படைப்பின் முழுமைக்குள் அழைத்துச் செல்லும் ஓய்வுநாள்
முன்னுரை
இன்றைய கிறிஸ்தவ வாழ்வில் ஓய்வுநாள் முக்கியமானதொன்றாகும். சிறப்பாக யூதர்கள் சனிக்கிழமையை ஓய்வுநாளாக அனுசரித்தனர். எனினும். கி.பி. 313ம் ஆண்டு கொன்சன்டைன் அரசனால் உருவாக்கப்பட்ட மிலான் ராஜசாசனத்தின் அடிப்படையில் ஓய்வுநாள் இயேசுவின் உயிர்ப்பை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை இவ்நடபடிக்கையே திருச்சபைகளில் காணப்படுகின்றது.
1. ஓய்வுநாளில் காணப்படும் பாரம்பரியம்
சிறப்பாக தொடக்கநூல் 1:31-2:3 வசனம் வரையுள்ள பகுதி கடவுள் உலகை ஆறு நாட்கள் படைத்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்ததை எமக்கு வலியுறுத்துகின்றது (தொடக்கநூல் 2:2). பாபிலோனிய அடிமைத்தனத்தில் இஸ்ராயேல் மக்கள் வாழ்ந்த போது அவர்களின் வாழ்வு வெறுமையாகக் காணப்பட்டது. இம்மக்களின் வெறுமை நிலையை அகற்றி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் படைப்புச் சம்பவம் கி.மு. 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தொடக்கநூல் 1:1,2ம் வாக்கியங்களில் தொடக்கத்திலே கடவுள் உலகைப் படைத்தார். அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாகக் காணப்பட்டது. எனவே ஒழுகின்மையும் வெறுமையுமாகக் காணப்பட்ட படைப்பிலேயே கடவுள் அழகான உலகைப் படைத்தார். எனவே பாபிலோனியாவில் அடிமைத்தனமாக வாழ்ந்த இஸ்ராயேல் மக்களுக்கு உங்கள் வாழ்க்கையிலும் அவர் அழகைப் படைப்பார் என்ற செய்தி போதிக்கப்பட்டது. எனவே
படைப்பின் வரலாறு ஒரு நம்பிக்கைத் தரும் வரலாறாகக் காணப்படுகின்றது.
ஓய்வுநாளைக் குறித்து இரண்டு பாரம்பரியங்கள் நிலவுகின்றன. குருப் பாரம்பரியத்தில் ஓய்வுநாள் ஓர் தூய்மை நிறைந்த நாளாகவும், அதனை நாம் புனிதமாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற பாரம்பரியம் நிலவுகின்றது. இதுவே இன்றைய திருச்சபையிலும் வெகுவாகக் காணப்படும் பாரம்பரியமாகும்.
எனினும் இணைச்சட்ட பாரம்பரியத்தில் ஓய்வுநாள் ஓர் விடுதலையின் நாளாக அனுஷ்டிக்குமாறு கடவுள் கட்டளைக் கொடுகின்றார். இணைச்சட்டம் 5:14 உன் வீட்டிலிருக்கும் அடிமை, வேலைக்காரர்கள், நிலபுலம், மிருகஜீவன்கள் அனைத்துக்கும் ஓய்வுகொடுக்கின்ற ஓர் சமத்துவத்தின் நாளாக இதனை அனுஷ்டிக்குமாறு கடவுள் வேண்டுகின்றார்.
எனுமா எலிஷ் எனும் படைப்புக் கதையில் மனுக்குலம் தேவர்களின் உழைப்புக்காக உருவாக்கப்பட்ட அடிமையாகக் காட்டப்படுகிறது. ஆதியாகமத்தில் மனுக்குலம் இறைசாயலில் மதிப்பும் மரியாதையும் உடையவராக படைக்கப்படுகிறது.
ஆகவே அடிமைத்தனத்தை மறுத்து மனித மாண்பினை உறுதிப்படுத்தும் படைப்பின் வரலாறு திருவிவிலிய வரலாறு என்பதை உலகிற்கு எடுத்துசொல்லவேண்டும்.
2. ஓய்வுநாளும் இயேசுவின் காலத்தில் நிலவிய சட்டங்களும்
இயேசு வாழ்ந்த காலப்பகுதியில் ஓய்வுநாளைக் குறித்து பரிசேயர்கள் சதுசேயர்கள் மறைநூல் வல்லுனர்கள் பல சட்டங்களை இயற்றி இருந்தனர். மொத்தமாக 661 சட்டங்கள் காணப்பட்டது என்ற அறிஞர்கள் கூறுகின்றனர். இவைகளில் ஓய்வுநாளில் அத்திப்பழ நிறையுள்ள உணவை மாத்திரம் ஓரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு எடுத்துச் செல்லலாம். மேலும் சொந்தக் குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்க முடியாது. அத்துடன் கடிக்க வரும் நாய்க்கு கல்லால் எறிய முடியாது. மேலும் ஓய்வுநாளில் யுத்தத்தில் ஈடுபட்டு பல்லை, காலை இழந்தால் பொய்ப்பல், பொய்க்கால் போன்றவற்றை அணிய முடியாது. மேலும் ஓய்வுநாளில் எரிந்துக்கொண்டிருக்கும் விளக்கை ஓரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. ஒட்டு மொத்தமாக நன்மை தரும் எந்த ஒரு வேலையையும் செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டிருந்தது.
