Youth in Search of a Meaningful Life
அர்த்தமுள்ள வாழ்வை தேடும் வாலிபர்கள்
யோவான் 1:43-51
மனித வாழ்வில் புலப்படும் அர்த்தங்களை அறிவதிலும் தேடுவதிலும் அபிவிருத்தி செய்வதிலும் வாலிபர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்.
எமது திருமறைப்பகுதியில் நாம் பார்க்கும்போது யோவான் 1:43-51 வரையுள்ள பகுதியில், இயேசு தமது சீடர்களை அழைப்பதை நாம் பார்க்கிறோம். இவர்கள் பல்வேறுப்பட்ட நிலைகளில் இருந்ததை ஆசிரியர் காண்பிக்கின்றார்.
ஆயத்துறையில் அல்லது சுங்கத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயுவைப் பார்த்து, “என் பின்னே வா” என இயேசு அழைத்தப்போது அவர் எல்லாவற்றையும் துறந்து இயேசுவுக்குப் பின் சென்றார். அதாவது, இங்கு அழைப்பு அவரது பணியில் இருக்கும்போது கிடைக்கின்றது. இதனை ‘அழைப்புக்குள் ஓர் அழைப்பு’ அல்லது ‘சிறப்பு அழைப்பு’ என நாம் கூறலாம். ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயுவைப் பொறுத்தவரையிலே இவ் அழைப்பினை பூரணமாகப் புரிந்துகொள்ளாத சூழலிலும் இதனை ஏற்றுக்கொண்டார். எனவே, அழைப்பு பூரணமாகப் புரிந்துகொள்ளும் நிலையில் ஏற்படுவதல்ல அது தொடர்ந்து செல்லும் ஓர் புரிந்துகொள்ளும் நிலை என்பதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆண்டவர் இயேசு நாத்தான்வேலை நோக்கி, “கபடற்ற உத்தம இஸ்ரவேலனே” என்று அழைக்கின்றார். “நான் உன்னை அத்திமரத்தின் கீழிருக்கும்போதே கண்டேன்” என்றும் கூறப்படுகின்றது. இங்கு நாத்தான்வேல் தவறிழைக்காத ஒரு உத்தமராக காண்பிக்கப்படுகின்றார். அழைப்பு எப்பொழுதும் உத்தமமான நிலையில் ஏற்படுவதல்ல. அல்லது உத்தமமான நிலையில் நாம் இருக்கும்போது மாத்திரமே எமக்கு அழைப்பு கிடைக்கும் என நாம் எண்ணுவதும் தவறாகும். லூக்கா 5:1-10 வசனம் வரையுள்ள பகுதியிலே, இயேசு கெனசரேத்து கடற்கரையில் பேதுருவை அழைக்கின்றார். அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து, “நான் பாவியான மனுஷன். என்னை விட்டு அகன்றுபோம்” எனக் கூறுகின்றார். இதனையே ஏசாயா 6:1-8ல், ஏசாயா “இதோ நான் அசுத்த உதடுகளுள்ள மக்களின் மத்தியில் வாசம் செய்கிறேன்” எனக் கூறி தனது நிலையை அல்லது தனது இயலாமையை உணர்ந்துகொள்வதும் அழைப்பின் இன்னுமொரு படிநிலை ஆகும்.
இன்றைய இளைஞர்கள் வெறுமனே உணர்வு பூர்வமான அழைப்பினை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் அல்லர். மாறாக, உணர்விற்கும் அறிவிற்குமிடைய தங்கள் அழைப்பினை தொடர்புபடுத்தி பார்க்க விரும்புகின்றனர். அறிவு மூளையிலிருந்தும், உணர்வு இதயத்திலிருந்தும் புறப்படுகின்றன. இதயத்திற்கும் மூளைக்குமுள்ள ஓர் தொடர்பினூடாகவே இவ் அழைப்பு பரிசோதிக்கப்படுகின்றது. இதற்கூடாகவே இன்றைய வாலிபர்கள் ஓர் அர்த்தமுள்ள வாழ்வை தேடுகின்றனர்.
ஆக்கம்: அற்புதம்
Comments
Post a Comment