JESUS'S SEVEN WORDS FOR TRANSFORMATION

 

JESUS'S SEVEN WORDS FOR TRANSFORMATION

மாற்றுருவாக்கத்திற்கான இயேசுவின் சிலுவை மொழிகள்

_________________________________________________________________________________







# உட்புகும் முன்:

இயேசுவின் திருப்பணிகளால் எளியோரின் வாழ்வில், விளிம்பு நிலை மக்களிடத்தில், புறம் தள்ளப்பட்ட சமூகத்தில்  மாபெரும் மாற்றங்கள் உண்டானது. கைவிடப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற்றார்கள், அறியாமை என்னும் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பயணிக்க வைத்தது.

ஒடுக்கப்பட்ட மக்கள் இயேசுவின்  பணிகளாலும், போதனைகளாலும், அற்புதங்களாலும், சிந்தனைகளாலும், எதிர் கருத்துகளாலும், மேற்கோள்களாலும், செயல்பாடுகளாலும் சமூக நீதிக்கான பாதைகளை மக்கள் தெரிந்து கொண்டார்கள். அடிமைப்படுத்தும் சக்திகளை மக்கள் இனம் கண்டு கொண்டார்கள். நீதி நேர்மை நியாயம் தழைக்க துவங்கின.

இது ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் ஒடுக்குகின்ற வேதபாரகர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள், சனகரீம்  சங்கத்தார், ஆசாரியர்கள், ஆட்சியாளர்கள் மத்தியில் மாபெரும் கலக்கம் உண்டானது.

இயேசுவையும் இயேசுவின் இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும்,, அவர்களை  அழித்தொழிக்க வேண்டும் என்று சதித்திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இயேசு எருசலேமை நோக்கி தம் சீடர்களோடு பயணம் மேற்கொள்கின்றார். ஏழைகளும், கைவிடப்பட்டவர்களும்,,ஒடுக்கப்பட்டவர்களும் ஒன்று கூடுகின்றார்கள், இயேசுவை மேசியாவாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

இயேசுவின் பவனியில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள், ஓசன்னா என்று ஆர்ப்பரிக்கின்றார்கள். தாவீதின் வழித் தோன்றலாக இயேசுவை அறிமுகப்படுத்துகிறார்கள்,  எங்களை விடுவியும் என்று விடுதலைக்கான முழக்கம் இடுகின்றார்கள்.

இயேசுவின் பவனியும், ஆலய சுத்திகரிப்பும் ஒடுக்குகின்ற தீய சக்திகளுக்கு பெரும் அச்சுறுத்தல்களாக மாறினது. அவரை கொலை செய்ய வகை தேடினார்கள், சதித்திட்டம் தீட்டினார்கள்.

இயேசுவும் இதை உணர்ந்தவராக தம் சீடர்களோடு மூன்று முறை தன் பாடு மரணத்தை அறிவிக்கின்றார். எருசலேமில் தனக்கு நடக்க இருக்கிற சிலுவையையும் மரணத்தையும் குறிப்பிடுகின்றார். அதன் பின் உயிரோடு எழுவேன் என்பதையும் தம் சீடர்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார்.

இயேசுவின் பஸ்கா உணவிற்கு பின்பதாக நடக்கின்ற நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவைகள். இயேசு காட்டி கொடுக்கப்படுகின்றார். விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுகின்றார். இவரிடம் ஒரு குற்றமும் காணோமே என்ற நிலையிலும் அவர்                                                                   சிலுவைச் சாவிற்கு தீர்ப்பிடப்படுகின்றார். இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்கிறார்கள். மனுமகனாக சிலுவைச் சாவை துணிந்து ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்.

 

#சிலுவை மொழிகளுக்கான முன்னுரை:

சிலுவையைக் குறித்து பல பாடல்களை நாம் பாடி இருக்கின்றோம் கேட்டும் இருக்கின்றோம்.

சிலுவை மொழிகளை குறித்து பல தியானங்களை கேட்டும் இருக்கின்றோம் பகிர்ந்தும் இருக்கின்றோம்.

"விந்தைக் கிறிஸ்தேசு ராஜா"

என்ற பாடலில்..இயேசுவின் உடலில் இருந்து சிந்துகின்ற இரத்தத்தை, இரத்தம் என்று சொல்லாமல்  "சிந்துதோ துயரோடன்பு" என்று இயேசுவின் அன்பின் ஆழத்தை நமக்கு முன் நிறுத்துகின்றார்.

"பாதம் ஒன்றே வேண்டும்"  என்ற பாடலில்...

நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற - வல்

ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த - உம் .... “

இவ்வுலகம் விடுதலை பெற ஆணிகளுக்கு தன் கால்களை தாமாக கொடுத்தார் என்று எழுதி இருக்கின்றார். இந்தப் பாடலில் வெறும் வார்த்தைகள் மட்டும் வெளிப்படவில்லை உணர்வுகள் வெளிப்படுகிறது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை நெருங்கி வந்த மக்களுக்கு, அன்று படகில் ஏறி அருளுரையாற்றினார். இந்த உயரம் போதாது என்று கருதியதால் என்னவோ இன்று சிலுவை மரத்திலிருந்து மீண்டும் ஒரு உன்னத அருளுரை ஆற்றுகின்றார். இதுவும் ஒரு மலைப் பிரசங்கம் தான்.(Sermon on the Mount) கொல்கதா மலையில் இருந்து இயேசு கிறிஸ்து ஆற்றிய புதிய மலை பிரசங்கம்.(New Sermon on the Mount)

இயேசு கிறிஸ்துவின் இறுதி உணவு எவ்வாறு  முக்கியமானதோ அதே அளவு முக்கியமானது  இயேசு கிறிஸ்துவின் சிலுவை மொழிகள்.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் நபர் கூறுகின்ற கடைசி வார்த்தைகள் அவரின் வாக்குமூலமாக அமையும். அப்படிப்பட்ட வாக்குமூலம் அல்ல.

சிலுவை மொழிகள் ஒவ்வொன்றும் இறை வார்த்தைகள,(Word of God) புதிய கட்டளைகள்,(New Commandments) புதிய நெறிமுறைகள்,(New Norms)

புதிய உடன்படிக்கைகள்,(New Covenant) புதிய பாதைகள்(New Ways) புதிய வழிகாட்டுதல்கள்,(New guidelines) புதிய பார்வைகள்(New Insights)... என்று பல பரிமாணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

 

நிமிர்ந்து நிக்குது சிலுவை கல்வாரி மேட்டுல - மன

துணிவை தந்தது எனக்குள்

தினம் வாழும் வாழ்வில்...,

என்கின்ற புதிய பாடல் சிலுவையை குறித்த பார்வையை விசாலமாக்குகிறது.

சிலுவை நீதிக்காக போராடும் மக்களுக்கு மன துணிவை தருகிறது, நீதியின் பாதையில் நிலைத்து நின்ற இயேசுவின் நெஞ்சுரத்தை அது காட்டுகிறது, கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டாலும் செயல்படவிடாமல் தடுத்தாலும் இறுதிவரை இறை ஆட்சிக்காக போராடுகின்ற ஒரு போராளியை நமக்கு முன் நிறுத்துகிறது.

"I have decided to follow Jesus...no turning back no turning back" என்ற பாடலை உணர்வோடு பாடி சிலுவை மொழிகளை தியானிப்போம், இயேசுவின் சிந்தையை பெற்றுக் கொள்வோம்.

1. "மன்னித்தல்: சமூக மாற்றத்திற்கான மாற்று வழிப் பாதை"

லூக்கா 23  :  34

"தந்தையே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது இருக்கின்றார்களே." - லூக்கா 23  :  34

வன்மமும், குரோதமும்,  பழிக்கு பழி வாங்குதலும்,  கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற நியமங்களில் நடப்பது இஸ்ரவேல் மக்களின் வழக்கமான ஒன்றாக அமைந்திருந்தது. அதுவே அவர்களின் வாழ்வியலாக மாறிப் போனது.

இயேசு கிறிஸ்துவின் சிலுவைச் சாவிற்கு மூல காரணம் அவர் "பாவங்களை மன்னித்தார்" என்ற குற்றச்சாட்டு தான். பாவங்களை மன்னிக்க மனித குமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை இயேசு ஒவ்வொரு முறையும் தம் வார்த்தைகள் மூலம் செயல்கள் மூலம் வலியுறுத்தி கொண்டே வந்தார். சிலுவை மரணத்திலும் அதே மன்னிப்பை நிகழ்த்தியும் காட்டுகின்றார். தம் தந்தைக்கும் அதையே பரிந்துரைக்கின்றார்.

 

A). மனிதநேயம் மண்ணில் தழைக்க  மன்னித்தார்.

B). மனுக்குலம் மறுவாழ்வு பெற மன்னித்தார்.

C). மாற்று வழியில் மனிதம் பயணிக்க மன்னித்தார்

இம்மூன்று தலைப்புகளின் வழியாக முதலாம் திருமொழியை நாம் தியானிப்போம்...


 A). மனிதநேயம் மண்ணில் தழைக்க  மன்னித்தார்

வனாந்தர பயணத்தில் இஸ்ரவேல் மக்களோடு மோசே கொண்டிருந்த உறவு ஆழமான உறவு. அந்த உறவு எல்லைகள் அற்றது. இறை மக்கள் என்று கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உறவுகளோடு இணைந்து இருந்தது.

சீனாய் மலையில் கடவுள் தந்த பத்து கட்டளைகளை பெற்றுக்கொண்டு திரும்பி வரும் பொழுது இஸ்ரவேல் மக்கள் கன்றுக்குட்டியை பார்த்து அதை வழிபட்டதை கண்டு கடவுள் கோபம் உற்றார்.

இந்த மக்கள் வணங்கா கழுத்து உள்ளவர்கள் அவர்களை அழிப்பேன் என்று ஆண்டவர் கூறுகின்றார். அப்பொழுது மோசே இவர்கள் உம் மக்கள் அல்லவா என்று எடுத்துரைக்கின்றார்.

மக்களின் பாவங்களை மன்னிக்க கடவுளிடம் மோசே பரிந்துரைக்கின்றார், அவர்களுக்காக மன்றாடவும் செய்கின்றார்.

இறுதியாக அவர்களை மன்னியா விட்டால் என் பேரை உன் ஜீவ புத்தகத்தில் இருந்து கிறுக்கி போடும் என்று அழுத்தமாக ஆழமாக உறுதியாக கடவுளிடம் கூறுகின்றார்.

