CARING AND ACCEPTING THE ELDERLY

CARING AND ACCEPTING THE ELDERLY

மூத்த குடிமக்களை பராமரித்தலும் ஏற்றுக்கொள்ளுதலும்


# திருமறைப் பகுதிகள்:
தொடக்க நூல் 48 : 28 - 34 / 47 : 1 - 10
1 தீமோத்தேயு 5 : 1 - 10
லூக்கா 2 : 25 - 35
திருப்பாடல்கள் 21

# உட்புகும்முன்:
திருப்பணியாளர்களின் வாழ்வில் பல மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெற்றிருக்கும், அதுபோல என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது.
ஒரு நாள் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் ஐயா .. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி உங்களுக்கு ஏதாவது அலுவல் இருக்கிறதா? என்று கேட்டார். நான் வழிபாடு மட்டும் இருக்கிறது, அதை முடிந்த பின்பதாக வேறு ஒன்றும் இல்லை என்று சொன்னேன்.
ஐயா.. ஒன்றாம் தேதி நீங்கள் வந்து, நாங்கள் புதிதாக ஆரம்பிக்க இருக்கின்ற "முதியோர் இல்லத்தை" திறந்து வைக்க வேண்டும் என்றார். ஏனோ என் மனது இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை..நான் அதை மறுத்து விட்டேன்.
ஐயா என்னுடைய மனது இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, எனவே நான் வந்து அதை திறந்து வைக்க முடியாது. வேறு யாரையாவது ஒருவரை அழைத்து நீங்கள் திறந்த வையுங்கள் என்று கூறிவிட்டேன்.
சரி ஐயா ...நான் ஒரு அரை மணி நேரத்தில் தங்கள் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு அரை மணி நேரத்தில் வந்து உட்கார்ந்தார்.
நானும் அவரும் அமர்ந்து ஒரு மணி நேரம், முதியோர்கள் இல்லத்தை குறித்து விவாதித்தோம். இறுதியில் முதியோர் இல்லத்தின் அவசியத்தை உணர்ந்து, அவரின் அழைப்பும் ஒப்படைப்பும் குறித்து வியந்து, முதியோர் இல்லத்தை திறந்து வைத்தேன்.
அதன் விளைவு எங்களுடைய திருச்சபையில் வாலிபர்களை ஒருங்கிணைத்து "முதியோர்கள் பராமரிப்பு குழு" ஒன்றை உருவாக்க முடிந்தது.
முதியவர்களின் தேவைகளை சந்திக்கவும்,அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், அவர்களோடு நேரங்கள் செலவிடவும், அவர்களுக்கென்று இறை வேண்டல்கள் புரியவும் அந்தக் குழு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மற்றும் ஒரு தரமான சம்பவமும் எனக்கு ஏற்பட்டது, என்னவென்றால் இடம் மாறுதலாகி, ஒரு புதிய திருச்சபைக்கு சென்றிருந்தேன். அந்த திருச்சபையின் கிராம திருச்சபைக்கு வழிபாடு எடுக்க சென்றிருந்தேன்.
அந்த வழிபாட்டில் மொத்தம் ஆறு பேர் வந்திருந்தார்கள், அதில் நான்கு பேர் முதியவர்கள் இரண்டு சிறு பிள்ளைகள். நான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வழிபாட்டை ஆரம்பித்து, பாடல்களை பாடி, திருமறைப் பகுதியை நானே வாசித்து முடித்தேன்.
அருளுரை ஆற்றி முடித்த பின்பதாக காணிக்கை பாடலுக்கு எழுந்து நிற்போம் என்று சொன்னேன். அவர்கள் நான்கு பேரும் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
வழிபாட்டுக்கு வந்திருந்த சிறுபிள்ளை ஓடி வந்து, ஐயா அவர்கள் நான்கு பேருக்கும் காது கேட்காது என்று கூறினாள். அந்த ஒரு நொடிப்பொழுது நான் படித்த இறையில் மேற்படிப்பும், ஆய்வுக் கட்டுரையும் (Body language of Jesus ; Communicative Strategy for Mission and Ministry) மனதிற்குள் வந்து போனது.
