REMEMBERING AND CELEBRATING WOMEN'S MINISTRY
பெண்களின் திருப்பணியை நினைவு கூறுதலும் கொண்டாடுதலும்
# திருமறைப் பகுதிகள்:
நியாயாதிபதிகள் 4 : 4 - 16
பிலிப்பியர் 4 : 1 - 7
லூக்கா 8 : 1 - 3
திருப்பாடல்கள் : 132
# உட்புகும் முன்:
திருமறை முழுவதிலும் எங்கெங்கெல்லாம் விடுதலை பற்றிய செய்திகள் இருக்கிறதோ அங்கெல்லாம் பெண்களின் பங்களிப்பை நாம் காணலாம்.
கலை, அறிவியல், சமூக சேவை, அரசியல், சமயம், பொருளாதாரம், பண்பாடு, இலக்கியம்... என அத்தனை துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரியது.
# பெண்கள் நாட்டின் கண்கள் என்றே போற்றப்படுகின்றார்கள்.
# ஆறுகளின் பெயர்களும் பெண்களாகவே இருக்கிறது.
# மொழி கூட தாய் மொழி என்று அழைக்கப்படுகிறது.
# நாடுகள் கூட தாய் நாடு என்றே அழைக்கப்படுகிறது.
# வீடுகள் கூட தாய்வீடு என்று அழைப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
# பொருளாதாரத்திலும் Mother Economy தான் சிறப்புக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.
# நாட்டின் அதிபரின் மனைவி கூட First Lady என்றே இன்றும் அழைக்கப்படுகின்றார்கள்.
# தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்கின்றது முன்னோர் வகுத்த முதுமொழி.
# மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெண்மைக்கு முதலிடம் தந்திருக்கிறது தமிழ் செம்மொழி.
# கற்பித்தலில் கூட "அ"என்ற எழுத்திற்கு "அம்மா" என்று தான் குழந்தைக்கு கற்றுக் கொடுத்து, தாய்மைக்கும் பெண்மைக்கும் பெருமை சேர்க்கின்றனர்.
# வள்ளுவரும் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட "தாய்" என்று பெண்மைக்கு சிறப்பு சேர்க்கின்றார்.
வரலாற்று சாதனைகள் புரிந்த பெண்கள் பலர் உண்டு. வரலாற்றையே மாற்றின பெண்கள் பலர் உண்டு. வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட பெண்களும் பலர் உண்டு.
ஆதி சமூகம் பெண் வழி சமூகமாகத்தான் இருந்திருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான், ஆனால் அது ஆணாதிக்கத்தின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்பதே உண்மையாகும்.
ஆதித்திருச்சபையில் எத்தனையோ பாடல்கள் பற்றுறுதியை வளர்ப்பதற்கு ஆண்களால் எழுதப்பட்டிருந்தாலும், "சாராள் நௌரோஜி" அம்மா எழுதிய பலநூறு பாடல்கள் இன்னும் திருச்சபையில் சான்றாக இருந்து வருகின்றன.
🍎திருச்சபையில் எழுந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்று "அருட்கன்னியரின் திருப்பணி," மற்றும் "ஜனானா திருப்பணி,"(Zenana missions - Zenana missions were 19th and early 20th-century Christian outreach programs in British India where female missionaries, unable to access women restricted by the purdah system in the "zenana" (women's private quarters), provided education, healthcare, and religious instruction. These all-female missionary groups established hospitals, schools, and training programs, enabling them to evangelize and provide vital services to women who were otherwise isolated from external help and education.)
🍎இந்தியாவில் நடைபெற்ற மாபெரும் இயற்கை பாதுகாப்பு போராட்டங்களில் கவனத்திற்குரிய ஒன்று பெண்கள் தலைமையேற்று நடத்திய "சிப்கோ இயக்கம்." (இந்தியாவில், குறிப்பாக 1970களில், வனப் பாதுகாப்புக்காக நடந்த ஒரு வன்முறையற்ற இயக்கமாகும். வணிக ரீதியான மரம் வெட்டுதல் மற்றும் காடுகள் அழிப்பை எதிர்த்து, மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைத் தழுவும் போராட்டக்காரர்களின் செயல்களால் இந்த இயக்கம் உருவானது. இது பெண்களின் தலைமையில் நடைபெற்ற முதல் சுற்றுச்சூழல் பெண்ணிய இயக்கங்களில் ஒன்றாகும்)
திருச்சபையில் பெண்கள் தினத்தை சிறப்பாக கொண்டாட, ஒவ்வொருவரும் இந்த நாளில் பெண்களின் திருப்பணியை நினைவு கூர்ந்து கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறோம்.
1. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு வித்திட்ட பெண் போராளிகள் (Women Freedom Fighters). நியாயாதிபதிகள் 4 : 4 - 16
2. வேற்றுமைகளை உரையாடல்களால் முடிவுக்கு கொண்டு வந்த பெண் இறையியலாளர்கள் (Women Theologians). பிலிப்பியர் 4 : 1 - 7
3. இயக்கத்தை திருப்பணிக் கொடைகளால் தாங்கிய பெண் கூட்டமைப்பினர் (Women Federation). லூக்கா 8 : 1 - 3
மேற்கண்ட தலைப்பின் வழியாக கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதிகளை ஆராய்ந்து பார்ப்போம்.
1. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு வித்திட்ட பெண் போராளிகள் (Women Freedom Fighters). நியாயாதிபதிகள் 4 : 4 - 16
இஸ்ரவேல் மக்களை வழிநடத்திக் கொண்டு வந்த மோசே மரித்த பின்பு யோசுவாவும் மரிக்கின்றார்.(நியா2:8) அதன் பின்பதாக அவர்களின் வரலாறு எவ்வாறு ஆரம்பித்தது என்பதை நியாயாதிபதிகள் புத்தகம் எடுத்துக் கூறுகிறது.
யோசுவாவின் மரணத்திற்கு பின்பதாக எகிப்தில் இருந்து விடுவித்த கடவுளை அறியாத தலைமுறையினர் இஸ்ரவேல் சமூகத்தில் உருவாகினர்.
🍎அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.(நியாயாதிபதிகள் 2 : 10)
🍎அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,(நியாயாதிபதிகள் 2 : 11)
🍎தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.(நியாயாதிபதிகள் 2 : 12)
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடவுளின் கோபம் இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக எழும்பினது. கடவுள் இஸ்ரவேல் மக்களை கொள்ளை கூட்டத்திடம் விற்று போட்டார். (நியாயாதிபதிகள் 2 :14)
மேலும் கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது. மிகவும் நெருக்கப்பட்டார்கள்.(நியாயாதிபதிகள் 2 : 15)
ஆனாலும் கடவுள் அவர்களை கைவிடவில்லை. இரக்கம் உடைய ஆண்டவர் அவர்களை விடுவிக்க களத்தில் இறங்கினார்.
மோசே போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கின கடவுள் இப்பொழுது "நியாயாதிபதிகளை" உருவாக்குகின்றார்.
இஸ்ரவேல் மக்களை கடவுளிடம் திருப்பவும், அவர்கள் மனம் திரும்பி நீதி நியாயங்களில் நிலைத்திருக்கவும், கடவுள் விரும்புகின்ற பாதையில் நடக்கவும் அவர்களை வழிநடத்துவதற்கு நியாயாதிபதிகளை உருவாக்குகின்றார்.
🍎கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார். அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.(நியாயாதிபதிகள் 2 : 18)
கடவுள் எழுப்பின நியாயதிபதிகள், கடவுளின் கருவியாக இருந்து இஸ்ரவேல் மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்கள் கடவுளை விட்டு வழி விலகும் போதெல்லாம் அவர்களை சீர்படுத்தவும் முனைப்போடு செயல்பட்டார்கள்.
🍎நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.(நியாயாதிபதிகள் 2 : 19)
இப்படி ஒவ்வொரு முறையும் நியாயாதிபதிகள் மரித்த பின்பதாக இஸ்ரவேலர்கள் கடவுளின் பார்வைக்கு மிகவும் அருவருப்பாய் இருந்தார்கள் எப்படியெனில்,
# முதலாவதாக, "தங்கள் மனம் போன பாதையில் பயணித்தார்கள்."
# இரண்டாவதாக, "கடவுளை விட்டு விலகினார்கள்."
# மூன்றாவதாக, "மோசேயின் நியாயப்பிரமாணங்களை கடைப்பிடிக்க தவறினார்கள்."
# நான்காவதாக, "கடவுளோடு செய்து கொண்ட உடன்படிக்கை உறவிலிருந்து மீறினார்கள்."
# ஐந்தாவதாக, "புறமண முறைக்கு தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் வழி நடத்தி அதன் மூலம் அவர்களின் அடிமைப்படுத்தும் கலாச்சாரங்களை தாங்கி நிற்கின்ற சிலை வணக்கத்திற்கு தங்களை ஒப்பு கொடுத்தார்கள்."
# ஆறாவதாக, "கடவுளை வழிபடுவதற்கு பதிலாக அரசர்களை வழிபடுகின்ற மக்களாக தங்களை மாற்றிக் கொண்டார்கள்."(நியாயாதிபதிகள் 3:14,
இதன் விளைவு என்னவென்றால் இஸ்ரவேல் மக்களை, கடவுள் பல அடிமைத்தனங்களுக்கு உட்படுத்தினார்.
தங்கள் பொல்லாத வழிகளினால் தங்களைத் தானே அடிமை வாழ்வுக்கு வழி நடத்திக் கொண்டார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் கிடக்கும் பொழுது மீண்டும் அவர்கள் மனம் திரும்பி, கடவுளிடம் விடுதலைக்காக மன்றாடுவார்கள். கடவுள் அவர்களை விடுவிப்பார்.
