அருட்பணி : எங்கிருந்தும் எங்கேயும்
# திருமறைப் பகுதிகள்:
1 அரசர்கள்
17 : 1 - 16
கலாத்தியர்
2 : 1 - 10
மத்தேயு
13 : 47 - 52
திருப்பாடல்கள்
107: 1 - 15
# உட்புகும் முன்:
மறைந்த முன்னாள் சென்னைப் பேராயர் அசரியா ஐயா, அவர்கள் இயற்றின ஒரு பாடல் ஒன்று உண்டு. அது அருட்பணி பற்றியது...
ஆண்டவர் இயேசுவின் அருட்பணியை
அனைவரும் ஏற்றிடுவோம்
அடித்தள மக்கள் விடுதலை பெற்றிட
வாழ்வினை பகிர்ந்து அளிப்போம் - நாம்...
இந்தப் பாடலில் அருட்பணியின் எல்லைகளை அவ்வளவு அழகாக எடுத்துரைப்பார் பேராயர் அவர்கள்.
"தாசரே இத்தரணியை அன்பாய் .." என்ற கீர்த்தனை பாடல் அற்புதமான பாடலாகும்.
ஒவ்வொரு சரணத்தின் முதல் வரிகள் ஆழமான அர்த்தம் கொண்டவை..
🍎வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை...
🍎பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்..
🍎நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை,
🍎மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய..
பெரும்பாலும் இந்த பாடல் காணிக்கை எடுக்கப்படும் நேரத்தில் பாடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
காணிக்கைக்காக மட்டும் அல்ல மேற்கண்ட நிலைகளை மாற்றுவதற்கு நம்மை அருட்பணிக்கு அர்ப்பணிப்பதற்கு வழிநடத்துகின்ற பாடலாகும்.
ஒருமுறை எங்கள் ஆலயத்தில் வசதி படைத்த ஒருவர் தன்னுடைய தசமபாக காணிக்கையை செலுத்தினார். அவர் படைத்த காணிக்கை மிகப்பெரிய தொகையாகும்.
சேகரத்தின் செயலரும் பொருளரும் அவரிடம் தொடர்பு கொண்டு, ஐயா இந்த காணிக்கை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டோம்.
ஆலயத்தின் தேவைகளுக்காக நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். அவரிடம் ஐயா ஒரு ஆலோசனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டோம் அவரும் சரி என்று சொன்னார்.
நாங்கள் அவரை அழைத்துக் கொண்டு எங்கள் திருச்சபையின் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்திற்கு அழைத்துச் சென்றோம். அந்த குடும்பத்தில் இருந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நாங்கள் அவரிடம் ஐயா நீங்கள் கொடுத்த இந்த காணிக்கையை இந்த பெண்ணின் திருமணத்திற்கான "தாலி"
வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டோம்.
முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார். திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அந்த திருமண வரவேற்பில் அந்தப் பெண்ணின் தாயார் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.
திடீரென்று எல்லாருக்கும் முன்பதாக அந்த அம்மா பெண்ணின் தாய் மாமனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றார்.
எல்லாரும் யார் அவர் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது,
தசமபாக காணிக்கை கொடுத்தவரை,
இவர் தான் இந்த பெண்ணுக்கு இனி
"தாய் மாமன்"
என்று சொன்னார்.
"அருட்பணிக்கு அவசியமானது, தாராள மனதும்,
பகுத்தறிவும், செயல் வடிவிலான பக்தியும், நல்ல பிறனாக இருக்கின்ற உள்ளமும் போதுமானது."
ஒரு கிராம சபையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாள் காலை பிற சமயத்தைச் சார்ந்த வயது முதிர்ந்த ஒருவர், ஐயா இது என்னுடைய பேத்தி,
அப்பா அம்மா இல்லாத பிள்ளை, 12 ஆம் வகுப்பு முடித்து விட்டாள்,
கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று சொன்னார்.
நான் உடனே எனது லெட்டர் பேடை எடுத்து பரிந்துரைக் கடிதம் எழுத ஆரம்பித்தேன். அவர் என்னை தடுத்து, கடிதம் வேண்டாம் கூட்டிக்கொண்டு போய் சேர்த்து விடுங்கள் ஐயா.. என்றார்.
