Resurrection : Celebrating Boundless Transformation

உயிர்ப்பு : அளவற்ற மாற்றுருவாக்கத்தை கொண்டாடுவோம்


The Risen Christ in a kooli's brown dress, smiling, humble, victorious."
"He rose not in royalty, but in solidarity with the lowly." Painting by Rev. Jebasingh Samuvel

"கூலி தொழிலாளி உயிர்த்த ஆண்டவர் – புன்னகையுடன், தாழ்மையுடன், வெற்றியுடன் காட்சியளிக்கிறார்"
" தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசராக ஏகமாய் எழுந்தார்."
ஓவியம்: அருட்பணி. ஜெபசிங் சாமுவேல்

-------------------------------

திருமறைப் பகுதிகள்

2 சாமுவேல் 22 : 1 - 20

திருப்பாடல்கள் : 16

1 கொரிந்தியர் 15 : 20 - 28

மாற்கு. 16 : 1 - 11


உட்பகுமுன்

கல்லறை 

இயேசுவை 

மூன்றாம் நாளில் 

பிரசவித்தது...!


அன்று ...,

பிள்ளையை 

துணிகளில் 

சுற்றி 

முன்னணையில் 

கிடைத்தியிருக்க 

காண்பீர்கள் 

இன்று...,

இயேசுவை 

சுற்றி இருந்த 

துணிகள் சுருட்டி

கல்லறையில்

வைக்கப்பட்டிருப்பதை

காண்பீர்கள் 

இதுவே 

உங்களுக்கு அடையாளம்...!


இயேசு கிறிஸ்துவின் போதனைகள், அற்புதங்கள், அடையாளங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள பழைய அடிமைப்படுத்தும் கருத்துக்களை சிந்தனைகளை மாற்றி அவர்களை மாற்று உருவாக்கம் செய்தது.

இயேசு கிறிஸ்துவின் குருத்தோலை பவனி சமூகத்தில் பல தாக்கங்களை உண்டாக்கி அது சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

இயேசு கிறிஸ்துவின் ஆலய சுத்திகரிப்பு யூத சமயத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கியதோடு மட்டுமல்லாமல் அது சமூக நீதிக்கும் வித்திட்டது.

ஆண்டவரின் "சிலுவை மரணமும் உயிர்ப்பும்" பலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, உயிர்த்தெழுதல் நம்பிக்கையை தந்தது, சீடர்களின் வாழ்வில் மனத் துணிவைத் தந்தது, உலகமெங்கும் அவர்களை பயணிக்க வைத்தது, சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்று சேர்த்தது, உலகத்தில் சீர்திருத்தங்களும், இறை ஆட்சிக்கான தேடல்களும் வலுப்பெற்றன, கிறிஸ்துவுக்காக பல இரத்த சாட்சிகள் ஆயினர், 

திருச்சபை என்ற மாபெரும் இயக்கம் வளர்ந்தது, பல இறையியல்கள் உருவாகின... சமூகத்தில் மாற்றங்களும் மாற்றுருவாக்கங்களும் மெல்ல மெல்ல தழைக்கத் துவங்கின.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும் உயிர்ப்பும் "விடுதலை வாழ்வுக்கு வித்திட்டன." இயேசுவின் உயிர்ப்பு அன்றும் இன்றும் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் நம்பிக்கையை விதைத்தது, மன மகிழ்ச்சிக்கு வித்திட்டது, கொண்டாட்டங்களுக்கு அது வழி வகை செய்தது. 

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் நற்செய்தியை நாமும் பெற்றுக் கொள்வோம்... உயிர்ப்பை கொண்டாடி மகிழ்வோம்...

1. உயிர்ப்பு : மறைந்தல்ல / வெளிப்படையாக செயல்பட உந்துதல் தந்துள்ளது.

2. ⁠  உயிர்ப்பு : சார்ந்தல்ல / தனித்து செயல்பட வாய்ப்பை வழங்கியுள்ளது.

