GOD
AND PEOPLE OF ALL FAITHS
கடவுளும் பிற சமய பற்றுறுதியாளர்களும்
# திருமறைப் பகுதிகள்:
ஆமோஸ் 9 : 1 - 12
ரோமர் 2 : 17 - 29
யோவான் 10 : 14 - 28
திருப்பாடல்கள் 66
# உட்புகும்முன்:
ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்
.. ஆசிகள்..
தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் பரட்டை அண்ணன் அவர்கள் எழுதிய பாடல்
"தாயி தகப்பனாரே சகலத்தையும் பெத்தவரே .." என்ற பாடல் ஆகும்.
அந்தப் பாடலில் கடவுளுக்கு நாம் எதை காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு அழகாக விடையளிக்கின்றார்.
அது எல்லா சமயங்களுக்கும் பொருந்துகின்ற, பொதுவான ஒன்றாக இருப்பதைக் காணலாம்.
ஒரு ஏழை பாடுவதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது,
அந்த பாடலின் வரிகள் இப்படி சொல்கின்றன
..
"காசில்ல மெழுகுதிரி கொண்டு வரல
ஒத்துமையை ஒத்துமையா காணிக்கையா படச்சோம் - தாயி தகப்பனாரே..."
மனுக் குடும்பமாக கடவுளுக்கு செலுத்துகின்ற காணிக்கை நமது ஒற்றுமை தான் மிகச்சிறந்த காணிக்கை,
கடவுள் விரும்பும் காணிக்கை என்று குறிப்பிடுகின்றார்.
சமயத்தாலும், சமூகத்தாலும்,
வர்க்கத்தாலும், சாதியத்தாலும், ஏற்றத்தாழ்வுகளாலும், நிறங்களாலும்,
மொழிகளாலும், படிநிலைகளாலும் பிரிந்து கிடக்கின்ற சமூகம் எப்படி கடவுளுக்கு உகந்த சமூகமாக இருக்க முடியும்.
இந்தியாவின் வட மாநிலங்களை காட்டிலும்,
தென் மாநிலங்களில் சமய நல்லிணக்கம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.
எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்ற பற்றுறுதி அனைவரும் மத்தியில் பரவி இருப்பதை நாம் காணலாம்.
பிற சமயத்து மக்களை மதிப்பதும்,
அவர்களின் பண்டிகைகளில்
பங்கு பெறுவதும் வழக்கமாக பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக மக்களிடையே இருந்து வருகிறது.
திருமணம், இல்ல திறப்பு ,பிறந்தநாள் விழா போன்ற அத்தனை குடும்ப நிகழ்வுகளிலும் சமயங்கள் பாராது மக்கள் ஒன்றாக இணைந்து உறவாக கொண்டாடி வருவதை பார்க்கும் பொழுது சமூகம் ஆரோக்கியமாக இருப்பதை காணலாம்.
கடவுளைப் பற்றி அறிகின்ற அறிவு குறைவு என்பதை நாம் எப்பொழுது ஒத்துக் கொள்கிறோமோ அப்பொழுதுதான் நாம் கடவுளின் மக்களாக மாறுகிறோம்.
கடவுள் சமயத்தை உருவாக்கினாரா
அல்லது சமயம் கடவுளை உருவாக்கினதா என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை பேசும் பொருளாகவே இருந்து வருகிறது.
உலகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம் ஒன்று இறை நம்பிக்கை உடையோர் இரண்டாவது இறை நம்பிக்கை அற்றோர்.
இறை நம்பிக்கை அற்றோர் வாழுகின்ற நாடுகள் எல்லாத் துறைகளிலும் வளர்ந்தும் சமூக நல்லிணக்கத்தோடு உலகிற்கு முன்மாதிரியாக வாழ்வதை நாம் பார்க்கலாம், உதாரணமாக நார்வே நாட்டை நாம் சொல்லலாம்.
சர்வ சமய பிரார்த்தனைகளும், சமய நல்லிணக்க கூட்டங்களும், சமயங்களுக்கிடையே நடைபெறும் உரையாடல்களும் நாட்டில் சமூகத்தில் ஒருமைப்பாடுகளையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் உருவாக்க முயலுகின்றன.
வறுமையில் உள்ள மூவர், பல்வேறு மதங்களை சார்ந்த இவர்கள் ஒரே நேரத்தில் கடவுளிடம் வேண்டும் பொழுது, கடவுள் யாருக்கு செவி கொடுப்பார் என்ற கேள்விக்கு
விடை காணும் பொழுது
கடவுளை அறிந்து கொள்கிறோம். கடவுள் எல்லாருக்கும் உரியவர் அனைவரும் கடவுளின் மக்கள் என்று புரிந்து கொள்வதற்கு நாம் வழிநடத்தப்படுகின்றோம்.
