திருவருகைக்கான ஞாயிறு
மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லல்
லூக்கா 1:46-56
• திருவருகைக்கால காலங்கள் திருச்சபையின் மீளாய்வுக் காலங்கள.; நாம் எங்களை நாங்கள் மீளாய்வு செய்து இயேசுவினுடைய வருகைக்காக எம்மை ஆயத்தப்படுத்தும் காலங்களாகக் காணப்படுகின்றன.
சிறப்பாக, இக்காலத்திலே ‘மரியாள் எலிசபெத்தைக் காணச் செய்தல்’ என்ற திருமறைப் பகுதி ஆய்வுக்காகத் தரப்பட்டுள்ளது. இதனை லூக்கா 1:46-52 வரையுள்ள பகுதியிலே நாங்கள் பார்க்கின்றோம். சிறப்பாக, மரியாள் எலிசபெத் ஆகிய இரண்டு பெண்களும் இயேசுவின் வருகைக்காக மீட்பரை உலகிற்குள் கொண்டு வரும் திருப்பணியை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதன்வழியில் எலிசபெத் திருமுழுக்கு யோவானைக் கருவிலும்,
மரியாள் இயேசுவைக் கருவிலும் சுமந்தார்.
இவர்கள் இருவரும் இப்பணியைத் தெரிந்தெடுத்ததன் காரணமாக கணவனால், சமுதாயத்தினால் வசை மொழிகளுக்கு உட்பட்டார்கள்.
எனவே, தமது துன்பங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளும்படி ஒருவரை ஒருவர் இவர்கள் சந்திக்கின்றார்கள். அதற்கூடாக தாம் செல்லுகின்ற இந்த மீட்பு பயணத்தை பலப்படுத்திக் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் இச்சந்திப்பு இவர்களுக்கு உதவுகின்றது.
• இச்சந்திப்பின் ஊடாக அவர்கள் தங்களை பலப்படுத்தி மீட்பரை உலகிற்குள் கொண்டுவர மரியாள் தொடர்ந்தும் பிரயாணப்படுகின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் பணியை தெரிந்தெடுத்தார். இங்கு மரியாளும் எலிசபெத்தும் இது கடவுளின் திருப்பணி என ஏற்று, “மனிதரால் இது கூடாதது ஆனால், இறைவனால் எல்லாம் கூடும்” என்கின்ற உண்மையை கற்றுக்கொள்ளுகின்றனர்.
• விடுதலைப்பயணம் 2:1-10 வரையுள்ள பகுதியிலும் அங்கே இஸ்ராயேல் மக்கள் பார்வோனின் அடிமைத்தனத்திற்கு உட்பட்டு வாழுகின்றனர். பிறக்கின்ற குழந்தைகளை பார்வோன் கொலை செய்யும்படி தனது மருத்துவிச்சிகளுக்கு கட்டளைப் பிறப்பிக்கின்றார்.
எனினும், மருத்துவிச்சிகள் இக்கட்டளைக்கு முழுமையாய் கீழ்ப்படியாமல் இஸ்ராயேலருடைய குழந்தைகள் வாழும் வழிகளைக் காண்பிக்கின்றனர். மீட்பர்கள் உலகிலே உருவாகுவதற்கு இவர்கள் தங்களால் ஆன ஒத்துழைப்பைக் கொடுக்கின்றனர். சிறப்பாக, பிறரைத் துன்பப்படுத்துவதற்கு பதிலாக மகிழ்ச்சியூட்டுகின்றனர். எனவே, மீட்பின் பணியில் அப்பெண்களின் பணி முக்கியமானதாகும். தாதிகளின் பணி முக்கியமானதாகும். கடவுள் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எகிப்தியப் பெண்மணிகளைக் கூட பயன்படுத்த முடியும் என்ற உண்மை இங்கு காண்பிக்கப்படுகின்றது.
• திருத்தூதுவர்பணிகள் 9:10-18ம் வசனம் வரையுள்ள பகுதியில், புனித பவுலின் மனமாற்றத்திற்கும் அவருடைய பணிக்கும் உறவாக அனனியா காட்டப்படுகிறார். இவர் உலக மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் திருப்பணியை இந்த உலகத்திற்குள் எடுத்துச் செல்லுகின்ற பவுலினுடைய பயணத்திற்கும், பவுலினுடைய சிந்தனை மனமாற்றத்திற்கும் பெரும்பணியை அனனியா ஆற்றுவதை நாம் பார்க்கின்றோம்.
• எமது திருப்பணியில் கடவுள் எம்முடன் இருந்து மீட்பரை சுமந்து செல்லுவதற்கு எம்மை ஆயத்தப்படுத்துகின்றார். எம்மை மாத்திரம் அல்ல கடவுளின் திருப்பணியில் அவர் ஆண்களையும், பெண்களையும் பயன்படுத்துகின்றார். எனவே, கடவுளின் திருப்பணியை சுமந்து செல்லும் கருவிகளாகவும் அப்பணியை உற்சாகத்தோடும் மனமகிழ்ச்சியோடும் செய்ய கடவுள் எமக்கு அருள்புரிவாராக.
ஆக்கம் : அற்புதம்
Comments
Post a Comment