"TRINITY: COMMUNITY OF LOVE"- Rev. Augusty Gnana Gandhi

திரித்துவம்: அன்பின் சமூகம்

 #திருமறைப் பகுதி:

தொடக்க நூல் 18: 1 - 15

2 கொரிந்தியர் 13: 5 - 14

 மாற்கு 1: 1 - 11



#உட்புகுமுன்:

அன்பிற்குரியவர்களே "மூவொரு" கடவுளின் திருப்பெயரால் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்பெந்தேகோஸ்தே திருநாளுக்கு பின்வரும் ஞாயிறை  'திரித்துவ திருநாள் ஞாயிறாக' நாம் அனுசரித்து வருகின்றோம்

கடவுளைப் பற்றிய நமது அறிவும், புரிதலும் குறைவு என்பதை ஒத்துக் கொள்வோம். எல்லையற்ற பரம்பொருளாகிய கடவுளை அறிவதற்கு நம்மால் இயலாது. மூவொரு கடவுளைப் பற்றி புரிந்துகொள்ள  முற்படுவதை காட்டிலும்மூவொரு கடவுளின் செயல்பாடுகளை விளங்கிக் கொண்டால் அது நம் பற்றுறுதி வாழ்விற்கு போதுமானது

ஒரு மரத்தின் வேரை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று ஆணிவேர், மற்றொன்று கிளைவேர், அடுத்தது சல்லி வேர். இம்மூன்றும் ஒரேச் செயலை செய்கின்றன, மறைந்து செயல்படுகின்றன, செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவைகளின் மறைவான செயல்பாடு, இணைந்த செயல்பாடு, கூட்டு செயல்பாடு மரத்திற்கு வாழ்வு தருகிறது. அந்த மரம் இலையாக, பூவாக, காயாக,,கனியாக, நிழலாக, விறகாக, ஆற்றலாக, காற்றாக... உலகம் வாழ்வதற்கு, தழைப்பதற்கு பேருதவியாக இருந்து வருகிறது. மூவொரு கடவுளும் அவர்தம் செயல்பாடும் அப்படித்தான் அமைந்திருக்கும். இந்த உலகம் இயங்குவதற்கும், வாழ்வதற்கும் அடித்தளமாக அது அமைந்திருக்கிறது

வரலாற்றில் செயல்படும் கடவுளும்,,  மீட்பர் இயேசு கிறிஸ்துவும், உள்ளுறைந்து ஆற்றல்ப் படுத்தும் தூய ஆவியரும் தொடர்ந்து நம்மை வழி நடத்தி ஆசி வழங்குவாரா....

 

1. சமூகம் இறை சாயலில் வாழ்வதற்கு மூவொரு கடவுள் துணை நிற்கின்றார்....(தொடக்க நூல் 18: 1 - 15)

கடவுள் மனுக் குடும்பத்தை  படைக்கும் பொழுது, தமது சாயலின்படி படைத்தார். ஒவ்வொரு மனுக் குடும்பமும் இறைவனின் சாயலை பிரதிபலிக்க வேண்டும் என்பதே இறைவனின் நோக்கம். இறைவனின் சாயல் என்பது கடவுளின் புறத்தோற்றத்தைக் குறிக்கின்ற ஒன்றல்ல மாறாக கடவுளின் பண்புகளைக் குறிக்கின்ற ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...

ஆபிரகாமை நாடி வந்த மூன்று பேரை நாம் திரித்துவத்தின் அடையாளமாக உணர்ந்து கொள்ளலாம். அவர்கள் மூவரும் ஆபிரகாமோடு உறவு கொள்கிறார்கள், உடன் இருக்கின்றார்கள், அவர்களின் அன்பு உறவில் பங்கெடுக்கின்றார்கள், ஆபிரகாமின் மன விருப்பத்தின் படி நடந்து கொள்கின்றார்கள். மூவொரு கடவுள் எப்போதும் சமூகத்தோடு உறவாடுகின்றவர், தன்னை ஒன்றிணைத்துக் கொள்பவர், சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்றவர் என்பதை இந்த திருமறை பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகின்றது...

ஆபிரகாம் அந்த மூன்று நபர்களுக்கு செய்கின்ற அன்பின் வெளிப்பாட்டில் இறைவனின் சாயல் வெளிப்படுகின்றது. அன்புள்ளத்தோடு அந்த விருந்தினர்களை ஏற்றுக் ஏற்றுக்கொள்கிறார்அவர்களுக்கு விருந்தோம்பல் செய்கின்றார். அவர்கள் வழிப்போக்கர்களாக இருந்தாலும்பிறருக்கு கடமை பணி செய்வது தன் மேல் விழுந்த கடமை என்பதை நினைவில் கொண்டவராக ஆபிரகாம் அவர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தளிக்கின்றார். ..

ஆபிரகாம் மட்டுமல்ல சாராள் அவர்களும் அவர்களோடு இணைந்திருந்த உடன் வேலைக்காரரும் இணைந்து, ஒரு கூட்டு குடும்ப வாழ்வை ஆபிரகாம் முன்னிறுத்துகின்றார். இம்மூவரும் இணைந்து இறைவனின் சாயலை வெளிப்படுத்துகிறார்கள்...

