EUCHARIST : COMMUNION OF SUFFERING HUMANITY
நற்கருணை : துன்புறும் மானுடத்தின் ஒன்றிணைப்பு
________________________________________________________________________
# திருமறைப்பாடம்:
விடுதலைப் பயணம்
: 12 : 1 - 7
1 கொரிந்தியர் 11 : 23 - 34
மாற்கு : 14: 17 - 25
# உட்புகும் முன்:
Eucharistia எனும் கிரேக்க மூலச் சொல்லை இராபர்ட் டி நொபிலி அவர்கள் "நற்கருணை" என்று மொழியாக்கம் செய்து பயன்படுத்தினார். "காரீஸ்"
என்னும் கிரேக்க சொல்
"கருணை" என்னும் பெயரை குறிப்பதால் "நல்ல கருணை"
என்று மொழி பெயர்த்தார் அவருக்கு பின் வந்தவர்கள் "நற்கருணை"என்னும் சொல்லை கையாண்டார்கள்.
வீரமாமுனிவர் அவர்கள் நற்கருணை என்னும் சொல்லை
"இறைவனின் அணை கடந்த அருள் கூறும் எழில்" என்று விளக்குகின்றார்.
Eucharistia இன்னும் கிரேக்கச் சொல்
"கடவுள் இஸ்ரவேல் மக்கள் வரலாற்றில் நிகழ்த்திய அரும்பெரும் செயல்களை நினைவுகூர்ந்து நன்றி சொல்லும் உள்ளார்ந்த மனநிலையை குறிப்பதாக அமைகிறது, மேலும் கடவுளின் கருணையை உள்வாங்கி அவருக்கு தாராள மனதோடு நன்றி கூறுதல் என்னும் பொருளை தருகின்ற ஒரு சொல்லாக இருக்கிறது.
தம் சீடர்களோடு இணைந்து உண்ட இயேசுவின் இறுதி உணவு நிகழ்வே நற்கருணையின் தோற்றமாக அமைந்துள்ளது.
பேரரசுகளின் அடக்கு முறையாலும்,
ஆட்சி அதிகாரத்தின் பலவிதமான வரி விதிப்புகளாலும்,
சமய தலைவர்களின் பழமை வாதங்களாலும், ஆசாரியர்களின் மனக் கடினத்தினாலும்;
மறைநூல் அறிஞர்களில் தவறான இறையியலாலும், பரிசேயர்களின் போலி பக்தியாலும்,
வேதபாரகர்களின் திரிபு கொள்கைகளாலும்
"துன்புறும் மனுக்குலம்" விடுதலை பெறுவதற்காக;
இறைமகன் இயேசு கிறிஸ்து,
"துன்புறும் தாசராக" (Suffering
Servant) சிலுவை சாவிற்கு தம்மை முழுமையாக கையளித்து,
தம்முடன் இணைந்து இனி துன்புறப்போகும் தம் சக தோழர்களோடு (Co - Sufferers) துன்புறும் மானுடத்திற்காக(Suffering Humanity) "தம் வாழ்வு, பணி, மரணம்"( Life, Work, Death) இவற்றுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி, தன் சிலுவைப் பாடுகளின் வழியாக துன்புறும் மானிடத்திற்கு கிடைக்கும் விடுதலைக்காக கடவுளுக்கு நன்றி கூர்ந்து பந்தி அமர்ந்த நிகழ்வை நன்றியோடு நினைவு கூறுவோம்.
வழக்கமாக கொண்டாடும் பஸ்கா விருந்தை இயேசு திரு விருந்தாக்கினார்.
அந்த விருந்தினை பொருள் உள்ளதாக மாற்றினார்.
துன்புறும் கடவுளின் துணையாளர்களை,
விடுதலை பணியாளர்களை பஸ்கா விருந்து இணைத்தது.
அந்த விருந்து இயேசுவை சிலுவை மரணத்திற்கு உந்தி தள்ளியது.
இயேசுவின் உயிர்ப்பிற்கு பின்பதாக இதே விருந்து சீடர்களை இயேசுவின் அடிச்சுவட்டில் பயணிக்க வழி நடத்தியது.
