ORDAINED MINISTRY : FRAGRANCE OF CHRIST "Rev. Augusty Gnana Gandhi"


அருட்பொழிவு திருப்பணி : கிறிஸ்துவின் நறுமணம்




# திருமறைப் பகுதிகள்:

விடுதலைப் பயணம் : 29: 1 - 9

எபேசியர் 5 : 1 - 14

லூக்கா 10: 1 - 11

திருப்பாடல்கள் : 99

# உட்புகும் முன்:

"உன்றன் திருப்பணியை ..." என்கின்ற கீர்த்தனை பாடலின் மூன்றாம் சரணம், அருட்பொழிவு பெற்ற திருப்பணியாளருக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகிறது..

உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய

உதவாத பாவி நானே...                

 

காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக்

கஸ்தி மிகவே அடைந்து,-உடல்

பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்,

பகைவர் திருடர் மோசமும்,

சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்

ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே. – உன்றன்

 

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார், ஒரு முறை திருமண்டல வாலிபர் மாநாட்டில் பேசும் பொழுது, நான் அருட்பொழிவு பெற்ற பின்பதாக என் தாய் தந்தையரை பார்த்து 25 வருடங்கள் ஆகிறது என்றார்.

மக்களின், முன்னேற்றத்திற்கான நீதிக்கான... போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டே இருப்பதால், என் தாய் தந்தையரை, என் குடும்பத்தை சந்திக்க எனக்கு நேரமே இல்லை என்றார். அது அருட்பொழிவு பெற்று அமர்ந்திருந்த எங்களைப் போன்ற ஆயர்களுக்கு மிகப்பெரிய அறைகூவலை விடுத்தது.

இறையியல் கல்வி கற்பதற்காக வருகின்றவர்களிடம் பேராயர் அவர்கள் கேட்கின்ற கேள்வி உங்களுடைய அழைப்பு எப்படிப்பட்டது என்பதுதான்.

ஒவ்வொருவரும் தங்கள் அழைப்பை ஒவ்வொரு விதமாக எடுத்துரைப்பார்கள். சிலர் நான் என்னை அர்ப்பணித்தேன் என்பார்கள். சிலர் எனது பெற்றோர் என்னை அர்ப்பணித்தார்கள் என்பார்கள். ஒரு சிலர் வாழ்வில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தினால் கடவுள் என்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன் என்று சொல்வார்கள்.

எது எப்படி இருப்பினும் கடவுளின் அழைப்பு என்பது சிறப்பானது. அருட்பொழிவும் அதற்கான ஆயத்தமும்,  பயிற்சியும் மிகவும் உன்னதமானது. இவைகளை எல்லாம் கடந்து வந்து அருட்பொழிவு அன்று நடக்கின்ற அந்த தருணங்கள், அருட்பணி பெற்றவர் வாழ்விலும் அது மறக்க முடியாத தருணங்கள் ஆகும்.

அருட்பொழிவு வழிபாட்டில் பாடப்படுகின்ற பாடல்களில் மிக முக்கியமான பாடல் "தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே..." எந்த இடம் எமக்கு காட்டிடினும் இயேசுவே அங்கே இதோ போகிறேன்... என்ற வரிகள் மிகவும் அற்புதமானவை.

மூத்த ஆயர் ஒருவர் "அருட்பொழிவின் சிறப்புகளை" ஒரு முறை எடுத்துரைத்தார். அவர் சொன்னார் இறை அன்பர்கள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் இறந்தவரின் உடலுக்கு முதல் மண் இடுவது அருட்கொழிவு பெற்ற தான் என்றார்.

இதில் என்ன சிறப்பு இருக்கிறது?  என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார் இறந்தவரின் குடும்பத்தின் மூத்த மகன் செய்கின்ற (இறந்தவரின் உடலுக்கு முதல் மண் இடுகின்ற)காரியத்தை அருட்பொழிவு பெற்ற ஆயர் செய்வதற்கு கடவுள் வாய்ப்பு தந்திருக்கிறார்.

திருச்சபை குடும்பமே ஆயரின் குடும்பம் தான். இருப்பினும்  இறந்தவரின் உடலுக்கு முதல் மண் இடுவதின் மூலமாக அருட்பொழிவு பெற்ற ஒரு ஆயர் அந்தக் குடும்பத்தின் உறுப்பினராகி விடுகின்றார் என்றார்.

அருட்பொழிவு பெற்ற ஆயர் வயதில் குறைவாக இருந்தாலும், வயதில் மூத்த இறைமக்கள் அவரை பார்த்து "ஐயா" என்று சொல்வது, அவரை கனப்படுத்துவது கடவுளுக்கு செலுத்துகின்ற செயலாக, இறைமகன் இயேசுவையே நம் உருவில் காண்பதாக நாம் பொருள் கொண்டால் நாம் பெற்ற அருட்பொழிவு பொருள் பதிந்த ஒன்றாக அமையும்.

அருட்பொழிவு வழிபாட்டில் நான் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொரு அருட்பொழிவு நாளிலும் மீண்டும் ஒரு முறை உணர்ந்து வாசிப்பது வழக்கம். அப்படி ஒவ்வொரு முறையும் வாசிக்கும் பொழுது என்னில் நறுமணம் வீசுகிறதா? துர்நாற்றம் வீசுகிறதா? என்று சிந்திப்பது வழக்கம்.

எதிர்பார்த்த இயேசு கிறிஸ்துவின் ஆடையையும் அணிந்தாகிவிட்டது, அதிகாரமும் கிடைத்தாயிற்று, அங்கீகாரமும் வந்தாயிற்று, அருட்பணியும் செய்தாயிற்று என்ற மனநிலையில் இருக்கும் பொழுது இயேசு கிறிஸ்துவுக்கு சிலுவையில் கொடுக்கப்பட்ட ஆடையை ஒருமுறை கூட அணியவில்லையே என்ற எண்ணம் எழாமல் இல்லை.