அந்தப் பெரியவரும், நானும் அவரின் பேத்தியும் கல்லூரிக்கு சென்றோம். கல்லூரி முதல்வர் அவர்களுக்கு இடம் கொடுத்ததோடு மாத்திரமல்ல அவர்களுக்கான கல்லூரி கட்டணத்தையும் தானே ஏற்றுக் கொண்டார்.
ஒரு நாள் எங்கள் வீட்டில் தண்ணீர் குழாய் உடைந்து இருப்பது தெரிய வந்தது. அந்தக் குழாயை சரி செய்வதற்காக நானும் ஆலய பணியாளரும் சென்றோம்.
உடைந்த குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீரில் குருவிகள் குளித்துக் கொண்டிருந்தன, அப்படி ஒரு ஆனந்தம் அந்தப் பறவைகள் மத்தியில் இருப்பதை அறிந்து கொண்டோம்.
அதனைக் கண்ட எங்கள் இருவருக்கும் உடைந்த குழாயை சரி செய்வதற்கு மனதே வரவில்லை. இருப்பினும் அதை சரி செய்துவிட்டு பறவைகளுக்கு என்று குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஆவண செய்து முடித்த பின்பதாக ஒரு மன திருப்தி வந்தது.
நாளடைவில் அந்த பறவைகள் எங்களுக்கு உறவாகவே மாறிவிட்டன.
அருட்பணி என்பது பரந்துபட்ட பொருள் கொண்டது.
இது
🍏சமய மாற்றத்திற்கு எதிரானது சமூக மாற்றத்திற்கு துணையானது,
🍏பதுக்கலுக்கு முரணானது பகிர்தலுக்கு நேரானது,
🍏ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானது சமத்துவத்திற்கு உறவானது,
🍏அனைத்து வகை அடிமைத்தனத்திற்கு எதிரானது ஒட்டுமொத்த விடுதலைக்கு அடித்தளமானது,
🍏செல்வந்தர்களுக்கு எதிரானது ஏழைகளுக்கு துணையானது,
🍏மனிதர்களுக்கு மட்டும் உட்பட்டதன்று ஒட்டுமொத்த படைப்புகளுக்கும் சார்பானது,
🍏கோட்பாட்டு வடிவில் அல்ல மாறாக செயல்பாட்டு வடிவில் உள்ளது,
🍏அதிகாரங்களை சார்ந்ததல்ல அதிகார பகிர்தலுக்கு நேரானது,
🍏ஆணாதிக்கத்திற்கு எதிரானது பெண்ணிய விடுதலைக்கு துணையானது,
🍏சுய நீதிக்கு முரணானது இறைநீதிக்கு வழியானது,
🍏எல்லைக் கோடுகளுக்கு எதிரானது எல்லையில்லா இறைவனின் பணியானது.
கொடுக்கப்பட்டுள்ள திருமறைப் பகுதிகளின் வெளிச்சத்தில் அருட்பணியின் எல்லைகளை, சவால்களை, அறைக்கூவல்களை, தன்மைகளை, செயல்பாடுகளை கற்றுக் கொள்வோம்.
1. தீண்டத்தகாதவர்கள் அருட்பணி கருவிகளாக்கப்பட்டனர் (The
Untouchables became Mission Tools).- 1 அரசர்கள் 17 :
1 - 16
2. ஓரங்களில் இருப்போர் அருட்பணி பங்காளிகளாகினர் ( The Margins became Mission
Partners) - 1 அரசர்கள் 17 : 1 - 16
3. பிற இனத்தவர் அருட்பணி பணியாளர்களாகினர் (The Gentiles became Mission
Co-workers) - கலாத்தியர் 2 : 1 - 10
4. புதிய அணுகுமுறைகள் அருட்பணிக்கு அவசியங்களாகின்றன (The
New Approaches needed for Mission
Actions) - மத்தேயு 13 : 47 - 52
1. தீண்டத்தகாதவர்கள் அருட்பணி கருவிகளாக்கப்பட்டனர் (The Untouchables
became Mission Tools).- 1 அரசர்கள் 17 : 1 - 16
கொடுக்கப்பட்டுள்ள திருமறைப் பகுதியின் முன்பகுதி அருட்பணியாளர் எலியாவின் வாழ்வும் நிலையும் காண்பிக்கப்பட்டுள்ளது.(
1 அரசர்கள் 17 : 1 - 6)
ஆகாப் அரசனும் யேசபேல் அவர்களும் பாகாலுக்கு முக்கியத்துவம் தந்தனர்.
