All Souls Day- சகல ஆத்துமாக்களின் திருநாள்

சகல ஆத்துமாக்களின் திருநாள்

யோவான் 11:21-27

நவம்பர் மாதம் 2ம் திகதி நாங்கள் கடவுளுக்குள்ளே வாழ்ந்துக்கொண்டிருக்கிற அல்லது எங்களை விட்டுப் பிரிந்து சென்ற அடியவர்களை நாங்கள் நினைந்துக்கொள்கின்றோம்.

சகல ஆத்துமாக்களின் திருநாள்: “உயிர்த்தெழும் நம்பிக்கை வாழ்வும்”

ஆதார வாசகம்: யோவான் 11:21–27
கருப்பொருள் : “நான் உயிர்த்தெழுதலும், வாழ்வும் ஆவேன்.”

1. இயேசு உயிர்த்தெழுதலின் வழியே நிறைவுமாகியவர்

  • யோவான் நற்செய்தி இயேசுவை வாழ்வின் ஆதாரமாக காட்டுகிறது (யோவான் 10:10; 20:31).

  • நோய், மரணம், பாவம் ஆகியவை வாழ்வைத் தடுப்பன ஆனால், இயேசுவின் வருகை அவற்றைக் கடந்து புதிய வாழ்வை அளிக்கிறது.

  • லாசருவின் சம்பவத்தில் இயேசு நோயும் மரணமும் மீறிய உயிரின் ஆண்டவராக வெளிப்படுகிறார்.

2. உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் வெளிப்பாடு

  • பவுல் உயிர்த்தெழுதலை கிறிஸ்துவுக்குள்ள வாழ்க்கையின் மையமாக எடுத்துரைக்கிறார் (1 கொரிந்தியர் 15; 2 கொரிந்தியர் 5).

  • இயேசுவின் வாழ்வில் ஐந்து படிகளாக உயிர்ப்பு வெளிப்படுகிறது:

    1. பாவத்திலிருந்து உயிர்ப்பெற்பவர்கள் (யோவான் 8).

    2. இறந்தோரை எழுப்பிய இயேசு (மாற்கு 5; லூக்கா 7; யோவான் 11).

    3. தன்னை உயிரோடு எழுப்பிய இயேசு.

    4. ஆண்டவரின் மறுவருகையில் உயிர்ப்பெற்பவர்கள்.

    5. இயேசுவின் போதனைகள் மூலம் உயிர்ப்பெற்பவர்கள்.

  • நம்பிக்கை என்பது மரணத்தின் மீதும் வெற்றி பெறும் விசுவாசத்தின் வெளிப்பாடு.

3. நினைவுகளின் வணக்கமும் நம்பிக்கையின் பங்கும்

  • அனைத்து ஆத்துமாக்களையும் நினைவுகொள்வது நன்றி செலுத்தும் காரியம்.

  • பாஸ்கா மற்றும் திருவிருந்தை வாழ்க்கையின் விடுதலைச் சின்னமாக நினைந்துகொள்கிறோம்.

  • இயேசு மனித பங்களிப்பை மதிக்கிறார் — “கல்லை நீக்குங்கள்” என்ற அவர் சொல் நம் பங்கை நினைவூட்டுகிறது.

  • உயிர்த்தெழுந்து வாழும் நம்பிக்கையை நம்மூடாகவும், மரியாதையாகவும் நாம் வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றோம்.

முடிவு:
இயேசு நமக்கு அளிக்கும் வாழ்வு மரணத்தைத் தாண்டி நித்திய நம்பிக்கையைப் புகட்டுகிறது. சகல ஆத்துமாக்களையும் நினைந்து கொண்டாடும் இந்த நாளில், உயிரை அளிக்கும் தேவனுக்குள் நம் நம்பிக்கையை வலுப்படுத்தி கிறிஸ்துவுக்குள்ளே வாழ்வோம்.

திருமறை சார்ந்த விளக்கவுரை:

2 கொரிந்தியர் 5ம் அதிகாரத்தின்படி கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வைப் பற்றி புனித பவுல் பேசுகின்றார். பொதுவாக நாம் கிறிஸ்துவுக்குள் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுவார்கள் என்ற சிந்தனை 1 கொரிந்தியர் 15:1-45ம் வசனம் வரையுள்ள பகுதியில் பேசப்படுகின்றது. இவ் உயிர்த்தெழுதல் பொதுவாக ஐந்தாக வகுக்கப்படுகின்றது. முதலாவது ஆண்டவருடைய போதனையைக் கேட்டு தமது வாழ்வில் உயிர்ப்பெற்று எழுந்தவர்கள் ஏராளம். யோவான் 8:1-10ல், தவறான முறையில் வாழ்ந்துக் கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து இயேசு, “நீ போ இனிமேல் பாவம் செய்யாதே” என்று உயிரளிக்கின்றார். 

