சீடர்களை உருவாக்குங்கள்
# திருமறைப் பகுதிகள்:
1 அரசர்கள்19 : 11 - 21
திருப்பாடல்கள் 34 : 11 - 22
ரோமர் 16 : 3 - 16
யோவான் 1 - 35 - 42
# உட்புகும் முன்:
குரு - சீடர் என்கின்ற உறவு நிலை இன்றும் இருந்து வருகிறது. குரு - சீடர் ஐ மையமாக வைத்து சமூகத்திற்கு அறநெறி கதைகள் மூலம் கற்பிக்கின்ற நடைமுறைகளை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.
குருவை மிஞ்சின சீடர் என்ற வழக்குச் சொல்லும் நம்மிடத்தில் இருப்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.
சீடர்கள் என்பவர்கள் சமயம் சார்ந்த நபர்களாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றார்கள். பெரும்பாலும் சீடர்கள் என்பவர்கள் துறவு நிலையை மேற்கொண்டவர்களாகவே சமயங்கள் சித்தரிக்கின்றன.
ஒருவரின் கருத்துக்களை ஏற்று, அவரின் சித்தாந்தங்களை உள்வாங்கி, அவரின் வழி நடக்கின்றவர்கள் சீடர்கள் என்னும் நிலையை அடைகின்றார்கள்.
நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டு போய் அனைவரையும் சீடராக்குங்கள் என்பது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் கட்டளையாகும்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் சீடர்கள் என்ற நிலையில் பலர் இருந்து வந்துள்ளார்கள். உதாரணமாக முழுக்கு முனிவர் யோவான் அவர்களுக்கு சீடர்கள் இருந்து வந்தார்கள் என்று திருமறை கூறுகிறது.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த சீடர்கள் சமயவாதிகளாக, சமய தலைவர்களை தங்கள் குருவாக ஏற்றுக் கொண்டு, சமயங்கள் காட்டுகின்ற நெறிமுறைகளில் வாழ்ந்து வந்தார்கள்.
சீடர்களில் ஒரு சிலர் சமூகத்தில் இருந்து தங்களை ஒதுக்கிக் கொண்டு காடுகளில் தவம் புரிந்து குருவைப் போல அவர்களும் வாழ்ந்து வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
வரலாறு காட்டுகின்ற சீடர்கள் பெரும்பாலும் பக்திக்குரிய வாழ்வை தெரிந்து கொண்டு நடை , உடை , தோற்றத்தில் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக வாழ்வதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது.
திருமறை காட்டுகின்ற சீடத்துவம் என்பது முற்றிலும் வேறானது. அதன் ஆன்மிகம் ஆழமான பொருள் கொண்டது.
இறைமகன் இயேசு கிறிஸ்து முன்மொழிகின்ற சீடத்துவம் என்பது அழைப்பு, ஒப்படைப்பு, சேவை, உக்கிரானத்துவம், கூட்டு வாழ்வு, சமூக முன்னேற்றம், சமூக நீதி, சமத்துவம், மேலும் இறை ஆட்சியின் தகவுகளை அடிப்படையாகக் கொண்டது.
இறைமகன் இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடம் நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டு போய் சீடர்கள் ஆக்குங்கள் என்றார். அவர்களும் உலகமெங்கும் பயணித்து சீடர்களை உருவாக்கினார்கள். அந்த மாபெரும் மக்கள் திரள் இயக்க கூட்டம் தான் இன்றைய திருச்சபை என்பதை நினைவில் கொள்வோம்.
1. பக்திமான்களை அல்ல பாடுபடும் சீடர்களை உருவாக்குங்கள்.( 1 அரசர்கள்19 : 11 - 21)
2. மறுதலிப்பவர்களை அல்ல போராடும் சீடர்களை உருவாக்குங்கள்.(ரோமர் 16 : 3 - 16)
3. சாதனையாளர்களை அல்ல சாமானியர்களை சீடராக்குங்கள்.(யோவான் 1 - 35 - 42)
மேற்கண்ட தலைப்புகளின் வழியாக திருமறை பகுதிகளை நாம் தியானிப்போம்.