குழந்தை பலியை உண்டாக்கினர்.
சமய சீர்கேடுகள் பெருகின.
இஸ்ரவேல் மக்கள் கடவுளை மறந்து பாகாலை வழிபட ஆரம்பித்தனர்.
சமூக சீர்கேடுகளும் தலை விரித்து ஆடின.
(1 அரசர்கள் 16: 34)
கடவுளின் அருட்பணியாளர் எலியா இந்நிலையினை கண்டித்து எச்சரிக்கின்றார், இதனால் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றார். மனம் மாற வேண்டிய அரசனும் யேசபேலும் கடவுளின் அருட்பணிக்கும் அருட்பணியருக்கும் எதிராகின்றனர்.
விளைவு எலியா கேரீத் ஆற்றண்டையில் ஒளிந்து கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்.
எலியாவின் இந்த நிலையை அகதிகளோடு(Refugees) ஒப்பிடலாம்.
பல சமயங்களில் நீதிக்காக குரல் கொடுக்கும் போது அவர்கள் தீவிரவாதிகளாக, வன்முறையாளர்களாக, தேசத் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை காணலாம்.
இந்த சூழ்நிலையில் கடவுள் அகதியாக வாழ்ந்து கொண்டுள்ள எலியாவிற்கு உதவுவதற்கு, காகத்தை ஏற்படுத்துகின்றார்.
அது ஒவ்வொரு நாளும் காலை மாலை என தவறாமல் எலியாவிற்கு உணவு வழங்குகிறது.
லேவியரராகம சட்டப்படி "காகம் விலக்கி வைக்கப்பட்ட பறவை"
அசுத்தம் என்று "தீட்டாக கருதப்பட்ட பறவை." (லேவி11,15) இந்த
"தீண்டத்தகாத காகம் கடவுளின் அருட்பணி கருவியாகிறது."
காகத்தை தீண்டத்தகாதவர்களின் பிரதிநிதியாக கருதலாம். கடவுளின் அருட்பணித்திட்டத்தில்,
பயணத்தில் தீண்டத்தகாதவைகள், தீண்ட தகாதவர்கள் எனக் கருதப்பட்டவர்களும், கருதப்பட்டவைகளும் கடவுளின் கருவியாகவும் மீட்பு திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு யூதராக எலியா, காகம் தந்த உணவை உண்ணுகிறார். "கடவுளின் அருட்பணி இந்த உலகில் தூய்மை - தீட்டு என்னும் கருத்தியலை, அடிமைப்படுத்தும் சித்தாந்தத்தை வேரறுக்கின்றது."
பொதுவாக இந்தத் திருமறைப் பகுதியில் நாம் எலியாவை பற்றி தான் அதிகமாக சிந்திப்போம். ஆனால் இங்கு காகம் கருப்பொருள் ஆகிறது.
காகம் கடவுளின் அருட்பணியில் ஓர் அங்கம் ஆகிறது, கடவுளின் கருவியாகிறது.
தீர்க்கர்கள் செய்ய வேண்டிய பணியை போன்று காகம் இறைப்பணியை செய்கிறது, இறை தொண்டாற்றுகிறது.
அத்தோடு இல்லாமல் கடவுளின் அருட்பணி தீண்டத்தகாதவைகளையும், தீண்ட தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை கடவுளின் பிரதிநிதிகளாக, அருட்பணி இயக்கத்தின் தன்னார்வ தொண்டர்களாக உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிறது.
எலியா என்னும் யூதர் முதலில் கடவுளின் அருட்பணியால் தூய்மை
- தீட்டு என்னும் கருத்தியலில் இருந்து விடுபட்டு மாற்றம் பெறுகிறார்.
தீண்டத்தகாதவைகள்,
அருவருக்கத்தக்கவைகள் என்று யூதர்களால் கருதப்பட்ட காகத்தோடு தன்னை இணைத்துக் கொள்வதோடு மாத்திரமல்ல, தீண்டத்தகாதவைகளோடு தன்னை இணைத்துக் கொள்கிறார்.
கடவுள் செயல்படவும் கடவுளின் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தன்னை அர்ப்பணிக்கின்றார்.
கொடுக்கப்பட்டுள்ள திருமறைப் பகுதியில் கடவுளின் அருட்பணி என்பது உலகில் தீண்டத்தகாதவைகள், அருவருக்கத்தக்கவைகள், தீண்டத்தகாதவர்கள் என்ற நிலையை அகற்றுவதுதான்.
