BELIEVING
IN CHRIST: THE TRUTH
"வாய்மை" யாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தல்
# திருமறைப் பகுதிகள்:
திருப்பாடல்கள் 119 : 89
-96
விடுதலைப் பயணம்
34 : 1 - 9
யோவான் 17 : 6 - 19
எபேசியர் 4 : 7 - 16
# உட்புகும் முன்:
நாம் வாழும் உலகில்
"ஒளி - இருள், நன்மை
- தீமை போலவே வாய்மை
- பொய்மை என இரண்டும் உள்ளது.
இயேசு கிறிஸ்து நானே
"வழி - வாய்மை - வாழ்வு" என்று அன்று சீடர்களுக்கு மட்டுமல்ல இன்றைய இறை அன்பர்களாகிய நமக்கும் சொல்லி இருக்கின்றார்.
"சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"
என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கும், அவரின் வழித்தோன்றல்களுக்கும் ஆழமாக கற்பித்திருக்கின்றார்.
இன்றைய உலகில் நமக்கு கிடைக்கப் பெறுகின்ற செய்திகள்(News), தகவல்கள்(Information), எவ்வளவு தூரம் உண்மை என்று நாம் அறிய முடியாத அளவிற்கு இருந்து வருகிறது.
இன்றைய உலகில் உண்மை மழுங்கடிக்கப்படுகிறது, பொய்மை சிறகடித்து பறக்கிறது.
போலிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கூடிக் கொண்டே போவதை நாம் காண்கிறோம்.
"எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது"
என்று புரிந்து கொள்வதில் பல தடுமாற்றங்கள் நமக்குள் இருக்கத்தான் செய்கிறது.
"பொய்மை"
வெற்றி பெறுவதைப் போல தோன்றும் ஆனால் இறுதியில் "உண்மையே, வாய்மையே"
வெல்லும் என்பது நிதர்சனமாகும்.
இன்றைய திருச்சபை "திருமறை காட்டும் கிறிஸ்துவை நம்புவதை காட்டிலும், திருமறையை போதிக்கும் நபர்கள் மீது நம்பிக்கை வைப்பது வளர்ந்து கொண்டே வருகிறது.
இது தனிமனித துதி பாடலுக்கும்,
தனிநபர் வளர்ச்சிக்கும் உதவுமே அன்றி திருச்சபை வளர்ச்சிக்கும் இயேசு கிறிஸ்துவின் இலட்சியமான இறை ஆட்சியை உருவாக்குவதற்கும்
ஒருபோதும் உதவாது என்ற புரிதல் நமக்குள் எழ வேண்டும்.
இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட அத்தனை பேரும் தங்கள் வாழ்வில் அற்புதங்களையும்,
அடையாளங்களையும் கண்டதோடு மட்டுமின்றி புது வாழ்வையும் பெற்றுக் கொண்டார்கள்.
# சகேயு இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கை
"மறுவாழ்வை" பெறச் செய்தது.
#கானானியப் பெண் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையால் "நற்சான்று"
பெற்றார்கள்.
#சமாரியப் பெண் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையால்
"அமைதி வாழ்வு"
க்கு சமாரிய நாட்டை வழி நடத்தினார்கள்.
#பேதுரு இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையினால் கடலில் ரெண்டு எட்டு தூரம் நடந்து "சாதிக்க"
முடிந்தது.
#முகவரி தெரியாத நான்கு பேர் இயேசு கிறிஸ்து மேல் கொண்ட நம்பிக்கையால் முடக்குவாதம் உற்ற நபருக்கு "அற்புதங்கள்"
பெறச் செய்தது.
#உயிர்த்த ஆண்டவர் மீது வைத்த நம்பிக்கையினால் சீடர்கள் "ஆற்றல் பெறவும், சான்றாக வாழவும், கட்டளைகளை நிறைவேற்றவும், இறை ஆட்சிக்கான பயணத்தில் குருதி சான்றாக வீர மரணம் அடையவும், இன்றைய திருச்சபைக்கு அடித்தளமாகவும்... முடிந்தது.