3. ⁠உயிர்ப்பு : பயந்தல்ல /துணிந்து வாழ வழி செய்து உள்ளது

4. ⁠உயிர்ப்பு : பழையதல்ல /  புதிய படைப்பாய் வாழ ஆசி தந்துள்ளது.

ஆண்டவரின் உயிர்த்தெழல் மேற்கண்ட நான்கு சிறப்புகளை நமக்குத் தந்துள்ளது..., கருத்தோடு தியானிப்போம்.


1. உயிர்ப்பு : மறைந்தல்ல / வெளிப்படையாக செயல்பட உந்துதல் தந்துள்ளது.(மாற்கு. 16 : 1 - 11)


இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு  சீடத்துவத்தில் பல புதிய பரிணாமங்களுக்கு வித்திட்டது.

இயேசு கிறிஸ்துவின் பல திருப்பணிகளுக்கு அடித்தளமிட்டவர் அன்னை மரியாள் என்பதை யாரும் மறுக்கலாகாது.

கடவுளின் திருப்பணிக்கு தன்னை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவை

அன்னை மரியாள் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு சம்மதித்ததால் தான் ஆண்டவரால் முழு நேரமும் திருப்பணி செய்ய முடிந்தது.

அன்னை மரியாளின் பாடல் இயேசு கிறிஸ்துவின் திருப்பணிக்கு கருப்பொருளாக அமைந்திருந்தது என்பதை நாம் உணர்வில் கொள்வோம்.

பலவான்களை ஆசனங்களில் இருந்து தள்ளினார், தாழ்மையானவர்களை உயர்த்தினார், பசியுள்ளர்களை திருப்தியாக்கினார், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை தந்தார் ..., என இயேசு கிறிஸ்துவின் அத்தனை செயல்பாடுகளுக்கும் மரியாளின் பாடலே கருப்பொருளாக அமைந்திருந்தது.

இதுவரையிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாள் இயேசு கிறிஸ்துவின் ஒரு சீடராக தன்னை மறைத்துக் கொண்டு செயல்பட்டார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கண்ட முதல் சாட்சியாகிய அன்னை மரியாள் மற்றும் அவரோடு இருந்த பெண்களும் ஆண்டவர் உயிர்ப்பின் சாட்சிகளாக கடவுள் அவர்களை மாற்றினார். 

மூன்றாம் நாளில் சடங்கு செய்ய வந்த பெண்களை இயேசுவின் உயிர்த்தெழுதலின் சாட்சியாளர்களாக உலகிற்கு அனுப்பினார். 

சிலுவையின் அருகிலும் இருந்தவர்கள் இந்த பெண்கள்,? உயிர்ப்பிலும் பங்கு பெற்றவர்கள் இந்த பெண்கள், உயிர்த்த ஆண்டவருக்கு சாட்சியாக எழும்பினவர்களும் இந்த பெண்களே. 

யூத சமூகத்தில் பெண்களின் சாட்சி செல்லாதது, ஆனால் கடவுளின் ஆட்சியில் மரியாளும் மற்ற பெண்களும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு முதல் சாட்சியாக கடவுள் அவர்களை உருவாக்கினார். 

உயிர்ப்பிக்கு முன் வரை மரியாளும் மற்ற பெண்களும் சீடத்துவத்தில் மறைந்து செயல்பட்டார்கள் அல்லது மறக்கடிக்கப்பட்டார்கள். ஆண்டவரின் உயிர்ப்பு அவர்களை மறைந்த அல்ல வெளிப்படையாக செயல்பட வைத்தது.

இன்றைய திருச்சபை உருவாக்கத்திற்கும், சீடர்களின் எழுச்சிக்கும், இயேசு கிறிஸ்துவின் இயக்கம் வளர்ந்து பெருகுவதற்கும் மரியாளும் அவர்களோடு இருந்த மற்ற பெண்களும் "அவர் உயிர்ர்த்தார்" என்று பகிர்ந்து கொண்ட நற்செய்தியால் விளைந்தவை.