திருச்சபை ஆகிய நம்மை இயேசுவின் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளவும்,
இயேசுவின் வழியில் இணைந்து பயணிக்கவும் திருவிருந்து நம்மை அழைக்கின்றது.
இன்று நாம் பெற இருக்கும் திரு விருந்தின் மூலமாக இயேசுவின் சிந்தையில் நம்மை இணைத்துக் கொள்வோம். இயேசுவின் திருப்பாடுகளில் பங்கு பெறுவதற்கு நம்மை அர்ப்பணிப்போம்.
துன்புறும் மானுடத்தின் விடுதலைக்காக,
துன்புறும் அருட்பணிர்களாக, இயேசுவின் துன்ப பாத்திரத்தில் உணர்ந்து பங்கு பெறுவோம்…
இந்த உணர்வோடு அருளுரையை ருசித்து ...உட்கொள்வோம் ...
1. உறவில் இணைத்த பஸ்கா விருந்து.(மாற்கு : 14: 17 - 25)
2. உணர்வை ஊட்டிய இறுதி விருந்து.(விடுதலைப் பயணம் : 12 : 1 - 7)
3. உரிமையை வழங்கிய திரு விருந்து.(1 கொரிந்தியர் 11 : 23 - 34)
கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதிகளை மேற்கண்ட தலைப்புகளின் வழியாக நம் தியானிப்போம்...
1. உறவில் இணைத்த பஸ்கா விருந்து.(மாற்கு : 14: 17 -
25)
இயேசுவின் இறுதி உணவை,
அதாவது பாஸ்கா உணவை அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வுகளில் ஒன்றாக நாம் இதை கருதி விட முடியாது.
தம் வாழ்வின் இலட்சியமான
"இறையாட்சியை " நிறுவுவதற்காக இயேசு தன்னை முழுவதுமாக ஒப்படைத்தார். கடவுள் தன்னை இவ்வுலகத்திற்கு அனுப்பின நோக்கத்தை நிறைவேற்றுவதே தனது தலையாகிய திருப்பணி என்பதில் உறுதியாக இருந்தார்.
"இறையாட்சி"
எனும் தம் திருப்பணித் திட்டத்திற்கு தன்னோடு கருத்தில் இணைந்தவர்களை அழைத்து தெரிந்தெடுத்தார்.
விரும்பி வந்தவர்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.
இறை ஆட்சிக்கான பயணத்தில் தம் சீடர்களோடு இணைந்து கலிலேயா துவங்கி தம் திருப்பணி பயணத்தை மேற்கொண்டார்.
கிராமங்கள்,
நகரங்கள், வீதிகள், தெருக்கள், கடற்கரைகள், மக்கள் கூடுகின்ற இடங்கள், ஆறுகள், சபைகள், ஆலயங்கள்.., என அனைத்து இடங்களிலும் மக்களை சந்தித்து இறை ஆட்சிக்காக மக்களை தயார் படுத்தினார்.
இயேசுவோடு பயணித்த சீடர்களின் வட்டங்கள் விரிவடைந்தது.
இயேசுவின் இயக்கத்தில் தன்னார்வ தொண்டர்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இயேசுவின் வழியில் தொடர்ந்து பயணித்து இயேசுவோடும், தனித்தும் அவர்கள் தம் திருப்பணிகளை ஆற்றினார்கள்.
இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பதாக பாஸ்கா உணவில் தம் சீடர்களை இணைத்துக் கொண்டார். வழக்கமாக குடும்பத்தார் கொண்டாடுகின்ற இந்த விருந்தில் இயேசு வழக்கத்திற்கு மாறாக தனது சீடர்களோடு இந்த விருந்தை அனுசரிக்கின்றார்.
இயேசுவும் சீடர்களும் அடங்கிய உறவு, குடும்ப உறவுக்கு அடையாளமாக காட்டப்பட்டுள்ளது.. ஒரு குடும்பத்து மக்களாக பிரிவினைகள், ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு திருக்குடும்பமாக இயேசு கிறிஸ்து தமது உறவுகளை முன்வைக்கின்றார்.
