உயிர்த்த ஆண்டவர் உடன் இணைந்து திருமறையை மறுவாசிப்பு செய்தல்
# திருமறை பகுதிகள்:
2 நாளாகமம் 34 : 29 - 33
திருத்தூதுவர் பணிகள் 8 : 26 - 40
லூக்கா 24 : 13 - 27
திருப்பாடல்கள் 19 : 7 - 14
# உட்புகும் முன்:
நம்மில் அநேகர் திருமறையை முழுவதுமாக பலமுறை வாசித்திருக்கிறோம் என்று சொல்ல கேட்டிருக்கிறோம்.
நமது திருச்சபைகளில் ஞாயிறு பள்ளி மாணவர்கள் திருமறையை மனனமாக ஒப்பிக்கின்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருவதை நாம் பார்க்கிறோம்.
தற்போது திருமறையை கையால் எழுதுகின்ற ஒரு புதிய முயற்சி ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் நன்கு அறிவோம், இது ஒரு நமக்கு ஒரு புதிய அனுபவம் தான்.
திருமறையை திரும்பத் திரும்ப வாசிக்கும் பொழுது, நாம் முதலில் அந்த பகுதியை குறித்து அறிந்து கொண்ட எண்ணங்களில் (Perspectives) மாற்றம் வந்து, இறுதியில் வேறொரு சிந்தனையில் அதை பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
திருச்சபைகளில் அருளுரை ( Preaching) நேரம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல திருமறை ஆராய்ச்சியும்( Bible Study), கருத்தரங்கங்கள்(Seminars), விவாதங்கள் (Debate), சொற்பொழிவுகள் (Discourse) போன்றவை திருச்சபை வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பவை ஆகும்.
கொடுக்கப்பட்டிருக்கிற திருமறைப் பகுதிகளை உயிர்த்த ஆண்டவரோடு இணைந்து மறுவாசிப்பு செய்யும் பொழுது அவைகள் 3 முக்கியமான இடங்களை மற்றும் நபர்களை சுட்டிக்காட்டுகிறது. ஒன்று "மையத்தில்" இருக்கும் யோசியா "அரசரைப்" பற்றி கூறுகிறது, இரண்டாவதாக "ஒடுக்கப்பட்ட" நிலையில் இருக்கின்ற "சீடர்களை" காட்டுகிறது, மூன்றாவதாக "விளிம்பு நிலையில்" இருக்கின்ற "அன்னகரைப்" பற்றி காட்டுகிறது. நாமும் உயிர்த்த ஆண்டவரோடு இணைந்து எம்மாவூர் வழி பயணத்தின் அனுபவத்தை கற்றுக் கொள்வோம், ஆண்டவர் கற்றுத்தரும் இறையியல் அனுபவத்தை வாழ்வில் பிரதிபலிப்போம்.
திருமறையை மறுவாசிப்பு நாம் செய்யும் பொழுது நாம் சிந்தையில் மாற்றம் அடைகின்றோம், சீர்திருத்தங்கள் பல செய்வதற்கு நம்மை அர்ப்பணிக்கிறோம், சீர்மிகு உலகை (இறையாட்சி) உருவாக்குவதற்கு நாம் முன்னேறி செல்கின்றோம்.
1. மறுவாசிப்பு - இறையியல் ஆழத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
2. மறு வாசிப்பு - இறைவனின் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட வைக்கிறது.
3. மறு வாசிப்பு - இறைவனின் உடன்படிக்கை உறவுகளோடு இணைய வைக்கின்றது.
4. மறு வாசிப்பு - இறையாட்சிக்கான திருப்பணிகளின் எல்லைகளை விரிவாக்குகிறது.
மேற்கண்ட தலைப்புகளின் வழியாக திருமறையை தியானிப்போம்.
1. மறுவாசிப்பு - இறையியல் ஆழத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.(லூக்கா 24 : 13 - 27)
எம்மாவூர் செல்லுகின்ற இரண்டு சீடர்கள் வழி நெடுகிலும் இயேசு கிறிஸ்துவின் பாடு, அவரின் மரணத்தை குறித்து பேசிக்கொண்டே செல்கின்றார்கள்.
