"MISSION WITH CHRIST'S SPIRIT"- Rev. Augusty Gnana Gandhi

 கிறிஸ்துவின் ஆற்றலுடன் அருட்பணி



# திருமறைப் பகுதிகள்:

2 அரசர்கள் 2 : 9 - 16

திருத்தூதுவர் பணிகள் 7 : 54 - 60

மத்தேயு 28 : 16 - 20

திருப்பாடல்கள் 105 : 1 - 11

 

# உட்புகும் முன்:

ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்

தூண்டும் உன் ஆவி அருள்வாய்

 

என்னைத் தியாகிக்க ஏவும்

உன் அனல் மூட்டிடுவாய்

இந்நிலம் தன்னில் மாளும்

மனுமக்கள் மீட்பிற்காக...

என்ற கீர்த்தனையை இமை மூடி, இதயபூர்வத்துடன், உணர்ந்து பாடும் பொழுது,  நம்மை அறியாமலேயே அருட்பணிக்கான அழைப்பும், அர்ப்பணிப்பும் நமது உள்ளத்தில் இருந்து எழும்.

திருச்சபை வரலாற்றில் அருட்பணி இயக்கங்களின் எழுச்சி (Emerging of Mission Movements) உலகத்தில் மாபெரும் மாற்றங்களையும் தாக்கங்களையும் உருவாக்கியது

அருட்பணி இயக்கங்களின் பணிகள் உலகமெங்கும் விரிவடைந்தன. திருச்சபைகளின் ஆன்மீகமும், ஒப்படைப்பும், எழுச்சியும் பல திருத்தொண்டர்களை உருவாக்கி உலகமெங்கும் பயணிக்க வைத்தது.

 

🍎திருச்சபைகளின் எல்லைகள் விரிவடைந்தன(New  Horizons of Churches)

🍎எல்லைகள் அற்ற திருச்சபைகள் உருவாக்கப்பட்டன.(Emerging of Borderless Churches)

🍎புதிய அருட்பணி செயல்பாடுகள் நடைபெற்றன( New Paradigm of Mission)

🍎திருச்சபை மைய திருப்பணி என்னும் நிலையிலிருந்து கிறிஸ்து மைய திருப்பணி எனும் நிலையை அடைந்தது(Church Centred Ministry Transformed into Christ centred Ministry).

🍎நற்செய்தி மயமாக்கல் என்னும் நிலையிலிருந்து விடுதலை மயமாக்கல் என்னும் நிலையை உண்டாக்கியது(Salvation into Liberation).

 

திருச்சபை பணிகளும் மாற்றங்கள் பெற்றன. இவைகள் ஆன்மீகம் பற்றிய புரிந்து கொள்தலுக்கும்(New Spirituality), சமய சீர்திருத்தத்திற்கும் (Renaissance in Religion) ), சமூக முன்னேற்றத்திற்கும் (Social Development) வழி வகுத்தன.

 

1. புறப்பட்டுச் செல்லுங்கள் : மையங்களை நோக்கி அல்ல விளிம்புகளை நோக்கி( Go Forth : Not to Centre but to Periphery)

2. சீடர்களை உருவாக்குங்கள் : பக்தர்களாக வாழ அல்ல  பணியாட்களாய்  வாழ (Make Discipls : Not for  Devotees but for Servants)

3. திருமுழுக்கு கொடுங்கள் : சமய வளர்ச்சிக்காக அல்ல சமூக மலர்ச்சிக்காக ( Do Baptism : Not for Conversion but for Transformation)

மேற்கண்ட தலைப்புகளின் வழியாக திருமறைப் பகுதிகளை கருத்தோடு நாம் தியானிப்போம்.

 

1. புறப்பட்டுச் செல்லுங்கள் : மையங்களை நோக்கி அல்ல விளிம்புகளை நோக்கி( Go Forth : Not to Centre but to Periphery)

ஆண்டவரும் மீட்பரும் ஆகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பதாக தம்முடைய சீடர்களுக்கு ஆற்றல் தந்து அருட்பணி செய்ய அவர்களை வழி அனுப்புகின்றார்.