தாங்கள்தான் உயர்ந்தவர்கள்,
உயர் குடிமக்கள், தூய குருதி உடையோர் என்கின்ற நிலையை மாற்றுவது தான் கடவுளின் அருட்பணியின் தலையாயத் திட்டமாகும்.
கடவுளின் இந்த அருட்பணி திட்டத்தில் காகம் கடவுளின் கருவியாக ஆனது. தீண்டத்தகாதவைகள் என்று கருதப்பட்டவைகள் எல்லாம் கடவுளின் பார்வையில் தூயது என்னும் நிலையை கடவுளின் அருட்பணி உண்டாக்கியது.
தூய்மை
- தீட்டு என்னும் புரையோடி போன அகக் கண்களை சுத்தம் செய்வது நமது அருட்பணியின்
திட்டமாக இருக்கட்டும்
2. ஓரங்களில் இருப்போர் அருட்பணி பங்காளிகளாகினர் ( The
Margins became Mission Partners) - 1 அரசர்கள் 17 : 1 - 16
தீண்டத்தகாத காகம் எலியாவிற்கு உணவின் மூலம் ஆற்றல் தந்தது.
ஆற்றல் பெற்ற எலியா சாரிபாத் ஊருக்கு அனுப்பப்படுகின்றார். இது யேசபேல் வாழ்ந்த ஊர்.
அருட்பணியாளரான எலியா தீர்க்கதரிசி புதிய அருட்பணித்தளமான சாரிபாத் ஊருக்கு செல்கின்றார். எலியாவின் இந்த பயணத்தை புலம்பெயர்தலோடு
(Migration) நாம் ஒப்பிடலாம்.(1
அரசர்கள் 17 : 8 - 15)
சாரிபாத் ஊரில் எலியாவுக்கு உறவுகள் இல்லை, உதவுவதற்கும் ஆட்கள் இல்லை. சமயம், பண்பாடு, கலாச்சாரம் இனம் என அனைத்தும் வேறுபட்ட ஒரு புதிய அருட்பணித்தளம் எலியாவுக்கு கிடைக்கின்றது.
எலியாவின் அருட்பணித்தளத்தில் எலியாவிற்கு தாகமும் பசியும் உண்டாகிறது. புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் அவல நிலையை எலியாவின் வாழ்வு நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எலியா அவர்கள் அண்டிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். இது கடவுளின் திட்டம் என்றாலும் அருட்பணியாளர்களோடு கடவுள் இருக்கின்றார், அவர்களைத் தாங்குகிறார்,
"புலம் பெயர்ந்தவர்களோடு கடவுள் தன்னையும் இணைத்துக் கொள்கிறார்" என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணமாகும்.
சாரிபாத் ஊரில் ஒரு விதவைத் தாய் எலியாவிற்கு உதவி செய்கின்றார்கள். இதை மேலோட்டமாக பார்த்தால் சாதாரண உதவி போல தோன்றும்.
இதுவரை பெண்கள் ஆண்களை சார்ந்து வாழ வேண்டும் என்பதுதான் உலக நியதியாக இருந்து வருகிறது.
ஆணாதிக்க சமூகமும் இதனைத் தான் காலம் தொட்டு கடைபிடித்து வரும்படி வலியுறுத்தி வருகின்றது.
"கடவுளின் அருட்பணி இந்த ஆணாதிக்க நிலையை மாற்றுகிறது." ஆண்கள் மைய உலகிற்கு மாற்றாக பெண்கள் மைய உலகை கடவுளின் அருட்பணி முன் நிறுத்துகிறது.
இதை வேறொரு கண்ணோட்டத்தில் அணுகுவோம் என்றால்,
"கடவுளின் அருட்பணி ஆண் பெண் என்ற சமத்துவ வாழ்வை எடுத்துரைக்கின்றது முன்வைக்கின்றது."
மேலும் சாரிபாத் ஊரைச் சார்ந்த விதவைத் தாய் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். விளிம்பு நிலையில் ஓரங்களில் வாழ்பவர்கள்,
ஏழையாக ஆக்கப்பட்டவர்கள், அன்றைய அரசாங்கத்தால் மனிதராக மதிக்கப்படாதவர்கள், சமூகத்தால் ஓரங்களில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்.