இயேசு மோசேயிலும் பெரியவர். தன்னை சிலுவையில் அறைந்த, ஒப்புக்கொடுத்த, காட்டி கொடுத்த அத்தனை பேரையும் "தான் மன்னித்ததோடு மாத்திரமல்ல பிதாவும் மன்னிக்க வேண்டுகின்றார்."

மனதுருக்கம் உடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதே மனதுருக்கத்தோடு மனித நேயம் மண்ணில் தழைப்பதற்கு மன்னிப்பே மகத்துவமானது என்கின்ற நெறியை  மக்களுக்கு சிலுவையில் இருந்து வழங்குகின்றார்.

 

B). மனுக்குலம் மறுவாழ்வு பெற மன்னித்தார்.

இயேசுவை காட்டிக் கொடுத்தவர்கள்,அவரை நிந்தித்தவர்கள், சதித்திட்டம் தீட்டியவர்கள்.. என அத்தனை பேருக்கும் சிலுவையில் இருந்து பொது மன்னிப்பை ஆண்டவர் வழங்குகின்றார்.

இஸ்ரவேல் மக்கள் நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை அறிந்திருந்தார்கள். கடவுளின் வருகையின் போது அது நடைபெறும் என்பதையும் அறிந்திருந்தார்கள்.

ஒவ்வொருவரின் செயலுக்கு ஏற்ப கடவுள் நீதி தீர்ப்பு வழங்குவார். கடவுள் பட்ச பாதம் இல்லாதவர். கடவுளின் தண்டனை மிகவும் கொடியதாக இருக்கும் என்பதையும் புரிந்தே வைத்திருந்தார்கள்.

இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்ற குற்றத்திற்கு நியாயத்தீர்ப்பில் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.

ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு தெரியும் நியாயத்தீர்ப்பில் அத்தனை பேருக்கும் தண்டனை உண்டு என்று. அந்த நியாய தீர்ப்பின் தண்டனையை மன்னிப்பின் வழியாக அவர்களை விடுவிக்கின்றார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து அருளின மன்னிப்பு அவர்களை தண்டனைத் தீர்ப்பில் இருந்து விடுவித்ததோடு மட்டுமல்ல அவர்களை மறுவாழ்வுக்கு வழி வித்திட்டது.

ஆண்டவர் அருளின இந்த மன்னிப்பு அவர்களை மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுத்துவதற்காக அல்ல மாறாக மனிதநேயத்தோடு வாழ்வதற்கும் மறுவாழ்வை பெறுவதற்கும் அது வழி நடத்தினது.

 

C). மாற்று வழியில் மனிதம் பயணிக்க மன்னித்தார்

வன்முறை இல்லா உலகை உருவாக்க, பழிக்குப் பழி என்கின்ற நிலையை மாற்ற, வன்மம் இல்லாத சமூகம்  மலர மன்னிப்பே மாற்று வழி என்பதை ஆண்டவர் சிலுவையில் இருந்து கற்றுக் கொடுக்கின்றார்.

பாவிகள் என்று கருதப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த அத்தனை மக்களையும் ஆண்டவர் மன்னித்து அவர்களை விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிய பாதையில் பயணிக்க வைத்தார்.

பரிசேயர்களும் வேதபாரகர்களும் சமயத் தலைவர்களும் விரும்பிச் செல்லுகின்ற வழி விசாலமானது. ஆண்டவர் காட்டுகின்ற மன்னிப்பின் வழி jகுறுகலானது. ஒரு சிலர் மட்டுமே அந்த வழியில் பயணிப்பர்.

பரிசேயர்கள் வேதபாரகர்கள் ஆசாரியர்கள் என ஒட்டுமொத்த சமூகமும் விசாலமான வழியில் பயணித்து பழகிப் போயினர்.

இயேசு கிறிஸ்து காட்டிய இந்த மன்னிப்பின் வழி இவர்களுக்கு முற்றிலும் எதிரானது. இதுவே நீதியின் பாதை. இறைவன் பயணித்த வழியும் இதுதான்.

இந்த மாற்று வழிப் பாதையில் சமூகம் பயணிக்கும் பொழுது இழந்த இறைச்சாயலை திரும்ப பெறுவோம். இறை உறவில் மகிழ்வோம். இழந்த வாழ்வையும் பெறுவோம்.

இந்த மாற்று வழிப் பாதையில் மனதார பயணிப்போம். இதன் மூலம் சமூகத்தில் மாற்றுருவாக்கத்தை உண்டாக்குவோம்.

# நிறைவாக:

மன்னிப்பை சிலுவையில் இருந்து முன்மொழிகின்றார். நாமும் வழிமொழிவோம்...

மனித நேயம் தழைக்க, மறுவாழ்வு அடைய மாற்று வழியில் திருச்சபையாக இணைந்து பயணிப்போம். நாம் வழங்கும் மன்னிப்பின் வழியாக  மாற்றுருவாக்கத்தை சமூகத்தில் கட்டமைப்போம்.


2. "உரையாடல்" : சமூக நல்லிணக்கத்திற்கான இணைப்புப் பாலம்

லூக்கா 23  :  43

இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசியிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 

# உட்புகும் முன்:

இயேசு கிறிஸ்து பாவிகளோடும் ஆயக்காரர்களோடும் அன்போடு பழகினார். மனதுருக்கத்தோடு அவர்களை அணுகினார். அவர்களை சமமாக பாவித்தார்.

இயேசுவின் செயல்பாடுகளுக்கும் போதனைகளுக்கும் முற்றிலும் எதிராகவே இருந்த பரிசேயர்களோடும் வேதபாரர்களோடும் அதே அன்பு உறவில் பழகினார். அவர்களோடும் இணைந்தே பயணித்தார்.

மாறுபட்ட கருத்தியல்களோடு வாழுகின்ற மக்களோடு இணைந்து வாழ்வதற்கு உரையாடல்கள் மிகவும் அவசியம்.  அது சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்யும். இது இயேசு கிறிஸ்துவின் அணுகுமுறைகளில் முதன்மையானது.

இயேசுவும் அவர்களோடு அறையப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த உரையாடல்களை கருத்தோடு கவனிப்போம்.

A). உரையாடல் ; உற்றுப் பார்க்க வைத்தது

B) உரையாடல் ; உரசிப் பார்க்க வைத்தது

C). உரையாடல் ; உயர்வைப் பார்க்க வைத்தது

இந்த மூன்று தலைப்புகளின் வழியாக இரண்டாம் திருமொழியை நாம் தியானிப்போம்.

 

A). உரையாடல் ; உற்றுப் பார்க்க வைத்தது

சிலுவையில் அறைந்த போர்ச்சேவகர்கள் இயேசுவை நீ யூதருக்கு ராஜாவா என்று இகழ்ந்தனர், நிந்தித்தார்கள.

நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.(லூக்கா 23 : 37)

அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள், நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.(மத்தேயு 27 : 40)

அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்: பண்ணினார்கள்.(மத்தேயு 27 : 41)

அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.(மத்தேயு 27 : 44)

இவ்வளவு நடந்தும் இயேசு பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்வது என்னவென்று அறியாது இருக்கிறார்களே என்று மன்றாடினார் அவர்களை மன்னித்தார். இந்த வார்த்தையின் வழியாக ஒரு புதிய உரையாடலை சிலுவையில் இருந்து துவக்கினார்.

இயேசுவின் இந்த வார்த்தைகள் சிலுவில் அறயப்பட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு இயேசுவை உற்றுப் பார்க்க வைத்தது. இயேசுவின் தன்மைகளை உணர்ந்து பார்க்க வைத்தது. இயேசுவின் பண்புகளை காண வைத்தது.

இவர் தன்னை சிதைத்தவர்களை மன்னிக்கின்றாரே இவர் நிச்சயம் வித்தியாசமான ஒரு மனிதர் தான் என்று இயேசுவை மட்டும் அல்ல அவரின் வழிகளையும் உற்றுப் பார்க்க வைத்தது.

சமூகம் செல்கின்ற பாதை வன்முறை நிறைந்தது, அது பிறரை அவமானப்படுத்தி மகிழ்கின்றது, பிறரை வேதனைக்கு உட்படுத்தி அதில் குளிர்காய்கிறது என்பதை உற்றுப் பார்ப்பதற்கு உதவி செய்தது.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு முற்றிலும் வித்தியாசமானவராக இருக்கின்றாரே, தன்னை ஒடுக்குகின்றவர்கள் அத்தனை பேரையும் மன்னிக்கின்றாரே. இது எப்படி ஆகும் என்று உற்றுப் பார்க்க துவங்கினார்.

இவர் சாதாரண மனிதர் அல்ல உயர்ந்த மனிதர், மாமனிதர், இவர்தான் உன்னத மனிதர் என்பதை கண்டு கொள்கிறார்.

 

B) உரையாடல் ; உரசிப் பார்க்க வைத்தது

மக்களோடு மக்களாக சேர்ந்து இயேசுவை நிந்தித்த ஒரு குற்றவாளிக்கு மனமாற்றம் உண்டானது. அந்த மனமாற்றம் அவரையும், அவரின் மனதையும், அவரின் செயல்பாடுகளையும் உரசி பார்க்க வைத்தது.

இயேசுவோடு தன்னை இணைத்து  பார்க்கவும், இயேசுவில் வெளிப்பட்ட தன்மைகளோடு தன்னையும் இணைத்து பார்க்கவும், அவரின் பண்பு நலன்களோடு தன்னையும் உரசி பார்க்கவும் உதவி செய்தது.

இதுவரையிலும் தன்னை பிறரோடு இணைத்துக் கொண்டிருந்த குற்றவாளி , உயர்ந்த பண்பு நலன்களோடு வாழும் இயேசுவோடு தன்னையும் இணைத்துக் கொள்கின்றார்.

இனி தனக்கு வாழ்வு கிடைக்காது என்பதை அறிந்திருந்தும் கிடைக்கின்ற ஒரு சில மணித்துளிகளில் நீதியாளரோடும் நேர்மையாளரோடும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற உறுதியை எடுக்கின்றார்.

சில மணி நேரங்களிலேயே மன மாற்றத்திற்கு உள்ளான குற்றவாளி ஒரு புதிய உரையாடலை துவக்குகிறார்.

இயேசுவின் குணங்களை அவரின் வழிகளை அறிந்த குற்றவாளி ஆண்டவரை நிந்தித்த மற்ற குற்றவாளியோடு உரையாடலை மேற்கொள்கின்றார்.

நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?(லூக்கா 23 : 40)

நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம், இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக், கடிந்து கொண்டார்.(லூக்கா 23 : 41)

நாம் இருவரும் குற்றவாளிகள் ஆனால் இயேசு யாதொரு குற்றத்தையும் செய்யாத உத்தமர் இன்று சாட்சி பகர்கின்றார்.  

