக்கு உண்டான சீர்திருத்தங்கள் ஆகும்.

தங்களது மிருக ஜீவன்கள் கிணற்றில் விழுந்து விட்டால் அதை காப்பாற்றுவதற்கு அனுமதி உண்டு, குறிப்பிட்ட தூரம் வரை நடப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு சில விதிவிலக்குகள் அந்த சீர்திருத்தங்களால் உண்டாக்கப்பட்டது.

இந்தப் பின்னணியத்தில் இயேசு கிறிஸ்து 18 வருடங்கள் கூனி குறுகி வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு ஓய்வு நாளில் விடுதலை அளிக்கின்றார்.

அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.

இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன்பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார், உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.(12-13)

இயேசு கிறிஸ்துவின் இந்த விடுதலையாக்கும் செயலுக்கு அங்கிருந்த சமய தலைவர்கள் எதிர்வினையாற்றினார்கள்.

இயேசு கிறிஸ்து கோபமடைந்து ஓய்வு நாட்களில் எவைகளை எல்லாம் செய்யலாம் என்று விதிவிலக்கு உண்டு அல்லவா, விலங்குகளை காட்டிலும் மனிதர்கள் உயர்ந்தவர்கள், கடவுளின் படைப்பின் மணி மகுடம் மனிதர்கள் அல்லவா! என்று எடுத்துரைக்கின்றார்.

இயேசு கிறிஸ்துவின் இந்த செயல் என்பது ஏற்கனவே இஸ்ரவேல் மக்களிடம் இருந்த சீர்திருத்தத்திற்கு இது எதிர் சீர்திருத்த செயலாக அமைந்தது.(Counter Reformation)

இயேசு கிறிஸ்துவின் இந்த எதிர் சீர்திருத்தம், ஒரு சில சமய தலைவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள். (13 :17)

இஸ்ரவேல் மக்கள் நியாயப்பிரமாண சட்டங்களை பொருளற்ற முறையில் கடைப்பிடித்து வந்தார்கள். இயேசு கிறிஸ்து அவைகளில் மறு சீர்திருத்தத்தை தமது செயல்கள் வழியாக, தமது போதனைகள் வழியாக, அற்புதங்கள் வழியாக கொண்டு வருகின்றார்.

இயேசு கிறிஸ்து காண்பிக்கின்ற இந்த எதிர் சீர்திருத்தம் இன்றைய திருச்சபைக்கான முன்மாதிரியான சீர்திருத்தங்கள் ஆகும்.

இயேசு கிறிஸ்துவின் இந்த எதிர் சீர்திருத்தங்களும் அதன் செயல்பாடுகளும்,  18 வருடம் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு வாழும் உரிமையை மீட்டு தந்தது.

18 வருடங்களாக தலைகுனிந்து வாழ்ந்த பெண்ணினுடைய வாழ்வை தலை நிமிர்ந்து வாழ செய்தது, இயேசு கிறிஸ்துவின் இந்த எதிர் சீர்திருத்தம்.

இயேசு கிறிஸ்துவின் இந்த எதிர் சீர்திருத்தம்,  நோய்கள் கடவுளின் சாபத்தாலும் கோபத்தாலும் வருபவைகள் அல்ல என்ற பாடத்தை இஸ்ரவேல் மக்களுக்கு கற்றுக் கொடுத்தது.

யாரெல்லாம் ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு இருக்கின்றார்களோ அவர்கள் கடவுளின் அன்புக்குரியவர்கள் என்னும் புதிய பாடத்தை  இயேசு கிறிஸ்துவின் எதிர் சீர்திருத்தம் கற்றுக் கொடுத்தது.

யூத சமய சித்தாந்தங்களும், கோட்பாடுகளும், பாரம்பரியங்களும், நடைமுறைகளும் ஆண்களுக்கு  மட்டும் சாதகமாக இருந்த சூழ்நிலையில் இயேசு கிறிஸ்துவின் எதிர் சீர்திருத்தம் பெண்களின் உரிமையை மீட்டெடுப்பதற்கு வழிவகை செய்தது.

வசதி உள்ளோருக்கு மட்டும் மருத்துவம் என்கின்ற புதிய வகை ஒடுக்குதலில் இருந்து இயேசு கிறிஸ்துவின் குணமாக்குதல் எதிர் சீர்திருத்த செயலாக அமைந்தது. அது ஏழைகள், வறியவர்கள் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கியது.

இயேசு கிறிஸ்துவின் இந்த எதிர் சீர்திருத்த சித்தாந்தங்களை நாம் வாழுகின்ற உலகில் கடை முனை வரைக்கும் எடுத்துச் செல்வோம்.