இரண்டாவதாக இயேசு தான் வாழ்ந்த காலத்தில் இறந்தோரை உயிர்த்தெழச் செய்திருக்கின்றார். மாற்கு 5:1-43ம் வாக்கியம் வரையுள்ள வாக்கியங்களைப் படித்துப்பார்த்தால் யவீருவினுடைய மகள், யோவான் 11:22ம் வசனத்திலிருந்து படித்துப்பார்த்தால் லாசரு, மற்றும் லூக்கா 7ம் அதிகாரத்தில் நாயீன் ஊர் விதவையின் மகன் போன்றவர்களை குறிப்பிடலாம். மூன்றாவதாக இயேசு தன்னைத் தான் உயிரோடு எழுப்பிய நிகழ்வை நாம் குறிப்பிடலாம். நான்காவதாக இயேசுக்குள் வாழ்பவர்கள் அவரது வருகையின்போது உயிர்பெற்று எழுவார்கள் என்று கூறப்படுகின்றது. நிறைவாக ஆண்டவர் இயேசுவின் போதனைகள் உயிர்பெற்று எழும் நிகழ்வை நாம் கூறலாம். இவ்வாறாக இவ் உயிர்ப்பு நிகழ்வு ஐந்தாக வகுக்கப்படுகின்றது. 

யோவான் 11:22ம் வாக்கியத்திலிருந்து படித்துப்பார்க்கும்போது, ஆண்டவர் இயேசு லாசருவை உயிர்த்தெழச் செய்ததை நாம் பார்க்கின்றோம். யோவான் நற்செய்தி வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. யோவான் 10:10ல், திருடர் திருடவும் கொல்லவுமே ஒழிய வேறொன்றுக்கும் வரார். நானோ அவர்களுக்கு வாழ்வு உண்டாக்கவும் அந்த வாழ்வு முழுமையடையவுமே வந்தேன் என்றார். யோவான் 20:31லே, இயேசு தேவனுடைய குமாரனாகிய மெசியா என்று நீங்கள் விசுவாசித்து அவர் மூலம் முடிவில்லா வாழ்வைப் பெற்றுக்கொள்ள இவைகள் எழுதப்பட்டன எனக் குறிப்பிடப்படுகின்றது. இதனூடாக யோவான் நற்செய்தியாளன் வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். இந்த வாழ்வும் இயேசுவினூடாகவே வருகின்றது என்ற செய்தி இங்கு காணப்படுகிறது. வாழ்வுக்கு எதிராக யோவான் நற்செய்தியில் நோய் போன்றவைகள் காணப்படுகின்றன. யோவான் 9:1-3 வரையுள்ள பகுதியிலே வாழ்வை மடங்கடித்த பார்வையற்ற ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். அவனுக்கு சுகத்தை அளித்ததன் ஊடாக இயேசு வாழ்வளித்தார். மேலும், வாழ்வை அச்சுறுத்திய மரணம் இறையரசில் தோற்கடிக்கப்பட்டதொன்று என்பதை காண்பிக்கும் வகையிலே லாசருவின் உயிர்த்தெழுதல் இடம்பெறுகின்றது. இங்கு லாசரு நோய்வாய்ப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடனே மேலதிகமாக இரண்டு நாட்கள் தரித்திருந்து நாலாவது நாள் இயேசு வருவதை நாம் காண்கின்றோம். ஏனெனில், யூதர்களினுடைய நம்பிக்கையின்படி ஒரு மனிதனுக்குள்ளே அவன் இறந்து ஆவி மூன்று நாட்களின் பின்னர் வருமென்பது அவர்களுடைய நம்பிக்கை. எனவே இந்த நம்பிக்கைக்கு அப்பால் சென்று சுகமளிப்பதற்காகவே இயேசு நான்காவது நாள் வந்தார் என்று காட்டப்படுகின்றது. மேலும் இங்கு ஆண்டவர் வாழ்வளிக்கின்ற பயணத்திலே எங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பையும் பற்றி அவர் அதிக அக்கரை உள்ளவராக இருக்கின்றார். குறிப்பாக, அங்கு இயேசு நாங்கள் பார்க்கின்றோம் ஒருவரை உயிர்த்தெழ கூடிய வல்லமை அவரிடத்திலே காணப்பட்டால் மாறாக, கற்களை புரட்டக்கூடிய வல்லமையும் அவரிடத்தில் இருக்கின்றது. ஆனால், கற்களைப் புரட்டுமாறு அவர் அங்குள்ள மக்களைக் கேட்டுக்கொள்வது ஒரு மனிதனின் பங்களிப்புப் பற்றிய செய்தியை எடுத்துக் காண்பிக்கின்றது.

கிறிஸ்தவ வாழ்வில் சிறப்பாக நம்பிக்கை என்பது முக்கியமானது. சகல இறந்தவர்களையும் நாங்கள் நினைந்துக்கொள்கின்ற இதேவேளை இன்றும் இறந்தவர்களை நினைந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களையும் நினைந்து கொள்வதன் ஊடாக அவர்களுக்காகவும் நாம் நினைந்து கொள்ளல் அவசியம். ஏனெனில் கிறிஸ்தவ வாழ்விலே பாஸ்கா திருவிழா நினைந்து கொள்ளப்படுகின்றது. அது ஒரு விடுதலையின் விழா. மேலும் ஆண்டவர் இயேசு என்னை நினைந்துக்கொள்ளும்படி இதைச் செய்யுங்கள் என்று திருவிருந்தையும் கூறுகின்றார். எனவே இதனொளியில் சகல ஆத்துமாக்களையும் நினைந்து கொண்டு அவர்களுடைய வாழ்க்கைக்கும் பணிக்கும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதே மிகப் பெரிய காரியமாகும்.   

ஆக்கம்: அற்புதம்



Comments