மறைந்து செயல்பட்ட மரியாளும் மற்ற பெண்களும் வெளிப்படையாக செயல்பட்டதின் விளைவாகவே "இயேசு உயிரோடு எழுந்தார்" எனும் நற்செய்தி உலகமெங்கும் பரவுவதற்கு காரணமாக அமைந்தது.

நாம் கட்டுகின்ற திருச்சபைக்கு அன்னை மரியின் பெயரை வைக்க முன்வருவோம் என்றால் அது சீர்திருத்தத்தின் அடையாளம் என்று புரிந்து கொள்ளலாம். இயேசுவின் உயிர்ப்பு தந்த மாற்றுருவாக்கம் என்றும் அதை புரிந்து கொள்ளலாம். 

2. ⁠  உயிர்ப்பு : சார்ந்தல்ல / தனித்து செயல்பட வாய்ப்பை வழங்கியுள்ளது. லூக்கா 24 : 13 - 35)

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சார்பு தன்மையைப் போக்கி தணித்து செயல்படுவதற்கு வழிவகை செய்துள்ளது.

எம்மாவு என்கின்ற ஊருக்கு ஆண்டவரின் சீடர்கள் பயணம் மேற்கொண்ட பொழுது உயிர்த்த இயேசு கிறிஸ்து அவர்களோடு சக பயணியாய் தன்னை இணைத்துக் கொண்டார்.

வழியில் உயிர்த்த இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் நடைபெற்ற உரையாடல் ஒரு தெளிவை தந்தது. சந்தேகத்தோடும் பயத்தோடும் எதிர்கால அச்சுறுத்தலோடும் வாழுகின்ற சீடர்களுக்கு உயிர்பின் நம்பிக்கையை அது வெளிப்படுத்தியது. 

அந்த இரவு அவர்களோடு உயிர்த்த ஆண்டவர் உணவு உண்ணும் முன், அவர் அப்பத்தை பிட்ட பொழுது  உயிர்த்த ஆண்டவரை கண்டு கொண்டார்கள். 

எப்பொழுது உயிர்த்த ஆண்டவரை முகமுகமாக கண்டு கொண்டார்களோ, அந்த சீடர்கள் இதுவரையிலும் இயேசுவை சார்ந்து பணி செய்தவர்கள் மற்ற சீடர்களுக்கு அந்த நற்செய்தியை அறிவித்தார்கள். சார்ந்து பணி செய்தவர்களை  இப்பொழுது தனித்து பணியாற்ற உயிர்ப்பு உந்தித் தள்ளியது, பயத்தை போக்கியது, திரும்பவும் எருசலேமுக்கு துணிந்து செல்வதற்கு வழி நடத்தியது. 

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு இயேசுவோடு உடன் பயணித்த சீடர்களை உலகமெங்கும் தனித்து பயணிக்க வைத்தது, சவால்களை மேற்கொள்ள வைத்தது, இயேசுவைப் போல செயல்பட வைத்தது, இயேசுவுக்காய் மரிக்கவும் வைத்தது, இறை ஆட்சிக்கான அடித்தளங்களை அமைக்கவும் வைத்தது.

இன்று பலருடைய பெயர்கள் இயேசு கிறிஸ்துவின் சீடர்களின் பெயர்களை, செயல்களை, சாட்சியான வாழ்வை வழிமொழிவதாகவே அமைந்திருக்கின்றன.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு எல்லைகளைக் கடந்து சீடர்களை பயணிக்க வைத்தது சிலுவை சாவை தனித்து ஏற்றதைப் போல இயேசுவுக்காக தனித்து செயல்படுவதற்கும் உந்துதல் தந்தது. 

3. ⁠உயிர்ப்பு : பயந்தல்ல /துணிந்து வாழ வழி செய்து உள்ளது.(2 சாமுவேல் 22 : 1 - 20)

இயேசு கிறிஸ்துவின் மரணம் சீடர்களை பயத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பூட்டிய வீட்டுக்குள் முடங்கி கிடந்தார்கள். உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு தரிசனமானார். உங்களுக்கு சமாதானம் என்று ஆசி வழங்கினார், பயத்தைப் போக்கினார். 