இஸ்ரவேல் மக்கள் கானானியரிடம் அடிமைப்பட்டு கிடந்த பொழுது, அவர்கள் கர்த்தரிடம் தங்களை விடுவிக்க முறையிடுகின்றார்கள். (நியா 4:3)
கானானிய அரசன் "யாபீன்" அவனுடைய சேனாதிபதிக்குச் சிரெசா என்று பேர். அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.(நியாயாதிபதிகள் 4 : 2)
அவனுக்கு தொளாயிரம் இருப்புரதங்கள் இருந்தது. அவன் "இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்." இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.(நியாயாதிபதிகள் 4 : 3)
"சிரெசா" எனும் படைத்தலைவன் இஸ்ரவேல் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினார் என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
பார்வோன் மன்னர் இஸ்ரேல் மக்களை எவ்வாறு கொடுமைப்படுத்தினாரோ அவ்வளவு வன்கொடுமைக்கு இஸ்ரவேல் மக்களை உட்படுத்தினவர்தான் இந்த சிரெசா எனும் படைத்தலைவர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இஸ்ரவேல் மக்களை ஒடுக்கின சிரெசா எனும் படைத்தலைவனை வீழ்த்துவதற்கு, அழித்தொழிப்பதற்கு, கடவுள் எழுப்பின நியாயாதிபதிகளில் ஒருவர்தான் "தெபோராள்" எனும் பெண் நியாயதிபதியாவார்.
அவர்கள் வெறும் நியாயாதிபதி மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும் விடுதலைப் போராட்டத்தில் ""பெண் விடுதலைப் போராளி" (Women Freedom Fighter) ஆக உருவெடுத்தார்.
இதுவரையிலும் இஸ்ரவேல் பாரம்பரியத்தில் முதன்முறையாக ஒரு பெண் தெபோராள் தலைமை ஏற்று, இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்கு வழிவகைசெய்தார்கள்.
பாராக் என்பவரை தெபோராள் தெரிந்தெடுத்து யுத்தம் செய்வதற்கு அவரை உருவாக்குகிறார். ஆனால் பாராக் வலிமை இருந்தும் அச்சம் கொண்டவராய் தெபோராள் துணையை நாடுகின்றார்.
தெபோராள் பாராக் அவர்களிடம் இன்று நடக்கின்ற யுத்தத்தில் சிரெசா வீழ்த்தப்படுவது உறுதி ஆனால் அது உன் மூலமாக அல்ல ஒரு பெண் மூலமாக நடைபெறும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கின்றார். (நியாயாதிபதிகள் 4:9)
🍎தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ. கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே. கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.(நியாயாதிபதிகள் 4 : 14)
🍎கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார். சிரெசா ரதத்தைவிட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனான்.(நியாயாதிபதிகள் 4 : 15)
இஸ்ரவேலரை ஒடுக்கின சிசெரா தப்பி பிழைத்து ஓடுகின்றார். சிரெசா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்.(நியாயாதிபதிகள் 4 : 17)
ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெல்ல அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள். அது உருவிப்போய், தரையிலே புதைந்தது. அப்பொழுது ஆயாசமாயத் தூங்கின அவன் செத்துப்போனான்.(நியாயாதிபதிகள் 4 : 21)
ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமூகத்தில் இருந்த "தெபோராள் மற்றும் யாகேல் எனும் பெண் போராளிகள்" அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரேல் சமூகத்திற்கு
🍎தங்களின் துணிச்சலான முடிவுகளாலும், யுக்திகளாலும் ,செயல்பாடுகளினாலும், போர் முறைகளினாலும், யுத்த களத்தில் நின்று, கூட்டு முயற்சியினாலும், கடவுள் தந்த ஆற்றலினாலும், வல்லமையாலும், ஞானத்தாலும், சாதுரியத்தாலும் சிரெசா எனும் அடிமைப்படுத்தின, ஒடுக்கின, தீய சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். இஸ்ரவேல் சமூகம் விடுதலை காற்றை சுவாசிப்பதற்கு, இவ்விரு பெண்களும் தங்களை அர்ப்பணித்து போராடி வெற்றி கொண்டார்கள்.
மாபெரும் சாம்ராஜ்யங்களை அடக்கி ஆண்ட சிரெசா, இரண்டு பெண்களின் ஆற்றலுக்கு முன்பதாக ஒன்றும் இல்லாமல் போனார். அடக்கி ஆண்ட சிரெசா அடக்கப்பட்டார். பல வன்முறைகளைக் கட்டவிழ்த்த சிரெசா வீழ்த்தப்பட்டார்.
ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றிணையும்பொழுது அவர்கள் மாபெரும் ஆற்றலை அடைவார்கள் என்பதற்கு இவ்விரண்டு பெண்களும் மாபெரும் சான்றாக அமைகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமூகம் தெபோராள் மற்றும் யாகேல் மூலம் விடுதலை பெற்ற பின்பதாக பாடுகின்ற பாடல் ஒரு மாபெரும் விடுதலை கீதம் ஆகும்.
அதை இஸ்ரவேல் மக்களின் இரண்டாவது தேசிய கீதமாக நாம் கருதலாம். முதலாவது பாடல் செங்கடலை கடந்த பின்பதாக மிரியாம் பாடுகின்ற பாடல்.
