"THEOLOGICAL EDUCATION: MAKING OF THE FAITHFUL"- Rev. Augusty Gnana Gandhi

இறையியல் கல்வி : பற்றுறுதியாளர்களை உருவாக்குதல்

# திருமறை பகுதிகள்:

யோசுவா 4 : 1 - 9

1 தீமோத்தேயு 6 : 11 16

மத்தேயு 13 : 1 - 9

திருப்பாடல்கள் : 1



# உட்புகும் முன்:

ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய கல்வி குறித்து மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகிறார்கள்.

இன்று ஒவ்வொருவருடைய வீட்டிலும் தங்களுடைய பிள்ளைகள் மருத்துவராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும், இந்திய ஆட்சிப்  பணி (IAS) படிக்க வேண்டும், போட்டித் தேர்வு  (Group exam) எழுத வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கின்றார்கள் இது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

தங்களுடைய பிள்ளைகளின் படிப்பில் செலுத்துகின்ற கவனம் அவர்களின் ஆன்மீகத்தில் இருக்கிறதா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.

அரசு தேர்வு எழுதுகின்ற பிள்ளைகள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயம் வருவது குறைந்து கொண்டே வருகிறது. அவர்களுக்கான சிறப்பு வகுப்பில் பங்கு பெறுவதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.

விடுமுறை வேதாகமப் பள்ளியிலும் கிறிஸ்தவ பிள்ளைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டிய காலகட்டங்கள் இது.

அதேசமயம் எல்லோரிடமும் அலைபேசி இருக்கிறது, நவீன தொலைக்காட்சிகளும், இசை சாதனங்களும் இருக்கின்றது. அலைபேசி, முகநூல், வாட்ஸ்அப் களில் கிறிஸ்தவ செய்திகளும், அருளுறைகளும், பாடல்களும் கொட்டி கிடக்கின்றன.

எண்ணற்ற கிறிஸ்தவ சேனல்கள் தொலைக்காட்சியில் தங்களின் செய்திகளை, பாடல்களை, நிகழ்வுகளை தந்து கொண்டே இருக்கின்றார்கள்.

அவைகள் பெரும்பாலும் இறுதியில் காணிக்கையை மையப்படுத்தியே தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

எண்ணற்ற பாடல்கள், ஆவிக்குரிய புத்தகங்கள், அனல் மூட்டும் கூட்டங்கள்,  எழுப்புதல் கீதங்கள்,  பரவசமூட்டும் சாட்சிகள், மிகப்பெரிய கன்வென்ஷன் கூட்டங்கள்,  உலக அளவில் பிரசித்தி பெற்ற இறை பணியாளர்கள், அற்புத பெருவிழாக்கள்... இவைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.

திருச்சபைகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது. தபசு காலங்களில் மிகப்பெரிய கன்வென்ஷன் கூட்டங்களும், அசன பண்டிகைகளும், தோத்திரப் பண்டிகைகளும், ஆலய நாள் விழாவும், குடும்ப பண்டிகைகளும் நடைபெறாமல் இல்லை நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இவைகள் எல்லாவற்றையும் சற்று திறனாய்வு கண்ணோட்டத்தில் உற்றுப் பார்ப்போம் என்று சொன்னால்

 

🍎தங்கள் பாரம்பரியங்களை தூக்கிப் பிடிப்பதற்கும்,

🍎தங்களின் பெருமையை பறைசாற்றுவதற்கும்,

🍎சாதியத்தை தக்க வைப்பதற்காகவும்,

🍎தங்களின் செல்வ செழிப்பை காட்டுவதற்காகவும்,

🍎தங்களின் ஆட்சி நிர்வாகத்தை பறைசாற்றுவதற்கும்,

🍎மற்ற சபைகளைக் காட்டிலும் தங்களை உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்வதற்கும்,

🍎தங்களின் வருமான பெருக்கத்திற்காகவும்,

🍎மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்திருப்பதையும்,

🍎மக்களை வீதிகளில் இறங்கி மக்கள் சார்ந்த போராட்டங்களில் பங்கெடுப்பதை தடுப்பதையும்,

🍎ஆவிக்குரிய செயல்பாடுகளில் ஈடுபட்டால் போதும் அரசியல் நமக்கு வேண்டாம் என்று திசை திருப்பவதையும்,

🍎நம்முடைய குடியிருப்பு வேலை இருக்கிறது இந்த உலகம் தீயது மாயை என்ற செய்தியை மறைமுகமாக போதிப்பதையும்,

