HOSANNA: LORD SAVE US

 

HOSANNA: LORD SAVE US

ஓசன்னா : ஆண்டவரே எங்களை விடுவியும்

____________________________________________________________

# திருமறைப் பகுதிகள்:

சகரியா 9 : 1 - 12

1 தீமோத்தேயு : 4 : 6 - 16

லூக்கா19 : 29 - 40

 

# உட்புகும் முன்:

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் குருத்தோலை பவனி என்பது வெறும் ஊர்வலம் மட்டுமல்ல, இது "மக்கள் திரள் இயக்கம்" (Mass Movement). இந்த ஊர்வலம்  இயேசுவின் இயக்கத்தினரின் அணிவகுப்பு ( It's a Parade of Jesus Movement). இது ஒரு புனித பயணம் அல்ல மாறாக, இது ஒரு விடுதலைக்கான பயணம் (Journey Towards Liberation)

மேலும் இந்த ஊர்வலத்தில் வெளிப்பட்டது "ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டுரிமை" (Solidarity of the Oppressed). இத்தகைய புரிதலோடு குருத்தோலை ஊர்வலத்தில், வழிபாட்டில் பங்கு பெறுவோம்.

ஒவ்வொரு முறையும் குருத்தோலை பவனி துவங்கும்  பொழுது,"இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து எவ்வாறு தங்கள் பயணத்தை துவங்கினர்களோ அத்தகைய உணர்வு இறை மக்களாகிய நம்மில் இருந்திடல் வேண்டும்."

குருத்தோலை பவனி இது ஒரு "விடுதலைப் பயணத்திற்கான முன் அடையாளம்" என்ற உணர்வோடு நாம் இதில் பங்கு பங்கு பெறும்பொழுது இந்த ஊர்வலமும் அர்த்தமுள்ள ஒன்றாகிறது.

365 நாட்களும் ஆலயத்தில் அடைபட்டு கிடக்கின்ற, முடங்கி கிடக்கின்ற திருச்சபையை, இறை மக்களை, அருட்பணியர்களை தட்டி, எழுப்பி, உணர்வூட்டி, உரமூட்டி வீதிக்கு அழைத்து வந்தது குருத்தோலை பவனி.

ஆலயத்தின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்களை   வீதிகளில் எதிரொலிக்க செய்தது இந்த குருத்தோலைப் பவனி.

ஓசன்னா பாடுவோம் என்ற பாடலைப் பாடி, பவனியாக செல்லும் பொழுதெல்லாம், ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பேரானந்தம் மனதுக்குள் எழுகின்றது. அது என்னவென்றால் இயேசு கிறிஸ்துவோடு நாமும் ஒன்றாக இணைந்து பயணிக்கிறோம் என்ற உணர்வை நமக்குள் எழுப்புகிறது.

"ஓசன்னா" என்று ஒவ்வொரு முறையும் நாம் சொல்லும் பொழுது, பொருள் உணர்ந்து சொன்னாலும், பொருள் உணராது சொன்னாலும், இன்று "எங்களை விடுவியும் ஆண்டவரே"  என்று நமக்காக மட்டுமல்ல "பிறருக்காக நாம் குரல் எழுப்புகிறோம்" என்ற உணர்வையும் அது நமக்குள் உணர்த்துகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வலி, வேதனை, பாடு, துன்பம், ஏமாற்றம், வஞ்சிக்கப்படுதல், ஓரங்கட்டப்படல், கைவிடப்படல், புறக்கணிக்கப்படல், அவமானப்படுத்தப்படல், மனித மாண்பு சிதைக்கப்படல் போன்ற பல அவலங்களை சந்தித்து பெருமூச்சுகளோடும், கண்ணீரோடும், அச்சுறுத்தல்களோடும் விளிம்பு நிலையில் வாழுகின்ற மக்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற ஓலம் தான் "ஆண்டவரே எங்களை விடுவியும் - ஓசன்னா" என்ற வார்த்தை.

மனிதர்களால் கைவிடப்பட்டு, மனித முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து நிற்கதியாக நிற்கின்ற மக்கள் இறுதியில் சொல்லுகின்ற வார்த்தைதான்  "ஆண்டவரே எங்களை விடுவியும்.”

இத்தகைய புரிதலோடு கீழ்காணும் மூன்று தலைப்பின் வழியாக திருமறைப் பகுதிகளை நாம் தியானிப்போம்..