திருமறையில் மூன்று பாடல்கள் விடுதலை பாடல்கள் ஆகும். ஒன்று மிரியாம் பாடிய பாடல் மற்றொன்று தெபோராள் பாடின பாடல், மூன்றாவது மரியாள் பாடின பாடல்.
இஸ்ரவேல் மக்களின் விடுதலையை நினைவு கூறும்போதெல்லாம், தெபோராள், யாகேல் மற்றும் மரியாள் இம்மூவரும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள். அவர்களை கொண்டாட திருச்சபை அழைக்கப்பட்டு இருக்கிறது.
2. வேற்றுமைகளை உரையாடல்களால் முடிவுக்கு கொண்டு வந்த பெண் இறையியலாளர்கள் (Women Theologians). பிலிப்பியர் 4 : 1 - 7
பிலிப்பியர் திருச்சபை உருவான வரலாறு என்பது மாபெரும் சிறப்புக்குரிய ஒன்றாகும். அது ஆண்களால் அல்ல ஒரு பெண்ணால் உருவாக்கப்பட்ட திருச்சபை ஆகும்.
திருத்தூதுவராகிய பவுல் அடியார் மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப்பட்டணத்திலே சிலநாள் தங்கி இருந்தார்.(அப்போஸ்தலர் 16 : 12)
ஓய்வுநாளில் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு நற்செய்தியை அறிவித்தார் பவுலடியார்.(அப்போஸ்தலர் 16 : 13)
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.(அப்போஸ்தலர் 16 : 14)
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி; நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.(அப்போஸ்தலர் 16 : 15)
பிலிப்பியர் திருச்சபை உருவாவதற்கு லீதியாள் எனும் பேர் கொண்ட பெண் அடித்தளமாக இருந்தார்கள்.
பவுல் அடியாரின் நற்செய்திப் பணியால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்கள். மாபெரும் திரள் இயக்கம்(Mass Movement) உருவாவதற்கு லீதியாள் துவக்க புள்ளியாக இருந்தார்கள்.
ரோமாபுரி திருச்சபையில் பவுலடியார் பல பெண்கள் ஊழியத்திற்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தார்கள் என்று மிக நீண்ட பெண்களின் பெயர் பட்டியலை குறிப்பிடுகின்றார். அவர்கள் ஒவ்வொருவரும் திருப்பணிக்கு ஊன்றுகோலாக இருந்தார்கள்.
அதேபோல பிலிப்பியர் திருச்சபையிலும் லீதியாள் அவர்களின் பங்கு மகத்துவமானது ஆதித்திருச்சபி உருவாவதற்கு அவர்களும் கடவுளின் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருந்தார்கள்.
பிலிப்பு திருச்சபையில் இருந்த மாபெரும் பிரச்சனை என்னவென்றால்
# பிரிவினைகள் மிகுந்திருந்தன. (பிலிப்பியர் 1:18)
# போட்டிகள் பொறாமைகள் பரவி கிடந்தன. (பிலிப்பியர் 1: 16)
# வாதங்களும் தர்க்கங்களும் மக்களிடையே பிரிவினைகளை உண்டாக்கி இருந்தன.(பிலிப்பியர் 2: 2)
# மனத் தாழ்மை என்பது திருச்சபையிடையே இல்லாது இருந்தது.(பிலிப்பியர் 2:3)
# பெருமைகளும் அகம்பாவங்களும் ஒவ்வொருவரிடமும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.(பிலிப்பியர்2: 3)
# ஒரு சாராரை அற்பமாக எண்ணுகின்ற எண்ணமும் அவர்களுக்குள் குடி கொண்டிருந்தது.(பிலிப்பியர்2: 3)
# சுயநலன்கள் பெருகி சபையை பாழ்படுத்திக் கொண்டிருந்தன.(பிலிப்பியர் 2:4)
# மக்களிடையே முறுமுறுப்புகளும் சலசலப்புகளும் சண்டை சச்சரவுகளும் பெருகியிருந்தன. (பிலிப்பியர் 2: 16)
# விருத்தசேதனம் செய்தவர்கள் விருத்தசேதனம் செய்யாதவர்கள் என்ற பிளவுகள் அவர்களுக்குள் ஊடுருவி கிடந்தன.(பிலிப்பியர் 3: 3)
இந்த சூழ்நிலையில் பவுல் அடியார், பிலிப்பியர் திருச்சபைக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகின்றார். அதில் அவர்களின் இந்த நிலையை மாற்றுவதற்கு கடிதத்தின் வாயிலாக உணர்வு ஊட்டுகின்றார்.
கடிதத்தில் பவுல் அடியார் இரண்டு பெண்களின் பெயர்களை குறிப்பிடுகின்றார். அவர்கள் திருச்சபையின் தூண்கள் திருச்சபை வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக நின்றவர்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.
கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன் என்று பவுலடியார் குறிப்பிடுகின்றார்.(பிலிப்பியர் 4 : 2)
இவர்கள் இருவரும் இரு துருவங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை பவுலடியார் கடிதத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம்.