இயேசு கிறிஸ்து தம் சீடர்களை நோக்கி "நீங்கள் புறப்பட்டு போங்கள்"  என்று பணிக்கின்றார்.

எங்கே புறப்பட்டு போவது?  என்ற கேள்வியை எழுப்பி தமது செயல்பாடுகளையே பதிலாக தம் சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்.

எங்கே போவது? என்ற கேள்வியை சீடர்கள் இயேசு கிறிஸ்துவிடம் எழுப்பவில்லை, காரணம் அவர்களுக்கு "எங்கே செல்ல வேண்டும்" என்பதை இயேசு கிறிஸ்து தமது மூன்றரை ஆண்டு கால பணியில் கற்றுக் கொடுத்திருக்கின்றார்.

இயேசு கிறிஸ்துவின் திருப்பணிகள் "மையங்களை நோக்கி அல்ல விளிம்புகளை நோக்கியே" அமைந்திருந்ததை சீடர்கள் அறிந்திருந்தார்கள்.

" செல்வந்தர்களை மையமாகக் கொண்டு அல்ல ஏழைகளை" கருத்தில் கொண்டு இயேசுவின் திருப்பணிகள் அமைந்திருந்தது என்பது சீடர்களுக்கு நன்கு தெரியும்.

இயேசு கிறிஸ்துவின் இறை ஆட்சிக்குரியவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்ட கலிலேயர்கள், சமாரியர்கள், ஏழைகள், தரித்திரர்கள், கைம்பெண்கள், சிறார்கள், அடிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், ஒடுக்கப்பட்டோர், தீண்டாமை கொடுமைக்கு உட்படுத்தப்பட்டோர், ஓரங்கட்டப்பட்டுள்ளவர்கள், அன்னகர்கள், அண்ணகர்கள் ஆக்கப்பட்டவர்கள்.. இவர்களுக்கே அருட்பணி  என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

"உலகில் பல்வேறு இடங்களில் உள்ள கலிலேயாவை" நோக்கி இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் கிறிஸ்துவின் ஆற்றலோடு அருட்பணிக்கு தங்களை ஆயத்தமாக்கி கொண்டார்கள்.

இயேசு கிறிஸ்துவின் சிந்தையை அணிந்தவர்களாக, கருத்தில் இணைந்தவர்களாக, கரங்களை இணைத்தவர்களாக "இறை ஆட்சியை அமைப்பதற்கு, ஏழை ஜனங்களின் இறையரசில் உலகோரை சேர்ப்பதற்கு" அருட்பணி தளங்களை நோக்கி பயணித்தனர்.

கிறிஸ்துவின் ஆற்றல் சீடர்களை அருட்பணி செய்வதற்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போல மரிப்பதற்கும் அவர்களை உருவாக்கியது.

பாடுகளின் வழியாகத்தான் இறை ஆட்சி என்பதை உள்வாங்கினவர்களாக, சிலுவை பாடுகளை ஏற்கவும், சிலுவை சுமக்கவும், கிறிஸ்துவின் வழியாக வரும் மீட்பை  அனைவரும் பெற்றிடவும் தங்களை கருவிகள் ஆக்கிக் கொண்டார்கள்.

இயேசு கிறிஸ்து அளித்த ஆற்றல் சீடர்களை கடல் கடந்து செல்வதற்கும், கண்டங்களை தாண்டி செல்வதற்கும் பெரும் துணையாய் அமைந்திருந்தது.

இயேசு கிறிஸ்துவின் வழியில் சென்றால் கொலை செய்யப்படுவோம், அச்சுறுத்தல்களை சந்திப்போம், சித்திரவதைகள் உண்டாகும்.. என்பதை தெளிவாக அறிந்து இறை பணிக்கு தங்களை அர்ப்பணித்தார்கள்.

இந்தியா ஒரு தீபகற்பம். இங்கு பல சமய பின்னணியங்கள், சித்தாந்தங்கள், கோட்பாடுகள், செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள்..  நடைமுறையில் இருந்தன.