1. பக்திமான்களை அல்ல பாடுபடும் சீடர்களை உருவாக்குங்கள்.( 1 அரசர்கள்19 : 11 - 21)
எலியாவின் பக்தி, சமயத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒடுக்குதலை, அடிமைத்தனத்தை ஒழிக்க செய்தது.
இஸ்ரவேல் மக்களின் ஓரிறை கோட்பாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சமய அடிப்படைவாதிகளையும், சடங்காச்சாரங்களையும், பாகால் வழிபாட்டையும் எலியா கடவுளின் சீடராக தனித்து நின்று அழித்து ஒழித்தார்.
எலியாவின் செயல் அரசு அதிகாரத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்டது. ஆகாப் அரசனின் மனைவி யேசபேல் எலியாவை தீர்த்து கட்டுவதற்கு திட்டமிடுகின்றார்.
எலியா தப்பி ஓடுகின்றார், தன் வாழ்வை காத்துக் கொள்வதற்கு புலம் பெயர்கின்றார். அகதி நிலைக்கு எலியா தள்ளப்படுகின்றார்.
இந்த சூழ்நிலையில் கடவுள் எலியாவை சந்தித்து உரையாடுகின்றார். அந்த உரையாடலில் எலியா தன் நிலையை கடவுளிடம் எடுத்துரைக்கின்றார்.
கடவுள் எலியாவிடம் மூன்று முக்கியமான பொறுப்புகளை வழங்குகின்றார். அதை நிறைவேற்றுமாறு எலியாவை கடவுள் பணிக்கின்றார்.
கடவுள் தந்த முக்கிய பொறுப்பு என்னவென்றால், "நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி,
பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு." (1 இராஜா 19 : 15, 16)
இதை வேறு வழியில் சிந்திப்போம் என்று சொன்னால் எலியா "மூன்று சீடர்களை உருவாக்க வேண்டும்" என்பதே கடவுளின் மாபெரும் கட்டளையாகும்.
இரண்டு அரசர்கள் மற்றும் ஒரு தீர்க்கதரிசியை நீ கடவுளின் சீடர்களாக உருவாக்க வேண்டும் என்று எலியாவுக்கு கடவுள் கட்டளை இடுகின்றார்.
எலியா ஒரு கனம் திகைத்து நிற்கின்றார், இது எப்படி ஆகும் நான் ஒருவன் மாத்திரம் இருக்கின்றேனே, அரசு அதிகாரம் எனக்கு எதிராக இருக்கிறதே நான் என்ன செய்ய முடியும் என்று கலங்கி நிற்கின்றார்.
அப்பொழுது கடவுள் எலியாவுக்கு சொல்லுகின்ற வார்த்தைகள் எலியாவை ஆற்றல்படுத்துகின்றன, திடப்படுத்துகின்றன, வெறும் பக்திமானாக இருப்பதை காட்டிலும் பாடுபடுவதற்கு, துன்புறுவதற்கு, சீடர்களை உருவாக்குவதற்கு உதவி செய்கின்றன.
கடவுள் எலியாவுக்கு சொன்ன அந்த வார்த்தைகள் என்னவென்றால், "பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்" என்றார். (1 இராஜா 19 : 18)
எலியாவை காட்டிலும் பாகாலுக்கு முடங்காத ஏழாயிரம் சீடர்கள் இஸ்ரவேலிலே இருக்கிறார்கள். நான் அவர்களோடு கூட இருக்கிறேன். அவர்கள் எனக்காக பாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஏழாயிரம் சீடர்கள் அதிகாரத்திற்கு பயப்படாமல், துணிவோடு இன்னும் களத்தில் நிற்கின்றார்கள். வெறும் பக்திமான்களாக அல்லாமல் நீதியின் பொருட்டு பாடுபடுகின்ற தாசர்களாக அவர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என்று எலியாவுக்கு கடவுள் எடுத்துரைக்கின்றார்.
