"REFORMATION SUNDAY"- Rev. Augusty Gnana Gandhi

 

REFORMATION SUNDAY

CELEBRATION OF GOD'S SOVEREIGNTY, JUSTICE AND PEACE

கடவுளின் இறையாண்மை, நீதி மற்றும் அமைதியையும் கொண்டாடுதல்

#:திருமறைப் பகுதிகள்:

விடுதலைப் பயணம் 7 : 1 - 7

ரோமர் 13 : 1 - 7

யோவான் 18 : 33 - 38

திருப்பாடல்கள் : 89 : 1 - !8

 


Painting by Rev. W. Jebasingh Samuvel, CSI Jaffna Diocese. 

# உட்புகும் முன்:

"மார்ட்டின் லூத்தர் & கேத்ரின் வொன் ஃபோரா"  இருவரும் இணைந்து செய்த சீர்திருத்தங்களால் திருச்சபை என்ற மாபெரும் இயக்கம் புதிய பாதையில் பயணிக்க துவங்கியது.

ரோம பேரரசு விரிந்து பரந்து கிடந்த காலகட்டங்களில், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் போப் அவர்களின் ஆதிக்கம் கடவுளின் இறையாண்மைக்கு நிகராக கருதப்பட்டு வந்த கால கட்டத்தில் அதனை எதிர்ப்பது இயலாத காரியமாக இருந்து வந்தது.

ஒரு காலகட்டங்களில் அரசர் உயர்ந்தவரா? போப்பாண்டவர் உயர்ந்தவரா?  என்ற மாபெரும் போராட்டத்தில், மெல்ல மெல்ல போப்பின் ஆளுகை உயர்ந்தது.

இதன் விளைவாக திருச்சபையில் சீர்கேடுகள் பெருகின, அடிமைத்தனங்கள் உருவாகின, அதிகாரங்கள் நிலை நிறுத்தப்பட்டன, எதிர்ப்பவர்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன.

திருச்சபையில் தவறான போதனைகள் கற்பிக்கப்பட்டன. "பாவ மன்னிப்பு சீட்டு" போன்ற புதிய நடைமுறைகள் திருச்சபையின் பழக்கத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டன.

திருமறை மக்கள் கைகளில் இல்லாமல் பங்குத்தந்தைகளின் கைகளில் மட்டும் இருந்தது. லத்தின் மொழியில் தான் அருளுரை ஆற்றப்படும் நிலை உருவாக்கப்பட்டது. லத்தின் மொழி கடவுளுக்குரிய மொழி என்ற நிலை உருவாக்கப்பட்டது.

பங்குத்தந்தையர்கள் கடவுளாக பாவிக்கப்பட்டார்கள். அவர்களின் செயல்பாடுகளை எதிர்ப்பதோ கேள்வி கேட்பதோ பெரும் குற்றமாக கருதப்பட்டு, சபை விலக்குதல் என்பது நடைபெற்றது.

முறைகேடுகள், பெண்கள் மீதான பாலியல் வன்மங்கள், திருச்சபை பங்குகளில் தாராளமயமாக்கப்பட்டிருந்தன. அதிகார பலத்தாலும், பண பலத்தினாலும் கடவுளின் கருணையைப் பெற முடியும், மீட்பு பெற முடியும், மறுவாழ்வு பெற முடியும் என்ற தவறான வழிநடத்துதலுக்கு மக்கள் திணிக்கப்பட்டார்கள்.

கடவுளின் இறையாண்மைக்கு எதிராக போப்பின் இறையாண்மை உயர்ந்ததாக கருதப்படும் சூழ்நிலைக்கு திருச்சபை தள்ளப்பட்டது. கடவுளின் கருவியாக இருக்க வேண்டிய திருச்சபை போப் ஆண்டவரின் கருவியாக மாற்றப்பட்டது.

இதன் விளைவு திருச்சபை சீர்கேடு அடைந்தது. எதிர்ப்புகள் வன்முறைக் கொண்டு அடைக்கப்பட்டன. போப் ஆண்டவரின் அதிகாரங்கள் தக்க வைக்கப்பட்டன. பாரம்பரியங்கள் போற்றப்பட்டு பகுத்தறிவாளர்கள் வேரறுக்கப்பட்டார்கள்.

"மார்ட்டின் லூத்தர் & கேத்ரின் வொன் ஃபோரா" இவ்விருவரும் இணைந்து போப் ஆண்டவரின் ஆளுகைக்கு எதிராக எதிர்த்து நின்றார்கள், துணிந்து நின்றார்கள்.