🍎ஏழைகளைக் குறித்த கரிசனை அற்றவர்களாக வழி நடத்துவதாகவும்,

🍎நீதி நேர்மை இவைகளுக்கான முன்னெடுப்புகளில் இருந்து நம்மை விடுவித்து சுய நீதிக்கான செயல்களில் ஈடுபடுவதற்கு உந்துவதையும்,

🍎பாடுபடுவதை காட்டிலும் சுகபோகமாக வாழ்ந்து எங்கோ பணி செய்யும் ஒரு மிஷனரிமார்களுக்கு, அருட்பணியாளர்களுக்கு கொடுத்து மகிழ்வதை உற்சாகப்படுத்துவதாகவும்,

🍎செழுமையை மையப்படுத்தி  வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வழி நடத்துதலாகவும், 

இருப்பதை நாம் நன்கு அறிவோம் அல்லது நாம் அறியாமலும் இருப்போம்.

 

ஆராதனை நேரங்களை தவிர்த்து திருமறை ஆய்வு போன்றவைகள் அங்கங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்  ஆழமான திருமறை அறிவுக்குள்ளாக வளர்ப்பதில் சற்று பின்தங்கியே இருக்கிறோம்.

இதைப் போல் ஒவ்வொரு குடும்பத்து அங்கத்தினர்களும் திருமறை அறிவிலும், இறையியல் கல்வியிலும் நாம் வளர்ந்து இருக்கிறோமா என்பதை இந்த நாளில் நாம் உணர்ந்து பார்ப்போம்.

திருமுழுக்கு கொடுக்கின்ற சமயத்தில் "கடவுளைப் பற்றிய அறிவில் உங்கள் பிள்ளைகளை வளர்க்க வாக்கு கொடுக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, பெற்றோர்களாகிய நாம் வாக்குக் கொடுக்கிறோம். இறை பிரசன்னத்தில் நாம் உடன்படிக்கை செய்து இருக்கிறோம்.

ஒருவேளை கடவுள் இதில் கணக்கு கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம் என்பதை நிதானமாக யோசித்துப் பார்ப்போம்.

இந்தப் பின்னணியத்தில் இந்த நாளினை "இறையியல் கல்வி ஞாயிறாக" அனுசரிக்கின்றோம்( Theological Education Sunday).

 

1.இறையியல் கல்வி  : கடவுள் பற்றிய பார்வையை விசாலமாக்குகிறது.(யோசுவா 4 : 1 - 9)

2.இறையியல் கல்வி  : இறை ஆட்சிக்கான சவால்களை மேற்கொள்ள அழைக்கிறது.(மத்தேயு 13 : 1 - 9)

3.இறையியல் கல்வி  : இறை பண்பில் வளர வழிநடத்துகின்றது.(1 தீமோத்தேயு 6 : 11 16)

 

 

1. இறையியல் கல்வி  : கடவுள் பற்றிய பார்வையை விசாலமாக்குகிறது.(யோசுவா 4 : 1 - 9)

இஸ்ரவேல் மக்கள் வாழ்வில் இரண்டு அற்புதங்கள், அவர்களின் பற்றுறுதி வாழ்வை பலப்படுத்தியது. ஒன்று செங்கடல் பிளந்த அற்புதம், மற்றொன்று யோர்தான் ஆறு குவியலாக நின்ற அற்புதம்.

மேற்கண்ட இரண்டும் இஸ்ரவேல் மக்களுடைய வாழ்வில் கடவுள் பற்றிய நம்பிக்கையை பலப்படுத்தியதோடு மட்டுமல்ல விடுதலை வாழ்வு நிதர்சனம் என்பதை உறுதிப்படுத்தியது.

இஸ்ரவேல் மக்கள் யோர்தான் ஆற்றை கடந்த சம்பவம் கடவுளைப் பற்றிய புரிதலையும், கடவுளின் இருத்தலையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது.

இதற்கு முந்தைய அதிகாரத்தில் கடவுள் யோசுவாவோடு பேசுகின்ற உரையாடல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் அந்த உரையாடல்,

"கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன்"(யோசுவா 3 : 7)

கடவுள் மோசேயோடு இருந்தார்,  யோசுவாவோடு இருந்தார். இவ்விருவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள்  என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் மோசேயோடு யோசுவாவோடு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களோடு அவர்கள் துன்பத்தில் கடவுள் உடன் இருக்கின்றார் என்பதே இதன் கருத்தாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் கடவுள் உடனிருந்து, அவர்களை எவ்வாறு விடுவிக்கின்றார் என்பதை விளக்குவது தான் இந்த பகுதியாகும்.

நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், இங்கு மூன்று அம்சங்களை கவனிக்க வேண்டும் ஒன்று உடன்படிக்கைப் பெட்டி மற்றொன்று ஆசாரியர்கள் மூன்றாவது மக்கள்.

உடன்படிக்கைப் பெட்டி என்பது கடவுளின் இருத்தலை குறிக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களோடு தன்னை கடவுள் தன்னை இணைத்துக் கொள்வதை உடன்படிக்கை பெட்டி வலியுறுத்துகிறது.

யோர்தான் ஆற்றில் உடன்படிக்கைப் பெட்டியும் மக்களோடு மக்களாக பயணிக்கின்றது. கடவுள் துன்புறும் மக்களோடு தானும் துன்புறுகிறார் என்பதை இந்நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது.

கடவுள் "துன்புறும் கடவுள் மட்டுமல்ல,  ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை வாழ்வுக்கு நேராக வழிநடத்துபவர்" என்பதையும் இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆசாரியர்கள் மக்களுக்கும் உடன்படிக்கைப்பெட்டிகும் முன்பதாக யோர்தான் ஆற்றில் நடக்கின்றார்கள். அவர்களின் காலடித்தடம் பட்டவுடன் தண்ணீர் குவியலாக நின்றது என்பதை நாம் அறிகிறோம்.

இந்த ஆசாரியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தான் வந்தவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கென்று எந்த ஒரு தனித்துவமும் கிடையாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆசாரியர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பிரித்துக் கொள்ளாமல், ஒடுக்கப்படுகின்ற சமூகமாகவே வாழ்ந்தார்கள் என்பது சிறப்புக்குரிய ஒன்று.

ஆசாரியர்களுக்கென்று தனி மொழியும் கிடையாது, கடவுளை வழிபடுவதற்கு உரிய சிறப்பு மொழியும் அவர்களுக்கு கிடையாது. அவர்களும் மக்களுள் மக்களாக வழிநடத்தப்பட்டார்கள் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

இறையியல் கல்வி என்பது வெறும் இறைவனைப் பற்றி பயில்கின்ற கல்வி மட்டும் அல்ல மாறாக இறைவனின் இருத்தலையும், இறைவன் யாரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதையும் தெளிவாக விளக்குகின்றது.

ஒடுக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டை கடவுள் கொண்டு இருக்கிறார் என்பதையும், எந்த ஒடுக்குதலையும் கடவுள் விரும்பார் என்பதையும் இந்த திருமறைப் பகுதி நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.

கடவுள் அதிகாரங்களுக்கும், அடிமைத்தனங்களுக்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குதலுக்கும் எதிரானவர் என்கின்ற புதிய பார்வையை நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.

விடுமுறை வேதாகமப் பள்ளியில் சிறுபிள்ளைகளுக்கு முதன் முதலாக கற்றுத் தருகின்ற வசனம் "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியும் படைத்தார்" என்பதுதான்.

அந்த வசனம் சிறுபிள்ளைகளுக்கு பசு மரத்தில் பதிந்த ஆணியைப் போல அவர்களுக்குள் பதிந்திருக்கும். அதன் பின்னர் இந்த உலகை படைத்த கடவுள் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

கடவுள் எங்கேயோ தன்னை மறைத்துக் கொண்டு இருக்கிறவர் அல்ல மாறாக இருக்கின்றவராகவே இருக்கின்றார், பாடுபடும் மக்களோடு உடன் இருக்கின்றார், துன்புறும் தாசனாக தன்னை வெளிப்படுத்துகின்றார்.

துன்புறும் மக்களின் அழு குரலை கேட்டு அவர்களை விடுவிக்க களம் காண்பவராக கடவுள் தன்னை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துகின்றார் என்பதை இறையியல் கல்வி நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

"கடவுள் வெறும் அற்புதங்கள் மட்டும் செய்பவராக அல்ல கடவுள் செய்கின்ற ஒவ்வொரு அற்புதங்களுக்கு பின்பதாக ஒரு விடுதலை வரலாறு உண்டு" என்பதை கருத்தில் கொள்ள இறையியல் கல்வி நம்மை நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

கடவுள் தனிமனித விடுதலை மட்டுமல்ல சமூக விடுதலையை கட்டமைக்கின்றவர். வரலாற்றில் செயல்படும் கடவுளின் செயல்பாடுகளையும் இறையியல் கல்வி நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.