கடவுளின் ஆலோசனையை பெற்ற எலியா தன்னை மறு அர்ப்பணிப்பு செய்கின்றார். பயந்து, நடுங்கி, தப்பி ஓடிய எலியா, கடவுள் பணித்த பணிகளை நிறைவேற்றுவதற்கு மனத்துணிவோடு பாடுபடும் தாசனாக தன்னை மாற்றிக்கொண்டு களத்திற்கு செல்கின்றார்.
இரண்டு அரசர்களை உருவாக்க வேண்டும் என்றால் அது ஒரு சாதாரண செயல் அல்ல மாறாக ஆட்சி மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்பதே அதின் மையக்கருத்தாகும்.
ஆட்சி மாற்றம் என்பது சாதாரணமாக வருவது அல்ல, அது புரட்சியின் மூலமாக வருவதாகும். அந்தப் புரட்சி உருவாக்குவதற்கு எலியா தன்னோடு உடன் பயணிக்க எலிசாவை தேர்ந்தெடுக்கின்றார், அவரை சீடராக தேர்ந்தெடுக்கின்றார், உருவாக்குகின்றார்.
கடவுள் எதிர்பார்க்கின்ற சீடத்துவம் என்பது வெறும் பக்திமான்களாக, வழிபடுகின்ற மக்களாக அல்ல மாறாக அநீதிக்கு எதிராக போராடுவதையும், நீதியின் பொருட்டு துன்புறுவதையும், பின்வாங்காமல் முன்னேறிச் செல்வதையையும், இறுதிவரை நிலைத்திருத்தலையும் முன்வைக்கின்றது.
கடவுள் எதிர்பார்க்கின்ற சீடர்கள், தீர்க்கர் பணிகளை செய்வதோடு மட்டுமல்லாமல் மாபெரும் "புரட்சிக்கு வித்திடும் புரட்சியாளர்களாக இருக்க வேண்டும், போராளிகளாக களத்தில் நிற்க வேண்டும், சாவைக் கண்டு அஞ்சாமல் குருதிச் சான்றாக மரித்திடவும் துணிந்திடல் வேண்டும்."
இயேசு கிறிஸ்து இதற்கு மிகச்சிறந்த சான்றாக இருக்கின்றார். அவரது சீடர்களும் சான்றாக இருந்திருக்கின்றார்கள். திருச்சபையாகிய நாமும் இத்தகைய சீடர்களாக நம்மை உருமாற்றிக் கொள்வோம். அத்தகைய சீடர்களாக அடுத்த தலைமுறைகளை உருவாக்குவோம்.
உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய இந்த கீர்த்தனை பாடலை உணர்ந்து பாடுவோம்...
உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய
உதவாத பாவி நானே.
காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக்
கஸ்தி மிகவே அடைந்து,-உடல்
பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்,
பகைவர் திருடர் மோசமும்,
சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே. – உன்றன்
2. மறுதலிப்பவர்களை அல்ல போராடும் சீடர்களை உருவாக்குங்கள்.(ரோமர் 16 : 3 - 16)
பவுல் அடியார் பல திருச்சபைகளை நிறுவினார் என்பதை நாம் நன்கு அறிவோம் ஒவ்வொரு திருச்சபையும் திருச்சபை வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளன என்பதையும் நம் அறிவோம்.
பவுல் அடியார் உண்டாக்கின திருச்சபைகளில் பலரை அப்போஸ்தலராக, தீர்க்கர்களாக, மூப்பர்களாக, கண்காணிகளாக உருவாக்கினார் என்பதையும் பவுல் அடியாரின் கடிதங்கள் எடுத்துக்காட்டுகிறது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் பெரும்பாலானோர் ஆண்களே. நிச்சயம் பெண் சீடர்களும் இருந்திருப்பார்கள் என்று இறையியல் வல்லுனர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக மரியாள் மற்றும் அவர்களோடு கூட இருந்த பெண்களும் இயேசுவின் சீடர்களே.
