வழிபாட்டில் வெளிப்படும் கடவுள்
# திருமறை பகுதிகள்
சங்கீதம் 148
வெளிப்படுத்தல் 14:1-7
மாற்கு 3:1-7
# முன்னுரை
"ஐயா இயேசுவைக் காண விரும்புகிறோம் " ஒரு பிரசங்க பீடத்தில் எழுதி இருந்த வாசகம் இதுவாகும். ஒவ்வொரு வழிபாடும் கடவுளை காண்பதற்கும், நாம் கடவுளோடு நெருங்கி வாழ்வதற்கு துணை செய்கிறது.
עֲבֹדָה Abodah (5656) என்கின்ற எபிரேய சொல்லின் பொருள் சேவை செய்தல் (bondservant, effect, labour, ministering) என்பதாகும். סְגִד Segad (5457) என்கின்ற எபிரேயர் சொல்லின் பொருள் விழுந்து பணிவதைக் (to bow down, to worship) குறிக்கிறது. שָׁחָה Shachah (7812) என்ற எபிரேய சொல்லின் பொருள் ஆண்டவரே பணிந்து தொழுவதை (to bow down, to prostrate oneself, to worship) குறிக்கிறது. இஸ்ரவேல் மக்களுக்கு வழிபாட்டின் மையம் என்பது கடவுள் எகிப்தில் இருந்து அவர்களுக்கு கொடுத்த விடுதலையாகும். விடுதலைப் பயண சூழலில் அவர்கள் வழிபாட்டிற்கு என்று முதன் முதலில் ஆசிரிப்பு கூடாரத்தை அவர்கள் அமைத்தனர்.
ஒரு சமூகமாக அவர்கள் வழிபடவும் அவர்களை ஒன்றிணைக்கவும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஆசரிப்பு கூடார மரபு மாறி நாளடைவில் ஒரு கோவில் ஆக அது எருசலேமில் அமைந்தது.
வழிபாட்டை தொழுகை என்றும் நாம் கூறலாம். தொழு என்ற தமிழ் சொல்லின் எபிரேய மூலப்பொருள் தொண்டு புரிதல், ஊழியம் செய்தல், பணி புரிதல் அல்லது சேவை செய்தல் என்பதாகும். தமிழில் இவை பணிந்து கொள்ளுதல், சேவித்தல் , வணங்குதல், தொழுது கொள்ளுதல், ஆராதனை செய்தல் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடவுள் மனிதருக்கு எங்கெல்லாம் தோற்றமளித்தாரோ அங்கெல்லாம் இஸ்ரவேல் மக்கள் அவரை தொழுது கொண்டனர். ஆரம்ப காலகட்டங்களில் வேள்வி மேடை அல்லது கல் தூண் நட்டி கடவுளை வழிபட்டனர். பெத்தேல், தாண, கில்கால், பெயர்சபா போன்ற இடங்கள் அவர்களுக்கு முக்கியமான வழிபாட்டு இடங்களாக இருந்தன. பின்னர் சாலமோன் அரசரின் காலகட்டத்தில் முதன் முதலில் ஆலயம் கட்டப்பட்டது. சிறைஇருப்புக்கு முன் உடன்படிக்கை பெட்டி இவ்வாலயத்தில் இருந்தது.
எருசலேமை எபுசியர் இடம் இருந்து கைப்பற்றிய தாவீது, ஒரு அரண்மனையில் தங்கி இருந்தார். ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டி ஒரு கூடாரத்தில் இருந்ததை கண்டு விசனம் அடைந்தார். ஒரு கோவில் கட்டி விட வேண்டும் எண்ணம் அவருக்கு தோன்றியது. ஆனால் அவரால் அதைக் கட்ட முடியவில்லை. அதை அவருடைய குமாரனாகிய சாலமோன் காலத்தில் ஆலயம் கட்டினார்கள். இவ்வாறு இஸ்ரவேல் மக்கள் ஆலயத்தில் வழிபட்டனர்.
வழிபாட்டில் வெளிப்பட்ட கடவுள் எவ்வாறெல்லாம் இருந்தார் என்பதை திருமறைப் பகுதியின் வழியாக காணலாம்.
1. வழிபாட்டில் உறவாடும் கடவுள் வெளிப்படுகின்றார்.(1 ராஜாக்கள்
8:22-30)
எருசலேம் தேவாலயம் முதன் முதலில் சாலமோனால் கட்டி முடிக்கப்பட்டது. அதில் அவர் உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு வந்து வைத்தார். தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியும் நமது தேவனுடைய பாத படியும் தங்குவதற்கு இந்த ஆலயம் என்று குறிப்பிட்டுள்ளார். (1 நாளா 28:2) ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட உடன் அதனை அர்ப்பணிப்பு செய்யும் முன்பதாக சாலமோன் ஒரு மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுக்கின்றார்.
