EMPOWERED BY THE RISEN LORD
உயிர்த்த ஆண்டவரின் ஆற்றல் படுத்தல்
#
திருமறைப் பகுதிகள்:
தொடக்க நூல் 28 : 10 - 22
திருத்தூதுவர் பணிகள் 20 : 7
- 12
யோவான் 20 : 11 - 18
திருப்பாடல்கள் : 29
#
உட்புகும் முன்:
ஆற்றல் இழந்த மக்களுக்கு ஆற்றல் படுத்துவது என்பது தனி கலையாகும். ஆற்றல் படுத்துவது குடும்பத்தில், சமூகத்தில், திருச்சபையில், உலகில் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆற்றல் படுத்துவதை பல விதமாக நாம் புரிந்து கொள்ளலாம் உதாரணமாக, ஆற்றுப்படுத்துவது(Counselling,
) வலுவூட்டுவது((Reinforcement),
திறனூட்டுவது( Motivation).
திருமறையில் ஆற்றல் படுத்துவதை பல இடங்களில் நாம் காணலாம். அவைகளை கடவுளின் பணியாளர்கள், தீர்க்கர்கள்,
நீதித் தலைவர்கள் போன்ற ஆளுமை படைத்தவர்கள் இதை செய்து வந்துள்ளார்கள்.
கடவுள் நேரடியாக காட்சிகள் மூலம், சம்பவங்கள் மூலம், கனவுகள் மூலம், இயற்கையின் வழியாக, வார்த்தையின் மூலம் ஆற்றல் படுத்துவதை தொடர்ந்து இவ்வுலகில் செய்து கொண்டுள்ளார் என்பதை திருமறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
இயேசுவுக்கும் பேதுருவுக்கும் நடந்த முதல் உரையாடலில் "ஐயரே இரா முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டோம் ஒன்றும் கிடைக்கவில்லை" என்று கூறுகின்றார். அதற்கு இயேசு "வலையை ஆழத்தில் போடுங்கள்" என்ற சொல் பேதுருவை ஆற்றல் படுத்தியது.
அதன் விளைவு பேதுருவின் வாழ்வில் இதுவரை காணாத காட்சியை காணச் செய்தது, நம்ப முடியாத அதிசயங்களை காணச் செய்தது, பேதுருவுக்கு மட்டுமல்ல அவரோடு கூட இருந்த மக்களுக்கும் அது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.
🍎
தேர்வு எழுதுகின்றவர்களுக்கு தருகின்ற ஆற்றல் படுத்துதல் அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குகிறது.
🍎
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு தருகின்ற ஆற்றல் படுத்தல் அவரை உடல் நலத்தில் மட்டுமல்ல உள நலனிலும் மேம்பட்டவராக மாற்றுகிறது.
🍎
போரின் முனையில் துவண்டு இருக்கும் வீரர்களுக்கு ஆற்றுகின்ற சூளுரைகள் அவர்களை ஆற்றல் படுத்தி முன்னேறி செல்வதற்கு உதவி செய்கிறது.
🍎
விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கின்ற வீரர்களுக்கு தருகின்ற ஆற்றல் படுத்துதல் அவர்களை வெற்றியாளராக மாத்திரமல்ல உலக சாதனை புரிவதற்கு வழி நடத்துகிறது.
🍎
வளருகின்ற குழந்தைகள் முதலில் குப்புற விழுகின்றன, பின்பு எழுந்து நிற்கின்றன, மெல்ல நடக்க பழகுகின்றன, சின்ன சின்ன வார்த்தைகள் பேச கற்றுக் கொள்கின்றன, இவை அனைத்திற்கும் காரணம் வீட்டில் உள்ளவர்களின் ஆற்றல் படுத்துதலே ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதிகளில் பல ஆற்றல் படுத்துகின்ற நிகழ்வுகள் பல வழிகளில் நடைபெறுகின்றன.
