இறைவனிடமிருந்து விலகிச் செல்லுதல்
நாம் உலகில் பல்வேறுபட்ட காரணங்களால் இன்று மக்கள் இறைவனிடமிருந்து விலகிச் செல்லுகின்றனர். குறிப்பாக ஒரு சிலர் ‘இறைவன் இல்லை’ என எண்ணி நாஸ்திக கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர். இன்னும் ஒரு சிலர் இறைவன் இருந்தும் அவர் எமது வாழ்வில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாதவர் என எண்ணி உலகியல் காரணங்களால் இழுப்புண்டு போவதை நாம் காணலாம். இன்னுமொரு சிலர் இறைவன் இருக்க வேண்டிய இடத்தில் பணம், அதிகாரம், கல்வி போன்ற இன்னோரன்ன பல காரணங்களை பதிலீடாக வைத்துள்ளனர். இப்பேர்ப்பட்ட பின்னணியிலேயே இன்றைய வாசகங்கள் இறைநம்பிக்கைக்குள் எம்மை மறுபடியும் அழைக்கின்றன.
1. இறைப்பற்றற்ற நிலை அடிமைத்தனத்துக்குள் எம்மைத் தள்ளுகின்றது.
இறைவன் மீது பற்றில்லாத நிலை, அல்லது இறைநம்பிக்கை அற்ற நிலை மனிதனை பல்வேறுபட்ட அடிமைத்தனங்களுக்குள் இட்டுச் செல்லுகின்றது. சிறப்பாக, தம்முடைய விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதனால் சுதந்திரமாகக் செயல்பட்டு அடிமைத்தனங்களுக்குள் ஆளாவதை நாம் பார்க்கின்றோம். நீதித்தலைவர்கள் 2:7-22ம் வசனம் வரையுள்ள பகுதியில் யோசுவாவின் மரணத்திற்கு பின்னர் இஸ்ராயேல் மக்களிடத்தில் காணப்பட்ட தலைமைத்துவ வெற்றிடங்கள் இந்நிலைக்குள் அவர்களை இட்டுச் சென்றது.
இதன்படி அவர்களுடைய வாழ்வில் இறைநம்பிக்கை இல்லாதபடியால் ஒவ்வொருவனும் தன் தன் வழியில் வாழ்வினை அமைத்து வாழ்ந்தனர். இதனால் அடிமைத்தனங்களுக்குள் உள்ளாகினர். நீதித்தலைவர் நூல் முழுவதுமாக இறைமக்கள் பெலிஸ்தியர்களுக்கும் மீதியானியருக்கும் கானானியர்களுக்கும் அடிமைகளாயிருந்த வரலாறையும் அதில் விடுதலையாளராகிய இறைவனின் செயல்பாட்டையும் எடுத்துக் காண்பிக்கின்றது. கடவுள் காலத்துக்குக் காலம் தலைவர்களை ஏற்படுத்தி அவர்களை ஆவியினால் நிரப்பி விடுதலைப்பணி நிறைவேறும் வரை அவர்களுடன் இருந்ததை நாம் காண்கிறோம்.
2. இறைபற்றற்ற தன்மையும் அற ஒழுக்கமற்ற நிலையும்
திருப்பாடல் 14ல், ‘இறைவன் இல்லை என புத்தியற்ற மனிதன் அல்லது மதிகேடன் எண்ணுகிறான்’ எனக் குறிப்பிடப்படுகின்றது. இப்பகுதி இறைவனின் இருப்புநிலையை எழுப்பி நிற்கின்றது. இறைவனின் இருப்புநிலையை நம்பாத மனிதன் அறமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறான் என குறிப்பிடப்படுகின்றது. சிறப்பாக அறமுள்ள வாழ்வு மனிதனுக்கும் கடவுளுக்குமிடையேயுள்ள தொடர்பை வலுப்படுத்தி இறைநம்பிக்கையில் அவனை வளர்க்கின்றது என திருப்பாடல் 15லும் திருப்பாடல் 24லும் நாம் காணலாம். இன்றைய உலகிலும் இறைவனின் இருப்புநிலையை மனிதன் பல்வேறுபட்ட நிலைகளில் சிறப்பாக துன்ப துயர அனுபவங்களில் வினா எழுப்பி நிற்கின்றார். முன்னால் கென்டபெரி பேராயர் ரொவன் வில்லியம்ஸ் அவர்கள் ‘மனித வாழ்வில் ஏற்படும் துன்பச் சூழல்கள் இறைவனின் இருப்புநிலையைக் குறித்து வினா எழுப்பப்படுகின்றது’ என கூறுகின்றார்.