இயேசுவின் இந்த இறுதி விருந்தில் தம் சீடர்களுக்கு தம் அன்பின் ஆழத்தை,
உறவின் மகத்துவத்தை விருந்து நிகழ்வின் வழியாக காண்பிக்கின்றார்.
தம் திருப்பாடுகளுக்கு முன்பதாக தம் சீடர்களை இயேசு ஒரு புதிய உறவின் வட்டத்திற்குள் கொண்டு வந்தார். இனி நான் உங்களை சீடர்கள் என்று சொல்வதில்லை மாறாக "நண்பர்கள்"(யோவான் 15: 15) என்று நட்பு வளையத்திற்குள் அவர்களை கொண்டு வந்தார்.
இயேசுவின் பாஸ்கா விருந்தில் அவரோடு பங்கு பெறுவது அவருடைய நண்பர்கள், அதுவும் நெருங்கின நண்பர்கள். தம்மோடு மூன்றரை ஆண்டு காலம் உண்டு உறவாடி மகிழ்ந்த நண்பர்கள்.
தம் உறவுகளையும், தம் உடைமைகளையும்,
தன் ஊரையும் விட்டுவிட்டு இயேசுவின் இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்ட இந்த நண்பர்களின் வட்டத்தை தோழர்களின் வட்டம்
(Comrades) என்று அழைக்கலாம்.
இந்த தோழர்களின் வட்டத்தில் ஆண்டவர் கூறுகின்றார் என்னை காட்டி கொடுப்பவரின் கையும் இந்த பந்தியில் இருக்கிறது. என்னை மறுதலிப்பவரின் கையும் இந்த பந்தியில் பங்கு பெறுகிறது என்கின்றார்.
அதோடு மட்டுமல்ல தன்னுடைய இலட்சியத்தை உணராது வலது பாரிசத்தில் தனக்கான இடத்தையும் இடது பாரிசத்தில் தனக்கான இடத்தையும் கேட்கின்ற மக்களும் இந்த விருந்தில் பங்கு பெறுவதை அனுமதிக்கின்றார்.
இயேசு இந்த விருந்தில் தன்னோடு உடன் பயணிக்கின்றவர்கள்,
மாற்று சிந்தனையாளர்கள்,
கருத்தியல் முரண்பாட்டாளர்கள், சித்தாந்தத்தை உணராதவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள்,
மறுதலிப்பவர்கள் என அனைவரையும் தம் விருந்தில் ஏற்றுக்கொள்கிறார்.
பாஸ்கா எனும் விருந்தில் இயேசு கிறிஸ்து இத்தகைய கூட்டத்தோடு இணைந்து பங்கு பெறுகின்றார். இதன் மூலம் ஒரு புதிய செய்தியை உலகிற்கு தருகின்றார்.
மாற்று சிந்தனையாளர்களோடும், மாற்று கருத்தியலாளர்களோடும், லட்சியத்தை அடைவதற்கு இணைந்து பயணிப்பதே இறை அழைப்பு என்பதை கற்றுக் கொடுக்கின்றார்.
கருத்துக்கள், சித்தாந்தங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கலாம்.
ஆனால் "மனிதம்" ஒன்றே மனிதரில் இருக்க வேண்டும் என்ற உயரிய சிந்தையை இந்த விருந்தின் மூலமாக ஆண்டவர் கற்றுக் கொடுக்கின்றார்.
அதோடு மட்டுமல்ல மன்னிப்பவரே இறைவனின் பண்புகளை உடையவராய் இருக்கிறார்.
அதுதான் இறை சாயல் என்பதையும் இந்த விருந்தின் வழியாக தன்னை முன்மாதிரியாக காண்பிக்கின்றார்.
இதை மாற்றிப் புரிந்து கொள்வோம் என்று சொன்னால் பாஸ்கா விருந்து இத்தகைய இணைப்பை ஏற்படுத்துகிறது.
உறவுகளுக்கு பாலமாக அமைகிறது.
இத்தகைய இயேசுவின் உறவுகளோடு நம்மையும் இணைத்துக் கொள்ள கடவுள் அழைக்கின்றார். இறை ஆட்சி என்னும் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு இயேசுவின் பாஸ்கா விருந்தான திருவிருந்தில் நம்மையும் இணைத்துக் கொள்வோம்.