நமது சமய அடையாளங்களை களைந்து விட்டு, திருமறை காட்டுகின்ற கடவுளை, கடவுளின் பண்புகளை,
செயல்களை அறிந்து இறை மக்களாக நம்மை ஒப்படைப்போம்.
1. துன்புறும் மாந்தர்கள் அனைவரும் இறைவனின் மக்களே.(ஆமோஸ் 9 :
1 - 12)
2. நன்னெறியாளர்களின் உள்ளங்கள் இறைவனின் இல்லங்களே.(ரோமர் 2 :
17 - 29)
3.
பற்றுறுதியாளர்கள் எல்லோரும் இறைவனின் சொந்தங்களே.(யோவான் 10 :
14 - 28)
1. துன்புறும் மாந்தர்கள் அனைவரும் இறைவனின் மக்களே.(ஆமோஸ் 9 : 1 - 12)
இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் பயணம் கடவுளைப் பற்றிய புரிந்து கொள்ளுதலை மிகவும் தெளிவு படுத்தி உள்ளது
கடவுள் என்பவர்
# செயல்படுகின்றவர்.
# நீதி கேட்பவர்.
# ஒடுக்குகின்ற சக்திகளுக்கு எதிரானவர்.
# ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று போராடுகின்றவர்.
# துன்புறுகின்ற மக்கள் அனைவருக்கும் அவர் விடுதலையாளர்.
#
வரலாற்றில் செயல்படுகின்றவர்.
என்கின்ற புரிந்து கொள்ளுதலை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரவேல் மக்களின் நீண்ட நெடிய விடுதலைப் பயணம் உலகளாவிய அளவில் பல விடுதலை இறையங்களுக்கு அடித்தளமாக அமைந்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.
இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு விடுதலை அளித்த கடவுள் எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடினர்.
அதன் விளைவாக அவர்கள் கடவுளை தங்கள் எல்லைகளுக்கு உட்பட்டவராக தம் செயல் வழியாக வெளிப்படுத்தினார்கள்.
என்ன தவறு செய்தாலும் கடவுள் எங்களை மன்னிக்கின்றவர் என்ற மமதையும் செருக்கும் அவர்களை கடவுள் இடமிருந்து தடம் புரள்வதற்கு வழிவகை செய்தது.
"கடவுளுக்கு உகந்தவர்களாக தாங்கள் வாழ்வதைக் காட்டிலும்,
தங்களுக்கு உகந்தவராக கடவுள் இருக்க வேண்டும்"
என்ற சித்தாந்தத்தை மெல்ல மெல்ல அவர்களுக்குள் உருவாக்கிக் கொண்டார்கள்.
கடவுளை பலிகள் மூலமாக திருப்தி படுத்த முடியும் என்ற நிலைக்கு தங்கள் வாழ்வை உட்படுத்திக் கொண்டார்கள்,
அதனால் பலிகள் பெருகினதேயன்றி பாவங்கள் குறையவில்லை.
பக்தி என்ற போர்வையில் சடங்காச்சாரமான வாழ்வு வாழ்ந்தனர். சிலை வணக்கத்திற்கு முக்கியத்துவம் தந்தனர்.
பலிகள் சமய வாழ்வின் மையங்கள் ஆகின. ஜெப ஆலயங்கள் பழமைவாதிகளால் கையகப்படுத்தப்பட்டன.
இதன் விளைவாக சமூகத்தில் சீர்கேடுகளும்,
ஒடுக்குதல்களும், ஆதிக்கங்களும், பிரிவினைகளும் வளர்ந்து பெருகி இருந்தன. இஸ்ரவேல் மக்கள் செய்த பாவங்கள்..
குறிப்பாக...
🍎அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.(ஆமோஸ்
2 :
6)
🍎அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணை வாரி இறைத்தார்கள்.
🍎சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்.