ஓய்வுநாளைக் குறித்தச் சட்டங்கள் மனித வாழ்வில் அடிமைத்தனத்தை ஏற்படுத்துகின்றது என்பதை இயேசு எடுத்துரைத்து ஓய்வுநாளை ஒரு விடுதலையின் நாளாகக் கட்டளையிட்டார்.
3. ஓய்வுநாளும் படைப்பின் முழுமையும்
கடவுள் ஆறு நாட்கள் உலகைப் படைத்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என நாம் படிக்கின்றோம். படைப்பில் இறைவனின் முழுமையை நாம் காண்கிறோம். படைப்பினூடாக கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார் (தொடக்கநூல் 12:7). மேலும் கடவுளின் கரங்களின் கிரியைகளை நாம் காண்கின்றோம் (திருப்பாடல் 19:1). மேலும் இப்படைப்பில் படைப்பு அனைத்தும் கடவுளுக்கே உரியது என திருப்பாடல் 24:1 பேசுகின்றது. அத்துடன் படைப்புக்கள் நல்லவைகள் என்று கண்ட கடவுள் படைப்புகளுக்கு ஆசி வழங்குகின்றார்.
படைப்புக்களில் வெறுமனே நாம் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நிலம், பூமி போன்றவைகளை மாத்திரம் எண்ணாமல் நற்குணங்களையும் நற்செயல்களையும் இந்த உலகில் நாம் எண்ண வேண்டும். அவைகளை நாம் படைக்க வேண்டும். அதனூடாகவே படைப்புக்கள் முழுமை அடைகின்றது. இதனை திருப்பாடல் 24 தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றது. எனவே ஓய்வுநாள் நல்லவைகளை படைக்க அதன் முழுமைகளை அனுபவிக்க எம்மை அழைக்கின்றது.
4. விடுதலை வழங்கும் ஆண்டவர்
இயேசு ஓய்வுநாளிலும் ஏனைய நாள்களிலும் விடுதலைப் பணியை மக்களுக்கு வழங்கினார். சிறப்பாக
நோயிலிருந்து விடுதலை (மாற்கு 2:1-12),
பேயிலிருந்து விடுதலை (மாற்கு 5:1-19),
இயற்கையிலிருந்து விடுதலை (மாற்கு 4:35-41) போன்ற பல விடுதலை பணிகளில் ஈடுபட்டார்.
சிறப்பாக மாற்கு 3:1-6 வசனம் வரையுள்ள பகுதியில் கை சூம்பிய ஒரு மனிதனை இயேசு குணப்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அவரை நோக்கி கையை நீட்டுமாறு கூறிய வேளையில் அவர் குணமடைந்தார். இப்புதுமை ஓய்வுநாளன்று நடைபெற்றது இது சமயவாதிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் இந்நிகழ்வு இயேசுவின் மரணத்திற்கு காரணமாகக் கூட இருக்கின்றது என 3:6ம் வசனத்தில் மாற்கு நற்செய்தியாளன் கூறுகின்றார். அங்கு ஏரோதியர்களும் சதுசேயர்களும் ஒன்றிணைந்து இயேசுவைக் கொல்ல திட்டமிட்டனர். ஏரோதியர்கள் என்பவர்கள் அரசியல்வாதிகள். சதுசேயர்கள் என்பவர்கள் சமயவாதிகள் அரசியலும் சமயமும் ஒன்றிணைந்து தீங்குக்கு ஆயத்தப்பட்ட போதிலும் ஆண்டவர் எதற்கும் அஞ்சாமல் ஓய்வுநாளை ஓர் விடுதலையின் நாளாக மாற்றியதை நாம் காண்கின்றோம்.
எனவே விடுவிக்கப்பட்ட நாங்கள் மற்றவர்களை விடுவிக்கும் நாளாக ஓய்வுநாளை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகின்றது.
முடிவுரை
இன்றும் படைப்புக்கள் பல்வேறுப்பட்ட காரணங்களினால் முழுமையை அனுபவிக்க முடியாமல் அவைகளும் பிரசவ வேதனை அடைவதாக ரோமர் 8:26ல் நாம் படிக்கின்றோம். மனித தவறுகள் இயற்கையை வன்மையாக பாதித்துள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவதுபோல நாம் இயற்கைக்கு எதிராக தவறிழைக்கும் போது ஒரு வேளை கடவுள் எம்மை மன்னிக்கலாம்.
ஆனால் இயற்கை ஒருபோதும் மன்னிப்பதில்லை எனக் கூறுகின்றார். எனவே இன்று இயற்கையிலிருந்து எழுகின்ற ஓசோன் படல தாக்கங்கள் நீர், நிலம், வளி போன்றவைகள் மாசடைதல் போன்ற பல காரணங்களால் இயற்கை எதிராக செயற்படுவதை நாம் காண்கின்றோம். எனவே இயற்கைக்கும் விடுதலை அவசியமாகின்றது. மாற்கு 16:5ன் படி நற்செய்தி இயற்கைக்கும் வழங்கப்பட வேண்டும். அப்பொழுது இயற்கையும் பெரும் துன்பத்தில் இருந்து விடுவிக்கப்படும். இப்பணியை ஓய்வுநாளிலும் ஏனைய நாள்களிலும் செய்ய முற்படுவோமாக.
அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்,
பரி.யாக்கோபு ஆலயம், நல்லூர்.
Comments
Post a Comment