எனினும் அவர்கள் மாண்போடு,
தன்மானத்தோடு விறகு பொறுக்கி
"உழைத்து வாழும் ஒரு பெண்மணியாக, ஆணாதிக்கத்தை எதிர்த்து தன்னந்தனியாக போராடி வாழ்பவராக" இந்த தாய் திருமறை வழியாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.
இப்படி சமூகத்தாலும்,
அரசாங்கத்தினாலும், செல்வந்தர்களாலும் ஓரங்கட்டப்பட்டு விளிம்பு நிலையில், ஓரங்களில் வசிக்கின்றவர்களின் பிரதிநிதியாக இந்த தாயைக் காணலாம்.
சாரிபாத் ஊரைச் சார்ந்த இந்த தாய் கடவுளின் அருட்பணியை தம் வறுமையில் இருந்து தாங்குகிறார்கள்.
கடவுளின் அருட்பணியாளரையும் தாங்குகிறார்கள்.
இருப்பதை பகிர்ந்து கடவுளின் அருட்பணியின் புதிய பங்காளர்களாக(Mission Partners) தங்களை மாற்றிக் கொண்டார்கள்.
இதனை
"பதுக்கலுக்கு எதிரான கடவுளின் அருட்பணி திட்டமாக"(Against
of Accumulation) நாம் இதை கருதலாம்.
செல்வக் குவிப்புக்கு எதிரான பகிர்தலின் அடையாளமாக சாரிபாத் ஊர் தாயின் செயல்களை அருட்பணியாக நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆற்றல் அற்றவர்கள் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் என பட்டவர்களின் ஆற்றல் என்பது மிகவும் சிறப்பானது.
கடவுள் அவர்களை தமது அருட்பபணியின் கருவிகளாக, பங்காளர்களாக பயன்படுத்துகின்றார் என்பதை இந்த திருமறை சுட்டிக்காட்டுகிறது.
"கடவுளின் அருட்பணியில் ஓரங்களில் இருப்போர் மையப் புள்ளிகளாகின்றனர்." அவர்களின் ஆற்றலும் பகிர்தலும் தான் கடவுளின் அருட்பணியை தாங்கிக் கொள்கின்றன எனும் உண்மையை உரக்கச் சொல்லுகிறது இந்த திருமறைப்பகுதி.
3. பிற இனத்தவர் அருட்பணி பணியாளர்களாகினர் (The
Gentiles became Mission Co-workers) - கலாத்தியர் 2 : 1 - 10
கடவுளின் திட்டத்தில்,
செயல் ஆக்கத்தில் நாம் நினைத்துப் பார்க்க முடியாதவைகள் நடக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு பின்பு நற்செய்திப் பணியும்,
அருட்பணியும் உலகமெங்கும் பரவின.
இந்தியாவிற்கும் தோமா மூலம் வந்தடைந்தது.
எருசலேமில் மாமன்றம் நடைபெறுகிறது(Mission
Conference). யாக்கோபு, பேதுரு, யோவான் ஆகிய மூவர், முதல் அருட்பணி சங்கத்தின் தூண்களாக இந்த மாமன்றத்தில் ஒன்று கூடி விவாதிக்கின்றனர்.
யூத மயமாக்கப்பட்ட அருட்பணி கூடுகையில், இந்த அருட்பணி மாமன்றத்தில் "ஒரே ஒரு பிரதிநிதி யூதர் அல்லாதவர் பங்கேற்கின்றார் அவர்தான் தீத்து."
தீத்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட முதல் பிற இனத்தவர் ஆவார். இவரும் அருட்பணி மாமன்றத்தில் கலந்து கொள்கின்றார்.
இந்த மாமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்றாலும் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டது "தரித்திரரை நினைத்துக் கொள்ளுங்கள்"
என்பதே ஆகும்.(வ.10)
இங்கு தரித்திரர்கள் என்று சுட்டிக் காட்டப்படுபவர்கள், ஏழைகள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள்,
பிற இனத்தவர்கள் அல்ல. யூத கிறிஸ்தவர்கள்.
அருட்பணியின் விளைவுகள் கவனிக்கப்பட வேண்டியவைகள். கடவுளின் அருட்பணியில் பிற இனத்தாரின் பண்பு நலன்கள்,
குணாதிசயங்கள் வெளிப்படுகின்றன. எருசலேமில் உள்ள யூத கிறிஸ்தவ ஏழைகள்
" யூதர்களால் அசுத்த ரத்தம் உடையோர் என்று இழிவாக கருதப்பட்ட,
பிற இனத்தவரின் காணிக்கைகளால்,
நன்கொடைகளால் வாழ்வு பெற்றார்கள்."