கடவுள் அன்பு செய்கிறவர், மன்னிக்கின்றவர், இரக்கமுடையவர், மனதுருக்கம் உடையவர்... என்றெல்லாம் அறிந்திருக்கிற நாம்

கடவுள் நீதி உள்ளவர், நேர்மையின் வடிவானவர், தீமையைப் பார்க்க மாட்டாது சுத்த கண்ணர், ஆகாாரின் அழுகுரலை கேட்டவர், எகிப்தியரின் ஒடுக்குதலை கண்டவர், பாடுபடும் மக்களின் கூக்குரலை அறிந்தவர்...

அது மட்டுமல்ல எங்கெல்லாம் ஒதுக்குதல் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அந்த ஒடுக்குதலுக்கு எதிராக மக்களோடு மக்களாக துணை நின்று, அவர்களை வலுவூட்டி, ஆற்றல்

தந்து, போராடி வெற்றி பெறுவதற்கு வழி நடத்துகின்றவர் என்கின்ற மாபெரும் உண்மையை இறையியல் கல்வி நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

மோசே, யோசுவா போன்ற தலைவர்களாக நாம் திகழவும், அன்றைய ஆசாரியர்களைப் போல பாடுபடுகின்ற மக்களோடு நம்மை இணைத்துக் கொண்டு பாடுபடவும், துணை நிற்கும் கடவுளோடு களத்தில் துணை நின்று போராடவும் இறையியல் கல்வி நம்மை அழைக்கின்றது.

 

2. இறையியல் கல்வி  : இறை ஆட்சிக்கான சவால்களை மேற்கொள்ள அழைக்கிறது.(மத்தேயு 13 : 1 - 9)

இறையியல் கல்வி கற்றுக் கொடுக்கின்ற மற்றுமொரு பாடத்தை கொடுக்கப்பட்ட திருமறைக் பகுதி வழியாக நாம் காணலாம்.

இறையரசு பற்றிய உண்மைகளை விளக்குவதற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து உவமைகளைக் கையாளுகின்றார். விவசாய மக்கள் நிறைந்திருக்கின்ற பகுதிகளில் இந்த உவமையை அவர் மேற்கோள் காட்டுகின்றார்.

விதை விதைக்கிறவர் தன் பணியை செய்கின்றார். அவர் தூவுகின்ற விதை பல இடங்களில் விழுகிறது, அது விழுந்து முளைக்கின்றது

மண்ணில் விழுகின்ற எல்லாவற்றையும் மக்கசெய்கின்ற மண்ணானது விதைகளை மட்டும் ஒருபோதும் அது மக்கசெய்வதில்லை.

விதைக்குள் ஒளிந்திருக்கும் வாழ்வினை மண் கண்டு கொள்ளுகிறது. விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சங்களை அது இனம் கண்டு கொள்கிறது.

மீண்டும் ஒரு புதிய போராட்டத்தை துவங்க வந்திருக்கின்ற விதையை மண் வரவேற்கின்றது. விதைக்கு மண் வாழ்வளிக்கின்றது.

வீழ்கின்ற விதை ஆனது நம்பிக்கையோடு மண்ணில் விழுகிறது. "வீழ்வதெல்லாம் எழுவதற்கே"  என்கின்ற விதையின் நம்பிக்கையை மண்ணானது ஒருபோதும் நீர்த்துப்போக செய்வதில்லை.

இயேசு கிறிஸ்து கூறின இந்த உவமை விதையின் போராட்டத்தை, சவால்களை, சோதனைகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

விதை விழுந்த இடங்கள் வழி, பாறை, முள்ளுள்ள இடம் மற்றும் நல்ல நிலம். விழுந்த விதைகள் தன் பணியை துவக்குகின்றன.

விழுந்த இடங்களில் எல்லாம் விதைகள் முளைக்க தொடங்குகின்றன. அவைகள் வளர்கின்றன.

இயேசு கிறிஸ்து கூறிய இந்த உவமையில் விதைகள் சந்திக்கின்ற சவால்களை அழகாக கையாண்டு இருக்கின்றார்.

வழியருக்கே விழுந்த விதையை பறவைகள் உணவாக்கிக் கொள்கின்றன. அந்த விதைகள் பறவைகளுக்கு உணவாக இருந்தாலும் பறவையின் உண்ட விதைகள் பறவைகளின் எச்சங்கள் வழியாக  மீண்டும் எங்கோ ஓரிடத்தில் அது முளைத்தெழும்பும், பலன் கொடுக்கும்.

பாறை அருகே விழுந்த விதை சீக்கிரத்தில் முளைக்கின்றது ஆனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெயிலின் கொடுமையால் அது அழிந்து போகிறது. ஆனால் அதன் போராட்ட குணம் முடிந்தவரை போராடுகிறது.

