கணக்குப் பார்க்காது ஈந்தளித்தல்
# திருமறைப் பகுதிகள்:
தொடக்க நூல்
13 : 8 - 18
2 கொரிந்தியர் 8 : 1 - 15
மாற்கு 14 : 3 - 11
# உட்புகும் முன்:
"எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்...
பாடலைப் பாடும் போதெல்லாம் மனதிற்குள் கடவுளும், கடவுள் செய்த அருஞ்செயல்களும் வந்து போகின்றது.
"எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது....
இந்தப் பாடல் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல மாறாக பாடல் எழுதியவரின் வாழ்க்கை தொகுப்பை நாம் காணலாம்.
கொடுக்கின்ற வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது,
இது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
பிறந்தநாள்,
திருமணநாள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் உறவுகளுக்கு கொடுக்கப்படும் உணவினை,
அருகில் இருக்கின்ற
முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுப்பது பெருகிக் கொண்டே வருகிறது.
பண்டிகை நாட்களில் நமது குடும்பத்திற்கு ஆடைகள் எடுக்கும் பொழுது,
அத்தோடு சேர்த்து ஏழை எளிய மக்களுக்கும் எடுத்துக் கொடுத்து மகிழ்வது திருச்சபைகளில் பரவலாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.
பல திருச்சபைகளில் "வீதிவாழ்"
மக்களுக்கு உணவு கொடுப்பதும்,
உடை கொடுப்பதும், அவர்கள் நலனில் அக்கறை கொள்வதும் திருச்சபைக் குழுக்களின் பணிகளில் பிரதானமாக இருந்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
ஒருமுறை எங்கள் ஆலயத்தில் வயது முதிர்ந்த ஏழை அன்பர் என்னை சந்திக்க விரும்புவதாக சொல்லி அனுப்பியிருந்தார்.
நானும் பொருளரும் அவரைப் பார்ப்பதற்காக சென்றிருந்தோம்.
கையில் 2000 ரூபாய் அவருக்கு உதவி செய்வதற்காக எடுத்துக் கொண்டு போயிருந்தோம்.
அந்த முதியவரை பார்த்து பேசிக்கொண்டு அவரிடம் அந்த தொகையை கொடுப்பதற்காக நாங்கள் முற்படும்பொழுது
அவர் எங்களிடம் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போனோம்.
ஐயா எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை ஆலயத்திற்கு எழுதிக் கொடுக்கிறேன்,
நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். நாங்கள் இருவரும் வெட்கப்பட்டு
தலை குனிந்து நின்றோம்.
ஒருமுறை ஆலயத்தில் ஒருவர்,
தனது சம்பளத்தில் பத்து சதவீத தொகை எடுத்து வந்து ஆலயத்தின் தேவைகளுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
அவரிடம் ஐயா "ஒரு ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்களா"
என்று கேட்டேன் சொல்லுங்கள் ஐயா என்றார்.
நானும் செயலரும் பொருளரும் அவரை அழைத்துக்கொண்டு, திருச்சபையிலே மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்திற்கு கூட்டிக் கொண்டு போனோம்.
அவர்களின் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அவரிடம் கேட்டேன் தங்கள் தொகையை இந்த பெண்ணிற்கு
"தாலி" செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா? என்று கேட்டேன்,
ஓ தாராளமாக! என்றார்.
அவர்களின் திருமணத்தில் அந்த குடும்பத்தார் தாலி வாங்கி கொடுத்த திருச்சபை அன்பரை,
எங்கள் மகளின் "தாய் மாமன்"
என்று அவரை அறிமுகப்படுத்தினார்கள்.
வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் அதுவும் ஒன்று.
கடவுள் நமக்கு கொடுக்கும் பொழுது அவர் ஒருபோதும் கணக்கு பார்ப்பதில்லை. ஆனால் நாம் கடவுளுக்கு கொடுக்கும் பொழுது கணக்கு பார்த்தே கொடுக்கின்றோம்.