இதை இன்னும் சொல்லப்போனால்
"பிற இனத்தவரால் யூத ஏழை கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தி கிடைத்தது.
"(Good news to the poor Jews through Gentiles)
"கடவுளின் அருட்பணித் திட்டத்தால்,
பவுல் அடியாரின் அருட்பணியின் விளைவால், புற இனத்தவர் யூதரை சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களைத் தாங்குவது,
அவர்களுக்கு வாழ்வளிப்பது
மிகவும் சிறப்பான ஒன்றாகும்."
கடவுளின் அருட்பணி திட்டமும் பவுல் அடியார் முன்வைக்கின்ற அருட்பணித்திட்டமும், "ஒரு புதிய உலகை உருவாக்குகிறது.
அது சமத்துவ உலகு. யூதர்
- யூதர் அல்லாதோர் என்கின்ற நிலையை கடந்து, ஒரு குடும்பத்து மக்களாக, ஒரு தாய் பிள்ளைகளாக, ஓருலைச் சமூகமாக வாழ்வதற்கு வழி நடத்துகின்றது."
கடவுளின் இந்த அருட்பணி திட்டம் "ஒரு சமத்துவ சமூகத்தை, சமத்துவ உலகை, ஒருமைப்பாட்டை மையப்படுத்திய சமூகத்தை கட்டி அமைக்கின்றது."
கடவுளின் இந்த அருட்பணி திட்டத்தில் "பிற இனத்தவர்கள் எவ்வாறு உயர்வு நிலைக்கு, தங்களைக் கொடுக்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டார்களோ அப்படிப்பட்ட பணியை செய்வதே கடவுளின் அருட்பணி" என்கின்ற செய்தியை இந்த திருமறை பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
ஒருவேளை அப்படிப்பட்ட பணியாளர்கள் நம்மில் எழும்பினார்கள் என்று சொன்னால் திருச்சபை ஆகிய நாம் அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமா?
இந்த கேள்வியையும் இந்த நாளில் நமக்கு எழுப்பி ஆராய்ந்து பார்ப்போம்.
நற்செய்தி என்பது தங்களை உயர்குடி என்று சொல்லிக் கொள்பவர்கள் மூலமாக மட்டும் வருவது அல்ல. மாறாக ஓரங்களிலும், விளிம்பு நிலைகளிலும்,
புறக்கணிக்கப்பட்ட நிலைகளில் வாழ்பவர்களின் மூலமாகவும் நற்செய்தி வரும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
சுகவீனமானவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படுகின்ற ரத்தம், எந்த இனத்தை சார்ந்தது, எந்த சமூகத்தை சார்ந்தது,
எந்த மதத்தை சார்ந்தது என்று ஒருபோதும் பார்ப்பதில்லை.
நோயுற்ற ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொழுது, தனக்கு சிகிச்சை அளிப்பவரின் குலம், கோத்திரத்தை ஒருபோதும் பார்ப்பதில்லை,
அவரின் செயல்களையே பார்க்கிறார்.
உலகில் இவைகளையெல்லாம் நாம் காணும் பொழுது,
நற்செய்தி என்பது, அருட்பணி என்பது எங்கிருந்தும் எவராலும் வரும் என்கின்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
4.புதிய அணுகுமுறைகள் அருட்பணிக்கு அவசியங்களாகின்றன (The New Approaches are needed for Mission
Actions) - மத்தேயு 13 : 47 -
52
கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி பகுதியில் இயேசு கிறிஸ்து இறை ஆட்சியை ஒரு வலைக்கு ஒப்பிடுகின்றார். (வ. 47 - 52)
இதனை விளக்குவதற்கு வேதபாரகன் தன் பொக்கிஷத்தில் இருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்து கொடுக்கும் வீட்டு எஜமானுக்கு ஒப்பாயிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் இறை ஆட்சியின் தகவுகள் ஆகும். நாம் இன்னமும் பழைய கோட்பாடுகளிலும், பாரம்பரியங்களிலுமே மூழ்கி இருந்து வருகிறோம்.