முள்ளில் விழுந்த விதை வேரூன்றி வளர்கிறது ஆனாலும் நிலைத்து நிற்க முடியவில்லை வளர்ந்து பலன் கொடுக்க முடியவில்லை.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவைகளுக்கு விளக்கம் கொடுக்க முற்படும்பொழுது வேறு ஒரு புதிய விளக்கத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறார் அது படிக்கின்ற கேட்கின்ற மக்களுக்கு இறையியல் கல்வியை அது கற்றுக் கொடுக்கிறது.

விளையாமல் போன விதைகளை குறித்து ஆண்டவர் விளக்கும் பொழுது, இறை ஆட்சிக்கு எதிரானவர்கள் யார்? தடைகற்கள் எது? என்பதை தெளிவாக விளக்குகின்றார்.

பொல்லாதோர், உபத்திரவம்,  துன்பம், உலகத்தின் மீது கொண்ட பற்று, செல்வத்தின் மீது கொண்ட மோகம் ஆகிய இவைகளே இறை ஆட்சிக்கு எதிரானவைகள் என்பதை இயேசு கிறிஸ்து விளக்கி காட்டுகின்றார்.

நல்ல நிலத்தில் விழுந்த விதை 100 ஆகவும், 60 ஆகவும், 30 ஆகவும் பலன் கொடுக்கிறது என்பதையும் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார். 30, 60, 100 என்று வரிசைப்படுத்துவது வழக்கம் ஆனால் இங்கு அதற்கு முற்றிலும் மாறாக தலைகீழாக அதன் வளர்ச்சியை இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.

நல்ல நிலத்தில் விழுந்த விதை எவ்வாறு  தன் வளர்ச்சியை கொடுத்து கொண்டு இருக்கிறதோ அதைப்போல இறையாட்சி அமைவதற்கு அழைக்கப்பட்டவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்,

நூறு விழுக்காடு அவர்கள் தங்களது பணியை செய்து கொண்டே இருப்பார்கள் என்பதை இயேசு கிறிஸ்து அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார். 

தீயோர், உபத்திரவம், துன்பம், பண ஆசை, செல்வ குவிப்பு இவைகள் இறை ஆட்சி மலர்வதற்கான தடை கற்கள் என்பதையும் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்.

இறையியல் கல்வி என்பது இறை ஆட்சி பற்றிய புரிந்து கொள்ளுதலை நமக்கு விளக்கி காட்டுகிறது. இறை ஆட்சி அமைவது என்பது சாதாரணமான செயல்கள் அல்ல மாறாக அவைகள் சவால்களை சந்திப்பதையும், சவால்களை மேற்கொள்வதையும் முன்னிறுத்துகின்றன.

இறை ஆட்சி என்பது செல்வக்குவிப்புக்கு எதிரானது, உலகத்தின் மீது கொண்டுள்ள பற்றுக்கு எதிரானது, நாளைய தினத்தை குறித்த கவலைக்கு இது முற்றிலும் மாறானது என்பதை இயேசு கிறிஸ்து கூறிய உவமை விளக்கி காட்டுகிறது.

உலகில் தீயோரின் ஆட்சி எப்பொழுதும் இருக்கும். அவர்களோடு இறையாட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. அவர்கள் விரித்த வலையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாமல் தன்னை விடுவித்துக் கொள்வதே இறை ஆட்சிக்குரிய தன்மைகளில் ஒன்று என்பதையும் உவமை விளக்குகிறது.

உலகத்தில் உங்களுக்கு உபத்திரங்கள் உண்டு ஆனால் உலகத்தை ஜெயித்தேன் என்ற கூற்றுக்கு இணங்க இறை ஆட்சி அமைவதற்கான சவால்களை சந்திக்க இயேசு கிறிஸ்துவின் உவமைகள் வழி இறையியல் கல்வி நமக்கு அறைகூவல் விடுகின்றது.

பதுக்கலுக்கு எதிராக, தீமைக்கு எதிராக, தீயோருக்கு எதிராக, துன்பம் இழைப்போருக்கு எதிராக, ஒடுக்குதலுக்கு எதிராக போராடவும் சவால்களை சந்திக்கவும் சவால்களை மேற்கொள்ளவும் இறையியல் கல்வி நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளை பற்றி ஆண்டவர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை ஏனெனில் அவைகள் எப்போதும் வளர்ந்து பலன் கொடுக்கும் கனி தரும்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து வந்ததின் நோக்கம் வழியருகே, பாறை, முள்ளுள்ள இடங்கள், வழிகள்... இவைகளை மாற்றுவதற்காக தான் என்பதை இயேசு கிறிஸ்துவின் உவமை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

நல்லவர்கள் வாழ்ந்து வளரவும்,  தீயோர் மனம் மாறவும், துன்புறுவோர் ஏற்றம் பெறவும், உபத்திரவத்தில் இருப்போர் வாழ்வு செழிக்கவும் யார் பணி செய்வார்கள் எந்த கேள்வியை இந்த திருமறை பகுதி எழுப்புகின்றது.