🍎என் பரி சுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.(ஆமோஸ்
2 :
7)
🍎அவர்கள் சகல பீடங்களருகிலும் அடமானமாய் வாங்கின வஸ்திரங்களின் மேல் படுத்துக் கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள்.(ஆமோஸ் 2
: 8)
🍎நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று சொன்னார்கள்.(ஆமோஸ்
2 :
12)
🍎அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக் கொண்டார்கள்.(ஆமோஸ்
3 :
10)
🍎மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் தங்களுக்கென்று அமைத்துக் கொண்டு ஏழைகள் மீது கரிசனை இல்லாமல் வாழ்ந்தார்கள்(ஆமோஸ் 3 :
15)
🍎தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தை சுமை சுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள்.(ஆமோஸ் 5 :
11)
🍎நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.(ஆமோஸ் 5 :
12)
🍎தந்தக் கட்டில்களில் படுத்துக் கொண்டு, தங்கள் மஞ்சங்களின் மேல் சவுக்கியமாய் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக் குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,(ஆமோஸ் 6 :
4)
🍎தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப் போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,
🍎பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமள தைலங்களைப் பூசிக்கொள்கிறார்கள்(ஆமோஸ் 6 :
6)
🍎தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி:(ஆமோஸ்
8 :
4)
🍎மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும்;, தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,(ஆமோஸ்
8 :
5) வாழ்ந்து வந்தார்கள்.
கடவுளுக்கு விரோதமான செயல்களை செய்த இஸ்ரவேல் மக்கள்,
தங்களை பக்திமான்கள் என்று காட்டிக் கொண்டு கடவுளுக்கு பிரியமில்லாதவர்களாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
ஆனால் கடவுள் தான் தெரிந்து கொண்ட இஸ்ரவேல் மக்களை, என் மக்கள் என்று உலகிற்கு அறிமுகப்படுத்தின இறை மக்களை பார்த்து
#உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்(ஆமோஸ் 5 :
12).
#உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்.
#.கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.(ஆமோஸ்
5 :
22)
#.உன் பாட்டுக்களின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று. உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.(ஆமோஸ்
5 :
23)
என்று கடவுள் தன் ஆதங்கத்தை கோபத்தை தம் மக்களோடு பகிர்ந்து கொள்கிறார். உங்களுக்கு தண்டனை தீர்ப்பு உண்டு என்றும் ஆண்டவர் வலியுறுத்தி கூறுகின்றார்.
இஸ்ரவேல் மக்களுக்கு உரைக்கும் படியாக கடவுள் அவர்களோடு தீர்க்கர் மூலமாக பேசுகின்ற வார்த்தை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
தாங்கள் தான் உயர்ந்தவர்கள் கடவுளின் மக்கள் கடவுளால் தெரிந்து கொள்ள பட்டவர்கள் என்று தங்களை தாங்களே உயர்த்திக்கொண்ட இஸ்ரேல் மக்களுக்கு கடவுள் சொல்லுகின்றார்...
🍎இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டு வரவில்லையோ?(ஆமோஸ்
9 :
7)
உங்களை விடுவித்த கடவுளாகிய நான் உங்களுக்கு மட்டும் உரியவர் அல்ல உலகம் அனைத்திற்கும் உரியவர் என்று வெளிப்படுத்துகின்றார்.
அதோடு மாத்திரமல்ல ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கே இருக்கிறது நான் அவர்களோடு இருக்கின்றவராகவே இருப்பேன் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
உங்களை விடுவித்ததைப் போல மேலே குறிப்பிட்ட மக்களையும் விடுவித்தவர் என்று தன்னை விடுதலையாளராக கடவுள் அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.
மேலும் ஒரு இறையியல் அழுத்தத்தை இந்த பகுதியின் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக, கடவுளால் விடுவிக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்குகின்ற சக்திகளாக மாற்றிக்கொள்ளும் பொழுது, கடவுள் அவர்களுக்கு அன்னியமாகிவிடுகின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, ஒடுக்குகின்ற மக்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட இனமாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக செயல்படுகின்றவர். அவர்களுக்கு தண்டனை தீர்ப்பு வழங்குகின்றவர் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.
மூன்றாவதாக ஒடுக்கப்படுகின்ற மக்கள் பிற இனத்து பிற சமயத்து மக்களாக இருந்தாலும் அவர்கள் கடவுளின் மக்களாக கடவுள் அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களை விடுவிக்கின்றார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நான்காவதாக, துன்புறுகின்ற மக்கள் அனைவரும் இறை மக்களே என்ற ஆழமான உண்மையை கடவுள் தம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
கடவுள் மனித எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்,
மனித வரையறைகளுக்குள்ளும் தன்னை அடக்கிக் கொள்ளாதவர்,
கடந்து செயல்படுகின்றவர் என்ற பெயர் உண்மையை இதன் வழியாக கடவுள் வலியுறுத்துகின்றார்.
கடவுளின் பார்வையில் துன்புறுகின்ற மக்கள் அனைவரும் இறை மக்களே. இந்தப் உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் நாம் அனைவரும் இறை மக்களே.