இயேசுவின் தோழர்களாக நம்மை உருமாற்றிக் கொள்வோம்.
2. உணர்வை ஊட்டிய இறுதி விருந்து.(விடுதலைப் பயணம் : 12 : 1 - 7)
இயேசு கிறிஸ்து தம் சிலுவைப் பாடுகளுக்கு முன்பதாக தம் சீடர்களோடு பாஸ்கா உணவை உண்பதற்கு மிகவும் ஆசைப்பட்டார் என்று திருமறை கூறுகிறது.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.(லூக்கா 22 : 15)
இந்த பஸ்கா உணவு என்பது மிகவும் சிறப்பான ஒன்றாக இயேசு கிறிஸ்து கருதினார், ஏனென்றால் இது அவரின் இறுதி உணவாக இருக்கும் என்பது அவருடைய திடமான நம்பிக்கை.
இஸ்ரவேல் மக்களுக்கு பாஸ்கா உணவு என்பது மிகவும் சிறப்பானது.
அது தங்கள் விடுதலை வரலாற்றை நினைவூட்டுகின்ற ஒன்று என்கின்ற காரணத்தினால் அதை உணர்வோடு கடைப்பிடித்தார்கள்.
இயேசு கிறிஸ்து தம் சிலுவைப் பாடுகளுக்கு முன்பதாக வருகின்ற இந்த பாஸ்கா உணவை இஸ்ரவேல் மக்களின் விடுதலை வரலாற்றோடு ஒப்பிட்டு அதை செயல்படுத்த விரும்பினார்.
கடவுள் மோசே வழியாக இஸ்ரவேலருக்கு கற்பித்த பாஸ்கா உணவை எவ்வண்ணமாக உண்டு தங்கள் விடுதலை வரலாற்றை அவர்கள் துவக்கினார்களோ, அதே போல இயேசு கிறிஸ்துவும் இந்த பஸ்கா உணவின் வழியாக விடுதலை வரலாற்றிற்கு அடித்தளம் இடுகின்றார்.
அதைப் புசிக்கவேண்டடிய விதமாவது,
நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும்,
உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்.
அது கர்த்தருடைய பஸ்கா.(யாத்திராகமம்
12 :
11)
ஆண்டவர் இயேசு எகிப்தின் விடுதலை வரலாற்றை, தான் வாழுகின்ற சூழ்நிலையில் இருக்கும் விடுதலை வரலாற்றோடு இணைத்து, ஒரு புதிய விடுதலைப் பயணத்தை சிலுவையின் வழியாக துவக்குகிறார். அதற்கு பஸ்கா உணவை இயேசு கருவியாக பயன்படுத்துகின்றார்.
இஸ்ரவேல் மக்களின் விடுதலை வரலாறு பஸ்கா உணவோடு துவங்கியது.
இயேசு கிறிஸ்து கட்டமைக்கின்ற விடுதலை வரலாறும் இந்த பஸ்கா உணவின் மூலமாக துவங்கப்படுகிறது என்கின்ற அடையாளச் செயலாக இதனை நிறைவேற்றினார்.
பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து:
இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது,
என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.(லூக்கா
22 : 19)
உணவு உண்ட பின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து:
இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.(லூக்கா
22 : 20)
இதுவரை உண்ட பஸ்கா உணவு எகிப்தின் விடுதலையை நினைவு கூறுகின்ற செயலாக இருந்தது. நாம் உண்ணுகிற இந்த உணவு இனி வருகின்ற புதிய விடுதலையை நினைவு கூறுகின்ற வரலாறு அதோடு மட்டுமல்ல புதிய உடன்படிக்கையின் வரலாறு என்கின்ற புதிய கருத்தியலை தம் சீடர்களிடம் விதைத்தார்.
தன் பாடுகளையும் தன் மரணத்தையும் தன் ரத்தம் சிந்துதலையும் ஆண்டவர் இந்த பாஸ்கா உணவோடு ஒப்பிட்டு, உணர்வுபூர்வமான உரையாற்றி,
உணர்வோடு இந்த விருந்தில் பங்கு பெறுவதற்கு தம் சீடர்களை பக்குவப்படுத்துகின்றார்.