இவைகளின் வழியாக பல வன்முறைகள், அடக்குமுறைகள், ஒடுக்குதல்கள், அடிமைத்தனங்கள், தீண்டாமை கொடுமைகள், சாதிய வன்மங்கள் இந்தியாவில் வேரூன்றி இருந்தன.

கிறிஸ்துவின் ஆற்றலோடு அருட்பணி புரிய இந்தியா வந்த "தோமையர்"அவர்களின் அருட்பணி, சமூக சீர்கேடுகளை எதிர்த்தது, விளிம்பு நிலை மக்களுக்கு உறுதுணையாக நின்றது, மீனவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியது, மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்தது, சமய அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, ஏழைகள் விழிப்புணர்வு அடைய  செய்தது.

தூய. தோமா பாரம்பரியம்(St.Thomas Tradition) அன்றைய இந்து சமய அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கமாக அது வளர்ந்தது.

மாபெரும் திருச்சபை ஒன்று தோமையார் அவர்களால் உருவானது. அந்த திருச்சபை இயக்கம் அன்றைய காலகட்டங்களில் எதிர் இயக்கமாக(Counter Movement)  ஒடுக்குவோருக்கு எதிராக ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக அமைந்திருந்தது.

விளிம்பு நிலையை நோக்கிய அவரின் திருப்பயணமும், திருப்பணியும் இந்தியாவில் பல அதிர்வலைகளை உண்டாக்கியது. இதுவரை ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் திமிரி எழுவதற்கு வழித்தடங்களை அமைத்தது, அறியாமை இருளில் கிடந்த மக்களை வெளிச்சத்தின் பாதையில் நடக்கச் செய்தது.

விளிம்பு நிலை மக்களுக்கான திருப்பணியில் தோமையார் அவர்கள் குருதி சான்றாக வீர மரணம் அடைந்தார்கள்.

"பரங்கி மலையை கொல்கதா மலையைப் போல வடிவமைத்தார்."இயேசுவுக்கு கொல்கதா மலை சிலுவை சாவுக்கு வித்திட்டது. தோமையார் அவர்களுக்கு பரங்கிமலை குருதி சான்றாக மரிப்பதற்கு வித்திட்டது.

கிறிஸ்துவின் ஆற்றல் அன்றைய சீடர்களை மட்டுமல்ல அவர்களால் உருவாக்கப்பட்ட திருச்சபைகளையும், திருச்சபை அன்பர்களாகிய நம்மையும் இன்றைய கலிலேயாவை நோக்கி புறப்பட நம்மை அழைக்கிறது.

 

2. சீடர்களை உருவாக்குங்கள் : பக்தர்களாக வாழ அல்ல  பணியாட்களாய்  வாழ (Make Discipls : Not for  Devotees but for Servants)

உயிர்த்த ஆண்டவர் சீடர்களை ஆற்றல் படுத்தி விளிம்பு நிலை நோக்கிய பயணத்திற்கு அவர்களை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், இயேசுவின் இறை ஆட்சி இலட்சியத்தை நிறைவேற்றும் சீடர்களை உருவாக்குவதற்கும் அவர்களை வழிநடத்தியது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது பணி காலங்களில் அவர் ஆலயம் சென்றார்,  வழிபடுவதற்காக மட்டுமல்ல வழி நடத்துவதற்காக.

இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணம் சட்டங்களை நன்கு கற்று அறிந்திருந்தார். நியாயப்பிரமாண சட்டங்களில் ஆழமான உட்கருத்தை நடைமுறைப்படுத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

நியாயப்பிரமாண சட்டங்களில் ஆழமான இறையியல்களான "இறை அன்பை" தமது செயல் வடிவங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டே இருந்தார்.

பல எதிர்ப்புகள் வந்த போதும் அயராது, அரும்பாடு பட்டு, தடைகளை உடைத்தெறிந்து, அவைகளை தாண்டி தமது லட்சிய பாதையில் பயணித்துக் கொண்டே இருந்தார்.

இயேசு கிறிஸ்துவால் அற்புதம் பெற்ற அனேகர் விளிம்பு நிலை மக்களே, ஒடுக்கப்பட்டோர்களே.