அதற்கு நாம் படைக்கும்
"உண்டியலே" சாட்சியாகும்..
ஒரு சிலரை நாம் அறிமுகப்படுத்தும் பொழுது அவரை "கொடுத்து சிவந்த கரம்" என்று சொல்லுவோம்.
அது நம்முடைய கரங்களாய் இருந்தால் கடவுள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்.
1)உறவுகள் மேம்பட - உரிமைகளைக் கொடுப்போம்.(தொடக்க நூல் 13 : 8 - 18)
2)சமநிலை வளர - உடனிருப்பைக் கொடுப்போம்.(2 கொரிந்தியர் 8 :
1 - 15 )
3)இறையாட்சி மலர - உயர்வானதைக் கொடுப்போம்.(மாற்கு 14 :
3 - 11)
கொடுக்கப்பட்டுள்ள திருமறைப் பகுதிகளை ஜெபத்தோடும் கருத்தோடும் தியானிப்போம்.
1. உறவுகள்
மேம்பட - உரிமைகளைக் கொடுப்போம்.(தொடக்க நூல் 13 : 8 - 18)
ஆபிரகாமும் லோத்துவும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிகின்ற காட்சியை தொடக்க நூல் மிகவும் உணர்வுபூர்வமாக விளக்கி இருக்கின்றது.
இருவருமே செல்வந்தர்கள்,
ஏராளமான உடைமைகளை வைத்திருந்தார்கள்,
மிருக ஜீவன்களுக்கும் பஞ்சமில்லை,
இருவருக்கும் வேலை ஆட்கள் திரளாய் இருந்தார்கள்.
ஆபிரகாமிற்கும் லோத்துவிற்கும் பெரிய மனக்கசப்புகளோ பிரிவினைகளோ இருந்ததாக தெரியவில்லை.
ஆனால் அவரின் வேலைக்காரர்கள் இவர்கள் இருவரும் பிரிவதற்கு அடித்தளமாய் இருந்தார்கள்.
இந்த சூழ்நிலையை ஆபிரகாம் கையாண்ட விதம் மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
ஆபிரகாம் லோத்துவை அழைத்து நாம் இருவரும் உடன் பிறப்புகள்,
நமக்குள் வாக்குவாதம் வேண்டாம்,
நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போகலாம். அது நம் வாழ்விற்கு நல்லது என்று ஆலோசனை கூறுகின்றார்.
இது ஒரே நாளில் நடந்திருக்க முடியாத ஒன்று. பல நாட்கள் நடந்த சண்டை அதன் பின்பதாக நடந்த சமரசங்கள், உடன்படிக்கைகள் இதுவரையிலும் அவர்களின் உறவை நீடிக்க செய்தது.
இப்பொழுது முடிவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இருவரும் பேசி சமாதான உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள்.
எப்பொழுது செல்வங்கள் பெருகுகிறதோ அப்பொழுது உறவுகளில் சிக்கல்கள் வரும். உறவா
- உடைமையா என்று பார்க்கும் பொழுது பெரும்பாலும் உறவுகள் சிதைக்கப்படுகின்றன உடைமைகள் காக்கப்படுகின்றன.
ஆபிரகாமும் லோத்துவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உடைமைகள் அவர்களைப் பிரித்தது என்று சொல்லலாம்.
சொத்துக்கள் அவர்களை இணைய விடாமல் தடுத்தது என்று பார்க்கலாம்.
உறவைக் காட்டிலும் செல்வங்களை முக்கியமாக கருதியதால் அவர்களின் பிரிவு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
காயின் ஆபேல் சம்பவத்தில் உடன்பிறப்புகள் இடையே விரிசல் வந்தது. அந்த விரிசல் உடன்பிறப்பை கொலை செய்யும் அளவுக்கு மாற்றியது.
ஆனால் ஆபிரகாமும் லோத்துவும் இதற்கு முற்றிலும் மாறான ஒரு செயலை தேர்ந்தெடுக்கின்றார்கள் அது "உடன்படிக்கை உறவு."