நானே
"வாய்மை" என்று மொழிந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டோராய் வாழ்வதின் மூலம் திருச்சபை இயங்குகிறது, இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த இயக்கத்தில் தொடர்ந்து இணைந்து இயங்குவோம்.
உண்மையாம் கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை நம்மை…
1. உண்மை : பாவத்தில் இருந்து விடுவிக்கும்.(விடுதலைப் பயணம் 34 :1 - 9)
2. உண்மை : அச்சத்தில் இருந்து விடுவிக்கும். (யோவான் 17 :
6 - 19)
3. உண்மை : தவறான போதனையில் இருந்து விடுவிக்கும். (எபேசியர் 4 :
7 - 16)
மேற்கண்ட மூன்று தலைப்பின் வழியாக ஆண்டவரின் வார்த்தைகளை தியானித்து ஆராய்வோம்.
1. உண்மை : பாவத்தில் இருந்து விடுவிக்கும்.(விடுதலைப் பயணம் 34 : 1 - 9)
கடவுள் மோசேயிடம் நடத்துகின்ற உரையாடல் மிகவும் அற்புதமானது. அந்த உரையாடலில் கடவுள் தமது பண்புகளை மோசையிடம் மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றார்.
மோசே கடவுளை முழுமையாக அறிந்து கொள்கிறார்.
இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று தம்மை வெளிப்படுத்திய கடவுள், தமது பண்பு நலன்கள் வழியாக தம் மக்கள் மீது கொண்டிருக்கிற அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றார்.
A). கடவுளின் மனதுருக்கம்(God's Compassionate Love) தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களிடத்திலே எவ்வண்ணமாக கிரியை செய்கிறது என்பதை மோசே கற்றுக் கொள்கிறார்.
இஸ்ரவேல் மக்களின் தேவைகளில்,
எதிர்பார்ப்புகளில், நம்பிக்கைகளில் எவ்வாறு செயல்பட்டது செயல்படுகின்றது என்பதையும் அறிந்து கொள்கிறார்.
B). கடவுளின் பேரிரக்கம் (God's Gracious Love) இஸ்ரவேல் மக்களை எவ்வாறு மன்னித்தது, தொடர்ந்து மன்னிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்கின்றார். கடவுளுக்கு
விரோதமாக பலமுறை தீங்கிழைத்தும் வழி தவறிடினும் கடவுளின் இரக்ககுணம் அவர்களை எவ்வாறு நேகிக்கின்றது என்பதை அறிந்து கொள்கிறார்.
C). கடவுளின் நீடிய பொறுமை
(Gods Patience Love) இஸ்ரவேல் மக்களிடத்தில் கொண்டிருக்கின்ற உடன்படிக்கை உறவின் (Covenant Relationship with People of God) ஆழத்தை எடுத்துரைக்கின்றது. தண்டிப்பதற்கு காலம் தாழ்த்துகின்ற கடவுளை அது வெளிப்படுத்துகிறது.
D).கடவுளின் தயவு (God's Steadfast Love) இஸ்ரவேலரை எவ்வண்ணமாக தாங்குகிறது,
இறுதிவரை நிலைத்திருக்கிறது என்பதையும் அறிந்து கொள்கிறார்.
E).கடவுளின் மன்னிப்பு (Gods Forgiving Love) இஸ்ரவேல் மக்களிடத்தில் தலைமுறை,
தலைமுறையாய் நிலைத்திருப்பதையும் மோசே அறிந்து கொள்கிறார். பாவத்தில் கோபம் கொண்டிருப்பார் பாவி மேல் கோபம் கொள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.
F). வாய்மையாம் கடவுளை (God the Truth) இறுதியாக மோசே கண்டுகொள்கின்றார். வாய்மை என்பது விடுதலையோடு தொடர்புடையது.
விடுதலை அளிக்கும் கடவுளை மோசே கண்டு கொள்கிறார்.