3. இறைப்பற்றற்றநிலை இறைபோதனையிலிருந்து எம்மை விலகிச் செல்லுதல்
இறைப்பற்றற்றநிலை இறைபோதனைகளிலிருந்து எம்மை விலகிச் செல்ல வழிவகுக்கின்றது. 1 தீமோத்தேயு 4:1-10 வரையுள்ள பகுதியில் பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை வழங்குகிறார். இங்கே தவறான போதனைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்குமாறு கூறுகின்றார். அக்காலத்திலே நிலவிய பிழையான போதனைகள் அவர்கள் மத்தியில் உணவு உண்ணுதலைக் குறித்தும், திருமணத்தைக் குறித்தும் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதனைப்போன்று கிழவிகளின் பேச்சுக்களிலிருந்தும் விலகி இருக்குமாறு ஆலோசனைக் கூறுகிறார். அத்துடன் ஏனைய திருமுகங்களில் பவுல் ஞானவாதக் கொள்கையைக் குறித்தும் எச்சரிக்கையாயிருக்குமாறு கூறுகிறார்.
ஏனெனில் அக்கொள்கை கிறிஸ்துவின் மனிதத்தன்மையைக் குறித்து கேள்வி எழுப்புவதாகவும், மீட்புக் கொள்கையைக் குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவும் காணப்படுகின்றது எனக் கூறி இத்தவறான போதனையிலிருந்து வெளியேறுமாறு கூறுகின்றார் (கொலோசேயர் 1:10-15). இப்பகுதியில் உணவுப்பழக்கத்தைக் குறித்து கூறப்படுகின்ற செய்தி 1 கொரிந்தியர் புஸ்;தகத்தில் 8ம் அதிகாரத்தில் வெளிப்படுகின்ற போதனைக்கு நிகரானதாக காணப்பட்டிருக்க வேண்டும். அதாவது விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை உண்ணலாமா இல்லையா என்ற வினாவுக்கு விடை கூறுவது போன்று உள்ளது.
மேலும் திருத்தூதர்பணிகள் 15ம் அதிகாரத்தில் எருசலேம் மகாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளிலும் உணவுக் கட்டுப்பாட்டைப் பற்றி பேசப்படுகின்றது. சிறப்பாக மிருகங்களின் இரத்தத்தை உண்ணக்கூடாது. நெருங்குண்டு இறந்தவைகளை உண்ணக்கூடாது போன்ற போதனைகள் குறித்தும் இங்கு சந்தேகங்கள் எழுப்பப்படலாம். மேலும், திருத்தூதர்பணிகள் 10ம் அதிகாரத்திலே யோப்பா பட்டணத்தில் பேதுரு கண்ட காட்சிகளின் அடித்தளத்தில் “நீ எல்லாவற்றையும் அடித்துப் புசி” என்று கூறப்பட்ட வசனங்களின் அடித்தளத்திலும் இந்த உணவுப்பழக்கம் பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டிருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் பவுலைப் பொறுத்தவரையில் இறைநம்பிக்கையில் நிலைத்திருத்தல் அவசியம் என்பதையும் பிழையான போதனைகளிலிருந்து விலகுமாறும் புத்தி கூறுகின்றார்.
4. இறைநம்பிக்கையும் செல்வனும்
லூக்கா நற்செய்தியைப் பொறுத்தவரையில் லூக்கா நற்செய்தியாளன் இந்நற்செய்தியை அகாயா பட்டணத்தில் இருந்து கிறிஸ்துவுக்குப் பின் 85ம் ஆண்டளவில் எழுதப்பட்டிருக்கலாம் என்பதை இன்று பொதுவாக வல்லுனர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றார்கள். இந்நற்செய்தியில் பல்வேறுப்பட்ட நோக்கங்கள் காணப்பட்டாலும் ஏழைகளுக்கு இந்நற்செய்தி முக்கியத்துவம் கொடுப்பதாக நற்செய்திக்குள் இருந்து வரும் சான்றுகள் எமக்குக் கூறுகின்றன.