உரையாடலின் துவக்கத்தில் இருந்த நிந்தனையும் அவமானப்படுத்துகின்ற செயலும் படிப்படியாக மறைந்து, இப்பொழுது அவரில் இருக்கும் உயரிய  குணங்களும், நிலைப்பாடுகளும் வெளியே வருகின்றன.

மனம் மாறிய குற்றவாளி  தன் கருத்திலிருந்து மாறுகின்றார், இயேசுவின் நிலைப்பாடோடு தன்னையும் இணைத்து  கொள்கின்றார், இறுதியில் இயேசுவோடும் தன்னை இணைத்துக் கொள்கின்றார்.

ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதில் இவர் உறுதியாக இருக்கின்றார்.

 

C). உரையாடல் ; உயர்வைப் பார்க்க வைத்தது

இயேசுவின் நிலைப்பாடோடு தன்னையும் இணைத்துக் கொண்ட கள்வர் இப்பொழுது இந்த உலகத்தின் அரசாட்சியையும் இறைவனின் அரசாட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

இவ்வுலகில் நடைபெறும் ஆட்சியைக் காட்டிலும் இறைவனின் ஆட்சி உயர்வானது எனும் உயரிய சிந்தைக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறார்.

அந்த உயரிய இடம் தனக்கு கிடைக்குமா என்பதில் தன் கவனத்தை செலுத்துகின்றார்.

இயேசு முன்மொழிந்த  இறை ஆட்சி சிறப்பானது என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்.

இறுதியில் உம்முடைய அரசாட்சியில் என்னை இணைத்துக் கொள்ளும் என்று கேட்பதை காட்டிலும் என்னை நினைத்துக் கொள்ளும் என்று இயேசுவிடம் கேட்கின்றார்.

இயேசுவே உம்முடைய அரசாட்சியில் வலது பாரிசத்தில் ஒருவருக்கும் இடது பாரிசத்தில் ஒருவருக்கும் இடம் வேண்டும் என்று கேட்ட மக்களை காட்டிலும் இவர் மேம்பட்டவராக இயேசுவுக்கு தெரிகின்றார்.

காலம் தாழ்த்தி கிடைக்கும் அங்கீகாரம் பயனற்றது என்பதை உணர்ந்தவரான இயேசு கிறிஸ்து இறை ஆட்சியோடு தன்னை இணைத்துக் கொண்ட குற்றவாளிக்கு உயர்ந்த இடத்தை தருகின்றார்.

இன்றைக்கு நீ என்னுடன் விண்ணரசில் இருப்பாய் என்கின்ற உடன்படிக்கையை  அவரோடு மேற்கொள்கின்றார். இறை ஆட்சிக்கு உரியவராக அவரை ஏற்றுக் கொள்கின்றார்.

இறையரசில் யார் பங்கு பெறுவார்கள் என்கின்ற பாடத்தையும் இந்த உரையாடல் வெளிப்படுத்தியது.

உலகத்தின் பார்வையில் பாவிகள் என்று கருதப்படுகிறவர்கள் இறைவனின் பார்வையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் இறையரசில் அவர்களுக்கு எந்த இடம் கிடைக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

 

# நிறைவாக:

சமூக நல்லிணக்கத்திற்கு யார் முதல் அடி எடுத்து வைப்பது என்பது தான் தலையாய பிரச்சனை.

துணிந்து எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் சமூகத்தில் நல்லிணக்கத்தையும், சமூக கூட்டுறவையும், கூட்டு வாழ்வையும் அது உறுதிப்படுத்தும்.

நீதிக்காக குரல் கொடுக்கும் மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

இயேசுவின் இரண்டாம் திருமொழி "சிறை அருட்பணி" செய்வதற்கு நம்மை வழிநடத்துகின்றது.

"சிறை அருட்பணி" இயேசுவின் திருப்பணிகளில் ஒன்று என்பதை இந்த நேரத்தில் உணர்வோம்.

இப்பணியில் நம்மை இணைத்துக் கொள்வோம் அல்லது இப்பணி செய்கின்றவர்களோடு நம்மையும் இணைத்துக் கொள்வோம்.

மனம் உவந்து இந்த "சிறை அருட்பணி" திருப்பணியை தாங்குவோம்.


3. "தெரிந்தெடுப்பு" ; கூட்டு வாழ்வின் திருப்பணிக்கான முதல் நகர்வு

யோவான் 19 : 26, 27

தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.

 

# உட்புகும் முன்:

ஆணவ படுகொலை என்கின்ற கொடுமையான காலகட்டத்தில் வாழ்கின்ற நமக்கு இயேசு கிறிஸ்து மொழிந்த மூன்றாம் திரு வார்த்தை நமக்கு அறைகூவலை விடுகின்றது.

கூட்டுக் குடும்ப அமைப்புகள் சிதைந்து வருகின்ற வருகின்ற காலகட்டங்களில் குடும்பங்களின் இணைப்பு(Extended Family) அவசியமான ஒன்றாக இருக்கிறது.

அனாதை இல்லங்கள் என்பதை பார்க்கும் பொழுது மனது வலிக்கின்றது. இல்லங்களில் அனாதைகளாக்கப்பட்ட முதியோர்களை காணும் பொழுதும் ஏனோ மனது வலிக்கிறது.

உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கின்ற கட்டளையை காட்டிலும் "கொர்பான்" காணிக்கை பெட்டி நிரம்பி வழிகிறது.

தெரிந்தெடுப்பு"  என்பது மிகவும் முக்கியமானது. கடவுள் இஸ்ரவேல் மக்களை தம் மக்களாக தெரிந்து கொண்டார் இது ஒரு முன்மாதிரி.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு, சிலுவையின் அருகில் ஒரு புதிய குடும்ப அமைப்பை தெரிந்தெடுக்கின்றார்.

ஒரு தாய்க்கு அனைத்து பிள்ளைகளையும் தம் பிள்ளைகளாக பாவிக்கும் மனது வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளும் ஒரு தாயை பார்க்கும் பொழுது அது எனது தாய் என்கின்ற உணர்வு மேலோங்கிட வேண்டும்.

A). தெரிந்தெடுத்தல் ; அதிகாரப் பகிர்விற்காக

B). தெரிந்தெடுத்தல் ; கூட்டுத் திருப்பணிக்காக

C). தெரிந்தெடுத்தல் ; உடன்படிக்கை உறவிற்காக

இயேசுவின் மூன்றாம்  திருமொழியை இந்தப் பின்னணியத்தில் நாம் தியானிப்போம்...

A). தெரிந்தெடுத்தல் ; அதிகாரப் பகிர்விற்காக.

தனது இடத்தில் இருந்து தனது தாயாரை கவனித்துக் கொள்வதற்கு ஆண்டவரின் தெரிந்தெடுத்தல் வித்தியாசமாய் இருந்தது.

தனது தாயாரை நோக்கி அம்மா அதோ உன் மகன் என்று யோவானை சுட்டிக்காட்டுகிறார். சீடரை பார்த்து இவர்களும் உன் தாய் தான் என்றார்.

இந்த நொடிப் பொழுதில் இயேசுவின் அன்புக்குரிய சீடன் இயேசுவின் தாயாரை தன் தாயாக ஏற்றுக் கொண்டார்.

இயேசுவின் தாயும் இயேசு சுட்டிக்காட்டிய தமது அன்புக்குரிய சீடரை தமது மகனாக அரவணைத்துக் கொண்டார்.

இயேசுவின் இடத்தில் தமது அன்புக்குரிய சீடராகிய யோவானை அமர வைக்கின்றார். இது ஒரு பொறுப்பு ஏற்பின் முன் அடையாளமாக காணலாம்.

இயேசு கிறிஸ்து தம் ஒட்டுமொத்த அதிகாரங்களை தம் சீடர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். தம்மைப் போல் பேசவும், பேய்களை விரட்டவும், குணமாக்கவும்,, மரித்தோர்களை உயிர் பெறச் செய்தல்... போன்ற  அத்தனை அதிகாரங்களையும் ஏற்கனவே பகிர்ந்து கொடுத்து இருந்தார்.

இன்னும் ஒரு படி உயர்ந்து சிலுவையின் அருகில் "இவர் என் நேசகுமாரன் இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன்" என்று கடவுள் தனக்கு முகவரி தந்ததைப் போல யோவானுக்கு "இவரும் கடவுளின் நேசகுமாரன்" என்ற புதிய முகவரியை தருகின்றார்.

"அதிகார குவிப்புகள்" இருக்கின்ற காலகட்டங்களில் இயேசுவின் இச்செயல்  அதிகாரப்  பகிர்வுக்கு முன் உதாரணமாக அமைந்திருக்கிறது.

இயேசுவின் தாயை உடனடியாக ஏற்றுக் கொண்டார் என்பது ஒரு அடையாளச் செயல். இப்போது இயக்கத்திற்கு யோவான் தலைமை பொறுப்பேற்கின்றார்.

B). தெரிந்தெடுத்தல் ; கூட்டுத் திருப்பணிக்காக

மனம் திரும்புங்கள் இறையரசு சமீபமாய் இருக்கிறது என்று இயேசு கிறிஸ்து தம் திருப்பணியை துவங்கும் பொழுது தமது திருப்பணிக்காக உடன் பணியாளர்களை ஆண்டவர் தெரிந்தெடுத்தார்.

இறை ஆட்சி அமைப்பதற்கான திருப்பணி என்பது தனியொரு ஆள் திருப்பணி அல்ல மாறாக அது கூட்டுத் திருப்பணியே என்பதில் உறுதியாய் இருந்தார்.

அப்படி தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் யோவான். ஆண்டவரின் சீடர்களில் மிக முக்கியமானவர்கள் மூன்று பேர் அவர்கள் பேதுரு, யோவான், யாக்கோபு.

இம்மூவரில் சிலுவையின் அருகில் உடன் இருக்கின்ற ஒரே சீடன் யோவான் மட்டுமே. எனவே மீண்டும் தனது இயக்கத்தை நடத்துகின்ற பொறுப்பிற்கு யோவானை தெரிந்தெடுக்கின்றார்.

யோவானும் அந்த நிமிடமே தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இயேசுவின் இறை ஆட்சி என்னும் இலட்சியத்திற்காக தன்னை மறு அர்ப்பணிப்பு செய்தார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் இருந்து தன் பொறுப்பை யோவானிடம்  ஒப்படைக்கின்றார். யோவான் புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.  அது இறைவன் - இயேசு - மரியாள் - யோவான் என்கின்ற கூட்டு திருப்பணிக்கு வழி நடத்தியது.