நீண்ட நெடிய விடுதலை பயணத்தில் கடவுள் தமது பண்புகளை மோசேவுக்கு வெளிப்படுத்தியதின் விளைவாக, கடவுள் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டதோடு மட்டுமல்ல, தொடர்ந்து அவர்களை பாவ அடிமைத்தனத்திலிருந்தும் மீட்கின்றார் என்ற செய்தியை மோசே அறிந்து கொள்கிறார்.
"வாய்மை"
யாம் கடவுள் தெரிந்து கொள்ளப்பட்ட தம் மக்களை தொடர்ந்து மீட்டுருவாக்கம் செய்கிறார் என்ற செய்தியை மோசே வழியாக கடவுள் இன்றைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
தம்மை வெளிப்படுத்திய கடவுளோடு மோசே நம்பிக்கை வைக்கின்றார். கடவுளின் விடுதலைப் பயணத்தில் கடவுளின் இருத்தலை கண்டுகொள்கிறார்.
கடவுள் மீது மோசே கொண்ட ஆழமான நம்பிக்கை விடுதலைப் பயணத்தை நிறைவு செய்வதற்கு வழி நடத்தியது
2. உண்மை : அச்சத்தில் இருந்து விடுவிக்கும். (யோவான் 17 : 6 - 19)
யோவான் நற்செய்தி நூலின் மைய கருத்து,
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."(3
: 16)
இயேசு கிறிஸ்துவின் ஆழமான கருத்துகளில் ஒன்று
"சத்தியத்தை நீங்கள் அறிவீர்கள்,
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்."
யோவான் நற்செய்தி நூலில் இயேசு கிறிஸ்து தம்மை தாமே நானே
"வழி - வாய்மை - வாழ்வு" என்று தம் சீடர்களுக்கும் தம்மை நாடி வந்த மக்களுக்கும் ஆண்டவர் கூறுகின்றார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை "வாய்மை" என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார்.
மோசேவுக்கு கடவுள் எவ்வளவாக தன்னை "வாய்மை" என்று வெளிப்படுத்தினாரோ,
தம் சீடர்களுக்கும் தம்மை நாடி வந்த மக்களுக்கும் தம்மை
"வாய்மை" யாம் கடவுளோடு"
இணைத்து கூறுகின்றார்.
யோவான் நற்செய்தி நூலில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் சீடர்களோடு மூன்று முக்கியமான நிகழ்வுகளில் அவர்களை பங்கெடுக்க செய்கின்றார். இது யோவான்
13 ஆம் அதிகாரம் துவங்கி
17ஆம் அதிகாரம் வரைக்கும் தொடர்கிறது.
ஒன்று அவர்களோடு கடைசி விருந்தில் (Farewell Dinner)பங்கெடுக்கின்றார்,
சீடர்களோடு கடைசி உரையாற்றுகின்றார்(Farewell
Speech), இறுதியாக சீடர்களுக்காக நீண்ட நெடிய ஜெபம்
(Farewell Prayer) செய்கின்றார்.
கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி பகுதியில் ஆண்டவரின் இறை வேண்டல் எவ்வளவு ஆழமானது அற்புதமானது என்பதை எடுத்துரைக்கின்றது.
இதற்கு முன்னாள் தம் சீடர்களோடு தம் பாடு, மரணம், உயிர்ப்பை(Suffering, Death' & Resurrection) மூன்று முறை கூறுகின்றார்.
நீங்கள்
"என்னில் நிலைத்திருங்கள்
என் வார்த்தைகளில் நிலைத்திருங்கள்,
என் சிந்தையில் நிலைத்திருங்கள்,
என் பணியில் நிலைத்திருங்கள்"
என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இயேசு கிறிஸ்துவின் நீண்ட நெடிய இறை வேண்டலில் தம் சீடர்களுக்காக அவர் மனதுருகி வேண்டுகின்றார்.
தம் தந்தையிடம் அவர்களுக்காக பரிந்து பேசுகின்றார்.