ஆபிரகாம் மூத்தவர், முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உண்டு. அவர் லோத்துவை அழைத்து நான் இவ்வழி போகிறேன் நீ அந்த வழி போ என்று சொல்லி இருக்கலாம்.
ஆபிரகாம் லோத்துவிற்கு "முடிவெடுக்கும் உரிமையை" கணக்கு பார்க்காமல் கொடுக்கின்றார்.
தன் வாழ்வினை தேர்ந்தெடுக்கும் உரிமை, தன் எதிர்காலம் பற்றிய உரிமை, தன் பாதையை தானே தெரிந்தெடுக்கும் உரிமையை ஆபிரகாம் லோத்துவிற்கு விட்டுக் கொடுக்கின்றார்.
லோத்து தன் கண்களை ஏறெடுத்து பார்க்கும் பொழுது செழுமையாக,
பசுமையாக தெரிகின்ற சமவெளியை தேர்ந்தெடுக்கின்றார்.
செழுமைக்கு எதிர்ப்பதம்
"இல்லாமை" அல்லது வறுமையைக் குறிக்கிறது. ஆபிரகாம் தன் சகோதரன் தெரிவு செய்ததற்கு முற்றிலும் மாறான ஒன்றை தெரிவு செய்கிறார்.
👉🏾ஆபிரகாமின் தெரிவு கடவுளின் பார்வைக்கு ஏற்றதாய் இருந்ததால் கடவுள் ஆபிரகாமோடு தன்னை இணைத்துக் கொள்கின்றார்.
மீண்டும் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்.
👉🏾தன் சகோதரன் வாழட்டும் என்று எந்தவித கணக்கும் பார்க்காமல் செழுமையை விட்டுக் கொடுக்கின்ற ஆபிரகாம் உயர்ந்து நிற்கின்றார்.
👉🏾உறவா
- உடைமையா என்று பார்க்கும் பொழுது உறவு எனக்கு முக்கியம் என்று ஆபிரகாம் சொல்லாமல் சொல்வது அவரின் அணுகுமுறைகளில் வெளிப்படுகிறது.
👉🏾செல்வம் என்பது "செல்வோம்" என்ற சொல்லிலிருந்து வருகிறது.
செல்வம் எப்பொழுது வேண்டுமானாலும் வரும், போகும் ஆனால் உறவு என்பது நிலையானது என்பதற்கு ஆபிரகாம் சான்றாக அமைகின்றார்.
👉🏾பணமா
- பாசமா இவ்விரண்டில் உலகத்தின் நிலைப்பாடு பணத்தில் இருக்கிறதே ஒழிய பாசத்தில் இல்லை என்பது நிதர்சனம்.
இதற்கு முற்றிலும் விதிவிலக்கு ஆபிரகாமன் செயல்பாடுகள் ஆகும்.
👉🏾விசுவாசம்
- நம்பிக்கை - அன்பு மூன்றும் நிலைத்திருக்கிறது.
இவைகளில் அன்பே பெரியது என்று உதட்டளவில் நாம் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் அன்பே பெரியது என்பதை தன் செயல்களால் ஆபிரகாம் நிரூபித்து இருக்கிறார்.
👉🏾வாழையடி வாழையாக மூத்தவர் தன் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை ஆனால் ஆபிரகாம் முடிவெடுக்கின்ற உரிமையை தன் சகோதரனுக்கு விட்டுக் கொடுக்கின்றார். அதுவும் கணக்கு பார்க்காமல் விட்டுக் கொடுக்கின்றார் இது ஒரு முன்மாதிரியான செயலாகும்.
நாமும் நம் உறவுகளில் இதை முனைப்போடு செயல்படுத்துவோம். இது அறவழிப்பாதையாகும்.
அன்பே இதற்கு இலக்கணமாகும்.
2. சமநிலை வளர - உடனிருப்பைக் கொடுப்போம்.(2 கொரிந்தியர் 8 : 1 - 15 )
திருத்தூதர் பவுலின் ஊழியங்களும் அவரின் அணுகுமுறைகளும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்திருப்பதை நாம் காணலாம்.