இருவரின் உரையாடல்களில் வெளிப்பட்டது அவர்களின் கவலை, மீட்பு பறிபோனதே என்கின்ற எண்ணம், இனி எதிர்காலம் எப்படி ஆகும் என்ற பயமும் வெளிப்பட்டது.
இந்த சூழ்நிலையில் உயிர்த்த ஆண்டவர் அவர்களோடு சக பயணியாக(Co - Traveller), ஆலோசகராக(Consultant), ஆற்றுப்படுத்துபவராக(Comforte) தன்னை இணைத்துக் கொள்கின்றார்.
அவர்களின் முகங்களில் படர்ந்திருந்த கவலையை மனதில் அழுத்திக்கொண்டிருந்த பாரங்களை ஆண்டவர் தம் உரையாடல் மூலமாக வெளிக்கொண்டுவந்து (Poring out)அவர்களை ஆற்றுப்படுத்துகின்றார்.
உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களோடு உரையாடின பொழுது அவர்களுக்குள் இருந்த உயிர்த்தெழல் குறித்த நம்பிக்கை இன்மையை, மேசியா பற்றிய தவறான புரிந்து கொள்ளுதலை, கடவுளின் மீட்பின் திட்டம் குறித்த தெளிவற்ற நிலையை அறிந்தவராக அவர்களின் அறியாமையை போக்குகின்றார்.
உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களோடு திருமறையை மிகத் தெளிவாக விளக்குகின்றார். இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு ஆகமங்கள், தீர்க்கதரிசன நூல்கள், ஞான இலக்கியங்களில் கடவுளைப் பற்றிய உண்மைகளையும், கடவுளின் செயல்பாடுகளையும், கடவுளின் தன்மையையும் பக்குவமாக விளக்கிக் கூறுகின்றார்.
இந்த மூன்று நூல்களிலும் கடவுளின் மீட்பின் திட்டம் என்பது, துன்புறுவதின் வழியாகத்தான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
திருமறையில் காட்டப்பட்டுள்ள கடவுள் அவர் "பாடுபடும் தாசன்"(Suffering Servant) என்பதை வழி பிரயாணத்தில் அவர்களுக்கு மீண்டும் கற்றுக் கொடுக்கின்றார், திருமறையை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றார்.
இறுதியில் தம் சீடர்களின் அழைப்பை ஏற்று அவர்களோடு உண்டு உறங்கச் செல்கின்றார். உறங்குவதற்கு முன் அவர்கள் உணவருந்தும் பொழுது அவர் அப்பத்தை பிட்கின்றார்.
இயேசு கிறிஸ்துவின் அப்பம் பிட்குதல்(Breaking the Bread), இயேசு கிறிஸ்து அப்பத்தை கையாண்ட விதம் (Dinning Style)),இயேசுவின் உடல் மொழி(Body Language of Jesus),
உணவு உண்ணும் சூழல்(Ambience of Dinning), உணவின் மூலமாக உணர்த்துதல்(Gestures), மூலமாக தமது மூன்றரை ஆண்டுகால திருப்பணியை, சவால்களை பாடு மரணத்தை, உயிர்த்தெழுதலை குறிப்பால்(Through his Symbolic Action) அவர்களுக்கு உணர்த்தினார்.
இயேசு கிறிஸ்துவின் மிக நீண்ட நெடிய அருளுரையும், அவரின் அப்பம் பிட்குதலும் அவர்களுக்கு இறையியல் பாடத்தை(Theological Education) கற்றுக் கொடுத்தது.
திருமறையை மீள் பார்வை செய்யவும்(Revisioning), புத்துயிர் பெறவும் (Revitalization), மறுவாசிப்பு செய்யவும்(Re - Reading) இதன் மூலமாக அவர்களை அறியாமையில் இருந்து மீட்டெடுக்கவும்(Restoring) பாடுபடும் மேசியாவை கண்டடையவும் (Meetting the Messiah), உயிர்த்தெழுதலின் நம்பிக்கையும் அவருக்குள் விதைத்து உணர்வடையச் செய்தது.
உயிர்த்த ஆண்டவரின் இந்த அணுகுமுறை எம்மாவூர் சென்ற சீடர்களின் வாழ்வில் மாபெரும் திருப்புமுனையை உண்டாக்கியது.