 

C). தெரிந்தெடுத்தல் ; உடன்படிக்கை உறவிற்காக

கடவுள் எவ்வாறு இஸ்ரவேல் மக்களோடு உடன்படிக்கை செய்து கொண்டாரோ அதேபோல சிலுவையின் அருகில் ஒரு புதிய உடன்படிக்கை நிறைவேறுகிறது.

அதோ உன் மகன் இதோ உன் தாய், இது ஒரு புதிய உடன்படிக்கையின் உறவு. இறைமகன் இயேசு கிறிஸ்து ஏற்படுத்தின புதிய உடன்படிக்கை.

இனி அவர் உன் தாயாக இருப்பார் நீ அவரின் மகனாக இருப்பாய் என்கின்ற இந்த புதிய உடன்படிக்கை இறைவன் கொண்டிருக்கின்ற உறவின் ஆழத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்த புதிய உடன்படிக்கை வார்த்தையால், வார்த்தையாக வந்தவரால்,  வாழ்வு தரும் வார்த்தையால் உருவாக்கப்பட்டது.

இறை ஆட்சிக்கான திருப்பணியில் தம்மை இணைத்துக் கொள்ளுகிறவர் எவரும் இறை மக்கள் ஆவார்கள், இறைவனின் மைந்தர்கள் ஆகிறார்கள் என்கின்ற புதிய உடன்படிக்கை உறவுக்குள் வழிநடத்துகின்றது.

இது குடும்ப ஆட்சி என்னும் சித்தாந்தங்களுக்கு எதிரிடையாக அமைந்திருப்பதையும் நாம் இதன் மூலம் காணலாம்.

# நிறைவாக:

ஆண்டவரின் தெரிந்தெடுத்தல் இன்றைய திருச்சபைக்கான ஒரு முன்மாதிரி , ஒரு முன் அடையாளம் என்பதை நினைவில் கொள்வோம்.

நாம் நம்மில் தகுதி உள்ளவர்கள் இல்லை, நமது தகுதி இறைவனால் வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் நாம் உறுதி செய்து கொள்வோம்.

என்றைக்கோ நாங்கள் கடவுளின் அழைப்பை பெற்றுவிட்டோம் என்று சொல்லிக் கொள்வது சிறப்பல்ல, ஒவ்வொரு நாளும் நம்மை மறு அர்ப்பணிப்பு செய்வது சிறப்பானது என்பதை நினைவில் கொள்வோம்.

அழைக்கப்பட்டவர்கள் அனேகர் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர். ஆண்டவரின் தெரிந்தெடுத்தலில் நாம் இருக்கிறோமா?  நமது குடும்பம் இருக்கிறதா? நமது திருச்சபை இருக்கிறதா? என்பதை இந்நாளில் உறுதி செய்து கொள்வோம்.

"அழைப்பு" பிழைப்புக்கானது அல்ல என்பதை நம் மனதில் ஏற்றுக் கொள்வோம். "அழைப்பும் தெரிந்தெடுப்பும் இறை ஆட்சிக்கானது என்பதை மீண்டும் மீண்டும் நமது உள்ளத்தில் எழுதிக் கொள்வோம்.

 

4. "உடன் இருத்தல்" : இறைப் பணியாளர்களின் உயர்ந்த ஆன்மீகம்

மத்தேயு 27 : 46

"என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்"

 

 

#  உட்புகும் முன்:

"உடன் இருத்தல்" என்பது சிறப்பான பண்புகளில் ஒன்று. இது உறவை வலுப்படுத்தும் பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். "விட்டு விலகுதல்" என்பது உறவை முறிக்கின்ற செயல்களில் ஒன்று.

தம் சீடர்களுடன் எப்போதும் ஆண்டவர் உடன் இருத்தல் என்ற நிலையிலேயே இருந்தார். சீடர்களும் இயேசுவோடு அந்த நிலையிலேயே வாழ்ந்து வந்தார்கள்.

சிலுவைப் பாடுகளுக்கு முன்பு வரையிலும் இந்த இணக்கமான உடன் இருத்தல் உறவு இருந்தது. சிலுவைப் பாடுகளின் போது இந்த உடன் இருத்தல் என்பது சீடர்களிடமிருந்து மறைந்து போனது.

வேதபாரகர்கள், பரிசேயர்கள், சமயத் தலைவர்கள், அதிகாரம் வகிப்பவர்கள் இவர்களின் திட்டம் இயேசுவையும் அவர்தம் சீடர்களையும் உடன் இருத்தல் நிலையில் இருந்து பிரிப்பது தான்.

ஒன்று பணத்தை வைத்து பிரிப்பார்கள். இன்னொன்று அதிகார பலத்தை காட்டி பிரிப்பார்கள். மூன்றாவது அச்சுறுத்தல் செய்து பிரிப்பார்கள். இந்த மூன்றிற்கும் ஆண்டவரின் சீடர்கள் பலியானார்கள். இயேசுவை விட்டு விலகி ஓடினார்கள்.

ஆண்டவர் இயேசு தனித்து விடப்பட்டார்,  இனி அவரை வீழ்த்துவது எளிது என்று சமய தலைவர்களும் அதிகாரம் வகிப்பவர்களும் நினைத்தார்கள்.

எத்தனை துன்பங்கள், சவுக்கடிகள், முள்முடிகள், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், அலைக்கழிப்புகள், கடுமையான தண்டனைகள் இயேசுவின் மீது பலவந்தப்படுத்தப்பட்ட போதும் கடவுளோடு இயேசு கொண்டிருக்கிற உறவை எவராலும் பிரிக்க முடியவில்லை.

 

A). சிலுவை மரணத்தின் மத்தியிலும் கடவுளோடு உடன் இருந்து உறவாடினார்

B) பாடுகளின் மத்தியிலும் கடவுளோடு உடன் இருந்து மன்றாடினார்

C). இறுதிவரை உடன் இருந்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

 

இன்று இந்த மூன்று தலைப்புகளின் வழியாக நான்காம் திருவார்த்தையை தியானிப்போம்.

 

A). சிலுவை மரணத்தின் மத்தியிலும் கடவுளோடு உடன் இருந்து உறவாடினார்

சிலுவையில் இருந்த போதிலும் தந்தையே இவர்களுக்கு மன்னியும் என்றார்,  என் தேவனே என் தேவனே என்று ஆண்டவரை அழைத்தார், தந்தையே உமது கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என்றார்

ஒட்டுமொத்தத்தில் இவ்வளவு பலம் பிரயோகித்தும் கடவுளோடு கொண்டிருக்கிற "உடன் இருத்தல்" என்ற உறவை இயேசுவிடமிருந்து ஒருவராலும் பிரிக்க முடியவில்லை.

இதுதான் பக்தி,  இதுதான் சிறந்த ஆன்மீகம், இதுதான் கடவுளின் பற்றாளர்களின் வாழ்வு என்பதை மீண்டும் ஒருமுறை தன்னை சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமய தலைவர்களுக்கு ஆண்டவர் தமது சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்திய செய்தியாகும்.

என்ன வந்தாலும் நம்புவேன் எனது நேசரை

 யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது நேசரை.. “

என்ற பாடல் சிலுவையோடு இருந்து கடவுளோடு கொண்டிருக்கும் உறவை எவராலும் பிரிக்க முடியாது என்பதை பறை சாற்றுகிறது.

வன்முறையின் மத்தியிலும் அடக்கு முறையின் மத்தியிலும் சிதைக்கப்படுதலின் மத்தியிலும் சிலுவையில் இருந்தபடியே கடவுளோடு உடன் இருப்பது என்பது வித்தியாசமானது.

அதை இயேசு இந்த நான்காம் திருவார்த்தையின் வழியாக நமக்கு கற்றுக் கொடுக்கிறார். திருச்சபையாகிய நமக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார்.

 

B) பாடுகளின் மத்தியிலும் கடவுளோடு  உடன் இருந்து மன்றாடினார்.

இயேசுவுக்கு உண்டான பாடுகள் நாம் இதுவரையிலும் சந்தித்திராத பாடுகள். அவமானங்கள், நிந்தனைகள், பரிகாசங்கள், சித்திரவதைகள் இவைகள் அனைத்தின் மத்தியிலும் இயேசு கடவுளோடு உடன் இருந்து ஏன் ஆண்டவரே என்று கேட்பது இயேசுவின் அர்ப்பணிப்பை நமக்கு வெளிக்காட்டுகிறது.

யோபுவின் வாழ்க்கையும் இயேசுவின் வாழ்க்கையோடு ஒத்துப் போகிறது. தனக்கு உண்டான பாடுகளின் மத்தியிலும் இறை நம்பிக்கையோடு, தனது பக்தி வாழ்வில் சற்றும் குறையாத வாழ்வு வாழ்ந்து என்றும் கடவுளோடு உடன் இருந்ததை நாம் நினைவில் கொள்வோம்.

ஸ்தேவவான் கல்லெறிந்து கொல்லப்படும் பொழுதும் அவரின் முகம் தேவ தூதன் முகம் போல இருந்தது என்பதையும் நாம் கருத்தில் கொள்வோம்.

பாடுகள் நிரந்தரமாக நம்முடைய வாழ்வில் இருந்தாலும் அவைகளின் ஊடாக கடவுளோடு உடன் இருத்தல் என்பதே இறை பற்றாளர்களின் பக்தி வாழ்வின் சிகரமாகும்.

நன்மைகள் கிடைக்கும் பொழுது ஆண்டவரோடு உடன் இருப்பது விசுவாசத்தின் ஆரம்ப நிலை, பாடுகளின் மத்தியில் கடவுளோடு உடன் இருத்தல் என்பது விசுவாசத்தில் வளர்ந்த நிலை.

இயேசு கிறிஸ்து பாடுகளின் மத்தியில் கடவுளோடு உடன் இருந்ததை இந்த நேரத்தில் நாம் நன்றியோடு நினைவு கூர்ந்து நாமும் அவரின் வழித்தோன்றல்களாக மாறிடுவோம்.

C). இறுதிவரை உடன் இருந்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்கின்ற இயேசுவின் வார்த்தை ஒரு மன்றாட்டு ஜெபம் என்பதை நாம் நன்கு அறிவோம்.

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?(சங்கீதம் 22 : 1)

இது ஒரு தாவீதின் பாடல் என்பதை நன்கு அறிவோம். அப்படி என்றால் சிலுவையில் இருந்தவாரே தன்னுடைய பாடுகளின் மத்தியிலும் தனக்கு உண்டான வன்முறையில் மத்தியிலும் ஆண்டவர் இயேசு பாடினார் என்பது வியப்பாக இருக்கிறது.

பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் தொழு  மரத்தில் கட்டப்பட்ட பொழுதும், உள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பொழுதும், நடு இரவில் கடவுளை துதித்து பாடுவதற்கு ஒருவேளை இயேசுவின் வாழ்வு சான்றாக அவர்களுக்கு அமைந்திருக்கலாம்.

தாவீது பாடிய இந்தப் பாடல் ஒரு நன்றி பாடல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் சிலுவையில் இருந்தபடியே துன்பங்களை சகித்தவாறு,  இந்த "சிலுவை பாடுகளுக்காக" கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் என்பதை காணும் பொழுது இயேசு கிறிஸ்துவின் வாழ்வு மகத்துவமானது என்பதை உணர முடிகிறது.

இயேசு தமது திருப்பணியின் துவக்கத்தில் கடவுளின் நேசகுமாரனாக எவ்வாறு அர்ப்பணிப்போடு பணி செய்தாரோ தமது சிலுவைப் பாடுகளின் மத்தியிலும் இறுதிவரை அந்த உறவை விட்டு விடாமல் பற்றி கொண்டிருக்கிறார் என்பதை காணும் பொழுது இயேசு கிறிஸ்துவின் ஆன்மீகம் எவ்வளவு உயர்வானது என்பதை உணர முடிகிறது.

தன் வாழ்வுக்காக நன்றி செலுத்துகிறார், தன் பாடு மரணத்திற்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். எனவே தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விந்தை கிறிஸ்து இயேசு ராஜா என்று நாம் பாடுகின்றோம்.

என் கடவுள் என்று சிலுவையில் இருந்து அழைக்கின்றார். ஏன் ஆண்டவரே என்று தன் தந்தையிடம் காரணத்தை கேட்கின்றார். என்னை கைவிட்டு விட்டீரே என்று உறவில் நின்று காரணத்தைக் கேட்கின்றார்.

கடவுளின் பதில் ஒரு வரியில் முடிந்து விட்டது "இமைப்பொழுது கைவிட்டேன் ஆனால் உருக்கமான அன்பினால் உன்னை சேர்த்துக் கொண்டேன்."

 

# நிறைவாக:

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் குழந்தை பருவத்திலும் பண்டிகையின் போது ஆலயத்தில் கடவுளோடு உடன் இருந்தார்.

வனாந்தரத்தில் தனக்கு உண்டான சோதனையின் போதும் கடவுளை விட்டு பின் வாங்காமல் கடவுளோடு உடன் இருந்தார்.

சிலுவை மரணத்தின் மத்தியிலும் கடவுளோடு உடனிருந்து இறை உறவிலும், மன்றாட்டிலும்,  நன்றி கூறுதலிலும் அவர் நிலைத்திருந்தார்.

எப்படியும் வாழலாம் என்பது ஒரு வகை, இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மற்றொரு வகை. இயேசு இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உறுதியோடு வாழ்ந்து காட்டினார். அவரின் அடிச்சுவட்டில் நாமும் இணைந்து பயணிப்போம்.


5."செயல்படுத்துதல்" செயல்பாட்டாளர்களின் அடிப்படை சித்தாந்தம்

யோவான் 19  :  28

"தாகமாயிருக்கிறேன்"

 

#உட்புகுமுன்:

இயேசு கிறிஸ்து சிலுவையில்  மொழிந்த ஐந்தாம் வார்த்தை பல விவாதங்களுக்கு அடித்தளமாக இருந்து வருகிறது.

இயேசு கிறிஸ்துவுக்கு உண்டானது சரீர தாகமே என்று ஒரு சிலரும், இல்லை ஆன்மீக தாகம் தான் என்று ஒரு சிலரும் பட்டிமன்ற தலைப்பு போல வாதாடி வருவதை நாம் அறிகிறோம்.

அவர் தெய்வத்தில் தெய்வமானவர்..பிதாவுடைய ஒரே தன்மையுடையவர்.. என்ற நமது விசுவாச பிரமாணத்தின் அடிப்படையில் அவருக்கு இந்த இரண்டுமே ஏற்பட்டிருக்கலாம் என்ற புரிதலில் நாம் தியானிப்போம்.

நீரின்றி வாழாது உலகு -  இறைவா நீரின்றி யாம் வாழோம் ..

வாழ்வதற்கு நீர் எவ்வளவு அவசியமோ அதேபோல நாம் வாழ்வதற்கு இறைவன் மிகவும் அவசியம்.

உலக நாடுகளுக்கிடையே ஒருவேளை மூன்றாவது உலகப்போர் வரும் என்றால் அது தண்ணீருக்காக தான் நடைபெறும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.

"தாகம்" உயிர் வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது. "தாகம் தீர்த்தல்" அடிப்படை குணாதிசியங்களில் ஒன்று.

கிராமங்களில் தாகத்தோடு வருகின்றவர்களுக்கு யார் என்று முகம் பாராமல் தாகம் தணிப்பது தாய்மையின் குணாதிசயங்களில் தலையாகிய ஒன்றாகும்.

பஸ்கா உணவின்போது திராட்சை ரசம் பருகிய இயேசு கிறிஸ்து, அதன் பின்பதாக பல்வேறு அலைக்கழிப்புகள், பல கட்ட விசாரணைகள், சிலுவை சுமத்தல், சாட்டை அடிகள், ரத்தம் சிந்துதல், சிலுவையில் அறையப்படல் என பல மணி நேரங்கள் தண்ணீரின்றி தவித்தார் என்பதை அறிகிறோம்.

தண்ணீர் தராமல் இருத்தலும் ஒரு விதமான தண்டனை தான். அதையும் ஆண்டவர் சந்திக்கின்றார் அவரின் அடிப்படைத் தேவைகள் முற்றிலும் மறுக்கப்பட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்த சூழ்நிலையில் ரத்தம் முழுவதும் வெளியேறப்பட்ட நிலையில் தாகம் ஏற்படுவது மனித உடலின் ஒரு அம்சமாகும்.

காயங்களோடும், ரத்தங்களோடும், சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்து சொல்லுகின்ற வார்த்தை தாகமாய் இருக்கிறேன்.

தாகமாய் இருக்கிறேன் என்பதை காட்டிலும் "தாகமாய் இருக்கிறது" என்பதே மிகச் சரியான வார்த்தையாகும். அதுதான் அவரின் தற்போதைய நிலை.

ஆண்டவர் தாகமாய் இருக்கிறேன் என்று தன் தேவைகளை சொல்லிவிட்டார், அதை செயல்படுத்துதல் நமது தலையாய கடமை.

இந்தப் பின்னணியில் இருந்து இந்த வார்த்தைகளை கருத்தோடு தியானிப்போம்..

 

A). ஆசாரியர்களின் தாகத்தை தீர்க்க செயல்பட்டார்கள்

B).பிலாத்துவின் தாகத்தை தீர்க்க செயல்பட்டார்கள்

C). இயேசுவின் தாகத்தை தீர்க்க செயல்பட்டார்கள்

மேற்கண்ட இந்த தலைப்புகளின் வழியாக இயேசுவின் வார்த்தையை தியானிப்போம்...

 

A). ஆசாரியர்களின் தாகத்தை தீர்க்க செயல்பட்டார்கள்.

அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த இயேசு கொலை செய்யப்பட வேண்டும் அவரின் இயக்கம் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதே பரிசேயர்களின் தாகமாய் இருந்தது.

பாவங்களை மன்னிக்க மனித குமாரனுக்கு அதிகாரம் இல்லை அப்படி மன்னித்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அளிக்கப்பட வேண்டும் என்பதில் பரிசேயர்கள் தாகமாய் இருந்தார்கள்.

ஆலயத்தை இடித்து மூன்று நாளைக்குள் நான் இதைக் கட்டுவேன் என்று இயேசு கூறினார் இது சமயத்திற்கு விரோதமானது. எனவே இவர் கொலை செய்யப்பட வேண்டும் என்று மிகவும் தாகமாய் இருந்தார்கள்.

நான்தான் கடவுள் என்று தேவதூசனம் சொல்லுகிறார் இந்த இயேசு, அதுமட்டுமில்லாமல் இவன் பேய்களின் தலைவன் என்று குற்றம் சாட்டி அவரை கொலை செய்வதில் மிகவும் தாகமாய் இருந்தார்கள்.

சமயத் தலைவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு,  தாகத்தை தணிப்பதற்கு, அவர்களின் தவிப்பை நிறைவேற்றுவதற்கு வெறும் இரண்டு சாட்சிகள் மட்டும் போதும்.

இரண்டு சாட்சிகளை தயார் செய்வதற்கு சொல்வதற்காக முனைப்புடன் செயல்பட்டார்கள். பொய் சாட்சி சொல்வதற்கு இரண்டு பேர் முன் வந்தார்கள்.

அந்த இரண்டு பொய் சாட்சிகள் ஜீவத்தண்ணீராம் இயேசுவுக்கு எதிராக பொய்சாட்சி பகிர்ந்தார்கள்.

அந்த இரண்டு பொய் சாட்சிகளும் ஆசாரியர்கள்,  வேதபாரகர்கள், பரிசேயர்களின் தாகத்தை தீர்த்தனர், அவர்களின் தாகத்தையும் தணித்தனர், தவிப்பையும் தணித்தனர்.

 

B).பிலாத்துவின் தாகத்தை தீர்க்க செயல்பட்டார்கள்.

இயேசு சமயத்திற்கு விரோதமாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டினர். அவர் தீவிரமாக விசாரிக்கப்பட்டார் பல கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பிலாத்து தீவிர விசாரணைக்கு பின்பதாக இவர் குற்றமற்றவர் என்று எழுதினார் இயேசுவை விடுதலை ஆக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

பிலாத்துவின் மனைவியும் இயேசுவை நிரபராதியாக கண்டார். அவர் உத்தமர் அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் பரிந்துரைத்தார்.

சமயத் தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்பதை பிலாத்து கண்டு கொண்டார்,  எனினும் சமய தலைவர்கள் இவன் தன்னை ராஜா என்று சொல்லுகிறார் என்று திசை திருப்பினார்கள்.

தன்னை ராஜா என்று சொல்வதனால் இவர் அரசாட்சிக்கு எதிராக செயல்படுகிறவர் என்று இயேசுவை அரசியல் குற்ற வழியாக மாற்றினார்கள்.

சமய குற்றவாளி என்றால் அவர் கல்லால் எரிந்து கொல்லப்பட வேண்டும். அப்படி கல்லெறியும் போது அவர் தப்பிக்க கூடும் எனவே அவரை அரசியல் குற்றவாளியாக மாற்றினார்கள்.

பிலாத்து இயேசுவை அரசியல் குற்றவாளியாக தீர்ப்பிட்டு சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்.