நாம் திருமறையையும் பழைய கண்ணோட்டங்களிலேயே வாசித்தும்,
புரிந்து வருகிறோம். எத்தனையோ மொழியாக்கம் வந்தும் அதே பழைய மொழியாக்கத்தை பயன்படுத்தி வருகிறோம்.
திருமறையை அணுகும் பொழுது
Re reading என்று புரிந்து கொண்டோம்.
இன்று Re writing என்னும் நிலைக்கு நாம் வளர்ந்திருக்கின்றோம்.
திருச்சபை புதிய பார்வையில்,
புதிய அணுகு முறையில் திருமறையை அணுக வேண்டும். அப்பொழுதுதான், அருட்பணியின்
ஆழங்களை அறிந்து கொள்ள முடியும்.
கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி பகுதியில்
"கடல்" முக்கியத்துவம் பெறுகிறது.
கடலில் இருந்து வலையில் அகப்படுபவைகள் அனைத்தும் நல்லவைகள் அல்ல.
அவற்றில் தேவையில்லாததும் உண்டு.
இதனை உருவமாகக் கொண்டால்,
இன்றைய திருச்சபையில் அனைவருமே நல்லவர்கள் அல்ல. இதை மாற்றி சிந்திப்போம் என்றால் நல்லோர் தீயோர் அனைவரையும் உள்ளடக்கியது திருச்சபை.
நியாயத்தீர்ப்பு நாளில் தரம் பிரிக்கப்படும் என்று திருமறை இயேசுவின் உவமை வழியாக காட்டுகின்றது.(வ. 4)
எப்படி தரம் பிரிக்கப்படும்,
யாரைக் கொண்டு பிரிப்பார்கள் என்பது முக்கியம்.
கடவுள் வழி வழி நின்று, நியாயத்தை கொண்டு இறை ஆட்சியின் தகவுகளை வைத்து தரம் பிரிக்க வேண்டும்.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய, மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.(மத்தேயு 13 : 52)
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் எதிர்பார்ப்பு என்னவெனில் இறை ஆட்சியின் தகவுகளோடு சமூகத்தில் வாழ்கிற மக்களே தரமானவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
இறை ஆட்சிக்குரிய தரம் என்பது தகுதியின் அடிப்படையில் அல்ல, செலுத்துகின்ற பலியின் அடிப்படையில் அல்ல, படைக்கின்ற காணிக்கையின் அடிப்படையிலும் அல்ல, இனத்தின் அடிப்படையிலும் அல்ல மாறாக அது இறை நீதியோடு நியாயத்தோடும் இணைந்த ஒன்றாகும்.
அப்படி இறை ஆட்சியின் தகவுகளோடு வாழ்பவர்கள் பக்கம் கடவுள் நிற்பார். இறைமகன் இயேசுவின் இயக்கத்தில் இணைந்து இருக்கிற ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட தரம் உடையவர்களாக வாழ திருமறை அழைப்பு விடுகின்றது.
இயேசு கிறிஸ்து உவமை வழியாக சுட்டிக் காட்டுகின்ற தரம் உடையவர்கள் யார் என்பதை இன்றைய திருச்சபை கருத்தில் கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறது.
இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலகட்டங்களில் அவர் பாவிகளோடும், ஆயக்காரர்களோடும், வாழ்ந்து அவர்களில் இறை ஆட்சியின் தகவுகள் இருப்பதை கண்டு கொண்டார்.
இறை ஆட்சியின் தகவுகளோடு வாழ்ந்த அன்றைய அன்னகர்கள், பாவிகளாக கருதப்பட்டவர்கள்,
பிறயினத்தவர்களோடு தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
இன்றைய உலகு தன்னை யாரோடு இணைத்துக் கொள்கிறது என்றால் வசதி படைத்தவர்களோடும்,
அதிகாரம் வகிப்பவர்களோடும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடு தன்னை நினைத்துக் கொள்கிறது.
நீதியோடும் நியாயத்தோடும் வாழ்பவர்களை உலகம் கண்டு கொள்வதில்லை, அவர்களை கருத்தில் கொள்வதுமில்லை.
தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் நீயே அந்த மனிதன் என்று சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக (Prophetical Role) எழும்ப வேண்டும், அவர்கள் பக்கம் இறை மக்கள் நிற்க வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் எதிர்பார்ப்பு.