அந்த அனுபவம் முதியோர்களைப் பற்றிய திருச்சபையின் பார்வை என்ன என்பதை அறிவதற்கும், ஆராய்வதற்கும், அதற்கான திருப்பணிச் சூழல்களை உருவாக்குவதற்கும் பேருதவியாக இருந்தது.
கிறிஸ்தவ கீர்த்தனைகளில் முதியோர்களைப் பற்றிய பாடல்கள் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை.
இந்த அருளுரையை வாசிக்கின்றவர்கள் யாராவது ஒருவர் முதியோர்களுக்கான ஒரு பாடலை எழுதினால் நலமாக இருக்கும்.

1. அரண்மனையால் கனப்படுத்தப்பட்ட முதுமை.(தொடக்க நூல் 48 : 28 - 34 / 47 : 1 - 10))
2. ⁠ஆலயத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட முதுமை.(லூக்கா 2 : 25 - 35)
3. ⁠அருட்பணியால் தெரிந்து கொள்ளப்பட்ட முதுமை.(1 தீமோத்தேயு 5 : 1 - 10)
மேற்கண்ட தலைப்புகளின் வழியாக திருமறை பகுதியை கருத்தோடு தியானிப்போம்.

1. அரண்மனையால் கனப்படுத்தப்பட்ட முதுமை.(தொடக்க நூல் 48 : 28 - 34 / 47 : 1 - 10))
அடிமையாக விற்று விடப்பட்ட யோசேப்பின் சரித்திரம் இஸ்ரவேலரின் விடுதலைப் பயண வரலாற்றுக்கு வித்திட்டது. மாற்றங்கள் என்பது மனித குல வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும்.
அடிமையாக விற்று விடப்பட்ட யோசேப்பு எகிப்தில் அகதியாக குடியேறுகின்றார். ஆதரவற்ற நிலையில் இருந்த யோசிப்பிற்கு எகிப்து அடைக்கலம் தந்தது.
அகதியாக வாழ்ந்த யோசேப்பு அந்நாட்டின் குடிமகனாக தன்னை உருவாக்கிக் கொள்கிறார். அந்நாட்டிலேயே பெண் கொண்டு தன் இல்லற வாழ்வையும் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
யோசப்பின் சகோதரர்களும் தகப்பனும் நாட்டில் நிலவிய கடும் பஞ்சத்தால் வாழ்வு தேடி அகதிகளாக எகிப்து வருகின்றார்கள்.
👉🏾யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.(ஆதியாகமம் 42 : 6)
ஒரு புதிய வரலாற்றை கடவுள் துவக்குகிறார். யோசேப்பு நாட்டின் அதிகாரியாய் இருக்கிறார். யோசேப்பின் சகோதரர்கள் அவரை விழுந்து வணங்குகின்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
 யோசேப்பு அவர்களை தானியத்தால் நிரப்பி அனுப்பி வைத்து தன் தகப்பனையும் சகோதரியும் அழைத்து வரும்படி நிர்பந்திக்கின்றார். அதன் பின்பதாக நடந்த நிகழ்வுகளை தொடக்க நூல் 46 -47 மிகவும் தத்ரூபமாக எடுத்துக்காட்டுகிறது.
யோசேப்பு தன் தகப்பனை பற்றி விசாரிக்கின்ற காட்சி மிகவும் அற்புதமானது.
🍎அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.(ஆதியாகமம் 43 : 27)
🍎அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.(ஆதியாகமம் 43 : 28)
தனது சகோதரன் யோசேப்பிடம் அவர்கள் விழுந்து வணங்கினார்கள் என்கின்ற இந்த காட்சி ஒரு திரைப்படம் போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
யோசேப்பின் வரலாற்றை அறிந்த பார்வோன் மன்னனும் அவனது அரண்மனையும் ஆச்சரியப்பட்டதோடு மட்டுமல்லாமல், உறவுகள் ஒன்று கூடி மகிழ்ந்ததை அரண்மனையும் கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் அரசன் அவர்களை நோக்கி,
🍎உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன். தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.(ஆதியாகமம் 45 : 18)
ஒரு உடன்படிக்கை எகிப்து மன்னரால் உருவாக்கப்பட்டது. யோசேப்பின் குடும்பத்தோடு கொண்ட ஒரு புதிய உடன்படிக்கையாக நாம் பார்க்கலாம்.