 

1. இறை ஆளுகையை உணர்த்தும் திருப்பவனி. (சகரியா 9 : 1 - 12)

2. இறை உறவுகளை உலகிற்கு வெளிப்படுத்திய திருப்பவனி.(லூக்கா19 : 29 - 40)

3. இறைப் பாதையை உலகிற்கு காட்டிய திருப்பவனி.(1 தீமோத்தேயு : 4 : 6 - 16)

 

1. இறை ஆளுகையை உணர்த்தும் திருப்பவனி. (சகரியா 9 : 1 - 12)

சகரியா தீர்க்கதரிசன நூலில் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தார்கள். அதோடு மட்டுமல்ல அவர்கள் அகதிகளாகவும் (Refugees) வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களின் ஏக்கங்களும் பெருமூச்சுகளும் எப்போது தமக்கு விடுதலை கிடைக்கும் என்பதாகவே இருந்தது. நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்து  வந்தார்கள்.

இந்நிலையில் கடவுள் சகரியா தீர்க்கதரிசியின் வழியாக அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றார். இது அவர்களுக்கு எதிர்கால நிச்சயத்தையும்,  விடுதலை வாழ்வு உண்டு என்ற உறுதியையும் அவர்கள் வாழ்வில் தந்தது.

அடிமைத்தனத்திலும், அகதிகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிற தமது மக்களை மீட்பதற்கு, கடவுளின் ஆளுகை எப்படிப்பட்டது என்பதையும் தீர்க்கதரிசியின் வழியாக விளக்குகின்றார். 

சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி.(9 : 9) இந்த வார்த்தை ஒட்டுமொத்த இஸ்ரவேல் சமூகத்துக்கு சொல்லப்பட்டாலும், இது ஒடுக்கத்தில் வாழுகின்ற பெண்களுக்காகவே சொல்லப்பட்டதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

அடிமைத்தனத்திலும் மிகவும் அடிமைத்தனத்தில் சிக்குண்டவர்கள் பெண்கள் தான்.  (Vulnerable community) எனவே தீர்க்கதரிசி கடவுளின் செய்தியாக முதலில் சொல்வது பெண்களுக்குத்தான். "சீயோன்குமாரத்தியே, எருசலேம்குமாரத்தியே" களிகூரு, கெம்பீரி என்று ஆண்டவர் வாக்குரைக்கின்றார்.

இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் .. என்று பயன்படுத்தப்படுகின்ற இந்த வார்த்தை ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளது.

நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் என்ற இந்த மூன்று பதங்களில் கடவுளின் ஆட்சியும் அவரின் ஆளுகையும் எப்படிப்பட்டது என்பதை மேலும் விளக்குகின்றார்.

இறை ஆளுகை என்பது சுய நீதி அல்ல அது இறைநீதி சார்ந்தது, மீட்பு, விடுதலை என்பது வெறும் சமயம் சார்ந்த ஒன்றல்ல.அது சமூக, பொருளாதார, அரசியல், கருத்தியல்,  ஆன்மீகம், உளவியல், சுற்றுப்புறம் ...போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை  அளிப்பவர் என்பதை பறைசாற்றுகின்றது.

தாழ்மையுள்ளவர் என்பது கடவுளின் குணத்தைக் குறிக்கின்ற சொல் மட்டுமல்ல மாறாக ஏழை எளியவர்களின் குணத்தை பிரதிபலிக்கின்ற சொல்லாக அதை பார்க்கலாம்.

எளியோரின் தோழராக மீட்பராக கடவுள் உருவகப்படுத்தப்பட்டு அடிமைத்தனத்திலும் அகதிகளாகவும் வாழ்கின்ற மக்களின் தோழராக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் என்ற உயரிய செய்தியையும் அது சுட்டிக்காட்டுகிறது.

உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன். (சகரியா 9 : 11)

இந்த வார்த்தைகள் திருமறையின் இரண்டு சம்பவங்களை நமக்கு முன்னிறுத்துகின்றன.  ஒன்று குழியில் தள்ளப்பட்ட யோசேப்பை கடவுள் எவ்வண்ணமாக மீட்டாரோ அவ்வாறே நான் இஸ்ரவேலர்களை மீட்பேன் என்ற செய்தியாக புரிந்து கொள்ளலாம்.

மற்றொன்று உலர்ந்த எலும்புகள் எவ்வாறு உயிர் பெற்று எழுந்ததோ அவ்வண்ணமாகவே இஸ்ரவேலர் ஆகிய உங்களை  மீண்டும் மீட்டுருவாக்குவேன் என்ற செய்தியாகவும் புரிந்து கொள்ளலாம்.

கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். இது இஸ்ரவேல் மக்களோடு கடவுள் கொண்டிருக்கிற உடன்படிக்கை உறவை சுட்டிக் காட்டுகின்றது.

சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.(ஆதியாகமம் 49 : 10)

அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக் கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான். திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.(ஆதியாகமம் 49 : 11)

கடவுளின் ஆளுகை எளியோருக்கானது. கடவுளின் அரசாட்சியும் ஏழைகள், எளியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரியது, ஒடுக்குபவர்களுக்கு எதிரானது  என்பதை கடவுள் தீர்க்கதரிசி வழியாக சுட்டிக்காட்டுகின்றார்.

விடுவிக்க வருகின்ற மேசியாவும், மேசியா யுகமும், இறை ஆளுகையும் திருப்பவனி உடன் ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. சகரியா தீர்க்கன் வழியாக காட்டப்பட்டுள்ள இந்த திருக்காட்சி இறை ஆளுகை எப்படிப்பட்டது என்பதை நமக்கு தெளிவாக விளக்குகின்றது.

 

2. இறை உறவுகளை உலகிற்கு வெளிப்படுத்திய திருப்பவனி.(லூக்கா19 : 29 - 40)

ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பவனியானது சமூகத்தில் பல மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகை ஆகாது.

வரலாற்றில் அரசர்கள் ஊர்வலம் வருவார்கள். மக்கள் பார்வையாளராக இருபுறமும் நின்று மன்னரை வாழ்த்துவார்கள். இதுதான் மரபு.

இந்த மரபு இயேசு கிறிஸ்துவின் திருப்பவனியில் உடைத்தெறியப்பட்டு மக்கள் பார்வையாளர்களாக அல்ல பங்கேற்பாளர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

ஓசன்னா என்ற முழக்கம்  இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் மக்களின் நிலைகளையும் அவர்கள் சந்தித்த அவலங்களையும் எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருந்தது.

ஓசன்னா என்பதற்கு இன்றே எங்களை விடுவியும் என்று பொருள் கொள்ளலாம். எனவே மக்கள் விடுதலைக்கான ஏக்கத்தோடும்,  பெருமூச்சுகளோடும் வாழ்ந்தவர்கள் என்பதை இந்த முழக்கம் நமக்கு காட்டுகிறது.

ஓசன்னா என்ற இந்த பெரும் முழக்கம் மக்களின் போராட்ட வடிவத்தை நமக்கு முன் நிறுத்துகின்றது.

ஓசன்னா என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்தது என்றும் பொருள் கொள்ளலாம்.

இயேசுவும் மக்களும் இணைந்து சென்ற  ஊர்வலத்தில், "இவர்கள் யார்?"  என்று  மக்கள் எழுப்புகின்ற கேள்வி ஊர்வலத்தில் இயேசுவோடு சென்றவர்களை அடையாளம் காட்டியது.

இயேசுவோடு சென்றவர்கள் இயேசு கிறிஸ்துவினால் அற்புதத்தை பெற்றவர்கள் மட்டுமல்ல அவர்கள் அத்தனை பேரும் சமயத்தாலும், அதிகாரங்களினாலும், ஆட்சியாளர்களாலும் அடிமைப்படுத்தப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் என்ற அடையாளத்தை வழிகாட்டியது.

இயேசுவோடு உடன் சென்ற இவர்கள் கலிலேயர்கள் என்ற முகவரியை இந்த திருப்பவனி உண்டாக்கியது.

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.(லூக்கா 19 : 38)

ஊருக்கு வெளியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பின் நற்செய்தி சொல்லப்பட்ட போது தூதர்கள் விண்ணில் முழங்கின அதே பாடல் வரிகளை மக்களும் இங்கு பயன்படுத்துகின்றார்கள். அப்படி என்றால் இந்த ஊர்வலத்தில் மக்களால் பாடப்பட்ட பாடல் விடுதலைக்கான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக்கா 19 : 40)

வாய்ப்பு மறுக்கப்பட்ட அத்தனை மக்களும் இயேசு கிறிஸ்துவின் ஊர்வலத்தில் அவர்கள் பேசினார்கள், பாடினார்கள், இறைவனைப் புகழ்ந்தார்கள், அரசாட்சியை எதிர்த்து ஓசன்னா என்று முழக்கமிட்டார்கள்.