பவுல் அடியார் உண்டாக்கின திருச்சபைகளில் மிகவும் வித்தியாசமான திருச்சபை ரோமாபுரி திருச்சபையாகும். மற்ற திருச்சபைகளில் ஆண்களை சுட்டி காட்டுகின்ற பவுல், ரோமாபுரி திருச்சபையில் பல பெண்களின் தலைமைத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றார்.
பவுலடியார் குறிப்பிடுகின்ற பெண்கள் அத்தனை பேரும் வந்து வழிபட்டுச் சென்ற பெண்கள் அல்ல மாறாக திருச்சபை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு போராடின போராளிகள், அடித்தளங்கள், தூண்கள் என்று எடுத்துரைக்கின்றார்.
பவுல் அடியார் குறிப்பிடுகின்ற பெண்களில் ஒரு சிலரை நாம் கருத்தில் கொண்டால் அவர்களின் செயல்கள் எவ்வளவு மகத்துவமானது என்பதை நாம் அறிய முடியும்.
ஆக்கில்லா பிரஸ்கில்லா எனும் இரண்டு பெண்களை பவுலடியார் குறிப்பிடுகின்றார் இவர்கள் இருவரும் பவுல் அடியாருக்காக தங்கள் கழுத்தை கொடுத்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
இவர்கள் இருவரும் தங்கள் உயிரை துச்சமாக மதித்து, சாவை கண்டு பயப்படாமல், அதிகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்காமல் துணிவோடு திருச்சபை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
பவுல் அடியார் அவர்களுக்கு பதிலாக தங்களை கொலை செய்யுங்கள் என்று அதிகாரத்தை, அடக்குமுறைகளுக்கு எதிராக தங்கள் கழுத்தை கொடுக்க முன் வந்தார்கள் என்றால் அவர்களின் பக்தி மட்டும் வெளிப்படவில்லை அவர்களின் வீரமும் வெளிப்பட்டது.
இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்ட திருச்சபை இயக்கம் வேரூன்றி வளர்வதற்கு "குருதி சான்றாக மரிப்பதற்கும்" இவர்கள் இருவரும் துணிந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
பவுலடியார் மேலும் இரண்டு பெண்களை குறிப்பிடுகின்றார் அவர்கள் "அன்றோனீக்கை மற்றும் யூனியா". இவர்கள் பவுல் அடியாரோடு சிறைச்சாலையில் கட்டுண்டு கிடந்தார்கள் என்று பவுல் அடியார் குறிப்பிடுகின்றார்.
சிறையைக் கண்டு அஞ்சாமல், சிறைச்சாலையில் நடைபெறும் சித்திரவதைகளை அறிந்திருந்தும் துணிந்து சிறைச்சாலைக்கு சென்றார்கள் என்றால் அவர்களின் அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடிகிறது.
இன்னும் சொல்லப்போனால் திருச்சபை இயக்கத்திற்காக "சிறை நிரப்பும் போராட்டத்தை" அன்றே இந்த பெண்மணிகள் துவங்கினார்கள் என்றால் அது மிகையாகாது.
பவுலடியார் இன்னும் பல பெண்களின் பெயர்களை குறிப்பிடுகின்றார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் திருச்சபை இயக்கத்திற்காக தங்கள
அர்ப்பணித்தார்கள், தங்கள் இல்லங்களை திறந்து கொடுத்து திருச்சபை வளர்வதற்கு துணை நின்றார்கள்.