1. கனவுகள் மூலம் ஆற்றல் படுத்தல் (Empowerment
through Dreams) -
தொடக்க நூல் 28 : 10 - 22
2. சுற்றுப்பற சூழல் மூலமாக ஆற்றல் படுத்தல் (Empowerment
through Environment) - தொடக்க நூல் 28 : 10 - 22
3. காட்சிப்படுத்தல் வழியாக ஆற்றல் படுத்தல் (Empowerment
through Visualisation) - யோவான் 20 : 11 - 18
4. கலந்துரையாடல் மூலம் ஆற்றல் படுத்தல் (Empowerment
through Negotion) - யோவான் 20 : 11 - 18
5. எதிர்ப்படுதல் மூலமாக ஆற்றல் படுத்தல் (Empowerment
through Encountering) - யோவான் 20 : 11 - 18
6. அற்புதங்கள் மூலமாக ஆற்றல் படுத்தல் (Empowerment
through Miracle) - திரு..பணிகள் 20 : 7 - 12
7. உணவின் மூலமாக ஆற்றல் படுத்தல் (Empowerment
through Dinning) - திரு..பணிகள் 20 : 7 - 12
8. திருவிருந்தின் மூலமாக ஆற்றல் படுத்தல் (Empowerment
through Communion) - திரு..பணிகள் 20 : 7 - 12
திருமறையின் வெளிச்சத்தில் மேற்கண்ட ஆற்றல் படுத்தல் நிகழ்வுகளை நாம் விரிவாக கற்றுக் கொள்ளலாம்.
1.
கனவுகள் மூலம் ஆற்றல் படுத்தல்
(Empowerment through Dreams)
தொடக்க நூல்
28 : 10 - 22)
ஏசா - யாக்கோபு குடும்ப உறவில் மாபெரும் விரிசல்கள் உண்டாகின்றன. ஏசா மூத்தவர் யாக்கோபு இளையவர். வாரிசு உரிமை மூத்தவருக்கே உரியது. இந்த உரிமையை தவறான வழியில் குறுக்கு வழியில் அதிகாரத்தையும், சொத்துக்களையும், ஆசீர்வாதத்தையும் யாக்கோபு பெற்றுக்கொள்கிறார்.
தகப்பன் மூன்று முறை ஐயம் கொள்கிறார். மூன்று முறையும் யாக்கோபு தன் தகப்பனாரை வஞ்சித்து ஏமாற்றி தன் சகோதரனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை, அதிகாரங்களை பறித்துக் கொள்கிறார்.
ஏசா வஞ்சிக்கப்படுகிறார், ஏமாற்றப்படுகின்றார், இறுதியில் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அனைத்தையும் இழந்து விட்டு நிற்கதியாக நிற்கின்றார்.
வஞ்சிக்கப்பட்டு இழந்து நிற்கின்ற ஏசா அழுகின்றார். இந்த அழுகை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரம் இழந்த மக்கள், வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஓலமாக, ஒப்பாரியாக இதை நாம் பார்க்கலாம்.
இந்த சூழ்நிலையில் வஞ்சிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட ஏசா யாக்கோபுக்கு நியாயம் கற்பிக்க காத்திருக்கின்றார்.
குறுக்கு வழியில் அதிகாரத்தையும் செல்வத்தையும் பறித்துக்கொண்ட யாக்கோபு தப்பி பிழைத்து ஓடுகின்றார். அவர் போகின்ற வழியில் நடக்கின்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது.
யாக்கோபு உறங்கும்போது ஒரு கனவு காண்கின்றார் அந்த கனவு கடவுளின் இருத்தலையும்(Presence
of God), கடவுளின் வழிநடத்துதலையும்( God's
Guidance) அது தெரிவிக்கின்றது.
கனவுகள் வழியாக கடவுள் செய்கின்ற ஆற்றல் படுத்தல் ஒப்புறவின் வழிக்கு
(Reconciliation) நேராக யாக்கோபுவை வழி நடத்தியது.
யாக்கோபு ஒடுக்குகின்ற மனிதராக தன்னை மாற்றிக் கொண்டார். ஏசா ஒடுக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இறைவனின் நீதி செயல்பாடு என்பது ஒடுக்குகின்ற மக்கள் தாமாக முன் வந்து, அல்லது அவர்களை வரச் செய்து அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க வைப்பதும், வருத்தங்களை தெரிவிக்க வைப்பதும் அதற்கு ஈடாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் செய்வது மூலமாக சமத்துவ உலகை உருவாக்குவது தான்.
யாக்கோபு காணுகின்ற இந்த கனவு ஒடுக்குகின்ற நிலையில் இருந்த யாக்கோபு தன்னால் ஒடுக்கப்பட்ட ஏசாவுக்கு நியாயம் செய்யவும் ஒப்புரவின் வழியில் தன்னை அவரோடு இணைத்துக் கொள்ளவும் அன்பின் உறவில் சமத்துவ நெறியில் வாழ்வதற்கு வழிவகை செய்தது.
