"SACRAMENT OF HOLY COMMUNION"'- Rev. Augusty Gnana Gandhi

 

SACRAMENT OF HOLY COMMUNION

திருவிருந்து எனும் திருவருட்சாதனம்

# திருமறைப் பகுதிகள்:

விடுதலைப் பயணம் 12 : 1 - 14

1 கொரிந்தியர் 10 : 14 - 22

லூக்கா 22 : 7 - 20

 


# உட்புகும் முன்:

திடப்படுத்தல் பெற வருபவர்களிடம் கேட்கின்ற கேள்வி, நீங்கள் ஏன் திடப்படுத்தல் பெற விரும்புகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு எத்தனை பேர் நம்மில் சரியான பதிலை சொல்லி இருக்கிறோம் என்பதை நினைவு கொள்வோம்.

80's , 90's தலைமுறையினருக்கு "திடப்படுத்தல் வகுப்பு" என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக அமைந்திருந்தது. பேராயர் அவர்கள் கேள்வி கேட்பார் என்ற உணர்வில், அச்சத்தில் படிக்க வேண்டிய அத்தனை பகுதிகளையும் படித்து மனப்பாடம் செய்து வைத்த தலைமுறையினர் அந்த தலைமுறையினர்.

காலப்போக்கில் இந்த அச்சங்கள் எல்லாம் மறைந்து, திடப்படுத்தல் பெறுவதின் நோக்கம் "உயர்கல்விக்கு, வேலை வாய்ப்புக்கு அவசியம்" என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இந்த தலைமுறையினர்.

திருமுழுக்கும் திருவிருந்தும் திருச்சபையின் திருவருட்ச் சாதனைகளாக ஏற்றுக்கொண்டு பாரம்பரியமாக நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

திருமுழுக்கின் போது திருமுழுக்கு பெறுகின்றவர் ஒவ்வொருவரின் நெற்றியிலும் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது. திருமுழுக்கில் ஒவ்வொருவரும் சிலுவையை பெற்றுக் கொள்கிறோம்.

திருமுழுக்கு பெறுகின்றவர் ஒவ்வொருவரும் சிலுவை பாதையில் பயணிக்க வேண்டும் என்ற தார்ப்பரியத்தை திருமுழுக்கு கற்றுக் கொடுக்கிறது.

திருவிருந்தில் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளில் பங்கு பெறுகின்றோம். கிறிஸ்துவில் இணைகின்றோம். அவரின் உயிர்ப்பிலும் பங்கு பெறுகின்றோம்.

திருவிருந்தின் போது பாடப்படுகின்ற பாடல் "கர்த்தரின் பந்தியில் வா..." என்ற பாடல். இந்த பாடலின் வரிகள் மிகவும் அர்த்தம் கொண்டவை, இறையியல் ஆழம் பொதிந்தவை ஆகும்.

இரண்டாம் சரணத்தின் வரிகள் நமது சிந்தையை தூண்டுபவைகள். அவைகள் என்னவென்றால்,

"தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்

சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு

ராப்போஜன பந்திதனில் சேரு

சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்

தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின்

இந்தப் பாடலை எழுதிய பாடல் ஆசிரியர், இரண்டாவது சரணத்தின் இரண்டாவது வரியில், திருவிருந்து பெறுவதின் நோக்கத்தை ஒரு வரியில் அழகாக சுட்டிக்காட்டி இருக்கின்றார்,

பக்தி வினையத்தோடு பெறுவது முக்கியமல்ல,  பாரம்பரியமாக பெறுவதும் முக்கியமல்ல, திருவிருந்து பெறுகின்ற ஒவ்வொருவரும் "சீஷர் குறை தீரு - "சீஷர் குறையை தீர்ப்பது ..." தான்,  திருவிருந்து பெறுபவர்களின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்று பாடல் வழியாக உணர்த்துகின்றார்.

 

1. ஒடுக்கப்பட்டோரை ஓரணியில் திரட்டும் திருவிருந்து. (விடுதலைப் பயணம் 12 : 1 - 14)

2. தெரிந்தெடுக்கப்பட்டோரை உணர்வில் நிறுத்தும் திருவிருந்து. (லூக்கா 22 : 7 - 20)

3. திருஅவையோறை ஆன்மீகத்தில் நடத்தும் திருவிருந்து. (1 கொரிந்தியர் 10 : 14 - 22)

மேற்கண்ட தலைப்புகளின் வழியாக திருமறை பகுதிகளை தியானிப்போம்.

 

1. ஒடுக்கப்பட்டோரை ஓரணியில் திரட்டும் திருவிருந்து. (விடுதலைப் பயணம் 12 : 1 - 14)

எகிப்தில் 400 வருடங்களுக்கு மேலாக அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரவேல் சமூகம் பெரும் துயரங்களை அனுபவித்தது,  சித்திரவதைகளை சந்தித்தது, அச்சம், பயம், நடுக்கம் இவைகளூடாக தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தனர்.