அழைக்கப்பட்டவர்களும்,  தெரிந்தெடுக்கப்பட்டவர்களும், சீடர்களும் தீயோர்களுக்கு எதிர்த்து நிற்கவும், உபத்திரத்தில் இருப்பவர்களை விடுவிக்கவும், துன்பத்தில் இருப்பவரின் துயரை துடைக்கவும், ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் பெறவும் உழைப்பதே இறையாட்சிக்கான பணிகள் என்பதை இயேசு கிறிஸ்து உவமை வழியாக கற்றுக் கொடுக்கின்றார்.

இயேசு கிறிஸ்துவின் அடியவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமல்ல இயேசு கிறிஸ்துவின் பணிகளில் பங்கெடுக்கின்ற மக்களாக, சவால்களை மேற்கொள்கின்ற தொண்டர்களாக பாடுபட வேண்டும் என்பதை இந்த உவமை சுட்டிக்காட்டுகிறது.

மனம் திரும்புங்கள் என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தை செல்வக் குவிப்பில் இருந்து மனம் திரும்ப, உலக பற்றிலிருந்து மனம் திரும்ப, உபத்திரவமே நிலையானது என்ற நிலைப்பாட்டில் இருந்து மனம் திரும்ப அறைகூவல் விடுக்கின்ற வார்த்தையாகும்.

திருமறையை வாசிக்கும் பொழுது கடமைக்காக வாசிக்காமல் உணர்ந்து வாசிக்கும் பொழுது,  இயேசு கிறிஸ்துவின் சிந்தையில் நம்மை இணைத்துக் கொள்கிறோம்,  அவரின் பணிகளில் நாம் பங்கெடுக்கின்றோம், அவர் பாடுகளிலும் நாம் பங்கெடுக்கின்றோம்.

இறையியல் கல்வி நம்மை பக்திமான்கள் என்ற நிலையிலிருந்து சவால்களை துணிந்து சந்திக்கும் செயல் வீரர்களாக நம்மை மாற்றுகிறது.

 

3. இறையியல் கல்வி  : இறை பண்பில் வளர வழிநடத்துகின்றது.(1 தீமோத்தேயு 6 : 11 16)

பவுலடியார் தமது உடன் திருப்பனியாளர்  தீமோத்தேயு  அவர்களுக்கு எழுதுகின்ற இந்த கடிதத்தில் உள்ள வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமது அடியவருக்கு வெறும் ஆலோசனையாக மட்டும் கூறாமல், திருப்பணிகளுக்கு எவைகள் எல்லாம் தடைகளாக இருக்கிறது என்பதை ஆழமாக குறிப்பிடுகின்றார்.

"நீயோ இவைகளை விட்டு ஓடு" என்று தீமோத்தேயு அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். எவைகளை விட்டு ஓட வேண்டும் என்பதை அதற்கு முந்தின வசனத்தில் பவுலடியார் தீர்க்கமாக எழுதுகின்றார்.

"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது." சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.(1 தீமோத்தேயு 6 : 10)

செல்வத்தைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். அதுதான் எல்லா தீமைகளுக்கும், தீமையான செயல்களுக்கும், அடிமைத்தனத்திற்கும் ஆணிவேராக இருக்கிறது.

திருச்சபை பரிபாலன காரியங்களில் நிதி நிர்வாகமும் ஒன்று. மற்ற எல்லா பணிவிடைகளிலும் உண்மையோடும் உத்தமொத்தோடும் இருப்பதைப் போல, நிதி நிர்வாகத்திலும் உத்தமராக இருக்க வேண்டும் என்பது பவுல் அடியாரில் ஆலோசனை.

பண ஆசையினால் மக்கள் எவ்வாறு தங்கள் வாழ்வினை இழந்தார்கள், தலைவர்கள் எவ்வாறு விழுந்தார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி அழிக்கப்பட்டது என்பதை அனுபவபூர்வமாக சுட்டிக்காட்டுகிறார் பவுல் அடியார்.

பணத்தின் மீது கொண்ட மோகம் அடிமைத்தனத்திற்கு வித்திடும். அதிலிருந்து மீண்டவர் யாரும் இல்லை. நமக்கும் ஆண்டவருக்கும் இடையே பெரிய பிளவை அது உண்டாக்கும்.