அருட்பணி என்பது அப்படிப்பட்ட நீதியாளர்களை உருவாக்க வேண்டும் என்று நற்செய்தி பகுதி நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய திருச்சபையும் இயேசு கிறிஸ்துவின் வழியில் பயணித்து, சமூகத்தில் (இறைவன் பார்வையில்)
நல்லோர் என கருதப்படுகின்ற மக்களை தரம் பிரித்து அவர்களோடு நம்மை இணைத்துக் கொள்ள திருமறை அறைகூவல் விடுக்கின்றது.
# நிறைவாக:
அருட்பணி என்பது ஆன்மீகப் பணி அல்ல அடித்தளங்களை அசைகின்ற ஒரு மாபெரும் பணியாகும்.
அருட்பணி என்பது அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கின்ற மாந்தரை,
பகுத்தறிவு என்னும் பட்டறையில் பயிற்சி பெறுவதற்கு வழி நடத்தும் திருப்பணி.
அருட்பணி என்பது சமூக, பொருளாதார,
அரசியல், கருத்தியல், சுற்றுப்புறம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய விடுதலை என்பதை நினைவில் கொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
அருட்பணி என்பது வழிபடுகின்ற மக்களை உருவாக்குவது அல்ல மாறாக வாழும் இடத்தையே வழிபடும் இடமாக மாற்றுவதுதான்.
அருட்பணி என்பது தனிமனித மீட்புக்கு துணை நிற்கின்ற ஒன்றாக கருதாமல், சமூக மீட்புக்கு, சமூக விடுதலைக்கு வழி நடத்துகின்ற ஒரு கருவி ஆகும்.
அருட்பணியாளர்கள் என்பவர்களும் இதுவரையிலும் நாம் நினைத்து வைத்திருந்த பார்வையில் அல்லாமல், ஏழை எளிய மக்களும், விளிம்பு நிலையில் உள்ள மக்களும் அருட்பணியாளர்கள் என்கின்ற நிலைக்கு வருவதற்கு அருட்பணி வழிநடத்த வேண்டும்.
இன்றைய கலிலேயா எது? இன்றைய பெதஸ்தா எது? இன்றைய சமாரியர் யார்? என்ற தெளிவுகளை திருச்சபையில் உண்டாக்குவதே அருட்பபணியின் தலையாய நோக்கமாகும்.
மறந்துவிட வேண்டாம் இயேசு கிறிஸ்துவின் பார்வையில் நடுநிலை என்பது இல்லை .! வலதுசாரி சிந்தனைகளும் இல்லை..!
ஒடுக்கப்பட்டோரின் துணை நிற்பதும்,
ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் விடுதலை கொணறுவதுமே அருட்பணியின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.
இன்றைய திருமறை பகுதிகள் காட்டுகின்ற நெறியில் வாழ்வது அருட்பணிக்கு அவசியமான ஒன்றாகும்.
அருட்பணி
...
👉🏾உரையாடல் வழி அருட்பணி தொடர்ந்திடுவோம்,
👉🏾பங்கேற்பின் வழி அருட்பணி புரிந்திடுவோம்,
👉🏾பாடுபடுவதின் மூலம் அருட்பணி செய்திடுவோம்,
👉🏾சேவை மனதுடன் அருட்பணி புரிந்திடுவோம்,
👉🏾விடுதலை நோக்கில் அருட்பணி தொடர்ந்திடுவோம்,
👉🏾அருட்பணி எல்லைகளை விரிவாக்கிடுவோம்,
👉🏾அருட்பணி பங்காளர்களை உருவாக்கிடுவோம்,
👉🏾இயேசுவின் சிந்தையில் இணைந்து அருட்பணி புரிந்திடுவோம்,
👉🏾இறைவன் விரும்பும் ஆட்சியை அருட்பணி மூலம் நிறுவிடுவோம்...
"கலிலேயா என்று சொன்னால் என்னங்க
கர்த்தன் இயேசு பணி செய்த இடமுங்க ...
நலிவடைந்த மாந்தர் வாழ்ந்த நாடுங்க - நம்ப
நாதர் இயேசு அன்பு செஞ்சார் பாருங்க கேளுங்க...
என்கின்ற அன்புக்குரிய ஞானவரம் அண்ணன் அவர்களின் பாடலை ஒருமுறை உணர்ந்து பாடி அருட்பணிக்கு நம்மை அர்ப்பணிப்போம்.
இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக
...
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...
நட்புடன் உங்கள் ஆயர்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️

Comments
Post a Comment