யோசேப்பு தன் சகோதரர்கள் மற்றும் தகப்பனை பார்வோன் மன்னருக்கு அறிமுகப்படுத்துகின்ற சமயத்தில் நடந்த நிகழ்வுகள் வழக்கத்திற்கு மாறாக நடந்த
நிகழ்வாக பார்க்கலாம். அவைகளில் பல விடுதலை கூறுபாடுகள் நிறைந்து இருப்பதையும் நாம் காணலாம்.
#யாக்கோபு பார்வோன் மன்னனை முதல் முறையாக ஆசீர்வதிக்கின்றார். யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். "யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்".(ஆதியாகமம் 47 : 7)
#பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான்.(ஆதியாகமம் 47 : 10)
எகிப்து மன்னராலும் யோசேப்பினாலும் யாக்கோபு என்கின்ற மூத்த குடிமகனுக்கு கிடைத்த இந்த மேன்மை, கனம் நம் கவனத்திற்குரிய ஒன்றாகும்.
A. பார்வோன் மன்னன் அகதிகளாக வந்த ஒரு முதியவரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்கு தன்னை தாழ்த்துகிறார்.
B. அரசரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றால் மற்றொரு அரசர்தான் ஆசீர்வதிக்க முடியும். இந்த விதியை உடைத்து எறிந்து யாக்கோபு என்னும் அகதியை, அகதியாக பார்க்காமல் மனிதராக பார்த்தது வியப்புக்குரிய ஒன்று.
C. அரசரை ஆசிர்வதிக்க வேண்டும் என்றால் அது ஆசாரியர் செய்ய வேண்டிய மரபாகும். அந்த மரபினையும் பார்வோன் மன்னன் மீறி, ஒரு எளியவரிடம் சாமானியரிடம் அகதியிடம் ஆசீர்வாதத்தை பெறுகின்றார்.
D. பஞ்சம் பிழைக்க வந்த ஒருவரை அற்பமாக எண்ணாமல், அவரை உயர்வாக எண்ணி, அவருக்குரிய கனத்தையும் மேன்மையையும் கொடுப்பதற்கு பார்வோன் மன்னன் தயங்கவில்லை.
E. தன்னைக் காட்டிலும் செல்வத்திலும் அதிகாரத்திலும் உயர்ந்த ஒருவரிடம் ஆசி பெறுவது அவருக்கு மேலும் வசதிகளையும் வாய்ப்புகளையும் தரும். அதை தவிர்த்து விட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முதிர் வயது யாக்கோபிடம் அரசர் ஆசி பெறுவது என்பது முதுமைக்கு கிடைத்த மரியாதை ஆகும்.
F. அரசரைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று, ஆனால் புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த ஒரு சமூகத்திற்கும் அதில் மூத்தவராகிய யாக்கோபிற்கும் மரியாதை செய்வது, அவரிடம் ஆசி பெறுவது என்பது அவர் அரசரின் உயர்ந்த பண்புகளை குறிக்கின்றதாக அமைந்திருக்கிறது.
🍎யோசேப்பு தன் முதிர் வயது தகப்பனுக்கு, உயரிய அந்தஸ்தையும், அடையாளத்தையும், மேன்மையையும், கனத்தையும் தன் செயல்களால் பெற்றுத் தந்தார்.
பார்வோன் மன்னர் எகிப்தியர்களால் அருவருக்குத்தக்க, தீண்டத் தகாதவர்கள் என்று கருதப்பட்ட ஆடு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தவர்களோடு உறவு ஏற்படுத்திக் கொண்டு உறவுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தார்.
🍎யாக்கோபு என்னும் முதியவருக்கு யோசேப்பு என்கின்ற மகனால் அரண்மனையில் மதிப்பும் மரியாதையும் மாத்திரம் அல்ல மேய்ப்பு தொழில் செய்த மக்களை நேசிக்கவும், அவர்களோடு தங்களை இணைத்துக் கொள்ளவும் அரண்மனை முன் வந்தது.
🍎பார்வோன் அரசன் இதுவரையிலும் தன்னோடு உடன் இருந்த யோசேப்பு அருவருக்கத்தக்க தொழிலை செய்து வந்த பரம்பரையை சார்ந்தவர் என்று முகம் சுளிக்காமல், அன்போடு ஏற்றுக்கொண்டு அவர்கள் குடும்பத்தை வாழ வைத்த பாங்கு மிகவும் உயர்ந்தது.