எயோதியா என்பதற்கு "Sweet Fragrance" இனிய நறுமணம் வீசுகின்றவர் என்று பொருள். சிந்திகேயா என்பதற்கு " Fortunate"அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்று பொருள்.
இவர்கள் இருவரையும் பவுலடியார் குறிப்பிடும் பொழுது அவர்கள் என்
# உடன்பணியாட்கள் (Co Workers),
# என்னோடு இணைந்து பாடுபட்டவர்கள் (Co Suffering Servants),
# உடன் திருப்பணியாளர்கள் (Mission Partners),
# நற்செய்தி பணியில் ஈடுபட்ட இறையலாளர்கள் (Women Theologians)
என்று பொருள்படும்படியாக அவர்கள் இருவரின் பணிகளையும் ,வாழ்க்கையையும் பவுல் அடியார் தம் கடிதத்தின் வாயிலாக குறிப்பிடுகின்றார்.
இவர்கள் இருவரும் கருத்தியலில் வேறுபட்டு இருந்தாலும் திருச்சபையில் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
இவர்களுடைய பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதின் வழியாக அவர்களின் சான்றான வாழ்க்கை எடுத்தியம்பப்பட்டிருக்கிறது.
பவுலடியார் கடிதத்தின் வாயிலாக இருவரும் ஏக சிந்தையாய் இருக்க வலியுறுத்துகின்றார். திருச்சபை வளர வேண்டும் என்று சொன்னால், இந்த இயக்கம் வளர்ந்து பெருக வேண்டும் என்று சொன்னால் திருச்சபை அன்பர்களிடம் ஏக சிந்தை, இசைந்த ஆத்துமா, ஒருமித்த கருத்தொற்றுமை இருக்க வேண்டும்.
பிரிவினைகளுக்கும் பேதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால் திருச்சபை தன்னுடைய நோக்கத்தை இழந்து விடும்.
பிலிப்பியர் திருச்சபையில் நிலவின இந்த சீர்கேடுகளுக்கு ஒவ்வொருவரும் பொறுப்பாய் இருக்கிறார்கள் என்பதை பவுலடியார் உணர்ந்திருக்கின்றார்.
இதனை தீர்ப்பதற்கு ஒருவரும் முன் வராத சூழ்நிலையில் எயோதியா மற்றும் சிந்திகேயா இருவரும் தாமாக முன்வந்து திருச்சபையில் ஏற்பட்ட சீர்கேடுகளை போக்குவதற்கு முயன்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இவர்கள் இருவரின் முயற்சியை பவுலடியார் அறிந்து திருச்சபையாகிய இறைமக்கள் இவர்களுக்கு உதவியாய் இருக்கும்படி அவர்களை வேண்டிக் கொண்டு கடிதம் எழுதுகிறார்.
கண்டும் காணாமல் இருக்கின்றவர்கள் இறை மக்கள் அல்ல மாறாக களத்தில் நின்று, கருத்தியல் தர்க்கம் செய்து, தீர்வு காண்பதற்கு வழிவகுப்பவர்களே இறைமக்கள் என்ற ஆழமான செய்தியை திருச்சபைக்கு எடுத்துரைக்கின்றார்.
பிலிப்பியர் திருச்சபையில் இவர்கள் இருவரும் பிரச்சனைகளுக்கு உரையாடல்கள் வழியாக தீர்வு கண்டவர்கள் என்றால் அது மிகையாகாது.
பிலிப்பியர் திருச்சபையில் பலர் அங்கத்தினர்களாக இருந்தாலும் எயோதியா மற்றும் சிந்திகேயா ஆகிய பெண்களும் திருச்சபையின் மாபெரும் தலைவர்களாக பவுல் அடியாரால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவகையில் சொல்லப்போனால் அன்றைய ஆதி திருச்சபையில் இவர்கள் இருவரும் பெண் இறையலாளர்கள்(Women Theologians)என்று நாம் கருதலாம்.
அதோடு மட்டுமல்ல இவர்கள் இருவையும் சீர்திருத்தவாதிகள்(Women Reformist) என்றும் புரிந்து கொள்ளலாம்.
இவர்கள் இருவரும் திருச்சபையில் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளர்களாக இருந்திருக்கிறார்கள்(Not a Spectators but a Participants) என்பதையும் பவுலடியாரின் கடிதத்தின் வாயிலாக நாம் அறிகின்றோம்.
மேலும் திருச்சபையில் இருந்த சீர்கேடுகளை களைவதற்கு தாமாக முன்வந்த தன்னார்வ தொண்டர்கள் (Volunteers) என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஒட்டுமொத்தத்தில் பிலிப்பியர் திருச்சபையின் பற்று உறுதி, சான்றான வாழ்வு, நற்செய்தி பணி ஆகியவற்றிற்கு அடித்தளமாகவும், இயங்கு சக்தியாகவும் இருந்தவர்கள் எயோதியா மற்றும் சிந்திகேயா இரு பெண்கள் ஆவார்கள்.
இன்றைக்கும் திருச்சபை வளர்வதற்கு பெரிதும் துணை நிற்பது பெண்கள் தான் என்பதை யாவரும் அறிவோம். அன்றும் பெண்கள் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் இன்று அறிகின்றோம்.