அருட்பொழிவின் மூலம் வருகின்ற அதிகாரங்களை சுவைக்க விரும்புகிற நாம், இயேசு கிறிஸ்து சந்தித்த சிலுவைப் பாடுகளை சுவைக்க ஏனோ மனம் தடுமாறுகிறது.

அழைக்கப்பட்ட அனைவரும் ஆசாரிய வகுப்பை சார்ந்தவர்கள் என்று திருமறை கூறுகிறது. இந்த நாளில் ஆயர்களாக அன்பர்களாக நம்முடைய அழைப்பை, ஒப்படைப்பை திருமறை வெளிச்சத்தின் வழியாக ஆராய்ந்து பார்ப்போம்.

 

1.அருட்பொழிவு : சடங்குகளை செய்வதற்கல்ல; மாறாக சரித்திரத்தை  மாற்றுவதற்கு.(விடுதலைப்பயணம் : 29: 1 - 9)

2.அருட்பொழிவு : அதிகாரம் செய்வதற்கல்ல; மாறாக அடிமைத்தனங்களை வேரறுப்பதற்கு.(எபேசியர் 5 : 1 - 14)

3.அருட்பொழிவு : சமூகத்திலிருந்து விலக்கிக் கொள்வதற்கு அல்ல; மாறாக களத்தில் நின்று போராடுவதற்கு.(லூக்கா 10 : 1 - 11)

 

1. அருட்பொழிவு : சடங்குகளை செய்வதற்கல்ல; மாறாக சரித்திரத்தை  மாற்றுவதற்கு.(விடுதலைப் பயணம் : 29: 1 - 9)

கடவுள் மோசேவுக்கு பணித்த பணிகள் ஏராளம். அவற்றில் மிக முக்கியமானது ஒன்று ஆரோனுக்கு செய்யப்படுகின்ற அருட்பொழிவு நிகழ்வு ஆகும்.

கடவுளின் திட்டத்தின் படி அருட்பொழிவு எவ்வாறு செய்யப்பட வேண்டும், என்னென்ன காரியங்கள் அதில் இருக்க வேண்டும், என்னென்ன பொருள்கள் பயன்படுத்தப்பட வேண்டும், ஆடைகள் எவ்வண்ணமாக இருக்க வேண்டும், தலையில் சூடப்படுகின்ற பாகை எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் என்று மிகவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு இருப்பதை நாம் காணலாம்.

அருட்பொழிவு எவ்வாறு நேர்த்தியாக செய்யப்பட வேண்டும், அது எவ்வாறு பொருள்பட இருக்க வேண்டும் என்பதில் கடவுள் கொண்டிருக்கிற அக்கறை திருமறைப் பகுதியில் நமக்கு எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.

அருட்பொழிவு என்பது கடவுளின் திட்டம். அது கடவுளுக்காக செய்கின்ற திருப்பணி. கடவுளுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கு செய்கின்ற திருப்பணி என்பதையும் இதன் வழியாக நாம் கற்றுக் கொள்கிறோம்.

திருமறை பகுதியில் அருட்பொழிவு ஏழு நாட்கள் நடைபெறுவதாக நாம் அறிகின்றோம். அப்படி என்றால் ஒரு வாரம் அருட்பொழிவுக்காக அனுசரிக்கப்பட வேண்டும் என்பது திருமறை காட்டுகின்ற வழிநடத்தல் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

கடவுள் மோசேயிடம் கூறும் பொழுது ஆரோன் எனக்கு பணிவிடை செய்ய வேண்டும், ஆசாரியப் பணி செய்ய வேண்டும் என்று கட்டளை இடுவதாக நாம் அறிகின்றோம்.

அப்படி என்றால் ஆசாரிய பணி என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம்.

லேவியராகமம் சட்டப்படி (லேவி : 21) ஆசாரியர்க்குரிய பணிகள் எவைகள், ஒரு ஆசாரியர் எவ்வண்ணமாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் தூய்மை எவ்வாறு கடைப்பிடிக்கப்பட வேண்டும், தங்களை வேறுபட்டவராக எப்படி வாழ்ந்து கொள்ள வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டு இருப்பதை நாம் காணலாம்.

எகிப்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் சமூகம், வனாந்தரத்தில் கடவுளால் வழிநடத்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் குடியிருக்கும் போது, இஸ்ரவேல் சமூகம் எப்படி ஒரு முன்மாதிரியான சமூகமாக இருக்க வேண்டும், பக்தி எவ்வண்ணமாக வளர வேண்டும்,  ஆன்மீகம் எவ்வளவு இருக்க வேண்டும், நீதி நியாயங்கள் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும்... என்கின்ற நெறிமுறைகள் பகுத்துக் கொடுத்திருப்பதை நாம் காணலாம்.

ஒரு வகையில் இந்த நெறிமுறைகளை குடியாட்சியினுடைய சட்டத்தோடு நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். குடியாட்சி பெற்றவர்கள் கவனமாக தங்களைத் தாங்களே வகுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற நெறிமுறைகளாகவும் இதை கருதலாம்.

இது ஒரு புறம் இருக்க ஆரோன் அவர்களுக்கு ஏன் அருட்பொழிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற கேள்வி எழாமல் இல்லை. இது கடவுளின் திட்டம் என்று புரிந்து கொள்வதால் அதை நாம் விட்டுவிடலாம்.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால் இந்த அருட்பொழிவில், ஆரோன் கடவுளுக்கு சடங்குகள் செய்வதற்கு மட்டும் தெரிவு செய்யப்படவில்லை என்பதை கடவுளே விளக்குகின்றார்.

ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதற்கு அதன் தலைவர்களே சான்றாக அமைவார்கள். அருட்பொழிவு செய்வதற்கு முன்பதாக ஆரோன் சுத்திகரிப்பு செய்யப்படுகின்றார்.

குறிப்பாக மூன்று பலிகள் ஏறெடுக்கப்படுகின்றன. கறை படிந்த சமூகத்தின் பிரதிநிதி ஆக  உள்ள ஆரோன் சுத்திகரிக்கப்படுவதின் வழியாக "சமூகம் சுத்திகரிக்கப்படுகிறது."

ஆரோனின் சுத்திகரிப்பு "சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பு" என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆரோனுக்காக செலுத்தப்படுகின்ற பலிகள் மூலம் "கடவுள் இஸ்ரவேல் சமூகத்திற்கு பொது மன்னிப்பு" வழங்குவதாகவும் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆரோன் சுத்திகரிக்கப்படுவதின் மூலமாக "ஒட்டுமொத்த சமூகமும் சுத்திகரிப்பிற்கு உட்பட்டது." இதன் மூலம் இஸ்ரவேல் என்னும் ஒட்டுமொத்த சமூகம் "ஒரு புதிய படைப்பாக, ஒரு புதிய சமூகமாக கட்டி எழுப்பப்படுவதை"நாம் இதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.

ஆரோன் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அருட்பொழிவு இஸ்ரவேல் சமூகம் இதுவரை கண்டிராத ஒன்றாக அமைந்திருப்பதை நாம் உணரலாம்.

இதுவரையிலும் வருகின்ற வழிகளில் கடவுளுக்கு பலிபீடம் கட்டி வழிபாடு செய்த இஸ்ரவேல் சமூகம், இப்பொழுது ஆலய வழிபாட்டுக்குள் மெல்ல நுழைவதை நாம் அறிய முடிகிறது.

அருட்பொழிவு என்பது சமய சடங்குகளை செய்வதற்காக மட்டும் ஆரோனுக்கு வழங்கப்படவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் கடவுளின் பிரதிநிதியாகவும் பணி செய்வதற்காகவே இந்த தகுதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே அருட்பொழிவு என்பது பணியாளரைக் குறிக்கின்ற ஒரு சொல்லாக நாம் அறிந்து கொள்ளலாம்.  ஆகவே அது

🍎தன்னார்வ பணியாக இருக்கலாம்,

🍎சேவை பணியாக இருக்கலாம்,

🍎திருத்தொண்டாக இருக்கலாம்,

🍎முன்னேற்ற பணியாக இருக்கலாம்,

🍎வழிநடத்துகின்ற பணியாக இருக்கலாம்,

🍎சாட்சியாக வாழுகின்ற பணியாக இருக்கலாம்,

🍎நீதித்துறை சார்ந்த பணியாக இருக்கலாம்,

🍎தலைமைத்துவ பணியாகவும் இருக்கலாம்,

🍎பணியாளராகவும் இருக்கலாம்,

🍎கடைநிலைப் பணியாளராகவும் இருக்கலாம்,

ஆக மொத்தத்தில் அருட்பொழிவு பெற்றவர் ஒரு பணியாளர்(Worker or Servant) இன்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.

அருட்பொழிவு பெற்ற ஒருவரை இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது அங்கு

 

🍏அதிகாரத்திற்கு இடமில்லை,

🍏அடிமைத்தனத்திற்கு இடமில்லை,

🍏ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை,

🍏தூய்மை தீட்டு என்பதற்கு இடமில்லை,

🍏ஆண்டான் அடிமை என்பதற்கு இடமில்லை,

🍏பால் இன வேறுபாடுகளுக்கும் இடமில்லை,

🍏படிநிலைகளுக்கும் இடமில்லை,

மொத்தத்தில் "ஒரு சமத்துவ சமூகம் இந்த அருட்பொழிவின் மூலமாக கடவுளால் முன்னெடுக்கப்படுவதை, கட்டப்படுவதை"நாம் நன்கு உணரலாம்.

ஆரோனுக்கு ஏன் இந்த அருட்பொழிவு வழங்கப்பட்டது என்பதை நாம் வேறு ஒரு கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

"அருட்பொழிவு பெறுவதற்கு கடவுள் எதிர்பார்க்கின்ற தகுதி என்ன?" என்பதை இறையியல் பார்வை கொண்டு நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடவுள் ஆரோனை அருட்பொழிவிற்கு தெரிந்து கொண்டதின் நோக்கம்,  அவர் மட்டும் தகுதி உடையவர் என்றல்ல, அவர் கடவுளின் பார்வையில் சிறப்பானவர் என்பதாலும் அல்ல, இஸ்ரவேல் சமூகத்தில் சிறந்த கோத்திரத்தை உடையவர் என்பதாலும் அல்ல மாறாக "அருட்பொழிவிற்கான தகுதி கடவுளால் உருவாக்கப்படுகிறது" என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

அருட்பொழிவிற்கான தகுதியை இந்த திருமறையின் வெளிச்சத்தில் நாம் பார்ப்போம் என்று சொன்னால், அந்தத் தகுதியினை இவ்வாறு புரிந்து கொள்ளலாம்,

🍁அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்,

🍁ஒடுக்குதலில் தானும் துன்புற்றவராக இருக்க வேண்டும்,

🍁ஒடுக்குதலுக்கு எதிராக அவர் பணியாற்றி இருக்க வேண்டும்,

🍁கடவுளின் அழைப்பை பெற்றிருக்க வேண்டும்,

🍁கடவுளின் கருவியாக செயல்பட்டு இருக்க வேண்டும்,

🍁ஒடுக்கப்பட்டவரின் சார்பாக இருக்க வேண்டும்,

🍁ஒடுக்கப்பட்டவர்களோடு வாழ்ந்து பணி செய்ய வேண்டும்,

🍁தங்களை எந்த சூழ்நிலையிலும் அந்நியப்படுத்திக்கொள்ளாமல் மக்களோடு மக்களாக கலந்து இருக்க வேண்டும்,