தம் சீடர்களின் உயரிய பண்புகளை தம் தந்தையிடம் எடுத்துக் கூறுகின்றார். என் சீடர்கள்
"நீர் எனக்கு தந்தவர்கள்,"
என்னோடு இருக்கவும், இறை ஆட்சிக்கான பயணத்தில் துணை நிற்கவும் நீர் அவர்களை எனக்குத் தந்தீர் என்று தன் தந்தையிடம் குறிப்பிடுகின்றார்.
கொஞ்ச காலம் உங்களிடத்தில் நான் இருக்க மாட்டேன். கடவுள் உங்களுக்காக தேற்றரவாளனை தந்தருள்வார்.
அவர் உங்களை சகல சத்தியத்திற்குள் உங்களை வழிநடத்துவார்.
உலகம் உங்களை பகைக்கும்,
துன்புறுத்தும், அச்சுறுத்தும், தண்டிக்கும், சித்திரவதை செய்யும், நீங்கள் என்னில் நம்பிக்கை வையுங்கள் என்று கூறுகின்றார்.
நான் மறுபடியும் திரும்ப வருவேன் என்று இறை வேண்டல் வழியாக தம் சீடர்களுக்கு குறிப்பால் உணர்த்துகின்றார்.
உலகம் என்னை மேற்கொள்ளவில்லை,
நான் உலகத்தை ஜெயித்தேன் நீங்களும் உலகை ஜெயிப்பீர்கள். என்னில் நம்பிக்கை வையுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறுகின்றார்.
இந்த உலகம் உங்களை பகைக்கும் என்று சொல்வதின் அர்த்தம் இந்த "உலகத்தின் அதிகாரம்,
சமயம் சார்ந்த அடக்குமுறைகள்,
ஆட்சியாளர்களின் வன்முறை ஆட்டங்கள்.."
உங்களை சிதைக்கும்.
எனினும் நீங்கள் சோர்ந்து போகாதீர்கள், அச்சம் கொள்ள தேவையில்லை. நீங்கள் அனாதைகளாக்கப்பட்டவர்கள் அல்ல(Not an Orphan), நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல(Not an Isolated), நீங்கள் கைவிடப்பட்டவர்கள் அல்ல(Not
the Abandoned) என்பதை ஆண்டவர் எடுத்துரைக்கின்றார்.
உலகத்தின் அரசு உங்களை துன்புறுத்தலாம், சிதறடிக்கலாம், ஏன்!
கொலை கூட செய்யலாம் ஆனால் இறையரசு உங்களுக்கானது அது உங்களுடையது என்பதை ஆழமாக இறை வேண்டல் வழியாக கற்றுக் கொடுக்கிறார்.
"வழியாக,
வாய்மையாக" இருக்கின்ற ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் பொழுது
"நிலை வாழ்வு" நிதர்சனம் என்பதை தம் சீடர்களுக்கு இறை வேண்டல் வழியாக உணர்த்துகின்றார்.
"சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"
என்பதின் அர்த்தம், சீடர்களாகிய நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளும் போது உங்களை உலகத்தின் பிடியிலிருந்தும்,
உலகத்தில் அதிகாரங்களின் பிடியிலிருந்தும், அச்சத்தில்
இருந்தும் "வாய்மை எனப்படும் கடவுளும், வாய்மையாக வாழ்ந்த கிறிஸ்துவும்" உங்களை விடுவிப்பார் என்பதே.
"அச்சம்"
அடிமைப்படுத்தும் காரணிகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம்.
தம்மிடம் வந்த திரளான மக்களின் நோய்களை மட்டும் நீக்கவில்லை,
நோயினால் உண்டாக்கியிருந்த "அச்சத்தையும்"
ஆண்டவர் நீக்கி இருந்தார்.
கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும் சீடர்கள் "அச்சத்தில்
இருந்து தங்களை விடுவித்துக் கொள்வார்கள் அல்லது அச்சத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள்"
அவர்கள் தொடர்ந்து இறை ஆட்சிக்கான பயணத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை தம் சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
"வாய்மையாம் இயேசு கிறிஸ்துவில்"
நம்பிக்கை வைக்கும் பொழுது,
அச்சத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோம்.