2.
சுற்றுப்பற சூழல் மூலமாக ஆற்றல் படுத்தல்
(Empowerment through Environment) - தொடக்க நூல்
28 : 10 - 22
யாக்கோபின் சுற்றுப்புறம்
(Environment) அவருக்கு மறைமுகமாக ஆற்றல் படுத்தல் செயலினை செய்தது.
Wilderness Experience of Jacob ... வனாந்தரத்தில் அலைந்து திரிகின்ற வாழ்வு யாக்கோபுவிற்கு ஒரு படிப்பினையை கற்றுக் கொடுத்தது, அது அவரை ஆற்றல் படுத்தியது.
எத்தனை நாட்கள் அலைந்து திரிவது, அச்சத்தோடு வாழ்வது, பழிச் சுமையோடு வாழ்வது இவைகளுக்கெல்லாம் யாக்கோபு அவர்களின் அலைந்து திரிகின்ற வாழ்க்கையும் சுற்றுப்புறமும் அவரை ஆற்றல் படுத்தியது.
யாக்கோபு அவர்கள் ஓடி ஒளிந்து அச்சத்தோடு வாழுகின்ற இந்த அனுபவம் அன்பு உறவோடு தன் சகோதரனோடும் உறவுகளோடும் வாழ்ந்த முந்தைய வாழ்வை அவருக்குள் கொண்டு வந்தது.
யாக்கோபின் இந்த அலைந்து திரிகின்ற அனுபவ நிலை வாழ்வுக்கு நேராக ஆற்றல் படுத்தியது.
3.
காட்சிப்படுத்தல் வழியாக ஆற்றல் படுத்தல்
(Empowerment through Visualisation) - யோவான்
20 : 11 - 18
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கல்லறையின் கல் புரட்டப்பட்டிருந்தது உள்ளே நுழைகின்றார்கள் அங்கு இயேசு அடக்கம் பண்ணப்பட்ட இடத்தில் இரண்டு தூதர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
இயேசுவை சுற்றி இருந்த துணிகள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறதை அவர்கள் காண்கிறார்கள்.
இயேசுவின் தலைமாட்டில் ஒருவரும் கால் மாட்டில் ஒருவரும் இரண்டு தூதர்கள் அமர்ந்திருப்பதை அவர்கள் காண்கின்றார்கள்.
இந்தக் காட்சி சந்தேகத்தோடு, இயேசுவின் உடலை யாரோ திருடி விட்டார்கள் என்ற மனநிலையோடும் துக்கத்தோடும் இருந்த பெண்களுக்கு இந்த காட்சி அவர்களை ஆற்றல் படுத்தியது.
உயிரோடு இருக்கிற வரை மரித்தோர் இடத்தில் தேடுகிறது என்ன என்கின்ற கேள்வி இந்த காட்சிப்படுத்தல் மூலமாக முன்வைக்கப்படுகிறது எனவே இந்த நிகழ்வு அவர்களை ஆற்றல் படுத்துகிறது.
4.
கலந்துரையாடல் மூலம் ஆற்றல் படுத்தல்
(Empowerment through Negotion) - யோவான் 20 : 11 - 18
கல்லறைக்கு சடங்கு செய்வதற்காக வந்த பெண்களோடு தூதர்கள் கேட்கின்ற கேள்வி ஒரு கலந்துரையாடலுக்கு வழி நடத்துகிறது.
அந்த கலந்துரையாடலின் விளைவு அவர் உயிரோடு எழுந்தார் என்ற பற்று உறுதி வாழ்வுக்கு பெண்களை வழிநடத்தியது.
இறுதியில் சடங்கு செய்ய வந்தவர்கள் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் முதல் சாட்சியாகவும் முதல் அருட்பணியாளர்களாகவும் அவர்களை கல்லறையில் இருந்து புறப்படச் செய்தது.
5.
எதிர்ப்படுதல் மூலமாக ஆற்றல் படுத்தல்
(Empowerment through Encountering) - யோவான்
20 : 11 - 18
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை குறித்து சந்தேகத்தோடும் அச்சத்தோடும் திகிலோடும் நடுக்கத்தோடும் இருந்த பெண்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களுக்கு எதிர்ப்படுகின்றார்.
உரிமையோடு பெயர் சொல்லி ஆண்டவர் இயேசு கிறிஸ்து அழைக்கின்றார். உயிர்த்த ஆண்டவரை கண்டு கொள்கிறார்கள்.