திருச்சபையின் வளர்ச்சிக்கு அடித்தளங்களாக, தூண்களாக, வேர்களாக, விழுதுகளாக அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை பவுலடியார் மறவாமல் தம் கடிதத்தில் அவர்களை குறிப்பிடுகின்றார், அவர்களின் செயல்களை நினைவுபடுத்துகின்றார், அவர்களின் தியாகங்களை எடுத்துரைக்கின்றார்.
மொத்தத்தில் பவுல் அடியார் குறிப்பிடுகின்ற இந்த பெண்கள் "மறுதலிக்கின்ற சீடர்கள் அல்ல மாறாக போராடும் சீடர்கள்" என்பதை பவுலடியார் அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கின்றார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போன்றவர்களை மட்டும் நினைவில் கொள்கின்ற நாம், பவுலடியார் குறிப்பிடுகின்ற பெண்களைப் போல "போராடும் சீடர்களை" உருவாக்குவது திருச்சபையாகிய நம் மேல் விழுந்த கடமை என்பதை நினைவில் கொள்வோம்.
மறுதலித்த பேதுருவை மறவாமல் நினைவில் கொண்டிருக்கிற நாம் "மறுதலியாமல் களத்தில் போராடி, தங்கள் கழுத்தை கொடுத்து, சிறையில் சித்திரவதைகளை அனுபவித்த" இப்பெண்களை "விசுவாசிகளின் தாய்மார்கள்" என்று அழைப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையாகும்.
பவுல் அடியார் உண்டாக்கின மறுதலியாமல் போராடின பெண் சீடர்களைப் போல சீடர்களை உருவாக்குவது நம்மீது விழுந்த கடமை என்பதை நினைவில் கொள்வோம், உணர்ந்து செயல்படுவோம்.
3. சாதனையாளர்களை அல்ல சாமானியர்களை சீடராக்குங்கள்.(யோவான் 1 - 35 - 42)
யோவான் நற்செய்தி நூலில் இயேசு கிறிஸ்து தம் சீடர்களை தேர்ந்தெடுக்கின்ற நிகழ்வு முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருப்பதை நாம் காணலாம்.
மற்ற நற்செய்தி நூல்களில் இயேசு கிறிஸ்து தம் சீடர்களை தேர்ந்தெடுத்த விதம், அதன் பின்னணி, அற்புதங்கள் இவைகள் எல்லாம் யோவான் நற்செய்தி நூலில் எடுத்தாளப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
யோவான் ஆசிரியர் வேறொரு கண்ணோட்டத்தில் சீடர்களின் தேர்ந்தெடுத்தலை, உருவாக்குதலை நமக்கு முன் வைக்கின்றார்.
முழுக்கு முனிவர் யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி(யோவான் 1 : 29) என்று தம் சீடர்களிடம் இயேசுவை அறிமுகப்படுத்துகின்றார்.
ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்(யோவான் 1 : 32). இவரே கடவுளின் மகன் என்று என்று தம் சீடர்களிடம் இயேசுவை குறித்து யோவான் சாட்சி பகர்கின்றார்.
யோவானின் சீடர்களில் ஒருவராகிய அந்திரேயா இயேசுவை பின் தொடர்கின்றார், அவரோடு தன்னை இணைத்துக் கொள்கின்றார்.
யோவானின் சீடராகிய அந்திரேயா மிகவும் முக்கியமானவர். அவர் இயேசுவை கண்ட மாத்திரத்தில் அவரை "மேசியாவாக" காண்கின்றார். மேசியாவாக காண்பதோடு மட்டுமல்லாமல் தன் சகோதரரிடம் நான் "நேசியாவை கண்டேன்" என்று சாட்சி பகர்கின்றார்.
தன் சகோதரன் பேதுருவையும் இயேசுவிடம் அழைத்து வந்து அவரையும் இயேசுவின் சீடராக உருவாக்கினார் அந்திரேயா.