ஆண்டவரின் அரசாட்சிக்குரியவர்களாக நம்மை மாற்றிக் கொள்கிறோம்.
சத்தியம் உங்களை விடுதலையாக்கும், நீங்கள் மெய்யாகவே விடுதலை அடைவீர்கள்.
கிறிஸ்துவில் ஆழமான நம்பிக்கை கொள்வோம்.
எதிர் வருகின்ற அச்சுறுத்தல்களை சந்திக்கவும், அவைகளை மேற்கொள்ளவும்,
உபத்திரவத்தில் உறுதியாக நிலைக்கவும்,
பாடுகளின் வழியாக மீட்பு என்னும் இயேசுவின் சிந்தையில் நம்மை இணைத்துக் கொள்ளவும்,
நிலை வாழ்வு அனைவருக்கும் உண்டு என்ற நம்பிக்கையில் பலப்படவும் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோம். சத்தியத்தின் பாதையில் தொடர்ந்து வழி நடப்போம்
3. உண்மை : தவறான போதனையில் இருந்து விடுவிக்கும். (எபேசியர் 4 : 7 - 16)
எபேசு திருச்சபை பவுலடியார் உண்டாக்கின திருச்சபைகளில் மிகவும் முக்கியமான ஒரு திருச்சபை ஆகும்.
எபேசு திருச்சபையில் பல்வேறு விதமான தவறான போதனைகள், பழக்க வழக்கங்கள்,
சடங்காச்சாரங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் நிலவி வந்தன.
பவுலடியாரின் தொடர் முயற்சியாலும்,
இறை வேண்டல்களாலும், கடிதங்கள் வாயிலாகவும் சபையில் நிலவி வந்த பல்வேறு விதமான குழப்பங்களை களைவதற்கு தம்முடைய போதனைகள் வழியாக முற்பட்டார்.
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
ஆதலால்,
கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில்,
மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.(எபேசியர்
4 : 15 - 17) என்று பவுல் அடியார் தம் திருச்சபைக்கு ஆலோசனை வழங்குகின்றார்.
எல்லா திருச்சபைகளிலும் இப்படிப்பட்ட பல்வேறு விதமான தவறான போதனைகள்,
முரண்பாடுகள், காணப்பட்டாலும் மனம் திரும்பிய திருச்சபை இந்த எபேசு திருச்சபை மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது,
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்,
நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.(வெளிப்படுத்தினத விசேஷம் 2 : 1-3)
இது எபேசு திருச்சபையை குறித்த யோவான் அவர்களின் நற்சாட்சியாகும்.
கிறிஸ்துவுக்குள் வாழ்வதின் வழியாகத்தான் நிலை வாழ்வு பெற முடியும்.
கிறிஸ்துவுக்குள் வாழ்வது என்பது கிறிஸ்துவின் போதனைகளில் நிலைத்திருப்பது, கிறிஸ்துவின் சிந்தையில் இணைந்து இருப்பது, கிறிஸ்துவின் வழியில் பயணிப்பது, கிறிஸ்துவாகவே வாழ்வதுதான்.
ஓரிரு மக்கள் இரட்சிக்கப்படுவது முக்கியமல்ல, சபையே இரட்சிக்கப்படுவது தான் முக்கியம்.
ஆதித்திருச்சபையில் எபேசு சபை ஒரு சான்றாக வாழ்ந்த ஒரு சபையாகும்.
எபேசு சபையின் சான்றான வாழ்வுக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்ததும்,
கிறிஸ்துவில் அசையா நம்பிக்கை வைத்ததும், கிறிஸ்துவின் அன்பை பெற்றதும் தான்.