அடிமைகளாய், அகதிகளாய், பெருமூச்சுகளோடும் கண்ணீரோடும், கவலைகளோடும் அடிமைத்தனங்களுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டு வாழ்வதற்கு பழகிக் கொண்டார்கள்.

கொடுமையான தண்டனைகளினாலும், வரம்பற்ற அதிகாரத்தின் பிடியினாலும், அரசு எந்திரத்தின் வன்முறைகளினாலும் மேலும் ஒடுக்கப்பட்டார்கள்.

விடுதலைக்கான குரல்கள் ஆங்காங்கே எழுந்திருக்க கூடும். ஆனாலும் அவைகள் நசுக்கப்பட்டு இருக்கலாம்., அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்.

ஒடுக்கப்பட்டோருக்கான போராட்டங்களும்,  செயல்பாடுகளும் நடைபெற்றிருக்க கூடும், அவைகள் இரும்பு கரம் கொண்டு சிதைக்கப்பட்டு இருக்கக்கூடும்.

ஒரு தலைமுறையல்ல இரு தலைமுறையல்ல பல தலைமுறைகள், தங்கள் போராட்டங்கள் நசுக்கப்படுவதைக் கண்டு, நாளடைவில் தங்களைத் தாமே அடிமைத்தனத்திற்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.

அவர்களின் விடுதலைக்கான எல்லா முயற்சிகளும், செயல்பாடுகளும், வடிவங்களும், முன்னெடுப்புகளும் தோல்வியடைந்த பின்பதாக அவர்களின் ஒரே நம்பிக்கை கடவுள் தான்.

அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போகவில்லை. கடவுளின் மீட்பு திட்டத்தை மோசேயின் வழியாக அறிந்து கொள்கிறார்கள். கடவுளின் செயல்பாடுகளை எகிப்தியருக்கு நேரிடுகின்ற இன்னல்கள், துன்பங்கள், வாதைகள் வழியாக அறிந்து கொள்கிறார்கள்.

மோசே பார்வோன் மன்னரோடு பேசுகின்ற உரையாடல்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. பார்வோன் மன்னரிடம் மோசே வைக்கின்ற ஒரே கோரிக்கை  "என் மக்களைப் போகவிடு" என்பதே ஆகும்.

பார்வோன் மன்னனின் 'மறுப்பு' எகிப்தியருக்கு இன்னல்களை வர வைத்தது. கடவுளின் சினத்திற்கும் ,தண்டனைக்கும் வித்திட்டது. வாதைகளால் எகிப்திய மக்கள் இதுவரை கண்டிராத துன்பத்தையும், அவலங்களையும், நோய்களையும், இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது.

எகிப்தியர் சந்தித்த வாதைகள் வழியாக, கடவுள் இரு செய்திகளை பரிமாற்றம் செய்கிறார். ஒன்று ஒடுக்குபவர்களுக்கு மற்றொன்று ஒடுக்கப்பட்டவர்களுக்கு. ( Through the plague, God communicates two message's, one is for the Oppressed the other is for the Oppressors)

கடவுளின் செய்தி என்னவென்றால் "ஒடுக்குகின்ற எகிப்தியர்கள் ஒடுக்கப்படுவார்கள், ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் விடுதலையாக்கப்படுவார்கள்."

எகிப்தியர் அனுபவிக்கின்ற ஒவ்வொரு வாதைகளும் இஸ்ரவேலும் மக்களுக்கு விடுதலையின் செய்தியை பறைசாற்றின, உறுதிப்படுத்தின.

ஒடுக்கின எகிப்தியர் வாதைகளால் ஒடுக்கப்பட்டார்கள். ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் வாதைகளின் வழியாக விடுவிக்கப்பட்டார்கள்.

கடவுளின் ஒரு செயல் (வாதைகள்) ஒடுக்குகின்ற மக்களுக்கு துர்ச்செய்தியாகவும்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நற்செய்தியாகவும் அமைந்தது.

கடவுளின் அருஞ்செயல்கள் எகிப்தியர் வாழ்வில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வந்தது. நிலங்கள் பாழாகின, ஆறுகள் நாற்றம் எடுத்தன, நோய்கள் பெருகின, விளைச்சல் இல்லாமல் போயின, ஓலங்கள் பெருகின, துன்பங்கள் தலைவிரித்தாடின.

பார்வோன் மன்னருக்கு இரு பெறும் நெருக்கடிகள் கடவுளால் உருவாக்கப்பட்டன.. ஒன்று வாதைகள் மூலம் நெருக்கடி மற்றொன்று எகிப்திய மக்களே ஒன்று திரண்டு இஸ்ரவேலரை போக விடுங்கள் என்று நெருக்கடி தந்திருக்கலாம்.