3. பதுக்கலுக்கு எதிராக எதிர் இயக்கம் மூலமாக மாற்றுருவாக்கம்  - Transformation through Counter Movement...(திருத்தூதுவர் பணிகள் 4 : 32 -37

ஆதித் திருச்சபையானது இன்றைய திருச்சபைகளுக்கான முன்மாதிரியாக திகழ்ந்த திருச்சபை என்றால் அது மிகையாகாது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பின்பதாக திருச்சபை வேகமாக பரவியது. அது பல எல்லைகளைக் கடந்து விரிவடைந்தது.

மாபெரும்  திரள் இயக்கமாக (Mass Movement) திருச்சபைகள் வளர்ந்து கொண்டே இருந்தன. யூதர்களும் யூதர்கள் அல்லாத புற இனத்து மக்களும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இயேசு கிறிஸ்துவின் சீடரான பேதுருவின் வல்லமையான போதனையின் மூலமாக மாபெரும் திரள் இயக்கம் உருவானது. ஒரே நாளில் 3000 பேர் திருமுழுக்கு எடுத்து இயேசுவின் இயக்கத்தில் தங்களை தன்னார்வமாக இணைத்துக் கொண்டார்கள்.

இந்த இயக்கம் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு பின்பதாக அன்று இருந்த யூத சமயத்திற்கு எதிராக ஒரு மாபெரும் இயக்கமாக  வளர்ந்தது.

இந்த மாபெரும் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர்கள் இறை ஆட்சியின் அடையாளங்களாக தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

இந்த இயக்கம் யூத சமய கோட்பாடுகளுக்கும் அதன் பாரம்பரியங்களுக்கும் எதிராக எதிர்வினையாற்றிய மாபெரும் எதிர் இயக்கமாகும்.

இந்த இயக்கம் பொதுவுடமை சமுதாயத்தை கட்டி எழுப்பியது. விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.(4: 32)

அவர்களில் ஒருவராகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. மொத்தத்தில்  தனி உடமை சமுதாயத்திற்கு எதிரான இயக்கமாக அது உறுபெற்று,  வலுப்பெற்று பொதுவுடமை சமுதாயமாக உருவெடுத்தது.

நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.(4 : 35)

இந்த எதிர் இயக்கமானது இருப்பவர் - இல்லாதவர், ஏழைகள் - செல்வந்தர்கள், ஆண்டான் - அடிமை என்ற கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இஸ்ரவேல் மக்களிடத்திலே இருந்த யூபி சட்டங்களை இது நடைமுறைப்படுத்துவதாகவும், அதனிலும் மேம்பட்டு அடிமைகளே இல்லாத ஒரு சமுதாயம் உருவாவதற்கு இது வழி வகை செய்தது.

ஆதித்திருச்சபையில் உண்டான இந்த எதிர் இயக்கம்  வர்க்க பேதங்களை முற்றிலும் அறவே அழித்தது எனலாம்.

இயேசு கிறிஸ்துவின் வழி தோன்றல்களாக தங்களை உருவாக்கிக் கொண்ட ஆதி திருச்சபை இறைமக்கள் சமத்துவ வாழ்விற்கு நேராக இந்த எதிர் சீர்திருத்த இயக்கத்தின் மூலமாக அடி எடுத்து வைக்க துவங்கினார்கள்.

இந்த எதிர் சீர்திருத்தத்தை நாம் சமய மறுமலர்ச்சி, சமூக மாற்றம்,  சமூக நீதி என்றும் புரிந்து கொள்ளலாம்.

இந்த எதிர் சீர்திருத்தத்தினால் உண்டானது மாபெரும் புரட்சி என்றும் சொல்லலாம். இது இறை மக்களால் உண்டானது.

இறை மக்களால் உண்டான இந்த எதிர் இயக்கம் அதிகாரங்களை தகர்த்து, ஒடுக்குதலை வேர் அறுத்து, ஒடுக்க பட்டோரின் மாபெரும் எழுச்சியாக இதை புரிந்து கொள்ளலாம்.

இது பதுக்குதலுக்கு எதிரானது, சுயநலனுக்கு முரணானது, செல்வ குவிப்புக்கு விரோதமானது. இறைவன் முன் அனைவரும் சமம் என்கின்ற சமூக சீர்திருத்தத்திற்கு இது வழிவகை செய்தது.

அன்றன்று வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும் என்ற இயேசு கிறிஸ்துவின் இறை வேண்டலுக்கு பதிலுறையாக தங்கள் செயல்களில் செயல்படுத்தினார்கள் ஆதித்திருச்சபை என்ற மாபெரும் திரள் இயக்கத்தார்.

பகிர்வு சமத்துவத்தை உண்டாக்கும். சமத்துவம் சமூக நீதிக்கு வித்திடும், சமூக நீதி இறை ஆட்சிக்கு வழி நடத்தும்.

ஆதித்திருச்சபையினர் எதிர் இயக்கத்தின் மூலமாக இறை ஆட்சியின் மக்களாக தங்களை வகுத்துக் கொண்டார்கள்.