எயோதியா மற்றும் சிந்திகேயா ஆகிய இருவரின் தலைமைத்துவ பண்புகளை நினைவு கூறுவோம்.
அவர்களைப் போன்ற திருச்சபை தலைவர்களை, இறையியலாளர்களை, தன்னார்வ தொண்டர்களை, சீர்திருத்தவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்போம்.
3. இயக்கத்தை திருப்பணிக் கொடைகளால் தாங்கிய பெண் கூட்டமைப்பினர் (Women Federation). லூக்கா 8 : 1 - 3
நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் அறைகூவல் புத்தகத்தில் "போ அல்லது அனுப்பு" என்ற வாசகம் கொடுக்கப்பட்டிருக்கும். அது திருப்பணியின் தேவைகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட வாசகம் ஆகும்.
ஒன்று திருப்பணிக்கென்று தங்களை அர்ப்பணியுங்கள் இல்லாவிட்டால் திருப்பணியை தாங்குங்கள் என்ற பொருள் பதிந்த வாசகம் ஆகும்.
ஆண்டவரும் மீட்பரும் ஆகிய இயேசு கிறிஸ்து தமது திருப்பணியை துவங்கும் பொழுது தம்மோடு உடன் இருக்க பயணிக்க சீடர்களை தெரிந்து கொண்டார்.
அவர்களுக்கு ஆற்றல் அதிகாரங்களை கொடுத்து தம்மை போல பணியாற்ற வாய்ப்புகளை வழங்கி பணி அமர்த்தினார் அவர்களும் முனைப்போடு இயேசு கிறிஸ்துவின் சிந்தையோடு பயணித்தார்கள்.
மேலும் சீடர்களுடைய வட்டத்தை இயேசு கிறிஸ்து விரிவுபடுத்தி இன்னும் பல பேரை தம்முடைய திருப்பணிக்கென்று தெரிந்தெடுத்து அவர்களை பணியாற்றுவதற்கு பணி அமர்த்தினார்.
இயேசு கிறிஸ்து பலரை பெயர் சொல்லி அழைத்து திருப்பணியில் அவர்களை பயன்படுத்தினார். பலர் இயேசுவின் இயக்கத்தோடு தாமாக முன்வந்து தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இயேசு கிறிஸ்துவின் இயக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து பெருகினது. அதன் எல்லைகள் விரிவடைந்தன. மக்களை நாடி என்கின்ற தாரக மந்திரத்தோடு இயேசு கிறிஸ்துவும் அவர்தம் சீடர்களும் அருட்தொண்டு ஆற்றினார்கள்.
இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தில் பல பெண்களும் இருந்தார்கள் என்பதை திருமறை வழியாக நாம் நன்கு அறிவோம்.
இயேசு கிறிஸ்துவால் வாழ்வு பெற்ற பல பெண்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிந்தையில் தங்களை இணைத்தவர்களாகி இயேசுவோடு அவரின் இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இயேசு கிறிஸ்துவின் திருப்பணியில் "Not to give a Fish but to Catch a Fish" என்ற நிலையே உயர்ந்திருந்ததை அவரின் அற்புதங்கள் அடையாளங்கள் வழியாக நாம் காணலாம்.
ஒரு இயக்கம் இயங்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு பொருளாதாரம் அவசியமான ஒன்று. பயணங்களுக்கும், முன்னெடுப்புகளுக்கும், உறைவிடங்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் பொருளாதார மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இயேசு கிறிஸ்து மற்றும் அவரது இயக்கத்தினர்களுக்கும் இன்றியமையாத பல தேவைகள் இருந்திருக்க கூடும் என்பதை இயக்கத்தில் பங்கெடுக்கின்ற அனைவரும் அறிவோம்.
கம்யூனிஸ சித்தாந்தத்தில் இயங்குகிற தோழர்கள் உண்டியல் குலுக்கி, அதன் மூலமாக நிதி திரட்டி, மக்கள் போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நாம் அறிந்த ஒன்றே.
இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தில் பொருளாதாரம் அத்தியாவசியமாக இருந்திருப்பதாக நாம் ஒரு இடத்தில் கூட காண முடியாது.
இயேசு கிறிஸ்துவும் செல்வ குவிப்புக்கு எதிராக இருந்தார் சந்தை பொருளாதாரத்திற்கு, பொருளாதாரத்திற்காக சமயம் மாற்றப்படுவதை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார் என்பதை ஆலய சுத்திகரிப்பின் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.
இதுவரையிலும் நாம் கருத்தில் கொள்ளாத ஒன்று இயேசுவின் இயக்கத்திற்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்பதை அறியாமல் விட்டு விட்டோம்.
கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதி இயேசுவின் இயக்கத்தை தங்கள் பொருளாதாரத்தினால் தாங்கி நின்றவர்கள் பெண்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
🍎அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,(லூக்கா 8 : 2)
🍎ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.(லூக்கா 8 : 3)
லூக்கா நற்செய்தியாளர் மட்டும் இயேசுவின் இயக்கத்தை எவ்வாறு பெண்கள் தங்கள் பொருளாதாரத்தினால், நிதி உதவினால் அதைத் தாங்கி வழி நடத்தினார்கள் என்பதை குறிப்பிடுகின்றார்.