சிறப்பாக, ஏழைகள் என்பது பொருளாதார ஏழைகள், சமுதாயத்தில் கணக்கெடுக்கப்படாத மக்கள், சமூக அந்தஸ்து குறைந்திருப்பவர்கள் இப்படிப் பல்வேறுபட்ட இலக்குகளில் இவர்களை வகுத்தப்போதிலும் பொருளாதார ஏழைகள் என்ற இலக்கையே நாம் இங்கு காண்கின்றோம்.
லூக்கா 18:18-27 வரையுள்ள பகுதியில் ஓர் செல்வந்த வாலிபனுடைய வினாவைப் பற்றி நாம் பார்க்கின்றோம். இவர் முடிவில்லா வாழ்விற்குள் பிரவேசிப்பதற்கான வினாவையே இயேசுவிடத்தில் கேட்கின்றார். அன்றும் இன்றுபோல இல்லாமல் ஓர் இளைஞனிடம் காணப்பட்ட ஒரு சந்தேகத்தை நாம் காணலாம்.
இப்பகுதியை மத்தேயு 19:16-31ம் வசனம் வரையுள்ள பகுதியிலும் மாற்கு 10:17-31ம் வசனம் வரையுள்ள பகுதியிலும் நாம் காணலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு நாம் பார்க்கும்போது லூக்கா நற்செய்தியில் ஏழைகள் சிறப்பிடம் பெறுகின்றனர்.
லூக்கா 2:42-44 வரையுள்ள பகுதியில் இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணம் செய்ய சென்றிருந்த வேளையில் இயேசுவின் பெற்றோர் ஏழைகளாகக் காணப்பட்டபடியால் அங்கு புறாக்கள், புறாக்குஞ்சுகள் காணிக்கையாகப் படைக்கப்படுகின்றன. இவைகள் ஏழைகளின் காணிக்கைகளாகும்.
அத்துடன், லூக்கா 12:13-21ம் வசனம் வரையுள்ள பகுதியில் ஓர் பணக்காரன் தனக்குத்தானே செல்வங்களைச் சேர்த்து வைத்திருந்த வேளையில் அவனுடைய நிலைப்பாடு தவறு எனக் கண்டித்த இயேசு, “இன்றிரவு உன் ஆன்மா எடுத்துக் கொள்ளப்பட்டால் உன் சேமிப்புக்கள் யாருடையவைகளாக மாறும்?” என சவாலிடுகின்றார்.
மேலும் லூக்கா 16:19-31ம் வசனம் வரையுள்ள பகுதியில் செல்வந்தனும் லாசருவும் பற்றிக் கூறப்பட்ட சம்பவத்தில் செல்வந்தன் தனக்குண்டான செல்வத்தில் லாசருவாகிய ஏழை மனிதன் மீது கரிசனை கொண்டிராதநிலை தவறு என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. எதிர்கால நடுத்தீர்ப்புக்கு நிகழ்கால வாழ்வு அவசியமானது என்பதை உணர்த்துகின்றது.
இதனையே மத்தேயு 25:31-46 வரையுள்ள பகுதியில், “நான் பசியாயிருந்தேன், எனக்கு ஆகாரம் தரவில்லை. தாகமாய் இருந்தேன், தண்ணீர் தரவில்லை. சிறையில் இருந்தேன், வந்து பார்க்கவில்லை. ஆடையின்றி இருந்தேன், ஆடை தரவில்லை” என்ற பகுதியும் சுட்டிக் காண்பிப்பதை மறந்து விட முடியாது.