கொரிந்தியர் திருச்சபை வளர்ந்து பண்பட்ட ஒரு திருச்சபை ஆகும். கொரிந்தியர் திருச்சபைக்கு பவுல் எழுதின கடிதங்கள் வாயிலாக பல விவாதங்கள் அங்கு ஆரோக்கியமாக நடைபெற்று இருப்பதை நாம் காண முடிகிறது.
உதாரணமாக சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவை உண்ணலாமா?
உண்ணக் கூடாதா? பெண்கள் முக்காடு போட வேண்டுமா?
போட கூடாதா? ஆவிக்குரிய வரங்கள் எவைகள்? நியாயப்பிரமாணமா?
அன்பா?... இப்படி பல விவாதங்கள் நடைபெற்று இருப்பதை நாம் காணலாம்.
கொடுக்கப்பட்டுள்ள நிறுபப் பகுதியில் திருதூதுவர் பவுல் அடியார் "கிருபை" என்றால் என்ன? என்பதற்கு புதிய விளக்கம் கொடுக்கின்றார்.
கடவுளின் கிருபை என்பது பரவலாக நாம் பெற்றுக் கொள்வதையே குறிக்கின்றது. எவ்வளவு செல்வங்கள் நாம் சேர்த்து வைத்திருக்கிறோமோ அவைகள் கடவுளின் கிருபைகளால் வந்தவைகள் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
பவுல் அடியார் தமது திருச்சபைக்கு ஒரு மாபெரும் விவாதத்தை துவக்கி வைக்கின்றார்.
கிருபை என்பது பெறுவதா?
கொடுப்பதா? இதில் எது சிறந்தது என்ற புரிதலை நோக்கி திருச்சபையை வழி நடத்துகின்றார்.
மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும்,
தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு,
நான் சாட்சியாயிருக்கிறேன்;.(2 கொரி 8
: 1- 3)
மக்கெதோனியா நாட்டு திருச்சபைக்கு கடவுள் அளித்த மாபெரும் கிருபை என்பது அவர்கள் கொடுப்பதில் விளங்கினது என்பதை பவுலடியார் சுட்டிக் காட்டுகிறார்.
"கிருபை என்பது பெறுவதல்ல
; கொடுப்பதே" என்பதுதான் பவுல் அடியாரின் தீர்க்கமான இறையியல் பார்வையாகும்.
மக்கெதோனியா நாட்டு திருச்சபை அன்பர்கள் மிகுந்த உபத்திரவத்தில் இருந்தார்கள்,
தரித்திரத்தில் இருந்தார்கள், ஏழைகளாய் இருந்தார்கள் ஆனாலும் தங்களுக்கு இருந்த உடைமைகளை தேவை என்று வரும் பொழுது பிறருக்கு பகிர்ந்து கொடுத்தார்கள்.
ஒருவேளை பவுலடியார் உதவி என்று பல திருச்சபைகளுக்கு கடிதம் எழுதியிருக்கலாம். கடிதத்தை பெற்றுக்கொண்ட பல திருச்சபைகள் அதைக் கண்டும் காணாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் இந்த ஏழை திருச்சபை மட்டும் தேவையில் உள்ள மக்களுக்கு குறிப்பறிந்து தங்களை பகிர்ந்து கொடுத்தார்கள் என்பது அவர்களின் உயர்ந்த பண்பினை குறிப்பிடுகின்றது.
ஏழை விதவை தாய் தன்னிடம் இருந்த இரண்டு காசுகளை காணிக்கைப் பெட்டியில் போட்டதை போன்று,
இந்த ஏழ்மையான திருச்சபை பவுலின் கடிதத்திற்கு மதிப்பளித்து,
தங்கள் வறுமையிலும் தங்கள் காணிக்கைகளைப் பகிர்ந்து அளித்தார்கள்.