இயேசு கிறிஸ்துவினால் வாழ்வு பெற்ற "பல பெண்கள், மகதலேனா மரியாள், யோவன்னாளும், சூசன்னாளும்" தங்கள் உடைமைகளால் இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தை தாங்கி நின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார்.
யூதர்கள் ஆணாதிக்கத்தை போற்றுகின்றவர்கள். ஆண் வழிச் சமூகமாக தங்களை வடிவமைத்துக் கொண்டவர்கள். அவர்களின் சமூகத்தில் பெண்களுக்கு எவ்விதமான பங்கும் இல்லை, பாத்தியமும் இல்லை என்பது நிதர்சனம்.
ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட பல பெண்கள் தங்கள் ஆஸ்திகளால் இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தை தாங்கினார்கள் என்று சொல்லும் பொழுது அவர்கள் அனைவரும் பெண்களுக்கான உரிமையை மீட்டெடுத்தவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
ஆஸ்திகளில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்ற நிலையை உருவாக்குவதற்கு போராடி வென்றவர்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.
அல்லது இயேசு கிறிஸ்துவின் இயக்கம் பெண்களின் உரிமைக்காக போராடியது, அதன் மூலமாக அவர்கள் உரிமையை மீட்டெடுத்தது என்றும் புரிந்து கொள்ளலாம். அப்படி மீட்டெடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக இவர்களை காணலாம்.
லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிடுகின்ற இந்த பெண்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். தங்களுக்கென்று தங்கள் உடைமைகளை, ஆஸ்திகளை வைத்துக் கொள்ளாமல், திருப்பணிக்கு என்றும் அருட்தொண்டுக்கு என்றும் பகிர்ந்து அளித்தவர்கள்.
இயேசு கிறிஸ்துவின் திருப்பணிக்கு, தங்களின் திருப்பணி கொடைகளால் தாங்கி ஆதரவாய் நின்றவர்கள் இந்த பெண்கள்.
இவர்கள் தனித்தனியாக இயேசுவின் இயக்கத்தை தங்கள் பொருளாதாரத்தினால் தாங்கி இருந்தாலும், இவர்களை ஒரு கூட்டமைப்பாக(Women Federation) நாம் காணலாம்.
இந்தப் பெண்கள் அனைவரையும் அணிசேரா இயக்கத்தினராகவும் நாம் புரிந்து கொள்ளலாம் (Non Alliance Movement's).
மற்றவர்களைப் போல அல்லாமல் தங்கள் உடமைகளை பகிர்ந்து அளிக்கவும் அவைகளின் வழியாக மக்கள் வாழ்வு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும் தங்களை இயேசுவின் இயக்கத்தோடு இணைத்துக் கொண்ட இவர்களை அணிசேரா இயக்கத்தினர் என்று அழைத்தால் அது மிகையாகாது.
நற்செய்தி பகுதியில் குறிப்பிட்டுள்ள இந்த பெண்களின் சிறப்புக்குரிய குணங்களை பண்புகளை இவர்களின் செயல்கள் வழியாக நாம் நன்கு அறிகின்றோம்.
ஒரு ஏழை சிறுவன் கையில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருந்தது. அதையும் இயேசுவின் திருப்பணிக்கென்று கொடுக்கும் மனதை சிறுவனின் தாய் சிறுவனுக்கு ஊட்டி இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் இந்த இயக்கத்திற்காக நளதம் என்னும் பரிமளத்தைலத்தை வாங்கி, அதனை உடைத்து உயரிய மனிதருக்கு படைத்து அருட்பொழிவு செய்த பெண்ணையும் நாம் இங்கு நினைவு கூறுகிறோம்.
தங்களுக்கென்று சொத்து சேர்த்து வைத்துக் கொள்ளாமல் அருட்பணிக்கு, அருட்தொண்டுக்கு பகிர்ந்து அளித்த இவர்கள் வரலாற்றில் சிறப்புக்குரியவர்கள்.
இயேசு கிறிஸ்துவின் இயக்கம் இயங்குவதற்கு இந்த பெண்களின் தியாகமும், முன்னெடுப்பும், பகிர்வும், அர்ப்பணிப்பும், தன்னலம் பாராத சிந்தையும், செயல்பாடுகளும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவைகள்.
இயேசு கிறிஸ்துவின் சீடர்களை தூயர் (Saints) என்ற நிலைக்கு உயர்த்தி அழகு பார்க்கும் நாம், இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தை தங்கள் உடைமைகளாலும், நிதி ஆதாரத்தினாலும் தாங்கி நின்ற இவர்களை நினைவு கூறுவோம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.
# நிறைவாக:
நமது திருச்சபைகளில் பெண்கள் ஐக்கிய சங்க இயக்கத்தினர்கள் செய்கின்ற திருப்பணிகள் மிகவும் போற்றுதற்குரிய ஒன்றாகும்.