"99 Thesis" போப் ஆளுகைக்கு எதிராக 95 கோட்பாடுகளை, வரைவுகளை எழுதி, ரோம் நகரில் விட்டன் பர்க்கில் உள்ள "தூய பேதுரு" ஆலயத்தின் கதவில் 1517, அக்டோபர் மாதம் 31ஆம் நாள் ஆணி அடித்து தொங்க விட்டார்.

அதற்கு அடுத்த நாளான சகல புனிதர்களின் திருநாளன்று (All Saints Day) திருச்சபைக்கு வந்த மக்களின் பார்வையில் அது பட்டது அது பல சீர்திருத்தங்களுக்கு வித்திட்டது. திருச்சபை என்ற ஒரு மாபெரும் கடவுளின் இயக்கம் கடவுளின் இறையாண்மைக்கு நேராக பயணிப்பதற்கு வழிவகை செய்தது. 

போப் ஆண்டவரின் தவறான ஆளுகையினாலும் ஆட்சி அதிகாரத்தாலும் அடிமைப்பட்டு கிடந்த சமூகம்,  "மார்ட்டின் லூத்தர் & கேத்ரின் வொன் ஃபோரா"  ஆகிய இருவரின் சீர்திருத்தங்களால் கடவுளின் இறையாண்மையை அறிந்து கொள்வதற்கும்,  அதனை கொண்டாடுவதற்கு வழிவகை செய்தது.

"இயற்கையின் ஆற்றலையே தடுக்க முடியாத நம்மால் இறைவனின் இறையாண்மையை, இறை ஆளுகையை ஒரு போதும் தடுக்க முடியாது."

 

1. அடிமைத்தனத்திற்கு எதிர்த்து நிற்கும் இறையாண்மையை கொண்டாடுவோம்.(விடுதலைப் பயணம் 7 : 1 - 7)

2. துன்புறும் மாந்தருக்கு துணை நிற்கும் இறையாண்மையை கொண்டாடுவோம்.(யோவான் 18 : 33 - 38)

3. அதிகாரமற்றவர்களுக்கு ஆற்றல் தரும்  இறையாண்மையை கொண்டாடுவோம்.(ரோமர் 13 : 1 - 7)

1. அடிமைத்தனத்திற்கு எதிர்த்து நிற்கும் இறையாண்மையை கொண்டாடுவோம்.(விடுதலைப் பயணம் 7 : 1 - 7)

இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் 400 வருடங்கள் அடிமையாக இருந்த வாழ்வை திருமறை மிகவும் தத்ரூபமாக எடுத்துக் காட்டி உள்ளது.

இஸ்ரவேல் மக்கள் அடைந்த பாடுகள், துன்பங்கள், அவலங்கள், கண்ணீர்கள், சித்திரவதைகள், அவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகள் ஏராளம்.

வீடு, வாசல்,  உறவுகள், அமைதி, உணர்வுகள் இவைகள் அனைத்தும் இஸ்ரவேல் மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன. அடிமைகளாக, அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இஸ்ரவேல் மக்களின் பாரம்பரியமான தொழில் முறைகள் மாற்றப்பட்டு, தாங்கள் வசித்து வந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சமூகத்திலிருந்து அந்நியராக்கப்பட்டார்கள்.

 

🍎தங்கள் வாழ்க்கைக்கு ஒவ்வாத தொழிலை செய்யும்படியாக நிர்பந்திக்கப்பட்டார்கள்.

🍎கட்டாய வேலையும், ஓய்வில்லாத உழைப்பும், மேல் அதிகாரிகளின் சித்திரவதைகளும் அவர்களை விளிம்பு நிலைக்கு தள்ளின.

🍎உறவாக வாழ்ந்து வந்த இஸ்ரவேலர்களும் எகிப்தியர்களும் ஆட்சி அதிகாரத்தினாலும் சூழ்ச்சியினாலும் பிளவு படுத்தப்பட்டனர்.

🍎வாழும் இடங்களில் இருந்து அவர்களின் இல்லங்கள்,  உடைமைகள் பறித்துக் கொள்ளப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

🍎வாழ்வதற்கே வசதியற்ற இடங்களில் ஓரங்களில் வாழும்படியாக நிர்பந்திக்கப்பட்டார்கள்.