மேலும் மீட்பிற்கு ‘பகிர்வு’ அவசியம் என்பதை லூக்கா 19:1-10 வரையுள்ள பகுதியில் சகேயுவின் பகிர்வு எடுத்துக் காண்பிக்கின்றது. தன்னிடத்திலிருக்கும் சொத்துக்கள், உடைமைகள் தன்னுடையவைகள் அல்ல என உணர்ந்த சகேயு அதனை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ள எத்தனிக்கின்றான்.
இதனாலேயே “இன்றைக்கு இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது” என இயேசு கூறுகிறார். ஏனெனில், இம்மீட்பு பகிர்வின் மூலமாக செயலடிப்படையில் ஏற்படுகின்றதை லூக்கா சுட்டிக்காண்பிக்கின்றார்.
செல்வந்த வாலிபனைப் பொறுத்தவரையிலே அவன் இறைவனின் திட்டத்தில் தான் இணைந்துக் கொள்ள விரும்பவில்லை. மாறாக, தனது திட்டத்தில் இறைவனை இணைத்துக் கொள்ள விரும்புகின்றான். கற்பனைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கும் வழியில் அந்த இளைஞன் இருந்தபோது அதற்கூடாக தனக்குரிய மீட்பு கிடைக்கும் என்று எத்தனிக்கின்றார். ஆனால் இயேசு கூறும் மார்க்கம் வேறுப்பட்டது. அந்த மார்க்கத்தில் அவனால் இணைந்து பிரயாணிக்க விருப்பப்பட வில்லை. இதன் காரணமாக அவன் துக்கமாய்ச் செல்கின்றான். தனக்கு உண்டானவைகளை விற்று ஏழைகளுடன் பகிர்ந்துகொள்ள அவன் விரும்பாத நிலையே அவனுடைய துக்கத்திற்கு காரணம்.
மேலும், திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 5:1-10ல் அனனியா சப்பீராள் போன்றவர்கள் காணியாட்சிகளை விற்றும் பொதுவான வாழ்விற்கு ஆயத்தமான போதிலும் ஒரு பகுதியை தமக்கென்று ஒளித்து வைத்திருந்த நிலையும் அங்கு தவறானது என சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே இதுவொரு செயல் சார்ந்து நின்ற ஒரு மீட்பையே இயேசு அவ்வாலிபனிடத்தில் எதிர்பார்க்கின்றார்.
இறைவன்மீது பற்றற்ற நிலை அவரது சக படைப்புக்கள்மீதும் பற்றற்ற நிலையையே தோற்றுவிக்கின்றது. உண்மையில் இறைவனில் அன்பு கூறுகின்ற நிலை சக மனிதர்களில் அன்பு கூறக்கூடிய நிலைக்குள்ளும் எம்மை இட்டுச் செல்ல வேண்டும். மாற்கு 12:28-32 வரையுள்ள பகுதியில், இறைவனில் அன்பு கூறுவதுபோல் மனிதர்களிலும் அன்பு கூற நாம் அழைக்கப்படுகிறோம். இறைப்பற்றற்ற நிலைதான் மனிதர்களிலும் சிறப்பாக ஏழைகளிலும் அன்புகூற இம்மனிதனை தடுக்கின்றது. எனவே நாமும் இறைவனில் கொண்டுள்ள அன்பை பலப்படுத்துதல் அவசியமாகின்றது.
முடிவுரை
இறைபற்றற்ற நிலை மனித வாழ்வில் அடிமைத்தனத்திற்கும், இறைவனின் இருப்புநிலையை வினா எழுப்புகின்ற நிலை அவரின் செயற்பாட்டை மறுதலிப்பதற்கும் காரணமாகின்றது. மேலும் தவறான போதனைகள்மீது நாம் நம்பிக்கை வைப்பதற்கும் நற்செயல்களைச் செய்ய எம்மைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் வழிகளாகக் காணப்படுகின்றன. எனவே இறைப்பற்று நிலையை வலுப்படுத்தி இறைவன் மீதும் அவரது படைப்புக்கள் மீதும் நம்பிக்கைக் கொண்டு வாழ இறைவனிடம் வேண்டி நிற்போம். ஆமென்.
ஆக்கம்
அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்
பரி.யாக்கோபு ஆலயம், நல்லூர்.
Comments
Post a Comment