Commissioning by the Risen Lord

உயிர்த்த ஆண்டவரால் பணியமர்த்தப்படல்

-------------------------------



திருமறை பகுதி

யோவான் 20 : 19 -  23

உட்புகும் முன்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பணியை உணர்வு பூர்வமாக விளக்கி காட்டி நம்மை மறு அர்ப்பணிப்புக்கு தூண்டும் மிகச் சிறந்த பாடல்...


ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்

தூண்டும் உன் ஆவி அருள்வாய்


என்னைத் தியாகிக்க ஏவும்

உன் அனல் மூட்டிடுவாய்

இந்நிலம் தன்னில் மாளும்

மனுமக்கள் மீட்பிற்காக...


பதவியேற்றலுக்கும் பணி ஏற்றலுக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. பதவி என்பது நிரந்தனமான ஒன்று அல்ல ஆனால் பணி என்பது நிரந்தரமான ஒன்று.


Commissioning என்பதை  பணியமர்த்தப்படல், பொறுப்பேற்றல் என்று கூட நாம் புரிந்து கொள்ளலாம், அது மிகவும் அர்த்தம் நிறைந்து ஒன்றாக இருக்கும்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது லட்சியமான இறை ஆட்சியை நிறுவுவதற்கு, தம்முடைய சீடர்களை தெரிந்து கொண்டார். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். தம்மைப் போல பணி செய்யும் படியான ஆற்றலையும், அதிகாரத்தையும் வழங்கினார். 


மேலும் தம் சீடர்களின் வட்டத்தை ஆண்டவர் விரிவாக்கி இன்னும் 70 பேருக்கு மேலாக அவர்களைத் தெரிந்து கொண்டு, அவர்களை தம் திருப்பணிக்கு என்று அவர்களை பணியமர்த்தினார். 


உயிர்த் ஆண்டவர் தமது சீடர்களை சந்தித்து அவர்களை வலுவூட்டி, ஆற்றல்படுத்தி, இறை ஆட்சியின் அவசியத்தை உணர வைத்து, அவர்களை இறை ஆட்சிக்கான பணிக்கு அவர்களை பணி அமர்த்துகின்றார். 


ஆண்டவர் இயேசுவின் பாடு, மரணம், உயிர்பிக்கு பின்பதாக பணியமர்த்தப்பட்ட அத்தனை சீடர்களும், இயேசுவைப் போன்றே வாழ்ந்து, இயேசுவின் சிந்தையை அணிந்து, இயேசுவைப் போலவே மரித்து நம் அனைவருக்கும் சான்றாக இருந்து வருகிறார்கள்.


1. இறை பணிக்கான நியமனங்களை பெற்றுக் கொண்டார்கள்.

2. இறை உறவுக்கான உடன்படிக்கையை சொந்தமாக்கி கொண்டார்கள்.

3. ⁠ இறை ஆட்சிக்கான உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார்கள்.


மேற்கண்ட தலைப்புகளின் வழியாக திருமறையை தியானிப்போம்.


1. இறை பணிக்கான நியமனங்களை பெற்றுக் கொண்டார்கள்.


இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் பயணம் ஒரு நீண்ட நெடிய விடுதலை வரலாற்றை கொண்டதாக அமைந்தது. 


இயேசு கிறிஸ்துவின் இலட்சிய பயணமும் உயிர்ப்பில் துவங்கி  இன்று வரை நீள்கிறது.


உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களை சந்தித்து, அவர்களோடு பயணித்து,  அவர்களோடு உரையாடி, உணவருந்தி இறுதியில் தமது பணியை அவர்களுக்கு பகிர்ந்து பணி அமர்த்தினார்.


கலிலேயா மலையில் உயிர்த் தாண்டவர் தம் சீடர்களுக்கு இறை பணிக்கான நியமனங்களை வழங்கி அவர்களை அனுப்பினார்.