இயேசு பிறந்த நற்செய்தியைக் கேட்ட மேய்ப்பர்கள் எவ்வாறு அந்த நேரமே அவர்கள் புறப்பட்டார்களோ அதே உணர்வோடு உயிர்த்தெழுந்த ஆண்டவரை உலகுக்கு அறிவிக்க
அந்நேரமே அவர்கள் எழுந்து புறப்பட்டு முடங்கிக் கிடந்த சீடர்களுக்கு உயிர்த்தெழுதலின் நற்செய்தியை அவர்கள் அறிவித்தார்கள்.
இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு திருமறையை விளக்கிய விதம் அவர்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தியது. அந்த மறுவாசிப்பு அவர்களை உணர்வுடைய செய்தது. திருமறையின் இறையியலை கற்றுக்கொண்ட இறை மாணாக்கர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ள வழிவகை செய்தது.
பவுல் அடியாரின் தமஸ்க்கு வழிப் பயணம் எவ்வாறு அவருக்கு திருப்புமுனையாக அமைந்ததோ, அதேபோல் இயேசுவின் சீடர்களுக்கு எம்மாவூர் வழிப் பிரயாணம் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அது உலகிற்கு உயிர்த்தெழுதலின் வழியை காட்டியது.
2. மறு வாசிப்பு - இறைவனின் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட வைக்கிறது.(2 நாளாகமம் 34 : 29 - 33)
இயேசு கிறிஸ்து தான் வளர்ந்த ஊரில் ஜெப ஆலயத்தில் திருமறை வாசிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் ஏசாயா நூலை வாசித்து முடித்து பின்பதாக எல்லாருடைய கண்களும் அவர் மீது நோக்கமாக இருந்தது.
இயேசு கிறிஸ்து வழக்கத்திற்கு மாறாக திருமறைப் பகுதியை வாசித்து முடித்த பின்பதாக உங்கள் காதுகள் கேட்க இந்த வேத வாக்கியம் இன்று நிறைவேறிட்டு என்று மொழிந்தார்.
இந்தத் திருமறைப் பகுதியை அவர் வாசிக்க கேட்டிருக்கலாம் அல்லது அவரும் ஒரு முறை ஏற்கனவே வாசித்திருக்கலாம். ஆனால் ஜெப ஆலயத்தில் அவருக்கு திருமறையை மறுபடியும் படிப்பதற்கு அதை புரிந்து கொள்வதற்கு உதவி செய்தது.
அவர் திருமறையை வாசித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் உங்கள் காதுகள் கேட்ட இந்த வேத வாக்கியங்கள் இன்று முதல் அது நிறைவேறும் என்ற உறுதிமொழியை அவர்களுக்கு ஆழமாக அழுத்தமாக திரு அவையோருக்கு தெரிவித்தார்.
இயேசு கிறிஸ்து திருமறையை வாசித்த பின்பதாக அவரின் செயல்பாடுகள் அந்த திருமறைப் பகுதியை நிறைவேற்றுகின்ற வண்ணமாகவே அமைந்திருந்தது.
இதேபோல் யோசியா அரசன் தனது 16ஆவது வயதில் கடவுளை தேட ஆரம்பிக்கின்றார். கடவுள் விரும்புகின்ற காரியங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு தன் அரசாட்சியையும் அதில் ஈடுபடுத்துகின்றார்.
தனது இருபதாவது வயதில் தனது அரசாட்சிக்குட்பட்ட எல்லைகளில் இருக்கக்கூடிய கடவுள் விரும்பாத விக்கிரகங்கள், பலி பீடங்கள், பழக்கவழக்கங்கள், சடங்காச்சாரியங்கள் அதனை ஒட்டிய பாரம்பரியங்கள் அனைத்தையும் அவர் அழித்தார் என்று திருமறை வரலாறு கூறுகிறது.
எருசலேம் ஆலயம் சுத்திகரிக்கப்படுகிறது, அப்பொழுது நியாயப்பிரமாண புத்தகம் கண்டெடுக்கப்படுகிறது. அதை அரசரிடம் ஒப்படைக்கின்றார்கள்.
நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி இருக்கிற அனைத்து காரியங்களையும் வாசிக்கின்றார்கள், அதை ராஜா கவனத்தோடு கேட்கின்றார்.
கேட்பதோடு மட்டுமல்லாமல் அதில் எழுதி இருக்கிற காரியங்களை நம்முடைய முன்னோர்கள் செய்யாமல் போனார்கள் என்பதை உணர்கின்றார்.
நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி இருக்கிறவைகளுக்கு கீழ்ப்படியாமல் போனதினால் சமூகம் சீரழிந்ததோடு மட்டுமல்லாமல் கடவுளின் கோபத்திற்கும் உள்ளான நிலையை உணர்ந்து கொள்கிறார். இவைகளினால் உண்டான கடவுளின் தண்டனையையும் அவர் அறிந்து கொள்கிறார்.
யோசிய அரசன் நியாயப்பிரமாண புத்தகத்தை அங்கு இருக்கிற "உல்தாள்" என்கிற ஒரு பெண் தீர்க்கதரிசியிடம் சென்று அதன் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளவும் முற்படுகிறார்
"உல்தாள்" தீர்க்கதரிசி அம்மையார் "அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார்" என்று அவர்களுக்கு எடுத்துரைத்தார். (2 நாளா 34 : 25)
யோசியா அரசர் எருசலேம் தேவாலயத்தில் மூப்பர்கள் எல்லாரையும் வரவழைத்து கண்டெடுக்கப்பட்ட நியாயப்பிரமாண புத்தகத்தை மறுபடியும் அவர்கள் கேட்க வாசித்தார்.
வாசித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் நியாயப்பிரமாண புத்தகத்தின் வழியாக கடவுள் தருகின்ற ஆலோசனைகளை தான் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மூப்பர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்தார், தன் அரசாட்சிக்குட்பட்ட மக்களையும் ஏற்றுக் கொள்ள வைத்து, ஒட்டுமொத்த சமூகமும் மனம் திரும்பவதற்கு அழைப்பு விடுத்தார்.
ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி,(2 நாளா 34 : 31)
எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான், அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.(2 நாளா 34 : 32)
யோசியா இஸ்ரவேல் பத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.(2 நாளா 34 : 33)
யோசியா அரசரின் இந்த செயல் இஸ்ரவேல் வரலாற்றில் வரும் சமய சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. சமூகத்தை சீரழித்துக் கொண்டிருந்த சடங்காச்சாரங்களும்(Rituals), பழக்க வழக்கங்களும், பலி கோட்பாடுகளும், அதனை ஒட்டிய அடிமைத்தனங்களும், போலியான சமய தலைவர்களும், தவறான போதனைகளும்(False Teaching) முடிவுக்கு வந்தன.
யோசியா அரசரின் நியாயப்பிரமாண புத்தக வாசிப்பு சமயத்தையும்(Religion), சமூகத்தையும்(Society), அரசாட்சியையும்(Reign) சீர்படுத்தியது, தொடர்ந்து சீர்திருத்தப் பணிகளில் அரசர் ஈடுபடுவதற்கு வழிவகை செய்தது. ஒட்டுமொத்த சமூகத்தையும் இறைவனுக்கு நேராக மாற்றியது(Turn to God).
உயிர்த்த ஆண்டவரின் இறையியல் கல்வி எம்மாவூர் பயணம் சீடர்களின் வாழ்வில் தாக்கத்தை உண்டு பண்ணினதை போல, யோசிய அரசர் நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்து தனது அரசாட்சியை சீர்திருத்தம் செய்ததைப் போல, இன்று திருமறைப் பகுதியை வாசிக்க கேட்கிற நாமும் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட உயிர்த்த ஆண்டவர் கிறிஸ்து அழைக்கின்றார்.
3. மறு வாசிப்பு - இறைவனின் உடன்படிக்கை உறவுகளோடு இணைய வைக்கின்றது.(திருத்தூதுவர் பணிகள் 8 : 26 - 40)
ஆதி திருச்சபையில் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக பலர் எழும்பினர், அநேகர் ரத்த சாட்சியாக மரித்தார்கள், இன்னும் பலர் வைராக்கியத்தோடு ஆண்டவருடைய திருப்பணிகளை ஒப்படைப்போடு செய்தார்கள்.