பணத்தின் மீது வைக்கப்படுகின்ற அந்த மதிப்பு நாளடைவில் செல்வந்தர்களை நோக்கிய பாதைக்கு திருப்பணியாளர்களைத் திருப்பி விடும். ஏழைகள் பற்றிய கரிசனையை திருப்பணியாளர் இடமிருந்து அகற்றி விடும்.

நாளடைவில் செல்வந்தர்களிடம் அடிமையாய் போகும் நிலைக்கு அது உந்தி தள்ளும். ஏழை எளியோருக்கான திருச்சபை நாளடைவில் செல்வந்தர்களின் கையில் ஆதிக்கமாக சென்று சேரும்.

பவுலடியார் எச்சரிப்போடு இந்த கடிதத்தை தம்முடைய திருப்பணியாளருக்கு எழுதுகின்றார். எனவே நீ பண ஆசையை விட்டு விலகி இரு என்று குறிப்பிடுகின்றார்.

பவுலடியார் தமது உடன் திருப்பணியாளருக்கு சுட்டிக்காட்டுகின்ற ஆலோசனைகள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்திருக்கிறது.

நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.(1 தீமோத்தேயு 6 : 11)

பவுலடியார் தமது உடன் திருப்ப பணியாளருக்கு  முதலாவதாக வலியுறுத்துகின்ற அம்சம் என்னவென்றால் நீதி. அடியார் குறிப்பிடுகின்ற நீதி என்பது சுய நீதி அல்ல இறை நீதியாகும்.

பவுலடியார் கற்றுக் கொடுக்கின்ற இறையியல் கல்வியின் அழுத்தம் "தேவபக்தி,  விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்தகுணம்"(1 தீமோத்தேயு 6 : 11)

இவைகளை ஆவியின் கனிகளாகவும் அறிந்து கொள்ளலாம், ஆண்டவரின் பண்புகளாகவும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இத்தகைய பண்புகளில் மட்டும் நிலைத்திருப்பதல்ல. மேலும் நல்ல போராட்டத்தை போராடவும், நிலை வாழ்வை பெற்றுக் கொள்ளவும் எச்சரிக்கையாய் இரு என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

பவுலடியார் சுட்டிக் காட்டுகின்ற போராட்டம் என்பது தனிமனித மீட்புக்கான போராட்டம் அல்ல சமூக மீட்புக்கான போராட்டம் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.

திருப்பணிவிடையாளர்கள் என்பவர்கள் ஆயர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த அன்பர்களையும் உள்ளடக்கிய கூட்டுச் சமூகமாகும்.

பவுலடியார் தம் உடன் திருப்பணியாளருக்கு சுட்டிக் காட்டுகின்ற அழுத்தங்களில் மிகவும் முக்கியமானது ஒழுக்கமும் ,நெறி சார்ந்த வாழ்வும், இறை அச்சமும் முக்கியமானவைகள் ஆகும்.

நற்செய்தி பரப்புவது எவ்வளவு முக்கியத்துவமோ அதே அளவு முக்கியத்துவம் சான்றாக வாழ்வது திருப்பணியாளருக்கு அவசியமான ஒன்று என்பதை பவுலடியா குறிப்பிடுகின்றார்.

எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் ஆனால் ஆலயத்தில் மற்றவர்கள் காணும் பொழுது தூயவராக வாழ்வது என்பது இறைவனுக்கு ஏற்புடையதல்ல என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறார்.

சான்றாக வாழ்வது மட்டும் முக்கியமல்ல மேலும் இறைப்பணியில், இறைத்திட்டத்தில், இயேசுவின் சிந்தையோடு அவரின் அடிச்சு சுவடுகளை பின்பற்றி செல்வதும் அவசியம் என்பதை குறிப்பிடுகின்றார்.

பேதுரு அவர்களுக்கு அடுத்தபடியாக பவுல் அடியார் மாத்திரம் இயேசு கிறிஸ்து பாடுபட்டதையும் போராடினதையும் பொந்தியுபிலாத்துவின் முன்பாக நின்றதையும் சுட்டிக் காட்டுகிறார்.