எபேசு திருச்சபை "தேற்றரவாளன்" என்கின்ற சத்தியத்தின் ஆவியர் வழியில் தங்களை இணைத்துக் கொண்டதும்,
அவரின் வழிகாட்டுதலில் பயணித்ததும்,
அதன் மூலம் அவர்கள் விடுதலை அடைந்ததும் சான்றாக வாழ்வதற்கு அடித்தளமாக அமைந்தது.
எபேசு திருச்சபை கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்ததின் மூலமாக தவறான போதனைகளில் இருந்து,
வழி நடத்துதலிலிருந்து, தங்களை காத்துக் கொள்ளவும், விடுதலை வாழ்வுக்கு நேராக பயணிக்கவும் வழி நடத்தியது.
இன்றைய திருச்சபைக்கான மாதிரி இவைகளே, கிறிஸ்துவில் அசையா நம்பிக்கை வைப்பதன் மூலமாக, அடுத்த தலைமுறைக்கு இன்றைய திருச்சபை சான்றாக வாழும்.
சத்தியம் நம்மை "தவறான போதனைகளில் இருந்து, தவறான கோட்பாடுகளில் இருந்து, திசை திருப்பும் தீய சக்திகளிடமிருந்தும் நம்மை தற்காக்கும் நம்மை விடுவிக்கும்
# நிறைவாக:
இஸ்ரவேல் மக்கள் தங்கள் அடிமைத்தனத்தில் இருக்கும் பொழுது, கடவுள் மீது வைத்த ஆழ்ந்த நம்பிக்கையினால் அவர்கள் விடுதலைப் பயணத்தை மேற்கொண்டார்கள்,விடுதலை வாழ்வை அவர்கள் அடைந்தார்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் தந்தையின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையினால்,
இறை ஆட்சி என்னும் லட்சிய பயணத்தில் உறுதியாக பயணிக்க முடிந்தது.
சிலுவை மரணம் வந்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ளும் மனத்துணிவை அவருக்குள் தந்தது.
பாடுகள் வழியாகத்தான் மீட்பு என்னும் இலட்சியத்தில் உறுதியாக நிலை நீக்க முடிந்தது.
இயேசுவின் சீடர்கள் கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையினால் அவர்களும் இயேசுவாகவே வாழ முடிந்தது, இயேசுவைப் போலவே பணி செய்ய முடிந்தது, இயேசுவைப்போலவே மரிக்கவும் முடிந்தது.
கடவுள் தம்மை "சத்தியத்தின் வழியிலே"
தம்மை வெளிப்படுத்துகின்றார். மோசையைப் போல நமக்கான விடுதலைப் பயணம் எது என்பதை இனம் கண்டு கொண்டு, விடுதலைப் பயணத்தில் கடவுளோடு கரம் கோர்ப்போம்.
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற உணர்வோடு அச்சத்தில் இருந்து விடுபட்டு, மனத் துணிவோடு இறை ஆட்சி என்னும் இயேசுவின் லட்சிய பயணத்தில் முன் நடப்போம்.
ஒட்டுமொத்த திருச்சபையாக எபேசு திருச்சபையின் மாதிரிகளை உள்வாங்கி நம் கிரியைகளில் சான்று பகர்வோம். இறைவனால் நற்சாட்சி பெறுவோம்.
# "வழி - வாய்மை - வாழ்வாக" உருமாற்றம் அடைவோம்.
#கிறிஸ்துவில் வேரூன்றி வளர்வோம், கிறிஸ்துவில் நிலைத்திருந்து கனிகளை தந்திடுவோம்.
#இருளின் பிடியிலிருந்து, அச்சத்தின் பிடியிலிருந்து, பாவ அடிமைத்தனத்தின் பிடியிலிருந்து நம்மையும் வரும் தலைமுறையையும் விடுவிப்பதற்கு சத்தியத்தின் வழியில் பயணிப்போம்.
இந்த கீர்த்தனை பாடலை மனம் ஒன்றி பாடுவோம்...
இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .
சரணங்கள்
இயேசுவின் நாமத்தின் மேலே -என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன்.-நான்
இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு
இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக ...
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக....
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்.
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️


Comments
Post a Comment