கடவுள் மோசே மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு இதுவரையிலும் எந்த செய்தியும் பகிர்ந்ததாக தெரியவில்லை. ஒருவேளை பகிர்ந்து இருக்கலாம் ஆனால் அவைகள் நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை.

ஒரே ஒரு செய்தி மாத்திரம் இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் மோசே மூலம் வழங்குகிறார். அவைகள் தான் திருமறை பகுதிகளாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு கூறுகின்ற ஒரே ஒரு செய்தி "நீங்கள் இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.(யாத்திராகமம் 12 : 3)

 "கர்த்தருடைய பஸ்கா" விருந்தை ஆயத்தப்படுத்துங்கள். இல்லங்கள் தோறும் அந்த விருந்து உண்டாக்கப்பட வேண்டும் வேண்டும். அது விடுதலையின் விருந்து. (யாத்திராகமம் 12 : 11)

கடவுள் விரும்புகின்ற பஸ்கா விருந்து அமர்ந்து உண்ணுகின்ற உணவல்ல மாறாக நின்று கொண்டு, கால்களில் பாதரட்ச்சைகளைத் தொடுத்துக்கொண்டு, அரைகளில் கச்சைகளை கட்டிக்கொண்டு, தடிகளை கைகளில் பிடித்துக் கொண்டு..., தீவிரமாய் உண்ண வேண்டும்.

400 வருடங்களுக்கு மேலாக அடிமைப்பட்டு கிடந்த சமூகத்தை ஒன்று திரட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. அவர்களை விடுதலை வாழ்வுக்கு நேராக வழி நடத்துவதும் சாமானியமான காரியம் அல்ல.

அடிமை வாழ்வே போதும் என்று நினைத்திருந்த இஸ்ரவேலர்கள் மத்தியிலே மாபெரும் எழுச்சி கடவுளின் வார்த்தைகளால் உண்டானது.

 

இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் பணித்த பஸ்கா விருந்து

🍎ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலர்களை ஓரணியில் திரள செய்தது. 

🍎அடிமைப்படுத்தும் காரணிகளிலிருந்து தங்களை விடுவிக்க வழிவகை செய்தது.

🍎எகிப்திய மன்னரின் கட்டளைகளுக்கு பணிவதா? அல்லது கடவுளின் கட்டளைகளுக்கு பணிவதா? என்ற கேள்வியை அவர்களுக்குள் எழுப்பியது, 

🍎மன்னரின் கட்டளைகளுக்கு "பணிய மறுக்க" வைத்தது.

🍎ஒடுக்கப்பட்டவர்களின் ஆற்றல்களை ஒன்று திரட்டியது.

🍎ஒடுக்குபவருக்கு எதிராக  ஒத்துழையாமை இயக்கத்தை உருவாக்கியது

🍎ஒடுக்குதலை எதிர்க்கின்ற மோசேயோடு ஒடுக்கப்பட்ட மக்களை இணைய வைத்தது

🍎விடுதலை அளிக்கும் கடவுளோடு இஸ்ரவேலர் தங்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்தது

🍎கத்தியின்றி யுத்தமின்றி அறவழியில் விடுதலை வாழ்வுக்கு போராட வழிவகை செய்தது பாஸ்கா விருந்து.

கடவுள் இஸ்ரேல் மக்களுக்கு கட்டளையிட்ட பஸ்கா விருந்து விடுதலை வாழ்விற்கு நேராக வழி நடத்தியது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வின் விடுதலை விருந்தாக அமைந்தது.

🍎பொதுவாக விருந்து என்பது வெற்றி கொண்டாட்டத்தின் இறுதியில் நடைபெறும் ஆனால் கடவுள் இஸ்ரவேல் மக்களுக்காக ஏற்படுத்திய பஸ்கா விருந்து விடுதலை வாழ்வின் முன் சுவையாக அமைந்திருந்தது.

பஸ்கா விருந்து  ஒடுக்கப்பட்டோரை ஓர் அணியில் திரள செய்து, அணி அணியாய் விடுதலை பயணத்தில் பங்கெடுக்க வழிவகை செய்தது. விடுதலை வாழ்விற்கு வித்திட்டது.

இறைவன் அருளும் விருந்து அது ஒடுக்குபவருக்கல்ல ஒடுக்கப்பட்டோருக்கே என்ற உணர்வை பஸ்கா விருந்து உணர்த்துகிறது.

 

2. தெரிந்தெடுக்கப்பட்டோரை உணர்வில்  நிறுத்தும் திருவிருந்து. (லூக்கா 22 : 7 - 20)

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வியல் முறை முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக அமைந்திருக்கிறது. அவரின் சிந்தை, செயல், வழி,  வாழ்வு அனைத்தும் அன்றைய யூதர்களிடமிருந்து மாறுபட்டு இருந்தது.

இயேசு கிறிஸ்துவின் உறவின் வட்டம் மிகப்பெரியது. அந்த வட்டத்திற்குள் ஏழைகள், கைம்பெண்கள், அன்னகர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் .. என்று இருந்தார்கள்.