போர் சேவகர்கள் பிலாத்துவின் தாகத்தை சிரத்தையோடு தீர்த்தார்கள். இயேசுவை சித்தரவதை செய்வதால் பிலாத்துவின் தாகம் தணியும் என்று கருதி அக்கறையோடு பிலாத்துவின் தாகத்தை தீர்த்தார்கள்.

விதவிதமான சவுக்கடிகள், நீ ராஜாவா என்று அவமான சொற்கள், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்குதல், காரி உமிழ்தல்.. போன்றவர்களை செய்தால் பிலாத்துவின் நன்மதிப்புக்கு உரியவராகலாம்.

அதனால் பதவிகளும், பட்டங்களும், அதிகாரங்களும், அந்தஸ்துகளும் நமக்கு கிடைக்கலாம் என்ற நோக்கத்தோடு பிலாத்துவின் தாகத்தை சிரத்தையோடு தணித்தார்கள்.

 

C). இயேசுவின் தாகத்தை தீர்க்க செயல்பட்டார்கள்

இயேசுவின் சிலுவைப் பாதையில் அவருக்கு பலமுறை தாகம் எடுத்திருக்கிறது,  நான் தாகமாய் இருக்கிறேன் என்று தன் தாகத்தை போர்ச்சேவகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார் என்பதை திருமறை காட்டுகின்றது.

கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்.(மத்தேயு 27 :34)

வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்:(மாற்கு 15 : 23)

இயேசு தாகமாய் இருக்கிறேன் என்ற உடன் காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது, அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.(யோவான் 19 : 29)

மத்தேயு ஆசிரியர் மட்டும் இயேசு  எவ்வாறு தாகமாய் இருந்தார் என்பதை ஆழமாக எடுத்துரைக்கின்றார். அவர் உண்மையான தாகத்தோடு தான் இருந்தார். யாராவது ஒருவர் தாகத்தை தீர்க்க மாட்டார்களா என்ற தவிப்போடு இருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.

கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள், "அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்". என்று பரிதவிப்போடு மத்தேயு இயேசுவின் தாகத்தை பதிவு செய்கின்றார்.

இயேசு தனக்கு கொடுக்கப்பட்ட காடியை  " ருசி பார்த்தார்"  ஆனால் அது தாகத்தை தீர்ப்பதாக இல்லை என்பதை உணர்ந்தே அதை நிராகரித்தார்.(மத்தேயு 27 :34)

தனக்கு கொடுக்கப்பட்ட காடி தாகத்தை தீர்ப்பதற்கு அல்ல மாறாக "வலியை மறப்பதற்கு" என்பதை உணர்ந்து அதையும் நிராகரித்தார்.

இப்பொழுது இயேசுவுக்கு இரண்டு தாகம் ஒன்று சரீரப்பிரகமான தாகம், மற்றொன்று இன்னும் எனக்கு உயிர் இருக்கும் என்றால் இன்னும் கடவுளின் சித்தத்தை செய்வதற்கு இன்னும் தாகமாய் இருக்கிறேன் என்பதையும் அவர் பதிவு செய்தார்.

#நிறைவாக:               

நாம் யாருக்காக செயல்பட ஆயத்தமாய் இருக்கிறோம். யாரை திருப்தி படுத்த செயல்படுகிறோம் என்பதையும் இந்த நேரத்தில் நாம் உணர்வோம்.

"செயல்படுத்துதல்" செயல்பாட்டாளர்களின் அடிப்படைச் சித்தாந்தம். இயேசு கடவுளின் சித்தத்தை செயல்படுத்துவதில் தாகத்தோடு இருந்தார்.

தாகத்தோடு தம்மிடம் வந்தவருக்கு எல்லாம் ஜீவத்தண்ணீரை சுவைக்க வைத்தார். அள்ளிப் பருகும்படி அவர்களுக்கு வாய்ப்பளித்தார்.

அற்புதங்களாலும் அதிசயங்களாலும் தம்மிடம் வந்தோரின் தாகத்தை எல்லாம் முழுவதுமாக தீர்த்து வைத்தார்.

சிலுவையில் இருந்து இயேசு தாகமாய் இருக்கிறேன் என்றார், அவரின் தாகத்தை தீர்ப்பதற்கு சுற்றிலும் நின்றவர்களின் இதயத்தில் கொஞ்சம் கூட ஈரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

உலகில் வாழ்வதற்கு நீரும் வேண்டும் இறைவா! நீரும் வேண்டும். எம் தாகத்தை நீர் தீர்த்தீர் உம் தாகத்தை தணிக்க அல்ல தீர்க்க செயல்படுவோம், செயல்படுத்துவோம்.


6. நிறைவேற்றுதல் ; தொடர் முயற்சியில் இறுதி நிலை

யோவான் 19  :  30

"முடிந்தது"

 

# உட்புகுமுன்:

இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த மிகச்சிறிய வார்த்தை முடிந்தது என்பதே. வார்த்தை சிறியதாக இருக்கலாம் ஆனால் அது காட்டுகின்ற பொருள் மிகவும் உயர்ந்தது.

முடிந்தது என்கின்ற கிரேக்க வார்த்தைக்கு "முடிந்து இருக்கிறது" என்று அர்த்தம்.

திருவிவிலிய மொழிபெயர்ப்பில் "நிறைவேறிற்று" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து தமக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றி முடித்த என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

வாலிபர் தன் வாலிப நாட்களில் எதிர்காலத்தை குறித்த கனவுகளோடு இருப்பார், ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக இயேசு என்னும் வாலிபர், தமது வாலிப வயதில் எல்லாவற்றையும் முடித்து, நிறைவேற்றி மனநிறைவோடு கூறுகின்ற வார்த்தை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

ஊழியத்தின் துவக்கத்தில் ஓடோடி செய்கின்ற பணியாளர்கள் ஒவ்வொருவரும், காலம் செல்லச் செல்ல பணியில் தொய்வு ஏற்படுவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

ஒவ்வொருவரும் தம் திருப்பணியை துவங்கும் பொழுது ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் செய்யத் துவங்குவர்,  ஆனால் இடையில் ஏற்படுகின்ற தடங்கல்கள் சங்கடங்கள் எதிர்ப்புகள் பணியை முற்றிலுமாக முடக்கி விடுவதோடு மட்டுமல்ல பணியாளரையும் முடக்கி விடுகிறது.

அழைப்பும் ஒப்படைப்பும் உறுதியாக இருந்தால், நீதியும் நேர்மையும் வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தால், பொறுமையும் நிதானமும் நமது குணங்களாக இருந்தால் கொடுக்கப்பட்ட பொறுப்பினை நாம் மனநிறைவோடு நிறைவு செய்யலாம்.

இறைவனின் துணையும், அருளும், வழிநடத்துதலும், ஆசியும் இருந்தால் சாதனை என்பது எட்டும் தூரம் தான்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் இருந்து மன நிறைவோடு "எல்லாம் முடிந்தது, நிறைவேறிற்று" என்று மனநிறைவோடு கூறுகின்றார்.

A). சமய மறுமலர்ச்சி நிறைவேறிற்று

B). சமூக சீர்திருத்தம் நிறைவேறிற்று

C). சமூக நீதி நிறைவேறிற்று.

இம்மூன்று தலைப்புகளின் வழியாக ஆண்டவரின் ஆறாவது திருவார்த்தையை தியானிப்போம்.

 

A). சமய மறுமலர்ச்சி நிறைவேறிற்று.

மோசே தந்த நியாயப்பிரமாணங்கள் யூத சமயத்திற்கு அடித்தளமாக இருந்தது. அது மக்களை நெறிப்படுத்தி முறையான வாழ்வுக்கு வழி நடத்தி வந்தது.

யூதர்கள் வழக்கமாக கடைபிடிக்கின்ற ஓய்வு நாள் சட்டங்கள், பலி செலுத்துதல்கள், புனிதப் பயணங்கள், திருமுழுக்குகள், காணிக்கை செலுத்துதல்கள் போன்றவை கிரமமாக நடந்து வந்தன.

காலப்போக்கில் அவைகளின் நோக்கங்கள் நீர்த்துப்போயின, நீர்த்துப் போக செய்தனர். சமயத் தலைவர்கள் சட்டங்களை, நியாயப்பிரமாணங்களை, கட்டளைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பழகினர்.

இதன் விளைவு சடங்குகள் பெருகின,சடங்காச்சாரங்கள் வளர்ந்தன, தவறான பழக்கவழக்கங்கள் உருவாகின, அடிமைப்படுத்தும் கொள்கைகளும் சித்தாந்தங்களும் உருவாக்கப்பட்டன.

இதைக் கொண்டு சமயத் தலைவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் செல்வந்தர்கள் ஆகினார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆக்கப்பட்டார்கள். விளிம்பு நிலையில் வாழ்ந்து வந்த மக்கள் இறுதியில் ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

ஜெப ஆலயம் கன்வர்கள் குகையாக மாறின, போலியான பக்திகள் உலா வந்தன, சமயத்தில் அரசியலும் கலந்தது வியாபாரமும் கலந்தது. யூத சமயம் சாக்கடையாக மாறிப் போனது.

இயேசு கிறிஸ்து யூத சமயத்தில் புரையோடி போன அத்தனை சடங்காச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் தம் போதனையாலும், தம் அற்புதங்களாலும், மாற்றி சமய மறுமலர்ச்சியை உண்டாக்கினார்.

இயேசு கிறிஸ்துவின் தீவிரமான செயல்பாடுகள் யூத சமயத்து இறை மக்களிடத்திலே பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் கொண்டு வந்தது.

ஓய்வு நாள் பற்றிய தெளிவான புரிதல் மக்களிடம் உண்டானது. மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் மனித நேயம் முக்கியமானது என்கின்ற எண்ணம் மக்களிடம் உருவானது. பலிகளில் கடவுள் பிரியப்படுவதில்லை என்கின்ற கோட்பாடுகள் மக்கள் மத்தியில் உலா வந்தன. யூபிலி சட்டங்கள் குறித்த தெளிவு பழக்கத்தில் வந்தன. கொர்பான் காணிக்கைகள் போன்றவைகள் பொருளற்றது என்று எண்ணினர். சமயத்தை முன்வைத்து பிழைப்பு நடத்தும் சமய தலைவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தீவிரமான செயல்பாடுகள் யூத சமயத்தில் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இருந்து மன நிறைவோடு சொல்லுகிறார் யூத சமயத்தில் மறுமலர்ச்சியை துவங்கினேன் அதை நிறைவேற்றி முடித்தேன் என்று மனநிறைவோடு கூறுகின்றார்.