🍁ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பணியாற்ற வேண்டும்,

🍁கடவுளுக்குரிய மொழி என்று பிரித்துப் பார்க்காமல் மக்களின் மொழியோடு கடவுளை வழிபடுகின்றவராக இருக்க வேண்டும்,

🍁இறையச்சம் உடையவராய், இறைத் தண்டனை தீர்ப்புக்கு தன்னை உட்படுத்திக் கொண்டவராய் இருத்தல் வேண்டும்,

இவைகள் தான் அருட்பொழிவு பெறுபவரின் தகுதிகள் என்பதை திருமறை வெளிச்சத்தில் நாம் அறிந்து கொள்கிறோம்.

எனவே ஆரோனின் அருட்பொழிவு மேற்கண்ட இறையியல் தெளிவுகளை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

அருட்பொழிவு திருப்பணி என்பது வெறும் சடங்குகளை செய்வதற்காக மட்டுமல்ல ஒடுக்கப்பட்டோரின் விடுதலை சரித்திரத்தை மாற்றி அமைக்கவும், புதிய விடுதலை வரலாற்றை கட்டி அமைக்கின்ற ஒரு பணியாளராகவும் இருப்பதற்காகவே அருட்பொழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த நாளில் உணர்ந்து கொள்வோம்.

அருட்பொழிவு பெற்ற ஒவ்வொருவரும் நாம் கடவுளின் ஒரு பணியாளர், கடைநிலைப் பணியாளர், கடவுளின் ஒரு கருவி என்பதை உணர்ந்து பார்க்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

இயேசு அணிந்திருந்த ஆடையை அணிந்து பார்க்க ஆசைப்படுகின்ற ஒவ்வொருவரும், சிலுவையில் இயேசுவுக்கு வழங்கப்பட்ட ஆடையையும் அணிந்து பார்க்க எப்பொழுது முன் வருகிறோமோ, அப்பொழுது நாம் பெற்ற அருட்பொழிவு மேன்மை உள்ளதாக மாற்றம் பெறுகிறது.

2. அருட்பொழிவு : அதிகாரம் செய்வதற்கல்ல; மாறாக அடிமைத்தனங்களை வேரறுப்பதற்கு.(எபேசியர் 5 : 1 - 14)

 அனைவரும் ஆசாரிய கூட்டம் என்கின்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் திருமறைப் பகுதியை நாம் தியானிப்போம்.

திருத்தூதுவராகிய பவுல் அடியார் ஏபிசிடி(ABCD)எழுதுகின்ற இந்த கடிதத்தில் திருச்சபையின் அழைப்பு எப்படியாக இருக்க வேண்டும் திருச்சபையாரிடம் எதிர்பார்க்கப்படுகின்ற காரியங்கள் என்ன என்பதை அழகாக விளக்குகின்றார்.

நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.(எபேசியர் 2 : 10)

திருச்சபையின் தலையாய பணி என்பது பக்திக்குரியவர்களாக வாழ்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், "நற்கிரியைகளை செய்வதற்காகவே அழைக்கப்பட்டு இருக்கிறோம், உயிரோடு எழுப்பப்பட்டு இருக்கிறோம், உன்னதங்களில் அவரோடு உட்கார வைக்கப்பட்டு இருக்கிறோம்" என்பதை சுட்டிக் காட்டுகிறார். (எபேசியர் 2: 10)

அருட்பொழிவு திருப்பணிகளில் முக்கியமான ஒன்று "பிரதிபலன் பாராமல், எந்த எதிர்நோக்கும் இல்லாமல், பாரபட்சம் பாராமல் நற்கிரியைகளை செய்வதுதான்.

நல்லோர்கள் மீதும் தீயோர்கள் மீதும் கடவுள் எவ்வாறு மழையை பெய்யப் பண்ணுகிறாரோ அதைப்போலவே அதே உணர்வுடன் திருப்பணி செய்வது தான் அருட்பொழிவு பெற்றவரின் அழைப்பாகும்.

பவுல் அடியார் காட்டுகின்ற அழுத்தங்கள் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவைகள்,

 

 

🍎கடவுளை பின்பற்றுதல்,

🍎கடவுளுக்கு சுகந்த வாசனையாக ஒப்புக்கொடுத்தல்,

🍎அன்பிலே நடந்து கொள்ளுதல்,

🍎கற்பு நெறியுடன் கூடிய வாழ்வு,

🍎உலக பற்றற்ற வாழ்வு,

🍎நாவடக்கம்,

🍎மற்றவர்களை அற்பமாய் எண்ணாதிருத்தல்,

🍎வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடத்தல்,

🍎ஆவியின் கனிகள் நிறைந்த வாழ்வு,

🍎நீதியின் மேல் பசி தாகம்,

🍎வாய்மை,( எபேசியர் 5: 1 - 16)

மேற்கண்ட ஒவ்வொரு காரியங்களும் அருட்பொழிவு பெற்றவருக்கும் அழைக்கப்பட்ட அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும் என்பதை பவுல் அடியார் சுட்டிக்காட்டுகின்றார்.

உறவு முறைகளில் மிகவும் முக்கியமானது பங்காளி முறை. அன்புக்குரிய பரட்டை அண்ணன்(Rev. Dr. Theophillus Appavu)அவர்கள் தன்னுடைய கிராமிய வழிபாட்டில் ஆரம்பிக்கும் பொழுது

"பங்காளி முறையெல்லாம்

பாங்கு உடனே வந்துருச்சு பாரூலகை பெத்தவரே

அறிவு உடனே வந்துவிடு.." என்று ஆரம்பிப்பார்.