நான் உயிரோடு எழுந்ததை என் சகோதரரிடம் நீங்கள் கூறுங்கள் என்று உரிமையோடு ஆண்டவர் கட்டளையிடுகின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் எதிர்ப்படல் பெண்களின் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.
பெண்களின் சாட்சி செல்லாது என்றிருந்த நிலை சமூகத்தில் பெண்களின் சாட்சியே உயிர்த்தெழுதலுக்கு முதல் சாட்சி என்ற நிலைக்குப் பெண்களை உயர்த்தியது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் எதிர்ப்படல்(Encounter)
6.
அற்புதங்கள் மூலமாக ஆற்றல் படுத்தல்
(Empowerment through Miracle) - திரு..பணிகள்
20 : 7 - 12
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பின்பதாக சிதறடிக்கப்பட்ட யூத கிறிஸ்தவர்கள் பல்வேறு இடங்களில் சிதறி வாழ்ந்தார்கள்.
சிதறி கிடந்த யூத கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஒரு பகுதி தான் பிலிப்பு பட்டணம் பிலிப்பு சபை உருவான இடம் ஆகும்.
பவுலடியாரின் ஆழமான ஆற்றல் படுத்தல், உரை நிகழ்த்துதல் வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பொழுது வாலிபன் ஒருவன் கீழே விழுந்து மரித்துப் போகின்றான்.
செய்வதறியாது திகைத்திறந்த ஆதி திருச்சபை மக்களிடத்தில் பவுல் அடியார் ஒரு மாபெரும் அற்புதத்தை நிகழ்த்துகின்றார் மரித்த வாலிபன் உயிரோடு அவர்கள் முன்பு வருகின்றார்.
பவுலடியார் செய்த இந்த மாபெரும் அற்புதம் சிதறி கிடந்த ஆதி திருச்சபை மக்களிடத்தில் ஒரு மாபெரும் எழுச்சியை உண்டாக்கியது அது அவர்களை ஆற்றல் படுத்தியது.
திருச்சபைகள் விரிவடைவதற்கும் இயேசு கிறிஸ்துவின் இயக்கம் வளர்வதற்கும் பவுல் அடியார் செய்த இந்த அற்புதம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்ல
அது அவர்களை ஆற்றல் படுத்தி அவர்களை பற்று உறுதியில் வளர்வதற்கு வாழ்வதற்கு உந்துதல் செய்தது.
7.
உணவின் மூலமாக ஆற்றல் படுத்தல்
(Empowerment
through Dinning) - திரு..பணிகள்
20 : 7 - 12.
உணவு ஆற்றல் தருகின்ற ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம். இயேசு கிறிஸ்துவின் திருப்பணிகளில் மிகவும் முக்கியமான ஒன்று கூடி உணவருந்துதல்.
பவுல் அடியார் ஆதித்திருச் சபையில் திருச்சபை அங்கத்தினர்களோடு இரவு முழுவதுமாக உணவு உண்டு கொண்டு உரையாடிக் கொண்டிருந்தார்கள் என்பதை மிகவும் அழகாக காட்டப்பட்டுள்ளது.
உணவு என்பது உறவுக்கானது அந்த உறவு இறை உறவுக்கு வழி நடத்தும். பவுல் அடியார் ஆதித்திருச்சபையோடு ஏற்படுத்திய இந்த உணவு அவர்களை மேலும் ஆற்றல் படுத்தியது. ஒருமைப்பாட்டுக்கு வழி நடத்தியது.
8.
திருவிருந்தின் மூலமாக ஆற்றல் படுத்தல்
(Empowerment through Communion) - திரு..பணிகள்
20 : 7 - 12
அப்பம் பிட்குதல் என்பது மாபெரும் அடையாளச் செயலாகும். இயேசு கிறிஸ்துவை முன்னிறுத்துகின்ற ஒரு செயல். அவரின் பாடுகளையும் மரணத்தையும் உயிர்ப்பையும் நினைவு கூறுகின்ற ஒரு செயலாகும்.
பவுல் அடியார் ஏற்படுத்திய இந்த திருவிருந்து ஒரு மாபெரும் அடையாளச் செயலாகும். இந்த திருவிருந்தின் வழியாக இறை மக்களை ஆதித்திருச்சபை அன்பர்களை இயேசுவின் இறை ஆட்சிக்கான பயணத்தில் முன்னேறி செல்வதற்கு ஆற்றல் படுத்தல் நிகழ்வாக அமைந்திருந்தது எனலாம்.
