26 தை 2026
விடுதலை வாழ்வும் அறத்தன்மையும்
முன்னுரை
தனிமனிதனும் சமூகமும் இன்று நாடித் தேடுவது விடுதலையாகும். பொதுவாக சமூக பொருளாதார அரசியல் கலை கலாசார சூழல்களுக்குள் பல்வேறுப்பட்ட அடிமைத்தனங்களை அனுபவிக்கும் சமூகம் விடுதலை என்னும் சுதந்திர காற்றினை சுவாசிக்க விரும்புவதை நாம் காணலாம். இன்றைய நாள் இந்திய மக்கள் தாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்கின்ற ஓர் திருநாளாகும். இந்நாள் அன்று சுதந்திரத்திற்காக பாடுபட்டு தம் உயிரை பிறருக்காய் அர்ப்பணித்த மக்களுக்காக நன்றி செலுத்துவதும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதுமே எமது பெரும் பணியாகும். விடுதலைப் பணி ஓர் தூதுப் பணியாகும். எனவே இப்பணியில் ஈடுபட்டவர்களும் ஈடுபடுபவர்களும் எதிர்காலத்தில் ஈடுபட உள்ளவர்கள் அனைவரும் கடவுளின் அரசில் பேறுபெற்றவர்கள் ஆவர்.
1. ஒடுக்குமுறையிலிருந்து வெளி வருதலே விடுதலைக்கான ஆரம்ப படிநிலை ஆகும்.
ஒடுக்குமுறைக்குள் உட்பட்டுள்ள ஓர் சமூகம் அந்நிலையிலிருந்து வெளிவருவதே விடுதலைக்கான முதற் படிநிலை ஆகும். நெகேமியா 2:11-18 வரையுள்ள பழைய ஏற்பாட்டு பகுதியில் பாபிலோனியாவில் அடிமைத்தனத்திற்குள் உட்பட்டிருந்த நெகேமியா அந்நிலையிலிருந்து வெளிவந்து இஸ்ராயேல் மக்களுக்கான ஆலய கட்டுமான பணியிலே தன்னை இணைத்துக் கொண்டார். அதில் பல்வேறுப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும் மறுபடியும் ஒடுக்குமுறை நிலைக்குள் செல்லாமல் விடுதலை வாழ்வின் துன்பங்களை அனுபவிக்க ஆயத்தமாகின்றார். இது மிகப்பெரிய சவாலாகும். இன்றும் அநேகர் ஒடுக்குமுறை வாழ்வில் அனுபவிக்கும் ஒரு சில நன்மைகளுக்காக சுதந்திர வாழ்வில் அனுபவிக்கின்ற சில தீமையான அனுபவங்களிலிருந்து அல்லது கடினமான அனுபவங்களிலிருந்து விடுதலையை பெற விரும்புவதில்லை. ஆனால் நெகேமியா ஒடுக்குமுறையின் ஆசீர்வாதங்களைத் துறந்து விடுதலையின் கடினங்களை அனுபவிக்க தயாராகிறார்.
2. பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதே விடுதலையின் விழுமியம்
இன்றைய புதிய ஏற்பாட்டு வேதப்பகுதியில் 1 பேதுரு 2:11-19 வரையுள்ள பகுதியில் அங்கு பேதுரு தன்னுடைய வாசகர்களைப் பார்த்து, “நீங்கள் மறுபடியும் அடிமைத்தன வாழ்வுக்குள் செல்லாதிருங்கள். விடுதலை வாழ்வில் அறச் செயல்களைச் செய்யுங்கள்” என்று துன்பப்படுகின்ற ஒரு சமூகத்திற்கு பதிலுரை கொடுக்கின்றார். இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உரோம அரசர்களினால் துன்புறுத்தப்பட்டு வந்தார்கள். சிறப்பாக திராஜன், மார்க், கௌரோலியன் போன்றவர்கள் காலங்களிலேயே இத்துன்ப வாழ்வு இடம்பெற்றது. எனவே ஆசிரியர் “துன்பத்திலும் நற்பண்புகளை கைவிடாதிருங்கள்” எனக் கூறுவது மாத்திரமல்ல “நீங்கள் கடவுளுக்கு அடிமையாயிருங்கள். இறைப்பண்புகளுக்கு அடிமைகளாயிருங்கள்” என மக்களை உற்சாகப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். எனவே உலக அரசியல், பொருளாதார அடிமைத்தனங்களிலிருந்து விடுதலைப் பெற்ற நாங்கள் இறைவனுக்கு இறைபண்புகளுக்கு இறை விழுமியங்களுக்கு அடிமைகளாவது அவசியமாகின்றது.
3. ஆடம்பரமற்ற சுதந்திர வாழ்வு திருப்பணி
ஆண்டவர் இயேசு புதிய இஸ்ராயேலருக்கு மலைப்பொழிவினூடாக சுதந்திர வாழ்வில் இருக்க வேண்டிய புதிய விழுமியங்களைப் பற்றி பேசுகின்றார்.