காற்றையும் கடலையும் அதட்டி அமைதலாக்கிய  இயேசு கிறிஸ்து அச்சத்தில் ஆழ்ந்திருந்த சீடர்களின் அச்சத்தை போக்கினார். 

உங்கள் சரிதத்தை கொல்பவர்களுக்கு நீங்கள் அச்சம் அடைய  வேண்டாம் உங்கள் ஆன்மாவை கொல்லுபவர்களுக்கு அச்சம் அடையுங்கள் தம் உயிர்ப்பின் மூலமாக அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

உயிர்த்த ஆண்டவரை தரிசித்த பின்பதாக சீடர்கள் வாழ்வில் உண்டான எழுச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அச்சத்தில் வாழ்ந்தவர்கள் அச்சத்தில் இருந்து தங்களை விடுபடுத்திக் கொண்டார்கள்.

உயிர்த்த ஆண்டவர் துணையாக இருக்கிறார் என்ற துணையாளரை சீடர்கள் பெற்றுக் கொண்டதால், அவர்கள் உலகமெங்கும் துணிந்து பயணித்தார்கள், இறை ஆட்சியை அமைத்தார்கள். 

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிக்குப் பின்பதாக பேதுரு ஆற்றிய உரை கவனிக்கத்தக்கது. நீங்கள் ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள் என்று துணிந்து பேசுவதற்கு அது வழிவகை செய்தது. 

என்னையும் இயேசுவைப்போல சிலுவையில் அறையுங்கள் ஆனால் தலைகீழாக அறையுங்கள் என்று துணிந்து சொல்வதற்கு இயேசுவின் உயிர்ப்பு ஆற்றலைத் தந்தது.

இயேசுவின் மரணம் இயேசுவின் இயக்கத்தை அழித்துவிடும் என்று நம்பியவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு மாபெரும் திரள் இயக்கத்தை தோற்றுவித்தது.

இதோ உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள் என்று உலகமெங்கும் சான்றாளர்கள் உருவாவதற்கு இயேசுவின் உயிர்ப்பு வழி வகை செய்தது.

கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதியில் தாவீது பாடுகின்ற பாடல் மிகவும் அற்புதமான ஒரு பாடல். 

உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.

என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.

என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள். கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.(2 சாமு 22 : 19) என்கிறார். 

தாவீது தன்னை எதிர்த்தவர்கள் எல்லாரிடமிருந்து கடவுள் அவரோடு இருந்து, அவரை விடுவித்து, மன துணிவை தந்து சான்றாக பாடுகின்ற இந்த பாடல் ஒரு புரட்சி பாடலாக நாம் புரிந்து கொள்ளலாம்.

சிலுவையை காணும் போதெல்லாம் அது வெறும் பக்திக்குரிய சின்னமாக மட்டுல்ல மன துணிவை தரும் சின்னமாக இயேசு கிறிஸ்து அதை மாற்றினார். 

திருமுழுக்கின் போது நம் நெற்றியில் வரையப்பட்ட சிலுவை மனத் துணிவை நமக்குள் தந்துள்ளது. இயேசுவுக்காக வாழ,  இயேசுவுக்காக பணி செய்ய,  இயேசுவாகவே வாழ நம்மை அழைக்கின்றது. 

4. ⁠உயிர்ப்பு : பழையதல்ல /  புதிய படைப்பாய் வாழ ஆசி தந்துள்ளது.(1 கொரி15 : 20 - 28)

பவுல் அடியார் தம் திருச்சபைக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் நற்செய்தியை ஆழமாக எடுத்துரைக்கின்றார். 

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.

ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.(1 கொரி 15 : 20 - 22)

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்மை புதிய படைப்பாக மாற்றி உள்ளது.

இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகள் ஒவ்வொன்றும் சமூக நீதியை கட்டமைத்தன சமூக மாற்றத்துக்கு வழி வகுத்தன இறை நீதியை அது நிறைவேற்றின.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பும் இம்மூன்றையும் மேலும் உறுதி செய்பவையாக அமைந்திருந்தது. இயேசுவின் உயிர்ப்பு இயேசுவின் சீடர்களை எல்லைகளைத் தாண்டி பயணிக்க வைத்தது. 