கணக்குப் பார்க்காமல்,
எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல்,
சேர்த்து வைப்பதற்கு முக்கியத்துவம் தராமல் பகிர்தலுக்கும், "துன்பத்தில் இருப்பவரின் உடன் பங்காளிகளாக இருக்கும் பண்பை உடையவர்களே கடவுளின் கிருபை பெற்றவர்கள்"
என்பதை பவுலடியார் அழுத்தமாக குறிப்பிடுகின்றார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மலை பிரசங்கத்தில்
"ஏழைகளே நீங்கள் பேரு பெற்றோர்"
என்று சொல்வதினுடைய அர்த்தத்தை பல நேரங்களில் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.
மக்கெதோனியா நாட்டு திருச்சபையின் கொடையை அறிந்து கொண்ட பின்பதாக ஏழைகள் தான் பேரு பெற்றோர் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
செல்வங்களை உடையவர்களை காட்டிலும் வறுமையில் இருப்பவர்களும் ஏழ்மையில் இருப்பவர்களும் கடவுளுக்கு மிகவும் அருகில் இருப்பவர்கள்.
காரணம் என்னவென்றால், தங்கள் வறுமையிலும் அவர்கள் மனரம்மியமாக வாழக் கற்றுக் கொண்டவர்கள். தங்களிடம் இருப்பவைகளுக்காக கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.
இல்லாதவைகளுக்காக ஒருபோதும் ஆசைப்பட மாட்டார்கள், அதற்காக பொறாமைப்படவும் மாட்டார்கள். இது அவர்களின் உயர்ந்த பண்பு நிலையை குறிக்கின்றது.
எனவே தான் ஏழைகள் கடவுளின் அரசாட்சிக்குட்பட்டவர்கள் என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.
ஏற்கனவே இறையாட்சியில் அவர்கள் இடம் பெற்றவர்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.
மனது தாராளமாய் இருந்தால் நமது கைகளும் தாராளமாய் விரிக்கும்.
அத்தகைய குணத்தை, பண்பை மக்கெதோனியா திருச்சபை பெற்றிருந்தது.
அந்தக் கிருபையை கடவுள் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்திருந்தார்.
மக்கெதோனியா திருச்சபையார் வறுமையிலும் கொடுத்தார்கள் என்பதை வேறு விதத்தில் நாம் புரிந்து கொள்வோம், எப்படி எனில்,?
அவர்கள் தங்கள் வறுமையிலும் …….
👉🏾"தேவையில் உள்ள மக்களோடு உடன் இருந்தார்கள்"
👉🏾இருப்பதை பகிர்ந்து கொடுக்கவில்லை இருந்ததை எல்லாம் பகிர்ந்து கொடுத்தார்கள். (அனனியா சப்பிராள் போன்று தங்களுக்கென்று பதுக்கி வைத்துக்கொள்ளவில்லை)
👉🏾பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்பதை திருச் சபைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
👉🏾"தோள் கொடுப்பான் தோழன்"
என்று சொல்லுவார்கள். அப்படி தோழமை உறவோடு தேவையில் உள்ள மக்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்
👉🏾அவர்கள் கொடுத்ததின் நோக்கம்
"சமநிலை" வரவேண்டும் என்பதற்காக கொடுத்தார்கள்.
👉🏾பவுலடியார் இதை தெரிவித்திருக்காவிட்டால் இவர்கள் செயல் உலகிற்கு தெரிந்திருக்காது.
👉🏾"வலது கை செய்வதை இடது கை அறியாதிருப்பதாக" என்ற கூற்றுக்கு இணங்க மக்கெதோனியா திருச்சபை செய்திருக்கிறது.
கடவுளும் தமது ஒரே பேரான குமாரனை நமக்காக ஈந்தளித்தார் என்பதை இதன் அடிப்படையில் நாம் இன்னும் ஆழமாக கடவுளின் அன்பைப் புரிந்து கொள்ளலாம்.