மறுநாளில் பிலிப்பு என்பவரை இயேசு கிறிஸ்து தம் சீடராக அழைத்து அவரையும் உடன் பணியாளராக ஏற்றுக் கொள்கின்றார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தெரிந்தெடுத்தல் முற்றிலும் வித்தியாசமானது. இயேசு கிறிஸ்து தேடிச் சென்று பெயர் சொல்லி அழைத்து தன் உடன் பணியாளராக சீடர்களை இணைத்துக் கொண்டது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும்.
இயேசு கிறிஸ்து பிரிந்தெடுத்த சீடர்கள் ஒவ்வொருவரும் "சாதனையாளர்கள் அல்ல, மிகச் சிறந்த கல்விமான்கள் அல்ல, சமூகத்தில் உயர்ந்த படி நிலையில் இருப்பவர்களும் அல்ல" என்பதை யோவான் ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
இயேசு கிறிஸ்து தெரிந்தெடுத்து, உருவாக்கிய சீடர்கள் அத்தனை பேரும் "சாமானியர்கள், படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள் , ஒடுக்கப்பட்டவர்கள், கலிலேயர்கள்" என்பதை ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.
இஸ்ரவேல் வம்சத்தில் கோத்திரங்கள் மிகவும் முக்கியமானவைகள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு கடமைகள் உண்டு என்பதை முந்தின ஒப்பந்த நூல் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றது.
யூதர்களில் சமயத் தலைவர்களும், வேதபாரகர்களும், பரிசேயர்களும் கலப்பினம் இல்லாத யூதர்களாகவே இருக்க முடியும் என்பது யூதர்களின் பிரதானமாக இருந்து வந்தது.
இவைகளுக்கு முற்றிலும் மாற்றாக இயேசு கிறிஸ்துவின் தெரிந்தெடுத்தல் அமைந்து இருந்தது.
யூதர்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட புற இனத்தவர்கள் ஆகிய கலிலேயாவில் இருந்து தம் சீடர்களை ஆண்டவர் தெரிந்தெடுத்தார். அவர்களை சீடர்களாக உருவாக்கினார்.
இவர்களை அன்றைய சமூகம் தீட்டானவர்களாக, தீண்ட தகாதவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டார்கள்.
அன்றைய சமயங்கள் தூய்மை - தீட்டு என்னும் கருத்தியலில் மூழ்கிக் கிடந்தது. ஏழைகள் மதிக்கப்படவில்லை, பெண்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை, அடிமைகள் விளிம்பு நிலையில் வாழ்ந்து வந்தார்கள், கைம்பெண்கள், அன்னகர்கள், குழந்தைகள், நோயற்றோர், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் இருந்து புறந்தள்ளப்பட்டிருந்தார்கள்.
சமயங்களும், அதிகாரங்களும், ஆட்சிகளும் இவர்களுக்கு எதிராகவே இருந்தது. சமயத்தின் பெயரால் பல அடக்குமுறைகளும், வன்முறைகளும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன.
பரிசேயர்களும், வேதபாரகர்களும், ஆசாரியர்களும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, மக்களை மூட பழக்க வழக்கத்திற்கு வழி நடத்தி, பலி கோட்பாடுகளால் அவர்களை அறியாமை என்னும் இருளில் மூழ்கடித்து இருந்தார்கள்.
இந்த நிலையை மாற்றுவதற்கு , அரசாட்சிக்கு எதிராக இறை ஆட்சியை நிறுவுவதற்கு இயேசு கிறிஸ்து நம்மை அர்ப்பணித்தார் தம் சீடர்களை உருவாக்கினார்.
ஆண்டவர் தெரிந்தெடுத்த சீடர்கள் ஒவ்வொருவரும், "உலகம் வைத்திருக்கின்ற தகுதியின் அடிப்படையில் அல்ல மாறாக கடவுள் வைத்திருக்கும் தகுதியின் அடிப்படையில் சீடர்களை தெரிந்தெடுத்து உருவாக்கினார்."