இயேசு கிறிஸ்துவின் திருப்பவனியானது; இயேசுவின் சொந்தங்கள் யார், அவரின் உறவுகள் யார், கடவுளின் உறவுகள் வட்டம் யார்... என்பதை இந்த உலகத்திற்கு தெளிவாக எடுத்துக் காட்டியது.

ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், பெண்கள், அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்,நோய் நிமித்தம் புறக்கணிக்கப்பட்டவர்கள், பாவிகள் என்று கருதப்பட்டவர்கள், அடிமைகளாக மாற்றப்பட்டவர்கள், அன்னகர்களாக உருவாக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறன் படைத்தோர், அத்தனை பேரும் ஆண்டவரின் உறவுகள் என்பதை இயேசு கிறிஸ்துவின் திருப்பவனி உலகிற்கு எடுத்துக்காட்டியது.

இவர்களோடு யாரெல்லாம் ஆண்டவரின் அரசாட்சிக்குரியவர்களாக தங்களை மாற்றிக் கொண்டார்களோ, உதாரணமாக சகேயு, சமாரிய நாட்டுப் பெண், காணானிய பெண், யவீரு போன்ற தலைவர்கள், நிக்கோதேமு போன்றவர்கள், வாற்கோதுமை அப்பத்தை கொடுத்த சிறுவன்... போன்றோர்களும் இறைவனின் சொந்தங்கள் என்று அடையாளத்தை இந்த திருப்பவனி வெளிப்படுத்தியது.

 

இயேசுவின் உறவின் வட்டத்துக்குள் நம்மை இணைத்துக் கொள்ள இந்த திருப்பவனி நம்மை அழைக்கின்றது

 

3. இறைப் பாதையை உலகிற்கு காட்டிய திருப்பவனி.(1 தீமோத்தேயு  4 : 6 - 16)

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் குருத்தோலை பவனி கடவுளின் பாதை எது என்பதை இந்த உலகிற்கு தெளிவாக எடுத்துக்காட்டியது.

இவ்வுலகத்தின் அரசாட்சியில் அரசர்கள் குதிரைகளோடும் யானைகளோடும் ரதங்களோடும் வருவது மரபு. இந்த மரபினை இயேசு கிறிஸ்துவின் குருத்தோலை பவனி உடைத்தெறிந்து ஒரு புதிய பாதையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

கழுதையின் மீது அமர்ந்து வருகின்ற திருக்காட்சி என்பது கடவுளைப் பற்றிய புரிந்து கொள்ளுதலை மாற்றுகின்றது.

மேசியா என்பவர் போர் செய்து அரசாட்சியை ரோம பேரரசிடமிருந்து மீட்பவர், மீட்டு யூதர்களுக்கு ஆளும் அதிகாரத்தை வழங்குபவர் என்ற புரிதல் யூத மக்களிடம் இருந்தது.

ஆனால் இயேசுவின் பவனி இதற்கு தலைகீழ் அர்த்தத்தை கற்றுக் கொடுத்தது. இவர் அரசளுகின்றவர்தான்; ஆனால் யார் சார்பாக அரசு ஆளுகின்றவர்,  யாருக்கு இறையாட்சி அருளுகின்றவர் என்கின்ற புதிய பார்வையை இந்த பவனி கொடுத்தது.

மேசியவாக வருகின்றவர் எருசலேமில் தோன்றுவார். யூத குலத்தில் வருவார். அவர் யூதர்களுக்கு அரசாட்சியை வழங்குவார் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு கலிலேயாவிலிருந்து தன் பயணத்தை துவக்கி எருசலேமில் நிறைவு செய்கின்றார்.

மேசியாவின் பாதை எருசலேமில் இருந்து அல்ல மாறாக கலிலேயாவிலிருந்து துவங்கிவிட்டது என்பதை பவனி பறைசாற்றியது.

மேசியாவின் பாதையில் அவரோடு இணைந்து வருகின்றவர்கள் தங்களை சுத்த ரத்தம் என்று சொல்லிக் கொள்கின்ற யூதர்கள் அல்ல. மாறாக யூதர்களால் தீட்டானவர்கள் என்று கருதப்பட்ட கலிலேயர்கள் இந்த பாதையில் ஆண்டவரோடு பயணிக்கின்றார்கள். 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த பாதையில், போர் கொண்டு அல்ல, படை கருவிகள் மூலமாக அல்ல மாறாக சிலுவை வழியில் இறை ஆட்சியை அமைப்பதே என்கின்ற நோக்கத்தை இயேசுவின் திருப்பணி கற்றுக் கொடுத்தது.