யோசேப்பும், பார்வோன் அரசரும் முதுமையை எவ்வாறு நடத்த வேண்டும் , அவர்களை எவ்வாறு உயரிய இடத்தில் வைக்க வேண்டும், அவர்களின் ஆசி கடவுளுக்கு இணையானது என்பதை தங்களின் செயல்களால் கற்றுக் கொடுத்தார்கள்.
மூத்த குடிமக்களை மாண்போடு நடத்துவோம். அவர்களுக்குரிய அங்கீகாரத்தை எப்போதும் வழங்குவோம். அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்.
2. ⁠ஆலயத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட முதுமை.(லூக்கா 2 : 25 - 35)
கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி பகுதியில் சிமியோன் என்கின்ற முதிர் வயது உடைய நபரை நாம் பார்க்கிறோம். அவரின் பண்பு நலன்களை நாம் இதன் வழியாக அறிகிறோம். அவரின் வேட்கை எவ்வாறு இருந்தது என்பதையும் திருமறை சுட்டிக்காட்டுகிறது.
👉🏾அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான், அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான், அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.(லூக்கா 2 : 25)
லூக்கா நற்செய்தியில் சிமியோன் அவர்களின் வாழ்வை மூன்று நிலைகளாக பிரித்துக் காட்டுகிறார்.
#ஒன்று, அவரின் நீதியான வாழ்வு.
#இரண்டாவது, அவரின் இறை பக்தி.
#மூன்றாவது, அவர் இஸ்ரவேல் நாட்டின் மீது நாட்டு மக்கள் மீது கொண்டிருந்த அக்கறை.
சுயநலத்தோடு வாழுகின்ற மக்கள் மத்தியில் சிமியோன் என்கின்ற முதியவர், இஸ்ரவேல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், நாடு நலமாக இருக்க வேண்டும் நாட்டு மக்கள் நீதியோடு வாழ வேண்டும் மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற பொதுநலனோடு வாழ்ந்த இந்த முதியவர் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரி என்று லூக்கா நற்செய்தி நூல் எடுத்துக்காட்டுகிறது.
கடவுள் இந்த முதியவரோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதையும் இந்த நற்செய்தி நூல் நமக்கு காட்டுகிறது அது என்னவென்றால்,
🍎கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.(லூக்கா 2 : 26)
சிமியோன் என்னும் முதியவரின் லட்சிய வேட்கையான இஸ்ரவேலுக்கு உண்டாகும் நீதியை காண வேண்டும், என்ற இறை வேண்டுதலுக்கு கடவுள் பதில் தந்து, அவரின் ஆசைகளை பூர்த்தி செய்கிறார் என்பதையும் நாம் அறிகிறோம்.
சிமியோன் என்னும் முதிர் வயது உடையவர் கடவுளின் ஆலயத்தில் இருந்தார். கடவுளும் அவரோடு இருந்தார். அவரும் கடவுளோடு இணைந்திருந்தார் என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும். அவர் கடவுளால் எவ்வாறு வழிநடத்தப்பட்டார் என்பதையும் திருமறை கூறுகிறது,
🍎ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,(லூக்கா 2 : 27)
🍎அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:(லூக்கா 2 : 28)
🍎ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்,(லூக்கா 2 : 29)
🍎புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.(லூக்கா 2 : 32)
கடவுள் சிமியோன் என்னும் மூதியவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, அவரின் விண்ணப்பத்தை நிறைவேற்றினார்.
சிமியோன் அவர்கள் ஆண்டவரும் மீட்பரும் ஆகிய இயேசு கிறிஸ்துவை தமது கைகளில் ஏந்தி அவரை ஆசீர்வதித்தார் என்று லூக்கா நற்செய்தியாளர் கூறுகின்றார்.
#ஆலயத்தில் பக்தி வைராக்கியத்தோடு காத்திருந்த சிமியோன் அவர்களுக்கு இரட்சிப்பின் அனுபவத்தை கடவுள் தந்தார்.
#உலகின் இரட்சகரை காணும் பாக்கியத்தையும் அவர் கடவுளால் பெற்றார்.