இறை ஆட்சியை நிறுவுவதற்கு ஆண்டவரால் உருவாக்கப்பட்ட "சீடர்கள் அத்தனை பேரும் சாதனையாளர்கள் அல்ல, சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் அல்ல மாறாக தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களும், புறக்கணிக்கப்பட்டவர்களும்,கைவிடப்பட்டவர்களுமே."
இவர்களைக் கொண்டே இறை மகன் இயேசு கிறிஸ்து உலகை மாற்றினார். புதிய உலகை உருவாக்கினார், புதிய சமூகத்தை கட்டமைத்தார்.
"சீடர்களை உருவாக்குங்கள்" என்பதை நாம் சிந்திக்கும் பொழுது, தியானிக்கும் பொழுது இவைகளை உள்வாங்கினவர்களாக "இயேசு கிறிஸ்துவின் சிந்தையை உணர்ந்தவர்களாக சீடர்களை உருவாக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்."
இயேசு கிறிஸ்து தான் தேர்ந்தெடுத்த சாமானியர்களை சீடர்களாக உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் "புதிய சரித்திரத்தை படைக்கும் படைப்பாளர்களாக அவர்களை உருவாக்கினார்."
இயேசு கிறிஸ்து உருவாக்கிய சீடர்களை ஆதி திருச்சபை அவர்களை "புனிதர்கள்" என்னும் நிலைக்கு உயர்த்தி அவர்களை அழகு பார்த்தது, இன்றைய தலைமுறைக்கு அவர்களை அடையாளம் காட்டியது.
இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி "இயேசு கிறிஸ்துவை போல சீடர்களை தெரிந்தெடுப்போம், அவர்களை உருவாக்குவோம், உலகை உருமாற்றுவோம்."
# நிறைவாக
ஒவ்வொரு முறையும் நாம் திருவிருந்தில் பங்கு பெறும் பொழுது பாடுகின்ற பாடல் "கர்த்தரின் பந்தியில் வா....என்கின்ற பாடல் ஆகும்.
அந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் ஆழமான அர்த்தம் கொண்டவை, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணம் மிகவும் முக்கியமானவை...
- "கர்த்தரின் பந்தியில் வா சகோதார
கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்
தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு
ராப்போசன பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின்"
இந்தப் பாடலில் இரண்டாவது வரி மிகவும் முக்கியமானது. திருவிருந்து பெறுகின்ற ஒவ்வொருவரும் "கிறிஸ்துவின் சீஷரின் குறையை" தீர்க்க நம்மை அழைக்கிறது.
அழைப்பு மிகுதி ஆட்களோ குறைவு என்பதை மறைமுகமாக இந்த பாடல் வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றது.
மற்றும் ஒரு கீர்த்தனை பாடல் சீடத்துவத்தின் நிலையை மிகவும் தத்ரூபமாக எடுத்துக்காட்டுகின்றது,
“உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய
உதவாத பாவி நானே.
காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக்
கஸ்தி மிகவே அடைந்து,-உடல்
பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்,
பகைவர் திருடர் மோசமும்,
சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே. – உன்றன்”
ஒவ்வொரு திருச்சபையும் இறைமகன் இயேசுவின் சீடர்களின் திருக்கூட்டம் என்பதை உணர்வோம்.
🔴ஏற்றத்தாழ்வுகளை களைய,
🔴மேடு பள்ளங்களை சமன் செய்ய,
🔴சமூகத்தில் இருக்கும் படிநிலைகளை களைய,
🔴ஆண் ஆதிக்கங்களை வேரறுக்க,
🔴அடிமைத்தனங்களை அகற்ற,
🔴சமத்துவ உலகை உருவாக்க,
🔴மனித நேயம் மண்ணில் தழைக்க,
🔴சமூக நீதி காக்க,
🔴இறை ஆட்சி இம்மண்ணில் மலர
சீடர்களை உருவாக்குவோம்...
மண்ணுக்கு உரம் ஆகுவோம்...
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக..
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️
Comments
Post a Comment