நிலங்களை விற்று நில உடமையாளர்கள் என்கின்ற தகுதியை தங்களுக்கு தாங்களே இழந்து கொண்டார்கள். அத்தோடு மட்டுமின்றி அவர்கள் முதலாளிகள் - தொழிலாளிகள் என்ற பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

எங்கு நில உடமை சமுதாயமிருக்கிறதோ அங்கு அடிமைத்தனமும் இருக்கும், கொத்தடிமைகள் உருவாக்கப்படுவார்கள், கடன் சுமை தாமாக வரும், கந்து வட்டி கொடுமைகள் உருவாகும்.

அடிமை கலாச்சாரம் இவைகளினால் உருவாக்கப்படும். இவைகளுக்கெல்லாம் ஆதி திருச்சபையினர் தங்கள் பகிர்வின் மூலமாக எதிர் இயக்கத்தை தோற்றுவித்ததோடு அல்லாமல் அவைகள் வழியாக சமூக மாற்றத்திற்கும் அவர்கள் வித்திட்டார்கள். 

ஆதி திருச்சபையின் இத்தகைய செயல்பாடுகளும் எதிர் இயக்கமும் திருச்சபை என்கின்ற மாபெரும் பேர் இயக்கத்தை உருவாக்கியது.

இந்த மாபெரும் இயக்கத்தில் நாம் ஒவ்வொருவரும் பங்காளிகளாக இணைந்திருக்கின்றோம் என்பதை இன்றைய திருச்சபை மறந்து விடக்கூடாது.

அவர்கள் விதைத்த இந்த எதிர் இயக்கம் என்கின்ற விதை வேரூன்றி நிற்கவும், விருட்சமாக வளரவும் நாம் ஒவ்வொருவரும் மண்ணுக்கு உரமாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பகிர்வில் நிறைவை காண்போம். அதின் வழியாக நிறை வாழ்வை பெற்றுக் கொள்வோம். ஆதி திருச்சபையின் எதிர் இயக்கத்தின் ஊற்றுகளாக, வாய்க்கால்களாக வழிந்து ஓடிக்கொண்டே இருப்போம்.

 

# நிறைவாக:

ஆருடைய பிள்ளைகள் நீங்கள் திரு உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள் சீருடைய தெய்வப் பிள்ளைகள் நீங்கள் ஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள் கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே - புத்தியாய் நடந்து வாருங்கள் பாடலை பாடும் பொழுது நம் உணர்ந்து பாடுவோம்...

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை

நீசரை நாம் உயர்த்திடுவோம்

பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்

நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே இத்தரணியை அன்பாய் ... பாடலை பொருள் உணர்ந்து பாடுவோம், பாடலுக்கு செயல் வடிவமும் கொடுப்போம்...

ஒடுக்குபவரை, ஒடுக்குதலை கண்டும் காணாமல் இருப்பது ஒடுக்குதலுக்கு சமமானது....

திருச்சபை இறையரசின் முன் சுவை என்பர்... திருச்சபையின் அதிகாரங்களும், பதவிகளும்,,பொறுப்புகளும் இறை ஆட்சியின் அடையாளங்களாக நம்மில் வெளிப்படுகிறதா என்பதை தினமும் உரசிப் பார்ப்போம்...

ஒவ்வொரு திருவிருந்து வழிபாட்டின் போது "அதிகாரம் வகிப்பவர்களுக்காக மன்றாடுகின்றோம்." அந்த அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒடுக்குதலின் அடையாளங்களாக வாழும் பொழுது அவர்களை எதிர்க்கவும், மாற்று உருவாக்கம் உருவாவதற்கும் நாம் ஒத்த சிந்தனையாளர்களோடு,  செயல்பாட்டாளர்களோடு  இணைந்து போராட முன் வருவோம்...

இல்லங்களில், திருச்சபைகளில், சமுதாயங்களில், நாட்டினில் அடிமைப் படுத்துகின்ற,?ஒடுக்குகின்ற அமைப்புகளுக்கும், அதிகாரங்களுக்கும், தீய சக்திகளுக்கும் எதிராக நாம் நின்று,

 

எதிர்வினை ஆற்றவும் ...

எதிர் சீர்திருத்தம் புரியவும்....

எதிர் இயக்கத்தை கட்டி அமைக்கவும் ...

நம் அழைக்கப்பட்டிருக்கிறோம்..

உணர்வோம் ... கடமைகள் புரிவோம்...

 

இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக... இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...

 

நட்புடன் உங்கள்

 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி,

அரியலூர் சேகரம்,

திருச்சி -தஞ்சை திருமண்டலம்.



Comments

  1. அருமையான பதிவு அண்ணா... இந்த பதிவு மனம் சிந்திக்கவும், மெய் சிலிர்க்கவும் வைக்கிறது அண்ணா...

    ReplyDelete

Post a Comment