🍎ஆளுகின்ற வர்க்கமாக இருந்த இஸ்ரவேல் மக்கள் மக்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

🍎இஸ்ரவேல் மக்கள் அடிமைச் சமூகமாக மாற்றப்பட்டு உரிமை அற்றவர்களாக தள்ளப்பட்டார்கள்.

🍎வழிபடுவதற்கு உண்டான உரிமைகளும் மறுக்கப்பட்டன. போராட்டங்கள் அரசு இயந்திரத்தால் முடக்கப்பட்டன.

 

இறுதியில் இஸ்ரவேல் மக்களின் வாழ்வு கேள்விக்குறியான பின்பு முழுவதும் அடிமை சமூகமாக மாற்றப்பட்டனர்.  கடவுளைத் தவிர வேறு ஒருவரும் விடுவிக்க முடியாது என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் "செயல்படுகின்ற கடவுள், விடுதலையாளராம் கடவுள்" அடிமைத்தனத்திற்கு எதிராக களத்தில் இறங்குகிறார். விடுதலைப் பணியாளர்களை எழுப்புகின்றார்.

கடவுளின் கருவியாக மோசே, ஆரோன் போன்றோர் கடவுளின் மீட்பு திட்டத்தில் முன்னிறுத்தப்படுகின்றார்கள். அவர்களோடு கடவுள் பேசுகின்ற உரையாடல் கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் ஒடுக்குகின்ற கூட்டம் மறுபுறம் ஒடுக்கப்படுகின்ற கூட்டம், ஆளுகின்ற வர்க்கம் அடிமைப்படுத்தப்பட்ட வர்க்கம் இவை இரண்டுக்கும் இடையில் கடவுளின் இறையாண்மை எப்படிப்பட்டது என்பதை திருமறை பகுதி விளக்குகின்றது.

கடவுளின் இறையாண்மை ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு நேராக இறையாண்மை செயல்படுகிறது.

பார்வோனின் மனநிலை, அவரின் இறை நம்பிக்கை, ஆட்சி, அதிகாரம் போன்றவற்றை கடவுளின் இறையண்மை கேள்வி எழுப்புகின்றது.

 

# கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.(யாத்திராகமம் 7  :  1)

#  மன்னராட்சி பெரியதா? இறையாட்சி பெரியதா?

#. கடவுள் பெரியவரா? மனிதன் பெரியவரா?

#. அரசனின் ஆற்றல் பெரியதா?கடவுளின் ஆற்றல் பெரியதா?

என்ற விவாதம் இங்கு துவக்கி வைக்கப்படுகிறது. இதனை துவக்குபவர் கடவுள், அதனை விளக்குபவர் கடவுள், இறுதித் தீர்ப்பினை தருபவரும் கடவுள் ஒருவரே.

கடவுள் மோசையோடு பேசுகின்ற உரையாடலில் "நான் உன்னை பார்வோனுக்கு கடவுளாக வைத்தேன்" என்று கூறுகிறார்.

கடவுளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலில் இது ஒரு புதிய உண்மையை கற்றுக் கொடுக்கிறது. கடவுள் கடந்து நிற்பவர் அல்ல மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக தன்னை வெளிப்படுத்துகின்ற கடவுள் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

இங்கு எகிப்தின் கடவுள் உயர்ந்தவரா? அல்லது இஸ்ரவேல் மக்களின் கடவுள் உயர்ந்தவரா?  என்ற விவாதத்தை எழுப்புவதைக் காட்டிலும், கடவுள் ஒடுக்குகின்ற மக்களிடத்தில் இருக்கின்றாரா? ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் இருக்கின்றாரா? என்பதை விளக்குகின்ற பகுதியாக இதைப் பார்க்கலாம்.

ஒடுக்குகின்ற பார்வோன் இடத்தில் கடவுள் இல்லை. மாறாக ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக இருக்கின்ற மோசையோடு கடவுள் இருக்கின்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்தோடு கடவுள் இருக்கின்றார்.

ஆரோன் கடவுளின் தீர்க்கதரிசியாக உயர்த்தப்படுகின்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியை கடவுள் உருவாக்குகிறார்.

இருவரும் இணைந்து செய்த திருப்பணிகள் வழியாக கடவுளின் இறையாண்மை இறையாற்றல் எப்படிப்பட்டது என்பதை பார்வோன் கண்கூடாக கண்டு கொண்டார்.