இது உலக வழக்கத்திற்கு மாறான உறவின் வட்டமாகும். ஆயக்காரர்களும், பாவிகள்  எனப்பட்டவர்களும், பாலியல் தொழிலாளர்களும்.. இயேசுவின் நட்பின் வளையத்திற்குள் இருந்தார்கள்.

இயேசுவின் மனதுருகும் அன்பு, இரக்கம், பரிவு சமய தலைவர்களிடம் இல்லாத ஒன்றாக இருந்தது. இவைகள் சமய தலைவரிடம் இருக்க வேண்டும் ஆனால் அவரிடம் அது இல்லாது இருந்தது.

இயேசுவின் காலத்தில் சமயமும் ஆட்சி அதிகாரமும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருந்தன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் சமூகம் இவர்களால் ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.

ஏழைகள் மேலும் ஏழைகள் ஆக்கப்பட்டார்கள். வறியவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டார்கள். விளிம்பு நிலையில் இருக்கிறவர்கள் மேலும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

ஜெப ஆலயமும் வியாபார தலமாக மாற்றப்பட்டது, சந்தை பொருளாதாரம் பெருகி இருந்தது. தூய்மை தீட்டு சட்டங்குளால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டிருந்தார்கள்,  ஏற்றத்தாழ்வுகள் பெருகி இருந்தன.

இயேசு கிறிஸ்து இவர்களைக் கண்டும் காணத்தவறாக இல்லாமல் இவைகளை மாற்ற வேண்டும், சமூகநீதி காக்கப்பட வேண்டும், மனித மாண்பு போற்றப்பட வேண்டும், சமத்துவம் உருவாக வேண்டும், இறை ஆட்சி மண்ணில் மலர வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு முழக்கத்தோடு தம் திருப்பணியை துவங்குகின்றார்.

இயேசுவின் இந்த திருப்பணி திட்டத்தில் தம் சீடர்களை தெரிந்தெடுத்து  அவர்களோடு இணைத்து மாற்றத்தை நோக்கி பயணிக்கின்றார்.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் லட்சிய பயணத்தில்,  சீடர்கள் தங்களை உடலளவில் இணைத்து கொண்டார்களே தவிர மனதளவில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்பது அவர்களின் பேச்சில், சிந்தனையில், செயல்களில் இருந்து அறிய முடிகிறது.

இயேசு கிறிஸ்துவின் இறை ஆட்சி என்கின்ற பிரகடனத்தை  சீடர்கள் புரிந்து கொண்ட விதம் வேறுவிதமாக அமைந்திருந்தது.

இயேசு கிறிஸ்து யுத்தம் செய்து சண்டையிட்டு மன்னர் ஆட்சியை  அகற்றி,  இறை ஆட்சியை அமைப்பார், நிறுவுவார் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

அதன் விளைவு இறை ஆட்சியில் ஆண்டவரின் வலது பாரிசத்தில் வருவதும் இடது பாரிசத்தில் ஒருவரும் தங்களுக்கு இடம் வேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.

இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி சிலுவையில் தான் அமையும் என்பதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். தாம் எருசலேமில் படப்போகும் பாடுகளையும் துன்பங்களையும் உயிர்ப்பையும் மூன்று முறை தம் சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார். ஆனால் அவர்கள் மனதில் அது ஏறவில்லை.

இந்த சூழ்நிலையில் இயேசு கிறிஸ்து பஸ்கா விருந்தை தம் சீடர்களுக்கு ஏற்படுத்துகின்றார். அது தான் நமக்கு திருமறைப் பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

இயேசு கிறிஸ்துவுக்கும் ஓர் ஆசை இருந்தது,  விருப்பம் இருந்தது அது என்னவென்றால் "தான் பாடுபடுவதற்கு முன்பே சீடர்களோடு பஸ்கா உணவை சீடர்களோடு உண்ண வேண்டும் என்பதே அந்த ஆசை. (லூக்கா 22  :  15)

இல்லங்கள் தோறும் கொண்டாடப்படுகின்ற பஸ்கா விருந்தை இயேசு கிறிஸ்து தம் தோழர்களோடு மேல் அறையில் கொண்டாடுகின்றார்.

இந்த பஸ்கா விருந்தும் ஒரு ஆயத்த விருந்து, விடுதலையின் முன் சுவையாக அமைந்திருந்தது. இந்த விருந்தில் சமத்துவம் இருந்தது, மாறுபட்ட சிந்தனையாளர்கள் பங்கு பெற்றார்கள். விருந்தும் உரையாடலும் கலந்திருந்தது.

இயேசுவோடு பஸ்கா விருந்தில் உடன் இருந்தவர்கள் உணவை சுவைத்தார்கள் ஆனால் இயேசு கிறிஸ்து தன் பாடு மரணங்களை சுவைத்தார்..