#உலகின் மீட்பரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கின்ற பாக்கியத்தையும் முதியவர் பெற்றார்.
சிமியோன் என்கின்ற முதியவர் இயேசு கிறிஸ்துவை ஆசீர்வதித்தார் என்று வாசிக்கின்றோம். இதை மாற்றி சிந்திப்போம் என்று சொன்னால், ஆலயத்தில் பக்தி வைராக்கியத்தோடு வாழ்ந்த சிமியோன் என்னும் முதியவருக்கு, ஆண்டவரையே ஆசீர்வதிக்கின்ற பாக்கியத்தை தந்தது.
இந்த பாக்கியத்தை ஆலயம் முதியவருக்கு தந்து அழகு பார்த்தது. சிமியோன் என்னும் முதியவரால் ஆலயமும் ஆசீர்வதிக்கப்பட்டது.
ஆண்டவரின் ஆசிர்வாதத்திற்கு அனேகர் காத்திருக்கின்றார்கள், ஆனால் ஆண்டவரையே ஆசீர்வதித்த பாக்கியம் சிமியோன் என்னும் முதியோர்க்கு மட்டும்தான் கிடைத்தது.
சிமியோன் அவர்களுக்கு கிடைத்த இந்த ஆசிர்வாதம் ஆலயத்தில் வழியாக கிடைக்கப்பெற்றது என்றால் அது மிகையாகாது.
சிமியோன் அவர்களின் நீதியான வாழ்க்கைக்கும் இறை பக்திக்கும் ஆலயமும் ஆலயத்தில் வீற்றிருக்கிற கடவுளும் காரணமாக இருந்தார்கள்.
அப்படிப்பட்ட சிமியோன் என்னும் முதியவருக்கு ஆலயம் உயர்ந்த இடத்தை தந்து, இறைமகன் இயேசுவை ஆசீர்வதிக்கின்ற பாக்கியத்தையும் தந்து அழகு பார்த்தது.
3. ⁠அருட்பணியால் தெரிந்து கொள்ளப்பட்ட முதுமை.(1 தீமோத்தேயு 5 : 1 - 10)
திருத்தூதுவராகிய பவுலடியார் தம்முடைய அடியவராகிய தீமோத்தேயு அவர்களுக்கு ஆலோசனையாக கூறுகின்றது என்னவென்றால்,
👉🏾உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.(1 தீமோத்தேயு 4 : 12)
அதோடு மட்டுமல்லாமல் அவர் கடைபிடிக்கப்பட வேண்டிய நியமங்கள், திருச்சபையில் செய்யப்பட வேண்டிய திருப்பணிகளை அழகாக பட்டியலிடுகின்றார்.
a. முதிர்வயதுள்ளவரை கடிந்து கொள்ளுதல் கூடாது.
b. முதிர் வயது உள்ளவரை, தகப்பனைப்போல நடத்தப்பட வேண்டும்.(1 தீமோத்தேயு 5 : 1)
c. முதிர்வயதுள்ள ஸ்திரிகளைத் தாய்களைப்போல நடத்தப்பட வேண்டும்.(1 தீமோத்தேயு 5 : 2)
இவைகள் வழியாக நாம் அறிவது என்னவென்றால் திருப்பணியாளர்களின் தலையாய கடமைகளில் ஒன்று முதிர் வயதுள்ளவர்களை பராமரிப்பதும், அவர்களை கணப்படுத்துவதும், அவர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்குவதும் பிரதானமான ஒன்றாகும்.
பவுல் அடியார் தமது பணியாளராகிய தீமோத்தேயு அவர்களுக்கு அழுத்தம் திருத்தமாக இவைகளை கூறுகின்றார்.
அப்படி என்றால் அருட்பணிகளில் ஒன்று முதிர் வயது உள்ளவரை பராமரிப்பதும் அவர்களை பாதுகாப்பது ஆகும்.
மோசே வகுத்து சட்டங்களில் முதியோருக்குரிய அங்கீகாரத்தை கொடுக்க தவறுவது பாவம். அது தண்டனைக்குரிய குற்றச் செயல் என்பதையும் நாம் அறிகிறோம்.