🍎கடவுள் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தமது மக்களுக்கு அன்பை பொழிவது போல்,
🍎ஒரு மரம் எந்தவித பிரதிபலனையும் மக்களிடம் எதிர்பாராமல் தன் வாழ்வு முழுவதையும் ஈந்தளிப்பதைப் போல்,
🍎நிலம் தன் மீது எத்தனை வன்முறைகளை மானுடம் செய்தாலும் அதை பொருட்படுத்தாமல்,
எந்தவித கணக்கும் பாராமல் தனது வளங்களை அள்ளிக் கொடுப்பது போல்,
திருச்சபை விளங்க வேண்டும் என்பதே பவுல் அடியாரின் மனவிருப்பமாகும்.
அதுவே இயேசு கிறிஸ்துவின் எதிர்பார்ப்பாகும்.
தேவையில் உள்ள மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு, தங்கள் உடைமைகளை செல்வங்களை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்,
ஆனால்
"உடன் இருப்பது என்பது அதனினும் உயர்வானது."
அத்தகைய உயர்ந்த பண்பை மக்கெதோனியா திருச்சபை பெற்றிருந்தது. நாமும் ஒரு திருச்சபை அங்கத்தினர் தான் என்பதனை உணர்ந்து பார்ப்போம்.
3. இறையாட்சி மலர - உயர்வானதைக் கொடுப்போம்.(மாற்கு 14 : 3 - 11)
ஆண்டவரும் மீட்பரும் ஆகிய இயேசு கிறிஸ்து,
தான் வாழ்ந்த நாட்களில் தேவையில் உள்ள மக்களுக்கு தமது அன்பினை பொழிந்தார்,
இரக்கம் காட்டினார், வாழ்வளித்தார்.
இயேசு கிறிஸ்து எந்த பிரதி பலனையும் பாராமல், கணக்கும் பார்க்காமல் அற்புதங்களையும் அதிசயங்களையும் ஏழை எளியோருக்கு செய்து கொண்டே இருந்தார்.
ஆனால் இஸ்ரவேல் சமூகம் அன்பினை பொழிந்த இயேசு கிறிஸ்துவுக்கு செய்தவைகள் எல்லாம் துரோகங்களும், அவமானங்களும், நிந்தைகளையுமே.
யூத சமூகம் இயேசுவின் பிறப்பை இழிவு படுத்தினர், அவரின் தச்சு தொழிலை கேலி செய்தனர், அவருக்கு பலவிதமான பட்டப் பெயர்களை சூட்டி அவரை மட்டும் தட்டினர்.
உதாரணமாக மரியாளின் மகன், யோசேப்பின் மகன், பாவிகளின் நண்பன், குடிகாரன்,
பேய்களின் தலைவன், நாசரேத்து ஊரான் என்று இயேசுவை புறந்தள்ளியே வைத்திருந்தார்கள்.
ஆனால் இயேசுவின் செயல்களை அங்கீகரித்து, இயேசுவோடு தன்னை இணைத்துக் கொண்டு,
இயேசுவுக்கென்று உயர்வானதை கொடுத்தது யூதர்களை காட்டிலும் புற இனத்து மக்களே அதிகம்.
கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி பகுதியில் இயேசு கிறிஸ்துவுக்கு உயர்வானதை கொடுத்த பெண்மணியை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இயேசு கிறிஸ்துவுக்கு சீமோன் அவர்களின் வீட்டில் நடந்த நிகழ்வு முற்றிலும் ஒரு மாறுபட்ட நிகழ்வாகும்.
இயேசு கிறிஸ்துவின் பணி காலங்களில் இதுபோன்ற செயல் எங்கும் நடைபெற்றது இல்லை என்பதை நாம் அறிவோம்.
ஒரு பெண் நளதம் என்கின்ற பரிமளத் தைலத்தை எடுத்து வந்தார்கள். அதனை உடைத்து இயேசுவின் சிரசில் ஊற்றினார்கள்.
இந்த செயலை யாராவது ஒரு ஆண் செய்திருந்தால், அதனை பாராட்டி இருப்பார்கள். இயேசுவோடு அமர்ந்திருந்த சீடர்களும் அதனை உயர்வாக கூறியிருப்பார்கள்.