பத்து வாதைகள் வழியாக எகிப்தில் மாபெரும் தாக்கங்கள் மக்கள் மத்தியில் உண்டாகின. அத்தனை சமய நம்பிக்கைகளும் பொய்த்து போயின, சமய தலைவர்களின் முயற்சிகளும் வீணாகின, அனைத்து முன்னெடுப்புகளும் தகர்ந்து போயின.

இறுதியாக பார்வோன் மன்னர் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக செயல்படும் கடவுளின் இறையாண்மையை, செங்கடல் அனுபவத்தின் வழியாக கண்டு கொள்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை தரும் கடவுளின் இறையாண்மையை இறை மக்களாக கொண்டாடி மகிழ்வோம்.

 

2. துன்புறும் மாந்தருக்கு துணை நிற்கும் இறையாண்மையை கொண்டாடுவோம்.(யோவான் 18 : 33 - 38)

ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து தமது முப்பதாவது வயதில் தமது திருப்பணியை துவக்கினார். மனம் திரும்புங்கள் இறை ஆட்சி சமீபமாய் இருக்கிறது என்ற முழக்கத்தோடு தம் சீடர்களோடு இணைந்து பணியாற்றினார்.

இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் சமயம், சமூகம் சார்ந்த பல முன்னெடுப்புகளை முன்னெடுத்தார். தமது திருப்பணிக்கு எதிரான கோட்பாடுகளையும் தடைகளையும் அவர் தகர்த்தெறிந்தார்.

அற்புதங்கள் வழியாக மனித மாண்பு மலர்வதற்கு வழிவகைகள் செய்தார். போதனைகளை மேற்கொண்டார், சமய எல்லைகளைத் தாண்டி பணியாற்றினார்.

புரையோடி போன மூடப்பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். துன்புறுகின்ற மாந்தரோடு தன்னையும் துன்புறுகின்றவராக இணைத்துக் கொண்டார். வீதி ஓரங்களிலும் வாழ்விழந்த மக்களையும் உண்மையில் உலர்ந்து கொண்டிருந்த மானிடரையும் இறைவனின் மக்களாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

 

🍎தொடக்கூடாது என்று தடை செய்த சட்டத்தை மீறி தொழு நோயாளிகளை தொட்டு குணமாக்கினார்.

🍎பாவியென்று கருதப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை விடுதலை ஆக்கினார்.

🍎பெரும்பாடுபட்ட பெண்களை தொடுவதற்கு அனுமதித்து கடவுளின் வல்லமையை வெளிப்படும்படியாக பொது இடங்களில் செய்தார்.

🍎நோயின் தாக்கத்தால் நாற்றமடைந்து கிடந்த பெதஸ்தா குளத்திற்கு சென்று யூத மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து இறை நம்பிக்கையே உயர்ந்தது என்பதை நிகழ்த்தி காட்டினார்.

🍎உயிர்த்தெழல் இல்லை என்கின்ற கோட்பாடு உடையவர்களுக்கு உயிர்த்தெழுதல் உண்டு என்று மரித்தவரை உயிரோடு எழும்பச் செய்து பிரிவினை வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

🍎மாற்றுத்திறனாளிகளை சமூகம் கண்டுகொள்ளாத போது அவர்களை மனிதமாக பாவித்து மனிதநேயத்தோடு அவர்களை அணுகி அவர்களை மாண்புறச் செய்தார்.

 

இதனால்  யூத சமயத்திலும் சமூகத்திலும் சமயத் தலைவர்களாலும் இயேசு கிறிஸ்துவுக்கு மாபெரும் எதிர்ப்புகளும் உண்டாகின. அவரை கொலை செய்வதற்கு முயற்சிகளும் உண்டாகின.

இறுதியில் இயேசு கிறிஸ்து காட்டிக் கொடுக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தை அழிப்பதற்கு ஆட்சி அதிகாரங்களும் சமய தலைவர்களும் கைகோர்த்தனர்.