"துன்புறும் இடங்கள் எல்லாம் கடவுளுக்கு கலிலேயா"
தான் என்ற இறையியல் பார்வை நமக்குள் உருவாகும் பொழுது நாமும் இறை மக்களாகிறோம்.
2. நன்னெறியாளர்களின் உள்ளங்கள் இறைவனின் இல்லங்களே.(ரோமர் 2 : 17 - 29)
திருத்தூதுவராகிய பவுல் அடியார் ரோமாபுரி திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதத்தில் அவர்களை "ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்"
(ரோமர் 1 : 2) என்று குறிப்பிடுகின்றார்.
மேலும் அவர்களை
"உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்."(ரோமர்
1 :
8)
நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்(ரோமர்
1 :
9) என்று உயர்வாக அவர்களை போற்றுகின்றார்..
இப்படி உயர்வாக திருச்சபை அன்பர்களை குறிப்பிடுகின்ற பவுல் அடியார் அவர்களின் குறைபாடுகளையும் சாட்சி இல்லாத வாழ்வையும் சுட்டிக்காட்ட தயங்கவில்லை.
🍎மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.(ரோமர்
2 :
1)
🍎இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.(ரோமர்
2 :
2)
என்று வலியுறுத்தி கூறி மேலும் அழைக்கப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட திருச்சபை அன்பர்களை நோக்கி எட்டு கேள்விகளை எழுப்புகின்றார்,
அவைகள்.
#நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?(ரோமர்
2 :
3)
#தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ(ரோமர்
2 :
4)
#மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?
#களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?(ரோமர்
2 :
21)
#விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா?
#விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?(ரோமர்
2 :
22)
#நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? (ரோமர்
2 :
23)
#விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக்கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?(ரோமர்
2 :
26)
பவுல் அடியார் எழுப்புகின்ற இந்த கேள்விகள் ரோமாபுரி திருச்சபையில் தங்களை பக்திமான்களாகவும், பரிசுத்தவான்களாகவும் காட்டிக்கொண்டு வாழ்ந்த மக்களை பார்த்து எழுப்பின கேள்விகள் ஆகும்.
பவுல் அடியார் ஏன் இவைகளை ரோமாபுரி திருச்சபைக்கு குறிப்பிடுகிறார் என்றால் அதன் பின்னணியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவகையான மக்கள் வாழ்கிறார்கள் ஒன்று விருத்தசேதனம் பெற்றவர்கள் மற்றொன்று விருத்தசேதனம் பெறாதவர்கள்.
ரோமாபுரி திருச்சபையில் விருத்தசேதனம் பெற்ற யூதர்களை காட்டிலும் விருத்தசேதனம் பெறாத பிற இனத்து மக்கள் நீதியிலும்,
நேர்மையிலும், நியாயத்திலும், கடவுள் விரும்புகின்ற செயல்களிலும் வாழ்ந்து தங்கள் வாழ்வை பரிசுத்தமாக வைத்திருந்தார்கள்.
தங்களை யூதர்கள் உயர்ந்தவர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை காட்டிலும் பிறயினத்து மக்கள் சாட்சியான வாழ்வு வாழ்வதில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி இருந்தார்கள்.
எப்படி என்றால்,
🍎அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.(ரோமர்
2 :
14)
🍎அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.(ரோமர்
2 :
15)
கடவுளின் நியாயத்தீர்ப்பில் எப்படி இருக்கும் என்பதை குறித்து பவுலடியார் அவர்களுக்கு வலியுறுத்தி கூறுகின்ற பொழுது,
நியாயத்தீர்ப்பு நாளில் பிறஇனத்து மக்களின் சாட்சியான வாழ்வு யூதராக விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களுக்கு எதிராக இருக்கும் என்பதை சுட்டி காட்டுகின்றார்.
இறுதியாக பவுலடியார் ரோமபுரி திருச்சபைக்கு யூதர் - யூதர் அல்லாதோர், விருத்தசேதனம் பெற்றோர் விருத்தசேதனம் பெறாதவர்கள்,
யார் கடவுளின் பார்வையில் நேர்மையானவர்கள் என்ற விவாதத்தை எழுப்பி அதன் மூலமாக தீர்வு கண்டு அதனை தன் திருச்சபைக்கு எடுத்துரைக்கின்றார்.
👉🏾புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
👉🏾உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
(ரோமர் 2 :
28, 29)
புறத்தோற்றத்தின்படி யூதராக வாழ்கிறவர்,
அருவருப்பான செயல்களை செய்கின்ற பட்சத்தில், நீதி நெறிகளில் தவறுகின்ற பட்சத்தில்,
அவர்கள் கடவுளுக்குரிய இறை மக்களாக இருக்க மாட்டார்கள்.