பவுல் அடியார் தன்னுடைய திருச்சபைக்கு இந்த உறவு முறையை சுட்டிக் காட்டுகிறார். அருட்பொழிவு பெற்றவரும், ராஜரிக ஆசாரியக் கூட்டமும் "யாருக்கு பங்காளிகளாக இருக்க வேண்டும்" என்பதை அழுத்தம் திருத்தமாக பவுல் அடியார் சுட்டிக் காட்டுகிறார்.

 சிற்றின்பங்கள், பொருளாசை எல்லா அடிமைத்தனங்களுக்கும் வேராக இருக்கிறது. இவைகளில் விழுந்து போனவர்கள் ஏராளம்.

இப்படிப்பட்ட நபர்களை பவுல் அடியார்பொல்லாதோர்என அழைப்பதை காணலாம். இவர்களுக்கு நேர் எதிரானவர்கள் பரிசுத்தவான்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

பவுலடியார் குறிப்பிடுகின்ற பரிசுத்தவான்களுக்கு அருட்பொழிவு பெற்றவரும் அழைக்கப்பட்டவர்களும் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பது மாபெரும் எதிர்பார்ப்பாகும்.

பவுல் அடியார் குறிப்பிடுகின்ற பொல்லாதவர்கள் சமூகத்தின் உயர் நிலையில் இருப்பவர்கள், செல்வந்தர்கள், அதிகாரங்களில் இருப்பவர்கள், அடிமைப்படுத்தும் சக்திகள் என்பதை சொல்லாமல் சொல்லுகின்றார்.

திருச்சபை என்பது இந்த அடிமைத்தனத்திற்கு, அதிகாரங்களுக்கு, ஆதிக்க சக்திகளுக்கு ஒருபோதும் தன்னை இழந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

கடவுள் அருளுகின்ற மீட்பு என்பது "தனிமனித மீட்பு என்பதைக் காட்டிலும் சமூக மீட்பு" என்பதை திருமறை ஆரம்பம் முதற்கொண்டு வலியுறுத்திக் வருகிறது.

பவுல் அடியாரும்,  எபேசு திருச்சபை இப்படிப்பட்ட மீட்பை இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணம்,  உயிர்ப்பின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறது.(எபேசியர் 2 : 5 -9) என்பதை சுட்டிக் காட்டுகின்றார்.

திருச்சபை என்பது கூட்டுவாழ்வு. அருட்பொழிவு பெற்றவர் கூட்டு வாழ்வின் பிரதிநிதியாகின்றார். இந்த கூட்டு சமூகம் தங்களைத் தாங்களே அடிமைப்படுத்தும் அதிகார சக்திகளுக்கு என்றும் பங்காளிகளாகி விடக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

தான் மட்டும் மீட்கப்பட்டால் போதும் என்று வாழுகின்ற வாழ்வு அது சுயநல வாழ்வு. இது இறை ஆட்சிக்கு எதிரானது. கூட்டு வாழ்விற்கு முரணானது. கூட்டு விடுதலைக்கும்  எதிரானது.

கடவுளின் அன்பை ருசித்த ஒவ்வொருவரும் அந்த அன்பை பிறரும் ருசிக்கும்படியாக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும். அதுவே கடவுளின் தலையாய எதிர்பார்ப்பும்,  இயேசு கிறிஸ்து முன்வைத்த சீடத்துவமும் ஆகும்.

திருத்துதுவராகிய பவுல் எபேசு சபைக்கு எழுதுகின்ற இந்த கடிதத்தில் அவர்களை "புற இனத்தார்" என்று அழைக்கின்றார்.(எபேசியர் 3 : 1)

பவுல் அடியாரின் புரிந்துகொள்ளுதலின்படி கடவுள் தம்முடைய திருப்பணிக்கென்று "சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கராகவும், சிலரை போதகராகவும் ஏற்படுத்தினார். (எபேசியர் 4 : 22 - 13)

அப்படி என்றால் பவுல் அடியார் வலியுறுத்துகின்ற மற்றொரு உண்மை என்னவென்றால், "கடவுளின் அருட்பொழிவு,  யூத எல்லைகளைத் தாண்டி  பிற இனத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது" என்பது தான்.

இதனை எளிய முறையில் புரிந்து கொள்ளலாம். எப்படி எனில் "கடவுளின் அருட்பொழிவு பால் - இனம் சார்ந்த வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது" என்பாகும்.

எனவே கடவுள் யூத இனத்து மக்களை மட்டும் தெரிந்து கொள்ளவில்லை, மாறாக ஒடுக்கப்படுகின்ற அத்தனை மக்களையும், கடவுள் தம் மக்களாக தெரிந்து கொண்டு, அவர்களுள் ஒருவரை அருட்பொழிவு செய்து தம்முடைய திருப்பணிக்கு பயன்படுத்துகிறார்" என்பது பவுல் அடியாரின் ஆழமான இறையியல் ஆகும்.

அருட்பொழிவு பெற்ற ஒவ்வொருவரும் "அடிமைப்படுத்தும் சக்திகளுக்கு காரணிகளுக்கு ஒருபோதும் வீழ்ந்து போகாமல், எழுந்து போராட அழைப்பு விடுக்கின்றது." இந்தக் கருத்தை பவுலடியார் தனது திருச்சபைக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

எப்படியெனில் "தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.(எபேசியர் 5  :  14) என்று அழுத்தம் திருத்தமாக பவுலடியார் சுட்டிக் காட்டுகின்றார்.