எங்கே இரண்டு பேர் மூன்று பேர் என் நாமத்தின் நிமித்தம் ஒன்றிணைகிறார்களோ, நானும் அங்கே இருப்பேன் என்ற இறைவனின் வாக்குறுதி இந்நிகழ்வில் நிறைவேறுவதை நாம் காணலாம்...

பிறருக்கு உணவளித்தல் என்பது தர்மம் எனும் பொருளில்  அடங்கியிருக்கிறது. ஆபிரகாமும் அவன் குடும்பத்தாரும் எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் அவர்கள் தர்மம் செய்கின்றார்கள்...

தங்கள் நேரத்தை இந்த தர்ம காரியத்திற்கு செலவு செய்திருக்கின்றார்கள். தங்கள் உழைப்பை முகம் சுளிக்காமல் செய்து நிறைவேற்றி இருக்கின்றார்கள். தங்கள் உடைமைகளை ஈந்தளித்திருக்கின்றார்கள். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்திருக்கிறார்கள் இந்த மூவரும். இறைவனின் சாயல் என்பது இத்தகைய பண்புகளை உள்ளடக்கியது என்பதை ஆபிரகாம் தன் செயல் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார்...

தன்னலம் பாராது பிறர் நலனில் அக்கறை கொண்ட  ஆபிரகாம், சாராள் மற்றும் வேலைக்காரர் இம்மூவரையும் திரித்துவத்தின்  அடையாளங்களாக நாம் காணலாம்....

பிதா, குமாரன், தூய ஆவியாகிய மூவொரு கடவுளின் சாயலை ஆபிரகாமும், மனைவி சாராள் அவர்களும், பணியாளர் அவர்களும் பிரதிபலிக்கின்றார்கள். சமூகம் அன்பு உறவோடு வாழவும், ஒருவரை ஒருவர் முந்தி அன்பு செலுத்தவும், பிறர் நலனில் அக்கறை கொள்ளவும், கூட்டுறவாக இணைந்து வாழவும், அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் இறை சாயலை பிரதிபலிக்கவும் மூவொரு  கடவுள் துணை நிற்கின்றார்...

மூவொரு கடவுளை வழிபடுகின்ற நாம் அனைவரும், இறை சாயலை நம் செயல்களில் வெளிப்படுத்தி, சான்று பகர அழைக்கப்பட்டிருக்கின்றோம். மூவொரு கடவுளின் அடையாளங்களாக நம் இல்லங்களும், உறவுகளும் திகழ மூவொரு கடவுள் துணை செய்வாராக...

 

2. சமூகம் இறை நெறியில் வளர மூவொரு கடவுள் வழி நடத்துகின்றார் ....(2 கொரிந்தியர் 13: 5 - 14)

திருத்தூதுவராகிய பவுலடியார் தன் திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதத்தில் அவர்களை மூவொரு கடவுளின் பெயரால் ஆசீர்வதிக்கின்றார், எப்படி எனில் "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக."...

இந்த மூவொரு கடவுளின் ஆசிர்வாதம் தன் திருச்சபை மக்களோடு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றால் திருச்சபை சமூகம் இறை நெறியில் வளர வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றார்...

மூவொரு கடவுளால் உருவாக்கப்பட்ட திருச்சபையும், திருச்சபை சமூகமும் தங்களை சீர்தூக்கிப் பார்க்கவும், சுய தற்பரிசோதனை செய்யவும், தங்களை திறனாய்வு செய்யவும் பவுலடியார் வலியுறுத்தி கூறுகின்றார்...

இறை நெறியில் திருச்சபை சமூகம் எப்படி வளர்வது என்பதை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றார். சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள். ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய மூவொரு கடவுள் உங்களோடேகூட இருப்பார் என்று திருச்சபை சமூகம் இறை நெறியில் வளர கற்றுக் கொடுக்கின்றார்...

திருச்சபை சமூகம் இப்படிப்பட்ட இறைநெறியில் வளர்வதற்கு என்றைக்கு தங்களை அர்ப்பணிக்கின்றார்களோ அன்று மூவொரு கடவுள்  திருச்சபை சமூகத்தோடு  தன்னை முற்றிலுமாய் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றார், உள்ளுறைந்து செயல்படுகின்றார், கடவுளின் சித்தத்தை திருச்சபை , சமூகமாக இணைந்து செயலாற்ற உதவி செய்கின்றார் என்று பவுலடியார் தன் திருச்சபைக்கு வலியுறுத்துகின்றார்...

மூவொரு கடவுளின் நெறியில் வாழுகின்ற திருச்சபை சமூகம் ஒருவரை ஒருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்தும், பரிசுத்தவான்களின் கூட்டத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளும் என்று பவுல் அடியார் திருச்சபைக்கு சுட்டிக்காட்டுகின்றார்...