இயேசு கிறிஸ்துவின் சீரிய சிந்தனைகளாலும் செயல்பாடுகளாலும் அவரின் கருத்துகளாலும் உள்வாங்கப்பட்டவர்கள்,நன்மை பெற்றவர்கள், இயேசுவின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 

அவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவினால் ஆற்றல் அடைந்தவர்களாக அன்றைய அநீதிகளுக்கு,  அடக்குமுறைகளுக்கு எதிராக இயேசுவோடு களத்தில் நின்றவர்கள்.

இயேசு கிறிஸ்து உருவாக்கிய இந்த மாபெரும் இயக்கம் அன்றைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும், சமய வன்முறையாளர்களுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் மாபெரும் அச்சுறுத்தலாகவே அமைந்திருந்தது.

உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்கு சொல்லுகின்ற "நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டு போய் அனைவரையும் சீடராக்குங்கள்" என்கின்ற கட்டளை சமய சீர்திருத்தத்திற்கு மட்டுமல்ல சமூக மாற்றத்திற்கு வித்திடும் அறைகூவலாக அமைந்திருந்தது.

உயிர்த்த கிறிஸ்துவின் ஆற்றல் பேதுருவை அடக்குகின்ற அரசு அதிகாரங்களுக்கு எதிராக, பிளவுபடுத்துகின்ற சமய தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க வழிநடத்தியது.

நீங்கள் அந்த ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள் என்று தைரியத்தோடு பேசும் படி செய்தது. அவரின் உரையினால் 3000 பேர் இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தில் திருமுழுக்கு பெற்று சீடர்களாக தங்களை இணைத்துக் கொள்ளும்படி செய்தது.

இயேசு கிறிஸ்துவின் இயக்கம்(Jesus Movement) மாபெரும் இயக்கம் திரள் இயக்கமாக (Mass Movement) உருவெடுத்தது.

உயிர்த்த ஆண்டவரின் ஆற்றல் பவுல் அடியாரை புற இனத்து மக்களின் நற்செய்தியாளராக உருவாக்கியது. பல திருச்சபைகளை உருவாக்க விளைந்தது, அந்த திருச்சபைகள் பல திரு தொண்டர்களை, பல பணியாளர்களை,அருட்தொண்டர்களை உருவாக்கியது.

ஆண்டவரின் ஆற்றல் அவரின் அடியவரான யோவானை பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரின் கடிதங்கள் அவரின் எழுத்துக்கள் சமூக மாற்றத்திற்கு வித்திட்டன.

ஆண்டவரின் சீடர்கள் தமது பணிகளாலும், தமது கருத்துக்களாலும், தமது கடிதங்களாலும், தமது போதனைகளாலும்,  உருவாக்கப்பட்ட ஒவ்வொரு இறை அன்பர்களும்,  ஆதி திருச்சபைகளும் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் பயணிக்க ஆரம்பித்தன.

திருச்சபை பக்தி இயக்கமாக உருவெடுத்தது.  இறை அன்பர்கள் வீடுகள் தோறும் அப்பங்கள் பிட்டு, தங்கள் உடைமைகளை பகிர்ந்து கொண்டு, அனைவருக்கும் அனைத்தும் என்கின்ற சமத்துவ நெறியோடு வாழ்ந்தார்கள்.

திருச்சபைகள் வளர்ந்து பெருகின என்று சொல்வதைக் காட்டிலும் இயக்கங்கள் வளர்ந்தன, அருட்பணிகள் பல தோன்றின,  பல அருட்பணித் தலங்கள் அடையாளம் காட்டப்பட்டன, பல அருட்பணி முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, பல விவாதங்கள் நடைபெற்றன, விழிப்புணர்வுகள் பெருக ஆரம்பித்தன.

கடவுளின் ஆற்றல் எலியாவை திருப்பணி ஆற்ற வைத்தது. எலியாவின் ஆற்றல் எலிசாவை சீடத்துவ பணிக்கு வழி நடத்தியது.