எனவே அருட்பொழிவு பெற்ற ஒவ்வொருவரும்,  அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் "ஆயர்களாக, இறை அன்பர்களாக ஒன்றாக வாழுகின்ற இறைச் சமூகம் அடிமைப்படுத்தும் அதிகாரங்களுக்கு எதிர்த்து நிற்பதோடு மட்டுமல்ல, அத்தகைய அடிமைத்தனங்களை வேரறுப்பதற்கு தரப்படும் பொறுப்பேஅருட்பொழிவு" ஆகும்.

இத்தகைய விடுதலைப் பணியில் பங்கெடுக்கின்ற ஒவ்வொருவரும் பங்காளி உறவுகளாக கட்டப்பட்டு இருக்கிறோம். இயேசு கிறிஸ்து இதற்கு மூலைக்கல்லாய் இருக்கிறார். அவர் மீது திருச்சபைக் குடும்பம் மாளிகையாக கட்டப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்து அணிந்திருந்த ஆடை இரு பொருள்படுகிறது. ஒன்று அது அடிமை வாழ்வை சுட்டிக்காட்டுகிறது மற்றொன்று குருதி சான்றாக மரித்தவர்களின் நிலையையும் எடுத்துரைக்கின்றது.

இயேசுவைப் போல வாழவும், சிந்திக்கவும், செயல்படவும் அருட்பொழிவு அனைவருக்கும் வாய்ப்பு வழங்குகிறது. அது எல்லா எல்லைகளையும் தாண்டி உயர்ந்த உன்னத நிலைக்கு வாழ அனுப்பி விடுகின்றது.

அருட்பொழிவு பெற்ற ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்து எவ்வாறு தீமையை அழிப்பதற்கு,  அநீதியை ஒழிப்பதற்கு, இறை நீதியை நிறுவுவதற்கு, அன்பினை வழங்குவதற்கு சிலுவையை கருவியாக எடுத்துக் கொண்டாரோ, அதேபோல ஒவ்வொரு அருட்பொழிவு பெற்றவருக்கும் சிலுவை அருட்பொழிவில் வழங்கப்படுகிறது என்பதை உணர்வில் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

திருமுழுக்கில் நமது நெற்றியில் வரையப்படுகின்ற சிலுவை, அருட்பொழிவில் நமக்கு திருமறை வடிவில் வழங்கப்படுகிறது.

நமக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் ஆள்வதற்கு அல்ல, அடிமைப்படுத்துவதற்கு அல்ல மாறாக அடிமைத்தனங்களை ஒழிப்பதற்கு, வேரறுப்பதற்கே வழங்கப்படுகிறது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டால், அருட்பொழிவில் ஒவ்வொருவரும் இயேசுவின் அடிச்சுவட்டில் பயணிக்கிறோம் என்பது நிதர்சனமாகிறது.

ஆகையால் அருட்பொழிவு என்பது மாபெரும் அழைப்பாகும் அந்த அழைப்பு அநீதிக்கு எதிராக போராடவும்,  அடிமைத்தனத்திற்கு எதிராக துணிந்து நின்று போராடவும் அழைப்பு விடுக்கின்றது.

 

3. அருட்பொழிவு : சமூகத்திலிருந்து விலக்கிக் கொள்வதற்கு அல்ல; மாறாக களத்தில் நின்று போராடுவதற்கு.(லூக்கா 10 : 1 - 11)

கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி பகுதியில் இயேசு கிறிஸ்து 70 சீடர்களை அருட்பணித் திட்டத்திற்கு பயன்படுத்துகின்ற நிகழ்வும், அவர்களை அனுப்புகின்ற நிகழ்வும் நடைபெறுகிறது. இதை அருட்பொழிவோடு நாம் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இறையாட்சியை நிறுவுவதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 12 பேரை தெரிந்து கொண்டார். அவர்கள் தம்மோடு இருக்கவும், உடன் பயணிக்கவும், இணைந்து பணியாற்றவும் அவர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தினார்.

தேவைகள் அதிகம் இருக்கின்ற சூழ்நிலை அறிந்த இயேசு கிறிஸ்து தம் சீடர்களின் வட்டத்தை மேலும் விரிவாக்கி, பணி அமர்த்தினார்.

அந்த 70 சீடர்களை ஆண்டவர் தெரிந்து கொண்ட விதம் எப்படி என்று நமக்கு தெரியாது. ஏனென்றால் முந்திய நிகழ்வுகளில், அவர் ஒவ்வொருவராக பெயர் சொல்லி அழைத்து, தம்மோடு பயணிக்க அவர்களை அழைத்து இருந்தார்.

இந்த 70 சீடர்கள் ஆண்டவரின் திருப்பணியால் உந்தப்பட்டு வந்தவர்களாக இருக்கலாம் அல்லது, அவரின் இலட்சிய பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கு தன்னார்வமாக வந்தவர்களாக இருக்கலாம், அல்லது அற்புதங்கள் வாழ்விலே நடைபெற்று அதன் மூலம் ஆண்டவரோடு இணைந்து பயணிப்பதற்கு தங்களை அர்ப்பணித்தவளாகவும் இருக்கலாம்.

இந்த 70 பேரும் இயேசுவின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் அவர்களை பணிக்கு அமர்த்தி வழி அனுப்புகின்ற அந்த நிகழ்வு ஒரு எளிய முறையில் நடந்திருக்க வேண்டும்.

ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களுக்கு கூறிய வார்த்தைகள் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள், அவர்களுக்கு ஆற்றலையும் வழங்கினார். அதிகாரத்தையும் வழங்கினார். கடவுள் தமக்குத் தந்த அனைத்து

தகவுகளையும் அவர்களுக்கு வாரி வழங்கி, தம்மை போல பணி செய்வதற்கு அவர்களை பணி அமர்த்தினார்.