ஆண்டவர் இயேசு அமைத்த இந்த பஸ்கா விருந்து ஒரு புதிய விடுதலைக்கான விருந்து. ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களின் பாடுகளில் பங்கு பெற்ற கடவுள், சிலுவை பாடுகளிலும் பங்கெடுக்கின்ற "துன்புறும் இறைவனை" தம் பஸ்கா விருந்தில் பிரதிபலித்தார் இயேசு.
எப்பொழுதெல்லாம் திருவிருந்தில் பங்கு பெறுகிறோமோ அப்பொழுது நாம் விருந்தில் மட்டுமல்ல இயேசுவின் பாடுகளிலும் மரணத்திலும் பங்கு பெறுகிறோம் என்ற உணர்வை இதன் வழியாக நாம் பெறுகின்றோம்.
3. உரிமையை வழங்கிய திருவிருந்து.(1 கொரிந்தியர் 11 : 23 -
34)
பவுலடியார் தமது திருச்சபைக்கு எழுதுகின்ற இந்த கடிதத்தில், இயேசு கிறிஸ்து எவ்வாறு பஸ்கா உணவை ஆயத்தம் செய்தார், அதை எவ்வண்ணமாக பொருள் உள்ளதாக தம் சீடர்களுக்கு பரிமாறினார் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார்.
நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்.
என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி,
அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
போஐனம்பண்ணினபின்பு,
அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.
நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். (1 கொரிந்தியர் 11 : 25)
இந்த வார்த்தைகளை தம் திருச்சபைக்கு எழுதின பின்பதாக திருவிருந்தில் எவ்வளமாக பங்கு பெற வேண்டும் என்பதையும் அவர் கற்றுக் கொடுக்கிறார்.
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து,
இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.(1 கொரிந்தியர்
11 : 26)
இயேசுவின் பாடுகளையும் அவரின் மரணத்தையும் அறிக்கை செய்வதோடு மட்டுமல்ல,
அந்த மரணத்தின் வழியாக
"மீட்பு வந்திருக்கிறது, உரிமை வாழ்வு கிடைக்கப் பெற்றது"
என்பதை நினைவு கூறவும் அதை கொண்டாடவும் நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தம் திருச்சபைக்கு எடுத்துக்காட்டுகின்றார்.
என்னத்தினாலெனில்,
அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால்,
தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான்.(1 கொரிந்தியர்
11 : 29) என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை வழியாக மீட்பு கிடைத்திருக்கிறது.
உரிமை வாழ்வு நமக்கு கிடைத்திருக்கிறது. எனவே இந்த விருந்தில் பங்கு பெறுபவர்கள் உணர்வோடு பங்குபெற பவுலடியார் அழைக்கின்றார்.
இந்த விருந்து அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டவர்களின் விருந்தாக அமைகிறது. இந்த விருந்தில் பங்கு பெறுகிறவர்கள்
"ஒடுக்குபவர்களாக" இருப்பின் அவர்கள் ஆக்கினைக்கு உள்ளாக தீர்க்கப்படுவார்கள் என்ற நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பையும் பவுல் அடியார் எடுத்துரைக்கின்றார்.
புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா?
தேவனுடைய சபையை அசட்டைபண்ணி,
இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா?
உங்களுக்கு நான் என்னசொல்லுவேன்?
இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ?
புகழேன்.( 1 கொரிந்தியர் 11 : 22) என்று கண்டிப்போடு கூறுகின்றார்.
இந்த விருந்து பஸ்கா நிகழ்வை நமக்கு முன்னிறுத்துகிறது. இயேசுவின் இறுதி உணவை நமக்கு முன் அடையாளமாக காட்டுகிறது. அவர் தந்த உரிமை வாழ்வில் பங்கு பெறுவதை இந்த விருந்து உறுதி செய்கிறது.
அன்று சீடர்களை கடவுள் தேர்ந்தெடுத்தார் இன்று திருச்சபையை ஆண்டவர் தனது பிரதிநிதியாக தெரிவு செய்திருக்கிறார்.