இது சிலுவைப் பாடுகளுக்கு முன் இறுதி உணவாக புரிந்து கொள்ளப்பட்டது,  ஆனால் பெறப்போகும் விடுதலையின் முன் விருந்தாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பஸ்கா விருந்தை உண்டாக்கி இருந்தார்.

பஸ்கா விருந்தில் இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகள்..

> அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது, என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.(லூக்கா 22  :  19)

🍎போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். (லூக்கா 22  :  20)

நினைவு கூறுங்கள், இது புதிய உடன்படிக்கை இன்று இரண்டு படங்களை இயேசு கிறிஸ்து பயன்படுத்துகின்றார்.

 

எவைகளை நினைவு கூறுவது?

🍎அநீதிக்கு எதிராக இயேசு களம் கண்டதை நினைவு கூறுங்கள்

🍎அடிமைப்படுத்தும் அதிகாரங்களுக்கு ஒத்துப்போகாத இயேசுவை நினைவு கூறுங்கள்

🍎அறவழியில் மக்களின் விடுதலைக்கான செயல்பாடுகளை நினைவு கூறுங்கள்

🍎தொடுவதா?  தொடக்கூடாதா ? என்று விலகி இருப்பதைக் காட்டிலும் தொட்டு குணமாக்கியதை நினைவு கூறுங்கள்.

🍎பாவிகளோடும்,  ஆயக்காரர்களோடும் சரிக்கு சமமாக உட்கார்ந்து சமபந்தி உணவு உண்டதை நினைவு கூறுங்கள்

🍎ஜெப ஆலயத்தை கள்வர் குகை ஆக்கினவர்களை சவுக்கால் அடித்து சுத்தம் பண்ணியதை நினைவு கூறுங்கள்

🍎சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவித்து ஏழைகளை சுரண்டி பிழைத்து. வாழ்ந்தவர்களின் ஆசனங்களை கவிழ்த்ததை நினைவு கூறுங்கள்

🍎மரித்தோரை எழுப்பி மேசியா யுகம் வந்துவிட்டது என்று உலகிற்கு பறைசாற்றியதை நினைவு கூறுங்கள்

🍎மாற்றுத்திறனாளிகளை மாண்போடு நடத்தி மறுவாழ்வுக்கு வித்திட்டதை நினைவு கூறுங்கள்

இவைகள் தவிர மேலும் பல இயேசு சொன்னவைகளை நினைவு கூறுங்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்

🍎வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்று கடிந்து கொண்டதை நினைவு கூறுங்கள்

🍎ராயனுடையது ராயனுக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் செலுத்துங்கள் என்று கூறினதை நினைவு கூறுங்கள்

🍎உங்களில் பாவம் செய்யாதவன் முதலில் கல்லெறிய கடவன் என்று சொன்னதையும் நினைவு கூறுங்கள்

மொத்தத்தில் இயேசு அமைத்த பஸ்கா விருந்து சீடர்களை உணர்விற்குள் நிறுத்தியது. இயேசு கிறிஸ்துவின் சிந்தையை அணிந்து கொள்ளச் செய்தது. இயேசு கிறிஸ்துவின் வழியில் பயணிக்க வழி வகுத்தது.

கடவுள் தம் மக்களோடு செய்து கொண்ட  கொண்ட உடன்படிக்கை ஒவ்வொன்றும் வித்தியாசமான சூழ்நிலைகளை நமக்கு முன்வைக்கின்றன.

கடவுள் இஸ்ரேல் மக்களோடு மீண்டும் மீண்டும்  புதிய உடன்படிக்கை உறவை ஏற்படுத்துகின்றார். அந்த உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களுக்கு விடுதலை வாழ்வை நிதர்சனப்படுத்துகிறது.

ஆனால் இயேசு கிறிஸ்து உண்டாக்கிய இந்த புதிய உடன்படிக்கை முற்றிலும் வித்தியாசமானது

👉🏾புதிய உடன்படிக்கையை தம் சீடர்களோடு ஏற்படுத்துகின்றார்.

👉🏾இறை ஆட்சி பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களோடு புதிய உடன்படிக்கையை உண்டாக்குகிறார்.

👉🏾மக்களோடு அல்ல பணியாளர்களோடு புதிய உடன்படிக்கை மேற்கொள்கின்றார்.

👉🏾இந்த உடன்படிக்கை தன்னை காட்டிக் கொடுக்கிறவரோடும் இருக்கிறது,  மாறுபட்ட கருத்தியலோடு பயணிப்பவர்களோடும் இருக்கிறது.

👉🏾தன்னை மறுதலிப்பவரோடும் தன்னை விட்டு செல்பவர்களோடும் இந்த உடன்படிக்கை உண்டாயிருக்கிறது.

👉🏾தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோடு இந்த உடன்படிக்கை அமைந்திருக்கிறது.