‘மலை’ எல்லா சமயங்களோடும் நெருங்கிய தொடர்புள்ளது. குறிப்பாக சீனாய் மலை உடன்படிக்கையும் ஓர் மலையிலேயே இடம்பெற்றது (விடுதலைப்பயணம் அல்லது யாத்திராகமம் 19:1-10). இப்பின்னணியிலேயே புதிய மோசேயாகிய இயேசு மலையிலே மக்களோடு சுதந்திர வாழ்வின் இலக்குகளைப் பற்றி பேசுகின்றார். மத்தேயு 5:13-16 வரையுள்ள பகுதியில் உப்பு மற்றும் ஒளி போன்றவைப் பற்றி பேசப்படுகின்றது. உப்பு ஓர் சமாதானத்தின் அடையாளம் கிரேக்க மக்கள் தமக்கிடையே பிரிவினைகள் ஏற்படும்போது ஒப்புரவாகுதலின் அடையாளமாக உப்பைப் பகிர்ந்துகொள்வர். மேலும் ஒளியைப் பற்றிப் பார்க்கும்போது திருப்பாடல் 19:1-3ல், ஒளியும் தன்னைப் பற்றி எந்த ஆடம்பரங்களையும் தெரிவிக்காமல் அது மக்களுக்குப் பயனைக் கொடுக்கின்றது. உப்போ சூரியனோ இல்லாதப் பட்சத்தில் அதன் அருமைத்தன்மையை எங்களால் உணர்ந்துகொள்ளமுடியும். இதனைப் போன்றே விடுதலையைப் பெற்ற நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய வாழ்வில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும். நாம் இல்லாதப் பட்சத்தில் பிறர் எமது இருப்புநிலையின் முக்கியத்தை உணரும்படி நாம் எம்மை ஆயத்தப்படுத்த வேண்டும்.
முடிவுரை
ஆண்மைக் காலமாக தேவாலயங்களை எரித்தல்; மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற பொய்யான புகார்களைச் சொல்லி கைது செய்தல்: கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்குச் சொந்தமான பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துதல்; கிறிஸ்தவ மத குருமார்கள், கன்னியாஸ்திரிகள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துதல் என இந்தத் தாக்குதல்கள் பலவகைப் பட்டவையாக உள்ளன.
இதன் உச்சகட்டமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறிஸ்தவர்கள் 80 க்கும் அதிகமான இடங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். தேவாலயங்கள் தாக்கப்பட்டது மட்டுமின்றி கிறிஸ்துமஸ் தொடர்பானப் பொருட்களை விற்ற வணிகர்கள், பாதையோர வியாபாரிகள் உள்ளிட்டவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
வழிபாட்டுச் சுதந்திரத்தை மறுப்பது; வழிபாட்டிடங்கள் பாதுகாப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது முதலான நடவடிக்கைகளின் மூலமாக மதச்சிறுபான்மையினருக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்புகள் இந்நாட்டில் குறைந்து வருகிறது. அவர்களை கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற விடாமல் தடுத்து முடக்குகிற வேலையை இங்கு நடக்கிறது. அதன் உச்சகட்டமாகவே இன்று நேரடியான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதை சனநாயக சக்திகள் வேடிக்கைப் பார்க்க முடியாது.
ஆகவே இக்குடியரசு நாளில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் மத சுதந்திரத்துக்கு எதிராக நடத்தப்படும் இத்தகையத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
சுதந்திர வாழ்வு கடவுளால் எமக்குக் கிடைக்கும் பரிசாகும். இதனை நாம் கடவுளின் திருப்பெயருக்கு மாட்சிமை உண்டாகும் வகையிலும் மற்றவர்களுக்கு நன்மைப் பயக்கும் விதத்திலும் பயன்படுத்துவது மிக அவசியமாகின்றது. எனவே அடிமைத்தனத்தின் ஆசைகளை நிராகரித்து சுதந்திரத்தின் துன்பச் சூழலை ஏற்றுக்கொண்டு இறையாட்சியின் அணிகலன்களை அணிந்து விடுதலையாக்கப்பட்ட நாங்கள் ஏனையவர்களுக்கும் விடுதலையின் நற்செய்தியை எடுத்துக் கூறுவதே இந்நாளில் எமது பொறுப்பாகும். யோவான் 20:21ல், “தந்தை என்னை உலகிற்குள் அனுப்பியது போல நானும் உங்களை உலகிற்குள் அனுப்புகிறேன்” என்ற இயேசுவின் தூதுப்பணியின் அடையாளமாக அனுப்பப்பட்ட நாங்கள் விடுதலை செய்தல் என்னும் தூதுப்பணியை அணிகலன்களாக அணிந்து பிறரை அடிமைத்தனங்களிலிருந்து விடுதலையாக்குவோமாக. ஆமேன்.
அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்
பரி.யாக்கோபு ஆலயம்
நல்லூர்
January 26th is Republic day.
ReplyDeleteகுடியரசு நாள். Not Independence day விடுதலை நாள் அல்ல.. விடுதலை நாள் ஆகஸ்ட் 15.