ஆண்டவர் தந்த உரிமை வாழ்வை பெற்றுக்கொண்ட திருச்சபை மக்கள்,
இறைமக்கள், இறை அடியவர்கள் இந்த உரிமை வாழ்வுக்கு பங்கு உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள இந்த திருவிருந்து நம்மை அழைக்கிறது.
ஆண்டவரின் பாடுகளில் பங்கு பெறும் அனைவரும் இந்த விருந்தில் முழுமையாக பங்கு பெறுவர்.. அல்லது அவரால் மீட்கப்பட்ட அனைவருக்கும் இந்த விருந்தில் பங்கு பெறுகின்ற முழு உரிமையும் உண்டு.
ஆண்டவர் தருகின்ற இந்த உரிமை வாழ்வுக்கு இடையூறாக இருக்கின்ற எவரும் அவரை கொலை செய்தவர்களே என்கின்ற உண்மையை இந்த விருந்து உணர்த்துகிறது.
ஆண்டவர் தந்த இந்த திருவிருந்தில் உணர்வோடு பங்கு பெறுவோம் உரிமை வாழ்வில் நிலைத்து நிற்போம்..
#;நிறைவாக:
மந்திர மாயம் இல்ல
மரிச்சவர நெனச்சு
தந்திடும் விருந்தும் அல்ல சாஸ்திர சடங்கு அல்ல -
திருவிருந்து
என்னும் பரட்டை(Dr.Rev.
Theophilus Appavu)அண்ணனின் கருத்தோடு நாம் இணைவோம்...
திருவிருந்தில் எவ்வளவு பக்தி உணர்வோடு பங்குபெறுகிறோமோ அதே பக்தி உணர்வோடு அவருக்காக பாடுகள் படவும்,
பாடுகளை சகிக்கவும், துன்புறவும் நம்மை அர்ப்பணிக்க இந்த திருவிருந்து அழைக்கின்றது.
திருவிருந்தில் பங்குபெற வரும் பொழுதெல்லாம் ஆலயத்தில் உள்ள சிலுவை வெறுமையாக இருப்பது நமக்குத் தெரிகிறது.
அந்த சிலுவையில் நான் அறையப்படுவதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன் என்ற உறுதி மொழியை கூறுவதற்கு திருவிருந்து நம்மை உணர்த்துகின்றது.
இந்த விருந்தை சுவைத்த நாம் இந்த விருந்தை சுவைப்பதற்கு ஆயத்தமாய் இருக்கிற மக்களுக்கு விருந்தை பரிமாறும் கருவியாக அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்ற உணர்வையும் ஊட்டுகிறது.
மாதம் ஒரு முறை திருவிருந்து எடுக்கின்ற மக்களும் உண்டு,
அனுதினமும் எடுக்கின்ற
மக்களும் உண்டு. எத்தனை நாட்கள் எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல,
எப்படி வாழ்கிறோம்! எவ்வாறு இயேசுவை பிரதிபலிக்கின்றோம்! எவ்வாறு சாட்சியாக
வாழ்கிறோம்! என்பதில் தான் திருவிருந்து பொருள் உள்ளதாக மாறுகிறது.
இல்லாவிடில் அது பொருள் அற்றதாக மாறிவிடும்.
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே - அதிசய
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு...
👉🏿
செடியும் கொடியுமாய் இயேசுவில் படர்ந்திடுவோம் ...!
👉🏿
கனிதரும் வாழ்வு வாழ்ந்திடுவோம்...!
👉🏿
சாட்சியும் பகர்ந்திடுவோம், இரத்த சாட்சியாக மரிக்கவும் துணிந்திடுவோம்...!
உறவில் இணைந்து...!
உணர்வில் கலந்து....!
உரிமையில் நிலைத்து...!
திருவிருந்து பெற்றிடுவோம்...!
திருவிருந்தாகிடுவோம்...!
நமது இல்லங்களை
பாஸ்கா விருந்தின் இடங்கள் ஆக்கிடுவோம்...!
இயேசுவில் இருந்த சிந்தையை அணிந்திடுவோம்...!
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக ...
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
திருச்சி -தஞ்சை திருமண்டலம்.
✝️☘️🍀🌴🌳🌿✝️

Comments
Post a Comment