 

B). சமூக சீர்திருத்தம் நிறைவேறிற்று.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பணிகள், கொள்கைகள் கோட்பாடுகள் செயல்திட்டங்கள் வழியாக யூத சமூகத்தில் பல மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன.

தூய்மை - தீட்டு என்ற கருத்தியல்களால் மக்களிடம் இருந்த பிளவை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அழித்தார். அனைவரும் இறை மக்களே என்கின்ற புரிதலை மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

நோய்கள் கடவுளின் சாபத்தினாலும் கோபத்தினாலும் தண்டனையினாலும் வருகிறவைகள் அல்ல என்பதை தமது மனதுருக்கத்தின் மூலமாக கூடிய அன்பினால் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அது விளிம்பு நிலை மக்களிடத்தில் பெரிய தாக்கத்தை கொண்டு வந்தது.

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்கின்ற நியாயப்பிரமாணத்திற்கு மாற்றாக அன்பும் இரக்கமும் பரிவிறக்கமும் உயர்ந்தது என்கின்ற சித்தாந்தத்தை மக்கள் மனதில் ஆழமாக விதைத்தார்.

சமூகத்தில் விலக்கி வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள், பெண்கள், ஆதரவற்றோர்கள், அடிமைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள்,  புற இனத்தவர்கள், சமாரியர்கள், பாலியல் தொழிலாளிகள், ஆயக்காரர்கள்... அனைவரும் இயேசுவின் சீர்திருத்த செயல்களால் ஏற்றம் பெற்றனர்.

மக்களிடம் இவர்களைக் குறித்த பார்வையில் மாற்றங்கள் உண்டாகின. அந்த மாற்றங்கள் சமூகத்தில் கூட்டு வாழ்வு முறைக்கு வழிநடத்தியது. அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்கின்ற உறவு நிலைக்கு அது வித்திட்டது.

ஒட்டுமொத்தத்தில் இயேசு கிறிஸ்துவின் சீர்திருத்த சிந்தனைகளும் கோட்பாடுகளும் செயல்பாடுகளும் யூத சமூகத்தில் சமத்துவ வாழ்வுக்கு நேராக வழி நடத்தியது.

இதையெல்லாம் நினைவு கூர்ந்து சிலுவையில் இருந்து தம் தந்தையிடம் கூறுகின்றார், தந்தையே நீர் என்னிடம் எதிர்பார்த்த காரியங்களை, சீர்திருத்தங்களை நான் செய்து நிறைவேற்றி முடித்தேன் என்று மனநிறைவோடு கூறுகின்றார்.

 

C). சமூக நீதி நிறைவேறிற்று.

நீதி இரண்டு வகைப்படும் ஒன்று சுயநீதி மற்றொன்று இறைநீதி.

இஸ்ரவேல் மக்கள் தொண்டு தொட்டு  சுய நீதியை இறைநீதி என்று பறை சாற்றி அவரவர் தமக்கு சாதகமான வாழ்வை மேற்கொண்டு வந்தார்கள்.

சமூகத்தில் ஆண்டான்  - அடிமை, ஏழை - பணக்காரன், இருப்பவர் - இல்லாதவர் என்ற படிநிலை இஸ்ரவேலர்கள் மத்தியில் வேரூன்றி இருந்தது.

அடிமைகள் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். ஒரு ஜோடி செருப்புக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். யூபிலி சட்டம் வெறும் சட்டமாகவே இருந்தது அதை கடைபிடிக்க அவர்கள் மறந்து போனார்கள்.

இயேசு கிறிஸ்து இந்த படிநிலைகளை உடைத்து சமூக நீதிக்காக ஆண்டவர் கடும் போராட்டத்தை மேற்கொண்டார்.

சமத்துவ சமூகத்தை கட்டமைப்பதற்கு ஆண்டவர் தம்முடைய போதனைகளாலும் உவமைகளாலும் மேற்கோள்களாலும் சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டார்.

அவர் ஆயக்காரர்களோடும் பாவிகளோடும் சமமாக உட்கார்ந்து விருந்து உண்டார். இது ஒரு சமூக நீதிக்கான போராட்டத்தின் வடிவம்.

ஆண்டவரின் இத்தகைய முயற்சி மக்களிடத்தில் இவர் பாவிகளின் நண்பன் என்கின்ற பெயரை அவருக்கு பெற்று தந்தது.

தங்கள் சொத்துக்களை இழந்தால் தான் இறையரசில் பங்கு பெற முடியும் என்கின்ற தம்முடைய சீரிய கருத்துக்களால் சமூகத்தில் மாற்றங்களுக்கு வித்திட்டார்.

வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கின்ற மக்கள் பலி செலுத்த முடியாத நிலையில் அந்த பலியே கூடாது என்று ஆலய சுத்திகரிப்பின் மூலமாக பலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  சமூக நீதிக்கான விதைகளை களத்தில் விதைத்தார்.

எருசலேம் - கலிலேயா என்ற பிரிவு, நகரம் - கிராமம் என்ற பிரிவுகள் அதனை ஒட்டிய அடிமைத்தனங்கள் இஸ்ரவேல் மக்களிடத்திலே இருந்த நிலையை கண்டு அதை மாற்றுவதற்கு ஆண்டவர் அரும்பாடுபட்டார்.

பல பயணங்கள் பல மேற்கோள்கள், பல உவமைகள்,  பல செயல்பாடுகள் வழியாக சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் சுயநீதிகளுக்கு ஆண்டவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையெல்லாம் நினைவுகூர்ந்தவராக சிலுவையில் இருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் தந்தையிடம், தந்தையே நீர் எனக்கு கொடுத்த பொறுப்புகளான சமூக நீதிக்கான விதைகளை விதைத்து விட்டேன் எனது ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்தன என்று சொல்லி மனநிறைவோடு கூறுகின்ற வார்த்தைதான் முடிந்தது எனும் வார்த்தை.

சமூக நீதிக்கான பயணத்தில் எனது ஆரம்பகட்ட பணியை நான் நிறைவேற்றி முடித்து விட்டேன் என்று மனரம்மியமாக தன் தந்தையிடம் ஆண்டவர் கூறுகின்றார் எல்லாம் முடிந்தது.

 

# நிறைவாக:

முடிவுகள் எடுப்பதற்கு பல தயக்கங்கள் உண்டாகும். அப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு மிகச் சிறந்த ஆளுமை வேண்டும். அந்த ஆளுமை இயேசுவில் இருந்தது.

ஆலயம் செல்வதும் அருளுரை கேட்பதும் காணிக்கை செலுத்துவதும் தம் கடமை என்று கருதிய பல யூதர்கள் மத்தியில் இவைகளில் நடக்கும் ஊழல்களையும் அநீதிகளையும் தட்டிக் கேட்பதற்கு தன்னை அர்ப்பணித்து அதை நிறைவேற்றி முடித்த இயேசு கிறிஸ்து ஒரு வித்தியாசமான மனிதர் தான்.

ஒரு திருப்பணியை ஆரம்பித்து அதை நிறைவேற்றி முடிப்பதற்கு பல ஆண்டுகளாகும், ஆனால் இயேசு கிறிஸ்து வெறும் மூன்றரை ஆண்டுகளில் சமூக சீர்திருத்தத்தையும் சமய மறுமலர்ச்சியையும் சமூக நீதியையும் உருவாக்கினார் என்றால், அதற்கான விதைகளை விதைத்தார் என்றால் இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்பும் அழைப்பும்  எவ்வளவு சிறப்பானது என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.

ஈடுபாடு உள்ளவர்களிடமும் ஒப்படைப்போடு பணி செய்கிறவரிடமும் இருக்கின்ற சிறப்பு குணாதிசயங்கள் என்னவென்றால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதே.

அது இயேசுவிடம் இருந்தது... நம்மிடம் இருக்கிறதா என்பதை இந்த நன்னாளில்  நம்மை நாமே ஆய்வு செய்து கோள்வோம்.


7) ஒப்படைத்தல் ; பண்புகளில் மிகவும் உயர்ந்தது

லூக்கா 23  :  46

"பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்"

# உட்புகுமுன்:

ஒவ்வொரு முறையும் திருப்பணியாளர்களை தேர்வு செய்யும் பொழுது கேட்கின்ற கேள்வி உங்களின் அழைப்பு மற்றும் ஒப்படைப்பு என்ன என்பதே. (Call & Commitment)

ஒப்படைப்பு என்பது துவக்கத்தில் இருக்க வேண்டிய ஒன்று இறுதிவரை நிலைத்திருக்க வேண்டிய ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம்.

முடக்குவாதம் உற்ற ஒரு மனிதரை நான்கு பேர் சுமந்து ஆண்டவர் இயேசுவிடம் கொண்டு வந்ததை நாம் அறிவோம்.அந்த நான்கு பேரும் எத்தனை தடைகள் வந்தாலும் அந்த தடைகள் எல்லாம் தாண்டி இறுதி வரைக்கும் தங்கள் அழைப்பிலும் ஒப்படைப்பிலும் உறுதியாக இருந்து வந்த காரியத்தை அவர்கள் நிறைவேற்றி சென்றார்கள்.

ஒப்படைப்பில் உறுதியாக இருந்தால் உபத்திரவங்கள் வந்தாலும் அதை தாங்க முடியும், பல தடைகள் வந்தாலும் அதை தாண்ட முடியும், யார் கைவிட்டாலும் தனித்து நிற்க முடியும்.

பணி நிறைவு செய்கின்ற நாட்களில் நடைபெறுகின்ற பிரிவு உபச்சார நிகழ்வில் பணி நிறைவு செய்கின்றவரின் சிறப்பு பண்புகளை எடுத்துக் கூறுவார்கள்.

இறுதியாக பணி நிறைவு பெறுகின்றவர் பேசும் பொழுது எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு இறுதியாக இந்த நிறைவுக்கு முழு முதல் காரணம் இறைவன் தான் என்று கூறுவார். அதுதான் உண்மை.

ஒவ்வொருவருக்கும் கடவுள் பல வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார். அந்த வாய்ப்புகளின் வழியாக பொறுப்புகளை நாம் நிறைவேற்றுகின்றோம். பெரும்பாலானோர் சொல்கின்ற காரியங்கள் இன்னும் கொஞ்சம் காலம் கிடைத்திருந்தால் இவையெல்லாம் நிறைவேற்றி இருப்பேன் என்றே சொல்லுவார்கள்.

 

கீழ்க்கண்ட 3 தலைப்புகளின் வழியாக தியானிப்போம்...

A). மன நிறைவோடு ஒப்படைத்தார்.