"பிடி அரிசி காணிக்கை" மகத்தான திட்டம் ஆகும் ஏழை எளியவர்கள் வாழ்வு பெறுவதறதங்கள் இல்லத்திலிருந்து தங்கள் அடுப்பறையிலிருந்து துவங்குகின்ற இந்த திருப்பணி கொடை வளர்ந்து பெருக வேண்டும்.
திருச்சபை முழுமனதோடு "பிடி அரிசி காணிக்கை திட்டத்தில்" தன்னை இதில் ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது, வறுமை ஒழியும். வறுமை கோடு முற்றிலுமாக அழிக்கப்படும். பசியில்லா சமூகம் உருவாகும்.
"கடை நாணய காணிக்கை" (Least Coin) திட்டமும் சிறப்புக்குரிய ஒன்றாகும். இதன் மூலம் எத்தனையோ திருப்பணிகள் நிறைவேறுகின்றன பலர் வாழ்வடைகின்றார்கள். திருச்சபை இத்திட்டத்தில் முழு மனதோடு தன்னை இணைத்துக் கொள்ளும் பொழுது விளிம்பு நிலை மக்கள் வாழ்வு பெறுகின்றார்கள்.
இன்றைய திருச்சபை பல இறையியலாளர்களை உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தங்கள் சிந்தைகளாலும் எழுத்துக்களினாலும் பல சீர்திருத்தங்களை இன்றும் செய்து வருகின்றார்கள். அத்தைய சீர்திருத்தவாதிகளுக்கு மதிப்பளிக்க திருச்சபை கடமைப்பட்டிருக்கிறது.
இன்றும் கிறிஸ்தவர்கள் ஏதாவது போராட்டங்களில் பங்கெடுக்கிறார்கள் என்றால் அதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பங்கெடுக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இலக்கிய மன்றங்களிலும், பட்டிமன்றங்களிலும், விவாத மேடைகளிலும் சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்து திருப்பணி ஆற்றுகின்ற பெண்களின் அருட்தொண்டினை திருச்சபைகளில் எதிரொலிக்கச் செய்வோம்.
எழுத்து திறமைகளால் சமூகத்தில் புரட்சிக்கு வித்தடுகின்ற பெண்களின் புத்தகங்களை நமது திருச்சபைக்கு அறிமுகப்படுத்துவோம் வளரும் தலைமுறைக்கு அதனை பரிசளிப்போம்.
நமது ஞாயிறு பள்ளி மாணவர்கள் மாறுவேட போட்டி நடத்துவது, அதில் பங்கு எடுப்பது சிறப்புக்குரிய ஒன்றாகும். அப்படிப்பட்ட போட்டிகளில் நம்மை வியக்க வைத்த பெண் அருட்பணியாளர்களை நமது பிள்ளைகள் மூலம் அடுத்த தலைமுறைக்கு காண்பித்து விட்டு செல்வோம்.
இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தை தாங்கி நிற்பது ஆண்களா? பெண்களா? என்ற பட்டிமன்றம் நடைபெறுவதை நாம் கேட்டிருக்கிறோம் கண்டிருக்கின்றோம்.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் நமது திருச்சபையில் நடப்பதின் வழியாக, பெண்களின் திருப்பணிக்கான பங்களிப்பை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
"கிறிஸ்தவ பெண் மிஷனரிகள்" எனும் நூலை G. ஐசக் அருள்தாஸ் ஐயா, (கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில், தமிழ் துறை தலைவராக பணியாற்றியவர்) எழுதின நூல் மிக முக்கியமான ஒன்றாகும். வாங்கி வாசியுங்கள். அதில் பல பெண் அருட்தொண்டாளர்களின் பல்வேறு திருப்பணிகளை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்.
பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்
என்ற பாடலின் "கரு" எப்படி உருவாகி இருக்கும் என்று பலமுறை யோசித்து இருக்கிறேன்.
இயேசுவின் பாதத்திற்கு முக்கியத்துவம் தந்து, இயேசுவின் பாதத்தில் பரிமள தைலம் ஊற்றி, இயேசு கிறிஸ்துவுக்கு திருத்தொண்டாற்றின அந்த செயலை நினைவு கூர்ந்து தான் இந்த பாடலை உருவாக்கி இருக்க முடியும் என்று உணர முடிந்தது.
இயேசுவின் பாதத்தில் அப்படி என்ன சிறப்புகள் உள்ளன என்ற ஆராய்ச்சியே இந்த பாடலின் வரிகளாக அமைந்திருக்கின்றன.
திருமறை காட்டிய பெண்களின் அருட்தொண்டினை நினைவு கூறுவோம். அவர்களின் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து அளிப்போம். பெண்களின் அருட்தொண்டுகளுக்கு படிக்கட்டுகளாய் ஒவ்வொரு நாளும் இருந்திடுவோம்.
இறை ஆசி உங்களோடு இருப்பதாக....
இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக ....
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகரம்
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்
✝️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀✝️
Comments
Post a Comment