இயேசு கிறிஸ்துவின் பாதை ஆட்சியாளர்களுக்கு எதிரான பாதை, அடக்குமுறையாளர்களுக்கு எதிரான பாதை, சமயம் கொண்டு மக்களை ஒடுக்குகின்ற தீய சக்திகளுக்கு  எதிரான பாதை என்பதை  எருசலேம் பவனியின் மூலமாக ஆண்டவர் வலியுறுத்துகின்றார்.

இயேசு கிறிஸ்துவின் பவனியில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் அத்தனை பேரும் தாங்களாகவே தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இயேசுவின் சிந்தையோடு தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இயேசுவின் திருப்பணிகளோடு தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இயேசுவின் இறையாட்சி என்கின்ற உயரிய நோக்கத்திற்காக தங்களை பவனியில் இணைத்துக் கொண்டவர்கள்.

இந்தக் கூட்டம் முழுவதும் இயேசுவின் அன்பாலும் மனதுருக்கத்தினாலும் நன்மை பெற்றவர்கள். இயேசுவின் சமூக நீதியினாலும் சமூக மாற்றத்தினாலும் பயன்பெற்ற பயனாளிகள் இவர்கள்.

இவர்கள் ஒருபோதும் இயேசுவின் பாதையில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளாதவர்கள். இயேசுவோடு உடன் பயணித்தவர்கள். கலிலேயா துவங்கி   எருசலேம் வரைக்கும் இறுதி வரைக்கும் தங்களை இயேசுவின் பாதையில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.

இயேசுவின் இந்த பாதையில் மேலும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் அப்போஸ்தலராகிய பவுல் அடியாரும் தீமோத்தேயுவும் இயேசுவின் தன்னார்வ இயக்கத் தொண்டர்களே.

இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றி இவ்விருவரும் திருச்சபைக்கு ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காதவைகள்,  ஆற்றிய உரைகள் கணக்கிட முடியாதவைகள்.

யோர்தான் ஆற்றில் இயேசு திருமுழுக்கு பெற்று துவக்கிய இந்த பாதை எருசலேமின் கொல்கதா மலை வரைக்கும் நீடித்தது.

வன்முறை இல்லா வழியில் இறையாட்சி. ஆயுதங்கள் இல்லாத வழியில் விடுதலை. பாடுகளின் வழியில் இறைமாட்சி இதுதான் இயேசு கிறிஸ்துவின் பாதை. இதைத்தான் இயேசு கிறிஸ்துவின் குருத்தோலை பவனி சுட்டிக் காட்டுகிறது.

இயேசுவின் இந்த அடிச்சுவட்டில் இணைந்து  பார்வையாளர்களாக அல்ல, மாறாக பங்கெடுக்க நம்மை அர்ப்பணிப்போம். இந்தப் பாதை விசாலமான பாதை அல்ல குறுகிய பாதை தான்.

 

# நிறைவாக:

பேனாவின் முனையைப் போன்றே குருத்துவின் முனையும் வலுவானது. இரண்டுமே ஆற்றல் பெற்றது. இந்த இரண்டும் சமூகத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தவைகள்.

குருத்தோலைகளை பிடித்து பழகிய நமது கரங்கள் சிலுவையை சுமப்பதற்கும் முன் வரும் என்றால் அது மிகவும் சிறப்பானதாகும்.

ஒவ்வொரு வருடமும் திருச்சபையாக நாம் ஏறெடுக்கின்ற குருத்தோலை பவனி சமயம் சார்ந்த பவனியாக இல்லாமல் சரித்திரத்தை மாற்றும் பவனியாக இருந்திடல் வேண்டும்.

 

 

இயேசுவின் சிந்தையில் இணைந்தவர்களாக....

இயேசுவின் பாதையில் முன் நடப்பவராக....

இயேசுவின் ஆளுகையில் முன் களப்பணியாளராக...

இயேசுவின் உறவுகளின் தோழராக....

 

இணைந்து பயணிப்போம் இறை ஆட்சியை அமைத்திடுவோம்...

 

இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக

இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...

 

நட்புடன் உங்கள் 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

திருச்சி -தஞ்சை திருமண்டலம்.

️🌿🌳🌴🍀☘️

 

Comments