இயேசுவின் சீடர்கள் சென்ற இடங்களில் இருந்த சமூக அவலங்களை, சீர்கேடுகளை, அடிமைத்தனங்களை, அடக்குமுறைகளை எதிர்க்கவும் அவைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வாழ்வை வழங்கவும் அது வழி செய்தது. 

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்த நம்மை, இயேசுவின் உயிர்ப்பு உயிரோடு எழுச்செய்து, உன்னதங்களில் அவரோடு உட்காருகின்ற பாக்கியத்தை அனைவருக்கும் தந்துள்ளது. 

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.(எபேசியர் 2  :  7) என்ற பவுல் அடியாரின் அனுபவம் மிகவும் உன்னதமானது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய வாழ்க்கையை புதிய அத்தியாயத்தை நமக்கு துவங்கியிருக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்மை புதிய படைப்பாக மாற்றி இருக்கிறது. இந்த புதிய படைப்பில் இழந்த இறைச் சாயலை உயிர்ப்பின் வழியாக மீட்டு தந்துள்ளார். 

பழையதல்ல புதிய படைப்பாய் மானுடம் புதிய பாதையில் பயணிக்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் பாடு, மரணம், உயிர்ப்பின் வழியாக நம்மை மீட்டுள்ளார்.

நிறைவாக

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு அன்றும் இன்றும் சமூகத்தில் மாற்றங்களையும் மாற்றுருவாக்கத்தையும் உருவாக்கியுள்ளது.

# கல்லறைக்கு சடங்கு செய்ய வந்த பெண்களை உயிர்ப்பின் சாட்சியாளர்களாக உருவாக்கியது....

# வரலாற்றில் வாழ்ந்த சீடர்களை வரலாறு படைப்பதற்கு இயேசுவின் உயிர்ப்பு உந்தியது....

# அன்று ஒரு பேதுரு, ஒரு அந்திரேயா, ஒரு யாக்கோபு, ஒரு யோவான் மட்டும் ஆண்டவரோடு இருந்தார்கள். இயேசுவின் உயிர்ப்பிக்கு பின்பதாக உலகமெங்கும் பல பேதுருக்கள், பல அந்திரேயாக்கள்,  பல யாக்கோபுகள்...

# " யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார"  என்ற பாடலை பாடும் பொழுது, மனதில் எழுகின்ற உணர்வு சிறப்பானது. இதுவரையிலும் நம் ஆட்டுக்குட்டிகளாக அடிபட்டது போதும்,  இனி சிங்கங்களாக அதுவும் பெண் சிங்கங்களாக ஒன்று கூடி களமாட நம்மை அழைப்பதாக இந்த பாடல் நம்மை உருமாற்றுகிறது. உணர்ந்து பாடுவோம்.

# கிறிஸ்துவுக்காக வாழவும் மரிக்கவும் துணிகின்றவர்களுக்கு ஆண்டவர் சொல்லுகின்ற செய்தி கல்லறையின் கல்லை புரட்டுவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாய் இருக்கிறேன் என்பதே. 

# இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு வழிபாட்டோடு நின்று விடுவதற்கு அல்ல அது நம்மை கொண்டாடுவதற்கு அழைக்கிறது. திருச்சபையாக இணைந்து கொண்டாடுவோம். எல்லைகளைத் தாண்டி தெருச்சபையோடு இணைந்து கொண்டாடுவோம். 

# இயேசு கிறிஸ்துவினால் மாற்றுருவாக்கம் பெற்ற மக்களோடு இணைந்து பண்பாடுவோம், உயிர்த்தெழுதலை  கொண்டாடுவோம். 

உயிர்த்த ஆண்டவர் உங்களோடு இருப்பாராக....

நட்புடன் 

உங்கள்



Rev. Augusty Gnana Gandhi

Ariyalur Pastorate

Trichy-Tanjore Diocese

Comments