அப்படிப்பட்ட ஒப்படைப்போடு இயேசுவின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு திருப்பணி செய்தவர் பிலிப்பு என்கின்ற மாமனிதர்.
கர்த்தருடைய வார்த்தை பிலிப்பு அவர்களுக்கு தூதர் மூலமாக வழங்கப்படுகிறது. "நீ எழுந்து, தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ"(அப்போஸ்தலர் 8 : 26)
பிலிப்பு கர்த்தருடைய வார்த்தையை பெற்றுக் கொண்டவராக அவர் எழுந்து, உரைத்தபடியே அவர் புறப்பட்டு செல்கிறார்.
ஆண்டவரின் பணியாளராகிய பிலிப்பு தன் வாழ்க்கையில் வித்தியாசமான ஒரு சூழலை எதிர்கொள்கின்றார். கடவுள் அவரை எதிர்கொள்ள வைக்கின்றார்.
எத்தியோப்பியா நாட்டைச் சார்ந்த ஒரு "அண்ணகர்" எருசலேமில் இருந்து அவர் திரும்பி, தன் நாட்டுக்கு போகின்ற வழியில் தன் ரதத்தில் ஏசாயா நூலை அவர் வாசித்துக் கொண்டே செல்கிறார்.
ஆண்டவரின் பணியாளராகிய பிலிப்பு ரதத்தோடு சேர்ந்து, ஓடிக்கொண்டே அவரோடு பேசுகின்ற காட்சி கேட்கின்ற நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கருப்பு இனம்(Black People), அண்ணகர்(Eunuch) என்ற இரு நிலைகளில்(Oppressed in two Conditions) சமுதாயத்தால் ஒதுக்கி, விளிம்பு நிலையில்(Marginalized) வைக்கப்பட்டிருந்த ஒருவரோடு
இணைந்திருக்க வேண்டிய நிலைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.
அண்ணகர் அவர்கள் பிலிப்புவை தன் இரதத்தில் ஏற்றி தன்னோடு அமரும்படி அழைக்கின்றார். பிலிப்பு அவர்கள் முகம் சுளிக்காமல் இது இறை கட்டளை என்பதை உணர்ந்து அண்ணகரோடு தன்னை முழு மனதோடு இணைத்துக் கொள்கின்றார்.(Philip incorporates himself with Black Eunuch wholeheartedly).
மக்களின் பார்வையில் அண்ணகர்கள் தீண்டத்தகாதவர்களாக(Untouchable) கருதப்படலாம் ஆனால் ஆண்டவர் பார்வையில் அவர்கள் சிறப்பானவர்கள் (Special & Unique People of God), இறை மக்கள்(People of God) இறை ஆட்சியில் ஏற்கனவே இடம் பிடித்தவர்கள்(Community which already placed in Reign of God) மேலும் அவர்கள் உடன்படிக்கையின் மக்கள்(Covenant People) என்று திருமறை கூறுகின்றது. இயேசு கிறிஸ்துவும் இதனை அழுத்தமாக பதிவு செய்து இருக்கின்றார்.
இறைபணியாளராகிய பிலிப்பு கடவுளின் உடன்படிக்கை உறவில் வாழுகின்ற அன்னகரோடு தன்னை இணைத்துக் கொள்வதோடு மாத்திரமல்ல அவர்களுக்கு திருமறை ஆய்வையும் நடத்துகின்றார்.
அண்ணகர் அவர்கள் திருமறை அறிவில் வளர்வதற்கும், திருமறை காட்டுகின்ற இறையியலை, ஆன்மிகத்தை கற்றுக் கொள்வதற்கும் உதவி செய்கின்றார்.
இறுதியில் கருப்பு இனத்தைச் சார்ந்த அண்ணகர் அவர்களுக்கு இறைப் பணியாளர் பிலிப்பு திருமுழுக்கும் கொடுக்கின்றார்.
பிலிப்பு அவர்கள் அண்ணகருக்கு கொடுக்கின்ற இந்த திருமுழுக்கு முழுக்கு முனிவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை காட்டிலும் இது சிறப்பானது உயர்வானது.