பவுலடியார் எழுதுகின்ற இந்த கடிதத்தில் கைவிடப்பட்ட கைம்பெண்கள், தனித்து வாழ்கின்ற கைம்பெண்கள் வாழ்வில் கவனிக்கப்பட வேண்டியவைகளை அழகாக பட்டியலிடுகின்றார்.
அவர்கள் கைமண்களாக வாழ்ந்திருந்தாலும் அவர்கள் செய்கின்ற செயல்களை இளையோர் கவனிக்க வேண்டும் என்பதையும் பவுலடியார் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றார்.
பவுலடியார் குறிப்பிடுகின்ற அந்த அழுத்தங்கள் என்னவென்றால்,
🍎அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,(1 தீமோத்தேயு 5 : 9)
🍎பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.(1 தீமோத்தேயு 5 : 10)
பவுல் அடிகளார் குறிப்பிடுகின்ற முதியோர் மற்றும் கைம்பெண்களின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன அவைகள்,
a. பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்கி இருக்கின்றார்கள். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் செய்து நிறைவேற்றி இருக்கின்றார்கள்.
b. அந்நியரை உபசரித்து வந்திருக்கின்றார்கள். எவ்வித பிரதிபலனும் பாராமல், அவர்களுக்கு உதவி செய்வதை கடவுளுக்கு செய்கின்ற சேவையாக கருதி அவர்கள் பணி செய்து இருக்கின்றார்கள்.
c. பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி சமூகத்தில் சேவைப்பணி ஆட்சி இருக்கின்றார்கள்.
d. உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து உபத்திர பட்டவர்களோடு உடன் இருந்து, அவர்களோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
e. சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, தங்கள் வாழ்வு கடன் பணி செய்து கிடப்பதே என்று நற்சாட்சியோடு அவர் வாழ்ந்திருக்கிறார்கள்.
இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.(1 தீமோத்தேயு 5 : 10) என்று ஆலோசனை கூறுகின்றார்.
பவுலடியார் கூறுகின்ற இந்த ஆலோசனைகள் வழியாக, முதியவர்கள் திருச்சபையால் கவனிக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்விற்கு வளம் சேர்க்க வேண்டும். அவர்கள் மாண்போடு வாழ்வதற்கு வழி நடத்த வேண்டும். அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று பணிக்கின்றார்.
இதன் மூலம் திருச்சபை கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்று சொன்னால் முதியவர்களும் பெண்களும்
#. தனித்து வாழ்தல் கூடாது
# இணைந்து வாழ வேண்டும்
# அவர்களுக்கென்று நல சங்கங்கள் அமைத்திட வேண்டும்
#. அவர்களின் செயல்கள் கவனிக்கப்பட வேண்டும் அதற்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
#. அவர்களின் மாண்பு காக்கப்பட வேண்டும் அவர்களின் மனிதம் போற்றப்பட வேண்டும்.
குறிப்பாக இன்றைய காலகட்டங்களில் கைம்பெண்களின் நிலை என்பது மிகவும் கேள்விக்குறி ஒன்றாக இருக்கின்றது? அன்றைய காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும் என்பதையும் நாம் அறிய முடிகிறது.
அப்படிப்பட்ட ஆணாதிக்கம் நிறைந்த காலகட்டங்களில் திருச்சபைகளில் கைம்பெண்கள்
🍎சமூகப் பணி செய்து இருக்கிறார்கள்,
🍎சமூக சேவை செய்து இருக்கிறார்கள்,
🍎சமூகத் தொண்டு ஆட்சி இருக்கிறார்கள்,
🍎தங்கள் உடைமைகளால் திருப்பணிகள் பல செய்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
கொடுக்கப்பட்டுள்ள இந்த நிருபப் பகுதியின் வழியாக ஆதித்திருச்சபையில் மூத்த குடி மக்களும், கைம் பெண்களும் தங்களது பணியால் சேவைகளால் ஒப்படைப்பால் அவர்கள் கடவுளால் தெரிந்து கொள்ள பட்டவர்கள் என்பதை அறிய முடிகிறது.
கடவுளின் அழைப்பைப் பெற்று திருப்பணி ஆற்றுவது ஒரு விதம். மற்றொன்று செய்கின்ற அருட்பணியாள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுவது மற்றொரு விதம்.