உயிர்த்த ஆண்டவரின் லட்சிய பயணத்தில் சீடர்கள்


a). கடவுளின் வார்த்தையை பெற்றுக் கொண்டார்கள்.(They received Word of God)

> நற்செய்தி பகிர, நற்செய்தியாய் வாழ...


b). கடவுளின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டார்கள். (They received Authority of God)

> அதிகாரம் ஆளுகை செய்வதற்கு அல்ல அடிமைப் பணி செய்வதற்கு...


c). கடவுளின் ஆற்றலை பெற்றுக் கொண்டார்கள். (They received Power of God)

> ஆற்றல் வலுவுள்ளோருடன் இணைத்துக் கொள்வதற்கு அல்ல வலுவற்றோருடன் இணைத்துக் கொள்வதற்கு...

d). கடவுளின் ஆன்மாவை பெற்றுக் கொண்டார்கள். (They received The Spirit of God)

> இயேசுவை பின்பற்றுவதற்காக அல்ல இயேசுவாகவே வாழ்வதற்கு...


உயிர்த்த ஆண்டவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட நியமனங்கள் இயேசு கிறிஸ்துவின் சீடர்களை உலகமெங்கும் உந்தி தள்ளியது.


அன்று கலிலேயாவில் துவங்கின திருப்பணி தோமாவின் வழியாக இந்தியாவையும் வந்தடைந்தது..


2. இறை உறவுக்கான உடன்படிக்கையை சொந்தமாக்கி கொண்டார்கள்.


இஸ்ரவேல் மக்களோடு கடவுள் செய்து கொண்ட உடன்படிக்கை அவர்களை இறை மக்களாக உருவாக்கியது. கடவுளின் சொந்த மக்களாக உலகிற்கு முன்னிறுத்தியது.


உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களோடு செய்து கொள்கின்ற இந்த உடன்படிக்கை ஆழமான நட்புறவுக்கு சான்றாக அமைந்துள்ளது.


உலகத்தின் முடிவு பரியந்தம் சதா நாட்களிலும் நான் உங்களோடு இருப்பேன்  என்ற உடன்படிக்கை இயேசு கிறிஸ்துவின் சீடர்களை நிறைவாழ்வுக்கு வழி நடத்தியது.


இயேசு கிறிஸ்து தம் சீடர்களோடு மேற்கொண்ட இந்த புதிய உடன்படிக்கை உறவு சீடர்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.


a). அஞ்சி இருந்தவர்கள் அச்சத்தை தொலைத்தார்கள்.

> தைரியமாக அந்த ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள் என்ற சொல்லும் துணிச்சலை பெற்றார்கள்


b). முடங்கி கிடந்தவர்கள் முன்னேறி சென்றார்கள்.

> கடல் கடந்தார்கள், கண்டங்களை தாண்டினார்கள், உலகமெங்கும் பயணித்தார்கள்.


c). சாவுக்கு பயந்தவர்கள் சாவை துணிச்சலாக ஏற்றுக் கொண்டார்கள்.

> இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எங்கெங்கெல்லாம் பணி செய்தார்களோ அங்கெல்லாம் அவர்கள் சாவை கண்டு பயப்படாமல் வீர மரணம் அடைந்தார்கள்.


d). சிலுவைக்கு பயந்து ஓடினவர்கள் சிலுவையை சுமந்தார்கள்.

> இயேசுவின் பின்னே போகத் துணிந்தவர்கள் ஒருபோதும் பின்வாங்கினது இல்லை என்ற வரலாற்றை கட்டி அமைத்தார்கள்.


e). இயங்க மறுத்தவர்கள் மாபெரும் இயக்கத்தை கட்டியமைத்தார்கள்.

> பேதுருவின் அருளுரையை கேட்ட மக்கள் ஒரே நாளில் 3000 பேர் திருமுழுக்கு எடுத்தார்கள். இயக்கம் திரள் இயக்கமாக மாறினது.


உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களோடு இறுதி வரைக்கும் உங்களோடு இருப்பேன் என்ற உடன்படிக்கை உறவு சீடர்களை இயங்க வைத்தது., உலகை மாற்றினது, திருச்சபைகள் வளர்வதற்கு வழியானது.


இயேசுவின் உடன்படிக்கை உறவு  சீடர்களோடு மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்களோடு மட்டுமல்ல,  உலகம் அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் உறவின் வட்டத்துக்குள் கொண்டு வந்தது.


3. ⁠ இறை ஆட்சிக்கான உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார்கள்.


நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று  யோசுவா உறுதி எடுத்தார். அதற்கு மறுமொழியாக இஸ்ரவேல மக்களும் நாங்களும் அப்படி சேவிப்போம் என்று உறுதி ஏற்றுக் கொண்டார்கள்.


உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்கு இறை ஆட்சிக்கான பயணத்தை துவக்கி வைத்த பொழுது அவர்கள் ஒரு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார்கள்.


இறை ஆட்சிக்கான பயணத்தில் சீடர்கள் அத்தனை பேருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சம அளவில் தன் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தார். 


இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு கொடுத்த இந்த அதிகாரம் இறை ஆட்சி குறித்த புரிந்து கொள்ளுதலுக்கு வழிவகுத்தது. 


இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் வெளிப்படையாக உறுதிமொழியை ஏற்காவிட்டாலும் அவர்கள் வாழ்வில் வெளிப்பட்டதின் வழியாக அவர்கள் என்ன உறுதி ஏற்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 


a). அதிகாரத்தை மறுத்து அடிமைப் பணி செய்வது.

> வலது பாரிசத்தில் ஒருவரும் இடது பாரிசத்தில் ஒருவரும் என்ற நிலையை மறுத்து, பாடுபடும் தாசன் ஆக பணி செய்வது என்ற இயேசுவின் வாழ்வியலுக்கு தங்களை ஒப்பு கொடுத்தார்கள்.


b). ஆதாயங்களுக்காக அல்ல இறை ஆட்சிக்காக இழப்பது.

> நீண்ட அங்கிகளை தரித்துக்கொண்டு சமூகத்தில் உயர்ந்த இடத்தை பெறுவதற்காக அல்ல மாறாக இறை ஆட்சிக்காக தம் வாழ்வையும் இழப்பதற்கு அர்ப்பணித்தார்கள். 


c). சொத்து சேர்க்க அல்ல இறை சொந்தங்களை சேர்ப்பது. 

> வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை, நசரேனாகிய இயேசுவின் நாமம் மட்டுமே இருக்கிறது, என்று சொல்லும் உயர்ந்த நிலைக்கு தங்களை மாற்றிக் கொண்டார்கள். 

d). அடிமைப்படுத்துவதற்கு அல்ல விடுவிப்பதற்கு.

> நியாயப்பிரமாண சட்டங்கள் மக்களை மேலும் அடிமைகளாக்கியது எனவே நிறைவாழ்வுக்கு நேராக சமூக, பொருளாதார, அரசியல் ... போன்ற அனைத்து காரியங்களிலிருந்தும் மக்களை விடுவிப்பது என்ற உறுதி செயலில் வெளிப்பட்டது. 


e). அடக்குமுறைகளுக்கு எதிர்த்து நிற்பது.

> தங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமல் இருக்க முடியாது பேசியே திரும்பவும் என்ற உறுதியை அவர்களுக்குள் விதைத்தது.


f). அடிமைத்தனங்களை அடித்து நொறுக்குவது.

> யூத பாரம்பரியத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு,  கடவுளின் பாரம்பரியத்துக்குள் வரவைத்து, கடவுளை பார்வையில் எது தூய்மை - தீட்டு என்ற சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் விதைக்க வழி செய்தது. 


g). சமூக மாண்பு,சமூக நீதி காப்பது, சமத்துவத்தை உருவாக்குவது.