எலியா எலிசா இவர்களின் திருப்பணியும் அன்றைய சமயம் சார்ந்த போலி தீர்க்கதரிசிகளை அடையாளம் காட்டவும் சமயம் சார்ந்த அரசு செய்திகளை தட்டிக் கேட்கவும் குரல் அற்றோரின் குரலாக ஒலிக்க அவர்களை வழிநடத்தியது.

சமயங்கள் எவ்வாறு அரசியலமைப்பை தங்கள் கையில் வைத்துள்ளன, சமயங்களுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பின் மூலயமாக எவ்வாறு போலி தீர்க்கர்கள் உருவாக்கப்படுகிறார்கள், அவர்கள் சமூகத்தில் எவ்வாறு சிறப்பிடம் பெறுகிறார்கள், மக்களை எவ்வாறு அறியாமையில் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பதை அறிந்த எலிசா தம் சீடத்துவ செயல்பாடுகள் வழியாக அழித்து ஒழிப்பதை முந்தின ஏற்பாட்டு பகுதி நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

எலிசாவின் அருட்பணி மாதிரியை இன்றைய சீடைத்துவதற்கான முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். சீடத்துவம் என்பது வெறும் பக்தர்களாக வாழ்வதல்ல, மாறாக பணியாற்றுவது, இறை ஆட்சிக்கு நேராக மக்களை வழிநடத்துவது என்பதை கற்றுக் கொடுக்கிறது.

பக்தர்களாக வாழ்வதில் ஒரு சுகம் இருக்கிறது, அது மக்களை வழிபடுவதற்கு மட்டும் வழி நடத்துகின்றது. மக்களை பார்வையாளர்களாக மட்டும் வைத்திருக்கிறது பணியாற்ற தடுக்கின்றது.

சீடத்துவம் என்பது செயல்பாடுகளால் அடையாளம் காட்டப்பட வேண்டியவை. அது அனேக அடையாள செயல்களை இயேசு கிறிஸ்துவை போல செய்வதற்கு வழி நடத்துபவை.

மனிதகுமாரன் ஊழியம்  கொள்வதற்கு வராமல் ஊழியம் செய்வதற்கு வந்தார் என்பதை உணர்வில் கொண்டவர்களாக, பக்த கோடிகளாக வாழாமல் இயேசுவின் அடியவர்களாக, சீடர்களாக,  திருத்தொண்டர்களாக பணியாற்ற,  சேவை புரிய, வாழ அழைக்கப்பட்டு இருக்கின்றோம்.

"அனைவரையும்" சீடராக்குங்கள் என்பதில் பல அர்த்தங்கள் உள்ளன. அனைவரையும்... கட்டளை பால், இன, நிற, மத, சாதிய, மொழி, இடம், வர்க்கம், தொழில்..., சார்ந்த வேறுபாடுகளை(All kinds of Discrimination)  களைந்தெறிய செய்வதற்கான சீடத்துவத்திற்கு விடும் அழைப்பாகும்.

கிறிஸ்துவின் ஆற்றல் அன்றைய சீடர்களை மட்டுமல்ல இன்றைய திருச்சபை ஆகிய நம்மையும் ஆண்டவரின் அடிச்சுவட்டை பின்பற்றுகின்ற ஒவ்வொருவரையும் ஆண்டவரின் சீடராக பணியாற்ற அழைக்கின்றது.

 

 

3. திருமுழுக்கு கொடுங்கள் : சமய வளர்ச்சிக்காக அல்ல சமூக மலர்ச்சிக்காக ( Do Baptism : Not for Conversion but for Transformation)

உயிர்த்த ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்று பிதா, குமாரன், தூய ஆவியரின் திருப்பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் என்பது.

இயேசு கிறிஸ்து தம் பணியின் போது திருமுழுக்கு கொடுத்தாரா? கொடுக்கவில்லையா?  என்பது மாபெரும் விவாத பொருளாகவே இருந்து வருகிறது.

இருப்பினும் அவரின் கட்டளைகளில் திருமுழுக்கும் ஒன்று என்பதை நாம் திருமறைப் பகுதியின் வழியாக நாம் அறிகின்றோம்.