மூவொரு கடவுள், திருச்சபை சமூகம் இறை நெறியில் வளர்வதற்கு துணையாக இருக்கின்றார், தூண்டுதலாக இருக்கின்றார் மேலும் சமூகத்தின் தூண்களாக திருச்சபையை நிலை நிறுத்துகின்றார்....

திருச்சபை சமூகம் இறை நெறியில் வளர்ந்து சமூகத்தின் தூண்களாக நிலைநிறுத்திக்கொள்ள நாம் அடைக்கப்பட்டிருக்கிறோம்....

 

3. சமூகம் இறை உறவில் மகிழ மூவொரு கடவுள் உடனிருக்கின்றார்...(மாற்கு 1: 1 - 11)

மூவொரு கடவுள், தன்னை உலகத்திற்கு மறைத்துக் கொள்ளாமல் தன்னை மனு உருவில் இயேசு கிறிஸ்துவின் வழியாக தன்னை முழுவதுமாக  வெளிப்படுத்துகின்றார்….

முழுக்கு முனிவர் யோவான் இஸ்ரவேல் சமூகம் இறை பக்தியில் வாழவும், கடவுள் தந்த வாழ்வை கடவுளுக்கு சான்றாக அர்ப்பணிக்கவும் அவர்களை திருமுழுக்கின் மூலமாக நல்வழிப்படுத்துகின்றார்....

யோர்தான் ஆற்றில் முழுக்கு முனிவர் யோவான் அவர்களின் திருமுழிக்கின் வழியாக இறை உறவில் வாழ்வதற்கு, வளர்வதற்கு இஸ்ரவேல் சமூகம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. அதன் அடையாளமாக திருமுழுக்கில் தன்னை இஸ்ரவேல் சமூகம் இணைத்துக் கொண்டது...

தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதின் வழியாக கடவுளோடு ஒப்புறவாக முடியும் என்ற சிந்தையோடும், கடவுள் தங்கள் பாவங்களை மன்னிப்பார் என்ற நம்பிக்கையோடும், கடவுளுக்கு சான்றாக வாழ வேண்டும் என்ற ஒப்படைப்போடும் திருமுழுக்கு பெற வருகின்ற மக்களோடுசமூகத்தோடு மூவொரு கடவுளில் ஒருவராகிய இயேசு கிறிஸ்து தன்னை இணைத்துக் கொள்கின்றார்...

பாவத்தினாலும், அக்கிரமங்களினாலும், மீறுதல்களினாலும் இறை சாயலையும் இறை உறவையும் இழந்த இஸ்ரவேல் சமூகத்தோடு இயேசு கிறிஸ்து தன்னை இணைத்துக் கொள்கின்றார். அவர் திருமுழுக்கு பெற்று கரையேறின உடனே, இவர் என் நேசகுமாரன் இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன் என்று வானில் உண்டான அந்த சத்தம், இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமல்ல அவரோடு திருமுழுக்கில் இணைந்த அனைவரையும் மூவொரு கடவுள் தம் பிள்ளைகளாக தத்தெடுக்கின்றார்....

இந்த மூவொரு கடவுளின்  உறவு  இஸ்ரவேல் சமூகம் பெற்றுக்கொண்ட மாபெரும் பாக்கியம், இலவசமாக கிடைத்த ஒன்று. இந்த உறவு இஸ்ரவேல் சமூகம் மகிழ்ந்து வாழவும், ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்தவும், கடவுள் அன்பாய் இருப்பதைப் போல அன்பாக வாழவும், அன்பு உறவின் மூலமாக என்றும் மகிழ்ச்சியோடு, அன்போடு வாழவும்  மூவொரு கடவுள் இயேசு கிறிஸ்துவின் வழியாக அவர்களை ஆசிர்வதிக்கின்றார்....

மூவொரு கடவுளின் அன்புறவு இயேசு கிறிஸ்துவின் வழியாக வாழ்வை இழந்த மக்களுக்கும், குறிப்பாக ஏழைகள், திக்கற்றோர், அனாதைகள், கைம்பெண்கள, குழந்தைகள், பாவிகள் என கருதப்பட்டோர், நோயின் பிடியில் சிக்குண்டவர்கள்... என்ற அனைத்து நிலை மக்களும் மகிழ்ந்து வாழ என்றும் உதவியாக இருந்து வருகிறது...

அன்புறவில் வெளிப்பட்ட மூவொரு கடவுளின் அன்பும், அருளும், அமைதியும் நாம் வாழும் சமூகத்தில் என்றும் நிலைத்திட மூவொரு கடவுள் என்றும் துணையாய் இருப்பார்...

 

# நிறைவாக....

 

மூவொரு கடவுளின் சாயலை பிரதிபலிப்போம்...

மூவொரு கடவுளின் நெறியில் நாளும் வளர்ந்திடுவோம்...

மூவொரு கடவுளின் அன்புறவில் என்றும் மகிழ்ந்திருப்போம்...

 

 நட்புடன் உங்கள்

 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி 

அரியலூர் சேகரம் 

சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்

✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️

 

Comments