அவர்களின் புற அடையாளங்களான விருத்தசேதனங்கள் பொருளற்று போனபடியினால் அவர்கள் பெற்ற விருத்தசேதனமும் அவர்களுக்கு எந்த மதிப்பையும் மாண்பையும் தராது.
தங்களை உயர்ந்தவராக காட்டிக் கொள்ளலாம் ஆனால் கடவுள் பார்வையில் அவர்கள் அருவருப்பானவர்கள். அவர்கள் இறை மக்களே அல்ல என்றும் பவுல் ரோமாபுரி திருச்சபைக்கு அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார்.
"உள்ளத்தில் யூதராக வாழ்கின்றரே யூதர் மாறாக புறத்தோற்றத்தின்படி பொருளற்று வாழ்கின்ற யூதர்,
யூதரே அல்ல" என்ற மாபெரும் உண்மையை ரோமாபுரி திருச்சபைக்கு பவுலடியார் வழிந்து கூறுகின்றார்.
யூதர் என்றும் விருத்தசேதனம் பெற்றவர் என்று கூறிக் கொள்ளுகின்ற இவர்களை காட்டிலும், நன்னெறிகளால் நீதியின் வழிகளில் நடக்கின்ற மக்கள், இறைவனுக்குரியவர்கள். அவர்களே இறை மக்கள்.
அவர்களின் உள்ளங்களே இறைவன் வாழும் இல்லங்கள் என்று பவுலடியார் ரோமபுரி திருச்சபைக்கு கூறுகின்றார்.
மேலும் ரோமாபுரி திருச்சபைக்கு அவர்களுக்கிடையே நிலவி இருந்த பாவமான செயல்கள்,
கடவுளுக்கு விரோதமான செயல்களை சுட்டிக் காட்டி அதோடு நிறுத்திக் கொள்ளாமல் கடவுளைப் பற்றிய உண்மைகளையும் அவர் எடுத்துரைக்கின்றார்.
கொடுக்கப்பட்ட இந்த திருமறை பகுதியில் பவுலடியார் ஒரு மாபெரும் விவாதத்தை எழுப்பி,
அதற்கு விடை காண செய்து, இறுதியில் தமது தீர்ப்பினை இப்படி குறிப்பிடுகின்றார்.
#முதலாவதாக, மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.(ரோமர்
3 :
28)
#இரண்டாவதாக, தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.(ரோமர்
3 :
29)
#மூன்றாவதாக, விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.(ரோமர்
3 :
30)
#நான்காவதாக, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.(ரோமர்
3 :
20)
#ஐந்தாவதாக, மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.(ரோமர்
3 :
28)
இறுதியாக பவுல் அடியார் தனது திருச்சபைக்கு பாரத்தோடு சொல்லுகின்ற உண்மை என்னவென்றால், கடவுள் அனைவருக்கும் உரியவர். அவர் விருத்தசேதனம் பெற்றவர்களுக்கும் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் நடு நாயகராக இருக்கிறார் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக இருக்கின்றார் என்பதே ஆகும்.
நன்னெறிகளில்
வாழுகின்றவர்கள் அனைவரும் இறை மக்கள். அவர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்,
எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கடவுளுக்குரியவர்கள்.
அவர்களின் உள்ளங்களே இறைவன் வாழுகின்ற இல்லங்கள் என்பதை அழுத்தமாக குறிப்பிடுகின்றார்.
3. பற்றுறுதியாளர்கள் எல்லோரும் இறைவனின் சொந்தங்களே.(யோவான் 10 : 14 - 28)
ஒரு வாலிபராக உலகம் எதிர்பார்க்கின்ற வாழ்வை வாழ்வதற்கு இயேசு கிறிஸ்து ஒருபோதும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவில்லை.
தன் குடும்பம் தன் உறவுகள் தம் மக்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் தன் வாழ்க்கையும் அவர் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை.
தம் தந்தையின் சித்தத்தின்படி செய்கின்றவர்களே எனது தாயும் எனது சகோதரர்களும் எனது உறவுகளும் என்று ஆண்டவர் முற்போக்கான சிந்தனை கொண்டவராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ஜெப ஆலயங்கள் இஸ்ரவேல் மக்களின் மையங்களாக விளங்கின. எருசலேம் ஆலயமும் அவர்கள் வாழ்வில் மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அமைந்திருந்தன.
இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் அவரின் திருப்பணியும் அன்றைய காலகட்டத்திற்கு முற்றிலும் நேர் எதிரிடையாக அமைந்திருந்தன.