👉🏾இந்த உடன்படிக்கைக்கு அப்பமும் திராட்சை சாறும் சான்றாக இருக்கிறது.

👉🏾சிலுவையின் வழியில் இனி தம்மோடு பயணிக்க இருக்கின்ற சீடர்களோடு இந்த உடன்படிக்கை உண்டாயிருக்கிறது.

👉🏾பாடுகளின் வழி தான் மீட்பு என்னும் கருத்தியலை உள்வாங்க செய்து இந்த உடன்படிக்கை அமைந்திருக்கிறது.

இயேசு கிறிஸ்து அமைத்த இந்த பஸ்கா விருந்து என்பது எகிப்தில் ஒடுக்கப்பட்டிருந்த இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு விடுதலை வாழ்வை பெறுவதற்கு முன் சுவைத்தார்களோ அதுபோல தான் வாழுகின்ற சூழ்நிலையில் ஒடுக்கப்பட்டிருக்கிற மக்கள் விடுதலை பெறுவதற்கு  சிலுவை களத்தில் போராடுவதற்கு முன்பதாக அதை சுவைத்தார்.

மொத்தத்தில் இயேசுவின் திருவிருந்து மாறுபட்ட எண்ணங்களையும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் உடைய சீடர்களை இயேசுவின் சிந்தையில் உணர்வில் நிறுத்தியது. புதிய உடன்படிக்கை உறவுக்குள் அவர்களை வழிநடத்தியது. இந்த உடன்படிக்கை இயேசுவின் சீடர்களை இயேசுவின் வழியில் பயணிப்பதற்கு வழித்தடம் அமைத்தது.

இயேசு அமைத்த இந்த திரு விருந்து சிலுவையின் வழியாக உயிர்ப்பின் வழியாக பெற இருக்கின்ற விடுதலை வாழ்வில் பங்கெடுக்கவும் , அந்த வெற்றி கொண்டாட்டத்தின் விருந்தை, இறை ஆட்சியில் நடைபெறும் விருந்தை முன்பாக ருசிக்கவும் வழிவகை  செய்தார்.

🍎இயேசுவின் விருந்தில் ஆயக்காரர்களும் பாவிகளும் உடன் இருந்தார்கள்.

🍎இயேசுவின் விருந்தில் ஒரு ஏழை சிறுவனின் வாற்கோதுமை அப்பமும் மீனும் பகிரப்பட்டன.

🍎இயேசுவின் திருவிருந்தில் தெரிந்தெடுக்கப்பட்டோர்கள் பங்கு பெற்றார்கள்.

ஒவ்வொரு முறையும் திருவிருந்து பெரும்பொழுது இந்த உணர்வில் பங்குபெற அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் வழியில் பயணித்து பாடுபடுவதற்கு  நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்ற உணர்வில் திருவிருந்தில் பங்கு பெறுவோம்.

#  திருவிருந்தில் பங்கு பெறும்போதெல்லாம் நாம் மனதில் நினைக்க வேண்டிய ஒன்றே ஒன்று இயேசு அமைத்த விருந்து சாதாரண மக்களுக்கு அல்ல,  பக்திமான்களுக்கு அல்ல,  திருச்சபை மக்களுக்கு அல்ல மாறாக ஒடுக்கப்பட்டோரின் குரலாய் இருப்பவர்களுக்கு, ஒடுக்கப்பட்டோரின் சார்பாக  சார்பாக நின்று களம்  காண்பவர்களுக்கு, இயேசுவின் வழியில் பயணிக்கின்ற பணியாளர்களுக்கே என்பதை நினைவில் கொண்டு பந்திஅமர்வோம்.

3. திருஅவையோறை ஆன்மீகத்தில் நடத்தும் திருவிருந்து. (1 கொரிந்தியர் 10 : 14 - 22)

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு பின்பதாக திருச்சபை என்ற பேரியக்கம் உருவானது, இந்த இயக்கம் உலகமெங்கும் பரவியது.

இயேசுவின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்ட அத்தனை பேரும் மாற்று சமூகமாக வாழ்ந்தார்கள்.

வீடுகள் தோறும் அப்பம் பிட்டார்கள், திறந்த மனதோடு வாழ்ந்தார்கள், கள்ளம்  இல்லாத இதயத்தோடு வாழ்ந்தார்கள், சகலத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள், தேவைக்கு தக்கதாக  பகிர்ந்து கொடுத்தார்கள்.

இயேசுவின் சீடர்களும் திருச்சபை உருவாக்கினார்கள்.  உயிர்த்த ஆண்டவரின் திருக்காட்சியை தரிசித்த பவுல் அடியாரும் திருச்சபையை தோற்றுவித்தார்கள்.

பவுல் அடியார் உண்டாக்கின திருச்சபை கொரிந்தியர் திருச்சபை ஆகும். இந்த திருச்சபையில் நிலவி இருந்த பல்வேறு சீர்கேடுகளையும் தவறான போதனைகளையும் நீக்குவதற்கு பவுலடியார் கடிதம் மூலம் அவர்களை தொடர்பு கொள்கின்றார்.

கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதியில் திருவிருந்து பற்றிய உரையாடல்களை அவர்களோடு மேற்கொள்கின்றார், அதனை புரிய வைப்பதற்கு முயற்சிக்கின்றார், திருவிருந்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

பவுல் அடியார் ஏற்படுத்தின இந்த திருஅவை, திருவிருந்து பற்றிய தவறான கண்ணோட்டங்களை எவ்வாறு கொண்டிருந்தது என்பதை இஸ்ரவேல் மக்கள் வாழ்வோடு ஒப்பிட்டு அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார்.

பஸ்கா விருந்தில் பங்கு பெற்ற இஸ்ரவேல் மக்கள் விடுதலைப் பெற்றார்கள் ஆனாலும் அவர்களில் ஒரு சிலர் ..

🍎அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை.

🍎ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.(1 கொரிந்தியர் 10 : 5)

🍎அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்.(1 கொரிந்தியர் 10  :  8)

🍎அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்..(1 கொரிந்தியர் 10  :  9)

🍎அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்..(1 கொரிந்தியர் 10  :  10)

என்று அவர்களுக்கு வலியுறுத்தி திருவிருந்து கிறிஸ்துவோடு நம்மை இணைக்கின்றது அவர் நம்மோடு இணைகின்றார் என்ற செய்தியை அவர்களுக்கு கூறுகின்றார்.

கொரிந்தியர் திருஅவையில் பக்தி எனும் போர்வையில் அவர்கள் வாழ்ந்த மாயமாலமான வாழ்க்கையையும் சுட்டிக்காட்டி கடவுளை எரிச்சல் ஊட்டுவது நியாயமா என்ற கேள்வியையும் அவர் எழுப்புகின்றார்.( 1 கொரிந்தியர் 10 : 22)

கொரிந்தியர் திருஅவை நண்பர்களுக்கு கூறுகின்ற ஆலோசனைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் அவைகள்,

 

🍎எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.(1 கொரிந்தியர் 10  :  2)

🍎எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்( 1 கொரிந்தியர் 10  :  3)

🍎நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.)1 கொரிந்தியர் 10  :  31)

🍎விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.(1 கொரிந்தியர் 10  :  14)

🍎நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள் (1 கொரிந்தியர் 10  :  33)

இஸ்ரவேல் மக்கள் திருமுழுக்கும் பெற்றார்கள் திரு விருந்திலும் பங்கு பெற்றார்கள் எனினும் அவர்கள் கடவுளுக்கு பிரியமாய் நடக்கவில்லை, மாறாக அவர்கள் கடவுளுக்கு விரோதமாக வாழ்ந்தார்கள்.

ஆதி திருச்சபை அவையோர்களும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலமாக தங்கள் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களாய் இருந்தாலும் இஸ்ரவேல் மக்களைப் போலவே அவர்களும் சோறம் போனார்கள்.

விடுதலையாக்கும் கடவுளை மறந்து விட்டு அடிமைப்படுத்தும் சிலை வணக்கத்திற்கும் அதனைச் சார்ந்த பலி செலுத்துதல் மற்றும் இலைகளுக்கு படைக்கப்பட்ட உணவை உண்ணுதல் போன்ற காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

பவுலடியார் கொரிந்தியர் திருச்சபைக்கு சுட்டிக்காட்டுகின்ற இரு பெரும் உண்மைகள் என்னவென்றால் ஒன்று இஸ்ரவேல் மக்கள் மீட்கப்பட்டார்கள் எனினும் தங்களை அடிமை வாழ்விற்கு சிலை  வணக்கத்திற்கு தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். கடவுள் அவர்களை வனாந்தரத்திலேயே அழித்தார்.

இயேசு கிறிஸ்துவும் தம்மையே தியாகபலியாக தந்து நம்மை மீட்டெடுத்திருக்கின்றார். திருஅவையாக உருவாக்கி இருக்கின்றார்.

பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதே இயேசு கிறிஸ்துவின் தலையாய போதனையாகும்.  மீண்டும் மீண்டும் பலி செலுத்தி,  பலிக்கு படைக்கப்பட்ட உணவை உண்ணுவதன் மூலம் இயேசுவின் பாடு மரணங்களுக்கு காரணங்கள் ஆகிறோம். இயேசுவின் காயங்கள் தொடர்வதற்கு நாமும் ஒரு கருவி ஆகின்றோம்.