(1 ராஜா8 22 - 30)
சாலமோன் இங்கு ஆசாரியரைப் போல கடவுளுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் நடுவே நின்று ஒரு தொடர்பாளராக செயல்படுகின்றார். வானத்திற்கு நேராய் தன் கைகளை விரித்து மன்றாடினார்.
(V 32) இங்கு கரங்களை உயர்த்துவது அவர்களின் மரபாகும்.
சங்கீதம்
28 :2, 134:2,141:2 இடங்களில் கரங்களை உயர்த்தி ஆண்டவரை தொழுவதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது நம்முடைய தகுதியின்மையை காட்டுகிறது.
சாலமோன் இம்மன்றாட்டில் கடவுளின் பண்புகளை விளக்கி கூறுகின்றார்.
அவர் சர்வ வல்லமையுள்ளவர்,
பேரன்புடையவர், சொல்லிலும் செல்லிலும் ஒன்றாக இருப்பவர்,
மனிதர்களின் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்கின்றவர்,
மனிதர்களை காண்கின்றவர், நீதியுள்ளவர், பாதுகாப்பவர், பராமரிப்பவர், என்றும் கடவுள் உண்மையுள்ளவர், வாக்குறுதிகளை காப்பாற்றுகிறவர் ஆனால் இஸ்ரவேல் மக்கள் அவ்வாறு இல்லை என்றும் அந்த மன்றாட்டிலே கூறுகின்றார்.
வசனம் 26 இல் தாவீதுக்கு சொன்ன வாக்குறுதிகளை தாவீதின் சந்ததி கர்த்தரை பின்பற்றினால் இஸ்ரவேலரை ஆளுவார்கள் என்றும் இரண்டு சாமுவேல் 7:13 இல் உள்ளதை நினைவு கூறுகின்றார்.
இந்த மன்றாட்டில் சாலமோன் கடவுளுக்கு மனு உரு கொடுத்து அவர் செயல்படுகின்றவர் என்பதை அழுத்தமாக கூறியுள்ளார். மேலும் இந்த மன்றாட்டில் அனைத்து மக்களையும் சேர்த்து அவர்களுக்கும் கடவுள் செவி சாய்க்கின்றவர் என்ற கருத்தையும் அழுத்தமாக கூறியுள்ளார்.
ஆலயத்தை விட கடவுள் பெரியவர் வசனம்
27 இல் கூறப்பட்டுள்ளது போல கடவுள் ஆலயத்தில் மட்டுமல்ல எங்கும் நிறைந்து இருப்பவர் என்றும் கூறுகின்றார்.
முழு மகிமையும் இங்கு சாலமோன் கடவுளுக்கு செலுத்துகிறார். அவருக்கு நிகர் யாருமில்லை எனவே முழு இருதயத்தோடும்,
முழு ஆன்மாவோடும் ஆண்டவரே தொழுது கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மன்றாட்டில் சாலமோன் மக்களை ஆலயத்திற்கு நேராக மட்டுமல்ல, கடவுளிடமும் திருப்புகின்றார். வரலாற்றில் கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு செயல்பட்டதை திரும்பத் திரும்பக் கூறி கடவுளின் பண்புகளை மீண்டும் நினைவூட்டி இஸ்ரவேல் மக்களுடைய பற்று உறுதியை வளர்செய்கிறார்.
2. வழிபாட்டில் உரிமைகளை வழங்கும் கடவுள் வெளிப்படுகிறார்.(மார்க்கு
3:1-7)
மாற்கு நற்செய்தி நூல் முதன் முதலில் எழுதப்பட்ட நூலாகும். யூத கிறிஸ்தவர்கள் ரோமர்களால் துன்புறுத்தப்பட்ட போது எழுதப்பட்டது.
ஓய்வு நாளில் இயேசு ஜெப ஆலயத்திற்கு செல்லுகிறார் அங்கு சூம்பின சோம்பின கை உடைய நபரை காண்கிறார்.
ஜெப ஆலயத்திற்கு வந்திருந்த மத தலைவர்கள் ஆண்டவரை தொழாமல் பிறர் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஆலயத்தில் அமர்ந்து யாரை குற்றப்படுத்துவது என்று வகை தேடிக் கொண்டு இருந்தனர்.
இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் என்ன செய்யப் போகிறார் என்ன குற்றம் சாட்டலாம் என்றும் அவர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
ஓயும் நாளின் சிறப்பு பற்றிய சட்டங்கள் சிறையிருப்பின் காலத்திலும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்த பின்னும் விவரமாக அவற்றை எழுதினர். யாத்திராகமம் 20 21 கடவுள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் எனவே நாமும் ஓய்ந்திருக்க வேண்டும் இதை மீறுகிறவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஓய்வு நாளில் யூதர்கள் செய்யக்கூடாத 39 விதமான வேலை பட்டியல்கள் மிஸ்னா என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ளன. ஓய்வு நாளின் நோக்கம் சட்டத்தின் மூலம் மறைக்கப்பட்டிருந்தது. எனவே இயேசு இங்கு சட்டங்கள் முக்கியமல்ல மனிதனின் விடுதலையே முக்கியம் என்று சொல்லி அவர்களை கடிந்து கொள்வதை பார்க்கிறோம். மாற்கு மூன்றாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்தில் இயேசு இரு முறை கோபப்படுகிறார். இது அநீதிக்கு எதிரான கோபமாகும்.
ஐந்து மூன்றில் அந்த சூப்பின கை உடைய மனிதனை எழுந்து நடுவே நிற்க சொல்லுகிறார்.
ஓரம் கட்டப்பட்ட விளிம்பு நிலையில் இருந்த அந்த நபரை மையப் பகுதிக்கு ஆண்டவர் கொண்டு வந்து அவரை குணப்படுத்துகின்றார்.. அவரின் கையை குணமாக்கி ஓய்வு நாள் என்பது உடலுக்கு மட்டுமே ஓய்வு கொடுப்பதாகும் இரக்கம்,
கருணை, அன்பு போன்ற குணங்களுக்கு ஓய்வு கிடையாது. இங்கு இயேசு கிறிஸ்து ஓய்வு நாள் மனிதருக்கானது ஓய்வு நாளுக்காக மனிதர் அல்ல என்பதை தெளிவாக கூறுகிறார். மேலும் மனிதனின் விடுதலையே முக்கியம் என்பதையும் இங்கு மையப்படுத்துவதை பார்க்கின்றோம்.
ஒரு மனிதனின் முழு விடுதலை உணர்வு ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும்,
பொருளாதார ரீதியிலும், கலாச்சார ரீதியிலும், உடலிலும், மனதளவிலும் முழுமையாக விடுதலை அடைவதே முக்கியம் என்று அவனுடைய உரிமைகளை மீட்டு கொடுப்பதை பார்க்கின்றோம்.
பெருமை,
போலித்தனம், இருதய கடினம், போன்ற பரிசேயத்தனத்தை ஆண்டவர் இங்கு கடுமையாக எதிர்க்கிறார்.
சட்டங்களின் மூலம் மனிதர்களை அடிமைப்படுத்திய பரிசேயர்களை ஆண்டவர் கடிந்து கொண்டு வாழ்விழந்த மனிதருக்கு ஆண்டவர் வாழ்வளிக்கின்றார்.
3. வழிபாட்டில் உடனிருக்கும் கடவுள் வழிபடுகின்றார்.(வெளிப்படுத்தல் 14:1-7)
வெளிப்படுத்தல் நூலில் அடையாளங்கள் அதிகமாக இருக்கின்றன.
யூதர்கள் பிற சமய சமயத்தினரால் துன்புறுத்தப்பட்ட பொழுது நம்பிக்கையும்,
ஊக்கமும், ஆறுதலும் கொடுப்பதற்காக இந்த நூல்கள் உருவாகின. ரோம பேரரசரான நீரோ கிறிஸ்தவர்களை கொடிய இன்னல்களுக்கு உள்ளாக்கினார். ரோம அரசர்களை வணங்க மறுத் கிறிஸ்தவர்களை உயிரோடு எரித்து கொன்றனர்.
இக்கால சூழலில் இந்நூல் எழுதப்பட்டது. இப்பகுதியில் அவர்கள் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரின் அரியணையின் முன்பாக புதிய பாடலை பாடி பாடிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்றால் இவ்வுலகில் கிறிஸ்துவுக்காக துன்பங்களை சகித்தவர்கள் ஆவார்கள். இவர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் அரியணையின் முன்பாக நின்றார்கள். இவர்கள் மாசற்றவர்கள்,
பொய் பேசாதவர்கள் என்று ஐந்தாம் வசனத்தில் இவர்களைப் பற்றிய சாட்சி கூறப்பட்டிருக்கின்றது.