இயேசுவை சிலுவையில் அறைவதற்கு அவரை முன்னிறுத்துகின்றார்கள் அப்போது நடந்த விவாதம் நமக்கு திருமறைப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

பிலாத்துவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நடக்கின்ற உரையாடலில்,

#பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து,இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.(யோவான் 18  :  33)

#இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.(யோவான் 18  :  34)

சிலுவை சாவுக்கு முன்பதாக நீதிமன்றத்தில் இயேசு நிறுத்தப்பட்டுள்ளார். இயேசு கிறிஸ்துவுக்காக வழக்காடுவதற்கு ஒருவரும் இல்லை. இயேசுவின் சார்பாக வழக்காடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

#பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.(யோவான் 18  :  37)

இயேசு கிறிஸ்து பிலாத்துவிடம் துணிவோடு "நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்," என்கின்றார். இயேசுவை கடவுளின் குமாரனாக பார்ப்பதை விட்டுவிட்டு அவர் மனுக் குடும்பத்தின் பிரதிநிதியாக துன்புகின்ற மக்களின் பிரதிநிதியாக அவரை காண வேண்டும்.

இயேசு கிறிஸ்துவை கடவுளின் மகனாக கருதுகின்ற பட்சத்தில் அவர் அரசரை எதிர்ப்பது என்பது சாதாரணமான காரியம். கடவுளை ஒருபோதும் தண்டிக்க முடியாது என்ற வாதம் நமக்குள் எழும்பும். அவரின் பாடு மரணம் உயிர்ப்பு என்பது கேள்விக்குறியாகி விடும்.

இயேசு கிறிஸ்து துன்புறுகின்ற மனுக் குடும்பத்தின் பிரதிநிதியாக துன்புறுகின்ற தாசனாக, பாடுபடுகின்ற பணியாளராக நீதிமன்றத்தில் தனது வாதங்களை எடுத்து வைக்கின்றார்.

உறவுகளை விட்டு பிரித்தார்கள், பொய் சான்றுகளை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள், சீடர்களிடமிருந்து  தனிமைப்படுத்தினார்கள், குற்றவாளி கூண்டிலும் நிறுத்தினார்கள், இருப்பினும் இயேசு கிறிஸ்து தளர்ந்து போகவில்லை.

பிலாத்து இயேசுவை விசாரித்த பின்பதாக சொல்லுகின்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

 

#பிலாத்து: யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.(யோவான் 18  :  38)

என்று சான்று பகர்ந்தார். யூத சமய தலைவர்களும் பழமைவாதிகளும் எத்தனை பொய் சான்றுகளை நிறுத்தினாலும் அத்தனை பொய் சான்றுகளையும் தன் வாதத்தால் வென்று காட்டினார் இயேசு கிறிஸ்து.

இவரிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று பிலாத்து சொல்லக்கூடிய நிலையை இயேசு உருவாக்கினார். கடவுளின் இறையாண்மையை பிலாத்து கண்டு கொண்டார்.

ஆற்றலற்றவர்களோடு கடவுள் இணையும் பொழுது அவர்கள் ஆற்றல் மிக்கவராக உருவெடுக்கின்றார்கள். அவர்கள் ஒன்றிணையும்போது அவர்களில் வெளிப்படுகின்ற ஆற்றலில் கடவுளின் இறையாண்மை காணலாம்..

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாலும், அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டாலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்கின்ற வரலாறு கடவுளின் இறையாண்மையை வெளிப்படுத்துகின்றது.

பிலாத்து மாகாணத்தின் தலைவராக இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் தனக்கு முன்பாக நிறுத்தப்பட்டு இருக்கிற இயேசு கிறிஸ்து என்கின்ற சாமானிய மனிதரிடம் இருக்கின்ற ஆற்றலையும், செயல்படுகின்ற கடவுளின் பேராற்றலையும் இறையாண்மையையும் பிலாத்து கண்டு கொள்கிறார். 

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறவர்கள் பார்வையில் தனக்கு முன்பாக நிற்கிறவர் சாமானிய மனிதராக தோன்றினாலும் அவரில் வெளிப்படுகின்ற துணிச்சலும் சாமர்த்தியமும் எதிர் வாதங்களும் கடவுளின் இறையாண்மையை வெளிப்படுத்துகின்றன.

கடவுள் துன்புறுகின்ற மக்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு துன்புறுகின்ற மாந்தரின் விடுதலையை சாத்தியமாக்குகின்றார். அதில் கடவுளின் இறையாண்மை வெளிப்படுகின்றது.

இயேசுவில் வெளிப்பட்ட இறையாண்மையை நம்மில் வெளிப்படுத்துவதற்கு துன்புறுகின்ற மாந்தரோடு துன்புறுகின்ற தாசராக நம்மை இணைத்துக் கொள்வோம்.

துன்புறுகின்ற மக்களின் இறையாண்மையை உலகம் கண்டு கொள்வதற்கு நாமும் இறைவனின் கருவியாக மாற்றிக் கொள்வோம். இயேசுவின் அடிச்சுவட்டில் இணைந்து பயணிப்போம்.