இங்கு காண்பது இரண்டாவது விதம். முதியவர்களும் கைமண்களும் தங்களது திருப்பணிகளால், அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததிகளாக, இறை மக்களாக அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள், திருச்சபையால் முன்னிறுத்தப்பட்டார்கள்.
ஆதித்திரு சபையில், சமூக சேவையால்,சமூக தொண்டால், சமூக நலப் பணிகளால் ஒரு சமூகம் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று சொன்னால், அது மூத்த குடிமக்களும் மூத்த குடிமக்களில் கைம்பெண்களுமாக வாழ்ந்தவர்களும் என்பது பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதியின் வழியாக தெளிவாகின்றது.
மூத்த குடிமக்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகம் என்பதை உணர்ந்து, அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தோடு, திருச்சபை தன்னை இணைத்துக் கொள்வது கடவுளின் கட்டளை என்பதை புரிந்து கொள்வோம்.
# நிறைவாக:
முதியவர்களின் அனுபவமும், அவர்களின் கல்வியும், அவர்களின் அணுகுமுறையும், அவர்களின் ஞானமும், இன்றைய திருச்சபைக்கு பாடங்களாக இருக்கிறது.
முதியோர்கள் குடும்பத்திற்கு "பாரமாக" இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வேர் விட்டு வளர்ந்து இருக்கிறது. அவர்கள் பாரமாக அல்ல செய்முறைகளுக்கு "பாலமாக" இருக்கிறார்கள் என்பதை உணர்வோம்.
🍎முதுமை ஒரு நாள் வரும் என்ற நினைவில் இளமை வாழ வேண்டும்.
🍎வறுமை கோட்டுக்கு கீழே வாழுகின்றவர்களில் உள்ள முதியவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
🍎கருணை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் போன்றவற்றை பார்க்கும் பொழுதெல்லாம், மனதிற்குள் வலிகள் ஒவ்வொருவருக்கும் வந்து போக வேண்டும்.
🍎திருச்சபைகளின் எல்லைகளுக்குள் இருக்கிற முதியோர் இல்லங்கள், காப்பகங்களை ஒரு முறை கூட உள்ளே சென்று பார்க்காதவர், இறையரசுக்குள் எப்படி நுழைவார் என்ற சிந்தனையும் எழ வேண்டும்.
🍎இன்று வீட்டுக்குள்ளேயே புதிதாக முதியோர் இல்லங்கள் உருவாக்கப்படுவதை நாம் பார்க்கலாம்.
🍎பெற்றோர்களை பராமரிக்காத கவனிக்காத பிள்ளைகளின் எண்ணிக்கைகள் வளர்ந்து கொண்டே இருவது ஆரோக்கியமான ஒன்றாக இல்லை.
திருச்சபைக்கு வருகின்ற மூத்த குடிமக்களை சற்று உற்று கவனித்தால், அவர்கள் ஒரு காலத்தில்
# பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக,
# பல சமூக மாற்றங்களுக்கு வித்திட்டவராக,
# பல மக்கள் வாழ்வடைவதற்கு ஒரு வழித்தடங்களாக,
# பல பொறுப்புகளை நிறைவேற்றி முடித்தவராக,
# அவர்களில் சிலர் எழுத்தாளர்களாக, இயக்குனர்களாக, பேச்சாளர்களாக, தன்னார்வ தொண்டராக, திருச்சபை பணிகளுக்கு வாரி வழங்கியவராக, கட்சியில் பல பொறுப்புகளை நிர்வகித்தவராக..
இருந்திருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
முதியவர்கள் அடுத்த தலைமுறைக்கான அடித்தளங்கள் என்பதை நினைவில் நிறுத்துவோம்.
முதியவர்கள் கடந்த கால வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு ஊடகங்கள் என்பதையும் நாம் உணர்வோம்.
முதியவர்கள் நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியும் பகுத்தறிவாளர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்.
முதியவர்கள் சமூகம் எனும் ஆற்றுக்கு கரை போன்றவர்கள் என்பதை நினைவில் கொண்டு
# முதியவர்களை பராமரிப்போம்
# முதியோர்களை பண்போடு நடத்துவோம்
# முதியோர் இடமிருந்து பாடங்களை கற்றுக் கொள்வோம்.
இறை ஆசி உங்களோடு இருப்பதாக...
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...

நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️

Comments