துன்பங்களின் மத்தியிலும் கடவுளுடைய கற்பனைகளை கைக்கொண்டு, ஆண்டவரோடு இணைந்து இருந்தவர்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவரால் மீட்கப்பட்டவர்கள்.
இப்பகுதியில் வருகின்ற ஆட்டுக்குட்டியானவர் இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. சீயோன் மலை என்பது எருசலேமில் உள்ள குன்றுகளில் ஒன்று. இது கதறோன் பள்ளத்தாக்கு மேற்கு பக்கமாயும் தேவாலயத்தின் தெற்கு பக்கமாயும் இருந்தது. எபுசியரின் பூர்வீக கோட்டையாக அமைந்திருந்தது. தாவீது அதை பிடித்த பின் அது தாவீதின் நகரமாயிற்று.
பின்னர் சீயோன் என்ற பெயர் தேவாலயம் இருந்த இடத்திற்கும் சில நேரங்களில் எருசலேம் முழுமைக்கும் இது பயன்படுத்தப்பட்டது.
ஒன்று பேதுரு இரண்டு ஆறில் மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன் என்றும் வெளிப்படுத்தல்
14 ஒன்றில் சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டியான அவரைக் கண்டேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீயோன் என்பது இங்கு ஒரு விடுதலையின் இடமாக நாம் புரிந்து கொள்ளலாம். 14ஆம் அதிகாரத்தில் வருகின்ற ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் ரோம அரசின் மூலம் கொல்லப்பட்டவர்கள்.
இவர்கள் ஒருவேளை துறவிகளாக இருந்திருக்கக்கூடும் எனவே தான் பெண்களோடு சேர்ந்து தங்கள் கற்பை கறை படியாமல் காத்துக் கொண்டவர்கள் என்ற பதம் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு கடவுளுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்தவர்கள்,
தூய வாழ்வு வாழ்ந்தவர்கள்.
தூய வாழ்வு வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அது ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ஆட்டுக்குட்டியானவரால் மீட்கப்பட்டவர்கள் என்ற கருத்தை இங்கு கூறுகின்றார். இவ்வுலகில்
நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் நற்செய்திக்காக சகித்து கறையற்ற ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்று இப்பகுதி நமக்கு வலியுறுத்துகிறது.
உபத்திரவத்தில் உறுதியாக நின்று ஆண்டவரே பின்பற்றும் பொழுது உயிருள்ள சாட்சிகளாக நாம் என்றென்றைக்கும் நிலைத்திருக்க முடியும் என்று புரிந்து கொள்ளலாம்.
இங்கு இந் நூலின் ஆசிரியர் யோவான் ஒரு தரிசனத்தில் உபத்திரத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஆண்டவருக்காக புதிய பாடலை பாடிக்கொண்டு, அவரை தொழுது கொண்டு ஆண்டவரோடு இருக்கின்றார்கள் என்கின்ற ஒரு உறுதியை நமக்கு தருகின்றார்.
இப்பகுதியை அப்படியே நாம் புரிந்து கொள்ளாமல் அடையாள முறையில் ஆசிரியர் விளக்கி உள்ளார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்
விண்ணுலகம் நரகம் ஆகியவை இடங்கள் அல்ல,
நிலைகள்(Stages) என்று சாது சுந்தர் சிங் கூறுகின்ற கூற்றை நாம் இங்கு நினைவு கூற முடிகிறது. இவர்கள் தங்களின் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் ரத்தத்தில் தொய்த்து எடுத்தவர்கள். மிகுந்த உபத்திரவத்திலும் தங்களின் பற்றுறுதியை காத்துக் கொண்டவர்கள்.
இவர்களோடு ஆண்டவர் உடன் இருக்கின்றார்.
# முடிவுரை
வழிபாடு என்பது இறைவனோடு கொண்ட உள்ள உறவை குறிக்கிறது. இதில் உடன்படிக்கையின் உறவில் நிலைத்திருக்கும் கடவுள் வெளிப்படுகிறார், உரிமைகளை மீட்டு வாழ்வளிக்கும் ஆண்டவர் வெளிப்படுகிறார், உபத்திரவத்தின் மூலம் உயிருள்ள சாட்சியானவர் வெளிப்படுகிறார். வழிபாடும் வாழ்வும் எப்பொழுதும் ஒன்று கொண்டு தொடர்புடையது. வழிபாட்டில் இறைவனின் பிரசன்னத்தை உணர்வோம். இறைவனோடும், சக மனிதர்களோடும் உள்ள உறவை ஒவ்வொரு வழிபாட்டிலும் புதுப்பித்துக் கொள்வோம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...
Rev. J. Shalinal
Pullambadi
Pastorate

Comments
Post a Comment