 

3. அதிகாரமற்றவர்களுக்கு ஆற்றல் தரும்  இறையாண்மையை கொண்டாடுவோம்.(ரோமர் 13 : 1 - 7)

ரோமாபுரி திருச்சபை வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பெற்ற ஒன்றாகும். திருத்தூதுவராகிய பவுலடியார் ரோமாபுரி திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ரோமாபுரி திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதத்தின் 12ஆம் அத்தியாயத்தில் ஒரு ஆலோசனையை பவுலடியார் சுட்டிக் காட்டுகிறார். அது மிகவும் நீண்ட நெடிய உரையாகும்.

அதன் இறுதியில் அவர் முடிக்கும் பொழுது

🍎நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.(ரோமர் 12  :  21)

இதன் பின்னணியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், தீமைகள் பெருகி இருக்கின்ற காலங்கள், அநீதிகள் வளர்ந்து இருக்கின்ற காலகட்டங்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்கின்ற யூத சட்டங்களை வரிக்கு வரியாக கடைப்பிடித்த யூத சமூகமாக அது வளர்ந்திருப்பதையும் நாம் கண்கூடாக காணலாம்.

ஒருவர் தீமை செய்தால் அவரை தண்டிப்பதும் தான் தீமை செய்யும் பொழுது அதற்கு விளக்கம் கொடுப்பதும் நடந்திருக்க கூடும் என்பதை அனுமானிக்க முடிகிறது.

பவுல் அடியார் மிகவும் அழுத்தம் திருத்தமாக இயேசு கிறிஸ்துவின் வழிமுறைகளை மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். "நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு," என்று கூறுகின்றார்.

மேலும் 13 ஆம் அத்தியாயத்தில் "அதிகாரம்" பற்றி அவர் உரையாடுகின்றார்.

🍎எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படியக்கடவன், ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை,உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.(ரோமர் 13  :  1)

இன்றைய உலகில் கிறிஸ்தவத்தை பின்பற்றுகின்ற முதலாளித்துவ நாடுகள், இந்த திருமறை வசனங்களை மேற்கோள் காட்டி, மூன்றாம் தர நாடுகளையும் தனக்கு பணிய மறுக்கின்ற

நாடுகளையும் அச்சுறுத்தி போர்கள் பல புரிந்து அவர்களை அடிமைப்படுத்தி தங்களை இறைவனின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதை நாம் காணலாம்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த வசனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிறரை அடிமைப்படுத்துகின்ற நிலையையும் காணலாம்.

பவுலடியார் கூறுகின்ற இந்த  வார்த்தையை நாம் சற்று கவனிக்க வேண்டும். "எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படியக்கடவன்,."

"எந்த மனிதரும்" என்கின்ற வார்த்தை அதிகாரத்தில் இல்லாதிருக்கின்ற மக்களுக்கும் உரிய வார்த்தை, அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கும் உள்ள வார்த்தையாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"அதிகாரம்" என்பது படிநிலையால் உருவாக்குகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்தப் படிநிலைகள் மக்களாட்சி என்கின்ற தத்துவத்திற்கு எதிரானது. சர்வாதிகார ஆட்சிக்கு துணை போகின்ற ஒன்று என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கு அல்ல மாறாக பணி செய்வதற்கு என்ற நிலை எப்பொழுது உருவாகிறதோ அங்கு அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி போன்றவை தழைத்து ஓங்கும்.

இதற்கு எதிரான மனநிலை கொண்டவர்களின் கரங்களில் ஆட்சியும் அதிகாரமும் குவியும் பொழுது, அங்கு சர்வாதிகாரமும், ஆட்சியாளர்களின் வன்முறை செயல்பாடுகளும், அடக்கு முறைகளும், வன்முறைகளும், போராட்டங்களும், கலவரங்களும், அமைதியின்மையும் ஏற்படும்.

பரத்திலிருந்து வருகின்ற அதிகாரம் அது கடவுள் தருகின்ற அதிகாரமாகும். எனவே கடவுளுக்கு அஞ்சி நடக்க வேண்டுமே ஒழிய மனிதர்களுக்கு ஒருபோதும் அஞ்சி நடக்கக் கூடாது என்கின்ற கருத்தை பவுலடியார் தன் திருச்சபைக்கு சுட்டிக்காட்டுகிறார்.