தம் சீடர்களுக்கு இதை ஒரு கட்டளையாக கூறுவதின் நோக்கத்தை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இயேசு கிறிஸ்து முழுக்கு முனிவர் யோவான் அவர்கள் மூலமாக திருமுழுக்கு பெற்றதை நாம் நன்கு அறிவோம். யூத பாரம்பரியங்களில் திருமுழுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

எப்படிப்பட்ட திருமுழுக்கு கொடுக்க வேண்டும் என்பதை விட, திருமுழுக்கு கொடுப்பவரின் ஆற்றலை பெற்றிருக்க வேண்டும் என்பதே மையக்கருத்தாக அமைந்திருக்கிறது.

இயேசு கிறிஸ்துவுக்கு திருமுழுக்கு கொடுத்த முழுக்கு முனிவர் யோவான் அவர்களின் உடையில் மாற்றம் இருந்தது, உணவில் மாற்றம் இருந்தது,  உணர்வில் மாற்றம் இருந்தது. 

தம் சீடர்களுக்கு திருமுழுக்கு கொடுங்கள் என்பதின் அர்த்தம், முழுக்கு முனிவர் யோவான் அவர்களைப் போல வாழ வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

கொடுக்கப்பட்டுள்ள முந்தின ஏற்பாட்டு நூலில் எலிசா அவர்கள் எப்படி இருப்பார் என்பதை அரசன் கேட்கும் பொழுது அவர்கள் எலிசாவின் அடையாளங்களை அவர்களுக்கு சொல்லுகிறார்கள்.

எலிசா அவர்களின் உடையும் முழுக்கு முனிவர் யோவான் அவர்களின் ஆடையும் ஒன்று போல இருப்பதை காணலாம்.

ஆடை மட்டுமல்ல ஆடைக்கு பின்னால் அவர்களின் ஆற்றலும், துணிவும், தீவிர இறை வார்த்தைகளும், செயல்பாடுகளும் அமைந்திருப்பதை நாம் காணலாம்.

முழுக்கு முனிவர் யோவான் தன்னிடம் திருமுழுக்கு பெற வருகின்ற அன்பர்களுக்கு கூறுகின்ற வார்த்தையை இந்த சமயத்தில் நாம் நினைவில் கொண்டால் அது நலமாக இருக்கும்.

பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?(மத்தேயு 3  :  7)

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.(மத்தேயு 3  :  8)

ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.(மத்தேயு 3 : 9)

முழுக்கு முனிவர் யோவானின் அறைகூவல் வார்த்தைகள் அன்றைய யூதர்களுக்கு மனமாற்றத்திற்கு வித்திட்டது. தங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ள வழி நடத்தியது. மனம் திரும்புதலுக்கேற்ற கனிகளை கொடுப்பதற்கு அவர்களை வழிநடத்தியது.

லூக்கா நற்செய்தி நூலில் முழுக்கு முனிவர் யோவான் அவர்கள் திருமுழுக்கு கொடுக்கும்போது நடைபெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டுகின்றார்.

ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.(லூக்கா 3  :  10)

அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன், ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.(லூக்கா 3  :  11)

ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.(லூக்கா 3  :  12)

அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.(லூக்கா 3  :  13)

போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.(லூக்கா 3  :  14)

முழுக்கு முனிவர் தன்னிடம் திருமுழுக்கு பெற வருகின்றவர்கள் சமூகத்தில் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை நினைவுபடுத்துகின்றார்.

திருமுழுக்கு ஒரு யூத சடங்காக இருந்தாலும் அந்த சடங்கின் வழியாக மாற்று சிந்தனைகளையும் மாற்று செயல்பாடுகளையும் யோவான் அவர்கள் முன்வைக்கின்றார்கள்.

திருமுழுக்கின் மூலமாக சமூக நீதியை கட்டமைக்க முடியும் , சமூக மாற்றத்திற்கு வித்திட முடியும் என்பதை முழுக்கு முனிவர் யோவான் அறிந்தவராக தன்னிடம் வருகின்ற நபர்களுக்கு அதை எடுத்துரைக்கின்றார்.

இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு திருமுழுக்கு கொடுங்கள் என்பதின் அர்த்தம் இவைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

திருமுழுக்கு சமயத்தில் இணைவதற்காக மட்டுமல்ல அல்ல மாறாக சமூக மாற்றத்தின் அடையாளமாக அதை செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு தம் சீடர்களுக்கு கட்டளையிடுகின்றார்.

அன்றைய திருமுழுக்கு மனமாற்றத்திற்கு அடையாளமாக செய்யப்பட்டாலும் இன்றைய திருமுழுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்ற உணர்வு  மேலோங்கி வேண்டும் என்ற உணர்வை தம் சீடர்களுக்கு கட்டளையாக கொடுக்கின்றார்.

திருமுழுக்கு சமூக நீதிக்கான, சமூக மாற்றத்திற்கான,  இறை ஆட்சிக்கான ஒரு கருவி ஒரு வழி என்பதை திருமுழுக்கு கொடுப்பவரும் பெருபவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தியலில் உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலும் கட்டளையும் நம்மை பணிக்கின்றது.

# நிறைவாக:

அன்று உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து உருவாக்கிய அருட்பணி இயக்கம் இன்று விரிவடைந்து உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறது.

அருட்பணி : நற்செய்திமயமாக்கல் என்ற நிலையிலிருந்து விடுதலையாக்கல் என்னும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது.

அருட்பணி : குரல் அற்றோரின் குரலாக இன்றும் ஒளித்துக்கொண்டே இருக்கிறது

அருட்பணி : அன்றைய நாசரேத் ஊரின் அறிக்கை பிரகடனமாக இன்றும் இருந்து வருகிறது.

அருட்பணி : சமூக,  பொருளாதார,  அரசியல்... போன்ற ஒட்டுமொத்த விடுதலைக்கு அது வித்திட்டு வருகிறது.

அருட்பணி : கல்வி , மருத்துவம், சேவை,. நீதி என்று விரிவடைந்து பல எல்லைகளைத் தாண்டி, பல அடிமைத்தனங்களை உடைத்தெறிந்து, சமத்துவ சமூக வாழ்வுக்கான வழித்தடங்களை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

அருட்பணி : பல விடுதலை இறையியல்களை கட்டமைத்திருக்கின்றது இந்தியாவில் தலித் இறையியலையும்  அது உருவாக்கி இருக்கிறது.

மறைந்த முன்னாள் சென்னை "பேராயர் அசரியா ஐயா" அவர்கள் எழுதின பாடல் அருட்பணியின் எல்லைகளையும்,  உணர்வுகளையும், வேட்கையையும் அது எடுத்துக்காட்டுகிறது... உணர்ந்து இந்த பாடலை பாடுவோம்...

ஆண்டவர் இயேசுவின் அருட்பணியை

அனைவரும் ஏற்றிடுவோம் அடித்தள மக்கள் விடுதலை பெற்றிட

வாழ்வினை பகிர்ந்து அளிப்போம் -  நாம்

 

1. வயிற்று பசியை விரட்டிடுவோம்

வறுமை கோட்டினை தகர்த்திடுவோம்

உயிர்களை காத்திட உழைத்திடுவோம்

பொருள் வளம் சேர்த்திட பயிற்றுவிப்போம் - ஆண்டவர்

 

2. ஆடை இல்லாதவர் நிலை தடுப்போம்

உடல் மன நோய்களை ஓட்டிடுவோம்

நாடியே நட்பில் துணை நிற்போம்

வீடில்லாதவருக்கு வழி செய்வோம் -  ஆண்டவர்

 

அருட்பணியின் அங்கங்களாக நம்மை ஆக்கிடுவோம்...!

அருட்பணியின் பங்காளர்களாக நம்மை உருவாக்கி விடுவோம்...!

 

புதிய புதிய தலைமுறைக்கு

புதிய புதிய சிலுவை - அந்த

புதிய சிலுவை காட்டணும் அன்புள்ள

இறைவன் இதய பளுவ ....

என்பதை நினைவில் கொண்டு அருட்பணி புரிந்திடுவோம்..

 

நட்புடன் உங்கள்

 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்.

 

️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀

Comments