இயேசு கிறிஸ்துவுக்கு செய்தது ஒரு பெண், அதுவும் பாவி எனப்பட்ட ஒரு பெண். ஆண் ஆதிக்க சமூகம் பெண்ணின் செயலை இழிவு படுத்தியது.
இதை விற்று தரித்திரற்கு கொடுத்து இருக்கலாமே என்று கொச்சைப்படுத்தியது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்களும் விதிவிலக்கல்ல அவர்களும் பெரும்பான்மை சமூகத்தோடு தங்களை இணைத்துக் கொண்டவர்களாக பெண்ணின் செயலை இழிவு படுத்துவதை நாம் காணலாம்.
தன்னோடு இருந்த சமூகத்தை உற்று நோக்கிய இயேசு கிறிஸ்து,
மனம் திறந்து தனக்கு செய்த அந்தப் பெண்ணை பாராட்டுகிறார்.
அவர்கள் செய்த செயலை அங்கீகரிக்கின்றார்.
யாரும் எதிர்பார்க்காத ஒரு சொல்லாடலை இயேசு கிறிஸ்து பயன்படுத்துகிறார்.
இந்த பெண் "நற்கிரியைகளை செய்திருக்கிறார்"
என்று ஆண் சமூகம் உணரும்படி கூறுகின்றார்.
எது நற்கிரியைகள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதுவும் இயேசுவின் பார்வையில் நற்கிரியைகள் எது என்று நாம் புரிந்து கொண்டால் நலமாக இருக்கும்.
ஏழைகளுக்கு கொடுப்பது என்பதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம். பழைய சோறு, பழைய ஆடைகள், பயன்படுத்திய உடைமைகள் இவைகளை ஏழைகளுக்கு கொடுப்பதில் பெரும்பாலும் திருப்தி அடைந்து விடுகின்றோம்.
🍎ஏழைகளுக்கு கொடுக்கிறோம் என்ற பெயரில் புகழ்ச்சியையும், பெருமை கொள்வதையும், தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதை இந்தப் பெண்மணியின் செயல் திறனாய்வு செய்ய வைக்கின்றது.
🍎மனம் திரும்புங்கள் என்ற முழக்கத்தோடு இறையாட்சியில் அனைவரும் பங்கு வரவேண்டும் உயர்ந்த சிந்தையோடு தம் வாழ்வை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவுக்கு உலகம் தர மறுத்த அங்கீகாரத்தை இந்தப் பெண் அவர்கள் எந்தவித கணக்கும் பாராமல் கொடுத்துள்ளார்கள்.
🍎ஆரோனின் தலை மீது பொழிந்து, அவனது தாடியில் வழிந்து, அங்கியில் குழைந்து வடிந்திடும் பரிமளத்திற்கு ஒப்பானது இந்த நிகழ்வு.
🍎ஆசாரியர்கள் அரசருக்கு செய்ய வேண்டிய அருட்பொழிவை இந்தப் பெண் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு செய்திருக்கிறார்கள்.
🍎அருட்பொழிவு செய்யும் உரிமை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உரியது என்பதை மீட்டெடுத்து இருக்கிறார்கள் இந்த பெண்.
🍎ஏழை எளிய மக்களுக்காக காடு, மலைகள், மேடு, பள்ளம், கிராமம், கடற்கரை, சந்தை வெளி, கல்லறை...ஓடோடி உழைத்த இயேசுவின் பாதங்களுக்கு இந்தப் பெண் உயர்வானதை தந்து மரியாதை செய்து இருக்கிறார்கள்.
🍎இது வரையிலும் இயேசு கிறிஸ்துவின் திருப்பணிகளுக்கு கிடைக்காத அங்கீகாரம், ஒரு ஏழை எளியவரின் வீட்டில்,
பாவி என்று கருதப்பட்ட பெண்ணினால் கிடைத்திருக்கிறது.