அவர்களை இரண்டு இரண்டு பேராக தமக்கு முன்பாக அனுப்பினார். (லூக்கா10:1) இது கூட்டுத் திருப்பணியின் அடையாளமாக புரிந்து கொள்ளலாம்.

புறப்பட்டுப்போங்கள், ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன் (லூக்கா 10 : 3) என்று அவர்களிடம் இயேசு கூறினார்.

ஆண்டவர் இயேசு சொன்னதின் அர்த்தத்தை எப்படிப் புரிந்து கொள்வது என்று சிந்திக்கும் பொழுது, தற்போது இருக்கும் உலக அதிகாரங்கள், அரசு எந்திரங்கள், சமய வட்டங்கள், செல்வந்தர்கள் அனைத்தையும் ஓநாய்களோடு ஒப்பிடுவதை நாம் பார்க்கலாம்.

அப்படிப்பட்ட ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகளைப் போல உங்களை அனுப்புகிறேன் என்று சொல்வதின் அர்த்தம், " பாடுபடுவதற்காகவே அவர்களை தேர்ந்தெடுத்தார்"என்று விளங்கிக் கொள்ளலாம்.

மொத்தத்தில் அந்த 70 பேரும் "பாடுபடும் தாசர்களாக" இயேசு கிறிஸ்து அவர்களை உருவாக்கி சமூகத்திற்கு முன்பாக அவர்களை நிறுத்துகின்றார்.

"வன்முறைக்கு எதிராக அறவழியில் அவர்களை போராடுவதற்கு" ஆயத்தப்படுத்தி அவர்களை பணி அமர்த்தினார் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அன்றைய சமய தலைவர்களும் , குருகுல கல்வியும், சீடர்களும் தங்களை சமூகத்திலிருந்து விலக்கிக் கொண்டு தங்களை தூயவராக வாழ்வதுதான் சிறப்பு என்ற கருத்தியலில் வாழ்ந்து வந்தார்கள்.

குறிப்பாக சமய தலைவர்கள் ஜெப ஆலயங்களில் மாத்திரம் அவர்கள் பணி செய்வதும், மறைக்கல்வி பரப்புவதும் தலையாய பணியாக கருதி செயல்பட்டு வந்தார்கள்.

இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு முற்றிலும் எதிராக, இயேசு கிறிஸ்து 70 பேரை "சமூகத்தில் நின்று, களத்தில் நின்று, ஒடுக்கப்பட்ட மக்களின் துணையாக, அவர்களின் குரலாக நின்று பணியாற்றுவதே சீடத்துவம்" என்கின்ற புதிய எதிர் கருத்துகளை செயல் வடிவில் முன் நிறுத்துகின்றார்.

அருட்பொழிவு செய்யப்பட்டவர்களும் இத்தகைய கருத்தியலில் தங்களை இணைத்துக் கொள்வது தான் சிறந்தது என்ற சித்தாந்தத்தை இயேசு கிறிஸ்து 70 நபர்களை தெரிந்து கொண்டதன் வழியாக நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்.

இயேசு கிறிஸ்து பணித்த செயல்களை சீடர்கள் திறம்பட செய்தார்கள் என்பதை அவர்களின் செயல்கள் நிரூபிக்கின்றன.

இயேசு கிறிஸ்துவின் சிந்தையோடு நாம் இணைத்து இந்த செயல்களை உற்று நோக்கினால் அவைகள் காட்டுகின்ற பாடங்கள்,

அருட்பொழிவு அருட்பணி என்பது,

🍎அருட்பணி என்பது பணத்தினால் அல்ல,

🍎சொகுசான வாழ்க்கை மூலமாகவும் அல்ல,

🍎ஓரிடத்தில் நிறுவனம் ஆக்கப்பட்ட நிலையிலும் அல்ல,

🍎மக்கள் தங்களை வந்து சந்திக்க வேண்டும் என்ற நோக்கிலும் அல்ல,

🍎எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் அல்ல,

🍎பாதரட்ச்சைகள் உட்பட எந்த அடையாளமும் சார்ந்து அல்ல,

🍎உணவுக்காக ஒருவரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலும் அல்ல,

🍎நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி பணியாற்றுகின்ற நிலைமையிலும் அல்ல,

என்பதை இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம்.

எனவே அருட்பொழிவு பெற்றவரின் திருப்பணி என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனைக்கும் முற்றிலும் நேர் எதிரானது என்பதை நாம் இந்த திருமறைப் பகுதி வழியாக விளங்கிக் கொள்கின்றோம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து எழுபது சீடர்களை ஆரோனைப் போன்று அருட்பொழிவு செய்யாமல், ஆண்டவரின் திருப்பணிக்கு எளிய முறையில் பணி அமர்த்தி அருட்பொழிவு செய்யப்பட்டார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

அந்த 70 சீடர்களும் பணியமர்த்தப்பட்ட அந்த நிகழ்வு ஒரு அருட்பொழிவு செய்யப்பட்ட நிகழ்வுக்கு சமமாக நாம் கருதலாம்.

அந்த 70 சீடர்களும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று அன்றைய காலகட்டங்களில் மக்கள் மத்தியில் இருந்து சமூகத் தீமைகளையும், பிசாசுகளின் ஆற்றலையும், நோய்களை குணமாக்கியதையும் இயேசுவிடம் கூறுவதை காணும் பொழுது அவர்களின் அருட்பொழிவு திருப்பணி என்பது நறுமணம் வீசுகின்ற ஒன்றாக இயேசு கிறிஸ்து கண்டார், அகமகிழ்ந்தார்.

அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.(லூக்கா 10 : 17)

பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.(லூக்கா 10 : 23)

அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக்கா 10 : 24)

இயேசு கிறிஸ்து உருவாக்கிய இந்த எழுபது சீடர்கள் அருட்பொழிவு திருப்பணியின் அடையாளங்களாக நாம் காணலாம். அந்த 70 சீடர்களும் மக்களோடு மக்களாக தங்களை இணைத்துக் கொண்டு, மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்களாக அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கு தங்களை ஒரு கருவிகளாக ஒப்புக்கொடுத்ததை இந்த திருமறை பகுதி நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

எனவே இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கின்ற அருட்பொழிவு திருப்பணி என்பது சமய எல்லைகளைத் தாண்டியது,

👉🏾சமூக முன்னேற்றத்தை கருத்தில் கொண்டது,

👉🏾கடவுளுக்கு செய்கின்ற பணி என்பது மக்களுக்கு செய்கின்ற சேவையே என்பதை உள்ளடக்கியது,

👉🏾மக்களின் பாடுகளில் பங்கெடுக்காதவர் ஆண்டவரோடு பங்கெடுக்க முடியாது என்பதை உணர்த்தியது,

👉🏾தனிநபர் சார்ந்த பொதுநலன் சார்ந்து உழைப்பது என்பதை மையப்படுத்தியது,

👉🏾இயங்கிக் கொண்டே இருக்கும் இயக்கம் என்பதை முன்னிறுத்தியது,

👉🏾70 பேரை போன்று தங்களை முதன்மைப்படுத்தாமல் இறை செயல்களை முதன்மைப்படுத்துவதை வலியுறுத்துகிறது,

👉🏾சமூக நீதி, சமத்துவம், மனித நேயம் போன்ற காரணிகள் சமூகத்தில் வேரூன்றி கட்டப்படுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது,

👉🏾ஒடுக்குதல் அற்ற, சுரண்டலற்ற, பதுக்கலற்ற ஒரு சமூகம் உருவாவதற்கு ஆணிவேராக இருக்கிறது,

👉🏾ஏசாயா தீர்க்கர் கண்ட "அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும், கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும், ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.(ஏசாயா 11 : 6)

இந்த செயல்பாடுகளை சித்தாந்தங்களை உள்ளடக்கியது என்பதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

அருட்பொழிவு திருப்பணி என்பது இத்தகைய மணம் வீசும் நறுமணமாக உலகில் திகழ அருட்பொழிவு பெற்ற ஒவ்வொருவரும் தங்களை மறு அர்ப்பணிப்பு செய்ய திருமறை நமக்கு வலியுறுத்துகின்றது.

"மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அவர்களின் குரலாக களத்தில் நின்று, அநீதிகளை எதிர்த்து போராடி, பாடுபடும் தாசர்களாக, குருதி சான்றாக மரிப்பதற்கும் தங்களை அர்ப்பணிக்கின்றவர்களே அருட்பொழிவுக்கு தகுதி உடையவர்கள்" என்பதை இதன் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.

# நிறைவாக:

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் என்ற கீர்த்தனைப் பாடலை ஒரு முறை அருட்பொழிவைப் பெற்ற ஒவ்வொருவரும் உணர்ந்து பாடுவோம்...

பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்

பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்

எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்

எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்

ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா

ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்....

நியாயத்தீர்ப்பு நாளில் அருட்பொழிவு பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் உக்கிரானத்துவத்தை கடவுள் முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. கடவுள் நம்மிடம் எதிர்பார்த்த பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறோமா என்பதை மறு ஆய்வு செய்து உணர்ந்து பார்ப்போம்.

கடவுளின் வார்த்தையை பகிர்ந்து கொள்ளும் போதும், அப்பம் பிட்கும்போதும், திருவிருந்து பகிர்ந்து கொடுக்கும் போதும், பரிசுத்த பீடத்தில் நிற்கும் பொழுதும், இயேசு அணிந்திருந்த ஆடையை அணிந்திருக்கின்ற போதும் இந்த தகுதி கடவுளால் வந்தது என்பதை உணர்ந்து கடவுளுக்கு பணி செய்ய நம்மை மறுபடியும் அர்ப்பணிப்போம்.

அருட்பொழிவு பெற்று,  மக்களோடு மக்களாக நின்று, அநீதிகளை எதிர்த்துப் போராடி குருதி சான்றாக மரித்த நமது முன்னோர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

அருட்பொழிவு பெற்ற ஒவ்வொருவரும் நமது பெயர்களுக்கு பின்னால் பல பட்டங்களை போட்டுக் கொள்கிறோம், பெயருக்கு முன்னாலும் அடையாளங்களை இட்டுக் கொள்கிறோம். இது கடவுள் நமக்கு அளித்த கிருபை என்று எண்ணி, கடவுளின் திட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டு, இயேசுவின் வழியில் பயணித்து, இறை ஆட்சியை இந்த பூமியில் நிறுவுவதற்கு பங்காளிகளாக நாம் இணைத்துக் கொள்வோம்.

அன்பர்களும் ஆயர்களும் இணைந்து கல்வி, மருத்துவம், சேவை, விழிப்புணர்வு.... என முழு விடுதலையை நோக்கி இணைந்து பயணிப்போம்.

நமக்கு கிடைக்கப்பெற்ற அருட்பொழிவு ஏசுவின் மலைப்பொழிவிற்கு இணையாக அமைந்திட

🍏இறை அருளை நாடுவோம், இறை பாதம் பணிந்திடுவோம், இறைவழி தொடர்ந்திடுவோம்,

🍏இறைவன் விரும்பும் நறுமணம் வீசிடுவோம்,

🍏இறை ஆசியாய் வாழ்ந்திடுவோம்...

 

நட்புடன்  உங்கள்

 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்

️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀


Comments