மறைமுகமாக தன் உடன் பணியாளருக்கு  இயேசு கிறிஸ்துவை போல பாடுபடுவதற்கும் மரிப்பதற்கு துணிந்திருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

 

# நிறைவாக:

 

நமது முன்னோர்கள் வாழ்வில் கூட்டு குடும்பம் இருந்தது. அப்பொழுது தாத்தா பாட்டி நம் பிள்ளைகளுக்கு திருமறை கதைகளை கற்றுக் கொடுப்பார்கள். பிள்ளைகளும் அதைக் குறித்து கேள்வி கேட்பார்கள் அவர்கள் பொறுமையோடு திருமறை அருகில் அவர்களை வளர்த்தார்கள்

ஒவ்வொரு நாளும் குடும்ப ஜெபத்தில் அவர்கள் கீர்த்தனை பாடல்களை பாடி,  கிறிஸ்தவ பாடல்களை பாடி அவர்களை பக்தியில் வளர்த்ததுடன் மாத்திரம் அல்ல இறையியல் படிப்பையும் அவர்களுக்கு மறைமுக கல்வியாக( Informal Education) கற்றுக் கொடுத்தார்கள்.

இன்று தனி குடித்தனங்களில் இவைகள் சாத்தியமில்லாமல் போயின.  அதற்கு நேரமும் இல்லை அதற்கான பொறுமையும் இல்லை என்பது மிகவும் கவலை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

இன்று ஆலயங்களும் ஆலய பணியாளர்களும் தங்கள் எல்லைகளை விரிவாக்குவதில் மிகவும் கவனம் செலுத்துகின்றோம். திருப்பணிகளின் எல்லைகளை விரிவாக்குவதில் இன்னும் கவனம் செலுத்த இறையியல் கல்வி நம்மை அழைக்கின்றது.

அன்றைய அருட்தொண்டர்கள் பள்ளிகளை நிறுவினார்கள், கல்லூரிகளை அமைத்தார்கள், இல்லங்களை கட்டினார்கள்...இவைகள் அனைத்தும் வாழ்க்கை தரம் உயர்வதற்காக.

வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஆனால் இறையியல் தளம் சற்று பின் தங்கியிருப்பதை நாம் நன்கு அறிவோம்.

திருமறை பல மொழிபெயர்ப்புகளை தாண்டி வந்துள்ளது ஆனால் இன்றும் அதே பழைய மொழிபெயர்ப்பை பயன்படுத்தி வருவது தான் ஆன்மீகத்திற்குரியது என்ற அழுத்தமான பதிவு நம் உள்ளத்தில் இருக்கிறது.

 

நமது திருச்சபைகளில் ஒரு சிறிய நூலகம் ஒன்று அமைந்தால் அது நலமாக இருக்கும். வாலிபர்கள் இறை அறிவில்  வளர்வதற்கு நாம் பாலமாக அமைந்திட வேண்டும்.

 

திருமறையை கையால் எழுதுவதைப் போல, வசனங்களை மனனமாக ஒப்பிப்பதை போல, வேத வினா விடை போட்டிகளில் பங்கெடுப்பதைப் போல திருமறை ஆய்விலும், திருமறை விளக்க உரைகளை வாங்கி வாசிப்பதிலும், திருமறையை அறிந்து கொள்வதிலும் திருச்சபை என்றும் முன்னோடியாய் இருந்திடல் வேண்டும்.

இறையியல் கல்வி கடவுளின் திட்டத்தில் நம்மை இணைத்து, கடவுளின் வழியில் நம்மை பயணிக்க செய்து, இயேசு கிறிஸ்துவை போன்று வாழ்வதற்கு அர்ப்பணிக்கவும் நம்மை வழி நடத்துகின்றது.

ஒருவேளை நியாயத்தீர்ப்பு நாளில் இறையியல் கல்வியில் ஈடுபாடு நியாயத் தீர்ப்பிற்கு ஒரு அம்சமாக இருக்கும் என்றால் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

திருச்சபைகள் திருமண்டலங்களில் கொடுக்கப்படுகின்ற இறையியல் கல்வி என்பது சான்றிதழ் பெறுகின்ற கல்வியாக மட்டுமல்லாமல் சான்று பகரும் கல்வியாக அமைந்தால் ஆண்டவர் அகமகிழ்வார்.

"சத்திய வேதம் பக்தரின் கீதம் ...", என்ற பாடல் எல்லாருக்கும் பிடித்த பாடல். அந்த பாடலை பாடும்பொழுது எல்லாம் உணர்வில் மாற்றத்தை உண்டாக்குகிறது, கிறிஸ்துவுடன் பணியாற்ற அழைக்கின்றது, கிறிஸ்துவாகவே வாழ்வதற்கு வழி நடத்துகிறது.

 

திருமறை அறிவில் வளருவோம்...

இறையியல் கல்வியை கற்றிடுவோம்...

இறைபணியை நாளும் புரிந்திடுவோம்...

 

இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக...

இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக ....

 

நட்புடன்  உங்கள்

 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்

️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀

Comments