இயேசு கிறிஸ்து அன்றைய வேதபாரகர்கள் பரிசேயர்களைப் போல மக்கள் தங்களை நாடி வரவேண்டும் என்று காத்திராமல் தானே மக்களை நாடி சென்றார்.
மக்கள் கூடுகின்ற இடங்களிலும் சந்தை வழிகளிலும், கடலோரங்களிலும், ஆற்றங்கரைகளிலும், வீதிகளிலும்,
தெருக்களிலும், கல்லறைகளிலும், குளங்களிலும்,
புறக்கணிக்கப்பட்ட இடங்களிலும் வலிய சென்று மக்களுக்கு நன்நெறிகளை போதிப்பதிலும் நன்னெறி வாழ்க்கை வாழ்வதற்கு கற்றுக் கொடுப்பதிலும் முனைப்போடு செயல்பட்டார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதர் அல்லாத பிற இனத்து மக்களின் வாழ்வில் இருந்த பற்றுறுதியையும் அவர்களின் நன்னடத்தையையும் யூதர்களுக்கு சான்றாக எடுத்துக்காட்டினார்.
இயேசு கிறிஸ்து ஒரு யூதராக பிறந்திருந்தும் யூத சமயத்தின் படி செய்கின்ற அனைத்து மரபுகளையும் ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் யூத சமயத்தில் புரையோடி போன அழுக்குகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்கவில்லை.
தனது அற்புதங்களாலும் அடையாளங்களாலும் மாபெரும் தாக்கத்தையும் சமூக மாற்றத்தையும் யூத சமூகத்தில் அவர் உண்டாக்கி கொண்டே இருந்தார்.
"மனம் திரும்புங்கள் இறையரசு சமீபித்திருக்கிறது" என்ற முழக்கத்தை இயேசுவின் சீடர்களும், மக்களும் ஒரு மாபெரும் அரசாட்சியாக புரிந்து கொண்டார்கள்.
அந்த அரசாட்சி யூதர்களுக்கு மட்டும் உரியது. அதில் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் அவருக்கு சமமாக அமர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணமே அவர்களுக்குள் மேலிட்டு எழுந்தது.
இந்த எண்ணத்தை இயேசு கிறிஸ்து தமது செயல்கள் வழியாக, போதனைகள் வழியாக மாற்றுவதற்கு முற்படுகின்றார்.
யூதர்களின் தீராத நம்பிக்கை என்னவென்றால் மேசியா வருவார் அவர் வந்து இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக இருக்கின்ற தீய சக்திகளை போரிட்டு அழித்து இஸ்ரவேல் மக்களை கூட்டி சேர்ப்பார் என்பது அவர்களின் ஆழமான பற்று உறுதியாகும்.
மேசியாவின் அரசாட்சி முற்றிலும் யூதர்களுக்கானது,
அது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கானது,
அது இறை மக்களுக்கு உரியது என்பதை அவர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
நல்ல சமாரியர் உவமை வழியாக,
சகேயு வாழ்வின் மூலமாக,
கானானிய பெண்ணின் வழியாக,
சமாரிய பெண் மூலமாக,
தீரு, சீதோன் பகுதிகளில் நடந்த நிகழ்வுகளின் மூலமாக..
இன்னும் பல நிகழ்வுகள் வழியாக மேசியா அரசாட்சி என்பது யூதர்களுக்கு உரியது மட்டுமல்ல மாறாக உலகம் அனைத்திற்கும் உரியது என்பதை வலியுறுத்தி கொண்டே வந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி திருமறை பகுதியில் தமது சீடர்களுக்கும் தம்மை பின்பற்றுகின்ற மக்களுக்கும் ஆழமான உண்மையை எடுத்துரைக்கின்றார். அது எது என்றால்,
🍎"இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்."(யோவான் 10
: 16)
ஆண்டவர் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்ற இந்த தொழுவத்தில் இல்லாத பிற ஆடுகள் என்பது நமது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
பிற ஆடுகள் என்பது...
#
இஸ்ரவேல் மக்களால் விலக்கி
வைக்கப்பட்ட மக்களைக் குறிக்கின்றது.
#. இஸ்ரவேல் மக்களால் தீட்டானவர்கள் என்று புறந்தள்ளப்பட்ட சமூகத்தை குறிக்கின்றது.
#
மூடப் பழக்க வழக்கங்களால் தங்கள் வாழ்வை இழந்த சமூகத்தை குறிக்கின்றது.