> கிறிஸ்துவுக்குள் ஆண் என்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை, அடிமை என்றுமில்லை சுயாதீனன் என்றுமில்லை, ஏழை என்றுமில்லை பணக்காரர் என்றுமில்லை, கருப்பர் என்றுமில்லை வெள்ளையர் என்றும் இல்லை... எனும் விடுதலைக் கோட்பாடுகளை செயல்படுத்த வழிமுறை செய்தது.


h). மனித நேயம் மண்ணில் மலர மண்ணுக்கு உரமாகுவது.

> கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது தனித்தே இருக்கும், செத்ததேயாகில் அது பலன் தரும் என்ற திரு வார்த்தைகளுக்கு ஏற்ப, மனித நேயம் மண்ணில் தழைப்பதற்கு மண்ணுக்கு உரமாவது என்ற உறுதி சீடர்களின் வாழ்வில் வெளிப்பட்டது. 


ஒவ்வொரு சீடர்களின் மரணமும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் போன்றே அமைந்திருப்பதை நாம் காணலாம். 


உருது ஏற்ற சீடர்கள் இறுதிவரை நிலைத்து நின்றார்கள் இறை ஆட்சிக்கான வழித்தடங்களை நிறைவாக அமைத்துக் கொடுத்தார்கள்.


அன்று சீடர்கள் வகுத்துக் கொடுத்த வழித்தடத்தில் இன்றும் திருச்சபையாக,  திருப்பணியாளர்களாக, அருள் தொண்டர்களாக நாமும் பயணத்தை தொடர்கின்றோம்.


நிறைவாக


உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறுதி உரைகள் சீடர்களை வீறு கொண்டு எழச்செய்தது....


உயிர்த்த ஆண்டவர் சமைத்த உணவு சீடர்களுக்கு திருவிருந்தாக அமைந்தது....


உயிர்த்த ஆண்டவரின்  கூட்டுறவு  திருப்பணியில் இயங்குவதற்கு மாபெரும் இயக்கு சக்தியாக அமைந்தது.


நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு புத்தகத்தில் "போ அல்லது அனுப்பு"  என்ற வாசகம் இருக்கும்.  இரண்டும் அவசியமானவைகள் இருப்பதற்கில்லை ஆனால் நமது தெரிவு "போ"  என்பதை தவிர்த்து  "அனுப்புவதையே" சார்ந்திருக்கிறது. 


உயிர்த்த ஆண்டவரின் பணி அமரத்தல் என்றோ நடந்ததாக இருந்தாலும் இன்றும் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி திருச்சபைகளில், தொண்டு நிறுவனங்களில் சேவை மையங்களில் பணி அமர்த்தல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. 


அன்றைய சீடர்களின் வழித்தோன்றல்களால் ...,


> இன விடுதலை பெற முடிந்தது, 


> சமயங்களில் மறுமலர்ச்சி உண்டாயிற்று, 


> சமூகத்தில் சீர்திருத்தங்கள் உருவாகின, 


> சாதிய விடுதலைக்கு வழிகள் பிறந்தன.


> அடிமைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளிகள் வைக்கப்பட்டன.


> கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்றவைகள் தலைமுறைகளுக்கு கிடைக்கப்பெற்றன.


இன்றைய திருமறை பகுதியை தியானிக்கின்ற நாம் ஒவ்வொருவரும், இன்று நம்மை அர்ப்பணிப்போம்,  இயேசுவின் இறை ஆட்சிக்கான திருப்பணி பயணத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வோம், இறை ஆட்சி அமைப்பதற்கு என உறுதி எடுத்து உயிர்ப்புடன் செல்வோம்.


இறை ஆசி உங்களோடு இருப்பதாக ...

இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...


நட்புடன் 

உங்கள்

Rev. Augusty Gnana Gandhi

Ariyalur Pastorate

Trichy-Tanjore Diocese

Comments

Post a Comment