திருச்சபை என்பது வழிபடுகின்ற இடம் அல்ல. வழிபடுகின்ற மக்களைக் குறிப்பிடுகின்ற சொல்லும் அல்ல. மாறாக இயேசுவின் இயக்கத்தை குறிக்கின்ற சொல் என்பதை இந்த திருவிருந்து மூலமாக பவுலடியார் அவர்களை வழிநடத்துகின்றார்.
#
நிறைவாக:
விடுதலைப் பயணத்தில் செங்கடல் நிகழ்வுக்கு முன்பதாக மோசே ஆற்றிய மாபெரும் உரை மக்களை ஆற்றல் படுத்தியது, செங்கடலைக் கடக்க செய்தது. நீங்கள் சும்மா இருப்பீர்கள் கடவுள் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் என்கின்ற வார்த்தை அவர்களை ஆற்றல் படுத்தியது.
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அவரின் அற்புதங்கள் அவரின் அடையாளச் செயல்கள் குணமளித்தல் தொடுதல் போன்றவை சீடர்களையும் இறை மக்களையும் ஆற்றல் படுத்தியது. அவர்களை இறை ஆட்சியின் தகவுகளாக வாழ வழிவகை செய்தது.
உயிர்த்த ஆண்டவரின் திருக்காட்சியும், அவரின் எதிர்ப்படுதலும், காலியான கல்லறையும், தூதர்களின் உரையாடல்களும் பயத்தோடும் நடுக்கத்தோடும் திகிலோடும் எதிர்காலம் குறித்த அச்சத்தோடும் வாழ்ந்த சீடர்களையும் இயேசுவின் தாயையும் அவர்களோடு இருந்த மற்ற பெண்களையும் பலப்படுத்தியது, ஆற்றல் படுத்தியது.
உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஆற்றல் படுத்தல் மாபெரும் விளைவுகளை சமூகத்தில் உண்டாக்கியது...
🍁
சடங்கு செய்வதை காட்டிலும் சாட்சியாக வாழ்வதற்கு உந்தியது.
🍁
கடமை மறந்து வாழ்ந்த சீடர்களை கட்டளை வாழ்வுக்கு வழிநடத்தியது.
🍁
சந்தேகத்தோடு வாழ்ந்த மக்களுக்கு ஏசுவின் உயிர்ப்பு சந்தேகத்தை தெளிவு செய்ததோடு மட்டுமல்ல இயேசு உயிர்த்தார் என்ற நற்செய்தியை அறிவிக்க வழிவகை செய்தது.
🍁
சிலுவை மரணத்தினால் உண்டான அச்சம் இயங்க விடாமல் தடுத்ததை இயேசுவின் உயிர்ப்பு அவர்களை ஆற்றல் படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள் என்று கூறும் அளவுக்கு அவர்களை மாற்றியது
🍁
கலிலேயா பகுதி மீண்டும் புரட்சியின் இடமாக உருவானது. மறுமலர்ச்சியின் தாயகமாக உருவெடுத்தது.
🍁
நாசரேத்துர் நற்செய்தியின் பிறப்பிடமானது, நாசரேததூரான் எனும் அவமான சொல் அடிமைத்தனத்தை எதிர்க்கும் சொல்லாக நபராக மீட்பராக அறியப்பட்டது. .
# ஒவ்வொரு திருச்சபையும் ஆற்றல் படுத்தல் நடைபெறும் இடமாக உருவெடுக்க வேண்டும்.
# ஒவ்வொரு அருளுரையும் இறை அன்பர்களை ஆற்றல் படுத்தி இறை ஆட்சிக்கு நேராக தட்டி எழுப்பிட வேண்டும்.
#
"யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்"
என்ற பாடலை பாடும் பொழுதெல்லாம், மனதில் நாம் வெறும் அடிக்கப்படுகின்ற ஆட்டுக்குட்டிகள் மட்டுமல்ல,
நாம் யூத ராஜ சிங்க குட்டிகள் என்கின்ற வீரத்தை நமக்குள் விதைக்கின்றது.
ஆற்றல் படுத்துவோம் ...!
ஆற்றல் பெறுவோம்.....!
ஆளுமையை பெறுவோம்....!
ஆசியாய் வாழ்வோம்....!
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
திருச்சி -தஞ்சை திருமண்டலம்.
✝️🌿🌳🌴🍀☘️✝️


Comments
Post a Comment