ஆதி திருச்சபையில் இறைபணியாளர்கள் எவ்வாறு தங்கள் எல்லைகளைக் கடந்து, இறைவனின் எல்லைக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்பதற்கு பிலிப்பு அவர்களின் செயல்பாடு, அண்ணகர்க்கு கொடுத்த திருமுழுக்கும் இன்றைய திருச்சபைக்கு மாபெரும் சான்றாக அமைந்துள்ளது.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே என்று திருச்சபையை அழைக்கும் பொழுது, இந்த "கிறிஸ்துவுக்குள்" (In Christ) யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை அருட்பணியாளர்கள் நினைவு கூற அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
நம் எல்லைகளைத் தாண்டி இறைவனின் உடன்படிக்கை எல்லைக்குள்ளாக வாழுகிற மக்களோடு குறிப்பாக அண்ணகர்கள், விளிம்பு நிலையில் வாழுகின்ற மக்களோடு நம்மை இணைத்துக் கொள்கிறோமோ அன்றுதான் நாம் இறைவனின் உண்மை திருப்பணியாளர்களாக ஆகின்றோம்.
பேதுருவைப் போல தூய்மை - தீட்டு என்கின்ற கருத்தியல்களை, அடிமைப்படுத்தும் சித்தாந்தங்களை, காரணிகளை இனம் கண்டு கொண்டு அவைகளை ஒழிப்பதற்கு நம்மை அர்ப்பணிக்கின்றோமோ அப்பொழுதுதான் கடவுளின் உடன்படிக்கை உறவுக்குள் நாம் வருகிறோம்.
திருமறையை மறுவாசிப்பு செய்வது நம்மை மறு அர்ப்பணிப்புக்கு வழி நடத்தும், அது இறைவனின் உடன்படிக்கை உறவுக்குள் நம்மையும் வாழ வழிநடத்தும், இறைவனின் உடன்படிக்கை உறவுகளோடு வாழ்வதற்கு நம்மை பக்குவப்படுத்தும். தொடர்ந்து எம்மாவூர் பயணத்தை ஆண்டவரோடு மேற்கொள்வோம்.
4. மறு வாசிப்பு - இறையாட்சிக்கான திருப்பணிகளின் எல்லைகளை விரிவாக்குகிறது.(திருப்பாடல்கள்
19: 7 - 14)
திருப்பாடல்கள் நமது திருப்பணியின் எல்லைகள் எவைகள் என்பதை நாம் மறுவரையறை செய்ய நம்மை வழிநடத்துகிறது.
திருச்சபைகளின் எண்ணிக்கைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. திருச்சபையின் கோபுரங்கள் வானினை முட்டுகின்ற அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன.
திருச்சபையின் திருப்பணிகள் சுருங்கிக் கொண்டே இருக்கின்றன. எவரோ ஒருவர் செய்கின்ற திருப்பணியை நமது திருப்பணி கொடையினால் தாங்கினால் போதும் என்ற மனநிலை அனைவரது மனதிலும் வியாபித்து இருக்கிறது.
கொடுக்கப்பட்டுள்ள திருப்பாடல்கள் பகுதியை நாம் மறுபாசிப்பு செய்யும் பொழுது அது பல உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கிறது, பல கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது.
கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. (19 : 8)
கர்த்தருடைய நியாயம் யாருக்கு செம்மையாய் இருக்கிறது? யாருடைய இருதயத்தை மகிழ்ச்சி படுத்துகிறது? யாருடைய கண்களை தெளிவிக்கிறது? எனும் கேள்வியை அது எழுப்புகிறது.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (19 : 7)
யாருடைய ஆத்துமாவை உயிர்பிக்கிறது அப்படி என்றால் மரித்தவர்கள் யார்? யார் அந்த பேதைகள்? கர்த்தரின் சாட்சி யாருக்கானது? என்ற கேள்வியை இந்தப் பாடல் நமக்கு எழுப்புகின்றது.
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது( 19 : 9)
கர்த்தருடைய நீதி யாருக்கானது? என்ற கேள்வியையும் இந்த பாடல் எழுப்புகிறது. கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் யார்? பயப்படாதவர்கள் யார்? போன்ற பல கேள்விகளுக்கு பதில் கூற நம்மை இந்த பகுதி அழைக்கின்றது.