#
யூதர்களால் மனிதர்களாகவே மதிக்கப்படாத சமூகத்தை அது குறிப்பிடுகின்றது.
#
வரி வசூலிக்கின்றவர்கள் போன்ற தங்கள் தொழில் மூலமாக அருவருக்கப்பட்ட சமூகத்தை குறிக்கின்றது.
#
அறியாமை என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கின்ற மக்கள் இனத்தை குறிக்கின்றது.
# சுமை சுமந்து சோர்வுற்று வாழ்கின்ற மக்கள் இனத்தை குறிக்கின்றது.
#
யூத சமூக எல்லைகளைத் தாண்டி வாழ்கின்ற மக்கள் இனத்தையும் குறிக்கின்றது.
இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்ற இந்த தொழுவத்தில்
இல்லாத ஆடுகள் என்பவைகளை மேற்கண்ட வகைகளில் நாம் புரிந்து கொள்ளலாம்.
இயேசு கிறிஸ்து கூறின இந்த வார்த்தைகளை தொழுவத்தில் இல்லாத ஆடுகள் என்பதை எப்படி புரிந்து கொள்வது...
🍎ஒரே கடவுள் எப்படி அடிமைப்படுத்தும் மக்களோடும் அடிமைப்பட்ட மக்களோடும் இணைந்து இருக்க முடியும்.
🍎கடவுளின் நியாயத்தீர்ப்பு யூத மக்களுக்கு மட்டும் உரியதா ? அது எல்லைகளை தாண்டியதா?
🍎கடவுளின் மனதுகுகின்ற அன்பு யூதர்களுக்கு மட்டும் உரியதா? அல்லது யூதர்களை தாண்டி பிற இனத்து மக்களுக்கும் உரியதா?
🍎மேசியா யூதர்களுக்கு மட்டும் உரியவரா அல்லது யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரா?
என்ற மாபெரும் விவாதத்தை இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் எழுப்புகின்றன அதற்கு விடைகாண முயல்கின்றன.
இந்த தொளுவத்தில் இல்லாத பிற ஆடுகளும் உள்ளன என்று இயேசு கிறிஸ்து கூறின வார்த்தைகளின் நிறைவை நாம் கவனிக்க தவறி விட்டோம்.
👉🏾அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்."(யோவான் 10
: 16)
இஸ்ரவேல் மக்களின் பார்வையில் தொழுவத்தில் உள்ள ஆடுகள் யூதர்களை குறிக்கின்றன.
தொழுவத்தில் இல்லாத ஆடுகள் பிற இனத்து மக்களைக் குறிக்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் போதனையும் திருப்பணியும் இந்த வேறுபாடுகளை களைவது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
யூதர், யூதர் அல்லாதோர் என்ற பிரிவினையை முடிவுக்கு கொண்டுவந்து ஒரு சமத்துவத்தை உருவாக்குவதே இயேசு கிறிஸ்துவின் தலையாய திருப்பணி என்பதை அறிந்து கொள்கிறோம்.
இந்த தொழுவத்தில் இல்லாத பிற ஆடுகளும் இறைவனின் சொந்தங்களே என்பதே இயேசு கிறிஸ்துவின் போதனை ஆகும்.
கடவுளின் பார்வையில் அனைவரும் சமம் கடவுளின் பணிகள் அனைவருக்கும் உரியது கடவுளின் அற்புதங்கள் அனைத்து மக்களுக்கும் சொந்தம் என்பதை இந்த வார்த்தைகளின் வழியாக யூதர்களுக்கு இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுக்கிறார்.
இந்தத் தொழுவத்தில் இல்லாத மக்களோடு இயேசு கிறிஸ்து…
#
சமமாக உட்கார்ந்து உணவருந்தினார்.(பாவிகளோடும் ஆயக்காரர்களோடும்)
#
அவர்களின் இல்லங்களில் தன்னை இணைத்துக் கொண்டார்.(சகேயு)
#
அவர்களின் சிறந்த பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டினார்.(நல்ல சமாரியர்)
#
அவர்களின் போராடுகின்ற குணத்தை மக்களுக்கு முன்வைத்தார். (கானானிய பெண்)
# மாற்றுத்திறனாளிகள் துணிச்சலை உலகிற்கு எடுத்துக்காட்டினார்.(யோவான் 9)
# ஏழை சிறுவனின் வாற்கோதுமை உணவினை பகிர்ந்து அளித்ததை எடுத்துரைத்தார்.
இதன் மூலமாக யூத சமூகத்தில் பிளவு பட்டு கிடந்த, நிலவி வந்த உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலையை உடைத்தெறிவதற்கு இயேசு கிறிஸ்து பாடுபடுகின்றார்.
ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பன் என்கின்ற ஒரே தொழுவம் இயேசு கிறிஸ்துவின் உயர்ந்த சிந்தனையாகும், கொள்கையாகும், அதுவே இறையரசின் தகவுகள் ஆகும்.
கிறிஸ்து என்றால் விடுதலையாளர் என்று பொருள். கிறிஸ்து அருளும் விடுதலை யூதர்களுக்கு மட்டுமல்ல யூதர் அல்லாதவர்களுக்கும் உரியது என்கின்ற மாபெரும் உண்மையை யூதர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
# நிறைவாக:
மனித வரையறைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் கடவுள் நாம் வழிபடுகின்ற கடவுள் என்பதை கருத்தில் கொள்வோம்.
சமய சடங்காச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படும் கடவுள் என்பதை உணர்வில் கொண்டு அடிமைப்படுத்தும் சமய சடங்காச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
சமூக மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் கடவுள் என்பதை ஒவ்வொரு நாளும் நம் நினைவில் கொண்டு நாம் பிற சமயத்து மக்கள் மீது கொண்டிருக்கிற மதிப்பீடுகளை திறனாய்வு செய்வோம்.
நீதியோடு வாழ்கின்ற மக்கள் நீதிக்காக துன்புறுகின்ற மக்கள் அனைவரும் கடவுளின் பணியாளர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவரோடு நம்மை இணைத்துக் கொள்வோம்.
நெற்றியில் குங்குமம் வைத்து கிறிஸ்தவ நெறிப்படி வாழுகின்ற மக்கள் நம்மிடையே வாழுகிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களை முன்மாதிரியாக உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்.
பிற சமயத்து மக்களிடையே காணப்படும் உயரிய பண்புகளை செயல்களை நமது வாழ்வில் பரிதிபலிப்போம்.
பிற சமயத்து மக்கள் செல்லுகின்ற பாதை யாத்திரை நேரங்களில் கிறிஸ்தவ திருச்சபை சார்பாக ஒரு மோர் பந்தல் அல்லது தண்ணீர் பந்தல் வைத்தால் இறைவன் குற்றமாக கருதுவாரா என்ற விவாதத்தை நமக்குள் எழுப்பி விடை காண்போம்.
நமது இல்லங்களில் கிறிஸ்தவ திருச்சபை சம்பந்தப்பட்ட இதழ்களும் நூல்களுமே நிறைந்திருக்கின்றன.
பிற சமயத்து மக்கள் எழுதின நூல்கள் நமது புத்தக அலமாரிகளில் இருக்கட்டும்.
அவைகளில் உள்ள நற்கருத்துக்களையும் நாம் எடுத்துரைப்போம்.
பாடல்களை எழுதுகின்ற வரங்களை பெற்றவர்கள் கிறிஸ்துவ பாடங்களை மட்டும் எழுவதை காட்டிலும், சமய சமூக நல்லிணக்க பாடல்களையும் எழுதுவதற்கு முன் வருவோம்.
ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் என்கின்ற குடும்ப உறவாக வாழ முயற்சிப்போம்.
#
துன்புறும் மாந்தர்கள் அனைவரும் இறைவனின் மக்களே.
#. நன்னெறியாளர்களின் உள்ளங்கள் இறைவனின் இல்லங்களே.
#. பற்றுறுதியாளர்கள் இறைவனின் சொந்தங்களே.
என்பதை திருச்சபையாகிய நாம் கருத்தில் கொண்டு, பிரிந்து கிடக்கின்ற திருச்சபைகள் ஒரே திருச்சபையாக முடியுமா என்ற கேள்விக்கு விடை காண முயல்வோம்.
"மந்தையில் சேரா ஆடுகளே
..." என்ற எமில் ஜெபசிங் அண்ணன் அவர்களின் பாடலின் முதல் வரி ஆழமான அர்த்தம் கொண்டதாகும்.
மந்தையில் சேர விரும்புகிற ஆடுகளை, சேர்த்துக் கொள்ளாத, ஏற்க விரும்பாத ஆடுகளாய் இன்றைய திருச்சபை இருக்கிறது என்பதாகவும் நாம் புரிந்து கொள்ளலாம்.
🍎சமயங்களை தாண்டி உறவு ஏற்படுத்துவோம்...
🍎சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக வாழ்ந்திடுவோம்
🍎சமயங்களுக்கிடையே உரையாடல்களை மேற்கொண்டு உறவுக்கு வித்திடுவோம்.
இறை ஆசி உங்களோடு இருப்பதாக....
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக....
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️

Comments
Post a Comment