 

#கடவுளிடம் வருகின்ற அதிகாரம் ஒருபோதும் பிறரை துன்பப்படுத்தாது.

#கடவுள் தருகின்ற அதிகாரம் பணியாற்றுவதற்கே அது உந்துதல் தரும்.

#கடவுளின் அதிகாரம் என்பது ஆற்றல் அற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமைப் பேராகும்.

#பலவான்களை ஆசனங்களில் இருந்து தள்ளி தாழ்மையானவர்களை உயர்த்தினார் அது கடவுளின் அதிகாரம்.

#பசி கொடுமையினால் துன்புற்ற மானுடத்தை நன்மையினால் நிறைக்கின்ற அதிகாரம் கடவுளின் அதிகாரம்.

#சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை தருகின்ற அதிகாரம் கடவுள் தருகின்ற அதிகாரம்.

எனவே கடவுள் தருகின்ற அதிகாரம் என்பது மானுடம் அமைதி வழியில் வாழவும் நீதி நெறிகளில் தழைக்கவும் சமத்துவமும் சகோதரத்துவம் வளரவும் உதவி செய்யும்.

🍎ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்,எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்,எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள், எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.(ரோமர் 13  :  7)

ரோமாபுரி திருச்சபைக்கு எழுதுகின்ற பவுல் அடியார் இதனைச் சொல்லி இந்த பகுதியை நிறைவு செய்கின்றார்.

#. கடமைகளைச் செலுத்துங்கள்...

#. வரியைச் செலுத்துங்கள்...

#. தீர்வையையும் செலுத்துங்கள்...

# பயப்படுங்கள்...

#. கனம்பண்ணுங்கள்...

இவைகளை கூர்ந்து கவனிப்போம் என்று சொன்னால் உலகத்தின் கடமைகளை செய்வதற்கு நாம் ஒருபோதும் தயங்கியது இல்லை. அவைகளில் ஒருபோதும் எந்த குறையையும் வைத்ததில்லை.

உலகின் அதிகாரங்களுக்கு பயப்படுகிறோம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை கனப்படுத்துகிறோம், செலுத்த வேண்டிய அத்தனை தீர்வுகளையும் தவறாமல் செலுத்தி விடுகிறோம்,

ஆனால் இந்த உலகத்தையும், திருச்சபையையும், அதில் உள்ள மக்கள் இனங்களையும் தமது  சாயலாக உண்டாக்கிய இறைவனை மறந்து விடுகிறோம். இறைவனின் சார்பாக செய்ய வேண்டிய கடமைகளை மறுத்து விடுகிறோம். இறைவனின் இறையாண்மையை பறைசாற்றுவதற்கு தடுமாறுகின்றோம்.

பவுல் அடியாரின் மனவேதனையை இந்த அத்தியாயத்தில் நாம் கண்டு கொள்ளலாம். இது பவுலடியாரின் மனவேதனை மட்டுமல்ல இறைவனின் மன வேதனையாகவும் நாம் அறிந்து கொள்ளலாம்.

திருச்சபையின் தலைவராகிய மூவொரு கடவுளின் இறையாண்மையை உணர்ந்து கொள்ள திருச்சபை அழைக்கப்பட்டு இருக்கிறது. மூவொரு கடவுளின் இறையாண்மையை வெளிப்படுத்துவதற்கு திருச்சபை பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கிறது.

கடவுள் தருகின்ற அதிகாரம் அது ஏழை எளியோருக்கு உரியது, விளிம்பு நிலை மக்களின் சொந்தம் அது, இறையாட்சியின் தகவுகளில் ஒன்று அது என்பதை திருச்சபையாக இறை மக்களாக உணர்ந்து கொள்வோம்.

இறைவன் தருகின்ற இறை ஆற்றலோடு இறையாண்மையை உலகிற்கு இறை வழியில் எடுத்துரைப்போம்.

 

# நிறைவாக:

 

எங்கெல்லாம் நாடுகள் விடுதலை அடைந்ததோ, காலணி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதோ அங்கெல்லாம் கடவுளின் இறையாண்மையை காணலாம்.

நிறத்தின் பெயரால், மொழியின் பெயரால், சமயத்தின் பெயரால், இனத்தின் பெயரால்,  சாதியத்தின் பெயரால் எங்கெல்லாம் ஒடுக்குதல் நடைபெறுகிறதோ அங்கெல்லாம், அவர்களின் போராட்டங்களில் ஒடுக்கப்பட்டோரிடம் கடவுளின் இறையாண்மையை  காணலாம்.