திருச்சபை அன்பர்களாகிய நாம் எப்பொழுதும் நமது ஆலய எல்லைக்குள் நம்மை முடக்கிக்கொண்டு, ஒன்று கூடி ஜெபிப்பதும் ஜெப குறிப்புகளுக்காக வேண்டுவதும் நம்முடைய கடமை என்று அதை செய்து முடிப்பதில் திருப்தி காணுகிறோம்.
கர்த்தருக்கு பயப்படாமல் துணிகரமான பாவங்களை செய்கிறவர்கள் உண்டு, அக்கிரமங்களை செய்பவர்களும் உண்டு, அநீதி இழைப்பவர்களும் உண்டு, ஒடுக்குகின்றவர்களும் உண்டு.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது மூன்றரை ஆண்டு கால திருப்பணியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணி செய்தார். ஒடுக்குகின்ற மக்களுக்கு எதிராகவும் அவர் பணி செய்தார்.
இயேசு கிறிஸ்துவின் திருப்பணியில் இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் நியாயம் செய்தார். ஒடுக்குகின்ற மக்களுக்கு அவர்களின் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார். தம் உயிரையும் கொடுத்தார்.
உயிர்த்த ஆண்டவர் மறுபடியும் தம் சீடர்களோடு எம்மாவூர் வழி பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டார், இறையியலை கற்றுக் கொடுத்தார், சிந்தையில் மாற்றம் அடைய செய்தார், சீர்மிகு உலகை உருவாக்குவதற்கு உந்துதல் தந்தார்.
உயிர்த்த ஆண்டவரால் உருமாற்றம் அடைந்த சீடர்களை போல திருச்சபையாக உருமாற்றம் அடைவோம், நம் எல்லைகளை தாண்டுவோம், நமது எல்லைகளை விரிவாக்குவோம்.
ஒடுக்குகின்ற மக்களுக்கு எதிராக களம் காண, களப்பணி புரிய, களம் அமைக்க, கடமைகள் புரிய, தீர்க்கதரிசிகளின் பணிகளை மேற்கொள்ள(Propheticall Role) உயிர்த்த ஆண்டவர் திருமறை வாசிப்பதின் வழியாக, திருப்பாடல்களைப் பாடுவதன் வழியாக நம்மை அழைக்கின்றார்.
# நிறைவாக:
🍎திருச்சபையின் பயணத்தில் புனிதப் பயணங்கள் நமக்கு முக்கியமாக இருந்தாலும் எம்மாவூர் பயண அனுபவம் அனைவரின் வாழ்விலும் கட்டாயம் இருக்க வேண்டும்.
🍎 "உல்தாள்" எனும் பெண் தீர்க்கதரிசியை போல நமது பெண்களும் இறையியல் கல்வி பெற, இறைப் பணியில் செயல்பட, தீர்க்கதரிசி பணி செய்திட வழித்தடங்களை உருவாக்கிடுவோம்.
🍎திருமண்டல அளவில் செயல்படுகின்ற அண்ணகர்கள் திருப்பணியை திருச்சபை திருப்பனியாக ஏற்று செயல்படுவோம்.
🍎அதிகாரங்கள் நமக்கு கிடைக்கும் பொழுது, ஆட்சி பீடத்தில் அமரும்போது யோசியா அரசரை நமது முன்மாதிரியாக கொண்டிடுவோம்.
🍎நமது கல்லூரிகளில் இறையியல் கல்வியை விருப்ப பாடம் (Optional Course)ஆக்கிடுவோம்.
🍎புனிதப் பயணங்களுக்கு(Holy Land Tour) திட்டமிடுவதைப் போன்று, இறையியல் பயணத்திற்கும் (Theological Journey) நாம் திட்டமிடுவோம்.
🍎சத்திய வேதம் பக்தரின் கீதம்...
பாடலைப் பாடும் பொழுதெல்லாம் முதல் சரணத்தோடு நிறுத்தி விடாமல், கீழ்க்கண்ட சரணத்தையும் சேர்த்து பாடுவோம்..
"உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்" - சத்திய
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக...
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக....
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்.

தோத்திரம் ஐயா 🙏🏿
ReplyDelete