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யக்கூடாது என்பது இயேசுவின் கருத்தியலாகும். எனவே கொரிந்தியர் திருஅவை கடவுளுக்கேற்ற ஆன்மீகத்தில் வளர்வதற்கு முன் வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

கடவுள் விரும்புகின்ற ஆன்மீகம்,

👉🏾பலிகளுக்கு எதிரானது,

👉🏾சிலை  வணக்கத்திற்கு எதிரானது,

👉🏾அடிமைப்படுத்தும் காரணிகளுக்கு முற்றிலும் மாறானது,

👉🏾மாய்மாலமான வாழ்க்கைக்கு எதிரானது,

👉🏾சுயநலனுக்கு எதிரானது,

👉🏾அதிகாரங்களுக்கு முற்றிலும் நேர் எதிரானது,

👉🏾செயல்களினால் அல்ல கடவுளின் கிருபையினால்

எனவே திருஅவையானது கடவுள் விரும்புகின்ற ஆன்மீகத்தில் வளர்வதும், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் கடவுளின் சித்தத்தின் படி நடப்பதும் தான் கிறிஸ்தவ வாழ்வு என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

திருஅவையானது கடவுள் விரும்புகின்ற ஆன்மீகத்தில் வளர்ந்தவர்களாய்  கடவுள் விரும்பும் திருவிருந்தில் நாம் பங்கு பெற அழைக்கப்பட்டிருக்கிறோம்,  அப்படிப்பட்ட திருவிருந்தில் பங்குபெறுகிறவர்கள்,

" நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?

 அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.(1 கொரிந்தியர் 10  :  16, 17)

என்ற உணர்வில் விருந்துக்கும் திருவிருந்துக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து, சிலை வணக்கம் என்றும் அதிகாரத்திற்கு துணை போகின்ற காரணிகள் என்பதே கண்டறிந்து, அவற்றின்று இருந்து நம்மை விலக்கி, கிறிஸ்துவின் சிந்தையில் நம்மை இணைத்து இருப்பதே கடவுள் விரும்பும் ஆன்மீகம் என்ற உணர்வில் வளர்வது கடவுளின் விருப்பமாகும்.

திருவிருந்து என்பது திருவருட்சாதனம், அது கிறிஸ்துவில் நம்மை இணைக்கிறது, பாகுபாடுகளை களைகிறது, வேற்றுமைகளை அகற்றுகிறது, நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருஅவை என்பதை உணர்த்துகிறது.

🍎ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.(1 கொரிந்தியர் 11 : 26)

🍎எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.(1 கொரிந்தியர் 11 : 27)

🍎எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.(1 கொரிந்தியர் 11 : 28)

🍎அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான்(1 கொரிந்தியர் 11  :  29)

திருஅவையானது மேற்கண்ட இவைகளை கருத்தில் கொண்டு திரு விருந்தில் பங்கு பெற பவுல் அடியார் கடிதத்தின் வழியாக அன்றைய திருச்சபைக்கும் இன்றைய திருச்சபைக்கும் வலியுறுத்துகின்றார்.

# நிறைவாக:

மீண்டும் ஒருமுறை நாம் நம்மை நினைவுபடுத்திக் கொள்வோம், "கர்த்தரின் பந்தியில் வா "  பாடலை பாடும் பொழுது முதல் சரணம் இப்படி ஆரம்பிக்கிறது

"அன்பின் விருந்தாமே... கர்த்தருடன் ஐக்கிய பந்தியாமே.."

அன்பின் விருந்தில் பகை மறந்து, மன்னிப்பு ஈந்து, ஒப்புரவாகி, உறவின் முறைக்குள் வந்து திருவிருந்து பெறுவோம். அப்பொழுது திருவிருந்து மேன்மை உள்ளதாகிறது, இல்லையெனில் திருவிருந்து சிறுமைப்படுத்தப்படுகிறது.

இது கர்த்தரின் பந்தி ...இந்த பந்தியில் சமத்துவ உணர்வோடு,  சகோதரத்துவ பாசத்தோடு, சமூக நீதியோடு... பங்குபெறும் பொழுது உன்னதத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது, உன்னதரும் மகிழ்வார்.

திருவிருந்து சிலுவைக்கு நேராக திருஅவையை அழைக்கின்றது, கிறிஸ்துவின் பாடு மரணத்தின் உயிர்ப்பில் பங்கு பெறச் செய்து சிலுவையின் வழியில் பயணத்தை தொடர நம்மை வழி அனுப்புகிறது.

பஸ்கா திருவிருந்து ஒடுக்கப்பட்டோருக்கான திருவிருந்தாக அமைந்தது...

இயேசுவின் திருவிருந்து சிலுவைப் பாடுகளில் பங்கெடுப்பவர்களுக்காக அமைந்தது...

திருஅவையின் திருவிருந்து இயேசுவின் இயக்கத்தில் இணைந்தவர்களுக்காக அமைந்தது....

இதில் நாம் எந்த கூட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து இனி வருகின்ற திருவிருந்தில் பங்கு பெறுவோம்...

இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக .....

இறை ஆசியாய்  என்றும் வாழ்ந்திடுவோமாக...

 

நட்புடன் உங்கள்

 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்

️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀

Comments