எங்கெல்லாம் தனி மனிதராக நின்று சமூக நீதிக்கான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒவ்வொருவரிடமும் கடவுளின் இறையாண்மையை காணலாம்.

நமது நாட்டு விழாக் கொண்டாட்டங்களில், ஒரு வரலாறு மறைந்திருக்கும். அந்த வரலாறு அடிமைப்படுத்துகின்ற வரலாறா? அல்லது விடுதலைக்கு நேராக வழி நடத்துகின்ற வரலாறா? என்பதை நினைவில் கொண்டு கொண்டாடுவோம்.

பார்வோனின் மனநிலையை கொண்டு இருக்கிற ஒவ்வொருவருக்கும் எதிராக ஒரு மோசே, ஒரு ஆரோன்  நிச்சயம் எழும்புவார், கடவுள் அப்படிப்பட்டவர்களை எழுப்புவார் என்பது வரலாறு.

ஆற்றலற்றவர்கள் ஆற்றல் பெற்று துணிந்து எதிர்த்து நிற்பார்கள் என்பதை எப்பொழுது உள்வாங்கிக் கொள்கிறோமோ அப்பொழுது கடவுளின் இறையாண்மை நம்மில் வெளிப்படுகிறது என்பதை நாம் கண்டு கொள்ளலாம்.

கடவுளுக்குரிய இடத்தையும் கடவுள் விரும்புகின்றதையும் நாம் தனியாக குடும்பமாக சமூகமாக திருச்சபையாக செய்யும் பொழுது அங்கே கடவுளின் இறையாண்மை பொதுவுடமை ஆக்கப்படுகிறது என்பது நிதர்சனம்.

"யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்... "

என்கின்ற கீர்த்தனை பாடல், விடுதலையின் பாடல். அது உயிர்த்தெழுதல் பண்டிகையை கொண்டாடுவதற்கு, கடவுளின் இறையாண்மையை உலகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு தூண்டுகின்ற பாடலாகும். இந்த உணர்வில் பாடும் பொழுது நமக்குள் எழுகின்ற ஒரு பேராற்றல், அது கடவுள் நமக்கு தருகின்ற இறையாண்மை கொடையாகும்.

"வாரும் நாம் எல்லாரும் கூடி மகிழ் கொண்டாடுவோம் ... " என்கின்ற கீர்த்தனை பாடலை திருச்சபையாக பாடும் பொழுது அந்த மகிழ்ச்சி நம்மில் வெளிப்படுகிறதா என்பதை உணர்ந்து பாடுவோம். அதன் கொண்டாட்டத்தை நம்முடைய உடல் மொழியிலாவது வெளிப்படுத்துவோம்.

🍎சிறு வயது தாவீதில் வெளிப்பட்ட இறையாண்மையை நமது பிள்ளைகளில் வெளிப்படுவதற்கு நம் முன்னின்று முயற்சி எடுப்போம்.

🍎எஸ்தரில் வெளிப்பட்ட இறையாண்மையை நமது பெண்களில் வெளிப்படுவதற்கு நாமும் ஒரு கருவியாக இருப்போம்.

🍎எத்தியோப்பிய மந்திரி அன்னகரில் வெளிப்பட்ட இறையாண்மையை நாம் வாழும் சூழலில் உள்ள அன்னகர்களில் வெளிப்படுவதற்கு துணை நிற்போம்.

🍎மாற்று திறன் படைத்தவர்கள் வாழ்வில் வெளிப்படும் இறையாண்மையை  உலகிற்கு வெளிப்படுத்த முன் வருவோம்.

"இயற்கையின் ஆற்றலையே தடுக்க முடியாத நம்மால் இறைவனின் இறையாண்மையை ஒருபோதும் தடுக்க முடியாது. அது விடுதலை வாழ்விற்கு வித்திடும், சமத்துவத்தை உண்டாக்கும், இறை ஆட்சியை மண்ணில் நிறுவிடும்."

 

இறை ஆசி உங்களோடு இருப்பதாக....

 இறை ஆசியாய் என்றும் வாழ்ந்திடுவோமாக...

 

நட்புடன் உங்கள்

 

அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி

அரியலூர் சேகரம்

சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்

️💐🌹🌺🌷🌻🪻🍁🌿☘️🍀

Comments