🍎நளதம் என்கின்ற தைல குப்பியை திறந்து கொடுப்பதற்கு கூட மனம் இல்லாத ஆண்கள் மத்தியில் அதை உடைத்து முழுவதுமாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்.
🍎இறை ஆட்சி மலர்வதற்கு இயேசு கிறிஸ்துவின் சிந்தையோடு தன்னை இணைத்துக் கொண்ட இந்தப் பெண்ணின் செயலை வரலாறு நினைவு கூற வேண்டும் என்று இயேசு கிறிஸ்து முன்மொழிந்தார்.
🍎இந்தப் பெண் இந்த தைலத்தை வாங்குவதற்கு எவ்வளவு நாள் உழைத்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் உழைப்பின் உயர்ந்ததை உயர்ந்த மனிதருக்கு கொடுத்து மகிழ்ந்தார்கள்.
🍎குறைவை காணுகின்ற மக்கள் மத்தியில் இயேசு கிறிஸ்துவின் நிறைவை கண்ட இந்த பெண் அவரோடு தன்னை இணைத்துக் கொள்வதற்கு அடையாளமாக இந்த செயலை செய்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
# நிறைவாக:
கொடுத்து சிவந்த கரம் என்று ஒரு சிலரை நாம் அறிமுகப்படுத்துவோம். அந்த கரங்கள் நம்முடையதாக இருந்தால் கடவுள் அகமகிழ்வார்.
நமது மனம் தாராளமாக இருந்தால் நமது கைகளும் தாராளமாக விரிக்கும். கொடுத்து பழகினவர்கள் ஒருபோதும் குறைவடைந்ததில்லை.
படைப்பின் மணிமகுடம் மனிதர்கள் என்று நாம் மாறு தட்டிக் கொள்கின்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் மரங்களைப் பார்க்கும் பொழுது அவைகள் கணக்கு பார்க்காமல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
கணக்குப் பார்க்காமல் கொடுப்பதற்கு இறைவன் நமது மூதாதையர்களையே நமக்கு முன் உதாரணமாக வைத்திருக்கிறார். அந்த மூதாதையர்கள் வேறு யாரும் அல்ல மரங்களும்,
செடிகளும், கொடிகளும், நிலமும், இயற்கையையுமே.
நாம் கொடுத்தால் தான் இறைவன் நமக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கையிலே தான், நாம் கொடுக்கின்றோம்.
இந்த நிலையிலிருந்து எப்பொழுது நாம் நம்மை மாற்றிக் கொள்கிறோமோ அப்பொழுது தான் மனிதம் என்னும் நிலையை அடைகின்றோம்.
தேவை என்று வந்து நின்றவர்களுக்கு கணக்கு பார்க்காமல் கொடுப்போம்.
குறிப்பறிந்து நாம் கொடுக்கும் பொழுது நாம் உன்னத நிலையை அடைகின்றோம்.
மருத்துவமனைகளில் ரத்தம் கொடுக்கின்றார்களே,
அவர்கள் ஒருபோதும் கணக்கு பார்ப்பதில்லை. இது யாருக்கு சென்று சேருகிறது என்றும் கணக்கு பார்ப்பதில்லை.
ஒரு குழந்தை தட்டிலிருந்து சோறு எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அதன் அருகே சென்று எனக்கு என்று கேட்டவுடன், எந்த பிரதிபலனையும் பாராமல் ஊட்டி விட்டது. அந்த குழந்தைக்கு நிகர் உலகில் எவருமே இல்லை.
# கணக்குப் பார்க்காமல் வீசுகின்ற காற்றை போல மறுபடியும் பிறப்போம்.
# கணக்குப் பார்க்காமல் தன் வளங்களை அள்ளித் தருகின்ற மரங்களைப் போல வளர்ந்திடுவோம்.
# அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் ... என்ற பாடலை உணர்ந்து பாடி நம்மை அர்ப்பணிப்போம்
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக ...
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக ....
நட்புடன் உங்கள் ஆயர்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️
Comments
Post a Comment