B) மன உறுதியோடு ஒப்படைத்தார்.

C). மனத் தாழ்மையோடு ஒப்படைத்தார்

இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழாவது திருமொழியை கருத்தோடு தியானிப்போம்..

 

A). மன நிறைவோடு ஒப்படைத்தார்.

வாழ்கின்ற நாட்களில் மன நிறைவோடு வாழ்வது உயர்ந்த பண்புகளில் ஒன்று. எல்லாவற்றிலும் நிறைவை காண்பது என்பது கடவுள் தந்த அருட்கொடைகளில் மிகவும் சிறந்தது.

தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் நன்றாக எழுதியிருப்போம் என்றே சொல்வர்.

ஒவ்வொருவருக்கும் கடவுள் பல வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார். அந்த வாய்ப்புகளின் வழியாக பொறுப்புகளை நாம் நிறைவேற்றுகின்றோம்.

 பெருவாரியான மக்கள் சொல்கின்ற காரியங்கள் இன்னும் கொஞ்சம் காலம் கிடைத்திருந்தால் இவையெல்லாம் நிறைவேற்றி இருப்பேன் என்றே சொல்லுவார்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மனநிறைவோடு சொல்கின்ற வார்த்தைகள் தான் பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்.

ஆறாவது வார்த்தையில் எல்லாம் சரியா இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து ஆம் முடிந்தது! என்று கருதிய பின்பு அவர் மன நிறைவோடு தம் ஆவியை தமது தந்தையிடம் ஒப்படைக்கின்றார்.

வாழும் பொழுது எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.

தனக்கு கொடுக்கப்பட்ட மூன்றரை ஆண்டுகளில் மனநிறைவோடு போதித்தார், மன நிறைவோடு அற்புதங்களை செய்தார், மன நிறைவோடு மக்களோடு உறவாடினார்,மனநிறைவோடு பாடுகளை ஏற்றுக் கொண்டார், மன நிறைவோடு சிலுவையை சுமந்தார் இப்பொழுது மன நிறைவோடு தம் ஆவியை ஒப்படைக்கின்றார்.

B) மன உறுதியோடு ஒப்படைத்தார்.

உங்கள் சரீரங்களை கொல்பவர்களுக்கு  நீங்கள் பயப்பட வேண்டாம், உங்கள் ஆன்மாவை  கொல்கிறவர்களுக்கு நீங்கள் பயப்படுங்கள் என்று ஆண்டவர் போதித்தார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாழும் பொழுதே பரிசேயர்களை மன உறுதியோடு எதிர்கொண்டார்,  ஆசாரியர்களை மன உறுதியோடு எதிர்கொண்டார் தன்னை எதிர்ப்பவர்களையும் மன உறுதியோடு எதிர்கொண்டார்.

ஆண்டவரின் ஒவ்வொரு செயல்களிலும் இந்த மன உறுதி என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. அவர் போதித்த காரியங்களில் உறுதியாக இருந்தார். தன்னுடைய சித்தாந்தங்களில் மிகவும் உறுதியாக இருந்தார். தன் செயல்பாடுகளிலும் உறுதியோடு இருந்தார்.

இவைகளின் வழியாக தனக்கு சிலுவை பாடுகள் வரும் என்பதிலும் உறுதியாக இருந்தார். அத்தனை சிலுவை பாடுகளையும் மன உறுதியோடு தன்னந்தனியாக எதிர்கொண்டார்.

பொதுவாக பாரம்பரியம் கூறுகிறது அவர் மூன்று முறை கீழே விழுந்தார் என்று, ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் எழுந்தார் அதற்கு காரணம் அவரது மன உறுதியாகும்.

அதிகாரத்தில் இருந்தவர்கள், தன்னை அச்சுறுத்துபவர்கள், கொலை செய்கின்றவர்கள் இவர்களை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டும் என்று சொன்னால் மன உறுதி வேண்டும். அத்தகைய உறுதி ஆண்டவருக்கு ஆரம்பம் முதல் கொண்டு இறுதி வரைக்கும் நிலைத்திருந்தது .

பவுல் அடியார் சொல்வதைப் போல என்னை பலப்படுத்துகிற கிறிஸ்துவனாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலன் உண்டு. இந்த உணர்வை இயேசு கிறிஸ்து சிலுவையில் வெளிப்படுத்துகின்றார்.

கடவுள் என்னை பலப்படுத்தவதினால் மனநிறைவோடும் மன உறுதியோடும் அவரின் பணிகளை செய்ய முடிந்தது என்ற உணர்வோடு இந்த வார்த்தைகளை கூறுகின்றார்.

C). மன தாழ்மையோடு ஒப்படைத்தார்.

ஆண்டவர் சிலுவையில் கூறின கடைசி வார்த்தை அது ஒரு இறைவேண்டல் என்பதை நாம் நன்கு அறிவோம்.

தன்னை அனுப்பின கடவுளுக்கு முன்பதாக மனநிறைவோடும் மன உறுதியோடும் பணிகளை நிறைவேற்றி முடித்து,  மனத் தாழ்மையோடு தந்தையிடம் தன்னை ஒப்படைக்கின்றார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஜெப ஆலயத்தில் முதன்முதலாக திருமறையை வாசிக்கும் பொழுது கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார் என்று அவர் வாசித்தார்.

இறுதியாக தன் பணியை நிறைவு செய்யும் பொழுது கடவுளுடைய ஆவி ஆற்றல் அனைத்தையும் திரும்ப தன் தந்தையிடம் ஒப்படைக்கின்றார்.

தன்மை சிதைக்கின்ற மக்களுக்கு ஆண்டவர் கூறுகின்ற செய்தி; என் உடலை வேண்டுமானால் நீங்கள் சிதைக்க முடியும் என் உணர்வுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது, என் ஆற்றலை ஒருபோதும் சிதைக்க முடியாது. அந்த ஆற்றல் கடவுள் உடையது. கடவுள் தந்த ஆற்றலை ஆவியை மன தாழ்மையோடு ஒப்படைக்கின்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாழ்மை என்பதற்கு தன் வாழ்வில் அர்த்தத்தை தந்தார். எளிமையின் ரூபமாக பிறந்தார், தாழ்மையின் வடிவாய் தம் சீடர்களின் கால்களை கழுவினார் நிறைவாக தாழ்மையின் சிகரமாய் தன் ஆவியை ஒப்படைக்கின்றார்.

இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையை சொல்லாமலேயே மரித்திருக்கலாம். கெத்சமனே தோட்டத்தில் இயேசு கிறிஸ்து இறை வேண்டலோடு சிலுவைப் பாடுகளுக்கு தன்னை ஒப்படைத்தார், இறுதியாக கொல்கதா மலையில் தன் ஆவியை தன் தந்தையிடம் இறை வேண்டலோடு மனத் தாழ்மையோடு ஒப்படைக்கின்றார்.

# நிறைவாக:

இறைவனின் திருப்பணிக்கு தங்களை ஒப்புக்கு கொடுக்கிறவர்கள் உண்டு, தன் வாழ்வை முழுவதுமாக ஒப்புக் கொடுப்பவர்களும் உண்டு.

சக மனிதர்களோடும் தம் சீடர்களோடும் கொண்டிருந்த அதே உறவின் ஆழத்தை தம் தந்தையோடும் ஆண்டவர் கொண்டிருந்தார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் இறுதி கட்டங்களில் தந்தையோடு கொண்டிருக்கிற உறவை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி தன் வாழ்வை நிறைவு செய்தார்.

 

# சிலுவை மொழிகளுக்கான நிறைவுரை:

லூக்கா 23 : 47 - 53

ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு திரு வார்த்தைகளை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம், வாசித்திருக்கிறோம், தியானித்தும் இருக்கிறோம்.

சிலுவை மொழிகள் வெறும் வார்த்தைகளின் தொகுப்புகள் அல்ல, அது ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும் ஒவ்வொரு பொருளை நமக்கு தருகிறது.

ஆலயத்தை விட்டு நாம் செல்வதற்கு முன்பதாக சிலுவை அருகில் நின்ற மக்களின் உணர்வுகளோடு நம்மையும் ஒப்பிட்டு பார்த்து நாம் திரும்பிச் செல்வோம்..

1. சிலுவைக் காட்சியை பார்க்கும்படி வந்த மக்கள்  - "மார்பில் அடித்துக் கொண்டு போனார்கள்".(லூக்கா 23 : 48)

2. இயேசுவுக்கு அறிமுகமான மக்கள் - "தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்."(லூக்கா 23 : 49)

3. சிலுவை மரணத்தை நிறைவேற்றிய நூற்றுக்கு அதிபதி - " இயேசு மெய்யான தேவகுமாரன் என்று சாட்சி பகர்ந்தார்." (லூக்கா 23 : 47)

4. ஆலோசனைக்காரன் - "ஆண்டவரின் உடலுக்கும் வாழ்வுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்"(லூக்கா 23 : 47)

அன்புக்குரியவர்களே நாம் தியானித்த சிலுவை மொழிகள் நிச்சயம் நம்முடைய வாழ்வில் மாபெரும் தாக்கத்தை கொண்டு வந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆண்டவருக்கு அறிமுகமானவர்கள் தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலுவை காட்சியை பார்க்கும்படி வந்தவர்கள் தங்கள் மார்பிலே அடித்துக் கொண்டு போனார்கள். சிலுவை மரணத்தை நிறைவேற்றிய நூற்றுக்கு அதிபதி கடவுளை மகிமைப்படுத்தி திரும்பி சென்றார், யோசேப்பு என்னும் ஆலோசனைக்காரன் ஆண்டவரின் வாழ்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இவைகளில் நாம் எந்த கூட்டத்தோடு நம்மை இணைத்துக் கொள்கிறோம் என்பதை உறுதி செய்து புறப்படுவோம்.

"சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன்..."

சிலுவை இளைப்பாறும் இடமல்ல, மாறாக சிலுவை "பயணத்தை துவக்குகின்ற இடம், இணைந்து திருச்சபையாக அணிவகுத்து செல்வோம்."

மாற்றுருவாக்கத்தை ஏற்படுத்திய இயேசு கிறிஸ்து,  சிலுவையில் இருந்தும் மாற்று உருவாக்கத்திற்காக சொன்ன மொழிகளை சிந்தையில் கொள்வோம்.

சரித்திரத்தை புரட்டிப் போட்ட இயேசுவின் வாழ்வு மரணம் உயிர்ப்பு போல நமது வாழ்வும் அமையட்டும்.

 

இறைபணியில் நட்புடன்

 


அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

திருச்சி -தஞ்சை திருமண்டலம்.

️🌿🌳🌴🍀☘️

Comments